Apr 1, 2009

மன இறுக்கம் ஏன்? கொஞ்சம் சிந்திப்போமா?

அமெரிக்காவில் ஒரு தமிழ்நாட்டு கம்ப்யூடடர் இன்ஜினியர் தன் குடும்பத்தை சேர்ந்த 5 பேரையும் சுட்டு கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டதாக நேற்று சன் டிவியில் செய்தி பார்த்தேன். பார்த்ததிலிருந்து என் மனமெல்லாம் ஒரே வேதனை. அவர் தன் மனைவியின் அண்ணனையும்,அவர்கள் குழந்தைகளையும், தன் மனைவியையும், குழந்தைகளையும் சுட்டு கொல்ல மனம் எப்படி வந்தது. என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை. அவருடைய மனவி ஆஸ்பத்திரியிலிருந்து வந்தால்தான் காரண்ம் தெரியும். என்னவேணாலும் காரண்ம் இருந்துவிட்டு போகட்டும். அந்த கொடூர எண்ணம் அந்த சமயத்தில் வந்ததற்கு காரணம் என்னவாக இருக்கமுடியும்.

ஒரு மனிதனின் மனது அந்த அளவிற்கு கொடூரமாக முடியுமா என்ன? கொலை பண்ண வேண்டும் என்று தோன்றிய அந்த ஒரு நிமிட நேரத்தை அவருக்குள் ஏற்படுத்தியது எது? அவருக்கு வந்த கோபத்திற்கு குழந்தைகளை கொல்வானேன்? இப்படி ஏகப்பட்ட "ஏன்"கள்.

நாம் எல்லோரும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்து ஓடி ஓடி நிம்மதியை தொலைக்கிறோம். நம்மில் எத்தனை பேர் குடும்பத்துடன் வெளியில், கோயிலுக்கோ, ஹோட்டலுக்கோ, ஒரு பிக்னிக்கோ அடிக்கடி செல்கிறோம்? எத்தனைபேர் நாம் தினம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் மனைவியிடம் பகிர்ந்து கொல்கிறோம். எத்தனை பேர் அடிக்கடி சிரிக்கிறோம்? எல்லோரும் ஒரு மன அழுத்ததுடனே வாழ்கிறோம். இதில் மட்டும் வேறுபாடே இல்லை. அவர் அவர் சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல், எல்லோருக்கும் ஒரு மன அழுத்தம்.

எனக்கு நன்றாக நினைவு உள்ளது. என் முதல் மாத சம்பளம் வெறும் 1000 ரூபாய். அதை அப்படியே அப்பாவிடம் கொடுத்துவிட்டு தினமும் 10 ரூபாய் வாங்கிக்கொண்டு அலுவலகம் சென்றது நன்றாக நினைவு உள்ளது. அப்பொழுது இருந்த சந்தோசம் இப்போது கைநிறைய, அதிகமாக சம்பளம் வாங்கும்போது இல்லையே ஏன்? அப்போது குடும்பத்து பொறுப்பு அப்பாவிடம் இருந்ததாலா? இல்லை. அப்படி இல்லை. அப்போது கவலையற்ற வாழ்வு. அப்போது எனக்காக மட்டும் வாழ்ந்தேன். இப்போது மனைவி, குழந்தைகளுக்காக வாழ்கிறேன்.அதில் என்ன இருக்கிறது? எல்லாருமே அப்படித்தானே என்கிறீர்களா? ஆமாம். ஆனால், நம்மில் எத்தனை பேர் இவ்வளவு சம்பாதித்தது போதும் என்று நினைக்கிறோம்? திரும்ப திரும்ப அந்த பணத்தை தானே நோக்கி ஓடுகிறோம்? அதானால்தானே நிம்மதியை, சிரிப்பை, சந்தோசத்தை தொலைக்கிறோம்.

எவ்வளவு வேண்டுமானலும் பணம் வரட்டும், போகட்டும் அதற்காக சந்தோசத்தை தொலைப்பானேன். மன இறுக்கத்துடன் ஏன் வாழவேண்டும். நாம் சந்தோசப்படுவதை விட, அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, அதில் சந்தோசப்படுங்கள். அதில் கிடைக்கும் சுகமே தனி. உதாரண்த்திற்கு சில:

தினமும் ஒரு தடவையாவது மனைவியின் சமையலை பாராட்டி பாருங்கள். அதற்கு அப்புறம் அவர்கள் எப்படி உங்களை கவனிப்பார்கள் என்று.

ஓடி வரும் குழந்தைகளை அன்போடு தூக்கி கொஞ்சி பாருங்கள். அந்த பிஞ்சு குழந்தையின் முகத்தில் ஏற்படும் சந்தோசத்தை பார்ப்பதை விட வேறு என்ன சந்தோசம் நமக்கு வேண்டும்.

இந்த சமயத்தில் நான் படித்த செய்தி ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

ஒருவர் ஒரு புது கார் வாங்கி வீட்டிற்கு வருகின்றார். காரை பார்க்கிங் இடத்தில் வைத்துவிட்டு, வீட்டின் உள்ளே செல்கிறார். அப்போது திறந்திருந்த ஜன்னல் வழியே பார்க்கிறார், அவரது 5 வயது பையன் அந்த காரில் ஏதோ கிறுக்குகின்றான். இவருக்கு உடனே கோபம். புது கார் ஆச்சே, ஏதோ கிறுக்குகின்றானே? கோபத்தில் புத்தி வேலை செய்யவில்லை. உடனே ஓடிச்சென்று, கையில் கிடைத்த ஏதோ ஒன்றால், குழந்தையை அடிக்கிறார். ஒரே ரத்தம் குழந்தையின் கையில். அதை பார்த்து அவர் மனைவி ஓடி வந்து, குழந்தைய தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறார். ஆஸ்பத்திரி இருப்பது வெகு தொலைவில். ஆஸ்பத்திரியில் சேர்த்தவுடன் டாக்டர் பரிசோதிதுவிட்டு, ஒரு ஆப்பரேசன் செய்து ஒரு விரலை எடுத்துவிடுகிறார்.

அடுத்த நாள், அவன் கண் முழித்து, அப்பாவை பார்த்து அவன் சொன்னான்," சாரிப்பா, இனிமே அது மாதிரி கிறுக்க மாட்டேன்".

அதை கேட்டு மனம் நொந்த அவன் உடனே வீடு நோக்கி போகிறான், காரை பார்க்க போகிறான், அப்படி என்ன அதில் எழுதியிருக்கிறான் என்று.

காரில் எழுதியிருந்த வாசகம்

" டாடி, ஐ லவ் யு வெரி மச்".

அதை படித்து அழுது புலம்புகிறான். எழுதியதை அழித்துவிடலாம், ஏன் புது காரே வரலாம், ஆனால், குழந்தையின் விரல் வருமா? அந்த ஒரு நிமிடம் அவனை யோசிக்காமல் கோபப்பட வைத்தது எது? கார், பணம், இத்யாதி, இத்யாதி.

எனக்கென்னமோ, அவனின் மனநிலையும், அந்த அமெரிக்கா இன்ஜினியரின் மனநிலையும் ஒன்றாகவே தோன்றுகிறது. வாழ்க்கையில் பணத்தைவிட, புகழைவிட, அந்தஸ்த்தை விட சந்தோசமாக அனுபவிக்க எவ்வளவோ உள்ளது. அதை எப்படி பெற வேண்டும்? வாழ்க்கையை, இந்த பிறவியை, இந்த உலகை ரசிக்க, அனுபவிக்க கற்றுக்கொள்ளவேண்டும். சந்தோசமாக இருக்க வேண்டும். கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும். தினமும், ஒரு 10 நிமிசம், ஏதாவது ஒரு தியானம் செய்யவேண்டும்.

தனி மனிதன் அமைதியாய், சந்தோசமாய் இருந்தால்தான், உலகமும் அமைதியாய் இருக்கும்.

3 comments:

iniyavan said...

ismath commented on your story 'மன இறுக்கம் ஏன்? கொஞ்சம் சிந்திப்போமா?'

'அருமையானப் பதிவு...கோபத்தில் எடுக்கும் முடிவு எப்போதும் ஆபத்தில் விடும் என்பதுதான் உண்மை...வாழ்த்துக்கள்...!

-கிளியனூர் இஸ்மத்'

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'மன இறுக்கம் ஏன்? கொஞ்சம் சிந்திப்போமா?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 1st April 2009 01:40:03 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/48303

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நிகழ்காலத்தில்... said...

\\அப்போது எனக்காக மட்டும் வாழ்ந்தேன். இப்போது மனைவி, குழந்தைகளுக்காக வாழ்கிறேன்.\\

இதுதான் மன இறுக்கத்துக்கு முக்கிய
காரணம்...

கார் நிகழ்ச்சி மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது...


வாழ்த்துக்கள்..