Nov 1, 2009

மிக்ஸர் - 01.11.09

கடந்த இரண்டு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். எனக்கு இரண்டு விதமான உணர்ச்சிகள் ஏற்பட்டது. முதல் படம் மனம் கனமாக உணர்ந்து முடிவில் லேசானது. இரண்டாவது படம் மனசு முழுக்க சந்தோச உணர்ச்சிகள் ஏற்பட்டது.

முதல் படம் 'பசங்க'. இந்தப் படத்தை எப்படி இவ்வளவு நாள் தவறவிட்டேன் என தெரியவில்லை. அற்புதமான படம். முதலில் ஏதோ சின்ன பசங்களை வைச்சு எடுத்துருப்பாங்கன்னு ஒரு ஆர்வம் இல்லாமத் தான் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் படம் போக போக ஒரே யதார்த்தம். இந்த கதையை அற்புதமாக எடுத்த இயக்குனருக்கு என் மனம் திறந்த பாராட்டுக்கள். இதே போல் லோ பட்ஜட் படங்கள் நிறைய வர வேண்டும். பெரிய நடிகர்களைப் போட்டு, நிறைய சம்பளம் கொடுத்து, நிறைய விலைக்கு விற்று, கடைசியில் அவர்கள் லாபம் பார்க்க, சினிமா டிக்கட்டை அதிகமாக்கி நம்மை முட்டாளாக்குவத்றகு பதில் இது போல் லோ பட்ஜட் படம் நிறைய எடுக்கலாம். செலவுக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். நாமும் அதிக பணம் கொடுத்து டிக்கட் வாங்க வேண்டாம்.

******************************************************

அடுத்த படம் "ஆதவன்". விமர்சனம் அப்படி இப்படி இருந்தாலும், ஹரிஷ் ஜெயராஜின் பாடல்களுக்காகவும், நயன்தாராவுக்காகவும் (ofcourse சூர்யாவிற்காகவும்) நேற்று படம் போனோம். சந்திரமுகிக்கு அடுத்து அதிகம் சிரித்த படம் ஆதவன்தான். வடிவேலு வரும் ஒவ்வொரு காட்சியும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. ஒவ்வொரு காட்சியையும் அனுபவதித்து ரசித்து பார்த்தோம். படம் சுமார் என்று ஆவி முதற்கொண்டு அனைத்து பத்திரிக்கைகளும் எழுதியிருந்தாலும் எனக்கு படம் பிடித்த காரணம் வடிவேலு. நாம் படம் பார்க்க போவது ஒரு இரண்டரை மணி நேரம் டென்ஷனை மறக்கத்தான். அதை இந்த படத்தின் மூலம் நன்றாகவே அனுபவித்தேன். அந்த மகிழ்ச்சி இரவு வரை நீடித்தது. அந்த காலத்திலேயே நான் சிவாஜி படத்தை விட எம்.ஜி.ஆர் படங்களைத் தான் அதிகம் பார்ப்பேன். காரணம் எனக்கு அழப் பிடிப்பதில்லை. ஆதவன் கதை பழைய கதைதான். ஆனால் நான் அதையெல்லாம் பார்க்கவில்லை. பின் எதற்காக படம் போனேன்? முதல் வரியிலேயே பதில் எழுதிவிட்டேன்.

******************************************************

தமிழ்நாட்டுல சினிமா தியேட்டர்ல படம் பார்க்கும் போது இடைவேளை வரும். இங்கே தியேட்டர்களில் இடைவேளையே கிடையாது. முழுப்படம் பார்த்துவிட்டுத்தான் தியேட்டரை விட்டு வெளியே வர முடியும். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது, இப்போது பழகிவிட்டது. மலேசியாவில் டிவியிலும் அந்த அளவிற்கு விளம்பரம் வருவது கிடையாது. இந்த அனுபவத்தில் உள்ள நான் தீபாவளிக்கு முதல் நாளும் அடுத்த நாளும் நம் ஊர் டிவியில், சன் டிவியாக இருக்கட்டும் அல்லது விஜய் டிவியாக இருக்கட்டும், ஒரு படமோ அல்லது ஒரு நிகழ்ச்சியோ பார்த்து முடிக்கும் வரை.. ஏ அப்பா, எத்தனை விளம்பரங்கள். படத்தின் நீளத்தை விட விளம்பரமே அதிகம் என்பதுபோல் இருந்தது. ஒரு நல்ல படதைதியோ அல்லது ஒரு நிகழ்ச்சியையோ இப்படி பிட்டு பிட்டாக காண்பித்தால் எப்படி ரசிக்க முடியும்? ஏன் இப்படி எல்லோரும் பணத்தாசை பிடித்து அலைகிறார்களோ? தெரியவில்லை.

******************************************************

இது நான் பதிவுலகத்துக்கு வந்த புதிதில் எழுதியது. யாருமே பதில் சொல்லாததால் மீண்டும் கேட்கிறேன்,

மலேசிய வானொலியில் எப்பொழுதுமே, ' பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்பதற்கு பதில் "பிறந்த நாள் வாழ்த்துகள்" என்கிறார்கள்.

எது சரி? வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?

விசயம் தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்குங்களேன்?

******************************************************

டிவி, சினிமா, இண்டர்நெட், MP3 இது நான்கும் என் வாழ்க்கையை ரொம்பவே ஆக்கிரமித்து விட்டது. இவைகள் இல்லாமல் என்னால் வாழமுடியுமா? என்று யோசித்துப்பார்த்தேன். வாழ்க்கை முழுவதும் அல்ல. அட்லீஸ்ட் ஒரு சில நாட்கள். தினமும் கலையிலும் மாலையிலும் செய்திக்காகவோ அல்லது பாட்டிற்க்காகவோ டிவி பார்க்கிறேன். வாரம் ஒரு சினிமா டிவியிலோ அல்லது மாதம் ஒரு சினிமா தியேட்டரிலோ பார்க்கிறேன். அலுவலகத்தில் இண்டர்நெட் இல்லாமல் இருக்க முடியாது. காரிலும், ஜிம்மிலும் MP3. அப்புறம் எப்படி இவைகள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியமாகும்?

முடியும் என்கிறார் என் நண்பர். எப்படி என்றால், இங்கே CLUB MED என்று ஒரு அமைப்பு உள்ளது. அவர்கள் நிறைய இடங்களில் கடற்கரை அருகில் ரிசார்ட் வைத்திருக்கிறார்கள். முதலில் அதில் மெம்பர் ஆக வேண்டுமாம். பிறகு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே ரிசார்ட்டில் முன் பதிவு செய்யவேண்டுமாம். பிறகு அந்த நாட்களில் அங்கே சென்று தங்க வேண்டும். அங்கே போன் கிடையாது, டிவி கிடையாது, கம்ப்யூட்டர் கிடையாது. அந்த ஒரு வாரமும் நம் வாழ்க்கையை அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். அவர்கள் சொல்வதைத்தான் நாம் செய்ய வேண்டும். நிறைய நிகழ்ச்சிகள் நடை பெறுமாம். வித்தியாசமான அனுபவம் ஆக இருக்குமாம். ஏதோ வேறு உலகத்தில் இருப்பதைப் போல் இருக்குமாம். இன்னும் சில நிகழ்ச்சிகளைப் பற்றி சொன்னார். அதை இங்கே எழுத முடியாது.

முடிந்தால் ஒரு முறை சென்று வரவேண்டும். அந்த கிளப் இருப்பது, என் வீட்டிலிருந்து 15 கிமீ தொலைவில்தான்.

******************************************************

குந்திதேவி சமைத்துக்கொண்டோ, என்னவோ செய்துகொண்டிருக்கும்போது, பாண்டவர்கள் அர்ஜுனன் மூலமாக கிடைத்த திரெளபதிய கூட்டிட்டு வந்து,

" அம்மா, இங்க பாருங்க. நாங்க என்ன ஜெயிச்சிட்டு வந்துருக்கோம்னு?" அப்படினு சொன்னாங்களாம்.

குந்திதேவி திரும்பியே பார்க்காம,

" எதா இருந்தாலும் எல்லோரும் சமமா பிரிச்சு எடுத்துக்கங்க" சொன்னாங்களாம்.

அம்மா சொன்ன சொல்ல தட்டக்கூடாதுனு எல்லோரும் திரெளபதிய சமமா மனைவியா எடுத்துக்கிட்டாங்களாம்.

சிவக்குமாரின் "என் கண்மணிகளுக்கு" சொற்பொழிவில் கேட்டது.

குந்திதேவிதான், பார்க்காம சொல்லிட்டாங்க. அவங்களை கூப்பிட்டு, "அம்மா, நாங்க கொண்டாந்து இருக்கறது பொருள் இல்ல, ஒரு பொண்ணுன்னு" சொல்லி அர்ஜுனன் மட்டும் கல்யாணம் செஞ்சிருக்கலாம்ல.

ஏன் அப்படி செய்யலை?

என்னவோ விடுங்க, அதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்.

******************************************************

நான் சமீபத்தில் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்......?

அப்படினு ஏதாவது புத்தகம் பெயரை சொல்ல ஆசையா இருக்கு. ஆனா என் கிட்ட ஒரு புத்தகமும் கிடையாது. யாராவது எனக்கு ஒரு நல்ல புத்தகம் வாங்கி கொரியர் பண்ண முடியுமா? நான் பணம் கொடுத்துவிடுகிறேன்.

******************************************************

20 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//ஏன் அப்படி செய்யலை?
//

நிறைய கதைகளில் சில புள்ளிகளில் கொஞ்சம் மாற்றிச் செய்திருந்தாலும் கதை நகர்ந்திருக்காது.

திரவுபதி அர்ஜுனனுக்கு மட்டும் மனைவி என்றால் அவளை சபையில் வைத்து இழுத்திருப்பார்களா? என்பது கேள்விக் குறி.

திரவுபதியை இழுக்காவிட்டால் பாண்டவர்களுக்கு கோபம் அவ்வளவு வந்திருக்காது.

தவிரவும் நாடு மூத்தவனுக்கும், மூத்தவனின் மூத்த மகனுக்கும்தான் சொந்தம். மற்றவர்களுக்கு ஆட்சி உரிமை கிடையாது. பாண்டவர்கள் போர் தொடுக்க எந்த வித அடிப்படை உரிமையும் இல்லாதவர்கள் ஆகியிருப்பார்கள்.

பாரதப் போருக்கு அடிப்படையே நீங்கள் சொல்லும் நிகழ்வுதான். அதை மாற்றி அமைத்தால் கதை அம்பேல்தான்.

தவிரவும் தாயின் சொல்லை மறுக்காமல் ஏற்றுக் கொண்டதற்கு பலரும் பலவிதங்களில் விளக்கங்கள் கொடுக்கிறார்கள். நீங்களும் அதைத் தேடி ரசிக்கலாம். குறிப்பாக திராவிட இயக்கத்தவர்களின் கதைகள் சுவையாக இருக்கும்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//பெரிய நடிகர்களைப் போட்டு, நிறைய சம்பளம் கொடுத்து, //


குறைந்த செலவுப் படங்களுக்கு நல்ல கதை வேண்டும், மிகச் சிறந்த திரைக்கதை வேண்டும். தொய்வில்லாத இயக்கம் தேவை. கதாப்பாத்திரங்களுக்கு பொருந்தும் நடிகர்கள் தேவை. அவர்களும் சிறப்பாக நடிக்க வேண்டும். படத்தின் பெயர் வெளியே தெரிந்து மக்கள் திரையரங்கிற்கு வரும்வரை பிற படங்கள் போட்டிக்கு வராமல் இருக்கவெண்டும். (சேது படம் கோவை காவேரி திரையரங்கில் மூன்று நாட்களில் எடுத்துவிட்டார்கள்)

அதுவரை நட்டத்தைப் பொறுத்துக் கொள்ளும் திரையங்கமோ, வினியோகிஸ்தரோ அல்லது வேறொருவரோ தேவை.

ஆனால் பெரிய நடிகரின் படங்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் தேவையில்லை. அவரது பெயரை வைத்தே முதல் கட்டத் தடங்கள்களை தாண்டி விடலாம்., சுமார திரைக்கதை இருந்தாலே படம் வெற்றி பெற்றுவிடும். படுமட்டமான திரைக்கதை மட்டுமே தோல்வி அடையும்.

எனவேதான் பெரிய நடிகர்களுக்கு அவ்வளவு சம்பளம்

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

மலேசியாவிலேயே நிறைய தமிழ் நூல்கள் கிடைக்கும், கோவில்கள்ல புத்தக கண்காட்சி வைப்பாங்க, ரொம்ப விலை கூட்டி வச்சிருக்கமாதறி தெரியல ( அதிகம் இரண்டு ரிங்கிட் தமிழகத்த விட கூட இருக்கலாம்) ( பிரிக்பீல்ட்ஸ் மட்டும் செந்தூல் பக்கம் தமிழ் நூல்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கு)

அப்பாவி முரு said...

புத்தகங்களுக்கு நம்ம வாழ்க்கைபயணம் விக்கியை பிடித்து அனத்தலாமே,

நாராயணா, நாராயணா!!!!

Anonymous said...

சமீபத்தில் ஸ்டார் உத்சவ் மகாபாரத் தில் (retelecast) , இந்த கேள்விக்கு கிருஷ்ணர் தரும் விளக்கம். பாஞ்சாலி 5 மிக சிறந்த குணங்கள் உடையவர் தனக்கு கணவராக வர வேண்டும் என்று வேண்டியதாகவும், அப்படி எல்லா நல்ல குணங்களும் ஒரே ஆணிடம் இருக்க சான்ஸ் இல்லாததால், அவள் ஐவரை மணக்க வேண்டியதானது என்று சொல்லுகிறார்.

- சுவாமிநாதன்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உள்ளேன் ஐயா

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

//சமீபத்தில் ஸ்டார் உத்சவ் மகாபாரத் தில் (retelecast) , இந்த கேள்விக்கு கிருஷ்ணர் தரும் விளக்கம். பாஞ்சாலி 5 மிக சிறந்த குணங்கள் உடையவர் தனக்கு கணவராக வர வேண்டும் என்று வேண்டியதாகவும், அப்படி எல்லா நல்ல குணங்களும் ஒரே ஆணிடம் இருக்க சான்ஸ் இல்லாததால், அவள் ஐவரை மணக்க வேண்டியதானது என்று சொல்லுகிறார்.

- சுவாமிநாதன்
//

நல்ல நகைச்சுவையான விளக்கம், வாழ்த்துக்கள், -:)

இராகவன் நைஜிரியா said...

// இது நான் பதிவுலகத்துக்கு வந்த புதிதில் எழுதியது. யாருமே பதில் சொல்லாததால் மீண்டும் கேட்கிறேன்,

மலேசிய வானொலியில் எப்பொழுதுமே, ' பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்பதற்கு பதில் "பிறந்த நாள் வாழ்த்துகள்" என்கிறார்கள்.

எது சரி? வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?

விசயம் தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்குங்களேன்? //

வாழ்த்துகள் என்பதுதான் சரியானது. நண்பர் பழமைபேசி அவர்கள் ஒரு தடவை விளக்கம் கொடுத்து இருந்தார். அந்த லிங்கைத் தேடினேன் கிடைக்கவில்லை. கிடைத்ததும் உங்களுக்கு கொடுக்கின்றேன்.

பழமைபேசி said...

//மலேசிய வானொலியில் எப்பொழுதுமே, ' பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்பதற்கு பதில் "பிறந்த நாள் வாழ்த்துகள்" என்கிறார்கள்.
//

வணக்கம் நண்ப! அன்பர் இராகவன் ஐயா அவர்கள் சுட்டுதலின் பயனாக வரப் பெற்றேன். அவருக்கும் தங்களுக்கும் வாழ்த்துகள்!

வாழ்த்துக்கள் சரியென்றே ஒரு சாரார் ஏற்படுத்திக் கொண்டனர். ஆயினும் மறைமலை அடிகள் அவ்ர்கள், பண்டைய மரபுகளைக் கருத்தில் கொண்டு சொன்னதின்படி, வாழ்த்துகள் என்பதே சரி.

இங்கே ‘கள்’ எனும் பதத்தைச் சேர்க்கும் போது பன்மை என்றாகி விடும். அதுவே ‘க்’ எனும் எழுத்து செருகப்படும் போது ‘கள்’ எனும் சொற்பதத்தைச் சேர்க்கும் சந்தியாகிறது. வாழ்த்து + கள் = வாழ்த்துக்கள்

வாழ்த்து என்பதன் பன்மை, வாழ்த்துகள்!

வெள்ளைக்கள் = வெள்ளையான கள்
வாழ்த்துக்கள் = வாழ்த்துப் பெற்ற கள்

என். உலகநாதன் said...

//தவிரவும் தாயின் சொல்லை மறுக்காமல் ஏற்றுக் கொண்டதற்கு பலரும் பலவிதங்களில் விளக்கங்கள் கொடுக்கிறார்கள். நீங்களும் அதைத் தேடி ரசிக்கலாம். குறிப்பாக திராவிட இயக்கத்தவர்களின் கதைகள் சுவையாக இருக்கும்//

தங்களின் விரிவான கருத்துக்களுக்கு நன்றி டாக்டர்.

என். உலகநாதன் said...

//எனவேதான் பெரிய நடிகர்களுக்கு அவ்வளவு சம்பளம்//

எல்லாம் சரி டாக்டர். ஆனால், ஒரு சிலர் தொடர்ந்து பணக்காரர்களாக இருக்க மக்கள் ஏன் அதிகம் பணம் கொடுத்து டிக்கட் வாங்கி படம் பார்க்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. லோ பட்ஜட் படம் என்றால் டிக்கட் விலையும் குறைவாக இருக்கும் அல்லவா?

என். உலகநாதன் said...

// மலேசியாவிலேயே நிறைய தமிழ் நூல்கள் கிடைக்கும், கோவில்கள்ல புத்தக கண்காட்சி வைப்பாங்க, ரொம்ப விலை கூட்டி வச்சிருக்கமாதறி தெரியல ( அதிகம் இரண்டு ரிங்கிட் தமிழகத்த விட கூட இருக்கலாம்) ( பிரிக்பீல்ட்ஸ் மட்டும் செந்தூல் பக்கம் தமிழ் நூல்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கு)//

தகவல்களுக்கு நன்றி நண்பா!

என். உலகநாதன் said...

// புத்தகங்களுக்கு நம்ம வாழ்க்கைபயணம் விக்கியை பிடித்து அனத்தலாமே,

நாராயணா, நாராயணா!!!!//


ஆமால்ல. நன்றி முரு சார்!

என். உலகநாதன் said...

// சமீபத்தில் ஸ்டார் உத்சவ் மகாபாரத் தில் (retelecast) , இந்த கேள்விக்கு கிருஷ்ணர் தரும் விளக்கம். பாஞ்சாலி 5 மிக சிறந்த குணங்கள் உடையவர் தனக்கு கணவராக வர வேண்டும் என்று வேண்டியதாகவும், அப்படி எல்லா நல்ல குணங்களும் ஒரே ஆணிடம் இருக்க சான்ஸ் இல்லாததால், அவள் ஐவரை மணக்க வேண்டியதானது என்று சொல்லுகிறார்.

- சுவாமிநாதன்//

இது என்ன புது கதை சார்!

உங்கள் வருகைக்கு நன்றி சுவாமிநாதன் சார்.

என். உலகநாதன் said...

//உள்ளேன் ஐயா//

வந்துட்டீங்களா ஸ்டார் ராஜன். ம்ம்ம் ரைட்டு!!!

என். உலகநாதன் said...

// வாழ்த்துகள் என்பதுதான் சரியானது. நண்பர் பழமைபேசி அவர்கள் ஒரு தடவை விளக்கம் கொடுத்து இருந்தார். அந்த லிங்கைத் தேடினேன் கிடைக்கவில்லை. கிடைத்ததும் உங்களுக்கு கொடுக்கின்றேன்//

ரொம்ப நன்றி இராகவன் சார்.

என். உலகநாதன் said...

// வாழ்த்து என்பதன் பன்மை, வாழ்த்துகள்!

வெள்ளைக்கள் = வெள்ளையான கள்
வாழ்த்துக்கள் = வாழ்த்துப் பெற்ற கள்//


உங்கள் வருகைக்கும், தெளிவான விளக்கத்திற்கும் ரொம்ப நன்றி பழமைபேசி சார்.

நீண்ட நாள் குழப்பத்திற்கு விடை கொடுத்தமைக்கு மீண்டும் என் நன்றி.

என். உலகநாதன் said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'மிக்ஸர் - 01.11.09' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 1st November 2009 07:48:03 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/132830

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

Anonymous said...

உலக்ஸ் நலமா? மன்னிக்கவும், அலுவலக வேலை மாற்றி விட்டதால் , கடந்த பத்து நாட்களாக பதிவேதும் பார்க்க இயலவில்லை.

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

//எது சரி? வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?//
ஏற்கனவே விளக்கம் வந்துவிட்டதா? இருந்தாலும் நம்ம கருத்தைப் பதிவு செய்கிறேன்.

சமீபத்தில் ஒரு பதிவர் சந்திப்பில், இந்த ஒற்று பற்றி ஒரு கேள்வி எழுந்தது. கதை எல்லாம் எழுதும்போது ஒற்று அவசியமா? என்று. ஒருவர் சொன்னார், நவீன இலக்கியத்தில் ஒற்று பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவது கிடையாது. அதை சட்டை செய்யாமலேயே கதைகள் வருகின்றன என்று.

பழமைபேசி அருமையாக சொல்லியிருக்கிறார். வாழ்த்துகள்.
---
//இன்னும் சில நிகழ்ச்சிகளைப் பற்றி சொன்னார். அதை இங்கே எழுத முடியாது.//
முடிந்தால் அதை மெயிலில் சொல்லவும். :)
---
//யாராவது எனக்கு ஒரு நல்ல புத்தகம் வாங்கி கொரியர் பண்ண முடியுமா? நான் பணம் கொடுத்துவிடுகிறேன்.//
அங்கு புத்தகம் கிடைக்காதா? இதைப் பற்றியும் மெயில் செய்யவும்.
---