Mar 29, 2009

கல்கியும், திரு கே.பாக்யராஜும், நானும்.

நான் எப்பொழுது எழுதவேண்டுமென்று நினைத்தேன். ஞாபகபடுத்தி பார்க்கிறேன். நன்றாக நினைவுள்ளது. நான் ஒரு முறை பரிட்சைக்கு படித்துக்கொண்டிருந்தபோது, இடைப்பட்ட நேரத்தில் ஆனந்த விகடனோ, குமுதமோ படித்துக்கொண்டு இருந்தேன். ரேவதி எனக்கு மிகவும் பிடித்த நடிகை. அவர்கள் படம் அட்டை போட்ட ஒரு இதழ். அதில் ஒரு கவிதை,

"உனக்கென்ன ஒரு பார்வை
ஓசியில் வீசிவிட்டு செல்கிறாய்
என் உள்ளமல்லவா வைக்கோலாய்
பற்றி எரிகிறது".

இது கவிஞர் சுரதாவின் கவிதை என நினைக்கிறேன். இந்த கவிதை படித்தபிறகு எனக்கும் கவிதை எழுத வேண்டுமென்ற ஆசை. கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்தேன். ஆனால், பத்திரிக்கைகளில் வருவதில் சில சிரமங்கள் இருந்தன. அப்போழுது எங்கள் ஊரில் மிக பிரபலமாக பத்திரிக்கையில் கேள்வி பதில் பகுதிகளுக்கு கேள்விகள் எழுதி கொண்டிருந்த லால்குடி ராஜேந்திரன், லால்குடி ஆர்.சிவராஜ் அவர்களை சந்த்தித்து விவாதித்தேன். பிறகு நானும் கேள்விகள் எழுதி அனுப்ப முடிவு செய்தேன். இன்றும் எனக்கு நன்றாக நினைவுள்ளது, எனது முதல் கேள்விக்கு பதில் எழுதியது, மதிப்பிற்குறிய, டாகடர் கலைஞர் கருணாநிதி அவர்கள். பிரசுரமானது, முரசொலியில், பராசக்தி பதிலகளில். அதன் பிறகு, ஆனந்த விகடன், குமுதம், தேவி, ராணி, கல்கி, சினிமா எக்ஸ்பிரஸ் என என் கேள்விகள் இடம் பெறாத பத்திரிக்கைகளே இல்லை என்றானது. பின்பு மெல்ல துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். கதைகள் எழுத ஆரம்பித்தேன்.

1986ல் அனைத்துக்கல்லூரி சிறுகதை போட்டியில் என் கல்லூரி சார்பாக கலந்துகொண்டு மாவட்டத்தில் இரண்டாம் பரிசு பெற்றேன். என் முதல் கதை எங்கள் கல்லூரி ஆண்டு மலரில் வெளிவந்தது. கதையின் பெயர் " இனி ஒரு விதி செய்வோம்". அந்த சமயங்களில் திருச்சி தூயவளனார் கல்லூரின் கணித டிபார்ட்மெண்ட் பேராசிரியர் திரு ரூபன்ராஜ் அவர்கள் கொடுத்த ஊக்கத்தை என்னால் மறக்க முடியாது.

அதல்லாம் சரி, அதை ஏன் இப்போது சொல்கிறேன் என்கின்றீர்களா? காரணம் இருக்கிறது. அவ்வளவு வெறி உள்ள நான், ஏன் எழுதுவதை நிறுத்தினேன்?
எனக்கு மிகவும் பிடித்த டைரக்டர் திரு கே. பாக்யராஜ் அவர்கள். அவர் நடித்த, எடுத்த படங்களை பல முறை பார்த்திருக்கிறேன். அவரை எனக்கு பிடித்த காரணத்தால் என் அத்தை பையனுக்கு பாக்யராஜ் என பெயர் வைத்தேன். வீட்டிலும் ஒப்புக்கொண்டார்கள்.

ஒரு முறை கல்கியில் நான் கேட்ட ஒரு கேள்வி என் பத்திரிக்கை தொடர்பை துண்டித்துவிட்டது. நானாகத்தான் எழுதுவதை நிறுத்தினேன். அப்படி என்ன கேள்வி கேட்டேன்?

1985 ஆம் ஆண்டு என நினைக்கிறேன், அப்போது தமிழ்நாடு முழுவதும் ஒரே வெள்ளம். நான் கல்கியில் இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தேன்:
"நாடே வெள்ளத்தில் மூழ்கியிருக்கும்போது, தமிழக முதல்வர் எம்.ஜி,ஆர், கே. பாக்யராஜின் "சின்னவீடு" ப்ரீவியூ பார்க்கசென்றது நியாயமா"?
நான் ஒரு தீவிர எம்ஜிஆர் வெறியன். சும்மா இப்படி ஒரு கேள்வி கேட்க போக, அந்தவார கல்கியின் கேள்வி பதில் பகுதியின் தலைப்பே என் கேள்விதான். அதுமட்டுமல்ல, எல்லா கல்கி விளம்பரத்திலும் இந்த கேள்விதான். அதற்கு ஒரு பக்க பதில் எழுதி பாக்யராஜையும், தலைவரையும் சாடியிருந்த்ததாக நினைவு.

அதற்கு அடுத்தவாரம் கே. பாக்யராஜிடமிருந்து மறுப்பு வந்திருந்தது. அதையும் கல்கியில் பிரசிருத்திருந்தார்கள். அவரின் மறுப்பின் கடைசியில் இப்படி எழுதியிருந்தார்:
" தலைவரின் பெயரை கெடுப்பதற்காக, நீங்களே இப்படி ஒரு கேள்வி கேட்டு, அதற்கு பதிலும் கொடுத்துருக்கின்றீகள். பெரியவங்க தப்பு செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரி, சின்னவங்க தப்பு செஞ்சா செறுப்பால அடினு ஒரு பழமொழி இருக்கு. நீங்க செஞ்ச தப்ப பெரியவங்க செஞ்ச தப்பா நினைச்சு மன்னிக்கிறேன்"

அடுத்த வார கல்கியில அதற்கு திரும்பவும் பதில் எழுதியிருந்தார்கள்,
" எங்களுக்கு நாங்களே கேள்வி கேட்டு பதில் எழுதவேண்டிய அவசியமில்லை. தேவையென்றால் எங்கள் அலுவலகம் வாருங்கள், அந்த கேள்வி எழுதிய கடிதத்தையும் காண்பிக்கிறோம். நாங்களும் நீங்க செஞ்ச தப்பை பெருமாள் செஞ்சதாவே நினைச்சு மன்னிக்கிறோம்"

அதற்கு பிறகு ஏகப்பட்ட கடிதங்கள், அப்பாவிடம் ஏகப்பட்ட திட்டு. அதையெல்லாம்விட எனக்கு பிடித்த எனதருமை டைரக்டருக்கும், தலைவருக்கும் போய் மனக்கஷ்டத்தை கொடுத்துவிட்டோமே என மனம் நொந்து, வெம்பி, அழுத நாட்கள் இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது.
அப்பொழுது எழுத நிறுத்தியவன்தான், திரும்ப இப்போதுதான் எழுத வருகிறேன்.

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

வாங்க இனியவன்... உங்களின் அனுபவங்களை எங்களுடன் பகிர்வதில் எல்லோருக்கும் மகிழ்ச்சியே

iniyavan said...

என் இனிய நண்பரே,

உங்கள் பின்னூட்டத்திற்கு என் இதயம்கனிந்த நன்றி