என் இனிய அம்மாவிற்கு,
ஆயிரம் வணக்கங்கள்.
எப்படி அம்மா இருக்கீங்க? நலமா?
மாத்திரைகள் சாப்பிடுவது அதிக சோர்வா இருக்காமா? சரியாயிடும், கவலைபடாத அம்மா? நீதானேம்மா அடிக்கடி சொல்வ, எதையும் தைரியமா எதிர்கொள்ளனும் அப்படீனு? எனக்கு நல்லா நினைவிருக்கிறதும்மா, நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது எனக்கு உடம்பு சரியில்லைனா, கூடவே சோறு தண்ணி இல்லாம இருப்பியே, பக்கத்துலேயே இருந்து கவனிப்பியே, அது மாதிரி என்னால உனக்கு செய்ய முடியலையே ஏம்மா?
நான் மலேசியாலேர்ந்து இந்தியா வந்தவுடன், நான் உன் உடல் நிலைய விசாரிக்கரதுக்கு முன்னாடி, என் உடல் நிலைய விசாரிக்க எப்படிமா உன்னால மட்டும் முடியுது. ஏம்மா, முடியாத இந்த சமயத்திலேயும், " ஏம்பா, சாப்புட்டியா, என்ன காய் வாங்கட்டும்? அப்படினூ கேட்டு கேட்டு எப்படிம்மா, உன்னால மட்டும் முடியுது?"
எனக்கு ஒரு 12 வயசு இருக்கும். அப்போ வீட்ல சமைக்க அரிசி இல்ல. அப்பா, எங்கோ யாருட்டேயோ கடன் வாங்க போயிருந்தாங்க. அப்போ நீ என்ன மட்டும் கூப்பிட்டு, ஒரு ட்ரெங்க் பெட்டிலேந்து, ஒரு பழைய 5 ரூபா எடுத்து, ஹோட்டல்ல போய் சாப்பிட்டு வானு சொன்னீயே, உனக்கு மட்டும் எப்படிமா அந்த அன்பு வந்தது? நானும், தம்பி, தங்கை, அக்காவ பத்தி நினைக்காம, போய் சாப்பிட்டேனேமா? உன்னோட அந்த அன்புக்கு நான் எப்படிம்மா கைமாறு செய்யப்போறேன்?
அம்மா, நான் +2 படிக்கும்போது ஒரு பொண்ணு மேல ஆசைப்பட்டு, அது ஒரு பெரிய பிரச்சனையா உருவெடுத்தப்போ, அப்பா என் மேல கோபமா இருந்தப்போ, நீ மட்டும்தானேமா, என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த!. என் பிரச்சனைய புரிஞ்சு, எனக்கு எடுத்து சொல்லி, என்ன அந்த நினைவுகளிலிருந்து விடுபட வைச்ச?
எந்த படம் பார்த்துட்டு வந்தாலும், நான் கதைய அப்படியே சொல்லுவேன், நீயும் கேப்ப, " ஏண்டா, படத்துக்கெல்லாம போற அப்படீனு கேக்காம, அதிகமா படத்துக்கு போகாதனு" நாசுக்கா சொல்லி திருத்துவியேம்மா?
நீ எட்டாம் வகுப்புத்தான் படிச்சிருக்க. ஆனா ஒரு மெத்த படித்த மேதை மாதிரி எங்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுப்பியேம்மா. தினமும் காலைல 4 மணிக்கு அலாரம் வச்சு எழுந்து, எனக்கு காபி போட்டு கொடுத்து, நான் படிக்கிற வரை பக்கத்துலேயே இருப்பியே, என்னால எதையும் மறக்க முடியலைம்மா?
நீ அடிக்கடி ஒண்னு சொல்லுவியே நினைவிருக்காமா? " நமக்குனு ஒரு சொத்து கிடையாது. படிப்பு ஒண்ணுதான் மூலதனம். அதை வைச்சுதான் முன்னேறனும். அதனால படி". நீ சொன்ன அந்த வார்த்தைகள் தானேமா, என்ன இந்த அளவுக்கு உயர்ந்த நிலையில வைச்சிருக்கு.
ஒரு முறை அப்பா உன்ன கெட்ட வார்த்தை சொல்லி ஏதோ கோபத்தில் உன்னை திட்டி விட்டார். அதற்கு நான் அப்பாவை பார்த்து," அடுத்த பிறவியிலாவது மனுசனா பொறங்க" அப்படீனு சொல்லிட்டேன். அப்பா என் கூட ஒரு வாரம் பேசலை. எல்லோரும் என்ன அப்பாட்ட மன்னிப்பு கேட்க சொன்னாங்க, நான் அப்பா பண்னது தப்பு, மன்னிப்பு கேட்கமாட்டேனு சொன்னேன். அப்போ, நீ என்ன அழகா, கணவன் மனைவி உறவுன்னா என்ன? அதுல பிள்ளைகள் எது வரை தலையிடலாம்னு சொல்லி நான் பண்ண தப்ப உணர வைச்சியேம்மா? மறக்க முடியலம்மா?
நீ என்னைக்குமே எனக்கு அம்மாவாவும் இருந்த, ஒரு சிறந்த தோழியாவும் இருந்த? அது எவ்வளவு விஷயத்துல எனக்கு உதவுச்சு தெரியுமா? பல பெண்களோட பழகற வாய்ப்பு கிடைச்சப்ப எல்லாம், சில தவறுகள் செய்ய கூடிய வாய்ப்புகள் வந்த போதெல்லாம், நீ தோழி போல் சொன்ன அறிவுரைகள் தானேம்மா, என்னை தவறு செய்யவிடாமல் தடுத்தது.
எனக்கு ஒரு சொல்ல முடியாத பிரச்சனை வந்த போது, நியாயமா நான் ஆண்கள் கிட்டதான் சொல்லனும், அப்பாக்கிட்ட தான் சொல்லனும். ஆனா நான் உன்கிட்டதான் சொன்னேன். நினைவு உள்ளதாம்மா? அதை எவ்வளவு அழகா அப்பாட்ட சொல்லி என்னை சரி பண்ணுன?
சில சமயம் அப்பா மேல கோபம் கோபமா வரும். இவ்வளவு கஷ்டத்துல ஏன் இத்தனை குழந்தை பெத்துக்கிட்டாங்கன்னு. ஒரு முறை எருமை மாடு வயசு ஆனதுக்கப்புறமும் நான், உன்னையும், அப்பாவையும் பார்த்து, " ஏன் இத்தனை குழந்தைகள் பெத்துக்கிட்டீங்கனு?"
கேட்டதுக்கு, நீ கோபமே படாம ஒண்ணு சொன்னியே ஞாபகம் இருக்காம்மா?
" இல்லைடா கண்ணு, இரண்டு குழந்தையோட நிறுத்தியிருந்தா, நீ எங்களுக்கு கிடைச்சிருக்க மாட்டியே" என்னம்மா அப்படி ஒரு அன்பு என்மேல?
எனக்கு விபரம் தெரிஞ்ச வயசுலேந்து, நீ எங்கும் ஊருக்கு போய் நான் பார்த்ததில்லை. உன் வாழ்நாள் முழுக்க எங்களுக்காகவும், அப்பாவுக்காகவும் வாழ்பவள் நீ? உன் கல்யாணம் ஆன புதிதில், அப்பாவுக்கும், உன் உறவினர்களுக்கும் ஏதோ சண்டையானதால், அப்பா உன் வீட்டு உறவே வேண்டாம் என ஒதுக்கியதால், நீ இன்று வரை உன் உறவினர் வீட்டுக்கே போகாமல், கணவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு, எப்படி அம்மா, உன்னால் மட்டும் இருக்க முடிகிறது? இப்போ என் மனைவியை நான் அடிக்கடி அவள் வீட்டிற்கு கூட்டி செல்லும்போதெல்லாம், உன் நினைவுதானம்மா எனக்கு வருகிறது?
எனக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பமான போது, நான் மார்க்கட் வேல்யூவை இழந்தபோது, அப்பா ஒரு பெண்ணை பார்த்து, எல்லோருமே பெண்ணின் வீட்டிற்கு சென்று, என்னுடைய அனுமதியில்லாமல் அப்பா அந்த பெண்ணை நிச்சயம் செய்ய முயன்றபோது, நான் பிடிக்கவில்லை என சொன்னபோது, நாசுக்காக அப்பாவிடம் எடுத்து சொல்லி என்னை காப்பாற்றிய உன்னை எப்படிம்மா மறப்பது?
அடுத்த ஆறு மாதத்தில் எனக்கு பிடித்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைத்தாயே? நீ தெய்வத்துக்கும் மேல் இல்லையா? உன்னால் இப்போது குழந்தகளை தூக்கி கொஞ்ச முடியவில்லை. அதற்காக நீ எவ்வளவு வருத்த படுகிறாய் என எனக்கு மட்டும்தான் தெரியும்.
நான் ஒவ்வொரு முறை மலேசியா கிளம்பும்போது, கடைசி நாள் அதிகமாக கடுப்படிப்பேன். நீ கூட நினைத்திருக்கலாம். "என்ன இவன் எப்பவும் சிடு சிடுனு இருக்கான்" எனறு. ஆனால், உண்மை என்ன தெரியுமா? உன்னை பிரியப்போகிறோம் அப்படிங்கற எண்ணம்தான் நான் கோபமாக இருப்பது என உனக்குத் தெரியுமா அம்மா?.
நீ எனக்கு செஞ்ச அனைத்திற்கும் நான் எப்படி உனக்கு திருப்பி செய்வேனு நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால், நீ சொன்னமாதிரி நான் வளர்ந்த்ததால் தானே நான் சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன். என் பிள்ளைகளையும் அப்படியே வளர்ப்பேனு உனக்கு உறுதி அளிக்கிறேன் அம்மா.
அடுத்த பிறவிலேயும், நீதான்மா, எனக்கு அம்மாவா வரணும்.
கடைசியா ஒண்ணும்மா!. இன்னைக்கு அன்னையர் தினம். நீ எனக்கு ஒரு வரம் தரணும். என்ன தெரியுமா?
" அப்பா எப்ப கூப்புட்டாலும், கூப்புட்ட குரலுக்கு ஓடி போய், என்னங்க அப்படினு அப்பாட்ட போய் நிப்ப"
" இப்போ அப்பா கூப்பிட்டார்னா, உடனே போகாதம்மா! அப்பறம் வரேனு சொல்லு"
ஏன்னா அப்பா இருக்கரது சொர்க்கத்துல இல்லையா?
22 comments:
//" அப்பா எப்ப கூப்புட்டாலும், கூப்புட்ட குரலுக்கு ஓடி போய், என்னங்க அப்படினு அப்பாட்ட போய் நிப்ப"
" இப்போ அப்பா கூப்பிட்டார்னா, உடனே போகாதம்மா! அப்பறம் வரேனு சொல்லு"
ஏன்னா அப்பா இருக்கரது சொர்க்கத்துல இல்லையா?//
:))
MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்
நல்ல பதிவு...மனம் நெகிழ்ந்தேன் !
அம்மாக்களின் உள்ளத்தை சம்பவங்களின் மூலம் நன்றாய் எடுத்துரைத் துள்ளீர்கள்.
"உன்னை பிரியப்போகிறோம் அப்படிங்கற எண்ணம்தான் நான் கோபமாக இருப்பது" நிச்சயமாய் புரிந்திருக்கும்.
சிறப்பாக இருந்தது நன்றி
Pathetic. God bless your mother
super inyavan,..
Excellent and heart touching letter
nandakumar
நண்பர்கள், சுரேஷ், எம்.வளர்பிறை, மாதேவி, விதி, ஜோதி, நந்தகுமார் ஆகியோருக்கு நன்றி.
Thankful to your AMMA giving us
NICE friend of Mr Ulaks
இனிய பதிவு.
...நன்றி ...
படிக்கயில் சிறிது கலக்கம் என் கண்களின்
அப்படியே சம்பவங்கள் கண்முன்னால்
எப்பவுமே தாய்தான் எல்லாத்தையும்விட சிறந்தவள், இது ஒவ்வொரு மகனுக்கும் தெரியும்
ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க நண்பரே
என்னுடைய அன்னையர் தினத்து வாழ்த்தையும் உங்க தாய்க்கு தெரிவித்துவிடுங்க
நண்பர் முருகானந்தம் துரைராஜ் அவர்களுக்கு என் நன்றி.
நண்பர் அபுஅப்ஸர் அவர்களுக்கு நன்றி.
உங்கள் அன்னைக்கும், என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
நந்தகுமார்,
நீங்க லால்குடி நந்தா தானே???
ஒரு வாழ்க்கையை சொல்லிட்டீங்க நன்றி
இனிய பதிவு மிக்க நன்றி!!!
yes,every man will praise the mother after death.it is real every mother is better than their father but one could we have to remember our knowledge came from our father only,mind it and also respectfather if he was getting angry in most times.
கருத்துக்கள் பதித்த நண்பர்கள் தமிழ், சிவா, சிவசங்கர வடிவேலு அவர்களுக்கு நன்றி.
Iniyavan unga letter ra padikkum pothu romba feeling + sentiment ha irruku.
கண்ணில் நீர் நிறைத்த பதிவு..
என் தாய் முகம் அறிந்து வளரும் கொடுப்பினை இல்லாத 67 வயது மனிதன் நான். உள்ளத்தை பிழியும் உங்கள் எழுத்து, எனக்கு கண்ணீரையே வரவழைக்கிறது..............
ஒரு தாய் இல்லாமலும் என் தந்தையால் அதே அன்புடன் நான் வளர்க்கப்பட்டதை எண்ணியே என் கண்ணீர். அவரும் இப்போது சொர்க்கத்தில் தான் இருக்கிறார். நன்றி, என் வாழ்க்கையை - வாழ்க்கையான என் தந்தையை நினவூட்டியதற்கு
மரு.கோ.பழநி.
Post a Comment