Dec 27, 2009

ஒரு வகையான சந்தோச உணர்ச்சி!எனக்கு நிறைய நண்பர்கள் என்று பலமுறை சொல்லி வந்திருக்கிறேன். இப்போது ஏன் மீண்டும் இங்கே சொல்கிறேன்? காரணம் இருக்கிறது. நண்பர்கள் இல்லாத வாழ்வை என்னால் நினைத்தே பார்க்க முடியாது. பெற்றோர்களுக்கு அடுத்து நண்பர்களால்தான் எனக்கு இந்த உலகம் புரிந்தது. நண்பர்களால்தான் நிறைய நல்ல விசயங்களையும், சில கெட்ட விசயங்களையும் கற்றுக் கொண்டேன். இது வரை எதிரிகள் என்று எனக்கு யாரும் கிடையாது. அப்படியே யாராவது எதிர்த்தாலும் அவர்களையும் என் சிறந்த நண்பர்களில் ஒருவராக ஆக்கிக்கொள்ளும் திறமை எனக்கு உண்டு.

நண்பர்களை விட்டு பிரிந்து செல்கிறோமே என்று ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்கு மாறும்போது நிறைய தடவை அழுது இருக்கிறேன். காலேஜ் படிக்கும் போது கூட ஒரு முறை என் நண்பன் MK ராஜ்குமார் +2 முடித்து இன்ஜினியரிங் காலேஜுக்கு ஹாஸ்டலுக்கு சென்ற அன்று இரவு இருவருமே கண்கலங்கினோம். ஆனால் இப்போது அவனை சந்தித்து பல வருடங்களாகிறது. ஆனாலும் இன்னும் தொடர்பில் இருக்கிறேன். எல்லா ஊர்களிலும் இப்படிபட்ட நண்பர்கள் எனக்கு நிறைய இருக்கிறார்கள். எங்கள் ஊரில் ரொம்ப அதிகம். அனைவருமே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவர்கள், ஒரு சிலரைத் தவிர. எனக்கு அர்ஜுனனின் நண்பர் கண்ணனைவிட, துரியோதனன் நண்பன் கர்ணனை போன்றவர்களைத்தான் ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்தில் என்னைப் பார்க்கும் ஒரு சிலருக்கு என்னுடைய சில தனிப்பட்ட கொள்கைகளினால் என்னைப் பிடிக்காமல் போகலாம். ஆனால் பழக ஆரம்பித்த பிறகு என்னைவிட்டு விலகிச் சென்றவர்கள் எவருமில்லை. நட்புக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பவன் நான். ஒரே ஒரு விசயம் சொல்கிறேன். நான் +2 படித்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டேன். அந்த பிரச்சனையின்போது அப்பா ஸ்பெசல் தாசில்தாராக திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தினமும் பாடிகார்டுடன்தான் ஜீப்பில் பள்ளி சென்று கொண்டிருந்தேன். பின்பு திருச்சியில் சித்தப்பா வீட்டிலிருந்து சில காலம் பள்ளி சென்று கொண்டிருந்தேன். ஏனென்றால் பிரச்சனையின் தீவிரம் அந்த மாதிரி. அன்று என்னைத் தேடிக்கொண்டிருந்தவர்கள் கையில் சிக்கியிருந்தால் இன்று இதை உங்களுக்காக எழுதிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் முடிவில் என்ன ஆனது தெரியுமா? அன்று என்னைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இன்று என் சிறந்த நண்பர்கள். எப்படி இது சாத்தியம்? எப்படி அவர்களால் எதிரியான என்னை நண்பராக பார்க்க முடிந்தது? அதுதான் நான்? எப்படி என்னால் முடிந்தது? அதன் சூட்சுமம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் ஒரு 100 USD டிமாண்ட் டிராப்டாகவோ, காசோலையாகவோ அனுப்பினால் அந்த ரகசியத்தை சொல்கிறேன்.கடந்த 13 வருடங்களில் பல முறை இந்தியா சென்று வந்திருக்கிறேன். ஒரு சில பயணத்தைத் தவிர அனைத்து பயணங்களும் சந்தோசத்த தரக்கூடியதாகவே அமைந்தது. பெண் பார்க்க சென்றது, என் கல்யாணத்திற்கு சென்றது, என் மகள் பிறந்ததற்கு சென்றது, என் புது வீட்டு கிரஹபிரவேசத்திற்கு சென்றது என்று பல விதமான சந்தோசங்களுக்கு வித்திட்ட அந்த பயணங்கள் என்னால் மறக்க முடியாதது. ஒவ்வொரு முறை போகும்போதும் ஒவ்வொரு விதமான சந்தோச உணர்ச்சிகள், சந்தோச டென்ஷன்கள், ஒவ்வொரு விதமான மன நிலைகள் ஏற்படுவது வழக்கம்.

ஆனால் நான் இன்று இருக்கும் ஒரு பரப்பரப்பான மனநிலையை நான் என்றுமே அடைந்ததாக நினைவில்லை. ஆம். நாளை நான் இந்தியாவிற்கு செல்கிறேன். சென்னையில் ஒரு நாள் தங்கி திருச்சி செல்கிறேன். இதில் என்ன பரபரப்பு இருக்கிறது என்கின்றீர்களா? நான் இதுவரை நேரில் பார்க்காத நம் எழுத்துலகத்தைச் சேர்ந்த எனக்குப் பிடித்த சில நண்பர்களை நாளை சென்னையில் சந்திக்க இருக்கிறேன். திருப்பூரில் உள்ள ஒரு பிரபல பதிவரை சந்திக்கும் திட்டமும் உள்ளது. நண்பர்களின் எழுத்துக்களினால் மட்டுமே ஈர்க்கப்பட்டு அவர்களை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து நாளை காலை கோலாலம்பூரிலிருந்து சென்னை செல்கிறேன். அதீதமான சந்தோசத்தில் ஒரு வித படப்படப்புடன் இருக்கிறேன்.

நான் சந்திக்க போகும் அனைவரும் நான் மேலே குறிப்பிட்டுள்ள என் பால்ய காலத்து நண்பர்கள் போல் ஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் இந்த பயணம் எனக்கு ஒரு விதமான, விளங்கிக்கொள்ள முடியாத சந்தோசத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பால்ய நண்பர்கள் ஒரு விதம். ஆனால், பதிவுலக நண்பர்கள் அனைவரும் ஒரே விதமான அலைவரிசையில் பழகக் கூடியவர்கள். அதனால்தான் இந்த நட்பு கூடுதல் கவனம் பெறுகிறது.

நண்பர்கள் யாரும் என்னை அஜித் குமார் போலோ இல்லை கமல் போன்றா இருப்பேன் என்று தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது என்பதற்காக என் போட்டோக்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

ஏன் இதையெல்லாம் இங்கே எழுதுகிறேன்? என்ன செய்வது? எல்லா நிகழ்வுகளையும் உங்களிடம் சொல்லாவிட்டால் என் தலையே வெடித்து விடும் போல் உள்ளது. சரி, நண்பர்களே அடுத்த 20 நாட்களுக்கு உங்களை இந்தியாவிலிருந்து சந்திக்கிறேன்.

புத்தாண்டு முடிவதற்குள் இன்னும் இரண்டு பதிவுகள் எழுத வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை முடியாமல் போனால், அதனால் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளை இன்றே தெரிவித்துக் கொள்கிறேன்.

Dec 26, 2009

மறக்க முடியாத அந்த நாள்!

அந்த நாளில் ஏற்பட்ட அந்த அதிர்வு இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை. முதல் நாள் இரவு அதிக நேரம் விழித்து இருந்ததால் காலை எழுந்திருக்க தாமதமானது. என் அலுவலக நண்பர்தான் கைப்பேசியில் அலைத்தார்,

"உலக்ஸ், விசயம் தெரியுமா? சென்னை முழுவதும் தண்ணீர் புகுந்து விட்டதாம்"

ஊருக்கு போன் செய்தால் முதலில் குழப்பமே மிஞ்சியது. எங்கள் மாமனார் வீடு இருப்பது திருவாருரில். என் நண்பர் ஒருவர் வேளாங்கண்ணியிலிருந்து திருவாரூரை நோக்கி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறதாம்' என்று வேறு பயமுறுத்தினர். நான் உடனே போன் செய்து உடனே அனைவரும் திருச்சிக்கோ, லால்குடிக்கோ சென்று விடுங்கள் என்றேன். அவர்களோ எங்களைப் பற்றி கவலைப்படத் தொடங்கினர். கொடுமையான நிமிடங்கள் அவை.

எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. தூக்க கலக்கம் வேறு. ஒருவாறு புரிந்து கொண்டபோதுதான் அதன் தீவிரம் தெரிந்தது. அடுத்த ஒரு மணி நேரமும் தொலைக்காட்சியிலும், இண்டர்நெட்டிலும் செய்தியை படித்த பிறகு மனம் முழுவதும் சோகம் அப்பிக்கொண்டது. அதற்கு முன் சுனாமி என்றால் என்ன ? என்று எனக்குத் தெரிந்திருக்க வில்லை. பிறகு தொடர்ந்து இந்தியாவிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியது. அப்போதுதான் தெரிந்தது மலேசியாவிலும் சுனாமி வந்ததும், இந்தோனேசியாவின் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மலேசியாவிலும் உணரப்பட்டதும். இது எதுவுமே நாங்கள் இருக்கும் இடத்தில் எங்களால் உணர முடியாமல் போனது. மலேசியாவில் பினாங்கிலும், லங்காவியிலும் சிலர் இற்ந்து விட்டார்கள் என்ற செய்தி கிடைத்தபோது மனம் இறுக்கமானது.

எங்காவது குண்டு வெடிப்போ அல்லது ஏதாவது இயற்கை பேரிடரோ நடந்திருந்தால், உடனே நாம் முன்பு அங்கே போயிருந்த நாட்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. அதே போல்தான் எனக்கும் நான் மெரினா பீச், வேளாங்கண்ணி, பினாங்கு பீச், லங்காவி பீச்சுகளில் இருந்த நாட்கள் என் நினைவுக்கு வந்து போனது. நேரம் ஆக ஆக மக்கள் சாவு எண்ணிக்கை அதிகமான போது கண்கள் குளமானது.

அடுத்த நாள் அருகில் உள்ள கோலா தெரங்கானுவில் அமைச்சர் அலுவலகத்தில் ஒரு மீட்டிங் இருந்தது. எங்கள் ஊரில் இருந்து அங்கு செல்ல கடற்கரை வழியாகத்தான் செல்ல வேண்டும். அடுத்த நாள் நானும், என் அலுவலக நண்பரும் போகும் போது என் கண்கள் மட்டும் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. இரண்டு மணி நேர மீட்டிங்கில் ஒரு மணி நேரம் எல்லோரும் சுனாமியைப் பற்றித்தான் பேசினார்கள். திரும்பி வரும்போது அருகில் உள்ள பீச்சில் காரை நிறுத்தினேன். உடன் வந்த நண்பர் என்னை ஆச்சரியமாக பார்த்தார். கடலில் சிறிது தூரம் நடந்து அந்த கடலையே வெறித்துப்பார்த்தேன். கடல் மிக அமைதியாக இருந்தது. அலைகள் என் கால்களை இதமாக தொட்டுத் தொட்டு வருடிச் சென்றது. இவ்வளவு அமைதியான கடலா ஆக்கரோசமாய் என் மக்களைத் தின்றது? என்று என்னால் நம்ப முடியவில்லை. நான் அந்த கடல் அலையைப் பார்த்து கன்னா பின்னா என்று திட்டித் தீர்த்தேன். ஆனால், அந்த அலையோ 'நான் அப்படிச்செய்ய வில்லை' என்று மீண்டும் என் கால்களை வருடிச்சென்றது.

இருந்தாலும் கோபத்துடன் முறைத்துப் பார்த்து அதனை கேள்விகளால் துளைத்துக்கொண்டிருந்தேன்,

"இவ்வளவு சாந்தமான நீயா அவ்வளவு கோபமாக சுனாமியாக வந்தாய்? உனக்கு இந்த அளவு கோபம் வரக் காரணம் என்ன? உன்னைக் கோபப் படுத்தியது யார்? எது? கடல் நீருக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பம்தான் காரணம் என்றால், உன் கோபத்தை கடல் நீருக்கு அடியில் வைத்துக்கொள்ள வேண்டியது தானே? எதற்கு ஒன்றும் தெரியாத என் அப்பாவி மக்களிடம் உன் வீரத்தைக் காட்டுகிறாய்?"

நண்பர் என்ன நினைத்தாரோ உடனே ஓடி வந்து என்னை கையைப் பிடித்து காருக்கு அழைத்துச் சென்றார். உடனே காரில் ஏறிவிட்டேன். இல்லையென்றால், கடலிடமும், அலையிடமும் கோபமாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து என்னை பைத்தியம் என்று எண்ணக்கூடிய ஆபத்து அப்போது இருந்ததால் உடனே காருக்குள் சென்றுவிட்டேன். ஆனாலும், கோபம் இருந்து கொண்டே இருந்தது. இருக்கிறது இன்னும்.

அன்று இரவு தொலைக்காட்சியில் இறந்தவர்களை பார்க்கையில் எதுவுமே ஓடவில்லை. நிறைய குழந்தைகள் இறந்திருந்தார்கள். என் பிள்ளைகள் படிக்கும் பள்ளி இருப்பது கடற்கரை ஓரத்தில். இந்தியாவிலிருந்து போன் செய்து உடனே அந்த பள்ளியிலிருந்து பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்றச்சொன்னார்கள். இருப்பதே ஒரே ஒரு இண்டர்நேஷனல் பள்ளி. அதை விட்டால் வேறு பள்ளி கிடையாது. ஆனாலும் நம் மனதைப் பாருங்கள்! உடனே நம் பிள்ளைகளை மட்டும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமாம். என்ன ஒரு சுயநலம். ஆனாலும், சுனாமி எங்கள் ஊரில் வந்திருந்தால், அந்த பள்ளி அருகே வந்திருந்தால்... அதைப் பற்றி நினைத்தால் அனைத்து இரவுகளுமே தூக்கமில்லா இரவுகள் ஆகிறது.

ஆண்டவன்... அல்லது நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்குமேயானால், அவரிடம் அல்லது அதுவிடம் "ஏன் இப்படி மக்களை கொத்து கொத்தாக பழி வாங்குகிறாய்? என்ன காரணம்? நாங்கள் என்ன பாவம் செய்தோம்" என்று பல கேள்விகள் கேட்க மனசு துடிக்கிறது

சரி, என்ன காரணமாக இருக்க முடியும்? எல்லாவற்றுக்குமே விதிதான் காரணம் என்றால், விதி முடிந்தவர்கள் எல்லோரும் ஒன்றாக கடற்கரையில் வசித்தார்களா என்ன? சுனாமி பாதித்த பகுதிகளில் வாழும் மக்களிடம் பேசினால் ஒவ்வொருவரிடமும் ஒரு சோகக் கதை இருக்கிறது. அந்த சோகத்தை முற்றிலுமாக மறந்து அவர்கள் வாழ ஆண்டவன்தான் அருள் புரியவேண்டும்.

ஆண்டவன் இருப்பதாக நம்புகிறேன். அதனால், என் வாழ்நாளுக்குள் இது போன்ற இன்னொரு இயற்கை பேரிடரை நான் பார்க்க நேரக் கூடாது என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். சுனாமியால் அன்று இறந்த அனைத்து ஆன்மாக்களும் இன்னொரு பிறப்பெடுத்து மீண்டும் ஒரு நல்ல வாழ்வை வாழ அவர்கள் நினைவுதினமான இன்று ஆண்டவனை வேண்டுகிறேன். சுனாமியால் சொந்தங்களை இழந்து வாடும் என் சகோதர சகோதரிகள் அந்த நிகழ்வை மறந்து நல்லபடியாக சந்தோசமாக வாழக்கூடிய மன நிலையை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஆண்டவனை கெஞ்சுகிறேன்.

Dec 25, 2009

மிக்ஸர் - 25.12.09

முதலில் உலகத்திலுள்ள அனைத்து கிறிஸ்துவ நண்பர்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்தது ஒரு சிறிய கிராமத்தில். நாங்கள் குடியிருந்த தெருவில் எங்களைத் தவிர அனைவருமே கிரிஸ்துவர்கள். எங்கள் வீட்டிலிருந்து ஐந்து வீடு தள்ளி சர்ச். அதனால் தினமும் சர்ச் போன அனுபவம் உண்டு. ஒவ்வோரு ஞாயிறும் அப்பம் போல் ஏதோ ஒன்று தருவார்கள். நன்றாக இருக்கும். பின்பு படித்த பள்ளி திருச்சி பிஷ்ப் ஹீபர் தெப்பக்குளம். அங்கு தினமும் காலை பிரேயரில், தலைமை ஆசிரியர் பைபிளில் இருந்து சில பகுதிகளை வாசிப்பார். பிறகு ஒரு பாடலை செலக்ட் செய்து பாடச் சொல்வார். அனைத்து மாணவர்களும் சேர்ந்து பாடுவோம். " காலமை தேவனைத் தேடு'. "ஏசுவே நீர் பெரியவர், ஏசுவே நீர் பரிசுத்தர்', ஏசுவின் நாமம் இனிய நாமம்" இப்படி பல பாடல்கள். இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பாடுவோம். மறக்க முடியாத நாட்கள். பிறகு செயிண்ட் ஜோசப் காலேஜ், திருச்சியில் பட்டப் படிப்பு. இப்படி இளமையின் பல ஆண்டுகளை கிறிஸ்துவ பள்ளிகளிலும், சர்ச்சுகளிலும் கழித்து இருக்கிறேன். அப்போது நண்பர்கள் அனைவரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இந்துக் கோவில்களுக்கும், ஞாயிறு சர்ச்சுக்கும், ரம்ஜான் சமயங்களில் மசூதிக்கும் செல்வோம். என் முஸ்லீம் நண்பன் ஒருவன், எங்கள் வீட்டில் அருகே உள்ள மசூதியில் ஓதுவான். நான் அவனுடன் சேர்ந்து, " அல்லாஆஆஅ அக்பர் அல்லா" என ஓதியிருக்கிறேன். ஏனோ அனைத்தும் இன்று நினைவில் வந்து போகின்றது. உலகம் முழுவதும் இதே போல் ஒற்றுமையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

****************************

ஒரு மனிதனை மிமிக்ரி என்ற பெயரில் கிண்டல் செய்வது அவர்களை எந்த அளவில் பாதிக்கும் என்பதை இன்று காலை சன் டிவியில் டி ராஜேந்தரின் பேட்டியை பார்த்தபோது உணர்ந்தேன். காலை கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சியில் டி ராஜேந்தரின் பேட்டியை ஒரு பத்து நிமிடம் தான் பார்க்க முடிந்தது. 8.00 மணியிலிருந்து 8.10 வரை பார்த்தேன். அதற்குள் அலவலகம் செல்ல நேரம் ஆகிவிட்டதால் வந்து விட்டேன். அந்த 10 நிமிசத்தில் டி ராஜேந்தர், சிட்டி பாபுவிடம் எதுகை மோனைப் பற்றி சொன்னதுதான் என்னை சிந்திக்க வைத்தது. " நான் ஒரு தலை ராகத்தில் 'இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர தாலாட்டு' (இன்னும் பல பாடல்களை அருமையாக மேற்கோள் காட்டினார்) போன்ற பாடல்களை எழுதினேன். நானே இசையும் அமைத்தேன். 1979ல் ஒரு தலை ராகத்தில் அனைவருமே புதியவர். யாருமே யாரிடமுமே உதவியாளராக பணி புரிந்த்து இல்லை. அந்தப் படம் வெள்ளி விழாப் படம். என்னுடைய எந்த படத்திற்கும் ஹீரோவைத் தேடி அலைந்ததில்லை. ஏன் சிம்புவையே நான் மீண்டும் கதாநாயகன் ஆக்கவில்லை. இப்படி என்னிடம் உள்ள பல திறமைகளை விட்டு விட்டு, நான் ஏதோ ஒருபடத்தில் 'தங்கச்சி....' பேசியதை வைத்து கிண்டல் செய்வது நியாயமா?"

அவர் கேட்பதும் நியாயம்தானே. ஒருவரின் மனம் புண்படாமல் ஏன் மிமிக்ரி செய்ய முடியாதா???

****************************

தெலுங்கானா பிரச்சனை எதில் போய் முடியும் என எனக்குத் தெரியவில்லை. மத்திய சர்க்கார் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதை போல் தெரிகிறது. 'முடியாது' என்று முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே? அவர் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதற்காக ஒரு நாடகம் ஆடிவிட்டு, இப்போது ஏதேதோ பேசுகிறார்கள். அன்று இதே பிரணாப் முகர்ஜி தெலுங்கான கோரிக்கை அவர்களின் 60 வருட கோரிக்கை என்றார். இன்று? ஆந்திராவே பற்றி எரியும் சூழல். யாரால் ஏற்பட்டது? முடிவு எடுப்பதில் ஏன் இவ்வளவு குழப்பம். நமது பிரதமர் என்ன செய்கிறார்? ஏன் இப்படி தனி மாநிலம் கேட்கிறார்கள் என்றும் எனக்கு புரியவில்லை. ஒரு காமன் மேனுக்கு அவர்கள் ஸ்டேட் எங்கு இருந்தால் என்ன? அவர்களின் தனி மனித வருமான விகிதம் எவ்வளவு? அதை உயர்த்த என்ன செய்ய வேண்டும்? ஏன் நம் நாடு மற்ற நாடுகள் போல் முன்னேற முடியவில்லை? என்றல்லவா யோசிக்க வேண்டும்? எவ்வளவு பொது சொத்துக்கள் இப்போது நாசம் பாருங்கள். "தனி தெலுங்கானா அமையா விட்டால் ஆந்திராவே பற்றி எரியும்" என்கிறார் சந்திர சேகர் ராவ். சாதாரணமாக இருந்த அவரை இந்த அளவுக்கு வளர்த்து விட்டவர்கள் யார்? எந்த கட்சி? மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியும், ​ காங்கிரஸும்தானே?

இனி ஹைதராபாத்தில் தொழில் தொடங்க எல்லோரும் ஆயிரம் முறை யோசிப்பார்களே? என்ன செய்யப் போகிறது நமது காங்கிரஸ் அரசாங்கம்!

****************************

காலைல இந்தியாவில் இருந்து எனக்கு வந்த குறுஞ்செய்தி உங்களுக்காக:

" வேட்டைக்காரன் படம் ரிலீஸுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"

-பின்லேடன்.

எப்படியெல்லாம் யோசிக்கறாங்க பாருங்க?

விஜய் அன்றைக்கு கலாநிதிமாறனைப் பார்த்து " வேட்டைக்காரன் வெற்றிக்கு" நன்றி சொன்னாரே! அப்படின்னா படம் சூப்பர் ஹிட்டா? உண்மை என்னன்னு எனக்குத் தெரியலை. இருந்தாலும் பிள்ளைகள் விஜய் ரசிகர்கள். தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்கிறார்கள். நான் பார்க்க போகிறேன். படத்தை பார்க்காமல் எந்த குறையும் சொல்லக்கூடாது இல்லையா? ஆனால், விமர்சனம் எல்லாம் எழுத மாட்டேன் கவலைப்பட வேண்டாம்.

****************************

ஒரு நண்பர் அவருடைய நண்பருக்கு ஒரு வேலை வாங்கித் தரும்படி என்னிடம் சொன்னார். நண்பரின் நண்பர் ஒரு ஜாலி டைப் போல. நான் ஒரு நாள் எதேச்சையாக அவரைச் சந்தித்த போது அவருடைய குவாலிபிகேஷன் என்ன ? என்று விசாரித்தேன். "MBA" என்றார். அவருக்கு நான் வேலை பார்த்து வைப்பதற்காக கல்வித் தகுதியை கேட்கிறேன் என்று சொல்லாமல் விட்டது என் தவறு என்பதை பின்பு உணர்ந்தேன்.

பிறகு நண்பரின் மூலமாக அவரின் பயோடேட்டா வந்தது. பார்த்தவன் அதிர்ந்து போனேன். அவரின் கல்வித் தகுதி பிகாம் என்று போட்டிருந்தது. பிறகு என் நண்பரை அழைத்து விசாரித்தேன். ஆமா, அவர் பிகாம்தான் என்றார். பின்பு நண்பரின் நண்பரை போனில் தொடர்பு கொண்டேன்,

" உங்க பயோடேட்டா வந்தது. நீங்க பிகாமா?"

" ஆமா சார்"

" அன்னைக்கு MBAனு சொன்னீங்க"

" அதுவா சார். நீங்க சும்மா கேட்கறீங்கனு நினைச்சு சொன்னேன்"

" அப்போ நீங்க MBA இல்லையா?"

" MBAவும் சார்"

" புரியலியே"

" Married But Available சார்"

இவரை என்னங்க செய்யலாம்?

****************************

Dec 23, 2009

என் மேலே எனக்கு கோபம்!

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து
விசயங்களையும் எழுத
மனம் ஆவலாய் பறக்கிறது
வாழ்வில் அனுபவிக்கும்
அனைத்து நிகழ்வுகளையும்
ஒரு புனைவாகவோ
அல்லது கவிதையாகவோ
எழுதித்தொலைக்க மனம்
கடந்து துடிக்கிறது
எப்படியாவது எதையாவது
சாதிக்க வேண்டும் என்கிற
போதை மனதில் ஏற்பட்டு
தூக்கத்தை கெடுக்கிறது.

மனம் குரங்காகி மரம் மரமாக
தாவுகிறது
ஆனால் உலகத்தில் நடக்கும்
நிகழ்வுகளைப் பார்க்கும் போது
நிறைய நேரம் கோபமும்
ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே
சந்தோசம் கலந்த
உணர்ச்சிகள் ஏற்படுகிறது
அதை எழுத
நினைக்கையில்
வார்த்தைகள் கர்ப்ப
பையை விட்டு பிரசவிக்க
மறுக்கிறது.

அதனால்
எப்போதும் போலவே
எதை எதையோ எழுத
நினைத்து எதையும்
எழுதாமல் போகும்
என்னை மன்னித்து
விடுங்கள் நண்பர்களே!

Dec 21, 2009

பசி!

நேற்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "பசித்த மழை" கட்டுரையை படித்தேன். படித்து முடித்தவுடன் ஏதும் செய்ய முடியாத ஒரு நிலையில் சுமார் ஒரு மணி நேரம் அந்த கட்டுரையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் பசியை பற்றியும், மழையைப் பற்றியும் எழுதியிருந்தார். பசியின்போது ஏற்படும் உணர்வுகளைப் பற்றி அவர் எழுதி இருந்தது என்னை வெகுவாக பாதித்து விட்டது. இன்றும் எத்தனையோ நபர்கள் பசிக் கொடுமையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நான் திருச்சியில் வேலை பார்த்த போது என் ஆபிஸ் அருகில் ஒரு ரூமில் நண்பர் ஒருவர் இருந்தார். அவருடைய ரூம் மிகச் சிறியது. நாலடிக்கு நாலடி. அதில்தான் அவர் வாழ்ந்தார். அவருக்கு என்று யாரும் இல்லை. சில கம்பனிகளின் கணக்குகளை அவர் எழுதிக் கொடுப்பார். அப்போது கம்ப்யூட்டர் வர ஆரம்பித்த சமயம். அவருக்கு வரும் வேலைகள் குறைந்தன. அவர் ரூமில் சில சமயம் சமைப்பார். அவர் காலையில் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. ஒரு வேளைதான் சாப்பிடுவார். நான் மதியம் சாப்பிட அழைத்தாலும் வர மாட்டார். அவரைப் பார்க்கும் போது எல்லாம் வேதனையாக இருக்கும். அப்பொழுதே அவருக்கு 35 வயதுக்கு மேல். கல்யாணத்தைப் பற்றி பேசினால், ஒரு சிறிய சிரிப்பு சிரிப்பார். அது ஆயிரம் அர்த்தங்களை சொல்லும். இப்படி பல பேர் சாப்பிட வழியில்லாத நிலையில் இருந்ததை பார்த்திருக்கிறேன். நான் அப்போது எல்லாம் ஓரளவு வாழ்க்கையில் தெளிவடைந்திருந்தேன்.

ஆனால் சிறு வயதில், நிறைய தவறுகள் செய்தது நினைவுக்கு வருகிறது. நாங்கள் ஏழையும் இல்லை. ஆனால், பணக்காரர்களும் இல்லை. இரண்டுக்கும் நடுவில். என்னுடைய பார்வையில் இரண்டு விதமான நபர்கள்தான் வாழ்க்கையில் மிகப் பெரிய பணக்காரர்கள் ஆகிறார்கள். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர்கள் பின்னாளில் பணக்காரர் ஆகிறார்கள் அல்லது பணக்காரர்கள் ஆக பிறந்தவர்கள் கடைசிவரை பணக்காரர்களாகவே வாழ்கிறார்கள். இந்த நடுத்தர வர்க்கம், கடைசி வரை அப்படியே இருந்து சாக வேண்டியதுதான். நான் அந்த வகையில் வந்தவன். என் நண்பர்களிடம் நான் அடிக்கடி இப்படி சொல்வேன், " இன்று சென்னையில் பணக்காரர்களாக இருக்கும் அனைவரும் ஒரு காலத்தில் ஒரு வேளை சாப்பாட்டுக்கெ கஷ்டப்பட்டவர்கள் தான். நாம் அந்த அளவிற்கு கஷ்டப்படாததால் நாம் எங்கே அவர்கள் போல் ஆவது?" ஆனால் நான் சொன்னது ஓரளவுதான் உண்மை என்பதை பின்னாளில் தெரிந்து கொண்டேன்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு போராடுபவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிறு வயதில் ஒரளவு கஷ்டப்பட்ட போதெல்லாம் அந்த குடும்ப கஷ்டங்களை நான் உணர்ந்ததே இல்லை. பல முறை சாப்பாடு சரியில்லை என்று சாப்பாட்டு தட்டை தூக்கி எறிந்திருக்கிறேன். அப்போது எல்லாம் என்னை அம்மா என் மேல் உள்ள பாசத்தால் அடித்தில்லை. அது தவறு என்பதை இப்போது உணர்கிறேன். பல முறை ஹோட்டல் சாப்பாடு மோகத்தால் வீட்டு சாப்பாடு சரியில்லை என்று கத்தியிருக்கிறேன். அப்போதெல்லாம் என்னிடம் மட்டும் காசு கொடுத்து ஹோட்டலில் சாப்பிட்டு வரச்சொல்வார்கள். மதிய வேளையில் ஹோட்டலில் இருந்து பஜ்ஜி வாங்கி வந்து யாருக்கும் கொடுக்காமல், அனைவரையும் பார்க்க வைத்துக்கொண்டு நான் மட்டும் சாப்பிட்டு இருக்கிறேன். எவ்வளவு காய்கறிகள் வீட்டில் செய்து இருந்தாலும், வீட்டில் அக்கா, தங்கை, தம்பிகள் இருக்கிறார்களே? அவர்களுக்கும் வேண்டுமே என்கிற கவலையில்லாமல் முதலில் நான் மட்டும் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன். அவர்கள் பல நாட்கள் காய்கறிகள் இல்லாமல் வெறும் ஊறுகாயுடன் சாப்பிடுவதை பல நாட்கள் கண்டும் காணாமல் போயிருக்கிறேன். அதெல்லாம் தவறு என்று இப்போது உணர்கிறேன். இப்போது உணர்ந்து என்ன பயன்? கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் எதற்கு? என் உடன் பிறந்தவர்கள் எல்லோரும் என் மேல் அப்போது எவ்வளவு கோபத்தில் இருந்து இருப்பார்கள்?

ஹோட்டல் சாப்பாடு என்று மட்டும் இல்லாமல் வீட்டிலும் நிறைய சாப்பிடுவேன். காலையில் குறைந்தது ஆறு இட்லி சாப்பிடுவேன். பிறகு மதியம் காலேஜில் டிபன் பாக்ஸில் உள்ள லெமன் சாதத்தையும் சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்று தக்காளி சாதமும் மசாலாவுடன் முட்டையும் சாப்பிடுவேன். மாலை பள்ளி, கல்லூரி விட்டு வந்தவுடன், மிலிட்டரி ஹோட்டலுக்கு சென்று மூன்று புரோட்டா, ஒரு ஆம்லட், ஒரு ஸ்பெஷல் தோசை மற்றும் நறுக்கிய வெங்காயம் சாப்பிடுவேன். இரவு இரண்டு முறை குழம்பு ஊற்றி சாதம், ஒரு முறை ரசம் அப்புறம் தயிர் சாதம் இரண்டு காய்கறி அப்பளத்துடன் சாப்பிடுவேன். சாப்பிடுவதற்காகவே வாழ்ந்திருக்கிறேன் என்று இப்போது தெரிகிறது.

நான் அவ்வாறு சாப்பிட்டுக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் எத்தனையோ பேர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினியாக இருந்திருக்கக் கூடும். அதுவெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது வருந்துகிறேன். மற்றவர்கள் பட்டினியால் இருக்கும்போது நாம் மட்டும் நிறைய சாப்பிட்டு வாழ்வது என்ன நியாயம்?

பசியின் கொடுமையை அறிந்த பிறகு என்னை நான் மாற்றிக் கொண்டேன். அப்பா 45 வருடம் திங்கட் கிழமை விரதம் இருந்தார். அதாவது முதல் இரவு சாப்பிட்டால், பிறகு அடுத்த நாள் இரவுதான் சாப்பிடுவார். நடுவில் வெறும் காபிதான். மிகக் கடுமையாக இருப்பார். அவர் இருந்ததால் நானும் திங்கட் கிழமை விரதம் இருக்க ஆரம்பித்தேன். 13 வருடங்கள் இருந்தேன். அப்பா இறந்த அன்று வெறுப்பில் அதனை விட்டு விட்டேன். முதல் நாள் இரவிற்கு பிறகு அடுத்த நாள் இரவு வரும் வரை சாப்பிடாமல் இருப்பது என்பது மிகவும் கொடுமையான ஒன்று. தீபாவளி, பொங்கல் திங்கள் அன்று வந்தால் கூட எதுவும் சாப்பிட மாட்டேன். இரவு எப்போது வரும் என்று காத்திருப்பேன். பசி என்றால் என்ன? என்பதை அபோதுதான் உணர்ந்தேன்.

ஆண்டவன் புண்ணியத்தில் எனக்கு எந்த நோயும் இல்லை. இருந்தாலும் நான் இப்போது சாப்பாட்டை வெகுவாக குறைத்து விட்டேன். எதையும் வீணாக்குவதில்லை. ஒரு பருக்கை கீழே விழுந்தாலும் எடுத்து சாப்பிடுவேன். பிள்ளைகளையும் அவ்வாறே வளர்க்கிறேன். மதியம் ஒரு வேளைதான் முழுச் சாப்பாடு. காலையும், இரவும் கால் அளவு சாப்பாடுதான். நடுவில் காபி, டீ தவிர எதுவும் சாப்பிடுவதில்லை. முன்பு அதிகமாக சாப்பிட்டதை சரி செய்யவே இப்படி பழகிபோனேன். இன்றும் எங்காவது ஒரு மூலையில் யாராவது சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படலாம். அவர்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக என் சாப்பாட்டை குறைத்துக் கொண்டேன். நான் குறைத்தால் அவர்களுக்கு எப்படி சாப்பாடு கிடைக்கும் என்று கேள்வி கேட்கக் கூடாது. கிடைக்கும். இதை ஒரு தவமாகவே செய்கிறேன்.

அவர்களுக்காக மீண்டும் விரதம் இருக்கலாம் என முடிவு எடுத்துள்ளேன். நேரம் கிடைத்தால், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'பசித்த மழை' கட்டுரையை நீங்களும் படியுங்கள். ஒரு வேளை நீங்களும் அவ்வாறு முடிவு எடுக்கக்கூடும்.

Dec 16, 2009

மிக்ஸர் - 16.12.09

எனக்கு இந்த 'டீலா, நோ டீலா' நிகழ்ச்சியைப் பார்க்க எரிச்சலாக வருகிறது. அப்புறம் ஏன் பார்க்கிறேன் என்கின்றீர்களா? நீங்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. என் பதில் இதுதான். வேறு வழி இல்லாமத்தான். வெளி நாட்டில் உட்கார்ந்து கொண்டு எல்லா நிகழ்ச்சிகளையும் திட்டிக்கொண்டே பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். எல்லாவற்றையுமே திட்டி ஒதுக்கிவிட்டால் குடும்பத்துடன் எப்படி பொழுதைக் கழிப்பது? ஆனால், பிள்ளைகளுக்கு அந்த நிகழ்ச்சி ரொம்ப பிடித்திருக்கிறது. எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்கின்றீர்களா? சொல்கிறேன், வலுவான காரணம் இருக்கிறது. சீட்டு விளையாடுவது எனக்கு ரொம்ப பிடித்த விளையாட்டு. காசு வைக்காமல் விளையாடுவதில் எனக்கு விருப்பமில்லை. காசு வைத்து ரம்மி விளையாடுவதில் இருக்கும் சுகமே தனிதான். ஆனால் எவ்வளவு காசு வைத்து விளையாண்டாலும், கடைசியில் எல்லோரும் ஜெயித்த பணத்தில் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவோம். விடுமுறை நாட்களில்தான் நிறைய நேரம் விளையாடுவொம். அப்படித்தான் ஒரு முறை விளையாடியபோது நண்பர்களுக்குள் சின்ன சண்டை வந்து, அந்த நேரத்தில் அங்கே போலிஸ் வந்து....... வேண்டாம் விடுங்கள், அது எதற்கு இப்போது?

சாதாரண சீட்டு விளையாட்டை கண்டிக்கும் நம் சட்டம், இவ்வளவு பெரிய சூதாட்டம் அனைத்து மக்களும் பார்க்கும் ஒரு தொலைக்காட்சியில் நடப்பதை ஏன் கண்டிக்கவில்லை? எந்த உழைப்பும் இல்லாமல் கிடைக்கும் இந்த பணத்திற்கு வருமான வரி உண்டா, இல்லையா? என எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னை அதிகம் கடுப்பேத்தும் ஒரு விசயம், கலந்து கொள்பவர்களின் ரியாக்சன் தான். ஏதோ அவர்கள் உழைத்து சம்பாதித்த பணம் அவர்களை விட்டு போகாமல் அவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்பது போல அப்படியே சாமி கும்பிடுவதும், டென்சன் ஆவதும் சேசேசே..... கொஞ்சமாவது உழைத்து சம்பாதிக்க ஆசைப்படுங்கப்பா! உழைக்காமல் வரும் காசு உடம்பில் ஒட்டாது.

************************************************

ஒரு வழியாக 'கோலங்கள்' நாடகம் முடிந்து என்னை மன நோயிலிருந்து காப்பாற்றி விட்டது. இனி ஜென்மத்துக்கும் எந்த சீரியலும் பார்க்க மாட்டேன். தேவயானியை நல்ல பெண்ணாக காட்டுவதற்காக நாடகத்தில் நடித்த அனைவரையும் கெட்டவராக காண்பித்த டைரக்டரை என்ன வென்று சொல்வது? தேவயானி ஒரு வருடத்தில் அத்தனை ப்ராஜக்டையும் முடித்து அததனை கோடி சொத்துகள் சேர்த்த வித்தையை கொஞ்சம் டைரக்டர் நம்மிடம் பகிர்ந்து கொண்டால் நல்லது? நாமும் முயற்சிக்கலாம் அல்லவா?.

************************************************

எங்கள் ஊரில் ஒரு பீச் ஹோட்டல் உள்ளது. நான்கு நட்சத்திர ஹோட்டல் என நினைக்கிறேன். அந்த ஹோட்டலை சுற்றி மிகப் பெரிய கோல்ப் மைதானம் உள்ளது. நான் அடிக்கடி அந்த ஹோட்டலுக்கு செல்வது வழக்கம். கோல்ப் விளையாட செல்கிறேன் என நீங்கள் நினைத்தால், சாறி. அதற்காக செல்வது இல்லை. யாராவது கம்பனிக்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களுடன் சாப்பிட செல்வது வழக்கம். அவ்வாறு சாப்பிடச் சென்ற ஒரு நாள் எங்கள் டேபிளுக்கு அருகில் உள்ள டேபிளில் சில ஜப்பானியகள் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். சும்மா ஒரு 'ஹேய், ஹலோ' சொல்லி விட்டு வந்து விட்டோம். அடுத்த வாரம் திரும்பவும் இன்னொரு விருந்தினருடன் செல்கையில், திருமபவும் அதே ஜப்பானியர்களை பார்க்க நேர்ந்தது. சரி, ஒரு வார விடுமுறை போல என நினைத்து வந்து விட்டேன். பிறகு ஒரு மாதம் கழித்து செல்கையில் மீண்டும் அதே ஜப்பானியர்களைப் பார்த்தேன். எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது. என்ன இது? எந்த சனி, ஞாயிறு வந்தாலும் இவர்கள் இருக்கிறார்களே? சில சமயம் மற்ற நாட்களிலும் இருக்கிறார்களே? என நினைத்து, கேட்டு விட தீர்மானித்து, முடிவில் அவர்களிடம் கேட்டே விட்டேன். அவர்கள் சொன்ன பதில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அதாவது, ஜப்பானில் கோல்ப் விளையாட செலவழிப்பதை விட , ஜப்பானில் இருந்து விமானத்தில் மலேசியா வந்து கோல்ப் விளையாடி விட்டு செல்வது மிக மிக குறைந்த செலவாம். அவர்களால் கோல்ப் விளையாடாமல் இருக்க முடியாதாம். அதற்காக ஒவ்வொரு சனி, ஞாயிறும் மலேசியா வந்து விளையாடி விட்டு செல்கிறாகளாம். இதை என்னவென்று சொல்வது?

இன்னும் எங்கள் ஊரில் மேட் இல்லாமல் தான் கிரிக்கட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

************************************************

எங்கள் கம்பனியில் வேலை பார்க்கும் ஒருவரை அடிக்கடி மொட்டைத் தலையுடன் பார்த்தேன். முதலில் எனக்கு ஒன்றும் அவ்வளவு வித்தியாசமாகத் தெரியவில்லை. ஒரு முறை எதேச்சையாக பார்க்கும் போது தான் அதனை கண்டு பிடித்தேன். அதாவது வாரத்தின் முதல் நாள் முழு மொட்டை, பிறகு கொஞ்சம் வளர்கிறது. பிறகு மீண்டும் அடுத்த வாரம் முதல் நாள் அதே போல். பொறுக்க முடியாமல் அவரை கூப்பிட்டு,

" ஏம்பா எப்பவுமே மொட்டையுடன் இருக்கிறாய்? ஏதாவது ஹெல்த் ப்ராப்ளமா?"

" அதெல்லாம் ஒண்ணுமில்லை சார். சும்மாதான்"

" சும்மான்னா, புரியலை. ஏன் அடிக்கடி மொட்டை அடிக்கறீங்க"

" இல்லை சார், கடைக்குப்போனா பதினைந்து வெள்ளி கொடுக்கணும் அதான்"

" முடி வெட்டுவதற்காகவாவது மாதம் ஒரு முறைதான் பணம் கொடுக்கணும். நீயோ வாரம் தவறாமல் மொட்டை அடிக்கிறாய். அப்படியானால் வார வாரம் கொடுக்க வேண்டாமா?"

" வேண்டாம் சார்"

" ஏன்?"

" ஏன்னா, எனக்கு வாரா வாரம் மொட்டை அடிச்சு விடுறது என் வொய்ப் சார். அதனால ப்ரீதான் சார்"

என்னத்தை சொல்லறது. வேண்டாம்னு சொல்ற அவனுக்குத்தான் முடி அதிகமா வளருது, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

************************************************

Dec 13, 2009

இந்த நொடியை வெறுக்கிறேன்?

இந்த நொடியை வெறுக்கிறேன். இந்த கணத்தை வெறுக்கிறேன். இனிமேல் இது போன்ற நொடிகள் வரக்கூடாது என இறைவனை யாசிக்கிறேன். இது என் வாழ்க்கையில் ஆறாவது முறை. மலேசியா வந்த பிறகு இது மூன்றாவது முறை. இந்த கணத்தில் என் மனதில் தோன்றும் உணர்ச்சிகளை இங்கே பதிவிட முயல்கிறேன்.

அவர் என்னுடைய பெரிய மாமனார். அதாவது என் மாமியாரின் அக்கா கணவர். என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர். நான் அடைந்துகொண்டிருக்கும் அனைத்து சந்தோசங்களுக்கும் ஒரு வகையில் காரணமானவர். என் உயிரைவிட நான் அதிகமாக நேசிக்கும் என் மனைவி கிடைத்ததற்கு காரணமானவர். எல்லோவற்றிலுமே நான் கொஞ்சம் அதிகப் படியானவன். எல்லோருக்கும் 'அந்த' உணர்ச்சிகள் 16 வயதுக்கு மேல் வரும் என்பார்கள். நான் அதிலும் விதிவிலக்கானவன். 13 வயதிலிருந்தே அந்த உணர்ச்சிக்கு ஆளானவன். வீட்டில் முதல் மூவரும் பெண்கள். அனைவருக்கும் கல்யாணமாகி என் லைன் கிளியர் ஆனபோது கல்யாண மார்க்கெட்டை இழந்தவன். இனி நமக்கு கல்யாணமே அவ்வளவுதான் என நினைத்து உணர்ச்சிகளுக்கு விடுதலை கொடுத்து ஆன்மீகத்தில் ஈடுபடலாம் என நினைக்கையில், என் மனைவியின் ஜாதகத்தை என் வீட்டிற்கு கொடுத்தவர். அதன் பிறகு ஒரு சில காரணங்களால் நான் தயங்கியபோது, என் அப்பாவிடம் பேசி என் கல்யாணம் நடக்க காரணமாயிருந்தவர். தன் பெண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளையை விட தன் சகலையின் பெண்ணிற்கு நல்ல இடத்தை அமைத்துக் கொடுத்தவர்.

ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும் அவர் வீட்டிற்கு சென்று ஒரு அரை நாள் அவருடன் செலவழித்து அவருடன் லஞ்ச் சாப்பிட்டு விட்டு வருவது வழக்கம். கடந்த தீபாவளிக்கு செல்லும்போது குறைந்த நாட்களே லீவ் இருந்ததால் அவர் வீட்டிற்கு செல்லாமல் வந்துவிட்டேன். அதற்கு இப்போது வருந்துகிறேன். நான் முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன்.

காஞ்சி பெரியவர் உயிருடன் இருக்கையில் நண்பர்கள் அனைவரும் ஒரு ஞாயிறு காலை அவரைப் பார்க்க முடிவு செய்து என்னையும் அழைத்தார்கள். அப்போது நான் ராணிப்பேட்டையில் இருந்தேன். வழக்கம்போல் ஏற்பட்ட அதே சோம்பேறித்தனம். அதுவுமில்லாமல், அருகே உள்ள காஞ்சிபுரத்தில் தானே இருக்கிறார், எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்து, நண்பர்களிடம், " நான் அடுத்த ஞாயிறு வருகிறேன். நீங்கள் போங்கள்" என அனுப்பிவிட்டேன். தெய்வத்தை பார்க்க வேண்டுமானால் நாம் தான் போய் பார்க்க வேண்டும். அதுவும் தெய்வம் தரிசனம் கொடுக்கும்போதே பார்க்க வேண்டும். கோயில் கதவுகளை மூடிய பின் தரிசனத்திற்காக ஏங்குவதில் என்ன பயன்? நமக்காக தெய்வம் காத்திருக்குமா என்ன?. அடுத்த ஞாயிறு வருவதற்குள் பெரியவர் இறைவனடி சேர்ந்து விட்டார். அன்று நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. நாம் எங்காவது நல்ல காரியத்திற்கு போக வேண்டும் என நினைத்தாலோ அல்லது யாராவது வற்புறுத்திக் கூப்பிட்டாலோ தட்டிக்கழிக்காமல் உடனே செல்ல வேண்டும் என உணர்ந்த நாள் அது.

பெரிய மாமனாருக்கு கடுமையான பல்வலி ஏற்பட அதனால் அவர் டாக்டரிடம் சென்று பல்லைப் பிடுங்கி உள்ளார். சரியாக இரண்டு தினங்களில் வீட்டில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பிறகு ஆஸ்பத்திரியில் சேர்த்து, ஆங்கே அவருக்கு வலிப்பு வர, 10 நாட்களுக்கு பிறகு குணமாகி வீட்டிற்கு வந்துள்ளார். ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையில் எந்த பாதிப்பு இல்லையென்றும், பல் பிடுங்குகையில் ஏதோ ஒரு நரம்பில் கோளாறு ஏற்பட்டதால் அப்படி ஆனதாகவும் டாக்டர்கள் கூறி அனுப்பி விட்டனர்.

நேற்று முன் தினம் கடுமையான விக்கல் ஏற்பட மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். விக்கல் நிற்காமல், கோமா ஸ்டேஜ் போய் (இன்று)சரியாக மூன்று மணி நேரத்திற்கு முன் இறைவனடி சேர்ந்து விட்டதாக போன் வந்தது. வீட்டில் செய்தி கேட்டவுடன் ஒரே அழுகை. நான் மிகவும் ஸ்திரமானவன் ஆனாலும் இது போன்ற விசயங்களில் கோழையே. ஏற்கனவே தங்கை மரணத்திற்கும் இப்படியே அலறி அடித்துப் போனேன். அப்பா மரணத்திற்கும். சித்தி மரணம் சனிக்கிழமை ஏற்பட்டதால் செல்ல முடியவில்லை. இப்போது பெரிய மாமனார். என் குடும்பத்தில் பல மரணங்களை நான் சந்தித்து இருந்தாலும், ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு பாடத்தையும், ஒவ்வொரு விதமான அனுபவங்களையும் எனக்கு கற்றுத்தருகிறது. மரணத்தைப் பற்றிய பயமே இல்லாமல் போய் விட்டது.

உடனடியாக செல்ல முடியாத நிலை. மாமனார் வீட்டில் கேட்டால் 4 நாட்களுக்கு மேல் கோமாவில் இருந்ததால் இன்று இரவே அடக்கம் செய்யப் போவதாக கூறுகிறார்கள். வெளி நாடுகளில் வேலைப் பார்ப்பதால் அனுபவிக்கும் கொடுமைகளில் இதுவும் ஒன்று. அவசரத்திற்கு உடனே செல்ல இயலாது.எனக்கு வரும் வேதனையில் என்ன செய்வது என்று தெரியவில்லை.

முன்பெல்லாம் இந்த மாதிரி சூழ்நிலையில் அமைதியாக ஒரு இடத்தில் தியானம் என்ற பெயரில் உட்கார்ந்து இருப்பேன். இப்போது அப்படியில்லை. நீங்கள் எல்லாம் இருக்கின்றீர்கள் என்கிற தைரியத்தில் என் மனபாரத்தை உங்களிடம் இறக்கி வைக்கிறேன்.

அவர் ஏகப்பட்ட நபர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அவர் மகனுக்கு நிச்சயம் பண்ணி, கல்யாணம் தை மாதத்தில் என முடிவாகி இருந்தது. பிறகு அவரின் நிலை அறிந்து இன்று ஆஸ்பத்திரியிலேயே திருமணம் செய்ய முடிவாகி இருந்த நிலையில் அவருடைய மரணம். என்ன சொல்லி அவரின் மகனைத் தேற்றுவது? ஆண்டவா, ஏன் இப்படி நல்லவர்களை சோதிக்கிறாய்?

அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அதனால் இந்த நொடியை வெறுக்கிறேன். இனிமேல் இது போன்ற நொடிகள் எனக்கு வரக்கூடாது என இறைவனை யாசிக்கிறேன்.

Dec 10, 2009

நான் செய்தது சரியா?

ரமண மகரிஷி என்று நினைக்கிறேன். வேறு யார் சொல்லி இருந்தாலும் இப்போதைக்கு ரமண மகரிஷி என்றே வைத்துக் கொள்வோம். ஒரு முறை ரமண மகரிஷி ஆற்றில் குளிக்கச் செல்கிறார். அப்போது கரையோரம் உள்ள ஒரு தேள் அவரை கொட்டி விடுகிறது. அவர் அந்த தேளை எடுத்து ஆற்றில் விடுகிறார். அது மீண்டும் வந்து அவரைக் கொட்டுகிறது. அவர் மீண்டும் ஆற்றில் விடுகிறார். அது மீண்டும்..... இதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ரமண மகரிஷியைப் பார்த்து கேட்கிறார்:

" ஏன் சாமி, அதுதான் திரும்ப திரும்ப உங்களைக் கொட்டுகிறது. பின் ஏன் அதைக் கொல்லாமல் அதை பிடித்து பிடித்து ஆற்றில் விடுகிறீர்கள்?"

ரமண மகரிஷி இப்படி பதில் சொன்னாறாம்,

" கொட்டுவது அதன் குணம். பிறருக்கு உதவுவது என் குணம். அது அதனுடைய செயலில் உறுதியாக இருக்கும் போது, நான் மட்டும் ஏன் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்?"

இப்போது விசயத்திற்கு வருவோம். நான் எப்படி எழுதுகிறேனோ அதே போல் தான் என் வாழ்க்கையும். எழுதுவதில் என்னை உத்தமனாக காட்டிக்கொண்டு வாழ்க்கையை வேறு மாதிரி வாழ்பவன் அல்ல நான். சிறு வயதிலிருந்தே பிறருக்கு உதவும் குணம் படைத்தவன் நான். அந்த அந்த வயதில் முடிந்த அனைத்து உதவிகளையும் அனைவருக்கும் செய்திருக்கிறேன். என்னுடன் பழகியவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். உதவுவதற்கு நேரம் காலம் பார்க்காதவன் நான். எந்த நேரத்தில் என் வீட்டு கதவைத் தட்டினாலும் உடனெ என்ன ஏது என்று கேட்காமலே உதவுபவன். ஆனால் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உதவிகளை செய்பவன் நான்.

உண்மையான காரணத்திற்காக பணம் இல்லை என்று என்னிடம் கேட்டவர்களுக்கு பண உதவி செய்திருக்கிறேன். படிக்கும் காலத்தில் பணமே வாங்காமல் பலருக்கு ட்யூசன் சொல்லி கொடுத்திருக்கிறேன். பல பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறேன். என் நண்பர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக பல பேருக்கு யோகா சொல்லி கொடுத்து இருக்கிறேன். பல நண்பர்களை அவர்களிடம் கார் இல்லாத காரணத்தினால், ஜிம்மிற்கு தினமும் என் காரில் அழைத்துச் சென்று, முடிந்தவுடன் அவர்களுடைய வீட்டில் சென்று விட்டு விட்டு பிறகு என் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். நான் எங்காவது வெளியூர் செல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு சென்றவுடன், நண்பர்கள் குடும்பங்களுக்கு ஏதாவது தேவை என்றால், பல வேலைகளுக்கு நடுவே அவர்கள் கேட்ட பொருட்களை வாங்கி அவர்கள் வீட்டிற்கே சென்று கொடுப்பேன். நாங்கள் இருக்கும் ஊரில் இந்தியப் பொருட்கள் கிடைக்காது. கோலாலம்பூரில் தான் கிடைக்கும். நான் அடிக்கடி கோலாலம்பூர் செல்பவன். ஆனால் அவர்களால் முடியாது. அதனால் அந்த உதவிகளை செய்வேன். நான் மலேசியா வந்த புதிதில் 70, 80 இந்தியத் தொழிலாளிகள் எங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள். யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதலில் எல்லோரும் என்னிடம் தான் வருவார்கள். அத்தனை பேருக்கும் உதவி இருக்கிறேன். இப்படி பல உதவிகள். இது தான் நான்.

ஏன் இந்த தற்பெருமை பதிவு. காரணம் இருக்கிறது. எதையும் நான் சும்மா பொழுது போக்கிற்காக எழுதுவது இல்லை. என்னுடைய பதிவுகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவட்டுமே என்றுதான் எழுதுகிறேன். என் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் போல் யாருக்கேனும் ஏதேனும் நடந்தால், என்னுடைய அனுபவங்களை வைத்து அவர்களால் சரியான முடிவு நிச்சயம் எடுக்க முடியும் என்றே எழுதுகிறேன். இவ்வளவு அடுத்தவர்களுக்கு உதவும் என்னை ஒரு சிறு செயலால் ஒருவர் என்னை அவமானப் படுத்தி விட்டார். படிப்பவர்களுக்கு இது ஒரு சாதாரண விசயமாத்தான் தெரியும். அனுபவித்த எனக்குத்தான் இதன் வலி தெரியும்.

நான் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளுடன் வாழும் மனிதன். ஒரு ஆர்கனைஸ்டு பெர்சன். அவருக்கும் பல உதவிகள் செய்திருக்கிறேன். அவர்கள் வீட்டிற்கு தேவையானதை வாங்கி அவர்கள் வீட்டிற்கே சென்று கொடுத்துள்ளேன். பல முறை பல உதவிகள் செய்திருக்கிறேன். அப்படிப்பட்டவர் வேறு ஊறுக்கு சென்றிருந்த போது, நான் தெரியாத்தனமாக, அவரிடம் ஒரு பொருள் வாங்கி வரச் சொன்னேன். அதன் எடை ஒரு 25 கிராம் இருக்கலாம். தங்கம் இல்லை. அவர் அதை வாங்கி வந்தார். மற்றவர்களுக்கு நான் ஏதேனும் வாங்கி வந்தால் அவர்கள் வீட்டுக்கே சென்று கொடுப்பேன். எனக்காக யாரேனும் ஏதாவது வாங்கி வந்தாலும் நானே சென்று வாங்கிக்கொள்வேன். அதே போல் அந்த நபரிடமும் வந்து வாங்கிக் கொள்வதாக சொல்லி இருந்தேன்.

ஆனால் கடுமையான மழை காரணமாக உடனே செல்ல முடியவில்லை. அப்படியே நாட்களை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். பிறகு இருமுறை அவர் வீட்டிற்கு சென்ற போது அவர் இல்லை. நேற்று முன் தினம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். அதற்காக அந்த பொருள் தேவைப்பட்டது. அதற்காக காலை 6.30 மணிக்கு அவருக்கு போன் செய்து, "அந்தப் பொருளை எடுத்து வந்து விடுங்கள். நான் அங்கே வாங்கிக் கொள்கிறேன்" என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்தான் என்னை இந்தப் பதிவு எழுதத் தூண்டியது.

" வாட் நான்ஸன்ஸ். நீங்கதான் வாங்கி வரச் சொன்னீங்க. உங்களுக்குத் தேவையினா நீங்களே வந்து வீட்டுல வந்து வாங்கிக்கங்க. நான் என்ன நீ வைத்த வேலை ஆளா. அங்கே எல்லாம் எடுத்து வர முடியாது"

" நான் எல்லாம் உங்களுக்கு......"

" அது நீ. நான் அப்படி இல்லை" என்று சொல்லி போனை துண்டித்து விட்டார். காலையில் நல்ல நாளும் அதுவுமாக அவமானப் படுத்தப் பட்டேன். சொல்லால் அடிக்கப் பட்டேன். அந்த பொருளின் மதிப்பு 5000 ரூபாய் இருக்கலாம். அதன் எடை 25 கிராம் தான். ஒருவரால் அதை காரில் எடுத்து வர முடியாதா? அதை வாங்க நான் அவர்கள் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டுமா? நான் வந்து வாங்கிக்கொள்ள முடியாது என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை அவர் பேசியதை சரி என்று ஒப்புக்கொள்வேன். மழைக் காரணத்தாலும், வேறு காரணங்களாலும் என்னால் செல்ல முடியவில்லை. அதுவும் இல்லாமல் அவர் எனக்காக தேடி வந்து கொடுக்க வேண்டியதில்லை. தினமும் ஒரு இடத்தில் இருவருமே சந்திக்க வேண்டிய சூழ் நிலை. அப்படி சந்திக்கும் போது கொடுத்தால் போதுமானது. ஆனால், ஏன் அப்படி அவர் செய்ய வில்லை? காரணம் ஈகோ. நான் என்ற இருமாப்பு. நான் எதற்கு அவ்னுக்கு எடுத்து வந்து கொடுக்க வேண்டும் என்ற குணம்???

யோசித்துக் கொண்டே காரை ஒட்டிச் சென்றேன். என்னடா? ஆண்டவன் நம்மை இப்படி அவமானப் படும் சூழலுக்குத் தள்ளிவிட்டானே? என நினைத்தேன். ஆண்டவன் என்றைக்குமே என்னை கைவிட்டதில்லை. என்னை என்றுமே எந்த சமயத்திலும் எதிராளியிடம் தோற்குமாறு ஆண்டவன் செய்ததே இல்லை. யோசித்து பார்த்த போது அவர்கள் கடனாக எங்களிடம் வாங்கிய ஒரு பொருள் அவர்கள் வீட்டில் இருப்பது நினைவுக்கு வந்தது.

அவரை சந்திதவுடன், " நான் உங்கள் வீட்டில் வந்து அந்த பொருளை வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் எங்களிடம் வாங்கிய பொருளை எங்கள் வீட்டில் வந்து கொடுத்து விடுங்கள்" என்றேன்.

" அந்தப் பொருளையும் ஒரே பாக்கட்டில் வைத்துள்ளேன். நீங்கள் வீட்டிற்கு வந்தால் இரண்டையும் வாங்கிக் கொள்ளலாம்" என்றார்.

" இல்லை. இல்லை. நான் உங்கள் வீட்டில் வந்து வாங்கிக் கொள்கிறேன். உங்கள் பிரின்ஸிபில் படி நீங்கள் எங்களிடம் உபயோகப் படுத்த வாங்கிய அந்தப் பொருளை எங்கள் வீட்டில் வந்து கொடுத்து விடுங்கள்" என்றேன்.

" அப்படியானால் ஒன்று செய்கிறேன். உங்களிடம் வாங்கியதை உங்கள் வீட்டிற்கு வந்து கொடுத்து விடுகிறேன். உங்களுக்காக வாங்கிய பொருளை உங்களுக்கு கொடுக்க முடியாது. 5000 ரூபாய் எனக்கு நஷ்டமானாலும் பரவாயில்லை"

நீங்களே சொல்லுங்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் எப்படி ரமண மகரிஷி போல் நடந்து கொள்ள முடியும்???

ஆனாலும் இவ்வாறு நடந்து கொண்டோமே என மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது.

Dec 7, 2009

மீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா???

சிறு வயதில் என் நண்பரின் அப்பா ஒருவர் மிகப் பெரிய மீசை வைத்திருப்பார். பார்க்க கம்பீரமாக, அழகாக ஆனால் சற்று பயமாக இருக்கும். வீரப்பன் மீசை, என் நண்பர் நடிகர் நெப்போலியன் மீசை, பாரதியார் மீசை என எனக்குப் பிடித்த மீசைகள் பட்டியல் ஏராளம். எனக்கு அதனால் மீசையின் மீது ஒரு வித ஆசை இருந்து கொண்டே இருந்தது. எப்போது நாம் பெரியவன் ஆவோம்? எப்போது நமக்கு பெரிய மீசை வளரும்? என்று ஆவலாக கண்ணாடியை பார்த்துக் கொண்டே இருப்பேன். பத்தாவது படிக்கும் போது அந்த வயதில் தெரிந்து கொள்ளக் கூடாத பல விசயங்கள் தெரிய வந்தது. ஆனால், பாழாய் போன இந்த மீசை மட்டும் வளரவே இல்லை. மீசை அழகாக இருக்கும் பையன்களைத்தான் பெண்கள் சைட் அடிப்பார்கள் என்று பள்ளி நண்பர்கள் அனைவரும் வேறு சொல்லி பயமுறுத்தி வந்தார்கள். அதனால் எனக்கு அடிக்கடி அதைப் பற்றிய கவலை இருந்து கொண்டே இருந்தது.

பிறகு ஒரு வழியாக +2 படிக்கும் போது லேசாக மீசை அரும்ப ஆரம்பித்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அரும்பிய மீசைய அடிக்கடி கையால், முறுக்குவது போல் செய்து கொண்டே இருப்பேன். பார்க்கும் பெண்கள் எல்லாம் என் மீசையையே பார்ப்பதாக நினைத்துக் கொள்வேன். அப்போது நான் தலையில் ஸ்டெப் கட்டிங் வைத்திருந்தேன். நாம கொஞ்சம் தமிழ்நாட்டு கலரா இருந்ததால தினமும் எண்ணை வைத்து தலை சீவினால், அசிங்கமாக இருக்கும் என்று ஒரு நண்பன் சொன்னதால், அவன் அறிவுரைப்படி தினமும் தலைக்கு சோப்பு போட்டு குளிக்க ஆரம்பித்தேன். அதோடு இல்லாமல் பஸ் ஸ்டாண்டு போய், தலை முடிக்கு தினமும் ட்ரையர் போட்டு ஸ்டைலாக முடியை பறக்க விட்டு கொண்டுதான் பள்ளி செல்வது வழக்கம்.

தலையில் என்னை தடவ சொல்லி அப்பா என்னை தினமும் திட்டுவார். ஆனால் நான் கேட்டதில்லை. அப்பா தினமும் குளித்தவுடன் நன்றாக எண்ணை தடவி வழித்து தலையை வாரிக்கொண்டு போவார். நான் என்ன இது இப்படி எண்ணைத் தலையோடு போகிறாரே என்று நினைப்பேன். ஆனால், அவர் அந்த வயதில் இறக்கும் போது கூட தலை நிறைய முடி இருந்தது. எங்கள் பரம்பரையிலேயே தலை முடியை மிக விரைவாக தொலைத்தவன் நானாகத்தான் இருப்பேன்.

யாராவது, "என்ன மாப்பிள்ளை, இவ்வளவு சீக்கிரம் உனக்கு முடி போயிடுச்சு?" ன்னு, கேட்டா, " போனது ம...தானேடா. நானே கவலைப் படல, நீ ஏண்டா கவலைப்படற. அதுவுமில்லாம தலைக்கு வெளிய இருக்கறத பார்க்காதடா. தலை உள்ள இருக்கறத பாருடா" என்பேன். இன்னும் சில பேரிடம் வேறு விதமாக பதில் சொல்வேன்,

" டேய் உனக்குத் தெரியாது. தலையில் முடி இல்லாதவர்கள் தான் அந்த விசயத்தில்........"

இப்படியெல்லாம் பல காரணங்களை சொல்லி சமாளித்தாலும் மனதிற்குள் ஒரு வித ஏக்கம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஏதோ சொல்ல ஆரம்பித்து எங்கோ சென்று கொண்டிருக்கிறேன் பாருங்கள். இப்படி தலை முடி கொட்டி விட்டதால், குறைந்த பட்சம் நம் மீசையாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என நினைத்து அதை தடவி தடவி பார்த்து வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனா, சமீபகாலமா என்ன பிரச்சனைனா, மீசையில் ஒரு சில வெள்ளை முடி தெரிய ஆரம்பித்து என்னை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. வெள்ளை முடி தெரிய ஆரம்பித்திருப்பதால், நான் ரொம்ப வயதானவன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். என்ன என்னோட வயசு, ஒரு.... அதிகமில்லை ஜெண்டில்மேன்... சரி, விடுங்க இந்த கட்டுரைக்கு அதுவா முக்கியம்???

சரி இந்த வெள்ளை முடிக்கு என்ன பண்ணலாம்? ஒரே யோசனை. டை அடிக்கலாம்னா யாரு அதை டெய்லி அடிக்கறது? இப்படி பல வகையில் சிந்தித்துக் கொண்டிருந்த நான் திடீரென ஒரு யோசனை தோன்ற அதை செயல்படுத்தலாமானு நினைச்சேன். வேற ஒண்ணுமில்லை. மீசையை அப்படியே எடுத்தா என்ன?

சிறு வயதில் ஒரு முறை ரஜினியின் மீசை இல்லாத ஒரு போட்டாவைப் பார்த்து எனக்கு அழுகையே வந்துவிட்டது. நடிகர்கள் என்றால் படத்தில் எப்படி இருப்பார்களோ அப்படியே நேரிலும் இருப்பாகள் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் அது. இப்படி அடுத்தவர்கள் மீசைக்கே அழுவும் நான், ஏன் மீசைய எடுக்க துணிந்தேன் என்று தெரியவில்லை.

சரி, ஒரு மாறுதலுக்காக எடுத்துவிடலாம் என நினைத்து வீட்டில் யாரிடமும் சொல்ல வில்லை. முதல் நாள் எடுக்க நினைத்தேன். என்னால் கொஞ்சமாக ட்ரிம் மட்டுமே செய்ய முடிந்தது. பிறகு அடுத்த நாள் இன்னும் கொஞ்சம். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஒரு வழியாக நேற்று முன் தினம் நெஞ்சம் படபடக்க மீசையை முழுவதுமாக எடுத்து விட்டேன். எடுத்து முடித்தவுடன் கண்ணாடியில் பார்க்கிறேன். எனக்கே என்னை பிடிக்கவில்லை. இனி ஒன்றும் செய்ய முடியாது. எடுத்தது எடுத்ததுதான்.

மாடியிலிருந்து கீழே வந்தால், என் பயன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறான். எதோ ஒரு விலங்கை பார்ப்பதைப் போல் பார்க்கிறான். என் பெண் என்னைப் பார்த்து சிரித்து விட்டு போகிறாள். வீட்டிலும் அதே நிலைதான். நேற்று டிவி பார்த்துக் கொண்டிருந்த போது மீசையில்லமல் இருந்த நடிகர் விஜய்யை என் பெண்ணிடம் காட்டி,

" இங்க பாருடா. அவர் கூடத்தான் மீசை இல்லாமல் இருக்கார்?" என்றேன்.

உடனே என் பெண் இப்படிக் கூறினாள்,

" ஆமாம் டாடி. உண்மைதான். ஆனா அவருக்கு நல்லா இருக்கு இல்லை"

நான் பதில் சொல்ல வில்லை. ஆனால் கம்பனியில் எல்லோரும் நல்லா இருப்பதாகவே கூறுகிறார்கள். ஒரு வேளை நான் மனம் வருத்தமடையக்கூடாது என்று அவர்கள் கூறி இருக்கலாம். என் பையனுக்காகவாவது மீண்டும் மீசையை வளர்க்க வேண்டும் போல் உள்ளது.

பெரியார் ஒரு முறை கூறியது நினைவுக்கு வருகிறது,

" வெங்காயம். எதுக்காக மொட்டை அடிக்கிறானுங்க. சாமி மேல உள்ள பக்தியினாலா. இல்லை. இல்லை. எப்படி இருந்தாலும் திரும்பவும் வளர்ந்து விடும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான். திரும்ப வளராதுனு சொல்லிப் பாருங்க. ஒரு பய மொட்டை அடிக்க மாட்டான்"

ஆமாம். எனக்கும் மீசை திரும்ப வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் அப்படியே இருக்க வேண்டியதுதான்.

Dec 3, 2009

கோபம் எங்கே ஆரம்பிக்கிறது???

கோபம் எந்தப் புள்ளியில் ஆரம்பிக்கிறது? என்று தெரிந்துக் கொள்ள எனக்கு ரொம்ப நாளாக ஆசை. பல முறை முயற்சி செய்திருக்கிறேன். சமீபத்தில் அதை உணரவும் செய்தேன். நாம் யார் மேல் கோபத்தை காட்டுவோம் தெரியுமா? யார் மேல் கோபப் பட்டால் நம்மை திருப்பி அடிக்க மாட்டார்களோ, திரும்பி திட்டமாட்டார்களோ அவர்கள் மேல்தான் நாம் நம் கோபத்தைக் காட்டுவோம்.

15 வருடங்கள் முன்பு வரை நான் மிகுந்த கோபக்காரனாக இருந்தேன். ஒரு சிடு மூஞ்சியாக இருந்தேன் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு கோபம் வரும். நான் கம்பனியில் (எந்த கம்பனி என்பது வேண்டாமே?) சேர்ந்த இரண்டாம் வருடம் என நினைக்கிறேன். எனக்கும் ஒரு பெரிய இயக்குனரின் மகனுக்கும் தகராறு வந்தது. அவர் என்னைவிட வயதில் சிறியவர். நன்றாக படித்தவர். அவருக்கும், என்னுடைய வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர் ஒரு இயக்குனரின் மகன் என்பதாலும், அவருக்கு நான் மரியாதை சரியாக கொடுக்க வில்லை என்பதாலும் என்னை கொஞ்சம் வம்புக்கு இழுக்க ஆரம்பித்தார். மொத்தத்தில் நான் இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் அவர் என்னிடம் கோபமாக பேசிய போது ஒரு கணம் என்னையறியாமல் நானும் கண்டபடி அவரை திருப்பி திட்டிவிட்டேன். ஆபிஸே பார்க்கும் அளவிற்கு ஆகிவிட்டது. " நீ என்னதான் பெரிய இயக்குனரின் மகனாக இருந்தாலும், என்னுடைய இடத்திற்கு வந்து என்னை திட்டுவது சரியில்லை. அதனால் இந்த இடத்தை விட்டு போய் விடு" என்று சொல்லிவிட்டேன்.

அவர் போனவுடன், ஆபிஸில் அனைவரும் " நீ பெரிய தப்பு பண்ணிவிட்டாய். உன் வேலை போகப் போகிறது. ரெடியாக இரு" என என்னை பயமுறுத்தினார்கள். ஆனால், சில பேர், " நீ செய்தது சரி. இன்னும் நீ நன்றாக திட்டி இருக்க வேண்டும்" என என்னை உசுப்பேத்தினார்கள். அதே போல் அவருடைய அப்பா என்னைக் கூப்பிட்டு ," நீ யாரிடம் மோதுகிறாய் தெரியுமா? அவன் என் பையன். அவனுடைய மதிப்பு என்ன என்று தெரியுமா? அவன் எவ்வளவு பெரிய பணக்காரன் என்று தெரியுமா? அவனிடம் அடங்கி நடந்து கொள். இல்லை என்றால்........?????

நான் குழம்பி விட்டேன். வேலை நேரம் முடிந்ததும் ரூமிற்கு சென்றேன். தனியாக உட்கார்ந்து சிந்தித்தேன். "நான் செய்தது சரியா?" சரி என்றே மனம் கூறியது. ஆனால், "ஒரு வேளை அவர்கள் கூறுவது போல் வேலை போனால் என்ன செய்வது? அப்பா கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறார்கள். அப்பாவோ ரிடையர்ட் ஆகிவிட்டார். ஏற்கனவே நம்முடைய கோபத்தால் மூன்று கம்பனி வேலையை விட்டாயிற்று. இதுவும் போனால் என்ன செய்வது? ஏன் கோபம் வந்தது? அதை ஏன் என்னால் கட்டுபடுத்த முடியவில்லை. அவரும் நல்லவர் தானே. அவரிடம் கொஞ்சம் அனுசரித்து சென்றால்தான் என்ன? நாம் எந்த விதத்தில் குறைந்து விடப் போகிறோம்?" என பலவாறு சிந்தித்தவன் ஒரு முடிவுடன், அவர் வீட்டுக்குச் சென்றேன்.

நான் அன்று இரவு திடீரென அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன். திறந்தவுடன் என்னைப் பார்த்தவர் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்து விட்டார். அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. "என்னடா இது. மதியம்தான் இவனுடன் சண்டை போட்டோம். இப்போது இங்கே நிற்கிறானே?" என அவருக்கு குழப்பம். ஆனால் நான் மன்னிப்பு கேட்பதற்காக அங்கே செல்லவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் முன்பே கூறியதுபோல் "யாரிடம் சண்டை என்றாலும் நேராக நான் எதிராளியின் இடத்திற்கே சென்றுவிடுவேன்". இது என் சுபாவம்.

உடனே அவர் என்னை உள்ளே கூப்பிட்டார். " என்ன இந்த நேரத்துல இங்க?" எனக் கேட்டார். உடனே நான் எதனால் அவருடன் கோபமாக பேச நேர்ந்தது என்று விளக்கினேன். உடனே அவர், " ஆமாம். நானும் அவ்வாறு உங்களிடம் நடந்து கொண்டிருக்கக் கூடாத்துதான்" என்றார். பிறகு சுமார் ஒரு மணி நேரம் பேசினோம். பின்பு அவருடன் அவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டிற்கு சென்றேன். அடுத்த நாங்கள் இருவரும் சேர்ந்தே அலுவலகம் போனோம். எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். எல்லோரும் என் வேலைப் போக போகிறது என்று நினைத்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு. அதன் பிறகு நானும் அவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.

இந்த அனுபவத்தை எதற்காக இங்கே கூறுகிறேன் என்றால் கோபப்படுவது உடம்பிற்கு நல்லதல்ல. அப்படியே கோபப்பட்டாலும், சிறிது நேரம் கழித்து கோபப்பட்டதற்கான காரணத்தைக் கண்டு பிடித்து அதை உடனே சரி செய்து கொள்வது நல்லது.

கடந்த 10 நாட்களாக கடும் மழை. வெள்ளம். பயங்கர போக்குவரத்து நெரிசல். தினமும் 9 நிமிடத்தில் கடந்த தூரத்தைக் கடக்க இப்போது 2 மணி நேரம் ஆகிறது. இரண்டு நாட்களுக்கு முன் மதிய சாப்பாட்டுக்காக வீட்டிற்கு சென்றேன். மழை சிறிது குறைந்திருந்தது. அதனால் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டேன். கடுமையான நெரிசல். நடுவில் மாட்டிக்கொண்டேன். கோபம் வருமோ என்ற சூழ்நிலை. மனநிலையை சரி செய்வத்ற்காக பாடல்களை கேட்க முயற்சித்தேன். ஆபிஸுக்கு போன் செய்து என்னுடைய இன்னொரு நண்பர் இன்னும் மதிய உணவிற்கு கிளம்ப வில்லை என்றால், போக்குவரத்து நெரிசலைப் பற்றிச் சொல்லி அவரை வேறு வழியில் போகச் சொல்லலாம் என நினைத்து தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் ஏற்கனவே கிளம்பி விட்டதாகச் சொன்னார்கள். சரி, அவரும் நம் பின்னால் வந்து கொண்டிருப்பார் போல என நினைத்துக்கொண்டேன். நான் அலுவலகத்தை விட்டு கிளம்பி ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. நடு ரோட்டில் அசையமுடியாமல் இஞ்ச் இஞ்சாக கார் நகர்கிறது. அப்போது அடுத்த லேனில் நான் தொடர்பு கொண்ட நபர் லஞ்ச் முடித்து ஆபிஸுக்கு திரும்பச் செல்கிறார். போன் செய்து ' எப்படி சார், இவ்வளவு சீக்கிரம் போக முடிந்தது?". " நான் வேறு வழியில் சென்றேன்" என்றார். நான் அவர் கஷ்டப் படக்கூடாது என போன் செய்தேன். ஆனால், அந்த பண்பு அவருக்கு இல்லை. என்னை தொடர்பு கொண்டு மாற்று வழியில் போகுமாறு சொல்ல வில்லை. அப்போதும் கோபம் வருவது போல் இருந்ததை சமாளித்தேன். அதன் பிறகு எனக்கு இன்னும் ஒண்ணரை மணி நேரம் ஆனது.

சாதாரணமாக 10 நிமிடத்தில் செல்லக் கூடிய வீட்டிற்கு நான் போய்ச்சேர இரண்டு மணி நேரம் முப்பது நிமிடம் ஆனது. நல்ல மழை வேறு. நான் வீட்டில் நுழைந்தவுடன் உடனே சாப்பிட அமர்ந்தேன். மனைவி குத்துக்கடலை புளிக்குழப்பை சாதத்தில் ஊற்றினார்கள்;

" இந்த குத்துக் கடலை சனியன ஏன் போடற. எப்படி சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கிறது?"

" ஏன், என் கிட்ட கோபப் படறீங்க. ட்ராபிக்குனா நான் என்ன செய்யறது"

" எதுத்து பேசாத?"

அடக்கி வைத்திருந்த கோபம் யாரிடமும் காட்ட முடியாமல் கடைசியில் வீட்டில். என் பழக்கப்படி மாலை எதிராளியின் இடத்திற்கே சென்று உடனே சமாதானப்படுத்த முடியவில்லை.

ஏனென்றால், இங்கே அந்த நேரத்து எதிராளியானவர் என்னில் பாதியானவர் அல்லவா?

அங்கே எப்படி கோபம் செல்லுபடியாகும்? அந்த ஒரு நிமிட கோபத்தை சரி செய்ய எனக்கு இரண்டு நாள் ஆனது..

Nov 30, 2009

அழகானப் பெண்களை பார்க்கும் போது!!!

அழகை ரசிப்பவன் நான். அதிலும் அழகான பெண்களை பார்க்கும்போது ரொம்பவே ரசிப்பதுண்டு. இதை பலமுறை நான் சொல்லி வந்திருக்கிறேன். நான் ரொம்ப வெளிப்படையான ஒரு மனிதன். ஆனால், எதற்கும் ஒரு அளவு வேண்டாமா? அதற்காக யாரைப் பார்த்தாலும் ஜொல்லு விடுவதா? இது நியாயமா?

ஒருத்தனுக்கு சாப்பாடே கிடைக்கவில்லை என்றால் அவன் மனம் சாப்பாட்டையே நினைத்துக்கொண்டிருந்தால் அதில் எந்த தவறும் இல்லை. ஒருவனுக்கு ஆறுமாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்துக்கு ஒரு முறையோதான் சாப்பாடு கிடைக்கிறது என்றால் அவனும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் தவறேதும் இல்லை. ஆனால், சாப்பாடு எப்பொழுதும் அருகே இருக்கிறது, எப்போது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற நிலையில் இருக்கும் ஒருவன் சாப்பாட்டைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், அது நியாயமா?

ஏன், என் மனது இவ்வளவு கேவலமாகிப் போனது? என் மனதில் ஏற்படும் அழுக்கை ஒங்கி ஒரு கத்தியால் குத்தி, கீறி சுத்தப்படுத்திக்கொள்ளவே இந்தப் பதிவு. மன அழுக்கு என்றவுடன் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. என் நண்பன் லீவிற்கு ஊருக்கு வரும்போதெல்லாம் என்னை பாண்டிச்சேரிக்கு கூப்பிடுவான். அரவிந்தர் ஆசிரமத்திற்கு தியானம் செய்ய கூப்பிடுகிறான் என நீங்கள் நினைத்தால் உங்கள் யூகம் மிகத் தவறு. அவன் என்னைக் கூப்பிடுவது பாண்டிச்சேரியில் ஒரு ஹோட்டலில் நடக்கும் கேபரே டான்ஸை பார்ப்பதற்காக. "ஏண்டா, இதுக்கா என்னைக் கூப்பிடுற? இதெல்லாம் தேவையா? என்றால், " மாப்பிள்ளை, வருசம் முழுவதும் கடுமையா உழைக்கிறேன். எந்த தப்பும் செய்யறது இல்லை. ஆனாலும், மனசு முழுவதும் அழுக்கா இருக்கு. ஒரு தடவை போய் பார்த்துட்டு வந்துட்டேன்னா, மனசுல உள்ள அழுக்கெல்லாம் போயிடும்" என்பான். ஆனால், அதைத் தவிர வேற எந்த கெட்ட செயலிலும் ஈடுபட மாட்டான். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

சரி, விசயத்திற்கு வருகிறேன். நேற்று சன் டிவியில் " கண்டேன் காதலை" படத்தின் சில காட்சிகளில் தமன்னாவை பார்க்கும்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது. தாவணியில் பார்க்கும் போது தமன்னா கொள்ளை அழகு. ஜொல்லு விட்டு ரசித்துக் கொண்டிருந்தவன், திடீரென அருகில் உள்ள என் பெண்ணைப் பார்க்கும் போது, சடாரென மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. சரியாக இன்னும் ஆறு வருடத்தில், என் பெண்ணும் அதே உடைக்கு வரப் போகிறாள். பளாரென யாரோ கன்னத்தில் ஓங்கி அறைந்தால் போல் ஆனது. ஆனால், எல்லாம் சில விநாடிகள்தான். பிறகு, ' அச்சமுண்டு, அச்சமுண்டு' சினேகாவை ஜீன்ஸ் டாப்ஸில், அப்புறம் இன்னும் சில நடிகைகள்........ என்ன தியானம், யோகா செய்து என்ன பயன்?

ஏன் அடுத்த நடிகையை/ அழகான பெண்களைப் பார்க்கும்போது இப்படி ஜொல்லு விட்டுப் பார்க்கிறேன். வயதானாலும் மனம் மட்டும் இன்னும் 16ஐ விட்டு வர மாட்டேன், என்கிறதே ஏன்?. வேறு எந்த தவறும் செய்வதில்லை. சும்மா பார்த்துத் தானே ரசிக்கிறோம் என்று நானே சமாதானம் செய்து கொண்டாலும், இது சரியா?. இந்தப் பழக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது?

கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தானா என்ன? ஆண்களுக்கும் உண்டுதான் இல்லையா?

திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார்? மனைவியைத் தவிர வேறு பெண்களை மனதால் கூட நினைக்கக் கூடாது என்கிறார்? அவ்வாறு வாழ்வது சாத்தியமா? அந்த அளவுக்கு ஒருவன் ஞானி போல் வாழ முடியுமா என்ன?

அழகை ரசிப்பது தவறில்லை என நினைக்கிறேன். அந்த அழகை அடைய நினைத்தால்தானே தவறு? அதற்காக டிவியோ, சினிமாவோ பார்க்காமல் இருக்க முடியுமா? மனித உடலே ரத்தமும், சதையும், நரம்பும் அடங்கிய பிணடம் என்று தெரிந்தும், பெண்கள் மேல் நாம் வைக்கும் ஆசை மட்டும் மாறுவதில்லையே ஏன்?

கெட்ட பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் தான் கெட்டவர்கள், மற்றவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்ற கூற்றை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்படி மனதில் சஞ்சலத்துடன் வாழ்வதற்கு கெட்ட பெண்களின் சகவாசம் எவ்வளவோ பரவாயில்லை தானே? ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு பெண் எப்போதும் கடவுளையே தரிசனம் செய்து கொண்டிருப்பவள். அவள் வீட்டின் எதிரே உள்ளவள், 'அந்த' தொழில் செய்பவள். சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மரணம் அடைந்து விடுகிறார்கள். மேல் உலகத்தில், கடவுள் பக்தி உள்ள பெண் நரகத்திற்கு போகிறாள். 'அந்த' பெண் சொர்க்கத்திற்கு போகிறாள். இது தெரிந்த கடவுள் பக்தி உள்ள பெண், கடவுளைப் பார்த்துக் கேட்கிறாள்:

" நான் நாள் முழுவதும் உங்களை பூஜித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் இருப்பதோ நரகம். அவள் எப்போதும் அந்த தொழிலை செய்து கொண்டிருந்தாள், ஆனால் அவள் இருப்பது சொர்க்கம். ஏன் இந்த வேறுபாடு?"

கடவுள் இப்படி பதில் கூறினாராம்:

" நீ நாள் முழுவதும் என்னை பூஜித்தது மட்டுமல்லாமல், அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாய். அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள். யார் கூட இருப்பாள், என்று. ஆனால் அவளோ செய்யும் தொழில் தவறாக இருந்தாலும், தான் இந்த தொழில் செய்கிறோமே? இது தவறு இல்லையா? என் வருந்தி நாள் முழுவதும் என்னையே நினைத்துக் கொண்டிருந்தாள். இதுதான் காரணம்"

ஒரு வேளை எனக்கும் நரகம் தான் கிடைக்குமோ????

Nov 28, 2009

மலரும் நினைவுகள்!

வெள்ளி மற்றும் சனி இரண்டு நாட்கள் விடுமுறை. சரியாக வியாழக்கிழமை மாலை வீட்டிலிருந்து போன்.

" ஏங்க ஆஸ்ட்ரோ (மலேசிய டிவி சேனல்) திடீருனு வேலை செய்யலை"

" சரி, வீட்டுக்கு நான் வந்து பார்க்கிறேன்"

வீட்டிற்கு வந்து பார்த்தால் சுத்தமாக வேலை செய்யவில்லை. பிறகு ஒரு வழியாக எலக்ட்ரிசியன் வர இரவு 9 மணி. வந்தவர் சரி பார்த்துவிட்டு "நீங்கள் ஆஸ்ட்ரோ டீலரைத்தான் பார்க்க வேண்டும். அநேகமாக நீங்கள் புதிது வாங்க வேண்டி இருக்கும்" என்றார். கடுப்பாகி விட்டது. முதல் காரணம் அனாவசிய செலவு. இரண்டாவது காரணம், கடைகள் இரண்டு நாட்கள் விடுமுறை. ஆயிரம் திட்டிக்கொண்டே 'கோலங்கள் எப்படி முடியப் போகிறது?' என்று பார்த்துக்கொண்டிருகிறோம். இதனால் கடந்த இரண்டு நாட்களாக கோலங்கள் பார்க்க முடியவில்லை. ஆதிக்கு எப்படித் தண்டனை கொடுக்க வேண்டும், எப்படி அந்த தொடரை முடிக்க வேண்டும் எனற யோசனை என்னிடம் உள்ளது. திருச்செல்வம் இது வரை கிளைமாக்ஸ் எடுக்கவில்லை என்றால் என்னை அணுகலாம். பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். காசு இல்லாமலே நான் உதவ ரெடி.

ஒரு வழியாக வியாழன் இரவு தூங்கி விட்டேன். நேற்றுத்தான் பிரச்சனையே ஆரம்பம் ஆனது. கடைகள் எதுவும் இல்லை. எங்கும் போகப் பிடிக்கவில்லை. எவ்வளவு நேரம்தான் நெட்டில் இருப்பது? அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது. டிவி நம் வாழ்க்கையில் எந்த அளவிற்கு ஒரு முக்கியமானதாக இருக்கிறது? என்று.

டிவியும், கம்ப்யூட்டரும் இல்லையென்றால் என்னால் வாழவே முடியாதோ? என்ற பயம் வந்துவிட்டது. பிறகு எப்படி பொழுதைக்கழிக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது, ஐந்தாவது படிக்கும் என் பெண், "அப்பா இந்த கணக்கு சொல்லி தாங்க" என்றாள். வீட்டில் நான் கணக்கில் எப்போதும் 100 க்கு 100 என்று அடிக்கடி சொன்னதற்கு, நேற்று தண்டனை. 5 வது வகுப்பிற்கு fractionல் word problem. நமது ஊர் சிலபஸ்ஸில் எட்டாவது வகுப்பு வரை fraction problem உள்ளது ஆனால் word problem இல்லை. அதை சால்வ் செய்வதற்கு இரண்டு மணி நேரம் செலவழித்து, பிறகு பின்மண்டை வலி வந்து........, " ஏதோ கணக்குல சென்டம்னு பீத்திக்கிட்டீங்க" தேவையா எனக்கு???

சாயந்தர நேரம் பலவாறு யோசிக்கையில் அஸ்ட்ரோத்தானே வேலை செய்யவில்லை. டிவிடியும், டிவியும் நன்றாகத்தானே வேலை செய்கிறது எனத் தோன்ற, ஏதாவது படம் பார்க்கலாம் என்றால், ஒரு கேசட்டும் இல்லை. நீண்ட யோசனைக்குப் பிறகு கல்யாண கேசட் பார்க்கலாம் என முடிவானது. சரியாக பத்து வருடம் முன் நடந்த நிகழ்வு அது. இப்போது மனைவியுடனும், பிள்ளைகளுடனும் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வுகளை விளக்க வார்த்தைகள் இல்லை.

பிள்ளைகள் கேட்டார்கள், " அப்பா, நாங்க எங்கே?". சுஜாதா ஒரு முறை எழுதிய ஜோக் நினைவுக்கு வந்து போனது.

தேனிலவு போய்வந்த கேசட்டை பல வருடங்களுக்கு பிறகு கணவன், மனைவி இருவரும் பார்த்துக் கொண்டிருந்த போது, பையன் கேட்டானாம் அப்பாவிடம்,

" அப்பா, இதில் நான் எங்கே?"

அப்பா, இப்படி பதில் சொன்னாறாம்,

" போகும் (தேனிலவு) போது என் கூட வந்த, வரும்போது உங்கம்மாக் கூட வந்த"

இப்படி எந்த பதிலையும் என்னால் சொல்ல முடியாததால், ஏதோ சொல்லி ஒரு வகையில் சமாளித்தேன். ஆனால், மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அனைத்து நண்பர்களையும், உறவினர்களையும் மீண்டும் நேரில் பார்த்த உணர்வு. முழுக் கவனமும் டிவி மீதே இருந்தது. ஆனால், தாலிக் கட்டியபோது ஏற்பட்ட அந்த நேரத்து டென்ஷன், பிறகு ஏற்பட்ட சந்தோசம் ஆகிய உணர்ச்சிகள் நேற்றும் வந்து போனது. 10 வருடம் பின்னோக்கி அந்த நாளுக்கே சென்று வந்தது போல் இருந்தது.

வழக்கம் போல் 'என் வாழ்வின் சந்தோசம் இழந்த நாள் இது' என்று மனைவியை கிண்டலடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாலும், இருவரிடமும் அன்று இருந்த அந்த லவ், இன்றும் நிலைத்திருப்பதை நினைக்கையில் மனம் இன்னும் சந்தோசம் அடைந்தது.

கடந்த 13 வருடங்களாக பல செலவுகள் செய்தபோதும், நான் ஏன் இன்னும் வீடியோ கேமரா வாங்கவில்லை என்று எனக்கே புரியவில்லை. நேற்று அந்த கேசட்டைப் பார்த்தப் பிறகு உடனே வாங்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். இனி ஒவ்வொரு நிகழ்வையும் படம் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த ஒரு கணத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பது முடியாது அல்லவா?

ரிப்பேராய் போன ஆஸ்ட்ரோ டி கோடருக்கு நன்றி. இல்லையென்றால் இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்குமா??

ஆனால் என்ன ஒரு வருத்தம், என்னை இந்த நல்வாழ்விற்கு உட்படுத்திய, அன்று உயிருடன் இருந்த என் அன்புத்தந்தை இன்று என்னோடு இல்லை. தந்தையை டிவிடியில் பார்க்கும்போதெல்லாம் கண்கள் குளமாயின.

10 வருடங்களில்தான் எத்தனை மாற்றம். அன்று உயிருடன் இருந்த சித்தி, மாமா, மனைவியின் தாத்தா இன்னும் சிலர் இன்று இந்த உலகில் இல்லை. பல நண்பர்களின் உடல் நிலை இன்று நன்றாக இல்லை. ஒரு நண்பர் உயிருடன் இல்லை. இதையெல்லாம் காணும்போது மனம் சஞ்சலம் அடைந்ததென்னவோ உண்மைதான்.

அந்த வகையில் நம்மை நன்றாக வைத்திருக்கும் ஆண்டவனுக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.

படிக்கும் நீங்களும் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள். எத்தனை கோபதாபங்கள் மனதிற்குள் இருந்தாலும், அனைத்தும் உங்கள் திருமண கேசட்டைப் பார்த்தவுடன் பஞ்சாய் பறந்துவிடும்.

Nov 24, 2009

சில பகிர்தல்கள்!!!

கடந்த ஏழு எட்டு நாட்களாக எங்கள் ஊரில் கடுமையான மழை. விடாமல் பெய்கிறது. இந்த மாதிரி 25 வருடங்களுக்கு முன் பெய்ததாக சொல்கிறார்கள். எங்கும் போக முடியவில்லை. ஒரு வாரமாக வாக்கிங், யோகா, ஜிம் எங்கும் செல்ல முடியவில்லை. பார்க்கும் இடமெல்லாம் அனைவரும் தும்மிக் கொண்டு இருக்கிறார்கள். காய்கறி வாங்கக் கூட கடைக்குச் செல்ல முடியவில்லை. தினமும் மதிய உணவிற்கு வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால், இப்போது செல்ல முடியவில்லை. காரணம் மழை மட்டும் இல்லை. மழையினால் கடுமையான போக்குவரத்து நெரிசல். வீட்டிலிருந்து ஆபிஸ் 15 கிலோ மீட்டர்தான். தினமும் ஆபிஸ் வர ஒரு மணி நேரம் ஆகிறது. மாலையில் வீட்டிற்கு செல்ல 2 மணி நேரம் ஆகிறது. கார் இஞ்ச் இஞ்சாக நகர்கிறது. இரண்டு மணி நேரம் காரில், நெரிசலில் இருக்கும் போது கோபம் கோபமாக வருகிறது. யாரைப் பார்த்தாலும் ஓங்கி ஒரு அறை விட வேண்டும் போல் இருக்கிறது. இதில் யாராவது காரை முந்திக்கொண்டு செல்ல முயன்றால் அவனை அடிக்கலாம் போல இருக்கிறது. ஆனால் இதை எதையும் என்னால் செய்ய முடியவில்லை. காரணம் இது நம் ஊர் இல்லையே? நேற்று அலுவலகம் வரை வந்து வீட்டிற்கு திரும்பி விட்டேன். காரணம் வெள்ளம். பிறகு தண்ணிர் வடிந்தவுடன் சென்றேன். பிள்ளைகளும், பாவம் மழையுடனே செல்கிறார்கள். பள்ளி விடுமுறை விடலாம். ஆனால், ஏதோ ஐ ஏ எஸ் தேர்வு போல் இப்போதுதான் தீவிரமாகச் சொல்லித் தருகிறார்கள்.

இன்னொரு கொடுமை. ஆபிஸில் எங்கும் மின் விசிறி கிடையாது. ஏஸிதான். ஏஸி வைத்தால் ரொமப குளிர்கிறது. வைக்காவிட்டால் டெம்பரேச்சர் ரொம்ப கொடுமையாக உள்ளது. மொத்தத்தில் இயல்பு வாழ்க்கை ரொம்ப பாதித்து விட்டது. ஒரு வாரத்திற்கே இப்படி உள்ளதே? எப்படித்தான் சுனாமி வரும்போதும், பூகம்பம் வரும்போதும் இந்தோனேசியாவில் மக்கள் சமாளிக்கிறார்களோ? தெரியவில்லை. ஏனென்றால் இவை இரண்டும் வரும்போது மழையும் கண்டிப்பாக வரும். மொத்தத்தில் என்னால் எந்த பதிவும் படிக்கவோ, எழுதவோ முடியவில்லை.

சரி, இதையெல்லாம் ஏன் உங்களிடம் கூறுகிறேன்? என்கின்றீர்களா? உங்களிடம் சொல்லாமல் வேற யார்கிட்ட நான் என் கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்வது?

யாராவது கடவுள் கிட்ட சொல்லி கொஞ்சம் மழையை அடக்கி வாசிக்க சொல்லுங்கப்பா!!!!

****************************************

எனக்கு பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்ள வேண்டும் என ரொம்ப ஆசை. ஆனால், இது வரை சந்தர்ப்பம் அமையவில்லை. இனி அமைந்தாலும் போவேனா? என்பது கேள்விக்குறியே? ஏனென்றால், சென்ற சனிக்கிழமை நடந்த சந்திப்பின் உரையாடல்களை பார்க்கும் போது நமக்கும் அதற்கும் வெகு தூரம் எனத் தெரிகின்றது. நான் கொஞ்சம் ஜாலியான நபர். எப்போதாவதுதான் சீரியஸ். மொத்தத்தில் ஈஸி கோயிங் பெர்சன். அவர்கள் உரையாடல்களைப் பார்த்தால் ஏதோ பரிட்சைக்கு படித்து விட்டு போவது போல், இலக்கியம் என்றால் என்ன? கவிதை என்றால் என்ன? என்று தயார்படுத்திக்கொண்டு போக வேண்டும் போல் உள்ளது?. நான் சென்றால் வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.

பேசாமல் வேடிக்கை இங்கே இருந்தே பார்த்துவிட்டு போகின்றேன். ஏதாவது, ஜாலியான சந்திப்புன்னா சொல்லுங்கப்பா வறேன்???

****************************************

எனக்குப் பிடித்த எழுத்தாளர் சுஜாதாதான். இருந்தாலும் 'பிடித்தது பிடிக்காதது' பகுதியில் பாலகுமாரன் என்று எழுதினேன். காரணம் உயிரோடு இருப்பவர்கள் பற்றி எழுத வேண்டும் என்றதால் அப்படிக் குறிப்பிட்டேன். சுஜாதான் என்னுடைய இளமைக்காலங்களை மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டவர். பிறகு பாலகுமாரனும் படிக்க ஆரம்பித்தேன். முன்பெல்லாம் ஒரு நாவலை கையில் எடுத்தால் படித்து முடித்து விட்டுத்தான் கீழே வைப்பேன். ஆனால், இப்போது??? ஊரில் இருந்து வரும்போது நண்பர் ஒருவர் பாலகுமாரன் எழுதிய 'திருவடி' என்ற நாவலை கொடுத்தார். ஒரு வாரத்திற்கு முன் தான் படிக்க ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு என்னால் ஒரு 20 பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. இன்னும் 100 பக்கம் கூட தாண்ட முடியவில்லை. என்னக் காரணம்? என்னுடைய படிப்பு ஆரவம் குறைந்து விட்டதா? இல்லை அந்த நாவல் என்னைக் கவர வில்லையா? என ஆராய்ச்சி செய்து பார்த்தால், அந்த நாவல் என்னை ஈர்க்க வில்லை என்றுதான் சொல்லுவேன். ஏதோ வரலாறு புத்தகத்தைப் படிப்பது போல் உள்ளது.

பாலகுமாரன் எழுத்தில் இருந்த கவர்ச்சி போய்விட்டதா? இல்லை எனக்கு அப்படித் தோன்றுகிறதா? தெரியவில்லை.

****************************************

கவிதை மாதிரி!!!

காதலித்துப் பார்
தபால்காரன்
நண்பனாவான்

காதலித்தான்
ஆஸ்பத்திரியில்
இருக்கும்போது தான்
தெரிந்தது
தபால்காரன் அவள்
அண்ணன் என்று!

****************************************

சில தமிழ் வார்த்தைகளும் அதன் தமிழ் அர்த்தங்களும்

01. பசனன் - அக்கினி தேவன்
02. பசிதகனி - சோறு
03. பட்டாரகன் - கடவுள், குரு
04. மகாசூதம் -போர்ப்பறை
05. கொணசில் - வளைவு, கோணல்
06. கொண்கன் - கணவன்
07. அலிகம் - நெற்றி
08. கந்தோதம் - குவளை, தாமரை
09. கந்தோர் - அலுவலகம்
10.குறும்படி - வாசல்படி

இதை அப்படியே பயன் படுத்தினால் எப்படி இருக்கும்??

நான் இன்று காலை பசனனை கும்பிட்டு விட்டு பசிதகனி சாபிட்டு விட்டு, பிறகு கோவிலுக்கு சென்று பட்டாரகனை கும்பிட்டு, பிறகு அந்த கொணசிலில் திரும்பி கந்தோதம் பறித்து, திரு நீரை அலிகத்தில் பூசிக்கொண்டு, பிறகு ஒரு வழியாக குறும்படி தாண்டி கந்தோர் வந்தேன்.

****************************************

Nov 20, 2009

மிக்ஸர் - 20.11.09

"கோலங்கள்" தொடர் பார்க்காமல் தான் இருந்தேன். நண்பர்கள் தோழரின் சாவைப் பற்றியும் அப்போது அவர் பேசிய வசனங்களைப் பற்றியும் சொன்னதால் அந்த பகுதியைப் பார்த்தேன். அந்த ஒரு நாள் காட்சி என் கண்களை குளமாக்கியது என்னவோ உண்மைதான். பிறகு அடுத்த நாளிலிருந்து பழைய பாணியிலேயே நாடகம் பயணிக்க ஆரம்பித்ததால் திரும்பவும் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நண்பர்களிடமும், என் வீட்டிலும் நான் இப்படி கூறினேன், " ஆதி கண்ல படற எல்லாத்தையும் ஏதோ குருவி சுடுறது போல சுட்டுத்தள்ளுறான். போலிஸும் ஒண்ணும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஆனால், அவனால் அவனுடைய ஒரே பிரதான எதிரியான அபி என்ற பெண்ணை மட்டும் ஏன் சுட முடியவில்லை. அவளைச் சுட்டால் தொடரும் முடிந்துவிடும், தமிழ் நாட்டு மக்களும் மன நோயிலிருந்து தப்பிப்பார்கள் அல்லவா?"

நான் கூறியது எப்படி திருச்செல்வத்துக்கு தெரிந்தது என்று தெரியவில்லை. இரண்டு நாட்கள் முன்னால், எதேச்சையாக சேனலை திருப்பியபோது பார்த்தால்,ஆதி அபியையும், திருச்செல்வத்தையும் சுடுவதை காண முடிந்தது. பின்பு திருச்செல்வம் செத்து விட்டதாக ஒரு டாக்டர் கூறுவதாக அந்த நாள் முடிந்தது. அப்பாடா, மக்கள் தப்பித்தார்கள் என நினைத்து சந்தோசப்பட்டேன்.

ஆனால், இறந்ததாக டாக்டர்கள் சொன்ன திருச்செல்வம், அபியின் நம்பிக்கையால் பிழைத்து விட்டாராமே? இனி, என்ன செய்வது? மக்களை யார் காப்பாற்றுவது?

இன்னும் ஒரு இரண்டு வருசம் தொடரைத் தொடர்ந்தாலும் தொடர்வார்கள் போல!!!!

**************************************************

மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தற்செயலாக காண நேர்ந்தது . அதில் ஒரு செய்தி. மெட்ராஸ் கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஒரு கண்டெயினரை செக் செய்தபோது, அந்த கணடெயினர் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதியாகி இருப்பதாக டாக்குமெண்ட்களில் இருப்பதாகவும், விசாரித்துப் பார்த்தால் அது சைனாவிலிருந்து வந்திருப்பதாகவும் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். அதில் உள்ள பொருட்களை எல்லாம் செக் செய்தபோது எல்லாமே போலி என்று தெரியவந்துள்ளது. அப்படி என்ன கண்டெயினரில் இருந்தது என்றால், எல்லாமே குழந்தைகள் உபயோகப்படுத்தும் பேபி ஆயில், ஷேம்பு இப்படி. இந்த செய்தியை எப்படி மக்கள் டிவியில் சொன்னார்கள் தெரியுமா?

" சைனா வேண்டுமென்றே இந்தியாவிற்கு இந்த மாதிரி பொருட்களை அனுப்புகிறது. எதிர்கால இந்தியர்களை அழிப்பதற்காக குழந்தையின் உயிர்களோடு விளையாடுகிறது. ஏற்கனவே நமது எல்லையோர பகுதிகளில் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ள சைனா இப்போது குழந்தைகள் உயிருடனும் விளையாடுகிறது"

எதை எதோடு ஒப்பிடுவது? எதோ ஒரு கம்பனி போலி சரக்குகளை, சைனாவில் உள்ள ஏதோ ஒரு கம்பனியில் வாங்கியுள்ளது. அதற்கு எப்படி சைனா பொறுப்பாகும்? எனக்குப் புரியவில்லை.

**************************************************

எங்க வீட்டில் ஒருவர். அவரும் இந்தப் பதிவை படிக்கும் வாய்ப்பு இருப்பதால், அவரை யார் என்று நான் குறிப்பிடப் போவதில்லை. அவர் மிகுந்த புத்திசாலி. + 2வில் மெயின் பாடங்களில் அவர் வாங்கிய மதிப்பெண்கள் 200, 199, 198. நுழைவுத் தேர்வில் வாங்கிய மதிபெண் 46 என நினைக்கிறேன். இன்ஜினியரிங்லும் ரெக்கார்ட் பிரேக் மார்க். பிறகு கேம்பஸ் இண்டர்வியுவில் வேலை. பிறகு அதை விட்டு விட்டு மிகப் பெரிய கல்வி நிறுவனத்தில் எம்.பி.எ படிப்பு. மிகப் பெரிய சம்பளத்துடன் வேலை. இப்படி பட்ட அவரின் வாழ்வில் சடாரென சில மாற்றங்கள். யார் காரணம் எனத் தெரியவில்லை. அவராக பார்த்து ஒரு பெண்ணை வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த அடுத்த மாதத்திலிருந்தே மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு. மூன்றே வருடத்தில் ரூபாய் ஆறு லட்சம் செலவில் விவாகரத்து. பின் இருந்த வேலையையும் விட்டாச்சு. இப்போது தனி ஆள். அவரால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிரச்சனை. அவர் ஒருவரின் பிரச்சனையால் கடந்த நான்கு வருடமாக யாருமே வீட்டில் நிம்மதியாக இல்லை. அவரைப் பற்றி ஒரு தொடர் எழுதும் அளவிற்கு சுவாரஸ்யமான விசயங்கள் என்னிடம் உள்ளது. வீட்டில் அம்மாவிலிருந்து அனைவரும் என்னை அவருக்கு புத்திமதி சொல்லச் சொல்கிறார்கள். ஏதாவது வேலையில் சேரச்சொல்லச் சொல்கிறார்கள். அவருக்குத் தேவை இப்போது மன அமைதி மட்டுமே. அதற்கு அவர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஒரு மனநல டாக்டரிடம் சென்று ஒரு சிறு ஆலோசனை பெற வேண்டியதுதான். நாம் சொன்னால், " நான் என்ன மெண்டலா, வேண்டுமானால் நீ சென்று உன்னை பரிசோதித்துக்கொள்" என்கிறார். வீட்டிலோ அவருக்கு மீண்டும் அறிவுரைகளைச் சொல்லச் சொல்லி கடும் நெருக்குதல். கடந்த 10 வருடமாக அதைத் தானே செய்து வருகிறேன். அனைத்து அறிவுரைகளும் வீணாக போய்விட்டது.

மகாபாரதப் போர். போர் ஆரம்பிக்கும் முன் கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதை உபதேசிக்கிறான். எல்லோருக்கும் இது தெரிந்த விசயம் தான். கண்ணன் இப்படி சொல்கிறான்,

" எதிரில் இருப்பவர்களை உறவினர்களாக பார்க்காதே. அதர்மம் செய்பவர்களாக நினை. தர்மத்தை நிலை நாட்ட, அதர்மத்தை அழிப்பது பாவமல்ல. இந்த உடல் என்பது இந்தப் பிறவியில் நாம் அணிந்திருக்கும் சட்டை. அவ்வளவே. இறப்பு என்பது சட்டையைக் கழட்டி போடுவது போலத்தான். உடலுக்குத்தான் அழிவு. ஆன்மாவிற்கு அல்ல"

இப்படி பலவாறாக அறிவுரைகள் கூறுகிறான். அர்ச்சுனனின் மனம் தெளிவடைகிறது. பிறகு சண்டையில் வெற்றியை நோக்கிச் செல்கிறான். எதிரிகளின் சூழ்ச்சியால், அர்ச்சுனன் மகன் அபிமன்யு போரில் கொல்லப்படுகிறான்.

அபிமன்யுவின் உடலை பார்த்து அர்ச்சுனன் கதறி அழுகிறான். அப்போது தேரின் மேலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் துளி விழுகிறது. யாரென்று மேலே பார்க்கிறான். அவைகள் கண்ணன் கண்களிலிருந்து வந்ததைக் கண்டு பிடிக்கிறான். அர்ச்சுனன் கண்ணனைப் பார்த்துக் கேட்கிறான்,

" கண்ணா, நான் என் மகன் இழந்த சோகத்தில் அழுகிறேன். எனக்கு சாவைப்பற்றி அவ்வளவு புத்திமதிகள் சொன்ன நீ ஏன் இப்போதுஅழுகிறாய்"

" அர்ச்சுனா, நான் ஏன் அழுகிறேன் தெரியுமா? நான் சாவைப்பற்றி அவ்வளவு எடுத்துச்சொல்லியும் இப்போது உன் மகன் சாவுக்காக அழுகிறாய் அல்லவா? நான் உனக்குச் சொன்ன புத்திமதிகள் எல்லாம் இப்படி வீணாகிவிட்டதே? என்று தான் அழுகிறேன்" என்று சொன்னாராம் கண்ணபிரான்.

அவ்வளவு பெரிய கடவுள் சொன்ன புத்திமதியே வீணாய் போனபோது, நான் சம்பந்தப்பட்ட அந்த நபரிடம் சொன்ன புத்திமதிகள் வீணாய் போனதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது???

ஆண்டவர்தான் அவரை இப்போது அவர் இருக்கும் சூழலிருந்து மீட்டு எடுக்க வேண்டும்!!!!

**************************************************

அனைத்து உயிர்களிடமும் அன்பு வைப்பவன் நான். அப்படித்தான் வாழ முயற்சிக்கிறேன். ஒரு ஈ, எறும்பின் சாவுக் கூட என்னை கலவரப்படுத்துகிறது. ஆனால், சமீபகாலமாக வீட்டில் ஒரு பிரச்சனை. அடிக்கடி எலிகள் வருகின்றது. மலேசியாவில் பூனைகள் அதிகம். ஆனால் இங்கே உள்ள பூனைகள் எல்லாம் ரொம்ப நல்ல பூனைகளாக இருக்கின்றன. அவைகள் எலியுடன் நல்ல நட்பில் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. அதனால்தான் எலிகள் இவ்வளவு சுதந்திரமாக வீட்டில் நடமாடுகிறது. வீட்டில் தினமும் எலிப் பொறி வைக்கிறார்கள். தினமும் ஒரு எலி மாட்டுகிறது. காலையில் எழுந்தவுடன், முதல் வேலை அந்த எலியை கொண்டு தெரு முனையில் விட்டு விட்டு பிறகுதான் நான் வாக்கிங் செல்கிறேன். "நீங்க கொண்டு போய் விட்ட எலிதான் மீண்டும் வருதுங்க" அப்படினு வீட்ல சொல்லறாங்க. ஒரே மாதிரி நிறைய எலி இருக்கும்னு நான் பதில் சொன்னேன். இப்போ என்ன பிரச்சனைனா, நண்பர்கள் "ஒரு பிஸின் மாதிரி ஒண்ணு கடையில விக்குது. அதை வாங்கி ஒரு பேப்பர்ல வைச்சா, எலி ஓட முடியாம அந்த பிஸின்ல மாட்டிக்கும். அப்புறம் அதைக் கொண்டு போய் தெருவில விட்டா, திரும்பி வராது. பூனையோ, இல்லை எதோ அதை அடிச்சு சாப்பிட்டு விடும்" அப்படிங்கறாங்க.

என்னால, இதனை ஏற்க முடியவில்லை. எலி பொறியில விழற எலியை கொலை பண்ணுவதற்கும், இதற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நானோ அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக இருக்க விரும்புபவன் (!!!).

அதனால் எலியுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்துவிட்டேன்.

**************************************************

Nov 18, 2009

கொஞ்சம் ரிலாக்ஸா....!!!

இதை எழுத வேண்டும், இதை எழுதக்கூடாது என்றோ அல்லது இவரைப் போல அல்லது அவரைப் போல எழுத வேண்டும் என்றோ எந்த வரைமுறையும் நான் வைத்துக்கொள்வது கிடையாது. மனதில் பட்டதை எழுதுகிறேன். கூடுமானவரை நல்ல பதிவுகளாக எழுத வேண்டும் என நினைக்கிறேன். திடீரேன தினமும் எழுதத் தோன்றுகிறது. திடீரென சில நாட்கள் படிக்க மட்டுமே பிடிக்கிறது. எதுவுமே அளவோடு இருப்பதும் நல்லதுதானே!. அப்படி என்னை ரிலேக்ஸ் செய்து கொள்ள நினைத்த வேளையில் எனக்கு வந்த சில சுவாரஸ்யமான (ஒரு மூன்று) மெயில்களை தமிழாக்கம் செய்து வெளியிட்டேன். உடனே சில நண்பர்கள், " என்ன வரவர சொந்த சரக்கே இல்லை" என்கிறார்கள்.

அப்படி இல்லை. சும்மா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவதற்காக அப்படி வெளியிட்டேன். காலேஜ் படித்துக்கொண்டிருக்கும் போது, தினமும் படிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. தினமும் வகுப்பில் கவனிப்பதோடு சரி. படிப்பதற்காக விடும் விடுமுறையில் மட்டுமே அப்படி படிப்பேன். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் எல்லாம் படித்திருக்கிறேன். நான் ப்ரோபஷனல் கோர்ஸ் படித்த போதும் அப்படித்தான். நான் அவ்வப்போது டீக்கடைக்கு சென்று பேப்பர் படித்து வந்து மீண்டும் படிக்க ஆரம்பிப்பேன். வீட்டில் டீ இருக்கும். இருந்தாலும் பேப்பர் படித்துக்கொண்டே ஒரு டீ சாப்பிட்டு விட்டு, ஒரு திரிவேணி பாக்கு போட்டு விட்டு, அந்த பக்கமாக போகும் பெண்களை சைட் அடித்து விட்டு, பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்து சின்சியராக படிப்பது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்..

என் நண்பன் ஒருவன். அவன் தினமுமே நிறைய நேரம் படிப்பவன். மதிய 12 மணி வெயிலில் கூட படிப்பான். ஆனால் அவன் தான் பின்னாளில் எம் காமில் ஒரு செமஸ்டர் பெயில் ஆனான். அவன் ரிலாக்ஸ் செய்யும் முறையே வேறு மாதிரி இருக்கும். இரண்டு மணி நேரம் படித்தால் ஒரு அரை மணி நேரம் செக்ஸ் புக் படிப்பான்.

" அது எப்படிடா? படிக்கிற நேரத்துல போய் செக்ஸ் புக்?" அப்படினு கேட்டா,

" மாப்பிள்ளை, உனக்குத் தெரியாது. அதுல இருக்கும் சுகமே தனி. மனசு அப்படியே இதமா இருக்கும். அப்புறம் படிச்சா நல்லா மனசுல பதியும். ஒரு தடவை முயற்சித்துப் பார்" அப்படின்னு அடிக்கடி சொல்லுவான்.

சரி, இவ்வளவு தூரம் சொல்லுறான், அதையும் முயற்சிக்கலாம்னு, நான் ஒரு நாள் அவன் கிட்ட ஒரு புக் வாங்கி இடைப்பட்ட நேரத்துல படிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் எங்க நான் பாடப் புத்தகம் படிக்கிறது? அடுத்த மூன்று நாட்கள் வெறும் செக்ஸ் புக் மட்டும் தான் படிக்க முடிஞ்சது. அதனால மனசும், உடம்பும் வீணானதுதான் மிச்சம். மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு, ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொருவிதமான முறைகள். அவனுக்கு அப்படி. செக்ஸ் புக் பற்றி எழுதியதால் யாரும் தவறாக நினைக்க வேண்டாம். ஏனென்றால், பள்ளி கல்லூரி வாழ்க்கையில் செக்ஸ் புக் என்பது ஒரு அத்தியாவசியமான தேவையாக இருந்தது, இப்போதும், எப்போதும் அது இருக்கும். அதையெல்லாம் ஊறுகாய் போல் தொட்டு விட்டு முன்னேறி வரவேண்டும். நான் படித்ததே இல்லை என்று என்னை உத்தமனாக காட்டிக்கொள்ள விரும்ப வில்லை. இப்போது எத்தனையோ விசயங்கள் நெட்டில் உள்ளது. இருந்தாலும் அன்று படித்த அந்த முதல் கதை மட்டுமே என் நினைவில். அது என்ன கதைனு யாரும் கேட்க வேண்டாம்... ப்ளீஸ்!!!

நானும் என்னுடைய இன்னும் இரண்டு நண்பர்களும் இப்படித்தான் மணிக்கணக்காக பரிட்சைக்குப் படிப்போம். அந்த இருவரும் என்னை விட ஒரு வருடம் சீனியர்ஸ். நான் படிதத்து திருச்சி பிஷ்ப் ஹீபர் தெப்பக்குளம் மேல் நிலைப்பள்ளி. அவர்கள் படித்தது செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி. அவர்கள் + 2 படித்தபோது நடந்த சம்பவம். இருவரும் போட்டி போட்டு படித்தார்கள். யார் அதிகம் மார்க் வாங்குவார்கள் என்று மற்ற நண்பர்கள் முதற்கொண்டு ஆசிரியர்கள் வரை பந்தயம் கட்டிக்கொண்டிருந்தார்கள். பரிட்சை ஆரம்பித்தது. கணக்கு பரிட்சை அன்று இருவருமே அதிக நேரம் கண் விழித்துப் படித்தார்கள். காலையில் இருவருமே ஒரே பஸ்ஸில் லால்குடியிலிருந்து திருச்சிக்கு பஸ் ஏறினார்கள். இறங்கும் போது ஒரு நண்பனைக் காணோம். சரி அவன் எக்ஸாம் ஹாலுக்கு வந்து விடுவான் என நினைத்து அனைவரும் சென்று விட்டோம்.

பரிட்சை ஆரம்பித்தது. ஆனால் அவன் வரவே இல்லை. நண்பன் மட்டுமே பரிட்சை எழுதினான். அன்று பரிட்சை முடிந்து ஊரே அவனைத்தேடியது. ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த நாள் வேறு பரிட்சை எங்களுக்கு இருந்தது. நானாவது +1. அவர்கள் +2. இரவு 10 மணிக்கு வந்தான். என்ன நடந்தது? என்று அவனுக்குத் தெரியவே இல்லை. அவன் எங்கு போனான்? என்றும் யாருக்கும் தெரியாது. முடிவு ரேங்க்கில் பாஸ் பண்ண வேண்டியவன் அதிகம் படித்ததால் மூளைக்குள் ஏதோ ஏற்பட்டு பரிட்சை எழுத முடியாமல் போனது.

அன்று பரிட்சை எழுதிய என் இன்னொரு நண்பன் கணக்கில் 200க்கு 200 வாங்கி, பிறகு இன்ஜினியரிங் முடித்து எங்கெங்கோ வேலைப் பார்த்து இன்று துபாயில் மாதம் 500000 சம்பளம் வாங்குகிறான். ஆனால் அந்த நண்பனோ பின்பு டிப்ளமோ படித்து, ஒரு சாதாரண வேலையில் இருக்கிறான்.

அடுத்த வருடம் நான் +2 எழுதியபோது எனக்கு ஒரே பயம். நானும் அது போல எங்கேயோ போய்விட்டால்????? நானும் இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தேன். புக்கை பிரித்தாலே தூக்கம் தூக்கமாக வரும். அந்த நண்பன் வேறு வந்து அடிக்கடி நினைவில் வந்து பயமுறுத்துவான். நல்ல வேளை எங்கும் போக வில்லை. பரிட்சை நன்றாக எழுதி முடித்தேன்.

அதற்கு பின்தான் எனக்கு பிரச்சனை ஆரம்பம் ஆனது. பரிட்சை முடிந்து அடுத்த இரண்டு வாரங்கள் என்னால் சரியாக தூங்க முடியவில்லை. எனக்கும் ஏதோ ஆகிவிட்டதாக நினைத்தேன். கிரிக்கட் விளையாடிப்பார்த்தேன், ஜிம் போனேன், செக்ஸ் புக் படித்துப் பார்த்தேன். ஆனாலும், என்னால் தூங்க முடியவில்லை. எப்போதும் முழு விழிப்பு நிலையிலேயெ இருந்தேன். பிறகு அப்பாவிடம் சொன்னேன். அப்பா என்னை டாக்டரிடம் போகச் சொன்னார்..

டாக்டர் பரிசோதித்து விட்டு, " நீ ரொம்ப படிச்ச சப்ஜெக்ட் என்ன என்று?" கேட்டார்.

" எக்னாமிக்ஸ்" என்றேன். ஏனென்றால், அதுதான் ஒரு வீணாப்போன சப்ஜக்ட், அப்போது.

பிறகு மருந்து சீட்டில் எதையோ எழுதிக்கொடுத்து, வீட்டிற்கு சென்று அப்பாவிடம் காண்பித்து விட்டு, பிறகு வாங்கச் சொன்னார். நானும் பயத்தில் பிரிக்காமல் வந்து விட்டேன்.

வீட்டிற்கு வந்து பிரித்தால், மருந்து சீட்டில் இப்படி எழுதியிருந்தது,

" தினமும் இரவு +2 எக்னாமிக்ஸ் புக்கை மீண்டும் படித்துப் பார்க்கவும்"

என்ன ஆச்சரியம்! புக்கை பிரித்து முதல் பாடத்தைப் பார்த்த இரண்டாவது நிமிடமே அருமையாக தூக்கம் வந்தது.

இந்தப் பதிவை எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ முடிச்சுட்டேன்ல. பரவாயில்லை. இந்த முறை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.

Nov 16, 2009

இது எப்படி இருக்கு???
இரண்டு நபர்கள், ஒரு அமெரிக்கன், ஒரு இந்தியன் பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தியன் அமெரிக்கனைப் பார்த்து,

" உங்களுக்குத் தெரியுமா? எனது பெற்றோர்கள் என்னைக் கட்டாயப்படுத்தி, ஹோம்லி பொண்ணுன்னு சொல்லி ஒரு கிராமத்திலிருந்து ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க. நான் ஒரு தடவைக் கூட அவளை சந்திச்சதே இல்லை. நாங்க இதைத்தான் அரேஞ்ஜுடு மேரேஜ்னு சொல்லுவோம். நான் விரும்பாத பெண்ணையோ அல்லது எனக்குத் தெரியாத பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நான் தெளிவாகச் சொல்லியும் அவர்கள் கேட்காததால், இப்போ பாருங்க ஏகப்பட்ட குடும்பப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறேன்"

இதைக் கேட்ட அமெரிக்கன்,

" காதல் கல்யாணத்தைப் பற்றி தெரிஞ்சுக்கனும்னா, என் கதையை சொல்றேன் கேளுங்க.

நான் ஒரு விதவையை ரொம்ப ஆழமா ஒரு மூன்று வருடம் காதலிச்சு, டேட்டிங்கெல்லாம் போனப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சில வருடங்களுக்குப் பின் என்னோட அப்பா, என்னுடைய ஸ்டெப் டாட்டர் மீது காதல் கொண்டு அவளை கல்யாணம் செய்துக் கொண்டார். அதனால எனக்கு எங்க அப்பா மாப்பிள்ளையாகிவிட்டார், நான் அவருக்கு மாமனார் ஆகிவிட்டேன்.

சட்டப்படி பார்த்தோம்னா, என் மகள் எனக்கு அம்மாவாகவும், என் மனைவி எனக்கு பாட்டியாகவும் ஆகிவிட்டார்கள்.

ரொம்ப பிரச்சனை எப்போ வந்துச்சுன்னா, எனக்கு மகன் பிறந்தப்போ. என்னோட பையன் எங்க அப்பாவுக்குத் தம்பி முறை ஆகிவிட்டதால், எனக்கு அவன் சித்தப்பா ஆகிவிட்டான்.


பிரச்சனை ரொம்ப ரொம்ப பெருசு ஆனது எப்போன்னா, எங்க அப்பாவுக்கு பையன் பிறந்தப்போ. என்னோட அப்பாவோட பையன் அதாவது என் தம்பி எனக்கு பேரன் ஆகிவிட்டான்.

கடைசியா பார்த்தோம்னா, நானே எனக்கு தாத்தாவாகவும், நானே எனக்கு பேரனாகவும் ஆயிட்டேன்.

நீங்க என்னடான்னா, உங்களுக்கு குடும்ப பிரச்சனை இருக்குன்னு சொல்லறீங்க!!!!"

இது எப்படி இருக்கு???

Nov 13, 2009

நான் ஏன் அப்படி இருந்தேன்???

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகி விட்டது. இருந்தாலும் அந்த சம்பவத்தின் வடு இன்னும் என் மனதை விட்டு வெளியேற மாட்டேன் என அடம் பிடிக்கிறது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களின் ஒரு ஞாயிறு விடுமுறையில் நண்பர்கள் அனைவரும் காலையிலேயே பீர் அடிக்க ஆரம்பித்து விட்டனர். சுவாரஸ்யமாக பேச்சு சென்று கொண்டிருந்தது. திடீரேன ஒரு நண்பர் கோபமாக கதத ஆரம்பித்தார். என்ன? என்று விசாரித்தோம். அவர் வயலுக்கு வாங்கிய மோட்டாரில் ஏதோ கோளாறு ஆகிவிட்டதாகவும், தன்னிடம் போய் அந்த கடைக்காரன் மட்டமான மோட்டாரை கொடுத்து விட்டானே? என புலம்பிக்கொண்டிருந்தார்.

நண்பர்கள் இருந்த போதையில் அது எப்படி உன்னை அவன் ஏமாற்றலாம்? என கோபம் கொண்டு, அந்த கடையில் சென்று கேட்கலாம் எனக் கிளம்பினார்கள். "நான் வரவில்லை" என நழுவப் பார்த்தேன். அதற்கு அனைவரும், " உலக்ஸ், சும்மா கேட்கத்தானே போறோம். வா" எனக் கூட்டிச் சென்றார்கள். நான் பொதுவாக இந்த மாதிரி விசயங்களுக்கு செல்வதில்லை. அதற்கு காரணம், அவர்களிடத்தில், அதாவது பிரச்சனை பண்ணுபவர்களிடம் பயம் என்று இல்லை. எனக்கு பயம் எல்லாம் என் அப்பாவிடம்தான்.

அப்பா அடிக்க மாட்டார். ஆனால் திட்டுவார். அவர் திட்டுவதைக் கேட்டால் பேசாமல் அவர் திட்டுவதற்கு பதில் இரண்டு அடி அடித்து விட்டால் பரவாயில்லை எனத்தோன்றும். வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போல் இருக்கும் அவர் திட்டுவது. இத்தனைக்கும் எந்த கெட்ட வார்த்தையும் பயன்படுத்த மாட்டார். இருந்தாலும் மனது வலிக்கும். அவர் திட்டிற்கு பயந்தே நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். தினமும் இரவு 9 மணிக்குள் வீட்டிற்கு வந்து சேர வேண்டும். இல்லையென்றால், தெரு முனையில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கோபத்தில் நிற்பார். அப்போது எல்லாம் "என்ன இவர் வில்லன் போல் இருக்கிறாரே?" என மனதிற்குள் கோபப் படுவேன். ஆனால், அவ்வாறு திட்டுவதற்கு இன்று அவர் இல்லையே என ஏங்குகிறேன்.

சரி, சொல்ல வந்த விசயத்திற்கு வருகிறேன். பிறகு நானும் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் அவர்களுடன் சென்றேன். ஆளுக்கு ஒரு வண்டியில் சென்றோம். எல்லோரும் அங்கே வண்டியில் போய் இறங்கியவுடன் அந்த காம்ளக்ஸே அதிர்ந்தது. நேரே அந்த கடைக்குப் போனோம். சாதாரணமாகத்தான் பேச்சு ஆரம்பித்தது. கடைக்காரர் ஒரு வெளியூர் வாசி. அவர் பொறுமையாக,

" நீங்க மோட்டாரை கொண்டு வாங்க சார். மாத்திக்கலாம்" என்றார்.

நண்பர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை.

"அது எப்படிடா, நீ குடுக்கும்போதே மட்டமானதா குடுக்கலாம்" என சண்டையிட ஆரம்பித்தார்கள். என்ன கொடுமை பாருங்கள்? அவர் வேறு மாற்றி தருகிறேன் என்கிறார். ஆனால், நண்பர்களோ அதை ஏற்கவில்லை. இப்படியே போன வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோசமான சண்டையாக மாறியது. எனக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. ஆனால், இடையில் நான் மட்டும் செல்ல முடியாது. நானும் ஒரு ஓரத்தில் அவர்கள் உடனே நின்று கொண்டிருந்தேன். எவ்வளவோ முயன்றும் என்னால் சண்டையை நிறுத்த முடியவில்லை. "பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்" என்று சொல்ல வடிவேலு போர் ஒருவர் அங்கு இல்லை.

திடீரென நண்பர் ஒருவர் அந்த கடைக்காரரின் சட்டையைப் பிடித்து ஓங்கி அடிக்க ஆரம்பித்தார். அவ்வளவுதான். நண்பர்கள் அனைவரும் அவரை துவைத்து எடுத்துவிட்டார்கள். என்னால் அதை தடுக்க முடியவில்லை. அவர் வாயெல்லாம் இரத்தம். பிறகு ஒரே கூட்டம் கூடிவிட்டது. அனைவரும் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். ஊரில் நிறுத்தாமல் நேரே பக்கத்தில் உள்ள கிராமத்தில் என் நண்பரின் தோட்டத்தில் வண்டியை நிறுத்தினார்கள். அன்று இரவுவரை அங்கே இருந்தோம். காரணம் ஒரு வேளை அடிபட்ட அந்த நண்பர் போலிஸில் புகார் செய்தால் ஸ்டேசன் செல்வதை தவிர்க்கவே அந்த ஏற்பாடு.

ஒரு வழியாக இரவு ஊர் திரும்பினோம். நான் பயத்துடனேயே இருந்தேன். பயத்துக்கு காரணம் இரண்டு. ஒன்று அப்பா. இரண்டாவது காரணம் போலிஸ் கேஸ். ஊருக்கு வந்தால் எல்லாம் நார்மல். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அவரவர் வீட்டிற்கு சென்றோம். அவருக்கு என்ன ஆயிற்று? என அடுத்த நாள் விசாரித்தேன். நாங்கள் அவர் போலிஸ் கேஸ் கொடுத்தால் என்ன செய்வது என்று நாங்கள் இரவு வரை ஒளிந்து இருந்தோம். அவரோ எங்களுக்குப் பயந்து கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு கடை உள்ளேயே காலை வரை இருந்திருக்கிறார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பிறகு ஏதாவது சந்தர்ப்பத்தில் அவரை பார்க்கும்போதெல்லாம் எனக்கு மனதில் அவர் இரத்தக் காயத்துடன் நின்றது வந்து போகும். நான் அவரை அடிக்கவில்லை என்றாலும், நானும் அந்த கூட்டத்தில் இருந்தேன் என்பதே என்னை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும். வருடங்கள் உருண்டோடின.

சமீபத்தில் இந்தியா சென்ற போது என் இன்ஜினியர் நண்பருடன் ஒரு இடம் வாங்கும் விசயமாக சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு குரல்,

" என்ன இன்ஜினியர் சார், நல்லா இருக்கீங்களா?"

" ம்ம்ம். நல்லா இருக்கேன். நீங்க?"

" நல்லா இருக்கேன். எங்க இந்த பக்கம்?"

" என் நண்பர் இவர். மலேசியாவிலிருந்து வந்துருக்கார். இவருக்கு ஒரு இடம் பார்க்கிறோம்"

" எனக்குத் தெரியுமே இவரை. இவர் நண்பர்கள் எல்லாம் ரொம்ப சாதுவாச்சே" எனச் சொல்லி தன் கன்னங்களை தடவிக் கொண்டார் அந்த கடைக்காரர்.

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் இன்ஜினியர் நண்பருக்கு பழைய விசயம் எதுவும் தெரியாது. அப்போது எனக்கு ஏற்பட்ட மன வேதனைக்கு அளவே இல்லை. எப்படி அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன், எனத் தெரியவில்லை. யாரோ செய்த தவறுக்காக நான் அன்று கூனி குறுகி நின்றேன்.

ஏனோ, எனக்கு அவரிடம் மன்னிப்பு கேட்கத் தோன்றவில்லை!!!.

Nov 11, 2009

நம் நாட்டின் வரி அமைப்பைப் பற்றி தெரிஞ்சு கொள்ளலாம் வாங்க!

சவுதியிலிருந்து என் நண்பர் ஆர்.பாலசுப்ரமணியம் அனுப்பிய செய்தியின் தமிழாக்கம் இது.

கேள்வி 1.. : நீங்க என்ன பண்ணறீங்க?
பதில் : தொழில் பண்ணறேன்.
Tax : அப்போ ப்ரொப்பஷனல் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 2 : என்ன தொழில் பண்ணறீங்க?
பதில் : பொருட்கள் எல்லாம் விற்பனை செய்யறேன்.
Tax : அப்போ சேல்ஸ் டேக்ஸ் கட்டுங்க!!

கேள்வி 3 : பொருட்கள் எல்லாம் எங்கே இருந்து வாங்கறீங்க?
பதில் : வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும்
Tax : சென்ட்ரல் சேல்ஸ் டேக்ஸ், கஸ்டம் டுயூட்டி மற்றும் ஆக்ட்ராய் (OCTROI) கட்டுங்க

கேள்வி 4 : பொருட்கள் விற்பனையால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?
பதில் : வருமானம்
Tax : வருமான வரி கட்டுங்க!

கேள்வி 5: வருமானத்தை எப்படி பிரிச்சு கொடுக்கறீங்க?
பதில்: டிவிடண்ட் மூலமா
Tax : டிவிடண்ட் டிஸ்ட்ரிபூஷன் டேக்ஸ் கட்டுங்க

கேள்வி 6 : பொருட்களை எங்கு உற்பத்தி செய்யறீங்க?
பதில் : தொழிற்சாலையில்...
Tax : எக்ஸைஸ் டுயூட்டி கட்டுங்க!

கேள்வி 7 : நீங்க அலுவலகம் / வேர் ஹவுஸ் / தொழிற்சாலை வைத்திருக்கின்றீர்களா?
பதில் : ஆமாம்
Tax : முனுசிப்பல மற்றும் பையர் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 8 : வேலையாட்கள் உள்ளார்களா?
பதில் : ஆமாம்
Tax : ஸ்டாப் பொரொபஷனல் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 9: நீங்க மில்லியன்ல பிஸினஸ் பண்ணறீங்களா?
பதில்Â : ஆமாம்
Tax : விற்பனை வரி கட்டுங்க!
பதில்B: இல்லை
Tax : அப்படின்னா குறைந்தபட்ச அல்ட்டர்னேட் டேக்ஸ் கட்டுங்க

கேள்வி 10 : 25000 ரூபாய் பணமாய் பேங்க்ல இருந்து எடுப்பீங்களா?
பதில் : ஆமாம், சம்பளத்துக்காக எடுப்பேன்.
Tax : பணம் ஹேண்டிலிங் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 11 : உங்களுடைய வாடிக்கையாளர்களை மதிய உணவிற்கோ அல்லது டின்னருக்கோ எங்கே அழைத்துச் செல்வீ ர்கள்?
பதில் : ஹோட்டல்
Tax : உணவு மற்றும் எண்டர்டெயின்மெண்ட் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 12 : தொழில் நிமித்தமா வெளியூர் செல்வீர்களா?
பதில் : ஆமாம்
Tax : பிரின்ஞ் பெனிபிட் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 13 : நீங்க யாருக்காவது சர்வீஸ் பண்ணியிருக்கீங்களா? இல்லை யாரிடமிருந்தாவது பெற்றிருக்கின்றீர்களா?
பதில் : ஆமாம்
Tax : சர்வீஸ் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 14 : இவ்வளவு பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது?
பதில் : என்னுடைய பிறந்த நாளுக்கு கிப்ட் ஆக கிடைத்தது.
Tax : கிப்ட் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 15: உங்களுக்கு நிறைய சொத்துக்கள் இருக்கா?
பதில் : ஆமாம்
Tax : வெல்த் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 16 : உங்க டென்ஷன் குறைக்க, எண்டர்டெயின்மெண்ட்டுக்காக எங்க போவீங்க?
பதில் : சினிமா அல்லது ரிசார்ட்.
Tax : எண்டர்டெயின்மெண்ட் டேக்ஸ் கட்டுங்க!

கேள்வி 17 : வீடு வாங்கி இருக்கீங்களா?
பதில் : ஆமாம்
Tax : ஸ்டாம்ப் டுயூட்டி, ரெஜிஸ்ட்ரேஷன் பீஸ் கட்டுங்க!

கேள்வி 18 : பிரயாணம் எல்லாம் எப்படி போவீங்க?
பதில் : பஸ்ல.
Tax : சர்சார்ஜ் கட்டுங்க!

கேள்வி 19: ஏதாவது கூடுதல் வரி இருக்கா?
பதில் : ஆமாம்
Tax : அப்ப கல்வி, கூடுதல் கல்விக்கும் மற்றும் எல்லா அரசாங்க டேக்ஸுக்கும் சர்சார்ஜ் கட்டுங்க.


கேள்வி 20: எப்போதாவது தாமதமா வரி கட்டி இருக்கீங்களா?
பதில் : ஆமாம்
Tax : வட்டியும், பெனால்ட்டியும் கட்டுங்க!

21) இதையெல்லாம் கேட்டு வெறுத்துப் போன ஒரு இந்தியன் :
நான் இப்போ சாகலாமா??
பதில் :: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, funeral tax அறிவிக்கப் போறோம் !!!

Nov 9, 2009

வடிவேலு IT கம்பெனியில் வேலை பார்த்தால்!!!

இன்று காலையில் எனக்கு வந்த மெயில் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இது யாரோ ஒரு புண்ணியவானின் கற்பனை.

***********

எப்புடி?

Login - சொல்லவே இல்லைTraining - முடியலNew product - உட்கார்ந்து யோசிப்பாங்களோConcall - வொய் பிளட், சேம் பிளட்Review - இப்பவே கண்ணை கட்டுதேDaily report - எதையுமே ப்ளேன் பண்ணாம பண்ணக்கூடாதுCommitment - ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு, ஆனா பினிஸிங் சரியில்லையேப்பாProject manager - ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்புடுற மாதிரிRegional Project Manager - என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியேHR Manager - கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா,
இந்த கோட்டைத் தண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன். பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்Supply Chain Manager - வேணா வலிக்குது அழுதுடுவேன்Admin Manager - ஐய்யையோ, வடை போச்சேSales Manager - நா ரவுடி, நா ரவுடி, நா ரவுடி, நான் ஜெயிலுக்கு போறேன், ன் ஜெயிலுக்கு போறேன், நான் ஜெயிலுக்கு போறேன்Marketing Manager - இது வாலிப வயசு, பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்குFinance Manager - என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்யாCircle Business Head - பாவம் யாரு பெத்த பிள்ளையோ தனியா பொலம்பிட்டு இருக்குPromotion to you - வரும், ஆனா வராதுAtlast, Customer - மாப்பு, மாப்பு, வைச்சுட்டான்யா ஆப்பு

Nov 6, 2009

பதிவர் சந்திப்பு!!!

சந்திப்பு என்பதுதான் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

கோட்சே, காந்தியை சந்தித்து பேசியிருந்தால்?
ஜார்ஜ் புஷ். சதாம் உசேனை சந்தித்து பேசியிருந்தால்?
கர்ணன், தர்மரை சந்தித்து பேசியிருந்தால்?
விரும்பிய முதல் பெண்ணை நான் சந்தித்து பேசியிருந்தால்?

- இப்படி பல இருந்தால் கள், ஒரு வேளை சாத்தியமாயிருந்தால், விளைவுகள் வேறு மாதிரி அல்லவா ஆகியிருக்கும். பேசி தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று ஒன்றுமே இல்லை. காதலனும், காதலியும் உடல் வேட்கையை மட்டும் நினைக்காமல் தங்கள் குடும்பங்களைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி மனம் விட்டு பேச வேண்டும். கணவனும், மனைவியும் மனம் விட்டு பேசினால் எந்த சண்டையும் அவர்களுக்குள் வராது.

மேலே சொல்லும் சந்திப்புகள் பிரச்சனைகள் தீர்வதற்கு. அதனால் பிரச்சனை இருந்தால்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை. பிரச்சனை வராமல் இருப்பதற்கும், நல்ல புரிதல்களுக்கும் சந்திப்பு அவசியம். பள்ளி, கல்லூரி காலங்களில் நண்பர்களை பார்க்காமல் பேசாமல் நான் ஒரு நாளைக்கூட தள்ளியதில்லை.

+2 படிக்கும்போது நடந்த ஒரு சம்பவம். நாங்கள் லால்குடியில் இருந்து தினமும் ட்ரெயினில்தான் திருச்சிக்கு செல்வோம். நான் படித்தது தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப்பள்ளி. வருடா வருடம் ட்ரெயின் டே நடத்துவோம். அதில் எனக்கும் ஒருவனுக்கும் சின்னத் தகராறு. அவன் பார்க்க நன்றாக முரட்டுத்தனமாக இருப்பான். அவனும் என் பள்ளிதான். நான் நோஞ்சானாக இருப்பேன். மதிய சாப்பாட்டு இடைவெளியில் நண்பர்கள் கூறினார்கள்,

"உலக்ஸ், உன்னை ஸ்கூல் விட்டவுடன் அவன் அடிக்கப்போகிறானாம். ஜாக்கிரதை"

என்னால் அவனை எதிர்கொள்ள முடியாது என்று நன்றாகத் தெரியும். நண்பர்கள் அனைவரும் பயப்பட்டார்கள். நான் பயப்படவில்லை. நேராக ஸ்கூல் முடிந்தவுடன் அவனிடம் சென்றேன். அவன் என்னை அங்கே எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்துக்கேட்டேன்,

" என்ன என்னவோ அடிக்கிறேனு சொன்னியாமே, எங்கே அடி பார்க்கலாம்?"

" இல்லை, நான் சும்மா சொன்னேன்....."

என்னை அங்கே எதிர்பார்க்காத அவனால் என்னை அடிக்க முடியவில்லை. அவனால் உடனடியாக அந்த அடிக்கும் மூடுக்கு வரமுடியவில்லை. பிறகு சமாதானமாகப் போய் நண்பன் ஆகிப் போனான். எதிராளி பயப்படும்போதுதான் நமக்கு அவனை திட்டும் இன்பமோ, அடிக்கும் இன்பமோ கிடைக்கும். அவன் நம்மை உதாசீனப்படுத்தினால், நாம் பெரிய ரவுடி என்று சொல்லிக்கொள்வதில் எந்த பெருமையில்லை.

எந்தப் பிரச்சனையும் நான் வளரவிடுவதில்லை. நேரே போய் எதிராளியின் வீட்டுக்கே பேச சென்று விடுவேன். அதிக கோபம் இருக்கும் இடத்தில்தான் நல்ல குணம் இருக்கும். அன்பு இருக்கும். நேரம் பார்த்து அவர்களின் வீக் பாயிண்ட்டை பிடித்தோமானால், வெற்றி நமக்குத்தான்.

திரும்பவும் சொல்கிறேன், பிரச்சனைக்காத்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை. நல்ல நட்புக்கும் சந்திப்புக்கள் அவசியம் தேவை. நான் எங்கள் ஊரில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று நினைத்தேன். ஆனால், அப்படி நடத்தினால், நான் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால், அந்த நல்ல நிகழ்வை தள்ளிப்போட்டு விட்டேன்.

பின் எதற்காக இந்த பதிவு என்கின்றீர்களா?

நாளை நடக்க இருக்கும் பதிவர் சந்திப்புக்கு என்னால் போக முடியாததால், எல்லோரையும் அலைகடல் என திரண்டு போகச்சொல்லவே இந்த பதிவை எழுதுகிறேன். என்னால்தான் போக முடியவில்லை. முடிந்தவர்கள் சென்று பயன் அடைந்து, அதை பதிவாக திங்கள் கிழமை போடுமாறு மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்:

பதிவர்கள் சந்திப்பு இடம் :

DISCOVERY BOOK PALACE
No. 6. Mahaveer Complex, 1st Floor,
Munusamy salai,
West K.K. Nagar, Chennai-78.
Ph; 65157525 (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)

நாள் : 7.11.2009 மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை.

திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களை பகிர இசைந்திருக்கிறார்.

பதிவர்களின் கலந்துரையாடல் நிகழ்வும் இருக்கிறது.

புதிய, பழைய என்றில்லாமல் இணைய எழுத்தாளர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்

பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே)

தொடர்புகளுக்கு :
பாலபாரதி : 9940203132
கேபிள் சங்கர் : 9840332666
தண்டோரா : 9340089989
நர்சிம் : 9841888663
முரளிகண்ணன் : 9444884964