Apr 27, 2009

மிக்ஸர் - 26.04.09 - தற்பெருமை வேண்டாமே!

சென்ற வாரம், கோலாலம்பூரிலிருந்து, திருச்சி வரும்போது ஒரு அனுபவம். பக்கத்து இருக்கைகளில் இருவர். ஒரே பேச்சு. உடைகளில் பணக்காரத்தனம். பேச்சும் அப்படியே. அதில் ஒருவர் ஒரே தற்பெருமை. நான் அப்படி இருந்தேன். இப்படி இருந்தேன். கார்லதான் போவேன், காஸ்டிலியான உடைகள் தான் அணிவேன், அப்படி, இப்படி என்று.

என்னால், தாங்க முடியாமல், எங்கே வேலை செய்கிறீர்கள்? என விசாரித்தேன்.

" உணவகத்தில் வேலை செய்தோம், சார்"

" இப்போ, எங்க போறீங்க"

" ஒரேடியாக, இந்தியா செல்கிறோம் சார்"

" ஏன் முதலாளி, சரியாக சம்பளம் தருவதில்லையா?"

" இல்ல சார், நல்ல சம்பளம் சார்"

எனக்கு ஒரே சந்தோசம். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பிறகு கேட்டேன்.

" மலேசியா வந்து எத்தனை வருடம் ஆகிறது"

" மூன்று வருடம் சார்"

" இது வரை மொத்தம் எவ்வளவு சேமித்திருப்பீர்கள்?"

ரொம்பவும் சந்தோசமாக சொன்னார்கள்,

" ரூபாய் 50,000 சேர்த்துள்ளோம், சார்"

அதற்கப்புறம், நடந்ததெல்லாம், எனக்கு எழுத பிடிக்க வில்லை. நான் அவர்களுக்கு, அறிவுரை சொன்னது, அவர்கள் என்னுடைய தகுதி, சம்பளம் பற்றி கேட்டது, அதன்பிறகு, திருச்சி வரும்வரை எதுவும் பேசாமல் வந்தது, இதெல்லாம் இங்கு தேவையில்லாதது.

நான் கூட முதலில் வருத்தப்பட்டேன். அவர்களின் சந்தோச பேச்சுக்களை நான் கெடுத்துவிட்டேனோ, என்று.

ஆனா, ஒன்று மட்டும் புரியவில்லை. அப்படி என்ன, தற்பெருமையும், பந்தாவும் நம்மை ஆட்டி படைக்கின்றது.
உண்மை மனதுக்கு தெரிகிறது, ஆனால், பொய்யான ஒரு தோற்றத்தை சொல்ல மனம் எப்படி ஒப்புக்கொள்கிறது.

நான் முதலில் அவர்களை ஏதோ கம்பெனியின் பொது மேலாளர் என்றுதான் நினைத்தேன். உண்மை தெரிந்தவுடன், என்னால் அவர்களை நினைத்து பரிதாப பட மட்டுமே முடிந்தது.
------------------------------------------------------------------------------------------------

மகாபாரத்தில் படித்த ஒரு கதை திடீரேன நினைவுக்கு வந்தது.

தர்மரை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். பாண்டவர்களிலேயே மிகவும் நல்லவர். யாருக்கும் எந்த தீங்கும் மனதால் கூட நினைக்காதவர்.

அப்படிப்பட்ட தர்மர், ஒரு நாள், ஒரு ஜோசியரை பார்க்கிறார்.
பார்த்து முடித்தவுடன், ஜோசியக்காரர் சொல்கிறார்,

" தர்மரே, நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணம் இது. உங்களால், பல உயிர்கள் போக போகிறது. பல பேரின் சாவுக்கு நீங்கள் காரணமாக போகிறீர்கள். அதனால், எல்லோரிடமும் கொஞ்சம் அன்பாகவும், ஜாக்கிரதையாகவும் இருங்கள்"

தருமருக்கு ஒரே கவலை ஆகிவிட்டது.

" என்ன நம்மால் பல பேர் உயிர் இழக்க போகிறார்களா?, என்ன கொடுமை இது" என மனம் குழம்பி தவிக்கிறார்.

பிறகு ஒரு முடிவுக்கு வருகிறார்.

"யாரையும் மனம் நோகடிக்க கூடாது. மனம் புண்படும்படி பேசக்கூடாது".

அடுத்த சில நாட்களில், ஒரு திட்டத்துடன் சகுனி வருகிறார். தர்மரை சூதாட அழைக்கிறார். தர்மர் மறுத்திருக்கலாம்.

ஆனால், ஜோசியர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

" நாம் விளையாட மறுத்தால், சகுனியின் மனம் புண்படுமே, அதனால், ஏதேனும் ஏற்பட்டு, பல பேர்களின் உயிருக்கு நாம் காரணம் ஆகிவிடுவோமோ?" என நினைக்கிறார்.

பலன். சூதாடபோகிறார். அனைத்தையும் இழக்கிறார். போர் வருகிறது. பல பேர் இறக்கிறார்கள். ஜோசியக்காரன் சொன்னது நடந்துவிட்டது.

ஜோசியம் பார்த்து, ஜோசியத்தை ஜெயிக்க வைத்து விட்டார்.
என் கேள்வி இதுதான்.

அவர் ஜோசியம் பார்த்ததால்தானே, அப்படி நடந்தது. ஜோசியம் பார்க்காமல் இருந்திருந்தால், போரே வந்திருக்காதல்லவா?
-------------------------------------------------------------------------------------------

சமீபத்தில் ஆனந்த விகடனை படித்தபோது நான் ரசித்தது, மதன் கேள்வி பதிலைத்தான்.

ஒரு கேள்வி, " யாருமே சரியில்லையே, யாருக்கு ஓட்டு போடுவது?"

மதனின் பதில், " தேர்தல்ல மோசமானவர்களும், மிக மோசமானவர்களும்தான் போட்டியிடுகிறார்கள். மிக மோசமானவர்கள் வராமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு"

மிகவும் ரசித்தேன்.
------------------------------------------------------------------------------------------------

அலக்ஸாண்டரின் புரட்சிகரமான அணுகுமுறை நாடு முழுக்க பரவியது. பெர்டிகாஸின் காதுகளையும் அடைந்தது. பெர்டிகாஸ் அலக்ஸாண்டரின் நண்பர்.

" என்ன ஆயிற்று இந்த அலக்ஸாண்டருக்கு? ஏன் இப்படியெல்லாம் செய்கிறான்? உத்தரவுகளைப் பிறப்பித்து அவர்களை வழிநடத்தாமல் பொன்னும் பொருளும் கொடுத்து எதற்காக வீரர்களை குஷிபடுத்த வேண்டும்?

நிறைய கேள்விகள். மாசிடோனியாவுக்கு விரைந்தார் பெர்டிகாஸ்.

" வா வா, எப்படி இருக்கிறாய் பெர்டிகாஸ்?" - எனக்கேட்டார் அலக்ஸாண்டர்.

" என்னை விடு. நான் ஒரு விசயத்தை கேட்பதற்காக வந்தேன்."

" நிதானமாகக் கேட்கலாம் பெரிடிகாஸ்"

" ஆமாம், உன்னுடைய சொத்துக்களை எல்லாம் பிரித்து வீரர்களுக்கு வழங்குவதாகக் கேள்விப்பட்டேனே?"

" பாதி மெய். பாதி பொய்"

" புரியவில்லை"

" என்னுடைய சொத்துக்களை அல்ல. அரசாங்க சொத்துக்களைத் தான் வழங்குகிறேன். இதிலென்ன குழப்பம் உனக்கு?"

" குழப்பம் உனக்குத்தான். இருப்பதை எல்லாம் எல்லோருக்கும் வழங்கிவிட்டால் உனக்கென்று என்னதான் மிஞ்சும்?"

" என்னிடம் நிறைய மிஞ்சி இருக்கிறது. கவலைப்படாதே பெர்டிகாஸ்."

" என்ன இருக்கிறது சொல்?"

" நம்பிக்கை."

அதுதான் மாவீரன் அலக்ஸாண்டர்.

முழுவதுமாக படிக்க, ஆர். முத்துக்குமார் எழுதிய " மகா அலக்ஸாண்டர்" புத்தகம் படியுங்கள்.

எடுத்தால், முடிக்காமல் வைக்க மாட்டீர்கள்.
------------------------------------------------------------------------------------------------

Apr 26, 2009

பணம், புகழ், சொத்து மட்டுமா, வாழ்க்கை?

கடந்த ஒரு வாராமாக இந்தியாவில் இருப்பதாலும், நேரமின்மையாலும் என்னால், எழுதமுடியவில்லை. ஆனால், எதுவுமே எழுதாமலிருப்பது, எதையோ இழந்தால் போல் இருக்கிறது.

எப்போதுமே ஊருக்கு வரும்போது மிக சந்தோசமாக இருக்கும். போகும்போது மிக வருத்தமாக இருக்கும். இந்த முறை வித்தியாசமாக இருக்கிறது. நல்ல விசயங்கள் காதில் விழுவது மிக அபூர்வமாக உள்ளது.

எனக்கு எப்போதுமே சும்மாயிருப்பது பிடிக்காது. ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். சுறு சுறுப்பாக இருக்க வேண்டும். என்னதான் சுறுசுறுப்பாக இருந்தாலும், மனம் பணம் சேர்ப்பதிலும், சொத்து சேர்ப்பதிலுமே எப்போதும் ஈடுபடுவதை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

ஒரு மனிதன் ஏழையாக இருந்துவிட்டால் ரொம்ப நல்லது. பணக்காரனாக பிறந்து இருந்தாலும் ஒன்றும் வித்தியாசம் தெரியாது. ஆனால், சாதாரணமாக பிறந்து, கஷ்டப்பட்டு முன்னேறி, கொஞ்சம் பணம் சேர்த்து, பிறகு அதிலிருந்து விலகிவருவது என்பது மிக மிக கஷ்டமான ஒன்று. நானும் அப்படித்தான்.

ஆனால், பணம், சொத்து ஒன்று மட்டும் வாழ்க்கையில்லை, அதைவிட வாழ்க்கையில் அனுபவிப்பதற்கு எவ்வளவோ உள்ளது என்பதை உணர்ந்துமே, என்னால அதிலிருந்து மீள முடியவில்லை.

நாம் அடிக்கடி சொல்வதுபோல், "நமக்காக இல்லாவிட்டாலும், நம் குடும்பத்திற்காகவாவது உழைக்கவேண்டும்" என நம்மை நாமே ஏமாற்றி சந்தோசத்தை தொலைக்கிறோம்.

அதற்காக யாரையும் உழைக்க வேண்டாம், சம்பாதிக்க வேண்டாம் என சொல்லவில்லை. பொன், பொருள், பதவியை நோக்கி எப்போதும் அலைய வேண்டாமே எனத்தான் சொல்கிறேன்.

இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான் எழுதிகொண்டிருக்கிறேன்.

எனக்கு எப்போதுமே, பெரிய பதிவியில் இருக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், எல்லோரும் நம்மை மதிக்க வேண்டும் என எப்போதுமே எண்ணிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த இந்திய பிரயாணம் என்னை சிறிது ஆட்டிப்பார்த்து விட்டது.

அதற்கு காரணம் இரண்டு நபர்கள். ஒன்று என் அம்மா. இன்னொருவர் என் நண்பன்.

அம்மாவிற்கு 78 வயதுவரை ஒரு குறையில்லை. சின்ன சின்ன தொந்தரவுகள் வரும் போகும். ஆனால், திடீரென ஒரு போன்கால், ஒரு நாள். அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை என. என்ன பெரிதாக ஒன்றுமில்லை. வயது முதிர்ச்சி பிரச்சனைதான். சக்கரை, கொலஸ்ட்ரால்..... இதில் என்ன வருத்தம். இது மற்றவருக்கு வந்தால் நாம் அதிகம் கவலைப் படுவதில்லை. ஆனால், சொந்த அம்மா எனும்போது ஒரு மனக்கஷ்டம். அவர்கள் ஏகப்பட்ட மாத்திரை சாப்பிடுவதை பார்க்கும்போது, அவர்கள் சாப்பிட கஷ்டப்படுவதை பார்க்கும்போது மிக வேதனையாக இருக்கிறது. ஆனால், அவர்களை கிட்டே இருந்து பார்த்துக்கொள்ள முடியாத சூழல்.

ஏன்?

கிட்டே இருந்து கவனிக்க வேண்டுமென்றால், உடனே வேலையை விட்டு மலேசியாவிலிருந்து வர வேண்டும். முடியவில்லை. ஏன்?

நீதான் அம்மா மீது அதிக பாசம் உள்ளவனாயிற்றே? ஏன் வர மறுக்கிறாய்?
உண்மை என்ன? பணம், பதவி.

இந்தியாவிற்கு வந்தால் இவையெல்லாம் கிடைக்காதே? என்ன செய்ய என்ற நிலை. இந்த நிலையில் நான் உள்பட எல்லோரும் எதில் அடிமையாக உள்ளோம் என, நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன?

எத்தனை கஷ்டப்பட்டு என்னை வளர்த்து ஆளாக்கியிருப்பார்கள்?

இதில், நான் என்னை சமாதனப்படுத்திக்கொண்டது, இரண்டு வகையில்,

1) நல்ல மெடிக்கல் ட்ரீட்மெண்ட் என்னால் கொடுக்க முடிகிறது. நான் தான் அருகில் இல்லையே தவிர, மற்றவர்களின் அருகாமையை உறுதி செய்தது.

2) எக்காரணத்தைக் கொண்டும், என் வயதான காலத்தில், எனக்கு முடியாமல் போனால், என் குழந்தைகளின் அருகாமையை எதிர்பார்க்காமலிருப்பது. நான் என் பெற்றோர்கள் அருகிலிருந்து அவர்களுக்கு பணிவிடை செய்யாமல், நான் அதை என் குழந்தைகளிடத்தில் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

இன்னொரு சம்பவம். என் நண்பன் ஒருவன். மிக நன்றாக இருப்பான். பரம்பரை சொத்துக்கள் அதிகம். எந்த வேலைக்கும் செல்லவில்லை. கேட்டால் நான் ஏன் செல்ல வேண்டும்? என்பான்.

எப்போதுமே, ஒரு திமிரான பேச்சு. பணக்காரன் என்ற கர்வம். பணம் உள்ளவர்களிடத்திடம் மட்டுமே பேச்சு. 95 கிலோ எடை இருப்பான். அவன் ஒன்றும் கெட்டவனில்லை. நல்லவன் தான். அவன் சூழ்நிலை அவனை அப்படி பேச வைக்கும்.

மலேசியாவிலிருந்து வந்தவுடன், இன்னொரு நண்பன் என்னை தேடி வந்து சொன்னான்,

" வாடா, அவனை போய் பார்த்து வரலாம்?"

" ஏண்டா, என்னாச்சு, அவனுக்கு?"

" இல்லைடா, அவனுக்கு உடம்பு சரியில்லை"

" சரி, வா, போகலாம்"

அன்று இரவு போனோம். அவனை பார்த்த்வுடன், நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

95 கிலோ எடை உள்ள என் நண்பனின் தற்போதைய எடை வெறும் 45 கிலோ மட்டுமே. இடையில் என்ன ஆயிற்று?

உடம்பு எல்லாம், நன்றாகத்தான் உள்ளது. ஏதோ பிரச்சனையாம். வெகு சிலருக்கு மட்டுமே இந்த மாதிரி ஏற்படுமாம். சுத்தமாக, கொழுப்பே இல்லையாம். உயிருக்கு ஒன்றும் ஆபத்து இருப்பதாய் தெரியவில்லை. அன்று இரவு முழுவதும் நான் தூங்க வில்லை. அந்த நிலையில் அவன் மனம் என்ன பாடு படும். வெறும் பணம் மட்டுமே காப்பாற்றுமா, என்ன?

அன்றைய தினத்திலிருந்து, அவனுக்கு விரைவில் குணமடைய நான் வேண்டிக்கொள்கிறேன்.

நீங்களும், கொஞ்சம் வேண்டுங்களேன், ப்ளீஸ்!

பணம், புகழ், சொத்து மட்டுமே வாழ்க்கையில்லை, என இப்போது புரிகிறதல்லவா?????

Apr 16, 2009

மிக்ஸர் - 15.04.09 - கொஞ்சம் சிரிக்கலாமே?

மனசத்தொட்டு சொல்லுங்க, நாம யாரையாவது எதிரில் பார்த்தா, ஒரு சின்ன சிரிப்போ, இல்ல புன்முறுவலோ செய்வோமா? தெரிஞ்சவங்களை பார்த்தாலே, தெரியாதமாதிரி போவோம். எங்கே, ஏதாவது உதவி கேட்டுவிடுவாங்களோ என்ற பயத்தில், திரும்பிக்கூட பார்க்கமாட்டோம். ஆனா, மலேசியால, யாரபார்த்தாலும், ஒரு சிறு புன்னகை செய்வாங்க. நமக்கு அப்படியே ஒரே சந்தோசமா இருக்கும். நம்ம அவங்களுக்கு தெரிஞ்சிருக்கனும்னு அவசியம் இல்ல. எல்லோரையும் பார்த்து ஒரு புன் சிரிப்பு. பெண்களும் அப்படித்தான். தெரியாத பெண்கள் கூட நம் எதிரில் வந்தால், அப்படியே ஒரு புன்னகை செய்வாங்க. நாம அதைப்பார்த்தவுடனும், ஒரு சந்தோசமும், மன மகிழ்ச்சியும் தான் வருமே தவிர, வேறு எண்ணமே தோன்றாது. நல்ல ஒரு ஆரோக்கிய சூழல்தான் தோன்றும். அதுதானே நமக்கு வேணும். அதே போல் கார் ஓட்டும்போது யாருக்கேனும் வழி கொடுத்தாலோ, அவர்கள் கடந்து செல்லும்போது, நாம் அவர்களை அனுமதித்தாலோ, திரும்பி கை காமித்து, ஹாரன் அடித்து நமக்கு நன்றி சொல்வார்கள். நமக்கும் சந்தோசமாக இருக்கும்.

நாம் ஏன் அப்படியில்லை. நாம் ஏன் யாரையும் பார்த்து புன்னகைக்க மறுக்கிறோம். ஒரு புன்னகையால் என்ன குறைந்துவிட போகிறது. நாமும் முயற்சிக்கலாமே?

ஆனால், ஒரு கஷ்டம் நம் நாட்டில். மலேசியாபோல ஏதேனும் ஒரு நம் நாட்டு பெண் நம்மை கடந்து செல்லும்போது, ஒரு புன்சிரிப்பு சிரித்தால், அவ்வளவுதான், அப்புறம் அவள் சிரிப்பையே மறக்க வேண்டியதுதான்.

என்ன நான் சொல்வது, சரிதானே?
-------------------------------------------------------------------------------------------------

நேற்று மலேசியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாடினார்கள். நாங்களும்தான்!

ஊரில் இருந்து, நேற்று என் நண்பர் போன் செய்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறினார்.

நான் கேட்டேன், " என்ன இன்னைக்கு போன் செய்து வாழ்த்து சொல்லர? புத்தாண்டுதான், பொங்கல் அன்றைக்கே முடிஞ்சு போச்சே?"

அவர் கூறினார், " திடீர்னு, அப்பாவை, சித்தப்பானு கூப்பிடுனு சொன்னா, ஒத்துக்க முடியுமா, என்ன?"

அவர் கேட்பதும், சரிதான் இல்லை?

-------------------------------------------------------------------------------------------------

மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒருவர் என் வீட்டிற்கு மதிய உணவிற்கு வந்திருந்தார்.

என் பெண்ணை பார்த்து, " என்னம்மா, நல்லா படிக்கிறாயா?" எனக்கேட்டுக் கொண்டிருந்தார்.

என் மகளும், பதில் சொன்னாள்.

நான் அவர்களின் சம்பாஷணையை கேட்டுக்கொண்டிருந்தேன்.

அடுத்து, அவர் கேட்டார், " ஏம்மா, நீ எத்தனையாவது ரேங்க் உன் வகுப்பில?"

என் பெண் சொன்னாள், " முதல் ரேங்க், அங்கிள்"

உடனே, அடுத்த கேள்வி கேட்டார், " உங்க வகுப்பில, மொத்தம் எத்தனை பேர்?"

அவர் கேட்டதுதான் தாமதம், என் மகள் பதில் சொல்வதற்கு முன் நான் பதில் கூறினேன், அவருக்கு, இப்படி:

" சார், அவங்க வகுப்புல மொத்தம், ஆயிரம் பேர் சார்"

அவருக்கு முகம் உடனே மாறி விட்டது. பின்ன, என்னங்க, ஒரு குழந்தை சொன்னா, அதை பாரட்டரத விட்டுட்டு, வகுப்புல எத்தனை பேர்னு கேட்டா, என்ன நியாயம். ஆயிரம் பேர் உள்ள வகுப்புல முதல் ரேங்க் எடுத்தாதான், ஒத்துக்குவாரா, என்ன?

முதல்ல, நாம எல்லோரையும் மனசு திறந்து பாராட்டக்கத்துக்கணும்.

-------------------------------------------------------------------------------------------------

நம்ம ஊர்ல சிக்னல் போட்டிருந்தா, எத்தனை பேர் அதை மதித்து, காரை நிறுத்துவோம். எனக்கு தெரிஞ்சு ரொம்ப கம்மி.

ஆனா, மலேசியால, அன்றக்கு ஒரு நாள் வேலை விஷயமா, கோலால்ம்பூர் செல்ல அதிகாலை 4 மணிக்கு காரை கிலப்பினேன். ரோட்டில் யாரும் இல்லை. சிறிது பயணத்திற்கு பிறகு, ஒரு சிக்னல் வந்தது. எனக்கு அடுத்த லேனில் இரண்டு கார். எதிரில் ஒரு கார் இல்லை. சிக்னல் விழுந்தது. யாரும் நகரவில்லை. இரண்டு, மூன்று நிமிடம் அனைவரும் காத்திருந்து, ஒரு காரும் ரோட்டில் எதிரில் இல்லாதபோது கூட, அவர்கள் அந்த ரூலை மதித்தது என்னை ரொம்பவே பாதித்து.

நம் நாட்டில் நம் நல்லதிற்கு ஹெல்மெட் போடச்சொன்னால்கூட, நம்மால் அதை ஒத்துக்கொள்ளமுடியவில்லை. அதுதான் ஏன் என்று எனக்கு புரியவில்லை.

-------------------------------------------------------------------------------------------------

எனக்கு ஒருத்தர் ஒரு மெயில் அனுப்பி இருந்தார் இன்று.

என்னவென்றால், " என்ன நீ, எப்போதும், உன் வாழ்க்கையை பற்றியே எழுதிக்கொண்டுள்ளாய்?, உன் பெர்சனல் டைரி போல் அல்லவா உள்ளது? யாராவது ப்ளாக்கில் இப்படி எழுதுவார்களா? அப்படி என்ன எதையோ சாதித்து விட்ட மாதிரி எழுதுகிறாய்?"

அவருக்கு நான் சொன்ன ஒரே பதில் இதுதான்:

" சாதித்தவர்கள் மட்டும் தான் எழுத வேண்டும் என்றால், எழுதுபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும். மற்றவர்கள் போல் இல்லாமல் துணிந்து நாம் எழுதுவதே ஒரு சாதனைதானே. நாம் ஒரு கருத்து கூறும்போது, நம் வாழ்வில் நடந்த விஷயங்களை பற்றியோ, அல்லது படித்தவைகளை பற்றியோதானே கூறமுடியும்"

அப்படியே மனதில் எல்லாமே தோன்றி, எல்லாமே அறிவுப்பூர்வமான கருத்துக்களா சொல்ல, நான் ஒன்றும், புத்தரோ, ராமகிருஷ்ணரோ, விவேகானந்தரோ இல்லையே?

-------------------------------------------------------------------------------------------------

ஒரு சின்ன ஹை கூ. திடீரனெ மனதில் உதித்தது. ஏற்கனேவே யாருக்கானும் இது யாருக்கேனும் தோன்றியிருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல:

" ரோட்டின் மேல்
பிச்சைக்காரி
பெயர் தனலட்சுமி"
-------------------------------------------------------------------------------------------------

Apr 15, 2009

மரணத்தைக் கண்டு பயப்படுபவரா நீங்கள்? அப்ப அவசியம் இதைப்படிங்க!!!

நான் ஒன்னும் புதுசா எதுவும் சொல்லப்போறதில்லை. எல்லாமே மற்ற மேதைகள், அறிஞர்கள் எல்லோருமே சொன்னதுதான். கொஞ்சம் தூசித்தட்டி, நான் எப்பவும்போல் என் வாழ்வில் நடந்த சில அனுபவங்களையும் சேர்த்து மரணத்தை பற்றி அலசப்போகிறேன்.

ஒரு முறை நடிகர் அஜித் ஒரு பேட்டியில் சொன்னது நினைவுக்கு வருகிறது.
"நாமும் மற்ற பொருட்களைபோல்தான். என்ன ஒரு வித்தியாசம், பொருட்களின் மேல் உற்பத்தியான தேதியும், காலாவதியாகும் (expiry date) தேதியையும் குறிப்பிட்டிருப்பார்கள். நமக்கு expiry date மட்டும் தெரியாது, அவ்வளவுதான்".

எவ்வளவு உண்மை பாருங்கள். நமக்குத்தான் தெரியாது, ஆனால் நம்மை படைத்தவனுக்கு தெரியும். நான் அடிக்கடி ஒன்றை நினைப்பதுண்டு. நாம் கட்டும் வீடு, கட்டிடங்கள் கூட அதிக வருடம் நிலையாக இருக்கும். ஆனால், நம்மால், அதிக வருடம் வாழ முடியும் என்று யாராவது சொல்லமுடியுமா?

சிறு வயதில் மரணம் என்றால் எனக்கு அவ்வளவு பயம். இப்போது பல மரணங்களை பார்த்து மனம் பக்குவப்பட்டு விட்டது. மரணம் மற்ற வீட்டிலோ, வேறு எங்கோ நடந்தால், நம்மை அவ்வளவு பாதிப்பதில்லை. ஆனால், அதே நம் வீட்டில் நடந்தால், நாம் அதிகம் கவலைப்படுகிறோம். ஆனால், நடப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஒரு முறை புத்தரிடம், தன் மகனை பறிக்கொடுத்த ஒரு தாய் கேட்டாளாம், தன் மகனின் உயிரை மீட்டுத்தருமாறு. அதற்கு புத்தர் கூறினாராம், "மரணமே நடக்காத ஒரு வீட்டிலிருந்து ஒரு கவளம் சோறு வாங்கி வா, நான் உன் மகனை நான் மீட்டுத்தருகிறேன்". அவளும் எல்லா இடமும் அலைந்து தேடினாளாம். கடைசி வரை மரணமே இல்லாத வீட்டை அவளால் கண்டு பிடிக்க முடியவில்லையாம். அப்போதுதான் அவளுக்கு அந்த உண்மை தெரிந்ததாம். மரணம் எல்லா வீட்டிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது அது நம் வீட்டில் மட்டும் நடக்கவில்லை என்ற உண்மை.

இன்னொறு கதை. நாம் எல்லாம் அறிந்ததுதான். யாரோரு ஒரு மன்னன், பெயர் நினைவில்லை. அவனுக்கு பாம்பினால்தான் சாவு என்று ஜோசியர் கூற, அவன் அந்த சாவிலிருந்து தப்பிக்க, ஒரு பாதாள அறைக்கு செல்கிறான், அங்கே யாருமே நுழைய முடியாது. அதனால் நாம் தப்பித்துவிடலாம் என நினைக்கிறான். (அப்படி தனியாக வாழ்ந்து, உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து என்ன சாதிக்க நினைத்தானோ தெரியவில்லை) கடைசியில் என்ன நடந்தது? யாரோ ஒருவன், மன்னனை பார்க்க பழங்களுடன் வருகிறான். கடைசியில் அந்த பழத்தின் உள்ளே இருந்த பாம்பு ஒன்று அவனைத்தீண்ட உடனே இறந்து போகிறான். இதிலிருந்து என்ன தெரிகிறது, ஆண்டவன் ஆரம்பித்து வைத்துவிட்டு, அவனே முடிவையும் எழுதிவிடுகிறான். யாரும் தப்பமுடியாது.

அந்த இடைப்பட்ட நேரத்தில்தான், நாம் பணத்துக்கு, பொருளுக்கு என்று, எல்லாவற்றிற்கும் அலைகிறோம். கடைசியில் ஒன்றுமே இல்லாமல் போகிறோம். நாம் எவ்வளவு சம்பாதிதாலும், ஒரளவுதான் சாப்பிட முடியும். பணம் இருப்பதற்காக நிறைய சாப்பிடமுடியுமா என்ன? நீங்கள் 25 வயதில் சாப்பிட்டதை 50 வயதில் சாப்பிட முடியுமா?

இந்த நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது:

" இளம் வயதில் நிறைய பசிக்கும், எல்லாவற்றையும் சாப்பிட ஆசையா இருக்கும், கையில் பணம் இருக்காது. இப்போது, கையில் நிறைய பணம் இருக்கிறது, ஆனால், எதையும் சாப்பிடக்கூடாது என டாக்டர்கள் சொல்கிறார்கள்"

இதுதான் வாழ்க்கை. எல்லாமே நல்ல படியாக அமைவது ஒரு சிலருக்குத்தான். அது ஏன் என்பது, ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

என் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம். ஒரு முறை எனக்கு காய்ச்சல். எனது குடும்ப டாக்டர் ஊரில் இல்லாததால், வேறு ஒரு டாகடரிடம் சென்றேன். எனக்கு டாக்டர் என்றால் அலர்ஜி. என் குடும்ப டாக்டருக்கு எங்கள் உடம்பை பற்றி நன்கு தெரியும். ஆனால், புது டாக்டருக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது. அவரிடம் சென்றவுடன் எனக்கு ஒரே பயம், என்ன சொல்வாரோ, என்ன மருந்து கொடுப்பாரோ என்று. அதையே நினைத்துகொண்டு அவரிடம் சென்றேன்.

என்னை பரிசோதித்த அவர், " என்ன இது, உன் இதயம் இப்படி துடிக்கிறது? உனக்கு இதயத்தில் ஏதோ கோளாறு உள்ளது, நீ காய்ச்சல் சரியா போன உடன் வா, உன்னை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்" என்றார். அவ்வளவுதான், வீட்டிற்கு போய் ஒரே அழுகை, "ஐய்யோ, நான் சாகப்போகிறேன்" என ஒரே புலம்பல். பிறகு என் குடும்ப டாக்டர் வந்தவுடன் அவரிடம் சென்று பரிசொதித்தேன். அவர் அதெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் நன்றாக உள்ளது என்றார். நான் நம்பவில்லை. அதன் பிறகு, என் புடுங்கல் தாங்க முடியாத என் அப்பா, என்னை ஒரு ஸ்பெசலிஸ்டிடம் காண்பித்தார், அவர் முழுமையாக சோதித்து எல்லாம் நார்மல் என்று சொல்லியும் கூட, நான் நார்மல் ஆக ஒரு வருடம் பிடித்தது. ஏன், சாக பயம். இப்போ அந்த பயம் இல்லை. ஏனென்றால், நம்மால், நிச்சயம் மரணம் என்ற அந்த நிகழ்வை தவிர்க்க முடியாது, என்ற உண்மை தெரிந்ததால். இது நடந்து 26 வருடம் ஆகிவிட்டது.

எனக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, ஒரு முறை நான் ஒரு நோய் தடுப்பு ஊசிபோட டாக்டரிடம் சென்றிருந்தேன். அப்போது ஒரு நண்பரை சந்தித்தேன். அவரிடம் டாக்டரிடம் வந்ததிற்கான காரணத்தை சொல்லிகொண்டிருந்தேன். அவர் கூறியது இன்னும் என் செவிகளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிரது.

" எல்லா வியாதிகளுக்கும் தடுப்பூசி போட்டுவிட்டாய். அப்போ நீ சாகவே மாட்டாயா?"

" இல்ல அந்த நோய்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாமே என்றுதான்"

" சரி, புது நோய் வந்தா என்ன செய்வ?'

" அதுக்கும் ஏதாவது ஊசி கண்டுபிடிப்பாங்க" - இது நான்.

அதற்குபின் என்னை அவர் கேட்ட கேள்விதான், என்னை ரொம்ப சிந்திக்க வைத்தது.

" எல்லா ஊசியையும் போட்டுட்டா, சாவு வராதா?, ரோட்ல போகும்போது ஆக்ஸிடண்ட் ஆனா, என்ன செய்வ?"

எவ்வளவு சத்தியமான உண்மைகள் பாருங்க. அவர் ஒன்றும் தடுப்பூசி போட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஊசிபோட்டாலும், சாவே நமக்கில்லையென்று நினைக்காதே? அது வரத்தான் செய்யும்.

நம்மில் எத்தனை பேர் சாவை வரவேற்போம். யாருமே இருக்கமாட்டார்கள். 90 வயது மனிதனை கேட்டால் கூட, சாவதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்.

ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல், நமக்கு மரணத்தை பற்றிய தெளிவு வரவேண்டும். அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு நாம் தெளிவு படுத்திக்கொண்டால், எந்த குழப்பங்களும் இல்லாமல் சந்தோசமாக வாழலாம்.

எனக்கு நன்றாக நினைவு உள்ளது. என் அப்பா மரண படுக்கையில் உள்ளார். ஆனால், வீட்டில் யாருக்கும் தெரியாது அவர் இன்னும் சில நாட்களில் சாகப்போகிறார், என்று. எனக்கு மட்டுமே அந்த உண்மை தெரியும். ஆனால், என்று சாகப்போகிறார் என்ற உண்மை ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். அதற்காக, என்னால், அங்கேயும், அப்பாக்கூட இருக்க முடியாத சூழ்நிலை. அந்த நேரம் பார்த்து எனக்கு பதவி உயர்வு. நான் என்ன செய்ய? அப்போதுதான் அந்த தெளிவு எனக்குள் உதித்தது. மரணம் என்பது எல்லோருக்கும் பொது. யாராலும் தடுக்க முடியாது. என் அப்பாவிற்கு மட்டும் அது நேரப்போவதில்லை. எல்லோருக்குமே நடக்க போகிறது. என் அப்பாவுக்கு நடக்கப்போவது எனக்கு முன்பே தெரிந்துவிட்டது. அதற்காக எல்லாமே போகப்போகிறது என அங்கே இருப்பதில் பலன் ஒன்றும் இல்லை. நாம் இருப்பதால் அவரை காப்பாற்ற முடியும் என்றால், எத்தனை வருடம் வேண்டுமானாலும் அங்கே இருக்கலாம். முடியாத பட்சத்தில் என்ன செய்வது. உலகமும் இயங்க வேண்டுமல்லவா? மனதைக் கல்லாக்கிகொண்டு அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, இனி அவர் இறந்த பிறகுதான் வரபோகிறோம் என்று நன்கு தெரிந்து, மலேசியா வந்த நாளை மறப்பது அவ்வளவு சுலபமா, என்ன?

ஆண்டவனோட திருவிளையாடல்ல மரணமும் ஒன்று. ஒரு குடும்பத்துல மனைவி, பிள்ளைகள்னு எல்லா இருப்பாங்க, ஆனா குடும்பத்தலைவன், கணவர் இறந்து போவார்.

இன்னொறு வீட்ல,அவருக்குன்னு யாருமே இருக்க மாட்டாங்க, அவர் நோய் நொடியில்லாம ஆரோக்கியமா இருப்பார்? ஏன் இப்படி, அதுதான் ஆண்டவனோட விளையாட்டு.

இப்போ எல்லாம், இந்த பிறவில செய்யிர தப்புக்கு இந்த பிறவியிலேயே தண்டனை கிடைக்குது. ஆண்டவன் அடுத்த பிறவி வரையில் காத்திருக்கரது இல்லை.

அதே போல இன்னொரு விஷயம். எப்படி சாகறோம் என்பது. இதுல ரெண்டு வகை உண்டு. அடுத்தவங்கள கஷ்டப்படுத்தி, தானும் கஷ்டப்பட்டு, இவன் எப்படா போவானு மத்தவங்கள அழ வச்சு சாகறது. இன்னொன்று, வலி இல்லாம, தூக்கத்துல சாகறது. எது உங்களுக்கு இஷ்டம்? இதையும் நாம முடிவு செய்யமுடியாது, ஆண்டவந்தான் முடிவு செய்யணும், ஆனா, அவன் முடிவை மாற்ற நம்மால் முடியும் . எப்படி? கீழ சொன்ன மாதிரி வாழ கத்துக்கங்க:

01. அதிகமா ஆசைப்படாம இருக்க கத்துக்கங்க.
02. அடுத்தவங்க பொருளை அபகரிக்க நினைக்காதீங்க.
03. நல்லது செய்ய முடியாட்டி பரவாயில்ல, கெடுதல் செய்ய நினைக்காதீங்க.
04. மனைவிய தவிர மற்ற பெண்களை தாயா, சகோதரியா பாருங்க.
05. தனக்கு தேவையானது போக கொஞ்சம் தருமம் செய்ய பழகுங்க.
06. எல்லோரையும் மதிக்க பழகுங்க.
07. இயற்கைய நேசிங்க, அழிக்காதீங்க.

நாம யாரையும் கஷ்டப்படுத்தாம சாகலாம். நான் யாரையும் சாகக்கூப்புடுல. சாவைபத்திய பயத்த போக்கறதுதான் இந்த கட்டுரையோட நோக்கம்.

Apr 9, 2009

தன்னம்பிக்கை இருந்தால் போதும்! எதையும் சாதிக்கலாம் வாங்க!!

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், எடுத்த காரியத்தில் முழு ஈடுபாடும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

இதற்கு என் வாழ்க்கையில் நடந்த உதாரணங்களையே சொல்ல போகிறேன். நாம் எந்த விஷயத்தையும், படிப்பினையும் தேடி எங்கும் போக வேண்டாம். எல்லாம் நம் வாழ்க்கையிலேயே, நம் அனுபவத்திலேயே கிடைக்கும்.

நான் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு சின்ன கிராமத்திலும், பின்பு எட்டாம் வகுப்பு வகுப்பு வரை அரசாங்க பள்ளிக்கூடத்திலும் தமிழ் மீடியத்திலும் படித்தேன். பின்பு என் தந்தையார் என்னை திருச்சி பிஷப்ஹீபர் தெப்பக்குளம் பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு சேர்த்துவிட்டார். ஒன்பதாவது வகுப்பு ஒரு பள்ளிக்கூடத்தில் சேருவது என்பது மிகவும் கடினம். திடீரன சேர்க்கமாட்டார்கள். அப்போது வாளாடியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் மூலம் எனக்கு இடம் கிடைத்தது.
ஆங்கில மீடியம்.

பள்ளி போன ஒரே வாரத்தில் அப்பாவிடம் சொன்னேன்,

"அப்பா, நான் லால்குடியிலேயே படிக்கிறேனே?''

"ஏண்டா" என்றார்.

ஏன் அப்படி சொன்னேன், என் வகுப்பு முழுவதும் கேம்பியன், வெஸ்ட்ரி பள்ளி மாணவர்கள். எல்லோரும் ஆங்கிலத்தை தவிர எதுவும் பேசுவதில்லை. எனக்கு ஒன்றுமே புரியாது. அழுகை அழுகையாக வரும். யாரும் என்னிடம் பேச மாட்டார்கள், "காதல் கொண்டேன்" படத்தில் தனுஷ் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருப்பாரில்லையா, அது போல் ஒரு மூலையில் உட்கார்ந்து இருப்பேன்.

அப்போது அப்பா கூறிய அந்த வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது,

" எல்லோரும் உன்ன திரும்பி பார்க்கணும்னா, உன் படிப்பால், உன் அறிவால், அவர்களின் கவனத்தை உன் பக்கம் திருப்பு.
என்னைக்குமே நாம மட்டம் அப்படினு நினைக்காதே, நம்மால எல்லாம் முடியும்னு நம்பு. முதல்ல நீ நம்பு, உன்னால முடியும்னு, அப்பதான் உன்னால் மற்றவர்களை நம்ப வைக்க முடியும்""

அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, புரியுதோ புரியலையோ மிக கவனமாக படிக்க ஆரம்பித்தேன். ஆண்டவன் எனக்கு ஆங்கில அறிவை அப்போது கொடுக்கவில்லை என்றாலும், நல்ல ஞாபக சக்தியை கொடுத்தான். முதல் மிட் டேர்ம் தேர்வு மார்க் வந்தது, 60 மாணவர்கள் உள்ள வகுப்பில் ஐந்தாவது ரேங்க். எல்லோரும் என்னை திரும்பி பார்க்க வைத்தேன்.

எதனால், இது சாத்தியமானது? என்னால் முடியும் என்ற நம்பிக்கையை என் அப்பா கொடுத்தது, அதை நான் நம்பி செயல்பட்டது.

இரண்டாவது உதாரணத்திற்கு வருகிறேன்.

என்னை யாரும் மட்டபடுத்த முயற்சித்தால், நான் பெரும்பாலும் அதை அனுமதிப்பதில்லை.

எனக்கு ஓரளவு பாடத்தெரியும். நாங்கள் ட்ரெயினில் போகும்போது பாடுவது வழக்கம். ஒரு நாள் நண்பன் ஒருவன் உன்னால் ட்ரெயினில் மட்டும்தான் பாட முடியும், வேறு எங்கும் பாட முடியாது எனக்கூறினான். அதையே ஒரு வைராக்கியமாக எடுத்துக்கொண்டு, அனைத்து பள்ளிகள் போட்டியில் பாடி ஆறுதல் பரிசு வாங்கியதையும், காலேஜ் போட்டியில் கலந்து கொண்டதையும் மறக்க முடியவில்லை. காலேஜில் எனக்கு பரிசு கிடைக்கவில்லை, ஆனால், அவன் பார்க்கும்முன்னே, அவன் முன்னே ஸ்டேஜில் பாடியது மன ஆறுதலை கொடுத்தது.

இன்னொறு நண்பன் கேட்டான், நீதான், பத்திரிக்கைக்கு எல்லாம் எழுதுகிறாயே உன்னால், நமது காலேஜ் கதைப்போட்டியில் கலந்துகொண்டு பரிசு வாங்க முடியுமா? உடனே ஒத்துக்கொண்டேன். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னால்தான் தலைப்பு கொடுப்பார்கள். நாற்பது நிமிடம் கொடுத்தார்கள். ஒரு வெறி. எழுதினேன். இரண்டாவது பரிசு கிடைத்தது.

நான் வேலைக்கு சேர்ந்த முதல் வாரம் அப்பாவிற்கு போன் பண்ணினேன், அப்பா, எனக்கு வேலை பிடிக்கவில்லை. நான் வந்துரட்டுமா?

"ஏற்கனவே ரெண்டு வேலையை இப்படித்தான் விட்டாய், ஏன்" என்றார்.

" இல்லப்பா, இங்க எல்லோரும் 40-45 வயசு ஆளா இருக்காங்க, ரொம்ப அனுபவசாலியா இருக்காங்க, நான் சொல்றதெல்லாம் கேட்கமாட்டாங்க, நான் தான் ரொம்ப சின்ன வயசு, அதனால புடிக்கல"

அப்பா சொன்னார்," அடுத்த கம்பனியிலும் அது மாதிரி இருந்தா என்ன பண்ணுவ? அதையும் வேணானு விடுவியா? நல்லா வேலைய கத்துக்க, இந்த பையன் கிட்டயும் ஏதோ விஷ்யமிருக்குனு எல்லோருக்கும் புரியவை, அது வரை வீட்டு பக்கம் வராத"

தினமும் அழுதேன், அப்பா சொன்னதை நினைத்து பார்த்தேன். என் MD எனக்கு முழு சுதந்திரம் குடுத்தார். எண்ணி மூன்றே மாதம், என்னை எல்லோருக்கும் புரிய வைத்தேன்.ஜெயித்தேன்.

நான் உடல் நல விஷயத்தில் நிறைய ஆர்வம் உள்ளவன். நான் அதிகாலை எழுந்து வாக்கிங் செல்பவன், பிறகு யோகா செய்பவன்.

ஒரு நண்பர் கேட்டார்,

"அதிகாலையில ராக்கோழிபோல இதெல்லாம் தேவையா?"
இன்னொறுத்தர்,

" நீங்க போறதுக்கு பேர்லாம் வாக்கிங்கா"?

" ஜிம் போறேங்கரே, உடம்ப பார்த்தா அப்படி தெரியலையே?"

சில பேருக்கு பதில் சொல்வேன், சில பேருக்கு பதில் சொல்ல மாட்டேன். கேள்வி கேட்கும் பாதி பேர் நம்மால் முடியவில்லையே என பொறாமையால் கேட்பார்கள், நாம் மனம் தளரக்கூடாது? எடுத்த காரியத்தில் கண்ணாக செயல்பட வேண்டும். கேள்விகேட்கும் நபர்களில் முக்கால்வாசிப்பேர் மாததிற்கு இரண்டு முறை ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள். நான் அப்படியில்லை, தலை வலி, காச்சலுக்குகூட ஆஸ்பத்திரிக்கு செல்வதில்லை.

நான் சொல்ல நினைத்து அவர்களுக்கு சொல்லாமல் இருப்பது இதான்,

" ஒன்னுமே செய்யாம, ஏழு மணி வரை தூங்கறதுக்கு, தப்போ, சரியோ ஏதவது ஒண்ணு செய்யரது எவ்வளவோ மேல்"

உலகத்துல சில பேர்தான், எங்க MD மாதிரி நாம முன்னேர உற்சாகப்படுத்துவாங்க, பல பேர் நம்ம ரொம்ப கேவலப்படுத்துரா மாதிரிதான் நடந்துப்பாங்க. நாம அதுக்கெல்லாம் கவலை படக்கூடாது. நாம, நாம எடுத்த முயற்சில முழு ஈடுபாடோட இருந்தோம்னா எல்லாமே வெற்றிதான். நான் அப்படித்தான். யாராவது என்னால ஏதாவது செய்ய முடியாது அப்படினு சொன்னாங்கன்னா, உடனே அதை செஞ்சு பார்க்கனும்னு நினைப்பேன்.

நீ என்ன பெரிசா சாதிச்சிட்ட, இத சொல்ல வந்துட்டனு கேக்கலாம்? ஆனா நான் பெருசா எதுவும் சாதிக்கில, ஆனா ரொம்ப வாழ்க்கையோட கீழ் நிலையிலும் இல்ல, இத எழுதுர அளவுக்கு முன்ன்னேறி இருக்கேன்ல. அதுவே ஒரு சாதனைதானே.

என்னை கேலி செய்தவர்கள் எல்லாம்,எங்கே இருக்கிறார்கள்? தேடி பார்க்கிறேன், காணவில்லை. முன்னேறி இருந்தால்தானே முகவரி தெரிவதற்கு?

ஆனாலும், அவர்களுக்கெல்லாம் என் நன்றி. ஏனென்றால், அவர்களால் தானே என்னால் முன்னறேவும், இவ்வளவு அனுபவங்களியும் பெற முடிந்தது.

என் நண்பன் கேட்டான், இந்த மாதிரி ப்ளாக் எழுதரதால, என்னத்த சாதிக்க போற?

நான் என்ன சாதிக்கிறேன்கறது முக்கியமில்லை. நம்ம எழுத்து, அனுபவங்கள், யாராவது ஒருத்தருக்கு, பயன் பட்டுச்சுனா, அதுவே ஒரு சாதனைதானே?

Apr 8, 2009

மிக்ஸர்- 08.04.09 - உண்மை சொல்லுங்க!

எனக்கு நல்லா அந்த நாளை ஞாபகம் இருக்கு. அது 15.05.1992. அந்த நாள்தான் என் வாழ்வில் ஒளியேற்றிய நாள். நான் போஸ்ட் க்ரேஜிவேட் முடித்து, தேவையான ப்ரொபசனல் கோர்ஸ் படித்தும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்காத சமயம் அது. இரண்டு வேலைகளில் சில நாட்கள் மட்டுமே வேலை செய்துவிட்டு, உடனே வேலையை விட்டு நின்ற காலம் அது. அப்போதுதான் எனக்கு எங்கள் நிறுவனத்திடமிருந்து நேர்காணலுக்கான கடிதம் வந்தது. நானும், என் நண்பன் பசுபதியிம் ராணிப்பேட்டையை நோக்கிப் புறப்பட்டோம். காலையிலேயே கம்பனிக்கு சென்றுவிட்டோம். ராகு காலம் முடிந்து, கம்பெனியின் உள்ளே சென்றோம்.

முதலில் பெர்சனல் மேனேஜர் என்னை இண்டர்வியூ செய்தார். பிறகு அக்கவுண்ட்ஸ் மேனஜர். முடிந்தவுடன் எங்கள் MDயின் அறைக்கு கூட்டி சென்றார்கள். என் MDயை பற்றி நான் சொல்லியாக வேண்டும். அவர் நான் வணங்கும் தெய்வங்களுல் ஒருவர். ஒரு 40 நிமிட நேரம் நேர்காணல் செய்தார். நேர்காணல் முடிக்கும் தருவாயில் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு நான் பதில் சொன்ன உடனே, அவரின் காரியதரிசியை கூப்பிட்டார். அடுத்த அரை மணி நேரத்தில், என் கையில் வேலைக்கான கடிதம். நான் கேட்ட சம்பளத்தில். இதோ நான் கம்பனியில் சேர்ந்து 17 வருடம் முடியப்போகிறது. அதில் 12 வருடம் மலேசிய வாழ்க்கை அதே கம்பெனியில். எத்தனையோ பதவி,......இன்னும், இன்னும்.....

அவர் என்ன கேள்வி கேட்டார்?

"ஏம்பா, இவ்வளவு படிப்பு தகுதி வைச்சிருக்க, ஏன் உனக்கு ஒரு நல்ல கம்பெனியில வேலை கிடக்கல?"

" உண்மையான காரணம் சொல்லட்டா, சார்?"

" சொல்லுப்பா"

" எனக்கு இங்கிலீஸ் தெரியாது சார், அதனால குழு கலந்துரையாடல்கள்ள (Group Discussions) என்னால சரியா, கலந்துக்க முடியல சார்!"

அன்னைக்கு நான் வெட்கப்படாமல், அரை குறை ஆங்கிலத்தில் பேசாமல் சொன்ன உண்மை, என்னை இன்னும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.

-------------------------------------------------------------------------------------------------

மூன்று நாட்களுக்கு முன் ஒரு நாள் என் மனைவி அலுவலகத்திற்கு தொலைபேசினாள்.

"என்ன என்றேன்?".

"ஏங்க இன்னைக்கு ஸ்கூல் வேன்ல தம்பிக்கு (என் பையனுக்கு) இடம் இல்லைங்க. ட்ரைவர் சீட்டுக்கு பின்னால உட்கார்ந்து போனாங்க, லக்கேஜ் வைக்கிற இடத்துல, ஆனா, பாப்பாக்கு இடம் இருந்துச்சுங்க, ஸ்கூல்ல பேசரிங்களா?"

"சரிம்மா, பேசரேன்"

உடனே, ப்ரின்ஸிபாலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன், விஷயத்தை சொல்லி, வேறு ஏற்பாடு செய்யுங்கள் என்று.

அடுத்த நாளும், அதே போல் பையனுக்கு இடம் இல்லை என்று மனைவி கூறினாள். இந்த முறை கொஞ்சம் கோபமாக ப்ரின்ஸிபாலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். பின்பு மறந்துவிட்டேன்.

அடுத்த நாள், காலை மனைவியிடமிருந்து ஒரு போன்.

" ஏங்க, இன்னைக்கு தம்பிக்கு இடம் இருந்துச்சுங்க, நடு சீட் காலியா இருந்துச்சுங்க"

" அப்படியா, சந்தோசம்"

" ஆனா, தம்பி கிளாஸ்(LKG) இன்னொறு பையன் ட்ரைவர் சீட்டுக்கு பின்னால உட்கார்ந்து போனாங்க"

கேட்டவுடன், மனசு வலித்தது. அந்த பையனும் என் பையன் வயதுதானே?????????

-------------------------------------------------------------------------------------------------

கடந்த டிசம்பரில், அலுவலக வேலை காரணமாக கோலாலம்பூர் இஸ்தானா ஹோட்டலில் ஒரு மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது காலை உணவு அருந்தும்போதுதான் கவனித்தேன், எனக்கு அடுத்த டேபிளில், நடிகர் சர்த்குமார், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர். ஜக்குபாய் சூட்டிங்கிற்காக வந்துள்ளார்கள் என பின்பு அறிந்தேன். எனக்கு சரத் ரொம்ப பிடிக்கும் அவரின் அட்டகாசமான உடம்பிற்காக. அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்திகொண்டு பேச ஆரம்பித்தேன்.

ஒரு பத்து நிமிசம் பேசியிருப்பேன். நன்றாக பேசினார். சிறிது நேரம் கழித்துதான் நானே என்னை உணர்ந்தேன்.

நான் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தேன். நாம்தான் தமிழர்களை பார்த்தால் கூட அரை குறை ஆங்கிலத்தில் பேசுவோமே? (நாம் என்று சொன்னது, என்னை மட்டுமே)

ஆனால், சரத் அருமையான தமிழில் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் உரையாடியது என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது.

நான் பின்பு அசடு வழிந்தேன் யாருக்கும் தெரியாமல்.

-------------------------------------------------------------------------------------------------

ஜோக் 1

காசியிலிருந்து வந்த ஒருவரை பார்த்து அவர் நண்பர் கேட்டார்.

" என்ன சார், இப்போதான் வருங்களா, காசிலேந்து? "

" ஆமாம்"

" எங்க போகும்போது உங்க மனைவியை கூட்டி போனீங்க, இப்போ நீங்க மட்டும் வருங்க?"

" காசிக்கு போய்ட்டு வந்தா, எதையாவது, விட்டுட்டு வரணுமாமே"

-------------------------------------------------------------------------------------------------

ஜோக் 2

என் நண்பன் ஒருவன் R & D டிபார்ட்மெண்டில் வேலை செய்கிறான். இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.

என்னடா, எப்போ பார்த்தாலும் ஒரே பிஸியாக இருக்க? என்று கேட்டால், அவன் சொல்லும் பதில்,

"R & D டிபார்ட்மெண்ட்னா சும்மாவா, நாங்க ஏதாவது, கண்டுபுடிச்சிட்டே இருப்போம். உங்க அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் மாதிரியா? எப்பவும் ஒரே வேலைய செஞ்சுக்கிட்டு? "

எங்களுக்கு கோபம் கோபமாய் வரும். ஒரு முறை அவனை வம்பிழுப்பதற்க்காக, எல்லோரிடம் சொல்லிவிட்டு, போனில் கூப்பிடேன்,

" என்னடா?" என்றான்.

" ஏய் நீதான், தினமும் ஏதாவது கண்டுபிடிக்கறீயாமே, நம்ம ஸ்ரீதரோட ஸ்டேப்ளர் பின் காணோமாம், கொஞ்சம் கண்டுபிடிச்சு தர முடியுமா?' என்றேன். டிப்பார்ட்மெண்ட் முழுவதும் ஒரே சிரிப்பு.

அதன் பிறகு அவன் அவ்வளவாக, அவன் டிப்பார்ட்மெண்ட் பற்றி பெருமை பேசுவதில்லை.
-------------------------------------------------------------------------------------------------

ஜோக் 3

அனைத்திந்திய நாடாளுவோர் கட்சி தலைவர் கார்த்திக் சொன்னது:

" இந்த தேர்தல்ல ஆட்சிய முடிவு செய்யரதுல்ல, நாங்க ஒரு தவிர்க்க முடியாத சக்தியா இருப்போம்"

-------------------------------------------------------------------------------------------------

எது சந்தோசம்?.

என் நண்பன் ஒருவன், அவ்வளவு சரியாக படிக்கமாட்டான். எல்லா நல்ல பழக்கங்களும் அவனுக்கு உண்டு. நல்ல பழக்கம் என்றால், நீங்கள் நினைக்கும் நல்ல பழக்கங்கள் என்றால், அதற்கு நான் பொறுப்பல்ல. அவனுக்கு எப்போதும் குடி, சிகரட், பெண் சகவாசம். பெண்களை தேடி அவன் போக வேண்டிய அவசியமேயில்லை. எல்லாம் அவனை தேடி வருவார்கள். அவன் அனுபவிக்காத பெண்களே இல்லை எனலாம். நல்ல மனைவி அவனுக்கு அமைந்தார்கள். ஆனாலும், அவன் திருந்தவில்லை. அவன் மனைவியாலும் அவனை திருத்த முடியவில்லை. பிஸினெஸ் வேறு ரொம்ப நன்றாக அமைந்தது. பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது. எதை தொட்டாலும் பணம். நினைத்தபடி நல்ல குழந்தைகள் வேறு. ஆனாலும், அவனால் பெண்கள் சகவாசத்தை அவனால் விட முடியவில்லை. அவன் விட்டாலும், பெண்கள் அவனை விடுவதில்லை. ஆனால், ஒரே பெண் இல்லை. வேறு வெறு பெண்கள். அவன் விபச்சாரியை தேடி போவதில்லை. நான் பல முறை அவனை கண்டித்திருக்கிறேன். ஆனால், அவன் திருந்தவில்லை.

அவன் எப்போதும் என்னிடம் சொல்வது இதுதான்;

"உனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, அதனால் அப்படி பேசுகிறாய். சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லோரும் நல்லவர்களே. உனக்கு வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க தெரியவில்லை"

இது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

இன்னொறு நண்பன், அவன் எப்போதும் விபச்சாரியிடம்தான் செல்வான். என்னடா இப்படி அலைகிறாய்? என்றால், வாழ்க்கையினா, அனுபவிக்கனும் மாப்பிள்ளை? எப்பவும் சந்தோசமாக இருக்கனும் மாப்பிள்ளை என்பான். இவனும் அதிகமாக படிக்கவில்லை. இவனும் நன்றாகவே உள்ளான்.

இன்னொறு நண்பன், அவன் நல்லவன்தான். ஆனால், சில சமயங்களில் அவன் பேசுவதை நம்மால், சகித்துக்கொள்ள முடியாது. அவனுக்கு திருமணம் ஆகியது. 15 வருடமாகிறது. ஆனால், இன்னும் குழந்தைகள் இல்லை. இவன் அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசுவெதென்றால், அவனுக்கு கொள்ளை இன்பம். அதுதான் சந்தோசம் என நினைப்பவன்.

என்னுடைய அடுத்த நண்பனை பார்ப்போம். மிக நன்றாக படிப்பான். ஒரு கெட்ட பழக்கம் இல்லை. இவனை பற்றி என்
மிக்ஸர். பகுதியில் ஏற்கனவே குறிப்ப்ட்டுள்ளேன். இப்போது, மனைவியை இழந்து, வேலை போய் கஷ்டப்பட்டுகொண்டு இருக்கிறான். நல்ல இறை நம்பிக்கை உள்ளவன். இவன் படிப்பு மட்டுமே சந்தோசம் என நினைப்பவன், என்னைப்போல.

இன்னொறுவன் நன்றாக சாப்பிடுவதை இன்பம் என்று நினைப்பவன், இன்னொறுவன் சொத்து, சொத்து என அலைபவன், இன்னொறுவன் புகழ், புகழ் என அலைபவன்.

இதிலிருந்து என்ன தெரிகிறது. சந்தோசம் என்பதற்கு ஒரு சரியான அர்த்தம் கிடையாது. ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. நாமே தீய விஷ்யங்களை சந்தோசம் என நினைத்து நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம் என்பதே உண்மை.

முதல் நண்பன் பெண்களிடம்போய் அவன் மட்டுமே சந்தோசம் அனுபவிக்கிறான். அவன் மனைவி வாழ்நாள் முழுவதும் அவனை நினைத்து உருகியே செத்து செத்து போகிறாள். அடுத்தவர்களை அழ விட்டு வாழ்வதா வாழ்க்கை.

அடுத்த நண்பன் விபச்சாரியிடம் சென்று என்றாவது ஒரு நாள் நோய்வாய் பட போகிறான், பிறகு அப்பாவியான மனைவிக்கும் அந்த நோயை பரப்ப போகிறான். கடைசியில் நான் திருந்திவிட்டேன் என சொல்ல போகிறான். கடைசியில் எல்லோப் போய், மானம் மரியாதை போய் திருந்தி என்ன பண்ண?

அடுத்த நண்பன் புத்தகம் படித்த அளவு வாழ்க்கையை படிக்காதவன். அதனால், கோபப்பட்டு ஒரு வார்த்தை சொல்லி, அதனால் மனைவி தற்கொலை பண்ணபோக, இப்போது வாழ்க்கையை இழந்து தவிக்கிறான்.
ஆண்டவன் ஏன் இப்படி எல்லோரையும் வித விதமாக படைத்தான்.

தசாவதாரம் படத்தில் கமல் சொல்வதுபோல, "ஆண்டவன் இருப்பது உண்மையானல், ஏன் இப்படி என்னைபோல் விஞ்ஞானியை படைக்கவேண்டும். பிறகு சுனாமி வந்து காப்பாற்ற வேண்டும். அதற்கு, எங்களுக்கு அந்த எண்ணமே வராமல் இருந்திருக்கலாம் இல்லையா?"

இதற்கு விடை தேடி அலைந்தபோது, ' அர்த்தமுள்ள இந்து மதத்தில்' கவிஞர் கண்ணதாசன் கூரியது நினைவுக்கு வந்தது. என்ன? கீழே படியுங்கள்;

"பிறக்கும்போது ஒவ்வொறு குழந்தையும் தெய்வமாக அவதரிக்கிறது. பிறகு ஏன் சில குழந்தைகள் திருடர்களாகவும், சில குழந்தைகள் அறிஞர்களாகவும் வளர்கின்றன.

இறைவன் உலகத்தில் உணர்ச்சிக்களத்தை உருவாக்க விரும்புகிறான், உலகத்தை இயக்க விரும்புகிறான்.

எல்லாக் குழந்தைகளும் பிறந்தபோது இருந்தது போலவே வளரும்போதும் இருந்துவிட்டால், உலக வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

மாறுபட்ட உணர்ச்சி இல்லை என்றால், மோதல்கள் இல்லாமற் போய்விடும்.
மோதல்கள் இல்லையென்றால், உண்மை என்ற ஒன்று அறியப்படாமற் போய்விடும்"

ஆனால், என்னை பொறுத்தவரை சந்தொசம் என்றால் என்ன?

நாலு பேருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெட்டது செய்யாமல் இருப்பது, இருப்பதை வைத்து சந்தோசப்படுவது.

மொத்ததுல இதாங்க:

படுத்தா உடனே தூக்கம் வரனும், 10 வருசம் வாழ்ந்தாலும் நோய் நொடி இல்லாம வாழணும்.

அடுத்தவங்கள கஷ்டப்படுத்தாம சாகனும்.

Apr 7, 2009

சமையல் பொருட்கள், காய்கறிகளின் ஆங்கில பெயர்கள்.


சமீபத்தில் ஒரு பதிவர் சில காய்கறிகளின் ஆங்கில பெயர் கேட்டிருந்தார். அவருக்கும், மற்றவர்களுக்கும் பயன் படட்டுமே என நான் பதிக்கிறேன்.

தமிழ் ENGLISH
1 பாதாம் பருப்பு ALMOND
2 பெரும் சீரகம் ANISE SEEDS
3 கொட்டை பாக்கு AREACANUT
4 அவல் அரிசி BEATEN RICE
5 கடலை பருப்பு BENGAL GRAM DAL
6 கடலை மாவு BENGAL GRAM FLOUR
7 பாக்கு BETEL NUT
8 உளுத்தம் பருப்பு BLACK GRAM DAL
9 உளுத்தம் மாவு BLACK GRAM FLOUR
10 புழுங்கல் அரிசி BOILED RICE
11 பொறிக்கடலை BOILED BENGAL GRAM DAL
12 மொச்சை பருப்பு BROKEN BEANS
13 வெண்ணெய் BUTTER
14 மோர் BUTTER MILK
15 சூடம் CHAMPHOR
16 ஏலக்காய் CARDAMOM
17 முந்திரி பருப்பு CASHEWNUTS
18 விளக்கெண்ணெய் CASTOR OIL
19 லவங்கபட்டை CINNAMON
20 கிராம்பு CLOVES
21 நாட்டு சக்கரை COUNTRY SUGAR
22 கொத்தமல்லி விதை CORIANDER SEEDS
23 தயிர் CURD
24 சுக்கு DRY GINGER
25 வெந்தயம் FENUGREEK SEEDS
26 பூண்டு GARLIC
27 நெய் GHEE
28 நல்லெண்ணெய் GINGELLY OIL
29 எள் GINGELLY SEEDS
30 இஞ்சி GINGER
31 பாசி பருப்பு GREEN GRAM DAL
32 வேர்கடலை GROUND NUT
33 கடலை எண்ணெய் GROUND NUT OIL
34 ஊது பத்தி INCENSE STICKS
35 வெல்லம் JAGGERY
36 மண்ணெண்னை KEROSENE
37 காராமணி LENTIL BEANS
38 பால் MILK
39 கடுகு MUSTARD
40 வேப்பம் பூ NEEM FLOWER
41 ஜாதிக்காய் NUTMEG
42 நெல் PADDY
43 புழுங்கல் அரிசி PAR BOILED RICE
44 மிளகு PEPPER
45 கசகசா POPPY SEEDS
46 திராட்சை RAISINS
47 மிளகாய் வத்தல் RED CHILLIES
48 துவரம் பருப்பு RED GRAM DAL
49 அரிசி RICE
50 அரிசி மாவு RICE FLOUR
51 குங்குமப்பூ SAFRON
52 ஜவ்வரிசி SAGO
53 உப்பு SALT
54 சேமியா SEMOLINA
55 சக்கரை SUGAR
56 கல்கண்டு SUGAR CANDY
57 புளி TAMARIND
58 ஓமம் THYME SEEDS
59 துவரம் பருப்பு THOOR DAL
60 மஞ்சள் TURMERIC
61 மஞ்சள் பொடி TURMERIC POWDER
62 சேமியா VERMICELLI
63 கோதுமை WHEAT
64 கோதுமை மாவு WHEAT FLOUR
65 பூசணிக்காய் ASH GOURD
66 கீரைத்தண்டு AMARANTH STEM
67 வாழை பழம் BANANA
68 வெற்றிலை BETEL LEAVES
69 இலந்தை பழம் BHIR FRUIT
70 பாகற்காய் BITTER GOURD
71 சுரைக்காய் BOTTLE GOURD
72 கத்திரிக்காய் BRINJAL
73 முட்டைக்கோஸ் CABBAGE
74 கொத்தவரங்காய் CLUSTER BEANS
75 குடை மிளகாய் CAPSICUM
76 தேங்காய் COCONUT
77 சேப்பங் கிழங்கு COLOCASIA
78 கொப்பரை தேங்காய் COPRA
79 கொத்தமல்லி CORIANDER LEAVES
80 வெள்ளரிக்காய் CUCUMBER
81 கறிவேப்பிலை CURRY LEAVES
82 பேரிச்சம் பழம் DATES
83 முருங்கைக்காய் DRUMSTICKS
84 சேனைக்கிழங்கு ELEPHANT YAM
85 நெல்லிக்காய் GOOSEBERY
86 பச்சை மிளகாய் GREEN CHILIES
87 பச்சை பட்டாணி GREEN PEAS
88 வெண்டைக்காய் LADIES FINGER
89 எலும்பிச்சம் பழம் LIME FRUIT
90 மாம்பழம், மாங்காய் MANGO
91 மாவடு TENDER MANGO
92 வெங்காயம் ONION
93 வாழைக்காய் PLANTAIN
94 வாழைப்பூ PLANTAIN FLOWER
95 வாழைத்தண்டு PLANTAIN STEM
96 உருளைக்கிழங்கு POTATO
97 பரங்கிக்காய் PUMPKIN
98 முள்ளங்கி RADISH
99 பீர்க்கங்காய் RIBBED GOURD
100 அவரைக்காய் SABRE BEANS
101 புடலங்காய் SNAKE GOURD
102 சக்கரவள்ளி கிழங்கு SWEET POTATO
103 தக்காளி TOMATO
104 கருணைக்கிழங்கு YAM
105 மரவள்ளி கிழங்கு TAPIOCA

சிறுகதை - என்ன ஆச்சு???

அந்த அற்புதமான மாலை நேரத்தில் மிக சந்தோசமாக தன் ஆபிஸிலிருந்து பைக்கை கிளப்பினான் அருண். அடுத்தவாராம் தீபாவளி. ஒவ்வொன்றாக நினைத்துக்கொண்டே போனான். மனைவிக்கேட்ட தோடு வாங்கினான், பிள்ளைகளுக்கு துணிமணிகள், அப்பா அம்மாவுக்கு துணிகள் வாங்கிவிட்டான்.தலை வலித்தது. ஒரு காபி சாப்பிடலாம்போல இருந்தது. அப்படியே பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு சென்றான். காபி சாப்பிட்டான். ஸ்வீட் வாங்கினான் பிள்ளைகளுக்கு.

சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும். வண்டியை ஸ்டார்ட் பண்ணினான். மெயின் ரோட்டிற்கு வந்தான். வண்டியை கொஞ்சம் திருப்பினான். எதிரில் ஒரு லாரி.

அப்பா! ஒரு வழியாக எல்லாம் வாங்கியாகிவிட்டது. இந்த வருட தீபாவளி ஒரே கொண்டாட்டம்தான். ஆரம்பத்தில் எப்படியெல்லாம் கஷ்ட்டப்பட்டோம், நினைத்துப்பார்த்தான். சாதரண பள்ளியில் படித்தது, சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டது, ஒரு நல்ல துணி உடுத்த முடியாமல் போனது. அப்பா ஒரு கூலி தொழிலாளி. அவரால் என்ன முடியுமோ அதை செய்தார். மிகவும் கஷ்டப்பட்டு படித்து, நண்பர்கள் உதவியுடன் கல்லூரி சேர்ந்தது அனைத்தையும் நினத்தான். அந்த கஷ்டத்திலும் அப்பா அவனுக்கு அத்தை பெண்ணை கல்யாணம் பண்ணி வைத்தார். கஷ்டத்தில் அவளும் சேர்ந்துகொண்டதை நினைத்தான். அவளுக்கு ஒரு நல்ல துணிவாங்கிகொடுத்ததில்லை. எங்கும் கூட்டி போனதில்லை. பிறகு பிள்ளைகளும் சேர்ந்துகொண்டார்கள் கஷ்டத்தில். நம் வாழ்வு மட்டும் ஏன் இப்படி ஆனது. மிகவும் வருத்தத்துடன் வாழ்ந்ததை நினைத்து பார்த்தான்.

உடனே நினத்தான். நாம் ஏன் வருத்த பட வேண்டும். நமக்குதான் வேலை கிடைத்துவிட்டதே? எப்படியோ படித்து முடித்து நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விட்டதே. நமது திறமைக்கு கிடைத்த வேலை ஆயிற்றே. கை நிறைய சம்பளம். இனி ஏன் கஷ்டப்பட வேண்டும். அதான் இந்த தீபாவளி சந்தோசமாக கொண்டாட போகிறோமெ?

எல்லாருக்கும் எல்லாம் வாங்கிவிட்டோமே? ஊரிலிருந்து அத்தை, மாமா வேறு தீபாவளிக்கு வருவார்களே? அப்புறம் என்ன? ஒரே சந்தோசம்தானே? நாம் ஏன் பழையதே நினைக்க வேண்டும். சந்தோசமாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டே வந்தவன், அப்போதுதான் வீடு வந்துவிட்டதை உணர்ந்தான்.

வீட்டிற்கு நுழைய போனவன், அப்போதுதான் கவனித்தான். என்ன ஒரே கும்பல். தீபாவளி நாளைகழித்துதானே? என்ன அத்தை, மாமா எல்லாம் இன்னைக்கே வந்துட்டாங்க. வீட்டுல என்ன விசேசம்? அதுவும் எனக்கு தெரியாம?

ஆனா யார் முகத்துலயும் சந்தோசமே இல்லையே? என்ன ஆச்சு?
அத்தை ஏன் அழறாங்க? ஏன் என்னாச்சு?

உடனே மனைவிமேல் கோபம் வந்தது? அவதான் ஏதாவது திட்டியிருப்பா?
அவள கேப்போம். எத்தன தடவ சொல்லியிருக்கோம், சண்டபோடாதனு? கேக்கறதே இல்லை.

வீட்டில் நுழைந்தான். என்ன மனைவியும் சோகமா இருக்கா? என்ன அழுவுறா மாதிரி இருக்கே? நல்லா உத்து பார்த்தான். ஓஒ என மனைவி அழுதாள். என்ன ஆச்சு, ஏன் அழறா, கேக்கலாம் என்று பக்கத்தில் சென்றான். பேர் சொல்லி கூப்பிட்டான், அவள் திரும்ப வில்லை. என்ன ஆயிற்று அவளுக்கு?

பக்கத்தில் சென்றான். அது யாரு ஹால் நடுவுல? அது யாரு என்ன மாதிரி இருக்கே? ஏன் எல்லாம் அழறாங்க? எனக்கு ஏன் மாலை போட்டுருக்காங்க?
என்னாச்சு எனக்கு????

(ரெண்டாவது பாராவின் கடைசி வரியை படியுங்கள்)

வண்டியை கொஞ்சம் திருப்பினான். எதிரில் ஒரு லாரி.

Apr 5, 2009

மிக்ஸர் - 05.04.09 - எள்ளைக்கொட்டலாம், சொல்லைக்கொட்டகூடாது.

என் நண்பன் ஒருவன் மிக மிக நன்றாக படிப்பான். என்னைவிட ஒரு வயது சின்னவன். நான் என்ன படித்தேனோ அதையே அவனும் படித்தான். எல்லோரும் சொல்ல சொல்ல கேட்காமல் நான் +2 வில் காமர்ஸ் க்ரூப் எடுத்தேன். அவனும் அதையே எடுத்தான். நான் சேர்ந்த கல்லூரியிலேயே அவனும் எனக்கு ஜூனியராக பிகாம் சேர்ந்தான். நான் போஸ்ட் க்ரேஜுவேட் படித்த அதே கல்லூரியில் அவனும் படித்தான். நான் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்த போது அவனும் ஆரம்பித்தான். சிகரட் பிடிக்க மாட்டான், தண்ணி அடிக்கமாட்டான்.ஒரு கெட்ட பழக்கம் இல்லை அவனுக்கு. நானும் அவனும் பேங்க் எக்சாம் எழுதினோம், எனக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால், அவனுக்கு இரண்டு பேங்கில் வேலை கிடைத்தது. நான் பிறகு மற்ற படிப்பெல்லாம் படித்து நல்ல நிலையில் உள்ளேன். பிறகு நான் மலேசியா வந்து வேலையில் உள்ளேன். அவனுக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. என்னால் செல்ல முடியவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்னால் நான் ஊருக்கு சென்றிருந்தேன். அப்பொழுது எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழா நடந்தது. அதற்கு நானும், என் 5 வயது பையனும் போயிருந்தோம். நல்ல கூட்டம். கூட்டத்தை விலக்கிகொண்டு சென்றபோது ஒரு சாமியார் என்னையே பார்த்துகொண்டிருந்தார். நானும் பார்த்தேன். அடையாளமே தெரியவில்லை.

அவர் என்னை பார்த்து என் பெயர் சொல்லி அழைத்து, " என்னடா, எப்படி இருக்க" என்றார்.

நான், "சாமி நீங்க"
அவர் உடனே, " என்னை அடையாளம் தெரியவில்லையா" நான்தான் என்று அவர் பெயரை சொன்னார்.

நான் ரொம்ப மனம் நொந்து, குழம்பிபோய், வீட்டிற்கு வந்தேன். இரவு முழுவதும் தூங்கவில்லை. பிறகு மற்ற நண்பர்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டது இதுதான். அவர் கல்யாணம் ஆகி நன்றாகத்தான் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஏதோ மனைவியிடம் வாக்குவாதம் வந்து அவர் கோபப்பட, மனைவிகோபப்பட, உடனே மனைவி இப்படி கோபப்படிடீங்கன்னா, நான் மண்ணென்ணையை ஊற்றி கொளுத்திகொள்வேன் என்று சொல்லபோக, அவர் உடனே கொளுத்திக்க போ என சொல்ல போக, அவர் மனைவி உடனே எண்ணையை ஊற்றி கொளுத்திகொண்டு கதற, இவர் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்க, மனைவி இறந்து போக, போலிஸ் கேஸ் ஆக, இவருக்கு பேங்க் வேலை போக, ஜெயிலுக்கு போக, இப்போது அவர்படும் வேதனையை என்னால் பார்க்க முடியவில்லை. எங்கே நடந்தது தவறு? தெரியவில்லை நன்றாக வாழ வேண்டியவ்ரின் வாழ்க்கை போனதற்கு என்ன காரணம்? என்னால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் ஜெயிலுக்கு போக காரணம் என்ன என்று விசாரிக்கையில், அவர்கள் சொன்ன ஒரே காரணம், நண்பர் அவர் மனைவியிடம் சொன்ன ஒரே ஒரு பதில்
" கொளுத்திக்க போ"

எள்ளை கொட்டினால் அள்ளலாம், நெல்ல கொட்டினா அள்ளலாம், சொல்லக் கொட்டக்கூடாது என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் என்னால் சொல்லமுடியவில்லை.
-------------------------------------------------------------------------------------------------

எனக்கு இன்னொறு நண்பன். சாமி இல்லை என்று சொல்பவன். எப்போதும் சாமியை பற்றியே கேவலமாக பேசுபவன். ஒரு முறை நாங்கள் கோலாலம்பூரிலிருந்து மலேசியன் ஏர்லைன் விமானத்தில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தோம். விமானம் கிளம்பி சுமார் ஒரு மணி நேரமிருக்கும். சீராக சென்று கொண்டிருந்த விமானம் திடீரேன ஆட ஆரம்பித்தது. எல்லோரும் என்ன ஏது என நினைப்பதற்குள், விமானம் ஏர் பாக்கெட் காரணமாக சுமார் 5000 அடி கீழே விழுந்தது. விமானம் முழுவதும் ஒரே பயணிகள் சத்தம். நான் ஏழுமலையானை வேண்டிக்கொண்டு எதேச்சையாக என் நண்பனை பார்த்தேன், அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகள்:

" முருகா என்னை எப்படியாவது காப்பாற்று"

உடனே அவனை பார்த்தேன். அவனும் என்னை பார்த்தான். நான் ஒன்றும் கேட்கவில்லை. கேட்க தோன்றவில்லை. அவன் இப்போது நாள் தவறாமல் கோயில் செல்வதாக கேள்வி.
-------------------------------------------------------------------------------------------------

நான் காலேஜ் படித்தபோது நடந்த சம்பவம். நானும் என் நண்பர்களும் அன்று ட்ரையின் லேட் என்பதால், பஸ்ஸில் லால்குடியிலிருந்து, திருச்சிக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தோம். கண்டெக்டர் எல்லோரிடம் டிக்கட் கொடுத்துக்கொண்டு வந்தார். நாங்களும் திருச்சி சத்திரம் பஸ்டாண்டுக்கு டிக்கெட் எடுத்தோம். திருச்சியில் முதல் மூன்று நிறுத்தங்கள், அண்ணாசிலை (ஈ ஆர் ஹை ஸ்கூல்), சத்திரம் பஸ்டாண்டு, தில்லைநகர். பஸ் காவேரி பாலத்திலிருந்து அண்ணாசாலை நெறுங்கும்போது, கண்டெக்டர் அண்ணாசிலை இருக்கா என்றார்? என் நண்பன் ரவிக்குமார் என்பவன், உடனே இருக்கு என்றான். எங்களுக்கெல்லாம் ஒரே குழப்பம். நாங்கள் டிக்கெட் வாங்கியதோ சத்திரம் பஸ்ஸ்டாண்டுக்கு, இவன் என்னடா? அண்ணா சிலை என்கிறானே என்று? உடனே கண்டெக்டர் விசில் ஊத பஸ் நின்றது. அன்றைக்கு பார்த்து யாரும் இறங்கவில்லை.

கண்டெக்டர் என் நண்பனைபார்த்து, " தம்பி இறங்குங்க?"
உடனே என் நண்பன், "ஏன், நான் சத்திரம் பஸ்ஸ்டாண்டுக்கு போகனும்" என்றான்.

கண்டெக்டர், " ஏன் தம்பி, அண்ணாசாலை இருக்கானு கேட்டதற்கு, இருக்குனு சொன்ன?"
" ஆமா, இப்பையும் இருக்குனுதான் சொல்றேன்"
"அப்ப இறங்கு தம்பி"
" சார், நீங்க என்ன கேட்டிங்க, அண்ணாசிலை இருக்கா? என்றுதானே, இதோ பாருங்க, அண்ணாசிலை இருக்குனு, அவன் அண்ணாசாலையை காட்ட, பஸ்ஸே ஒரே சிரிப்புதன் போங்க.

அந்த அனுபவத்த எனக்கு இன்னைக்கு நினத்தாலும் சிரிப்பு வரும்.
-------------------------------------------------------------------------------------------------

நேற்று சன் டிவியின் அதிரடி சிங்கர் நிகழ்ச்சி பார்த்து முடித்தபின் எனக்கு ஒரே வருத்தம் (மலேசியாவில் ஒரு வாரம் லேட்டாக ஒளிபரப்புகிறார்கள் என நினைக்கிறேன்). அதிரடி சிங்கர் என தலைப்பு வைத்துவிட்டு, நல்ல பாடகர்களையெல்லாம் நீக்கியது சரி என்று பட வில்லை. அவர்கள் சொல்லும் காரணம், நல்ல ஆடி பெர்பாமென்ஸும் கொடுக்க வேண்டுமாம். நல்ல பாடகர்கள் சினிமாவுக்கு பாட போகும்போது, அவர்களுக்கு ஆட தெரிய வேண்டியது அவசியமா என்ன? என்னால், அவர்களின் முடிவுகளை ஒத்துக்கொள்ளமுடியவில்லை.
-------------------------------------------------------------------------------------------------

கோலங்கள் டிவி தொடரின் இம்சை தாங்க முடியலைங்க. பார்க்காம இருக்கலாமுனா, என் பிள்ளைகள் கார்ட்டூன் பார்த்து விட்டு அப்போதுதான், டிவியை பார்க்க விடுகிறார்கள்.

கோலங்கள் முடியும் தேதியை கரெக்டாக சொல்லும் முதல் வாசகருக்கு ஒரு நல்ல மலேசிய பரிசு தர தயாராக இருக்கிறேன். யாராவது திருச்செல்வத்துக்கிட்ட கேட்டு சொல்லுங்க.
-------------------------------------------------------------------------------------------------

Apr 2, 2009

காலாவதியான கேஸ் சிலிண்டரை கண்டுபிடிப்பது எப்படி?

காலாவதியான கேஸ் சிலிண்டர் உபயோகப்படுத்துவதற்கு பாதுகாப்பானது அல்ல. அது பல ஆக்ஸிடெண்ட்களுக்கு வழி வகுக்கும். அதனால், நாம் கேஸ் சிலிண்டரை வாங்கும்போது மிக கவனமாக சரி பார்த்து வாங்கவேண்டும்.


எப்படி சரிபார்ப்பது? இதோ அதற்கான சில வழிமுறைகள்:


சிலிண்டர் மேலே உள்ள மூன்று ப்ளேட் போன்ற ஒன்றில் காலாவதியாகும் நாள் ஆல்பா நம்பர்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். எப்படி என்றால் A or B or C or D அதனுடன் பின்னால் இரண்டு இலக்க எண்கள் வரும், உதாரணமாக, D06.


ஆல்பாபெட் நம்பர் ஆனது காலாண்டை குறிக்கும்:
1. A - மார்ச் (முதல் காலாண்டு)
2. B - ஜூன் (இரண்டாம் காலாண்டு)
3. C - செப்டம்பர் (மூன்றாம் காலாண்டு)
4. D - டிசம்பர் (நான்காம் காலாண்டு)


D- 06 - கடைசி இலக்கங்கள் வருடத்தை குறிக்கிறது. அதாவது மேலே உள்ள படத்தில் தோன்றும் D- 06 என்பது 2006 ஆம் ஆண்டு டிசம்பர் காலாண்டை குறிக்கிறது. ஒரு உதாரண்த்திற்கு மேலே உள்ள சிலிண்டரை இன்றைக்கு சிலிண்டர் ஏஜண்ட் கொடுத்தால், அதை நாம் வாங்அ கூடாது. அதனை உபயோகித்தால், கேஸ் லீக்காகி, மிகப்பெரிய ஆக்ஸிடண்ட்களுக்கு வழி வகுக்கும்.


இரண்டாவது உதாரணம் D- 13, இந்த சிலிண்டரை நாம் 2013 டிசம்பர் வரை பயன்படுத்தலாம்.
நிறைய பேருக்கு இது ஏற்கனேவே தெரிந்த விஷயமாக இருக்கலாம். நான் இங்கே பதிவதற்கு காரணம் இதுவரை தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே என்ற நல்ல எண்ணத்தில்.
Apr 1, 2009

மன இறுக்கம் ஏன்? கொஞ்சம் சிந்திப்போமா?

அமெரிக்காவில் ஒரு தமிழ்நாட்டு கம்ப்யூடடர் இன்ஜினியர் தன் குடும்பத்தை சேர்ந்த 5 பேரையும் சுட்டு கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டதாக நேற்று சன் டிவியில் செய்தி பார்த்தேன். பார்த்ததிலிருந்து என் மனமெல்லாம் ஒரே வேதனை. அவர் தன் மனைவியின் அண்ணனையும்,அவர்கள் குழந்தைகளையும், தன் மனைவியையும், குழந்தைகளையும் சுட்டு கொல்ல மனம் எப்படி வந்தது. என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை. அவருடைய மனவி ஆஸ்பத்திரியிலிருந்து வந்தால்தான் காரண்ம் தெரியும். என்னவேணாலும் காரண்ம் இருந்துவிட்டு போகட்டும். அந்த கொடூர எண்ணம் அந்த சமயத்தில் வந்ததற்கு காரணம் என்னவாக இருக்கமுடியும்.

ஒரு மனிதனின் மனது அந்த அளவிற்கு கொடூரமாக முடியுமா என்ன? கொலை பண்ண வேண்டும் என்று தோன்றிய அந்த ஒரு நிமிட நேரத்தை அவருக்குள் ஏற்படுத்தியது எது? அவருக்கு வந்த கோபத்திற்கு குழந்தைகளை கொல்வானேன்? இப்படி ஏகப்பட்ட "ஏன்"கள்.

நாம் எல்லோரும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்து ஓடி ஓடி நிம்மதியை தொலைக்கிறோம். நம்மில் எத்தனை பேர் குடும்பத்துடன் வெளியில், கோயிலுக்கோ, ஹோட்டலுக்கோ, ஒரு பிக்னிக்கோ அடிக்கடி செல்கிறோம்? எத்தனைபேர் நாம் தினம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் மனைவியிடம் பகிர்ந்து கொல்கிறோம். எத்தனை பேர் அடிக்கடி சிரிக்கிறோம்? எல்லோரும் ஒரு மன அழுத்ததுடனே வாழ்கிறோம். இதில் மட்டும் வேறுபாடே இல்லை. அவர் அவர் சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல், எல்லோருக்கும் ஒரு மன அழுத்தம்.

எனக்கு நன்றாக நினைவு உள்ளது. என் முதல் மாத சம்பளம் வெறும் 1000 ரூபாய். அதை அப்படியே அப்பாவிடம் கொடுத்துவிட்டு தினமும் 10 ரூபாய் வாங்கிக்கொண்டு அலுவலகம் சென்றது நன்றாக நினைவு உள்ளது. அப்பொழுது இருந்த சந்தோசம் இப்போது கைநிறைய, அதிகமாக சம்பளம் வாங்கும்போது இல்லையே ஏன்? அப்போது குடும்பத்து பொறுப்பு அப்பாவிடம் இருந்ததாலா? இல்லை. அப்படி இல்லை. அப்போது கவலையற்ற வாழ்வு. அப்போது எனக்காக மட்டும் வாழ்ந்தேன். இப்போது மனைவி, குழந்தைகளுக்காக வாழ்கிறேன்.அதில் என்ன இருக்கிறது? எல்லாருமே அப்படித்தானே என்கிறீர்களா? ஆமாம். ஆனால், நம்மில் எத்தனை பேர் இவ்வளவு சம்பாதித்தது போதும் என்று நினைக்கிறோம்? திரும்ப திரும்ப அந்த பணத்தை தானே நோக்கி ஓடுகிறோம்? அதானால்தானே நிம்மதியை, சிரிப்பை, சந்தோசத்தை தொலைக்கிறோம்.

எவ்வளவு வேண்டுமானலும் பணம் வரட்டும், போகட்டும் அதற்காக சந்தோசத்தை தொலைப்பானேன். மன இறுக்கத்துடன் ஏன் வாழவேண்டும். நாம் சந்தோசப்படுவதை விட, அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, அதில் சந்தோசப்படுங்கள். அதில் கிடைக்கும் சுகமே தனி. உதாரண்த்திற்கு சில:

தினமும் ஒரு தடவையாவது மனைவியின் சமையலை பாராட்டி பாருங்கள். அதற்கு அப்புறம் அவர்கள் எப்படி உங்களை கவனிப்பார்கள் என்று.

ஓடி வரும் குழந்தைகளை அன்போடு தூக்கி கொஞ்சி பாருங்கள். அந்த பிஞ்சு குழந்தையின் முகத்தில் ஏற்படும் சந்தோசத்தை பார்ப்பதை விட வேறு என்ன சந்தோசம் நமக்கு வேண்டும்.

இந்த சமயத்தில் நான் படித்த செய்தி ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

ஒருவர் ஒரு புது கார் வாங்கி வீட்டிற்கு வருகின்றார். காரை பார்க்கிங் இடத்தில் வைத்துவிட்டு, வீட்டின் உள்ளே செல்கிறார். அப்போது திறந்திருந்த ஜன்னல் வழியே பார்க்கிறார், அவரது 5 வயது பையன் அந்த காரில் ஏதோ கிறுக்குகின்றான். இவருக்கு உடனே கோபம். புது கார் ஆச்சே, ஏதோ கிறுக்குகின்றானே? கோபத்தில் புத்தி வேலை செய்யவில்லை. உடனே ஓடிச்சென்று, கையில் கிடைத்த ஏதோ ஒன்றால், குழந்தையை அடிக்கிறார். ஒரே ரத்தம் குழந்தையின் கையில். அதை பார்த்து அவர் மனைவி ஓடி வந்து, குழந்தைய தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறார். ஆஸ்பத்திரி இருப்பது வெகு தொலைவில். ஆஸ்பத்திரியில் சேர்த்தவுடன் டாக்டர் பரிசோதிதுவிட்டு, ஒரு ஆப்பரேசன் செய்து ஒரு விரலை எடுத்துவிடுகிறார்.

அடுத்த நாள், அவன் கண் முழித்து, அப்பாவை பார்த்து அவன் சொன்னான்," சாரிப்பா, இனிமே அது மாதிரி கிறுக்க மாட்டேன்".

அதை கேட்டு மனம் நொந்த அவன் உடனே வீடு நோக்கி போகிறான், காரை பார்க்க போகிறான், அப்படி என்ன அதில் எழுதியிருக்கிறான் என்று.

காரில் எழுதியிருந்த வாசகம்

" டாடி, ஐ லவ் யு வெரி மச்".

அதை படித்து அழுது புலம்புகிறான். எழுதியதை அழித்துவிடலாம், ஏன் புது காரே வரலாம், ஆனால், குழந்தையின் விரல் வருமா? அந்த ஒரு நிமிடம் அவனை யோசிக்காமல் கோபப்பட வைத்தது எது? கார், பணம், இத்யாதி, இத்யாதி.

எனக்கென்னமோ, அவனின் மனநிலையும், அந்த அமெரிக்கா இன்ஜினியரின் மனநிலையும் ஒன்றாகவே தோன்றுகிறது. வாழ்க்கையில் பணத்தைவிட, புகழைவிட, அந்தஸ்த்தை விட சந்தோசமாக அனுபவிக்க எவ்வளவோ உள்ளது. அதை எப்படி பெற வேண்டும்? வாழ்க்கையை, இந்த பிறவியை, இந்த உலகை ரசிக்க, அனுபவிக்க கற்றுக்கொள்ளவேண்டும். சந்தோசமாக இருக்க வேண்டும். கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும். தினமும், ஒரு 10 நிமிசம், ஏதாவது ஒரு தியானம் செய்யவேண்டும்.

தனி மனிதன் அமைதியாய், சந்தோசமாய் இருந்தால்தான், உலகமும் அமைதியாய் இருக்கும்.