Sep 17, 2009

இது போல் வேறு யாருக்கும் நேரக்கூடாது?

மூன்று வருடங்களுக்கு முன் ஒரு நாள். என் தோழி ஒருவரின் கணவருக்கு கடுமையான வயிற்று வலி. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். உலகத்தில் உள்ள அனைத்து டெஸ்டுகளையும் எடுத்து பார்த்த டாக்டர்கள் அவருடைய லிவரில் ஏதோ பிரச்சனையென்றும் உடனே ஆப்பரேசன் செய்ய வேண்டும் என்றார்கள். தோழி ஒன்றும் அவ்வளவு பணக்காரர் இல்லை. அவருக்கு மூன்று அக்கா. அனைவரும் வயதானவர்கள். அம்மா அப்பா இல்லை. கணவரின் உறவினர் என்று யாரும் இல்லை. தோழிக்கோ நான்கு பிள்ளைகள். பண உதவி செய்யவோ இல்லை அவர்கூட இருந்து உதவவோ ஒருவரும் இல்லை.அதனால் அவர் பிரச்சனையை அவர்தான் சமாளிக்க வேண்டும்.

அங்கே இங்கே கடன் வாங்கி கணவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தாள். மீண்டும் பல வித பரிசோதனைகளுக்கு பின் டாக்டர்கள், "அவருக்கு ஆப்பரேசன் செய்ய முடியாது. அவருடைய லிவர் மிகவும் பழுதடைந்து விட்டது. அப்படியே ஆப்பரேசன் செய்தாலும் அவர் பிழைப்பது கஷ்டம். அதனால், மருந்து மாத்திரைகள் தொடர்ந்து கொடுத்து வாருங்கள்" எனச் சொல்லி கை விரித்து விட்டார்கள்.

இதில் என்ன செய்தி? இது போல் நிறைய கேஸ்கள் பார்த்திருக்கிறோமே? என படிப்பவர்கள் நினைக்கலாம். இல்லை என்று சொல்ல வில்லை. ஆனால் இப்போது அவரின் நிலை என்னத் தெரியுமா? மூன்று வருடமாக ஆஸ்பத்திரி வீடு என்று அலைந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆஸ்பத்திரியில் சேர்ப்பார்கள். உடலை விட்டு போகாத அனைத்து கெட்ட நீரையும் டியூப் வழியாக எடுப்பார்கள். ஒரு வார ஆஸ்பத்திரி வாசத்திற்கு பிறகு வீடு திரும்புவார். தோழி என்னதான் மலேசியாவைச் சேர்ந்தவராய் இருந்தாலும், அவர் ஒன்றும் அவ்வளவு பணக்காரர் இல்லை. அதனால் தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கக் கூடிய வசதி அவருக்கு இல்லை. அதனால் ஒவ்வொரு முறையும் அவர் அலுவலகத்துக்கு லீவ் போட்டுவிட்டு ஆஸ்பத்திரியே கதி என்று கிடக்கிறார்.

முதலில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று இருந்த ஆஸ்பத்திரி வாசம் பிறகு இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாகி, பிறகு மாதத்துக்கு ஒரு முறையாகி, இப்போது வாரத்துக்கு ஒரு முறையாகிவிட்டது. அவர்படும் வேதனையை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அந்த தோழியை நான் தினமும் பார்க்க வேண்டிய சூழ்நிலை. அவர் ஒரு நாள் என்னிடம் கூறினார்,

" சார், நான் மனதளவில் எதற்கும் தயாராகத் தான் இருக்கிறேன். ஆனால் என்னுடைய மகளை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. தினமும் அவள் பள்ளியிலிருந்து வந்தவுடன், அவள் அவரின் மூக்கில் கை வைத்து உயிர் இருக்கிறதா? என்று பார்த்து பிறகு அவர் மேல் படுத்து அவரை கொஞ்சுவதைப் பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது"

அவரிடம் அதிகமாகவும் இவர்கள் ஒட்டி உறவாடக்கூடாது. அவரிடம் உள்ள நோய் இவர்களுக்கும் தாக்கக் கூடிய அபாயம் இருக்கிறது.

இங்குதான் எனக்கு ஆண்டவன் மேல் கோபம் கோபமாக வருகிறது. அவர் இனி பிழைப்பது கஷ்டம். ஆனால், ஏன் ஆண்டவன் இந்த அளவிற்கு அவரை துன்பப்படவைக்க வேண்டும். அவரால் இனி பிழைக்க முடியாத பட்சத்தில் அவருக்கு விடுதலை அளிக்கலாமே? மூன்று வருடமாக அவரும் கஷ்டப்பட்டு, அவரின் குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்தி ..... ஏன்?

ஒரு வேளை இது பூர்வ ஜன்ம பாவம் அல்லது கர்மா என்றால் அவரின் குடும்பத்தினரும் ஏன் கஷ்டப்பட வேண்டும்? அவரின் குடும்பத்தினரும் பூர்வ ஜென்ம பாவம் செய்தவர்களா? பூர்வ ஜென்ம பாவம் செய்தவர்கள் எல்லாம் ஒரே குடும்பத்தில் இருக்குமாறு செய்தது யார்? ஆண்டவனா? ஏன்??? இப்படி எனக்குள் ஏகப்பட்ட 'ஏன்'கள்?

இது போன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது மெர்சி கில்லிங் செய்வது தப்பு இல்லையோ எனத் தோன்றுகிறது? மகாத்மா காந்தியடிகளே நோயில் துடித்துக்கொண்டிருந்த ஒரு ஆட்டைப் பார்த்து, அதற்கு விடுதலை கொடுக்கச் சொன்னாரே?

தோழிக்காகவும், அவருடைய கணவருக்காகவும் என்னால் ஆண்டவனை வேண்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், என்ன வேண்டிக் கொள்கிறேன் என்பதையும் அவரிடம் சொல்ல முடியாத நிலை???

இத்தனை நாட்கள் ஆண்டவனிடம், " என்னை என் குடும்பத்தை நன்றாக வைத்துக்கொள்" என்று வேண்டி வந்தேன். இனி " யாருக்கும் எந்த கஷ்டமும் குடுக்காத சாவைக் கொடு இறைவா" என வேண்டிக்கொள்ள வேண்டும் போல.

14 comments:

துளசி கோபால் said...

கடைசி வரிதான் எப்பவும் என் பிரார்த்தனை.

கைகால் நல்லா இருக்கும்போதேப் போய்ச் சேர்ந்துறணும்.

நாமும் கஷ்டப்பட்டு, நம்மால் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் கஷ்டம் கொடுக்கணுமா?

silentboy said...

உங்கள் கருத்துதான் என்னுடையதும்.

-கார்த்திகேயன்

silentboy said...

உங்கள் கருத்துதான் என்னுடையதும்.

-கார்த்திகேயன்

என். உலகநாதன் said...

//நாமும் கஷ்டப்பட்டு, நம்மால் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் கஷ்டம் கொடுக்கணுமா//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி துளசி கோபால் மேடம்.

என். உலகநாதன் said...

உங்கள் வருகைக்கு நன்றி கார்த்திகேயன்.

இராகவன் நைஜிரியா said...

பல விசயங்கள் ஏன் இப்படி நடக்கின்றன என்று புரிவதேயில்லை. நீங்க கூறியது மாதிரி, ஆண்டவனே, என் உடல் நிலை நல்லா இருக்கும் போதே எடுத்துக் கொள் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

Anonymous said...

மிகவும் சங்கடமான விஷயங்களில் இது போன்ற செய்திகளும் ஒன்று... இதெல்லாம் படிக்கும் போது மனசுக்குள் என்னமோ பண்ணுது... உலக்ஸ், உங்கள் தோழியின் பிரச்சனைகள் தீர கடவுளை வேண்டுகிறேன்

MJV said...

இதை போன்ற ஒரு நிகழ்வு எப்போதுமே மனதை பாதிக்கும். யாருக்கும் தொல்லையோ இன்னலோ கொடுக்காம தூங்கும்போதே போகணும்.... ஆனா இந்த உலகத்தில அப்படி ஒரு சாவு வரதுன்னு நெனைக்கிறேன்!!!! பிராத்திப்போம் உங்களின் அந்த தோழியின் குடும்பத்திற்காக!!!!!

அபுஅஃப்ஸர் said...

யோசிக்க வைத்த அதே சமயம் சங்கடமான நிலையை உருவாக்கிய விடயம்

என். உலகநாதன் said...

//பல விசயங்கள் ஏன் இப்படி நடக்கின்றன என்று புரிவதேயில்லை. நீங்க கூறியது மாதிரி, ஆண்டவனே, என் உடல் நிலை நல்லா இருக்கும் போதே எடுத்துக் கொள் என்று வேண்டிக் கொள்கின்றேன்.//

வருகைக்கு நன்றி இராகவன் சார்.

என். உலகநாதன் said...

//... உலக்ஸ், உங்கள் தோழியின் பிரச்சனைகள் தீர கடவுளை வேண்டுகிறேன்//

வேண்டிக்கொள்ளுங்கள் நண்பரே. உலக்ஸ் என்று என்னை நன்கு தெரிந்தவர்கள் மட்டுமே அழைத்து பழக்கம். அடுத்த முறை உங்கள் பெயர் என்ன என்று சொல்லுங்கள் நண்பா? அறிய ஆவலாய் உள்ளேன்.

என். உலகநாதன் said...

//பிராத்திப்போம் உங்களின் அந்த தோழியின் குடும்பத்திற்காக!!!!!//

பிரார்த்திப்போம் நண்பர் MJV. வருகைக்கு நன்றி நண்பா.

என். உலகநாதன் said...

//யோசிக்க வைத்த அதே சமயம் சங்கடமான நிலையை உருவாக்கிய விடயம்//

வருகைக்கு நன்றி அபு.

Anonymous said...

//உலக்ஸ் என்று என்னை நன்கு தெரிந்தவர்கள் மட்டுமே அழைத்து பழக்கம். அடுத்த முறை உங்கள் பெயர் என்ன என்று சொல்லுங்கள் நண்பா? அறிய ஆவலாய் உள்ளேன்.//

நண்பரே, நான் உங்களை விட மிக சிறியவன்... நான் சிறு வயதுகளில் உங்களை பார்த்திருக்கிறேன் ஆனால் நாம் பேசிகொண்டது கிடையாது.. தங்கள் போட்டோவை பார்த்து நினைவு கூர்ந்தேன்.. நானும் லால்குடிகாரன்தான்... கடந்த ஆறு
மாதங்களாக, உங்கள் பதிவுகளை படித்து கொண்டு வருகிறேன்.. அவ்வபோது அனானியாக பின்னூடங்கள் இடுகிறேன்... படித்த வரை மிகவும் அற்புதமாக உள்ளது. எதேச்சையாக டோண்டுவின் வலைபூ மூலம் உங்கள் வலைபூவிற்கும் வந்தேன்.. இப்போது உங்கள் வலை பூ என்னுடைய " one of the favorites" :-)

ஏனோ உங்களை "உலக்ஸ்" என்றே அழைக்க ஆசைபட்டேன்.. விரைவில் என் தனிமினஞ்சல் மூலம் உங்களுடன் தொடர்பு கொள்ளகிறேன்..