Mar 29, 2009

கல்கியும், திரு கே.பாக்யராஜும், நானும்.

நான் எப்பொழுது எழுதவேண்டுமென்று நினைத்தேன். ஞாபகபடுத்தி பார்க்கிறேன். நன்றாக நினைவுள்ளது. நான் ஒரு முறை பரிட்சைக்கு படித்துக்கொண்டிருந்தபோது, இடைப்பட்ட நேரத்தில் ஆனந்த விகடனோ, குமுதமோ படித்துக்கொண்டு இருந்தேன். ரேவதி எனக்கு மிகவும் பிடித்த நடிகை. அவர்கள் படம் அட்டை போட்ட ஒரு இதழ். அதில் ஒரு கவிதை,

"உனக்கென்ன ஒரு பார்வை
ஓசியில் வீசிவிட்டு செல்கிறாய்
என் உள்ளமல்லவா வைக்கோலாய்
பற்றி எரிகிறது".

இது கவிஞர் சுரதாவின் கவிதை என நினைக்கிறேன். இந்த கவிதை படித்தபிறகு எனக்கும் கவிதை எழுத வேண்டுமென்ற ஆசை. கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்தேன். ஆனால், பத்திரிக்கைகளில் வருவதில் சில சிரமங்கள் இருந்தன. அப்போழுது எங்கள் ஊரில் மிக பிரபலமாக பத்திரிக்கையில் கேள்வி பதில் பகுதிகளுக்கு கேள்விகள் எழுதி கொண்டிருந்த லால்குடி ராஜேந்திரன், லால்குடி ஆர்.சிவராஜ் அவர்களை சந்த்தித்து விவாதித்தேன். பிறகு நானும் கேள்விகள் எழுதி அனுப்ப முடிவு செய்தேன். இன்றும் எனக்கு நன்றாக நினைவுள்ளது, எனது முதல் கேள்விக்கு பதில் எழுதியது, மதிப்பிற்குறிய, டாகடர் கலைஞர் கருணாநிதி அவர்கள். பிரசுரமானது, முரசொலியில், பராசக்தி பதிலகளில். அதன் பிறகு, ஆனந்த விகடன், குமுதம், தேவி, ராணி, கல்கி, சினிமா எக்ஸ்பிரஸ் என என் கேள்விகள் இடம் பெறாத பத்திரிக்கைகளே இல்லை என்றானது. பின்பு மெல்ல துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். கதைகள் எழுத ஆரம்பித்தேன்.

1986ல் அனைத்துக்கல்லூரி சிறுகதை போட்டியில் என் கல்லூரி சார்பாக கலந்துகொண்டு மாவட்டத்தில் இரண்டாம் பரிசு பெற்றேன். என் முதல் கதை எங்கள் கல்லூரி ஆண்டு மலரில் வெளிவந்தது. கதையின் பெயர் " இனி ஒரு விதி செய்வோம்". அந்த சமயங்களில் திருச்சி தூயவளனார் கல்லூரின் கணித டிபார்ட்மெண்ட் பேராசிரியர் திரு ரூபன்ராஜ் அவர்கள் கொடுத்த ஊக்கத்தை என்னால் மறக்க முடியாது.

அதல்லாம் சரி, அதை ஏன் இப்போது சொல்கிறேன் என்கின்றீர்களா? காரணம் இருக்கிறது. அவ்வளவு வெறி உள்ள நான், ஏன் எழுதுவதை நிறுத்தினேன்?
எனக்கு மிகவும் பிடித்த டைரக்டர் திரு கே. பாக்யராஜ் அவர்கள். அவர் நடித்த, எடுத்த படங்களை பல முறை பார்த்திருக்கிறேன். அவரை எனக்கு பிடித்த காரணத்தால் என் அத்தை பையனுக்கு பாக்யராஜ் என பெயர் வைத்தேன். வீட்டிலும் ஒப்புக்கொண்டார்கள்.

ஒரு முறை கல்கியில் நான் கேட்ட ஒரு கேள்வி என் பத்திரிக்கை தொடர்பை துண்டித்துவிட்டது. நானாகத்தான் எழுதுவதை நிறுத்தினேன். அப்படி என்ன கேள்வி கேட்டேன்?

1985 ஆம் ஆண்டு என நினைக்கிறேன், அப்போது தமிழ்நாடு முழுவதும் ஒரே வெள்ளம். நான் கல்கியில் இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தேன்:
"நாடே வெள்ளத்தில் மூழ்கியிருக்கும்போது, தமிழக முதல்வர் எம்.ஜி,ஆர், கே. பாக்யராஜின் "சின்னவீடு" ப்ரீவியூ பார்க்கசென்றது நியாயமா"?
நான் ஒரு தீவிர எம்ஜிஆர் வெறியன். சும்மா இப்படி ஒரு கேள்வி கேட்க போக, அந்தவார கல்கியின் கேள்வி பதில் பகுதியின் தலைப்பே என் கேள்விதான். அதுமட்டுமல்ல, எல்லா கல்கி விளம்பரத்திலும் இந்த கேள்விதான். அதற்கு ஒரு பக்க பதில் எழுதி பாக்யராஜையும், தலைவரையும் சாடியிருந்த்ததாக நினைவு.

அதற்கு அடுத்தவாரம் கே. பாக்யராஜிடமிருந்து மறுப்பு வந்திருந்தது. அதையும் கல்கியில் பிரசிருத்திருந்தார்கள். அவரின் மறுப்பின் கடைசியில் இப்படி எழுதியிருந்தார்:
" தலைவரின் பெயரை கெடுப்பதற்காக, நீங்களே இப்படி ஒரு கேள்வி கேட்டு, அதற்கு பதிலும் கொடுத்துருக்கின்றீகள். பெரியவங்க தப்பு செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரி, சின்னவங்க தப்பு செஞ்சா செறுப்பால அடினு ஒரு பழமொழி இருக்கு. நீங்க செஞ்ச தப்ப பெரியவங்க செஞ்ச தப்பா நினைச்சு மன்னிக்கிறேன்"

அடுத்த வார கல்கியில அதற்கு திரும்பவும் பதில் எழுதியிருந்தார்கள்,
" எங்களுக்கு நாங்களே கேள்வி கேட்டு பதில் எழுதவேண்டிய அவசியமில்லை. தேவையென்றால் எங்கள் அலுவலகம் வாருங்கள், அந்த கேள்வி எழுதிய கடிதத்தையும் காண்பிக்கிறோம். நாங்களும் நீங்க செஞ்ச தப்பை பெருமாள் செஞ்சதாவே நினைச்சு மன்னிக்கிறோம்"

அதற்கு பிறகு ஏகப்பட்ட கடிதங்கள், அப்பாவிடம் ஏகப்பட்ட திட்டு. அதையெல்லாம்விட எனக்கு பிடித்த எனதருமை டைரக்டருக்கும், தலைவருக்கும் போய் மனக்கஷ்டத்தை கொடுத்துவிட்டோமே என மனம் நொந்து, வெம்பி, அழுத நாட்கள் இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது.
அப்பொழுது எழுத நிறுத்தியவன்தான், திரும்ப இப்போதுதான் எழுத வருகிறேன்.

Mar 25, 2009

மிக்ஸர் - 25.03.09

நான் ரொம்ப புதுசு வலைத்தளத்துக்கு (இந்த மாதிரி வலைத்தளத்துகுதாங்க). மத்ததெல்லாம் என்னன்னு கேக்காதீங்க.
எப்படி எனக்கு இந்த ஆர்வம் ஏற்பட்டது? எப்பொழுது எழுத தொடங்கினேன் என்பதை பிறகு நான் தனியாக எழுத உள்ளேன். அதற்கு முன்பு ஒரு தகவல். நான் ஒரு மூன்று பதிவுகள் பதித்துவிட்டு, ஏதேனும் பின்னூட்டம் வந்துள்ளதா என நானே என் வலைத்தளத்தை 50 முறை பார்த்துவிட்டு, விரக்தியுடம் படுக்க போகையில், ஒரு போன்கால், நண்பர் ஒருவரிடமிருந்து, " என்னையா எழுதியிருக்க, இதெல்லாம், ஒரு பதிவா?, உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா? உனக்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது? அந்த நேரத்துல வேற வேலை ஏதாவது பார்க்கலாம் இல்ல?
அவருக்கு எப்படி நான் புரிய வைப்பது என்னுடைய எழுத்து ஆர்வத்தை?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்று குடும்பத்துடன் ஹோட்டல் சென்றோம். சாப்பிட்டு முடித்தவுடன் பில்லை பார்த்தேன். 25 வெள்ளி என்று இருந்தது. எனக்கு கோபம், என்னடா என் பையன் கொஞ்சம்தானே சாப்பிட்டான், பாதிதானே சார்ஜ் பண்ண வேண்டும், ஒரு வேளை அதற்கும் முழுவதுமாக பில் போட்டு விட்டார்களோ? கோபம் வந்தது, எப்படி கேட்பது என்று தயக்கம். இப்படி கேட்டேன், " ஏங்க என் பையன் சாப்பிடதிற்கும் சேர்த்துதானே பில் போட்டீங்க?" (ரோம்ப யோக்கியன் போல) அதற்கு அவர் சொன்னார், " ஏங்க சின்ன பையனுக்கு போய் பணம் கேப்பேனா? அவனுக்கு எப்பவும் ப்ரீதான்" மன சங்கடத்துடன் வெளியே வந்தேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் பெண் கேட்டாள்" டாடி, அம்மாவுக்கு இன்னொறு குழந்தை பிறக்க போவுதா"
"ஏண்டா கேக்கற"
" இல்ல டாடி அம்மா வாந்தி எடுத்துட்டே இருக்க்காங்க?"
" வாந்தி எடுத்தா குழந்த பொறக்கும்னு யாருடா சொன்னா?"
" அன்னிக்கு கோலங்கள் நாடகத்துல ஆர்த்தி ஆண்டி வாந்தி எடுத்தப்ப அதானே சொன்னாங்க எல்லாரும்"
நான் என்ன சொல்லி புரிய வைப்பேன் என் பெண்னுக்கு. இதனால்தான், செக்ஸ் கல்வி தேவை என்கிறார்களோ"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களால ஜெயா டிவி பார்க்கும்போது, சன் டிவி விளம்பரம் பார்க்க முடியுமோ? என்ன ஆச்சரியமா இருக்கா?
ஆனா, எங்களால பார்க்க முடியுமே?
மலேசியால எல்லாத்தையும் ஒரே நிறுவனம் ஒளிபரப்புரதுனால, விளம்பரம் இஷ்டத்துக்கு வரும். எந்த டிவி சேனல்லயும், எந்த விளம்பரத்தையும் பார்க்கலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏன் எங்க ஊர்ல அந்த அளவுக்கு நான் கடவுள் ஓடலைனு இப்போதான் தெரியுது. ஏன்னா, நான் இருக்குற இடத்துல பிச்சைக்காரங்களே இல்லைப்பா? அப்புறம் எப்படி அனுதாபம் வரும்? அந்த படத்த எப்படி பார்ப்பாங்க?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் நேற்று ரசித்த ஜோக்,
மக்கள் டிவியில் அண்ணன் விடாது கருப்பு மூவர் அணியை பற்றி கிண்டல் அடிக்கையில்,
" எங்களுக்கு நான்கு தொகுதி போதுங்க. ஐந்து தொகுதி வேணாங்க, ஏன்னு கேக்கரீங்களா? ஏங்க எங்க கட்சியிலே இருக்கறதே னான்கு பேர்தான், இன்னொறுத்தறுக்கு நாங்க எங்க போறது?"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மலேசிய வானொலியில் எப்பொழுதுமே, ' பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்பதற்கு பதில் "பிறந்த நாள் வாழ்த்துகள்" என்கிறார்கள்.
எது சரி? வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Mar 24, 2009

நான் கடவுள் - இது விமர்சனம் அல்ல, ஒரு புலம்பல், அவ்வளவே!

எல்லா விமர்சனங்களையும் பார்த்துவிட்டு, நேற்றுதான் படம் பார்த்தேன். தூக்கம் போனதுதான் மிச்சம். மலேசியாவில் இதற்கு 18PL சர்டிபிகெட் கொடுத்துள்ளாகள். அதனால், தியேட்டரில் பார்க்க முடியவில்லை. டிவிடி வாங்கி பார்த்தோம் (ஒரிஜினல்தாங்க).
பிள்ளைகள் 5 நிமிசத்துக்குமேல் படம் பார்க்கவில்லை. பயந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். நான் கேட்கவில்லை. நானும் என் மனைவியும் பார்த்தோம். பாலாவுக்கு என்ன ஆயிற்று. ஏன் இப்படி எடுத்துள்ளார்? இப்படிப்பட்ட பிச்சைக்கார கூட்ட தலைவன் தமிழ்நாட்டில் இருக்கிறானா என்ன? வாழ்க்கையை ஈசியாக எடுத்துக்கொள்ள வேண்டாமோ?
ஆர்யா நன்றாக நடித்துள்ளார் என்கிறார்கள். என்ன நடித்துள்ளார்? ஒரு அரை பக்க வசனம் இருக்குமா? ஆர்யாவின் 3 வருட சினிமா வாழ்க்கை வீணானதுதான் மிச்சம். பூஜாவை பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு. இளையராஜாவின் இசை, பின்னனி இசை ரொம்ப அருமை. ஜெய மோகனின் வசனமும் நன்றாக உள்ளது. ஒரு உதாரணம், " அய்யையோ, சாமி விளக்க அசுத்தபடுத்திட்டாரு பாரு?" " நெருப்புக்கு ஏதுடா சுத்தம், அசுத்தம்"
சேது - அந்த பைத்தியக்கார இடம்
நந்தா- சீர்திருத்த பள்ளி
பிதாமகன் - சுடுகாடு
நான் கடவுள் - காசி, அந்த மலை ஏரியா
ஹீரோக்கள் மேல அவ்வளவு கோபம் என்ன பாலா சார்?
நல்ல வேல "தல" தலை தப்புச்சு.
இந்த படத்துக்கு ஏன் 3 வருசம் பாலா சார்?
ஆனா உங்க தைரியத்த பாரட்டனும் பாலா சார். யரும் எடுக்காத ஒரு கதைய எப்பவும் எடுக்கறீங்கள்ள அதுக்கு. ஏன் அந்த பாட்டை வைக்கல பாலா சார்?

Mar 23, 2009

என் வேதனை

நான் மலேசியா வந்து 12 வருடம் முடியபோகிறது. நிறைய தடவை இந்தியா போய் வந்தாகிவிட்டது. நிறைய நம தமிழ் தொழிலாளிகளை பார்த்தாகிவிட்டது. பல சோக கதைகளை கேட்டாகிவிட்டது.
ஒவ்வொறு முறை நம் மனிதர்களை ரோட் போடும் வேலைகளிலும், பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் சுத்த்படுத்தும் வேலைகளிலும், பாத்ரூம் கழுவும் வேலைகளிலும் பார்க்கும்போது என் மனம் மிகுந்த வேதனை படுகிறது. நான் இந்த வேலைகளை ஒன்றும் குறை சொல்லவில்லை. குறைந்த சம்பளத்துக்கு இந்த வேலையில் சேருவானேன். அதே சம்பளத்துக்கு, இந்தியாவில் நல்ல வேலை கிடைக்காதா?
இதைவிட நன்றாக வாழ முடியாதா? அப்படியென்ன வெளிநாட்டு மோகம்?
உடனே நீங்கள் நினைக்கலாம், நீ வெளிநாட்டில் இல்லையா என்று. நான் தேடி போகவில்லை. என்னை தேடி வந்த வேலை என் படிப்புக்கு ஏத்த வேலை.
அவர்களை பார்க்கும்போது என் மனம் பட்ட வேதனையை ஏனோ பதிவு பண்ண தோன்றியது, அதனால் எழுதுகின்றேன்.

ஒரு தேடல்

என்ன வேண்டும் எனக்கு.

சிறு வயதில் எல்லாவற்றிலும் ஆசை. துணி மணியில் ஆரம்பித்து சாப்பாடு வரை. கஷ்டப்பட்டு படித்தேன். அப்பொழுது இருந்த மன நிலை என்ன? எப்படியாவது நனறாக படித்து பெரிய ஆளாக வர வேண்டும். படித்து வந்தாச்சு. அப்புறம் என்ன? நல்ல டிகிரி படிக்கனும், நிறைய படிக்கனும். நிறைய படிச்சாச்சு. படிச்சு என்ன பண்ண, நல்ல வேலை கிடைக்கணும். நல்ல வேலைல சேந்தாச்சு. இந்தியால வேலை பார்த்து என்னைக்கு பணக்காரனாவது, வெளிநாடு போக வேண்டாமா? அதுவும் போயச்சு. வெளிநாட்டு வேலை கிடைச்சாச்சு, பெரிய போஸ்ட் வேணாமா? அதுவும் வந்துடுச்சு. கம்பனி கார், வீடு இத்யாதி, இத்யாதி.......

நல்ல அழகான மனைவி அமையனும், சிகப்பா? (நான் கொஞ்சம் கருப்புனு தெரிஞ்சு போச்சோ) அதுவும் ஆண்டவன் குடுத்துட்டான்? அது எப்படி, இதோட ஆசைகள் முடியுமா? என்ன வேணும்? குழந்தைகள் வேண்டாமா? ஆச்சு, ஒரு பெண் பிறந்தாச்சு? அது எப்படி, பெண் குழந்தை மட்டும் போதுமா? ஆண் குழந்தை வேண்டாமா? ஏழுமலையான், அதுவும் குடுத்துட்டான்.

அதோட நம்ம ஆசைய நிறுத்துரதா என்ன?, அன்பு மனைவி கேட்டாள், "நமக்குன்னு ஒரு வீடு வேண்டாமா, நம்ம சொந்த ஊர்ல?, கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டியாச்சு. அப்புறம் என்ன? நண்பன் கேட்டான், நல்ல ஒரு நிலம், ஒரு ஏக்கர் விலைக்கு வருதான், வாங்கரீயா? ஆசை யார விட்டது (நமக்கு தேவை கடைசியில ஒரு ஆறு அடி நிலம்தான் தேவை என்று தெரிந்தே, நிலமும் வாங்கியாச்சு) அப்புறம் அது வாங்குறோம், இது வாங்குறோம்.......

இப்போது நான் என்ன செய்வது? ஏதாவது ஒன்று தேவை என எண்ணும்போது அதை நோக்கியே மனம் செல்கிறது. அது முடிந்தவடன் மற்றதை நோக்கி செல்கிறது? முடிவில் எதை நோக்கி போகிறோம்.

இவ்வளவு இருந்தும் ஏதோ ஒன்று குறைகிறது அது என்ன? எதை நோக்கி நான் அல்ல நாம் போகிறோம்? என்ன வேண்டும் எனக்கு? எதற்காக நான் பிறந்தேன்? என்னுடைய குறிக்கோள் என்ன? என்னுடைய பிறப்பின் நோக்கம் என்ன?

70 வயதில் (ரொம்ப அதிகமோ) இறந்தாலும், இறந்துவிடுவோம், என தெரிந்தே, தினமும் யோகா செய்கிறேன், வாக்கிங் போகிறேன், ஜிம் போகிறேன், தியானம் செய்கிறேன். சந்தோசமாகத்தான் இருக்கிறேன். ஆனாலும் ஏதோவொறு தேடுதல் எனக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது என்ன? அதை எப்போது நான் அடைய போகிறேன்?

அதை அடைய நான் என்ன செய்ய வேண்டும். ஏழைகளுக்கு உதவ வேண்டுமா? நான் அவ்வளவு பண்க்காரனும் இல்லையே? என்னால் முடிந்த உதவி செய்து கொண்டுதானே இருக்கிறேன்.
அப்போ என்ன வேண்டும் எனக்கு?

Mar 20, 2009

பரிசல்காரன் அவர்களுக்கு நன்றி

என்னுள் இருந்த எழுத்தாளனை வெளியில் கொண்டு வந்த பரிசல்காரனுக்கு நன்றி. அவர் ப்ளாக்கை பார்த்துதான் ஆசை வந்தது, எனக்கும் எழுத.

யோகா

எனக்கு யோஹாவை பற்றி பேச ஆசை. ஜிம் பற்றி பேச ஆசை. நடைபயிற்சி பற்ற்றி பேச ஆசை.

எனக்கு இணைய நண்பர்கள்

எனக்கும் ஆசை வந்து ஒரு ப்ளாக் ஆரம்பித்து உள்ளேன். நண்பர்கள், ஆண்களோ, பெண்களோ தேவை.