Jan 25, 2010

ஆத்ம திருப்தி - சிறுகதை

அப்பா மேல் ஆத்திரமாக வந்தது. அவருக்கு என்ன குறைச்சல் இந்த வீட்டில்? ஏன் வீட்டை விட்டு தனியே போகிறேன் என்கிறார்? புரியாமல் தவித்தான் ரவி.
“கீதா, உனக்கு ஏதாச்சும் தெரியுமா? ஏன் அப்பா இப்படி சொல்லறார்? நீ ஏதாவது சொன்னியா? கோபமா ஏதாவது பேசினியா?.”

“இல்லைங்க. நான் எதுக்குங்க அப்பாட்ட கோபமா பேசப்போறேன்!”

“பின்ன எதுக்காக அப்பா வீட்டை விட்டு போறேன்னு சொல்லிட்டே இருக்கார்? . ஒரு வேளை, பசங்க ஏதாச்சும் சொல்லியிருப்பாங்களா? கீதா, அருணையும் , ரேவதியையும் கூப்பிடு”

" இதோ கூப்பிடுறேங்க என்றவள், விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளை கூப்பிட்டாள்.

இருவரிடமும் விசாரித்தான் ரவி. பிள்ளைகள் இருவருமே ஒரே பதிலைச் சொன்னார்கள்,

"நாங்கள் இருவரும் தாத்தாவுடன் விளையாடிகொண்டுதான் இருக்கோம். தாத்தாதான் எங்களுக்கு ஹோம் ஒர்க் எல்லாம் சொல்லித்தருகிறார். எங்களுக்கு தாத்தான்னா ரொம்ப பிடிக்கும்" என்றன குழந்தைகள்.

தானும் அப்பாவிடம் ஒன்றும் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. அவருக்கு எல்லா வசதிகளும் இந்த வீட்டில் இருக்கும்போது, ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார். "எதற்கும் அப்பாவிடம் நாளை காலை இன்னொரு முறை பேசிப் பார்க்க வேண்டியதுதான்" என்று நினைத்து தூங்கப் போனான். ஆனால், நடந்தது என்ன? கீதா, ரவியைக் கட்டிப்பிடித்து, நிம்மதியாக தூங்கினாள். ஆனால், ரவிக்குத்தான் தூக்கம் போனது. யோசித்து கொண்டே வந்தவனுக்கு அப்போதுதான் டீக்கடை அருகே வந்துவிட்டதை கவனித்தான்.

ஒரு டீயை ஆர்டர் செய்தவன் மறுபடி யோசிக்க ஆரம்பித்தான். அப்பா ஏன் அந்த ஒரு முடிவு எடுத்தார்? நாம் என்ன குறை வைத்தோம்? ஒரு தந்தைக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொண்டு தானே இருக்கோம். கீதாவும், பார்த்து பார்த்து அல்லவா, அப்பாவை கவனிக்கிறாள். பின் ஏன் தனியே போக வேண்டும் என்கிறார்? இவ்வாறு பலவாறு சிந்திக்கையில், டீயை நீட்டினார் கடைக்காரர். டீ மிகுந்த சுவையாக இருந்ததை உணர்ந்தான். ஒரு வேளை அவன் மனம் தெளிவானதை அது உணர்த்தியதோ? ஒரு தெளிவான முடிவுடன், அப்பாவை எப்படியும் வீட்டை விட்டு அனுப்பக் கூடாது என்ற வைராக்கியத்துடன் வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டின் கதவைத் திறந்தான். அதற்குள், கீதா குளித்து முடித்து, சாமி கும்பிட்டு, அழகான புடவையில் மங்களகரமாக இருந்தாள். அதுதான் கீதா என சந்தோசப்பட்டான்.

" அப்பா எங்க கீதா?"

" ரூம்ல தாங்க இருக்கார்"

அப்பாவின் அறைக்குள் நுழைந்தான் ரவி.

"வாப்பா ரவி. என்ன நான் சொன்னத யோசிச்சியா?" - அவனுக்கு முன் அவர் விசயத்தை ஆரம்பித்தார்.

" அது சம்பந்தமா தான் பேச வந்துருக்கேன்ப்பா. என்ன காரணத்தினால வீட்ட விட்டு தனியா போறேன்னு சொல்லறீங்க. தயவு செய்து சொல்லுங்கப்பா"

"எத்தனை தடவை சொல்லறதுப்பா. எனக்கு யார் மேலேயும் கோபம் இல்லை. நான் சந்தோசமாத்தான் இந்த முடிவ எடுத்துருக்கேன். தயவு செய்து என்னை என் வழியில் விடு" என்று தீர்மானமாக கூறிய அப்பாவை ஆச்சர்யத்துடன் பார்த்தான் ரவி.

என்ன என்னவோ பேச வந்தவன், அவர் சற்று கடுமையாக தன் முடிவில் உறுதியாக இருக்கவே, எப்போதும் போல் மவுனமானான். அவனுக்குத் தெரியும், அவர் ஒரு முடிவு எடுத்து விட்டால் யாராலும் மாற்ற முடியாது. ஏன் அவராலேயும் கூட. அதன் பிறகு பேசி பிரயோசனம் இல்லை என முடிவு எடுத்து அதற்குரிய முயற்சியில் இறங்கினான்.

சரியாக ஒரு மாதத்தில் அவர் கூறியபடி ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் அவரை சேர்த்தான். வாராவாரம் அவரை அவனும் மனைவியும் பிள்ளைகளுடன் சென்று பார்ப்பதாக ஏற்பாடு. அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய சொல்லி அதன் பொறுப்பாளரிடம் கூறினான். தேவையான பணத்தை கொடுத்தான். அவன் அப்பா ராகவன் முகத்தில் என்றும் இல்லாத மகிழ்ச்சி. ஆனால் இவன் முகமோ இறுகி இருந்தது.

ரவி அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு தன் மணி பர்ஸிலிருந்து தன் தந்தையின் போட்டோவை எடுத்த ராகவன், கண்ணில் கரகரவென்று கண்ணீரோடு, “அப்பா, என்னை மன்னிச்சுடுங்க. நான் உங்களுக்கு செஞ்ச அந்த பாவத்திற்கு பிரயாசித்தமாக நானும் நீங்கள் பட்ட கஷ்டத்தை அனுபவிக்க முடிவு எடுத்து விட்டேன். என் பையன் என்னைப்போல இல்லாவிட்டாலும், பிள்ளையையும், பேரக்குழந்தைகளையும் பிரிந்து நீங்கள் பட்ட வேதனையை நானும் அனுபவிப்பதாக முடிவெடுத்து விட்டேன்” என்று அழுது போட்டோவை கண்ணில் ஒத்திக்கொண்டார்.

இதை தெரியாத ரவி, " நாம் என்ன அப்பாவுக்கு குறை வைத்தோம்" என்று மன வருத்ததுடனே தன் வீட்டை நோக்கி கிளம்பினான்.

13 comments:

கண்ணகி said...

ரவியின் தந்தை தன் மகனிடம் உண்மையைச் சொல்லீருக்கலாம். தன்க்குதானே தண்டனை கொடுத்திருக்கிறார். இப்போதுவருந்துவதால் என்ன பயன்...

♠ ராஜு ♠ said...

நல்ல waritng..!

MSK said...

இதே கதை கருவுடன் உள்ள சிறுகதை ஒன்றை ஏற்கனவே படித்ததாக நினைவு. அதனாலோ என்னவோ எளிதாக முடிவை யூகிக்க முடிகிறது.

Anonymous said...

இந்தியா வந்து சென்ற பிறகு கொஞ்சம் டல் அடிக்கிறீங்களே உலக்ஸ்??

என். உலகநாதன் said...

//ரவியின் தந்தை தன் மகனிடம் உண்மையைச் சொல்லீருக்கலாம். தன்க்குதானே தண்டனை கொடுத்திருக்கிறார். இப்போதுவருந்துவதால் என்ன பயன்...//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கண்ணகி.

என். உலகநாதன் said...

//நல்ல waritng..!//

நன்றி ராஜு

என். உலகநாதன் said...

//இதே கதை கருவுடன் உள்ள சிறுகதை ஒன்றை ஏற்கனவே படித்ததாக நினைவு. அதனாலோ என்னவோ எளிதாக முடிவை யூகிக்க முடிகிறது.//

வருகைக்கு நன்றி MSK

என். உலகநாதன் said...

//இந்தியா வந்து சென்ற பிறகு கொஞ்சம் டல் அடிக்கிறீங்களே உலக்ஸ்??//

அப்படியா?

என். உலகநாதன் said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'ஆத்ம திருப்தி - சிறுகதை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 25th January 2010 01:42:04 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/174440

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஆத்ம திருப்தி என்பதற்குப்பதில்
ஆத்ம தண்டனை என்று வைத்திருந்தால்
பொருத்தமாக இருக்கும்.


அன்புடன் ஆர்.ஆர்.

பலா பட்டறை said...

நல்லா இருக்குங்க நண்பரே.. அடுத்த கதை இன்னும் நச் சுனு இருக்கட்டும்..:)

புன்னகை தேசம். said...

தன்னை தண்டிப்பது இருக்கட்டும்..

குழந்தைகளையும் , மகனையும் மருமகளையும் அல்லவா தண்டிக்கின்றார்.?.


இருப்பினும் மாறுபட்ட கதை நன்று..

shortfilmindia.com said...

தலைவரே முடிந்தால் கூப்பிடவும்
கேபிள் சங்கர்