Apr 27, 2009

மிக்ஸர் - 26.04.09 - தற்பெருமை வேண்டாமே!

சென்ற வாரம், கோலாலம்பூரிலிருந்து, திருச்சி வரும்போது ஒரு அனுபவம். பக்கத்து இருக்கைகளில் இருவர். ஒரே பேச்சு. உடைகளில் பணக்காரத்தனம். பேச்சும் அப்படியே. அதில் ஒருவர் ஒரே தற்பெருமை. நான் அப்படி இருந்தேன். இப்படி இருந்தேன். கார்லதான் போவேன், காஸ்டிலியான உடைகள் தான் அணிவேன், அப்படி, இப்படி என்று.

என்னால், தாங்க முடியாமல், எங்கே வேலை செய்கிறீர்கள்? என விசாரித்தேன்.

" உணவகத்தில் வேலை செய்தோம், சார்"

" இப்போ, எங்க போறீங்க"

" ஒரேடியாக, இந்தியா செல்கிறோம் சார்"

" ஏன் முதலாளி, சரியாக சம்பளம் தருவதில்லையா?"

" இல்ல சார், நல்ல சம்பளம் சார்"

எனக்கு ஒரே சந்தோசம். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பிறகு கேட்டேன்.

" மலேசியா வந்து எத்தனை வருடம் ஆகிறது"

" மூன்று வருடம் சார்"

" இது வரை மொத்தம் எவ்வளவு சேமித்திருப்பீர்கள்?"

ரொம்பவும் சந்தோசமாக சொன்னார்கள்,

" ரூபாய் 50,000 சேர்த்துள்ளோம், சார்"

அதற்கப்புறம், நடந்ததெல்லாம், எனக்கு எழுத பிடிக்க வில்லை. நான் அவர்களுக்கு, அறிவுரை சொன்னது, அவர்கள் என்னுடைய தகுதி, சம்பளம் பற்றி கேட்டது, அதன்பிறகு, திருச்சி வரும்வரை எதுவும் பேசாமல் வந்தது, இதெல்லாம் இங்கு தேவையில்லாதது.

நான் கூட முதலில் வருத்தப்பட்டேன். அவர்களின் சந்தோச பேச்சுக்களை நான் கெடுத்துவிட்டேனோ, என்று.

ஆனா, ஒன்று மட்டும் புரியவில்லை. அப்படி என்ன, தற்பெருமையும், பந்தாவும் நம்மை ஆட்டி படைக்கின்றது.
உண்மை மனதுக்கு தெரிகிறது, ஆனால், பொய்யான ஒரு தோற்றத்தை சொல்ல மனம் எப்படி ஒப்புக்கொள்கிறது.

நான் முதலில் அவர்களை ஏதோ கம்பெனியின் பொது மேலாளர் என்றுதான் நினைத்தேன். உண்மை தெரிந்தவுடன், என்னால் அவர்களை நினைத்து பரிதாப பட மட்டுமே முடிந்தது.
------------------------------------------------------------------------------------------------

மகாபாரத்தில் படித்த ஒரு கதை திடீரேன நினைவுக்கு வந்தது.

தர்மரை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். பாண்டவர்களிலேயே மிகவும் நல்லவர். யாருக்கும் எந்த தீங்கும் மனதால் கூட நினைக்காதவர்.

அப்படிப்பட்ட தர்மர், ஒரு நாள், ஒரு ஜோசியரை பார்க்கிறார்.
பார்த்து முடித்தவுடன், ஜோசியக்காரர் சொல்கிறார்,

" தர்மரே, நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணம் இது. உங்களால், பல உயிர்கள் போக போகிறது. பல பேரின் சாவுக்கு நீங்கள் காரணமாக போகிறீர்கள். அதனால், எல்லோரிடமும் கொஞ்சம் அன்பாகவும், ஜாக்கிரதையாகவும் இருங்கள்"

தருமருக்கு ஒரே கவலை ஆகிவிட்டது.

" என்ன நம்மால் பல பேர் உயிர் இழக்க போகிறார்களா?, என்ன கொடுமை இது" என மனம் குழம்பி தவிக்கிறார்.

பிறகு ஒரு முடிவுக்கு வருகிறார்.

"யாரையும் மனம் நோகடிக்க கூடாது. மனம் புண்படும்படி பேசக்கூடாது".

அடுத்த சில நாட்களில், ஒரு திட்டத்துடன் சகுனி வருகிறார். தர்மரை சூதாட அழைக்கிறார். தர்மர் மறுத்திருக்கலாம்.

ஆனால், ஜோசியர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

" நாம் விளையாட மறுத்தால், சகுனியின் மனம் புண்படுமே, அதனால், ஏதேனும் ஏற்பட்டு, பல பேர்களின் உயிருக்கு நாம் காரணம் ஆகிவிடுவோமோ?" என நினைக்கிறார்.

பலன். சூதாடபோகிறார். அனைத்தையும் இழக்கிறார். போர் வருகிறது. பல பேர் இறக்கிறார்கள். ஜோசியக்காரன் சொன்னது நடந்துவிட்டது.

ஜோசியம் பார்த்து, ஜோசியத்தை ஜெயிக்க வைத்து விட்டார்.
என் கேள்வி இதுதான்.

அவர் ஜோசியம் பார்த்ததால்தானே, அப்படி நடந்தது. ஜோசியம் பார்க்காமல் இருந்திருந்தால், போரே வந்திருக்காதல்லவா?
-------------------------------------------------------------------------------------------

சமீபத்தில் ஆனந்த விகடனை படித்தபோது நான் ரசித்தது, மதன் கேள்வி பதிலைத்தான்.

ஒரு கேள்வி, " யாருமே சரியில்லையே, யாருக்கு ஓட்டு போடுவது?"

மதனின் பதில், " தேர்தல்ல மோசமானவர்களும், மிக மோசமானவர்களும்தான் போட்டியிடுகிறார்கள். மிக மோசமானவர்கள் வராமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு"

மிகவும் ரசித்தேன்.
------------------------------------------------------------------------------------------------

அலக்ஸாண்டரின் புரட்சிகரமான அணுகுமுறை நாடு முழுக்க பரவியது. பெர்டிகாஸின் காதுகளையும் அடைந்தது. பெர்டிகாஸ் அலக்ஸாண்டரின் நண்பர்.

" என்ன ஆயிற்று இந்த அலக்ஸாண்டருக்கு? ஏன் இப்படியெல்லாம் செய்கிறான்? உத்தரவுகளைப் பிறப்பித்து அவர்களை வழிநடத்தாமல் பொன்னும் பொருளும் கொடுத்து எதற்காக வீரர்களை குஷிபடுத்த வேண்டும்?

நிறைய கேள்விகள். மாசிடோனியாவுக்கு விரைந்தார் பெர்டிகாஸ்.

" வா வா, எப்படி இருக்கிறாய் பெர்டிகாஸ்?" - எனக்கேட்டார் அலக்ஸாண்டர்.

" என்னை விடு. நான் ஒரு விசயத்தை கேட்பதற்காக வந்தேன்."

" நிதானமாகக் கேட்கலாம் பெரிடிகாஸ்"

" ஆமாம், உன்னுடைய சொத்துக்களை எல்லாம் பிரித்து வீரர்களுக்கு வழங்குவதாகக் கேள்விப்பட்டேனே?"

" பாதி மெய். பாதி பொய்"

" புரியவில்லை"

" என்னுடைய சொத்துக்களை அல்ல. அரசாங்க சொத்துக்களைத் தான் வழங்குகிறேன். இதிலென்ன குழப்பம் உனக்கு?"

" குழப்பம் உனக்குத்தான். இருப்பதை எல்லாம் எல்லோருக்கும் வழங்கிவிட்டால் உனக்கென்று என்னதான் மிஞ்சும்?"

" என்னிடம் நிறைய மிஞ்சி இருக்கிறது. கவலைப்படாதே பெர்டிகாஸ்."

" என்ன இருக்கிறது சொல்?"

" நம்பிக்கை."

அதுதான் மாவீரன் அலக்ஸாண்டர்.

முழுவதுமாக படிக்க, ஆர். முத்துக்குமார் எழுதிய " மகா அலக்ஸாண்டர்" புத்தகம் படியுங்கள்.

எடுத்தால், முடிக்காமல் வைக்க மாட்டீர்கள்.
------------------------------------------------------------------------------------------------

9 comments:

Thamiz Priyan said...

நல்லா எழுதி இருக்கீங்க!

கடைக்குட்டி said...

மதன் கேள்வி..-->ரசித்தேன்...

Chandru said...

வணக்கம் உலகநாதன்...
இன்னைக்குதான் உங்களோட blog பார்த்தேன் (நன்றி - http://youthful.vikatan.com/) ... மற்ற blog- ல இருந்து உங்களோடது படிக்க ரொம்ப live-ஆ interest-ஆ இருந்துச்சு..
எந்த இணையதளத்திற்கும் போகாமல் ஒரே மூச்சில் எல்லாத்தையும் படிச்சுட்டேன்..
எல்லாமே நல்லா இருக்கு... நன்றி..

iniyavan said...

பின்னூட்டமிட்ட தமிழ் பிரியன், கடைக்குட்டி, சந்துரு ஆகியோருக்கு என் இதயம் கனிந்த நன்றி.

Cable சங்கர் said...

மிக்ஸர் நல்ல டேஸ்ட்..

Unknown said...

நல்ல பதிவு தொடருங்கள்.

iniyavan said...

இனிய நண்பர்கள் கேபிள் சங்கர், கிரிஷ்ணா பிரபுவுக்கு நன்றி.

iniyavan said...

அன்புள்ள கேபிள் சங்கர் அவர்களுக்கு,

நீங்கள் என்னை படிக்க வந்ததற்கு மிக்க நன்றி.

நான் நினைக்கவேயில்லை, நீங்கள் என் வலைத்தளத்தை படிப்பீர்கள் என்று.

சுந்தர் said...

mika rasikkumbadi eluthiyulleerkal. thodaravum.