Apr 5, 2009

மிக்ஸர் - 05.04.09 - எள்ளைக்கொட்டலாம், சொல்லைக்கொட்டகூடாது.

என் நண்பன் ஒருவன் மிக மிக நன்றாக படிப்பான். என்னைவிட ஒரு வயது சின்னவன். நான் என்ன படித்தேனோ அதையே அவனும் படித்தான். எல்லோரும் சொல்ல சொல்ல கேட்காமல் நான் +2 வில் காமர்ஸ் க்ரூப் எடுத்தேன். அவனும் அதையே எடுத்தான். நான் சேர்ந்த கல்லூரியிலேயே அவனும் எனக்கு ஜூனியராக பிகாம் சேர்ந்தான். நான் போஸ்ட் க்ரேஜுவேட் படித்த அதே கல்லூரியில் அவனும் படித்தான். நான் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்த போது அவனும் ஆரம்பித்தான். சிகரட் பிடிக்க மாட்டான், தண்ணி அடிக்கமாட்டான்.ஒரு கெட்ட பழக்கம் இல்லை அவனுக்கு. நானும் அவனும் பேங்க் எக்சாம் எழுதினோம், எனக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால், அவனுக்கு இரண்டு பேங்கில் வேலை கிடைத்தது. நான் பிறகு மற்ற படிப்பெல்லாம் படித்து நல்ல நிலையில் உள்ளேன். பிறகு நான் மலேசியா வந்து வேலையில் உள்ளேன். அவனுக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. என்னால் செல்ல முடியவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்னால் நான் ஊருக்கு சென்றிருந்தேன். அப்பொழுது எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழா நடந்தது. அதற்கு நானும், என் 5 வயது பையனும் போயிருந்தோம். நல்ல கூட்டம். கூட்டத்தை விலக்கிகொண்டு சென்றபோது ஒரு சாமியார் என்னையே பார்த்துகொண்டிருந்தார். நானும் பார்த்தேன். அடையாளமே தெரியவில்லை.

அவர் என்னை பார்த்து என் பெயர் சொல்லி அழைத்து, " என்னடா, எப்படி இருக்க" என்றார்.

நான், "சாமி நீங்க"
அவர் உடனே, " என்னை அடையாளம் தெரியவில்லையா" நான்தான் என்று அவர் பெயரை சொன்னார்.

நான் ரொம்ப மனம் நொந்து, குழம்பிபோய், வீட்டிற்கு வந்தேன். இரவு முழுவதும் தூங்கவில்லை. பிறகு மற்ற நண்பர்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டது இதுதான். அவர் கல்யாணம் ஆகி நன்றாகத்தான் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஏதோ மனைவியிடம் வாக்குவாதம் வந்து அவர் கோபப்பட, மனைவிகோபப்பட, உடனே மனைவி இப்படி கோபப்படிடீங்கன்னா, நான் மண்ணென்ணையை ஊற்றி கொளுத்திகொள்வேன் என்று சொல்லபோக, அவர் உடனே கொளுத்திக்க போ என சொல்ல போக, அவர் மனைவி உடனே எண்ணையை ஊற்றி கொளுத்திகொண்டு கதற, இவர் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்க, மனைவி இறந்து போக, போலிஸ் கேஸ் ஆக, இவருக்கு பேங்க் வேலை போக, ஜெயிலுக்கு போக, இப்போது அவர்படும் வேதனையை என்னால் பார்க்க முடியவில்லை. எங்கே நடந்தது தவறு? தெரியவில்லை நன்றாக வாழ வேண்டியவ்ரின் வாழ்க்கை போனதற்கு என்ன காரணம்? என்னால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் ஜெயிலுக்கு போக காரணம் என்ன என்று விசாரிக்கையில், அவர்கள் சொன்ன ஒரே காரணம், நண்பர் அவர் மனைவியிடம் சொன்ன ஒரே ஒரு பதில்
" கொளுத்திக்க போ"

எள்ளை கொட்டினால் அள்ளலாம், நெல்ல கொட்டினா அள்ளலாம், சொல்லக் கொட்டக்கூடாது என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் என்னால் சொல்லமுடியவில்லை.
-------------------------------------------------------------------------------------------------

எனக்கு இன்னொறு நண்பன். சாமி இல்லை என்று சொல்பவன். எப்போதும் சாமியை பற்றியே கேவலமாக பேசுபவன். ஒரு முறை நாங்கள் கோலாலம்பூரிலிருந்து மலேசியன் ஏர்லைன் விமானத்தில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தோம். விமானம் கிளம்பி சுமார் ஒரு மணி நேரமிருக்கும். சீராக சென்று கொண்டிருந்த விமானம் திடீரேன ஆட ஆரம்பித்தது. எல்லோரும் என்ன ஏது என நினைப்பதற்குள், விமானம் ஏர் பாக்கெட் காரணமாக சுமார் 5000 அடி கீழே விழுந்தது. விமானம் முழுவதும் ஒரே பயணிகள் சத்தம். நான் ஏழுமலையானை வேண்டிக்கொண்டு எதேச்சையாக என் நண்பனை பார்த்தேன், அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகள்:

" முருகா என்னை எப்படியாவது காப்பாற்று"

உடனே அவனை பார்த்தேன். அவனும் என்னை பார்த்தான். நான் ஒன்றும் கேட்கவில்லை. கேட்க தோன்றவில்லை. அவன் இப்போது நாள் தவறாமல் கோயில் செல்வதாக கேள்வி.
-------------------------------------------------------------------------------------------------

நான் காலேஜ் படித்தபோது நடந்த சம்பவம். நானும் என் நண்பர்களும் அன்று ட்ரையின் லேட் என்பதால், பஸ்ஸில் லால்குடியிலிருந்து, திருச்சிக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தோம். கண்டெக்டர் எல்லோரிடம் டிக்கட் கொடுத்துக்கொண்டு வந்தார். நாங்களும் திருச்சி சத்திரம் பஸ்டாண்டுக்கு டிக்கெட் எடுத்தோம். திருச்சியில் முதல் மூன்று நிறுத்தங்கள், அண்ணாசிலை (ஈ ஆர் ஹை ஸ்கூல்), சத்திரம் பஸ்டாண்டு, தில்லைநகர். பஸ் காவேரி பாலத்திலிருந்து அண்ணாசாலை நெறுங்கும்போது, கண்டெக்டர் அண்ணாசிலை இருக்கா என்றார்? என் நண்பன் ரவிக்குமார் என்பவன், உடனே இருக்கு என்றான். எங்களுக்கெல்லாம் ஒரே குழப்பம். நாங்கள் டிக்கெட் வாங்கியதோ சத்திரம் பஸ்ஸ்டாண்டுக்கு, இவன் என்னடா? அண்ணா சிலை என்கிறானே என்று? உடனே கண்டெக்டர் விசில் ஊத பஸ் நின்றது. அன்றைக்கு பார்த்து யாரும் இறங்கவில்லை.

கண்டெக்டர் என் நண்பனைபார்த்து, " தம்பி இறங்குங்க?"
உடனே என் நண்பன், "ஏன், நான் சத்திரம் பஸ்ஸ்டாண்டுக்கு போகனும்" என்றான்.

கண்டெக்டர், " ஏன் தம்பி, அண்ணாசாலை இருக்கானு கேட்டதற்கு, இருக்குனு சொன்ன?"
" ஆமா, இப்பையும் இருக்குனுதான் சொல்றேன்"
"அப்ப இறங்கு தம்பி"
" சார், நீங்க என்ன கேட்டிங்க, அண்ணாசிலை இருக்கா? என்றுதானே, இதோ பாருங்க, அண்ணாசிலை இருக்குனு, அவன் அண்ணாசாலையை காட்ட, பஸ்ஸே ஒரே சிரிப்புதன் போங்க.

அந்த அனுபவத்த எனக்கு இன்னைக்கு நினத்தாலும் சிரிப்பு வரும்.
-------------------------------------------------------------------------------------------------

நேற்று சன் டிவியின் அதிரடி சிங்கர் நிகழ்ச்சி பார்த்து முடித்தபின் எனக்கு ஒரே வருத்தம் (மலேசியாவில் ஒரு வாரம் லேட்டாக ஒளிபரப்புகிறார்கள் என நினைக்கிறேன்). அதிரடி சிங்கர் என தலைப்பு வைத்துவிட்டு, நல்ல பாடகர்களையெல்லாம் நீக்கியது சரி என்று பட வில்லை. அவர்கள் சொல்லும் காரணம், நல்ல ஆடி பெர்பாமென்ஸும் கொடுக்க வேண்டுமாம். நல்ல பாடகர்கள் சினிமாவுக்கு பாட போகும்போது, அவர்களுக்கு ஆட தெரிய வேண்டியது அவசியமா என்ன? என்னால், அவர்களின் முடிவுகளை ஒத்துக்கொள்ளமுடியவில்லை.
-------------------------------------------------------------------------------------------------

கோலங்கள் டிவி தொடரின் இம்சை தாங்க முடியலைங்க. பார்க்காம இருக்கலாமுனா, என் பிள்ளைகள் கார்ட்டூன் பார்த்து விட்டு அப்போதுதான், டிவியை பார்க்க விடுகிறார்கள்.

கோலங்கள் முடியும் தேதியை கரெக்டாக சொல்லும் முதல் வாசகருக்கு ஒரு நல்ல மலேசிய பரிசு தர தயாராக இருக்கிறேன். யாராவது திருச்செல்வத்துக்கிட்ட கேட்டு சொல்லுங்க.
-------------------------------------------------------------------------------------------------

3 comments:

கிரி said...

//உடனே அவனை பார்த்தேன். அவனும் என்னை பார்த்தான். நான் ஒன்றும் கேட்கவில்லை. கேட்க தோன்றவில்லை//

நான்கு பக்கமும் தொல்லைகள் வந்தால் நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான்..இது பதிவர் அனுராதா சொன்னது

//அவர்கள் சொல்லும் காரணம், நல்ல ஆடி பெர்பாமென்ஸும் கொடுக்க வேண்டுமாம்//

கிறுக்கு தனமாக இருக்கிறது

//கோலங்கள் முடியும் தேதியை கரெக்டாக சொல்லும் முதல் வாசகருக்கு ஒரு நல்ல மலேசிய பரிசு தர தயாராக இருக்கிறேன்//

இது குறித்து இப்போது தான் ஒரு புலம்பல் பதிவு போட்டேன் :-)))

உங்க மிக்ஸர் நல்லா இருக்கு

iniyavan said...

ரொம்ப நன்றி கிரி,

என்னுடைய பக்கம் வந்து வாசித்ததற்கு.

லோகு said...

//கோலங்கள் முடியும் தேதியை கரெக்டாக சொல்லும் முதல் வாசகருக்கு ஒரு நல்ல மலேசிய பரிசு தர தயாராக இருக்கிறேன்//

30.02. ????