May 22, 2009

மிக்ஸர்- 22.05.09 - நினைச்சா உடனே செஞ்சுடுங்க!

எங்கள் தெருவில் ஒரு வயதான மனிதர் இருந்தார். அவருக்கு சரியாக காது கேட்காது. அவரின் தொழில் அந்த தெருவிலுள்ளவர்களின் வீட்டில் உள்ள துவைத்த துணிகளை வாங்கி அயர்ன் பண்ணி தருவதுதான். நான் இந்தியா செல்லும்போதெல்லாம் அவரிடம் என் துணிகளை அயர்ன் செய்ய குடுப்பதுதான் வழக்கம். ஆனால் கொஞ்சம் அதிகமாக என்னிடம் மட்டும் பணம் கேட்பார். கொடுக்கவில்லையென்றால் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார். எவ்வளவு நேரமானாலும் அந்த இடத்திலேயே இருப்பார். காது வேற கேட்காது. அவர் கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் கோபப்படுவார்.

" ஏங்க இவ்வளவு பணம் கேட்கறீங்க" எனக் கேட்டால், அவர் சொல்லும் பதில்,

" ரொம்ப சம்பாதிக்கற இல்ல. கொஞ்சம் கொடுத்தா என்ன குறைஞ்சா போயிடுவ" என ரொம்ப உரிமையுடன் கேட்பார்.

கோபம் வருவதற்கு பதில் சில நேரம் அவர் மேல் பரிதாபமே மேலிடும். அவர் ஒன்றும் ரொம்ப அதிகமாக கேட்கமாட்டார். ஆனால், மற்றவர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது அதிகம். நம்மைப் பற்றித்தான் தெரியுமே? கஷ்டப்பட்டு உழைப்பவர்களுக்கு ஒரு நயா பைசா கொடுக்க மாட்டோம், மற்ற விசயங்களுக்கு நிறைய செலவு செய்வோம். நான் "நம்மை" எனக்குறிப்பிட்டது, என்னைப்பற்றி மட்டுமே. சில சமயங்களில் நான் அவர் கேட்டதை கொடுத்துவிடுவதுண்டு.

இந்த முறை இந்தியா செல்லுமுன் என்னுடைய துணிகளை அயர்ன் செய்ய எங்கள் ஊரில் உள்ள (மலேசியாவில்) லாண்டரியில் கொடுத்தேன். இந்தியா செல்லும் முதல் நாள், துணி வாங்க சென்றபோது,

" சார், இனி ஒரு சட்டைக்கு 0.80 செண்ட்" என்றார் கடைக்காரர். 0.80 செண்ட் என்றால், நம்ம ஊர் மதிப்புக்கு, ரூபாய் 11.20. ஒன்றும் பேச முடியவில்லை. கேட்டவுடன் கொடுத்து விட்டேன்.

அப்போதுதான், எங்கள் ஊர் பெரியவரின் நினைவு வந்தது. இங்கே கேட்டவுடன் கொடுக்கிறோம். அதுவும் பெரிய கடைக்கு. அங்கே அவர் தெருவில் தள்ளு வண்டியில் வந்து அயர்ன் செய்து கொடுக்கிறார், அவரிடம் ரொம்ப கறாராக நடந்து கொள்கிறோமே? என ஒரு மன உறுத்தல்.

உடனே மனதில் ஒரு முடுவு எடுத்தேன். இந்த முறை இந்தியாவில் அவருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என.

போனவுடன் அம்மாவிடம் சொன்னேன்,

" அம்மா, அந்த அயர்ன் பண்ணவர் வந்தா சொல்லும்மா, நிறைய அயர்ன் பண்ண வேண்டியுள்ளது"

" யாரு, அந்த பெரியவரா?"

" ஆமாம்மா"

" உனக்கு, விசயம் தெரியாதா, அவர் இறந்து மூன்று மாதம் ஆயிடுச்சு"

மனசு வலிச்சது.

-------------------------------------------------------------------------------------------------

சில செயல்களுக்கு, சில நிகழ்வுகளுக்கு நாம் விதியை காரணம் செல்வோம். அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு நடந்த சில விசயங்கள் அது உண்மையோ என நினைக்க தோன்றுகிறது.

MCOM கடைசி செமஸ்டர் கடைசி பரிட்சைக்கு முதல் நாள். நானும் நண்பர்களும் காலேஜிலிருந்து அன்றைய பரிட்சை கேள்விகளைப் பற்றி பேசிக்கொண்டே வருகிறோம். ரோட்டின் ஒரத்தில்தான் சென்று கொண்டிருந்தோம். நான் முதலில், இரண்டு நண்பர்கள் அடுத்தடுத்து.

அதில் இரண்டாவது வந்த நண்பர் ராஜமாணிக்கம் என் கையைப் பிடித்து இழுத்து,

" ஏய், நான் சொல்லரதக் கொஞ்சம் கேளுடா?" என இந்த பக்கம் இழுத்து, நான் இருந்த இடத்தில் அவனும், அவன் இருந்த இடத்தில் நானும் இடம் மாறி பேசிகொண்டே நடந்தோம். ஒரு நிமிடம் ஆகியிருக்காது. ஒரு ஆட்டோ வந்து அவன் மேல் மோதி, ஏறி மிகப்பெரிய ஆக்ஸிடெண்ட் ஆகி, உடனடியாக அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து, ஆப்பரேசன் செய்து, நினைக்கவே இன்றும் என் உடல் நடுங்குகிறது.

ஒரே ஒரு நிமிட இடைவெளியில், என்னை அவன் இழுத்துவிட்டு, என் இடத்துக்கு அவன் வந்து, ஆக்ஸிடெண்ட் ஆகி..........................

இது விதியில்லாமல் வேறு என்ன????

-------------------------------------------------------------------------------------------------

நாங்கள் எங்கள் தெரு நண்பர்களுடன் சுற்றுலா சென்றோம். சென்றபோது நடந்த ஒரு விசயம் இன்னும் என் நினைவில் பசுமையாக இடம்பிடித்துள்ளது.


நாங்கள் போகும் வழியில் நாமக்கல் சென்று ஆஞ்சநேயரை வழிப்பட்டோம். அங்கு என் நண்பரின் உறவினர் வீடு ஒன்று உள்ளது. அவரிடம் பேசிக்கொண்டே என் நண்பர் ஒருவர் அந்த ஆஞ்சனேயர் சிலையை போட்டோ எடுத்தார்.

உடனே அந்த உறவினர், என் நண்பரிடம்,

" வேணாம் தம்பி போட்டோ எடுக்காதீங்க"

" ஏன் சார்"

" நீங்க போட்டோ எடுத்தாலும், சாமி போட்டால வர மாட்டார்"

" ஏன் சார்"

" அப்படித்தான். சொல்லரத கேளுங்கோ, எடுக்காதீங்கோ"

என் நண்பர் அவர் பேச்சை மீறி புகைப்படம் எடுத்தார். அப்போது எல்லாம் டிஜிட்டல் கேமரா கிடையாது, எடுத்த உடனே பார்க்க.

ஊருக்கு வந்தவுடன் பிரிண்ட் போட்டு பார்த்தால்,

எல்லா படங்களும் தெளிவாக வந்திருந்தது " ஆஞ்சநேயர் படத்தைத் தவிர"

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சில சமயம் நான் தீவிரமாக இது நடக்கும் என நினைத்தால் அது உடனே நடந்துவிடுகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள். CII Malaysiaவிலிருந்து ஒரு போன். எங்கள் CEOவை மலேசியா ASTRO TVயில் பேட்டி எடுப்பதற்காக வரச்சொல்லி. அவர் என்னையும் அழத்துக்கொண்டு கோலாலம்பூர் சென்றார். அவருக்கு தமிழ் தெரியாது.

பேட்டியின் தலைப்பு " இந்திய மலேசிய வாணிப உறவு" பற்றி.

அந்த டிவி நிறுவனத்தில் நுழைந்தவுடன் எனக்கும் ஆசை மனதில் துளிர்விட்டது. நமக்கு இந்த மாதிரி வாய்ப்பு வராதா என்று.

"ஏன் வராது என மனதிற்குள் ஒரு தன்னம்பிக்கை சொல்"

மதியம் மூன்று மணிக்கு படப்பிடிப்பு. அவர் கோட் சூட்டில், நான் நார்மல் ட்ரெஸ்ஸில்.

அவர் மேக்கப் ரூமில் இருக்கும்போது அந்த செய்திபிரிவின் ஆசிரியர் என்னுடன் உரையாடிகொண்டிருந்தார். திடீரென என்ன நினைத்தாரோ, என்னிடம் இப்படி சொன்னார்,

" ஏன் சார், உங்கள் பாஸ் வேண்டுமானால், ஆங்கில சேனலுக்கு பேட்டி கொடுக்கட்டும், நீங்கள் தமிழ் சேனலுக்கு பேட்டி கொடுங்களேன்"

என்ன ஒரு சந்தோசமான செய்தி. ஆனால், பயம் ஒரு பக்கம், சந்தோசம் ஒரு பக்கம்.

பயம், "நாம் ஒன்றுமே தயார் செய்யவில்லையே"

சந்தோசம், "நாம் நினைத்தது உடனே நடக்க போகிறதே"

அடுத்த 10 நிமிடத்தில் மேக்கப். என்னையும் பேட்டியெடுத்தார்கள்.

அந்த வாரத்தில் இரு முறை என் பேட்டி ASTRO வானவில்லில் வெளியானது.
மலேசியா முழுவதும் நான் தெரிந்தேன்.

ஆனால், அந்த நேரத்தில் என்னுடைய பேட்டிக்கும் "அனுமதியளித்த" எங்கள் CEOவை நான் பாராட்டியே ஆக வேண்டும்.

இதை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை.

நம்மால் முடியுமென நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என சொல்வதற்காகத்தான் என் அனுபவத்தையும் சொல்கிறேன்.

--------------------------------------------------------------------------------------------------

3 comments:

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'மிக்ஸர்- 22.05.09 - நினைச்சா உடனே செஞ்சுடுங்க!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd May 2009 10:20:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/65535

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

ராதா said...

அருமையான பதிவு.

நன்றி.

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்