Jun 24, 2010

சிந்திக்க வேண்டிய ஒரு விசயம்!

ஒரு 15 வருடங்களுக்கு முன்பு நான் ராணிப்பேட்டையில் இருந்த போது அப்பாவுக்கு ஏதாவது செய்தி தெரிவிக்க வேண்டும் என்றால் கடிதம் எழுதுவேன். அந்த கடிதம் லால்குடி சென்று சேர்ந்து, பிறகு அவரின் பதில் கடிதம் வருவதற்கு ஒரு வாரம் ஆகும். பதில் கடிதம் வரும் வரை ஒரே தவிப்பாக இருக்கும். அப்போது இமெயில் வசதிகள் இல்லை. எங்கள் வீட்டிலும் அப்போது கம்ப்யூட்டர் இல்லை. கைப்பேசியும் கிடையாது. எப்போதாவது ஆபிஸ் போனில் பேசுவதுண்டு. ஆனால் இன்று, எல்லா வசதிகளும் இருக்கிறது. 24 மணி நேரம் தொடர்புகொள்ள கைப்பேசி வசதி உள்ளது. அதிக செலவு இல்லாமல் நிறைய விசயங்களை பகிர்ந்து கொள்ள மெயில் வசதி உள்ளது. அதுவும் கையில் BlackBerry Phone இருந்தால் இன்னும் வசதி. இமெயில்களை போனிலே பார்த்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட இமெயில் வசதியை நாம் சரியான முறையில் பயன்படுத்துகிறோமா?

எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவங்களை பாருங்கள்:

அனுபவம் 1: பொதுவாக நான் எந்த ஒரு குழும மெயில் ஐடியிலும் மெம்பர் ஆக விரும்புவதில்லை. எங்கள் காலேஜ் நண்பர்களிடம் மட்டும் ஒரு குழும ஐடி மூலம் இன்னும் தொடர்பில் இருக்கிறேன். நான் தற்போது வசிக்கும் பகுதியின் அருகே ஒரு சின்ன டவுண் உள்ளது. அங்கே ஒரு Expatriate Association உள்ளது. எப்படியோ என் மெயில் ஐடி அறிந்து என்னையும் அந்த குழுமத்தில் இணைத்துவிட்டார்கள். சில நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சில தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு எல்லோருக்கும் மெயில் அனுப்புவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அங்கே உள்ள ஒரு கம்பனியில் ஒரு இந்தியர் அவருக்கு ஒரு புரோமோசன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு இந்திய நண்பரை பற்றி நிர்வாகத்தில் ஏதோ போட்டு கொடுத்துவிட்டார் போல. அதனால் அந்த நபரின் வேலைக்கான ஒப்பந்தத்தை நிர்வாகம் கேன்சல் செய்துவிட்டது. போட்டு கொடுத்த நபருக்கு புரோமோசன் கிடைத்து விட்டது.

பாதிக்கப்பட்ட நபர், முதல் நபரிடம் நியாயம் கேட்டு ஒரு மெயில் அனுப்புகிறார். அவருக்கு மட்டும் அனுப்பினால் பரவாயில்லை. அவர் குழும மெயில் ஐடியில் அனுப்புகிறார். உடனே அவர் இவருக்கு பதில் எழுதுகிறார். அப்படியே ஆரம்பித்து சண்டை பெரிய அளவில் முற்றி விட்டது. எனக்கு ஏன் கோபம் என்கின்றீர்களா? அவர்கள் இருவரையும் யார் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் பப்ளிக்காக சண்டை போட்டுக்கொண்டார்கள். ஒருவருக்கு ஒருவர் மெயில் அனுப்பிக்கொள்ளாமல், Reply to All போடுவதால் அவர்களின் சண்டை அனைவருக்கும் தெரிந்தது. இதில் என்ன கொடுமை என்றால், அவர்களின் மனைவிகளை பற்றி பொதுவில் திட்டிக்கொண்டார்கள். பொறுத்து பார்த்து, நன்றாக திட்டி ஒரு மெயில் அனுப்பினேன். பிறகு ஒரு வழியாக நிறுத்திக்கொண்டார்கள்.

அனுபவம் 2: மலேசியாவை விட்டு நார்த் இந்தியாவிற்கு வேலைக்கு சென்றார் ஒரு நபர். அங்கே சென்றவர் அவருடைய நண்பர்களுக்கு அவர் வேலையை பற்றியும், குடும்பத்தை பற்றியும் ஒரு மெயில் எழுதுகிறார். எப்படித்தெரியுமா?

" நாங்கள் இங்கே நலம். பெரிய பெண் இங்கு வந்த கொஞ்ச நாளில் வயதுக்கு வந்து விட்டாள். சின்னவள் இப்போதோ அப்போதோ என்று இருக்கிறாள். சுஜா இப்போது கம்பூட்டர் கிளாஸ் செல்கிறாள். உங்களை எல்லாம் நிறைய மிஸ் செய்துவிட்டதாக புலம்புகிறாள் (சுஜா யார் தெரியுமா? அவரின் மனைவி)....."

இப்படி போகிறது அந்த மெயில். அவர் இந்த மெயிலை அனைவருக்கும் அனுப்புகிறார். அதை படிக்கும் நண்பர்கள் அப்படியே விட்டால் பரவாயில்லை. இவர்கள், "சுஜாவை கேட்டதாக சொல்லவும். நாங்களும் நிறைய மிஸ் செய்திவிட்டோம்" என்று எழுதுகிறார்கள். இந்த மெயிலும் அனைவருக்கும் வருகிறது.

பொறுத்து பொறுத்து பார்த்து நான் இப்படி எழுதினேன்:

" நண்பரே,

நீங்கள் யாரென்றே எனக்குத்தெரியாது. உங்கள் பெரிய மகள் வயதுக்கு வந்தால் எனக்கு என்ன? உங்கள் சின்ன மகள் எப்போது வேண்டுமானலும் வயதுக்கு வந்துவிட்டு போகட்டும். அதனால் எனக்கு என்ன? சுஜா கம்ப்யூட்டர் கிளாஸ் போனால் எனக்கு என்ன? போகாவிட்டால் எனக்கு என்ன? இதை எல்லாம் ஏன் எனக்கு தெரிவிக்கின்றீர்கள்"

இந்த மெயிலுக்கு பிறகு அவரிடமிருந்து மெயில் வருவது நின்று போனது.

அனுபவம் 3: என் நண்பர் ஒருவர் மிடில் ஈஸ்டில் வேலை பார்க்கிறார். சமீபத்தில் அவரின் அப்பா இறந்த செய்தி அவருக்கு கிடைக்கிறது. உடனே ஒரு 100 பேருக்கு அவர் இப்படி ஒரு மெயில் அனுப்புகிறார்:

" என்னுடைய அப்பா இன்று காலை இந்தியாவில் இறந்து விட்டார். நான் இன்று இரவு இந்தியா செல்கிறேன். என் செல்போன் நம்பர் 9........"

அவர் அனைவருக்கும் தெரிவித்தவரை சரி. எதற்காக செல்போன் நம்பரை தருகிறார். அனைவரும் அவரிடம் போன் பண்ணி வெளி நாட்டிலிருந்து விசாரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? மிக முக்கிய நண்பர்கள் விசாரிப்பார்கள். எல்லோருமா போன் பண்ணி விசாரிப்பார்கள்? சரி, முக்கியமான நபருக்காக அவர் போன் நம்பரை போட்டார் என்றால் சரி, அதை ஏன் எல்லோருக்கும் அனுப்புகிறார். சரி, அவர் மெயில் அனுப்பினார். நண்பர்கள் என்ன செய்ய வேண்டும்? Reply என்று போட்டு அவருக்கு மட்டும் கண்டோலன்ஸ் மெஸெஜ் அனுப்ப வேண்டும். ஆனால், எல்லோருமே, Reply All போட்டு கண்டோலன்ஸ் மெஸெஜ் அனுப்பினார்கள். எப்போது மெயிலை ஓப்பன் செய்தாலும், இந்த மெயில்களே இன்பாக்ஸ் முழுவதும் நிரம்பி இருந்தன.

பிறகு நான் அனைவருக்கும் ஒரு மெயில் அனுப்பினேன், " நண்பர்களே, தயவு செய்து கண்டோலன்ஸ் மெஸெஜை அவருக்கு மட்டும் அனுப்புங்கள். எல்லோருக்கும் அனுப்பாதீர்கள்"

ஆனாலும் நின்றபாடில்லை. பிறகும் ஒரு மெயில் வந்தது இப்படி,

" உங்கள் அப்பா நேற்று இறந்ததற்காக மிகுந்த வருத்தமடைகிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்"

நான் உடனே இப்படி பதில் எழுதினேன்,

" நண்பரே, என் அப்பா இறந்து 9 வருடம் ஆகிறது. அவரின் ஆன்மா என்றோ சாந்தி அடைந்து விட்டது"

பின்புதான் மெயில்கள் நின்றது.

ஏன் இப்படி நண்பர்கள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு மெயிலை சம்பந்தபட்ட நபருக்கு மட்டும் அனுப்பினால் போதும் என்ற Basic Disicipline கூட எப்படி இல்லாமல் போகிறது.

அதனால்தான் கேட்டேன், "இமெயில் வசதியை நாம் சரியான முறையில் பயன்படுத்துகிறோமா? " என்று.

8 comments:

rk guru said...

அருமையான பதிவு வாழ்த்துகள்..!

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html

Maria Mcclain said...

interesting blog, i will visit ur blog very often, hope u go for this website to increase visitor.Happy Blogging!!!

பரிசல்காரன் said...

:-))))

♥ ℛŐℳΣŐ ♥ said...

தல இந்த மாதிரி சில மெயில் எனக்கும் வந்துச்சு ..

என். உலகநாதன் said...

//அருமையான பதிவு வாழ்த்துகள்..!//

வருகைக்கு நன்றி குரு.

என். உலகநாதன் said...

//interesting blog, i will visit ur blog very often, hope u go for this website to increase visitor.Happy Blogging!!!//

வருகைக்கு நன்றி மரியா.

என். உலகநாதன் said...

:-))))

வருகைக்கு ரொம்ப ரொம்ப நன்றி பரிசல்.

என். உலகநாதன் said...

//தல இந்த மாதிரி சில மெயில் எனக்கும் வந்துச்சு ..//

வருகைக்கு நன்றி ரோமியோ.