Dec 9, 2010

என் கண்கள் குளமாயின?

அழுகை, கோபம், சிரிப்பு இதெல்லாம் ஒவ்வொரு வகையான உணர்ச்சிகளின் வெளிப்பாடு. இதில் எதையுமே நாம் கட்டுப்படுத்தக்கூடாது. நான் எப்போது ஒரு வித சிரிப்புடனே உலா வருபவன். ஆனால், மிக மென்மையான மனம் எனக்கு என்று நினைக்கிறேன். என்னால் சினிமாவில் வரும் சோகமான காட்சிகளை கூட சாதாரணமாக பார்க்க முடியாது. சிறு வயதில் இருந்தே மிக சோகமான தருணங்களை நிறைய சந்தித்திருக்கிறேன். அதனால் எந்த உணர்ச்சிகளையும் என்னால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.

அப்பா இறந்த தினத்தில் இங்கு இருந்து  ஊர் போய் சேரும் வரை அழுது கொண்டே சென்றேன். கண்களில் தண்ணீரே இல்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் ஊருக்கு சென்று உடம்பை பார்த்தவுடன் வந்த அழுகை யாராலும் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

என்னுடைய நண்பர் ஒருவர். தெய்வ நம்பிக்கை அதிகம் இல்லாதவர். மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவர் கண்கள் கலங்கி நான் பார்த்ததில்லை. மிகவும் அமைதியானவர். அவர் உயிருக்கு உயிராக நேசித்த அவரின் அம்மா கேன்சர் வந்து படுத்த படுக்கையில் இருந்தார். பல லட்சங்கள் செலவு செய்தார். அவர்களை காப்பாற்ற முடியாது என்று நன்றாக தெரிந்தும் நிறைய செலவு செய்தார். காரணம் அம்மா மேல் உள்ள அளவுக்கதிகமான பாசம், பிரியம், அன்பு மற்றும் நேசம். மருத்துவர்கள் கை விட்ட நிலையில், ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார். நாள் முழுவதும் அம்மா அருகிலேயே இருந்தார்.

தினமும் பக்தி சம்பந்தமான புத்தகங்களையும், பகவத் கீதை புத்தகங்களையும் படித்து காண்பிப்பார். கடைசி இரண்டு வாரமும் அம்மாவின் அருகிலேயே இருந்தார். ஒரு நாள் அவரின் அம்மா இறந்து போனார். ஆனால், சொன்னால் நம்ப மாட்டீர்கள். நண்பர் கடைசி வரை ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை. எங்களுக்கு எல்லாம் பெரிய ஆச்சர்யம். எப்படி அவரால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடிந்தது. என்னால், தாங்காமல் அவரிடமே கேட்டேன். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

"ஏன் அழ வேண்டும். நான் அம்மாவிற்கு ஒரு மகனாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து விட்டேன். மேலும் எனக்கு அழுகையும் வரவில்லை"

என்னால் அவர் கூறிய பதிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அதுதான் உண்மை. அவர் கடைசி வரை அழவே இல்லை. சினிமாவில் சோக காட்சியை பார்த்து அழும் என்னால் அவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. இன்று வரை அவர் கண்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நான் காணவில்லை.

இதை எல்லாம் நான் ஏன் இங்கு நினைவு படுத்துகிறேன். காரணம் இருக்கிறது. சென்ற வாரம் என் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவத்தை பாருங்கள்.

மலேசியாவில் பிச்சைக்காரர்களை நான் பார்த்தது இல்லை. அதனால் ஏழைகளே இல்லை என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மை நிலை அது அல்ல. ஏழைகளே இல்லாத நாடே இல்லை போல. நாட்டுக்கு நாடு ஏழைகளின் சதவிகிதம் வேண்டுமானால் மாறுடலாம். ஆனால் எல்லா நாடுகளிலும் பாவப்பட்ட ஜீவன்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

எங்கள் கம்பனியின் தோட்ட வேலை செய்யும் இளைஞர். ஒரு 28 வயது இருக்கும். மிக அமைதியான பையன். நல்ல வேலை செய்பவன். பாத்ரூம் மற்றும் டாய்லெட் கிளீன் செய்ய என்று தனிப்பட்ட காண்ட்ரெக்டர்கள் உண்டு. சில சமயங்களில் அவர்கள் வராமல் இருப்பது உண்டு. அந்த சமயங்களில் டாய்லெட் கிளீன் செய்வதிலிருந்து, ஆபிஸ் கிளீன் செய்வது வரை எல்லா வேலைகளையும் இந்த இளைஞன் செய்வது வழக்கம்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் அவன் என் அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான். ஆனால் அவனில் ஒரு மாற்றத்தை என்னால் உணர முடிந்தது. ஆனால் என்ன என்று புரியவில்லை. தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அழவில்லை. எனக்கோ மலாய் மொழி தெரியாது. அதனால் அருகில் உள்ள நபரை அழைத்து என்ன? என்று விசாரிக்கச் சொன்னேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். விசயம் அப்படிப்பட்டது.

விசாரித்தவுடன் தான் தெரிந்தது. அன்று நடு இரவில் அவனின் மனைவி ஏதோ ஒரு நோயால் இறந்துவிட்டார். இரவோடு இரவாக மனைவியை அடக்கம் செய்து விட்டு, காலையில் ஏதுமே நடக்காதது போல அலுவலகம் வந்துவிட்டார். சொந்தக்காரர்கள் யாரும் இல்லை. மாமனார் இருப்பது வேறு இடத்தில். அவர்கள் குடும்பத்திலும் ஏழ்மை.

என்ன ஒரு கொடுமை பாருங்கள். அவனுக்கு இரண்டு குழந்தைகள் வேறு. இனி எப்படி அவர்களை கரையேற்றப்போகிறான். பிறகு நாங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணம் சேர்த்து அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்.

கோடிக் கோடியாய் கொள்ளை அடிப்பவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள். ஆனால், ஏழைகளுக்கு ஏன் இப்படிப்பட்ட கொடுமை எல்லாம் ஏற்படுகிறது?

ஆண்டவா! உன் திருவிளையாடல்களுக்கு ஒரு அளவில்லையா???


9 comments:

Vijay Anand said...

//மலேசியாவில் பிச்சைக்காரர்களை நான் பார்த்தது இல்லை. //
I saw so many beggers in Malaysia Johor Bahru Checkpoint area..(like India they are sitting one corner)

அமுதா கிருஷ்ணா said...

சில சமயம் ஆண்டவன் இருக்கிறானா என்று தான் தோன்றுகிறது..

மோகன் குமார் said...

கொடுமை.

இதே போல் contract-ல் வேலை செய்யும் நபர் ஒருவர் என அலுவலகத்தில் காலை திருமணம் செய்து கொண்டு உடன் அலுவலகம் வந்து விட்டார். வரா விட்டால் Loss of pay ஆகி விடுமே என.

மரணம் நடந்த பின்னும் வருவது ரொம்ப கொடுமை தான்.

என். உலகநாதன் said...

//I saw so many beggers in Malaysia Johor Bahru Checkpoint area..(like India they are sitting one corner)//

நான் பார்த்தது இல்லை விஜய் ஆன்ந். தங்கள் வருகைக்கு நன்றி.

என். உலகநாதன் said...

//சில சமயம் ஆண்டவன் இருக்கிறானா என்று தான் தோன்றுகிறது..//

வருகைக்கு நன்றி அமுதா மேடம்.

என். உலகநாதன் said...

//மரணம் நடந்த பின்னும் வருவது ரொம்ப கொடுமை தான்.//

ஆம்.

வருகைக்கு நன்றி மோகன் குமார்.

Anand said...

//கோடிக் கோடியாய் கொள்ளை அடிப்பவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள். ஆனால், ஏழைகளுக்கு ஏன் இப்படிப்பட்ட கொடுமை எல்லாம் ஏற்படுகிறது?//

நல்ல கேள்வி... ஆனால் பதில் தான் இல்லை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கொடுமை

bandhu said...

உலகத்தில் யாருக்கும் வரக்கூடாத நிலைமை. உண்மையிலேயே கண்கள் குளமாகின.