May 28, 2010

நானும் அழகான ஒரு நாள்!

என்னை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு இரண்டு விசயங்கள் மிகத் தெளிவாக தெரியலாம். ஒன்று அதிக தன்னம்பிக்கை உடையவன். இன்னொன்று பெண்கள் மேல் அதிக பாசம் உள்ளவன். எப்படிப்பட்ட பாசம் என்பது இப்போது தேவை இல்லாத ஒன்று. அதிக தன்னம்பிக்கை ஏன் ஏற்பட்டது என்பதற்கு பின்னால் ஒரு கதையே இருக்கிறது.

நான் எட்டாவது படிக்கும் வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. 9 ஆவது வகுப்பு படிக்கும் போதே காதல் வந்துவிட்டது. சிரிக்காதீர்கள்! அது காதல் இல்லை என்று இப்போது புரிகிறது. அது ஒரு இனக்கவர்ச்சிதான். ஆனால் அது படுத்திய பாடு அப்பப்பா!!! இதனால் ஏற்பட்ட பொறாமையில் என் நண்பன் ஒருவன் ஒரு நாள் என்னை, " போடா கருப்பா" என்று திட்டிவிட்டான். அன்றுதான் முதன்முதலாக என் நிறத்திற்காக வேதனை பட ஆரம்பித்தேன். ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையில் வாடினேன். என்னுடைய முதல் தோழியே என் அம்மாதானே!. என் அம்மா நல்ல சிகப்பு ஆனால் அப்பா கருப்பு. நான் அம்மாவிடம் சென்று சண்டை போட்டேன், " ஏன் என்னை கருப்பாக பெற்றீர்கள்?" என்று.

அம்மா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் நான் கேட்காததால், அப்பாவிடம் சொல்லிவிட்டார். அப்பா அன்று எனக்கு கூறிய அறிவுரைகள் தான் இன்று என்னை மிகப் பெரிய தன்னம்பிக்கை உள்ளவனாக மாற்றி உள்ளது. அப்பா எவ்வளவோ அறிவுரைகள் சொல்லி, என் தாழ்வுமனப்பான்மையை போக்கி, என்னை படிப்பில் அதிக கவனம் செலுத்த வைத்தார். அந்த வயதிலேயே சிகப்பாய் இருந்தவர்களை விட எனக்குத்தான் தோழிகள் அதிகம். அது இன்றுவரை தொடர்கிறது.

எனக்கும் காதல் வந்தது. மூன்று அக்கா, ஒரு தங்கையுடன் பிறந்த ஒருவனுக்கு காதல்கல்யாணம் கைகூடும் என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். உங்களில் யாராவது காதலியின் திருமணத்திற்கு சென்று வாழ்த்திவிட்டு வந்திருக்கின்றீர்களா? உங்களுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் முன்னாடி உங்கள் முன்னால் காதலி இரண்டு குழந்தைகளுடன் சென்றால் எப்படி இருக்கும்??? அதன் வலி எப்படி இருக்கும் தெரியுமா?

சரி விடுங்கள், விசயத்திற்கு வருவோம். நான் பழகியவரையில் நிறைய பெண்கள் என்னை பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, யாருக்கும் கொஞ்சம் பொறுத்திருப்போம் என்று தோன்றவே இல்லை. பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம். அந்த டீன் ஏஜ் பருவங்களில் என்னுடைய அருகாமையும், என் நட்பும் அவர்களுக்கு நிறைய தேவையாய் இருந்திருக்கிறது என்பதைத்தான் அப்படிச் சொன்னேன்.

பிறகு படித்து முடித்து வேலைக்கு சேர்ந்தாயிற்று. ஆனால், கல்யாணம்???? என்னுடைய நண்பர்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்து, அனைவருக்கும் குழந்தைகள் பிறந்தும் கூட எனக்கு கல்யாணம் நடப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாமலே இருந்தது. எல்லோருடைய கல்யாணங்களுக்கும் சென்று வரும்போது இருக்கும் வேதனை இருக்கிறதே? அதை எப்படி சொல்லி புரியவைப்பது? அக்காக்களுக்கெல்லாம் கல்யாணம் தாமதமாக பல காரணங்கள். ஒரு கட்டத்தில் எனக்கு இனி கல்யாணமே ஆகாது என்றுதான் நினைத்தேன்.

பிறகு ஒரு வழியாக என்னுடைய லைன் க்ளியர் ஆனபோது, நான் மார்க்கட் இழந்த நடிகை ஆகிப்போனேன். நான் அப்பாவிடம் சொன்னது ஒரே ஒரு கண்டிஷன்தான். எனக்கு வரப்போகும் மனைவி சிகப்பாக இருக்க வேண்டும். இன்னொரு கருப்பு ஜெனரேஷனை உருவாக்க நான் தயாராயில்லை. அப்பா பல இடங்களில் பெண் பார்த்தார். பெண் சிகப்பாக இருந்தால் ஜாதகம் பொருந்தாது. ஜாதகம் பொருந்தினால், பெண் கருப்பாக இருப்பார்கள். எல்லாம் சரியாக இருக்கும், ஆனால், " மாப்பிள்ளை வெளிநாடா? எங்களுக்கு இருப்பது ஒரே பொண்ணுதாங்க. அவ்வளவு தூரம் அனுப்ப முடியாது" என்பார்கள். ஒரு ஸ்டேஜில் நான் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

அப்போதுதான் ஆண்டவனாக பார்த்து என் பெரிய மாமனார் மூலம் ஒரு ஜாதகத்தை அனுப்பி வைத்தார். பெண்ணின் போட்டோவை பார்த்தவுடன் பிடித்து விட்டது. ஆனால், ஒரு சில காரணத்தால் நான் உடனே முடிவு சொல்லவில்லை. பின்பு அப்பா பார்த்த பெண்களை எல்லாம் வேண்டாம் என நிராகரித்தேன். ஏனென்றால் மனதில் அந்த பெண்ணே நின்றாள். எனக்குள் ஒரு மின்னல். எனக்காகவே அவள் பிறந்தவள் என்று. ஆறுமாதம் கழித்து அப்பாவிடம், ஒரு நண்பர் மூலமாக தூது விட்டேன், "அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று. மலேசியாவில் இருந்து திருச்சி சென்றேன். பெண் பார்க்கும் படலம் முடிந்து, என்னை பெண்ணுடன் தனியாக பேச அனுமதித்தார்கள். ஆனால், கடைசிவரை நான், அந்த பெண்ணிடம் என்னை பிடித்திருக்கிறதா? என்று கேட்கவே இல்லை. காரணம் ரொம்ப சிம்பிள், "என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? என்னைப்போலவே அவர்களுக்கும் சிகப்பான பையனைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால்?" எது எப்படி இருப்பினும், நான் அவர்களை இழக்க விரும்பவில்லை. அன்று நான் சற்று சுயநலத்துடனே நடந்து கொண்டேன். பிறகு எல்லோருக்குமே பிடித்துபோக ஒரு வழியாக என் மனைவி ஆனால் அவள்.

அந்த தேவதை என் வாழ்வில் வந்தவுடன் தான் புரிந்து கொண்டேன். இது போல் ஒரு மனைவி அமைவாள் என்றால் இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று. எவ்வளவு கவலைகள் இருந்தாலும், எப்போதுமே சந்தோசமாக இருப்பவன் நான். அவள் வந்தவுடன் என் வாழ்வில் இன்னும் அதிக சந்தோசம் வந்தடைந்தது. இதுவரை பெரிய சண்டை என்று எதுவும் வந்ததில்லை. என் சண்டைகள் எல்லாம் ஒரு சில மணித்துளிகள் தான். இது வரை எந்த ஒரு சண்டையின் முடிவிலும் அவள் மட்டும் மன்னிப்பு கேட்டதே இல்லை. நான்தான் எப்போதும் மன்னிப்பு கேட்பேன். ஏனென்றால், அவள் மேல் தவறே இருக்காது.

நான் பல ஜென்மங்களில் செய்த புண்ணியம்தான் என் மனைவி எனக்கு அமைந்தது. 11 வருடங்களுக்கு முன் எப்படி லவ் பண்ணினேனோ இன்னும் அதே அளவு லவ்வுடன் இருக்கிறேன். என் மனதளவில் உள்ளுக்குள் இருந்த எவ்வளவோ வக்கரங்களை துடைத்து என்னை சரி பண்ணியவள் என் மனைவி. என்னிடம் இருந்த அனைத்து குறைகளையுமே சரி பண்ணியவள். "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்பது என் விசயத்தில் நூறு சதவிகிதம் உண்மை. என்னைவிட வயதில் குறைவானவராய் இருந்தாலும் என்னை வழி நடத்தி செல்வது என் மனைவியே என்பதில் எனக்கு எப்போதுமே சந்தோசம்தான்.எவ்வளவோ தோழிகள் இருந்தாலும், என் அம்மாவிற்கு பிறகு எனக்கு கிடைத்த அற்புதமான தோழி என் மனைவிதான்.

என் காதல் தோல்வி அடைந்ததற்காக இப்போது சந்தோசம் அடைகிறேன். அது மட்டும் நிறைவேறி இருந்தால் எனக்கு என் மனைவி கிடைத்திருக்க மாட்டார்களே! ஆனால், இன்றும் எனக்கு நிறைய தோழிகள். இருந்தாலும், என் மனைவி என்னை என்றுமே சந்தேகப்பட்டது இல்லை. உண்மையான காதலுடன் வாழும்போது மற்ற பெண்கள் என்னதான் உங்கள் வாழ்வில் குறுக்கிட்டாலும், உங்களால், நீங்கள் நினைத்தால் கூட கெட்டுப்போக முடியாது. உண்மைதானே! நானும் அப்படித்தான். இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும், என் மனைவியே எனக்கு மீண்டும் மனைவியாக வேண்டும் என்று என் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

இதை எல்லாம் இங்கே நான் சொல்ல ஒரே ஒரு காரணம்தான். இன்று என் தேவதை எனக்கு கிடைத்த நாள் .

ஆம், இன்று என் கல்யாண நாள். இன்றுடன் என் திருமணம் முடிந்து 11 வருடங்கள் ஆகிறது.

இந்த கட்டுரையை படிப்பவர்கள் மனதார வாழ்த்திவிட்டு செல்லுங்கள் நண்பர்களே!

26 comments:

துளசி கோபால் said...

மணநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் உலகநாதன்.


மனம் நிறைந்த ஆசிகள். நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்

பாலாஜி said...

வாழ்த்துக்கள்

ஆண்டாள்மகன் said...

மணநாள் வாழ்த்துக்கள் நண்பரே

ஆண்டாள்மகன் said...

மணநாள் வாழ்த்துக்கள் நண்பரே

arasu said...

my heartiest wishes. inru pol enrum vaalga.

தராசு said...

வாழ்த்துக்கள் உலகநாதன்

Kumar said...

//" ஏன் என்னை கறுப்பாக பெற்றீர்கள்?"//
சிவாஜி படத்துலே வர்ற dialogue.

எனக்கும் இப்பொழுது நீங்கள் குறிப்பிட்டுள்ளது போலவே நடந்து கொண்டிருக்கிறது. ஜாதகம் ரொம்பவே முக்கியமோ?

இந்த இனிய நாள் மீண்டும் மீண்டும் உங்கள் வாழ்வில் வர வாழ்த்துக்கள்.

jegan said...

இனிய திருமண தின நல்வாழ்த்துக்கள் - ஜெகன் மோகன்

வலசு - வேலணை said...

மணநாள் வாழ்த்துக்கள்.
சந்தோசமாக இணைபிரியாமல் வாழ்வதற்கு என்னுடைய வாழ்த்துக்களும்

MSK said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள் !! இன்று போல் என்றும் வாழ்க !!

மோகன் குமார் said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் உலக்ஸ்

தனி காட்டு ராஜா said...

வாழ்க வளமுடன் ...அன்புடன் ....

~~Romeo~~ said...

அட .. அண்ணே திருமண நாள் வாழ்த்துக்கள் . அண்ணிக்கும் சேர்த்தே ..

rouse said...

தோழர்

இனிய மணநாள் வாழ்த்துக்கள்

tsekar

tamilvasanai said...

இனிய திருமண தின நல்வாழ்த்துக்கள்

tamilvasanai said...

இனிய திருமண தின நல்வாழ்த்துக்கள்
PUPPYRAJAN

ப்ரின்ஸ் said...

வாழ்க வளமுடன்...பல்லாண்டுகாலம் இனிதே!!

என். உலகநாதன் said...

வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி.

Killivalavan said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

karthik said...

Belated Wsihes...

Karthik.
usa.

Anonymous said...

Iniya thirumana valthugal.

sriram said...

வாழ்த்துக்கள் உலக்ஸ், கருப்பா இருந்தா என்ன குத்தமா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

ஏனோ தெரியல
உங்களோட பல இடுகைகளின் என்னோட பின்னூட்டமே கடைசியா இருக்கு..
என் ராசி அப்படி இருக்குன்னு நெனைக்கிறேன், இனிமே பின்னூட்டம் போடாமலே போகட்டுமா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

என். உலகநாதன் said...

//ஏனோ தெரியல
உங்களோட பல இடுகைகளின் என்னோட பின்னூட்டமே கடைசியா இருக்கு..
என் ராசி அப்படி இருக்குன்னு நெனைக்கிறேன், இனிமே பின்னூட்டம் போடாமலே போகட்டுமா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

அண்ணா,

நீங்க இப்படி சொல்லலாமா? ரொம்ப பிஸி அதான்.

கோபம் வேண்டாம்.

ரவிச்சந்திரன் said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

sriram said...

கோவமெல்லாம் ஒண்ணுமில்ல உலகஸ்
என்னோட ராகி பாத்தீங்கன்னா - உங்களோட பல இடுகைகள்ல என்னோட கமெண்ட்தான் கடைசியா இருக்கு. அதைத்தான் சொன்னேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்