May 11, 2009

மிக்ஸர் - 11.05.09 - பிறவியின் நோக்கம்

சமீபத்தில் என் அலுவலக நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் என்னிடம் எப்பொழுதும் ரொம்ப ப்ரீயாக பேசக்கூடியவர். அவர் ஒரு மலேசியர். பேச்சுவாக்கில் நான் கேட்டேன்:

" ஆபிஸ் விட்டு வீட்டுக்கு போனதும் என்ன பண்ணுவிங்க?"

" குளிச்சிட்டு சாப்பிடுவேன்"

" அப்பறம்?" - நான்

" கொஞ்ச நேரம் டிவி பார்ப்பேன்"

" அப்பறம்?"

" கொஞ்ச நேரம் குழந்தைகளோட விளையாடுவேன்"

" அப்பறம்?"

" தூங்க போய்டுவேன்"

" அப்பறம்?"

" காலைல எழுந்து ஆபிஸ் வருவேன்"

" அப்பறம்?"

" சாயந்தரம் வீட்டுக்கு போவேன் .... தூங்க போய்டுவேன்"

" எதுக்காக தூங்க போறீங்க"

" காலைல எழுந்துருக்கணும்ல"

" அப்போ காலைல எழுந்துருக்கரதுக்காக தான் தூங்கறீங்களா?"

" ஆபிஸ் போய்ட்டு வந்து என்ன பண்ணுவீங்க?"

" இரவு தூங்க போவேன்"

" ஆபிஸ் போறது, போய்ட்டு வந்து தூங்கரதுக்காக, இரவு தூங்கரது, காலைல எழுந்துருக்கரதுக்காக, அப்போ, உங்க வாழ்க்கையோட நோக்கம் என்ன? வெறும் தூங்கரதும், ஆபிஸ் போரதும்தானா? அதுக்காகவா பொறந்தீங்க?"

- இந்த உரையாடலுக்கு அப்புறம் என் கூட பேச மாட்டேன் என்கிறார்ங்க? என்ன பார்த்தாவே ஓட்டம் பிடிக்கிறாருங்க.

நான் என்ன அப்படி தப்பா கேட்டுட்டேன்?

உங்களுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்களேன்??? - பிறவியோட நோக்கம் என்ன?
-------------------------------------------------------------------------------------------------
என்னோட பழைய பாஸ் எஸ். ராஜகோபால் அடிக்கடி சொல்லுவார்,

" நாம யாரையும் ரொம்ப நோகடிக்க கூடாது. குறிப்பா நமக்கு கீழ வேலை செய்யரவங்கள!, ஏன்னா, எல்லாத்துக்கும் ஒரு நாள் நாம அனுபவிக்க வேண்டி வரும்"

இதுக்காக ஒரு சம்பவம் ஒன்றை சொல்லுவார்.

ஒரு மிலிட்டரி மேஜர். அவருக்கு கீழ ஒரு உதவியாளர், அவரே சமையல்காரரும் கூட. மேஜர் எப்பவும் சமையல்காரரை அவமானப்படுத்திகொண்டே இருப்பார். ரொம்ப கேவலமாக திட்டுவது. சாப்பாட்டை தூக்கி வீசுவது. கெட்ட வார்த்தைகளில் திட்டுவது என்று.

சமையல்காரர் அவ்வளவிற்கும் ரொம்ப பொறுமையாக இருப்பாராம்.

அப்படியே ஐந்து வருடம் போனதாம். மேஜர் ஓய்வுபெறும் நாளும் வந்ததாம்.

கடைசி நாள் அன்று மேஜர் சமையல்காரரை அழைத்து சொன்னாராம்,

" உன்ன நான் ரொம்ப கொடுமை படுத்திட்டேன். என்ன மன்னிச்சிடுப்பா?"

சமையல்காரர் சொன்னாராம், " சார், நீங்களும் என்ன மன்னிச்சிடுங்க?"

" நீ என்னப்பா செஞ்ச, நான் உன்ன மன்னிக்க?"

" நான் இவ்வளவு நாளா உங்களுக்கு கொடுத்த காபி, டீயில கொஞ்சம் சாணி தண்ணி கலந்துதான் கொடுத்தேன்"

மேஜர் அதிர்ச்சில அப்படியே நின்றாராம்.

இப்போ புரியுதா, நம்முடைய எல்லா செயலுக்குமே, ஒரு எதிர் செயல் உண்டுனு?
------------------------------------------------------------------------------------------- -----

சமீபத்தில் ஆபிஸ் வேலையாக சென்னை சென்றபோது, தி நகரில் உள்ள Quality in Sabari யில் தங்க நேர்ந்தது. மாலையில் சிறிது நேரம் வாக்கிங் சென்றபோது கண்ணில் பட்டது, " காமராஜர் நினைவு இல்லம்".

உள்ளே சென்றேன். பெருந்தலைவரை பற்றி ஏற்கனவே தெரிந்து இருந்தாலும், அங்கே படித்தவைகள், பார்த்த படங்கள் நெஞ்சை நெகிழ்விப்பதாய் இருந்தன. என்ன மாதிரி ஒரு தலைவர். நாட்டுக்காகவே வாழ்ந்த உன்னத தலைவர். படிக்காத மேதை. அவர்போல் இன்னொருவர் பிறக்க முடியுமா? மகாத்மா காந்திமேல் அதிக பற்றுக்கொண்டவர். காந்தியின் பிறந்தநாள் அன்று இறந்தவர்.

அவர் இறக்கும்போது அவர் பையில் இருந்தது, வெறும் ஒன்னரை ரூபாய் மட்டுமே?

பெருந்தலைவர் கூறியவற்றிலிருந்து சில உங்கள் பார்வைக்கு:

" சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்"

" நாட்டின் ஐக்கியத்தை பாதுக்காப்பதிலும், ஒற்றுமையோடு பாடுபடுவதிலும்தான் நமது முன்னேற்றம் உள்ளது"

" அப்பாவியான ஏழை மக்களை வசதி படைத்தவர்களும், கல்மனம் படைத்தவர்களும் கசக்கி பிழிந்துவிடாதபடி தடுக்க வேண்டியது அவசியம்"

" நாடு முன்னேற வறுமையும், அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது"

" பெண்கள் விழிப்பு அடைந்தால், குடும்பம் முன்னேறும்; கிராமங்கள் முன்னேறும்; தேசமே முன்னேறும்"

நேரம் கிடைத்தால் எல்லோரும் ஒரு முறை காமராஜர் நினைவு இல்லம் சென்று வாருங்கள்.
-------------------------------------------------------------------------------------------------

எங்கேயாவது போகணும்னு நினைச்சா உடனே போயிடுங்க. தயவு செய்து தள்ளிப் போடாதீங்க.

தள்ளிப்போட்டதால நான் பார்க்கமுடியாமல் போனது, சந்திக்க முடியாமல் போனது நிறைய.

உதாரணத்திற்கு, நான் இராணிப்பேட்டையில் வேலை பார்த்தபோது, எல்லோரும் சங்கராச்சாரியாரை (பெரியவர்) சந்திக்க கிளம்பினார்கள். எனக்கு அவரை பார்க்க அவ்வளவு விருப்பம். ஆனால், ஏதோ காரணத்தினால், நான் அடுத்த வாரம் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் போங்கள் என நண்பர்களை அனுப்பி வைத்தேன்.

அவர்களும் சென்று வந்தார்கள்.

அடுத்த வாரமும் வந்தது. ஆனால், பெரியவர்தான் இல்லை. அதற்குள் தெய்வத்திடம் சென்று விட்டார்.

அதனாலதான் சொல்லுறேன்,

எங்கேயாவது போகணும்னு நினைச்சா உடனே போய்டுங்க. தயவு செய்து தள்ளி போடாதீங்க.
-------------------------------------------------------------------------------------------------

சரி அப்பறம் பார்க்கலாமா?

1 comment:

இராகவன் நைஜிரியா said...

அருமையான மிகசர். அதிலும் பெருந்தலைவர் அவர்கள் பற்றி சொல்லியிருப்பது சூப்பர்.

கீப் இட் அப்.