Aug 4, 2010

உழைப்பு! உழைப்பு!! உழைப்பு!!!

இது என்னுடைய வலைப்பூ என்பதால் என்னுடைய அனுபவங்களே நிறைய இடம் பெறுகின்றன. வேறு சில விசயங்களையும் நேரம் கிடைக்கும்போது எழுத முடிவு எடுத்துள்ளேன். நான் எப்போதும் பிஸியாகவே உள்ளதால் நான் 'மிக கடுமையான உழைப்பளி' என என்னை நானே அடிக்கடி எண்ணிக்கொள்வதுண்டு. ஆனால் அது எவ்வளவு பெரிய தப்பு என்பதை சமீபத்தில் உணர்ந்தேன். நான் ஏன் அப்படி உணர்ந்தேன் என்று சொலவதற்கு முன்னால் என் நண்பன் ஒருவனை பற்றி உங்களிடம் சொல்லி விடுகிறேன். அப்பொழுதுதான் எப்படி எல்லாம் மனிதர்கள் தங்கள் நேரங்களை செலவிடுகிறார்கள், உழைக்கிறார்கள் என்பது புரியும்.

சமீபத்தில் என் நண்பன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது. அவன் MCOM வரை படித்துள்ளான். ஆரம்ப காலங்களில் அவனுக்கு நிறைய இடங்களில் நான் வேலைக்கு சேர உதவி இருக்கிறேன். அப்போது எல்லாம் அவன், "இல்லை உலக்ஸ், இன்னும் தங்கைக்கு கல்யாணம் ஆகல. எனக்கும் பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. அதனால், கடமைகளை முடித்துவிட்டு வெளியூர் வேலைக்கு செல்கிறேன். அதுவரை, திருச்சியிலேயே ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து கொள்கிறேன்" என்று ஒரு சிட் கம்பனியில் வேலைக்கு சேர்ந்தான். இப்போது பல வருடங்களுக்கு பிறகு பார்த்த போதும் அதே கம்பனியில் வேலை பார்ப்பதாக கூறினான். நான் அவனிடம், "ஏண்டா, இப்போதான் உன் கடமை எல்லாம் முடிந்து விட்டதே? ஏன் வேறு வேலைக்கு முயற்சி பண்ணக்கூடாது?"

"இல்லை உலக்ஸ், நமக்கு இதுவே போதும். மாதம் 8000 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. சொந்த வீடு உள்ளது. இனி எங்கு நான் போய் வேலை பார்க்க" என்றான். அவனிடம் பேசி பிரயோசனம் இல்லை என நினைத்து தொடர்ந்து அவனிடம் பேசாமல் திரும்பிவிட்டேன்.

இந்த மாதிரி ஒரு சோம்பேறித்தனமாக எல்லோரும் இருந்தால் ஒரு நாடு எப்படி உருப்படும்? ஏதோ அதிக சம்பளத்தில் வேலை பார்த்தாலும் பரவாயில்லை. மிக குறைந்த சம்பளம். எப்படி அவனால் திருப்தியாக வாழ முடிகிறது என்று தெரியவில்லை. இனி அவனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளேன்.

அடுத்ததாக நான் சொல்ல விரும்புவது ஒரு வக்கீலை பற்றி...

எங்கள் கம்பனியின் முக்கியமான வேலைக்காக ஒரு சைனிஷ் லா கம்பனியை அமர்த்தி இருக்கிறோம். அந்த கம்பனியின் ஓனர் ஒரு சைனிஷ் லாயர். வயது 39. இந்த வயதில் அவர் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார். ஒரு பென்ஸ் கார், ஒரு BMW கார் வைத்துள்ளார். அவருடைய ஒரு மணி நேர சம்பளம் 13000 ரூபாய். மிகுந்த புத்திசாலி. அவர் எனக்கு கடந்த இரண்டு வருடங்களாக பழக்கம். அவரின் ஆளுமை திறன் எப்போதுமே என்னை மயக்குகிற ஒரு விசயம். பல பேர் இருக்கும் மீட்டிங்குகளில் கேட்கப்படும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே. அந்த அளவிற்கு இந்த வயதிலேயே அனுபவ அறிவு அதிகம் உள்ளவர்.

அலுவலக நேரங்களில் அவரோடு போனில் பேசவே முடியாது. எப்போதும் பிஸியாகவே இருப்பார். அவராக பேசினால்தான் உண்டு. அதனால் அவர் மேல் எனக்கு நிறைய கோபங்கள் உண்டு. சில நேரங்களில் காலை 7.30க்கு எல்லாம் பேசுவார். அப்போதெல்லாம் நான் அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருப்பேன். சில சமயம் பேசுவேன். பல சமயங்களில் பிறகு பேசுகிறேன் என்று சொல்லி வைத்துவிடுவேன்.

சென்ற வாரம் ஒரு மதிய உணவின் போது, நானும் அவரும் கொஞ்சம் சாவகாசமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் கேட்டேன்,

"காலையில் 7.30க்கு எல்லாம் பேசுகின்றீர்களே? எப்படி அப்போதே அலுவலகம் வந்து விடுவீர்களா?"

"ஆம். நான் காலை 6 மணிக்கு எல்லாம் வந்து விடுவேன்"

நான் ஆச்சர்யமாக, "அப்படியா. எத்தனை மணிக்கு காலை எழுந்து கிளம்புவீர்கள்?"

" காலை 4.45க்கு எழுந்து ரெடியாகி, 5.30க்கு கிளம்பி, ஆபிஸ் அருகில் உள்ள கடையில் ஒரு முட்டையும் ஒரு காபியும் சாப்பிட்டு விட்டு 6 மணிக்கு ஆபிஸ் வந்துவிடுவேன். 6 மணியிலிருந்து 8 வரை அன்றைய தினத்துக்கான வழக்குகளின் பாயிண்ட்ஸ்களை குறிப்பெடுத்துக்கொள்வேன். பின்பு 8.30க்கு கோர்ட் செல்வேன் (மலேசியாவில் இப்போது காலை 8.30க்கு எல்லாம் கோர்ட் ஆரம்பித்துவிடுகிறார்கள்). பின்பு மதிய வேளைகளிலும், இரவிலும் க்ளையன்ஸ் மீட்டிங் இருக்கும்"

நான் ஆவல் மிகுதியில், "எத்தனை மணிக்கு வீட்டிற்கு செல்வீர்கள்?" என்றேன்.

"இரவு 11.45 அல்லது 12 மணி ஆகும்"

"அப்படியானால், எத்தனை மணி நேரம் தூங்குவீர்கள்"

"நான் 4 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதில்லை"

"எப்படி உங்களால் இப்படி உழைக்க முடிகிறது? எப்படி 4 மணி நேர தூக்கம் போதும் என நினைக்கின்றீர்கள்?"

"நான் தினமும் இரவில் ஒரு மணி நேரம் பாரில் செலவழிக்கிறேன். என்னால் விஸ்கி இல்லாமல் தூங்க முடியாது"

"இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா?"

"என்னால் இதிலில் இருந்து இனிமேல் வெளிவர முடியாது"

"இதை உங்கள் குடும்பம் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள். ஏதும் கம்ப்ளையிண்ட் செய்வதில்லையா"

"சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். என்ன செய்ய? அவ்வளவு வேலை இருக்கிறதே?"

குடிக்கும் பழக்கத்தை தவிர என்னால் அவரிடம் எந்த கெட்ட பழக்கத்தையும் காண முடியவில்லை. ஆனால், சனிக்கிழமை மட்டும் அவர் எந்த வேலையும் செய்வதில்லை. அன்று முழுக்க அவர் குடும்பத்துடன்தான் செலவழிக்கிறார்.

இந்த சின்ன வயதிலேயே அவர் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆகிவிட்டார். இருந்தாலும் இன்னும் ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருக்கிறார்.

அவர் சந்திப்புக்கு பின் ஏனோ என் நண்பனை பற்றியும், என்னைபப்ற்றியும் நான் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.

14 comments:

Anonymous said...

Ulaks.. If I dont sleep for 8 hours, I go mad.. How is this possible for Chineese!!

தெருவிளக்கு said...

இது தங்கள் வலைப்பதிவில் நான் இடும் முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன்.
தங்களின் பல கருத்துக்களுடன் ஒன்றுபடும் என்னால், இக்கருத்துடன் சேர்ந்து கொள்ள முடியவில்லை.
சாதாரனமாக மனிதனுக்கு தேவையான தூக்கம் என்கிற ஓய்வை கொடுக்காமலிருப்பதும் தவறு என்பது என் கருத்து.
அவராக தூங்கச்செல்ல கஷ்டப்படுவதிலிருந்தே அவர் நிம்மதியாய் இல்லை என்பது தெரிகிறதே!!
அதற்காக நான் உங்கள் நண்பரின் செயலையும் நியாயப்படுத்த முன்வரவில்லை. அவரது தகைமைக்கு அவர் அதை விடவும் சிறப்பானதுக்கு முயற்சிப்பதே நலம். அதனை அவர் ஓய்வில்லாமல் உழைத்தல்தான் என்பதாக கருத தேவையில்லையே...

பரிசல்காரன் said...

இப்படி உழைக்கும் மனிதர்களைக் கண்டால் எனக்கும் பிரமிப்பாய்த்தான் இருக்கிறது சார்!

என். உலகநாதன் said...

//Ulaks.. If I dont sleep for 8 hours, I go mad.. How is this possible for Chineese!!//

நான்கு மணி நேர தூக்கம் என்பது மிகவும் குறைவான தூக்கம்தான்.

வருகைக்கு நன்றி நண்பரே!

என். உலகநாதன் said...

//இது தங்கள் வலைப்பதிவில் நான் இடும் முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன்.
தங்களின் பல கருத்துக்களுடன் ஒன்றுபடும் என்னால், இக்கருத்துடன் சேர்ந்து கொள்ள முடியவில்லை.
சாதாரனமாக மனிதனுக்கு தேவையான தூக்கம் என்கிற ஓய்வை கொடுக்காமலிருப்பதும் தவறு என்பது என் கருத்து.//

உண்மைதான் சார். குறைந்தது ஆறு மணி நேர தூக்கமாவது அவசியம்.

வருகைக்கு நன்றி தெருவிளக்கு.

என். உலகநாதன் said...

//இப்படி உழைக்கும் மனிதர்களைக் கண்டால் எனக்கும் பிரமிப்பாய்த்தான் இருக்கிறது சார்!//

உண்மைதான் பரிசல். வருகைக்கு நன்றி.

காவேரி கணேஷ் said...

உண்மை தான் உலக நாதன்.

இங்கு சென்னையிலேயே இந்த மாதிரி உழைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்..

நல்ல விழிப்புணர்வு கட்டுரை,வாழ்த்துக்கள்.

Sweatha Sanjana said...

பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

Anonymous said...

Both seem to be at two extremes. Is it not possible to strike a balance?

என். உலகநாதன் said...

//உண்மை தான் உலக நாதன்.

இங்கு சென்னையிலேயே இந்த மாதிரி உழைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்..

நல்ல விழிப்புணர்வு கட்டுரை,வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி காவேரி கணேஷ்.

என். உலகநாதன் said...

//பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.//

வருகைக்கு நன்றி சுவேதா சாஞ்சனா!

என். உலகநாதன் said...

//Both seem to be at two extremes. Is it not possible to strike a balance?//

நீங்கள் சொல்வது சரி நண்பரே!

வருகைக்கு நன்றி.

வெறும்பய said...

நல்ல விழிப்புணர்வு கட்டுரை

Anonymous said...

I just remembered this quote.

'Don't compare yourself with others. You never know what their life is all about' - Somebody

Thanks,
Swami