Jun 2, 2009

மிக்ஸர் - 02.06.09 - காலதாமதம் வேண்டாமே

என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம்,சில சமயம் நண்பர்களின் இமெயில்களுக்கு உடனே பதில் எழுதாமல் இருப்பது. வேண்டுமென்றே செய்வதில்லை. சரி, அப்பறம் எழுதலாம் என நினைத்து அப்படியே மறந்துவிடுவதுண்டு. அதனால், மெயில் அனுப்பிய நண்பர்கள் என் மேல் கோபப்படுவதுண்டு. ஆனால், என்னைப் பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே, கோபப்படுவதில்லை.

ஆனால், சென்ற வாரம் ஒரு ஆச்சர்யம். ஒரு தகவலுக்காக, நண்பர் நர்சிமுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். அதுதான், நான் எழுதும் முதல் மெயில் நர்சிமுக்கு. சொன்னால், நம்ப மாட்டீர்கள், அனுப்பிய ஒரு நிமிடத்தில் பதில் அனுப்பினார். எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் உடனே, என் ஆச்சர்யத்தை ஒரு மெயிலாக அனுப்பினேன். அடுத்த ஒரு நிமிடத்தில் பதில் வந்தது இப்படி,

"Dear Mr Narsim,
Thank You Very Much for your immediate reply - இது நான்.

"இது என் அடிப்படை குணம்.மெயில் பார்த்தால் உடனே பதில் அனுப்புவது" - இது நர்சிம்.

அடுத்த உதாரணம். தொடர் கேள்வி பதில் எழுத நண்பர் பரிசலை அழைத்தேன் என் பதிவின் மூலமாக. ஒரு மெயிலும் அனுப்பினேன். நான் நினைத்தேன், நமக்கெல்லாம் பதில் அனுப்ப மாட்டார், ஏனென்றால் நாம் ஒன்றும் பிரபலமில்லையே என்று. ஆனால், என்ன ஆச்சர்யம் உடனே மெயிலும் அனுப்பி, பதிவும் எழுதி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார். அவர் என்னதான், அவரிடம் சோம்பேறித்த்னம் அதிகம் இருக்கிறது என்று கூறினாலும், மனிதன் இரவு 2 மணிக்கு எழுதியிருக்கிறார் என்றால், அவர் எப்படி சோம்பேறியாக இருக்க முடியும்?

இதிலிருந்து நான் இரண்டு விசயங்கள் உணர்ந்துகொண்டேன்:

01. தம்மை சோம்பேறி என்க்கூறிகொள்பவர்கள் சோம்பேறி இல்லை. சுறுசுறுப்பு என நினைத்துக்கொண்டு வேலையத் தள்ளிப்போடுபவனே சோம்பேறி.

02. இனிமேல் எல்லா மெயில்களுக்கும் உடனே பதில் எழுதவேண்டும் என்ற நற்பண்பிணை கற்றுக்கொண்டேன்.

நன்றி, நர்சிம், பரிசல்.

-------------------------------------------------------------------------------------------------

யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்? என்ற கேள்விக்கு "இளையராஜா" என எழுதியிருந்தார் நண்பர் பரிசல்.

உடனே எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. என் நண்பர், நடிகர், எங்கள் ஊர்க்காரர், தற்போதைய MP, தற்போதைய மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நண்பர்கள் அனைவரும் சென்னை சென்றிருந்தோம். அவர் மிக பிரபலமாக இருந்த சமயம். அப்போது அவர் , தலைவர் ரஜினியுடன் எஜமான் நடித்துக்கொண்டிருந்த நேரம்.
எல்லா திரையுலக பிரமுகர்களும் வந்திருந்தார்கள்.

அப்போது இளையராஜாவும் வந்தார். அவரைப்பற்றி பலர் பல விதமாக கூறிய நேரம். நான் அருகில் சென்று அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு இரண்டு வார்த்தைகள் பேசினேன், அவரை தொட்டுப் பார்த்தேன். அவரின் தீர்க்கமான பார்வையையும், அந்த தொடலில் ஏற்பட்ட அதிர்வலைகளையும் இன்று வரை என்னால் உணரமுடிகிறது. அதுதான் இளையராஜா.

நான் இப்படி அனுபவித்துக்கொண்டிருந்தபோது மொத்த கூட்டமும், "ஹோ" என கூச்சலிட்டு, என்னை தள்ளிவிட்டு, இன்னொறுவரை தொட்டு பார்க்க ஓடியது.

அவர் வேறு யாருமில்லை. அப்போதைய நடிகை, "சுகன்யா".

என்ன உலகமடா சாமி இது?

-------------------------------------------------------------------------------------------------

நேற்று கோலாலம்பூரில் அலுவலக வேலை. நடுவில் ஒரு மீட்டிங்கிற்கும், அடுத்த மீட்டிங்கிற்கும் 2 மணி நேர இடைவெளி. என்ன செய்வதென யோசித்தேன். பிறகு எங்கேயும் போக வேண்டாம் என நினைத்து, லேப்டாப்பை ஆன் செய்து " தமிழ் மணம்" சென்றேன்.

செல்வேந்திரன் பங்கு பெற்ற" நீயா, நானா" பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்காததால், "சக்கரை சுரேஷ்" உதவியுடன், நண்பர் செல்வாவின் பதட்டத்துடன் கூடிய கலந்துரையாடலை இணையத்தில் சக்கரை சுரேஷின் வலைப்பக்கத்தில் பார்த்தேன். அருமையாக பேசினார். ஆனால், அவர் இணைய நண்பர்களின் நட்பை பற்றிய பேசிய பேச்சை என்னால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.

அருகிலுள்ளவர்களின் நட்பு ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய நட்பு. இணைய நட்பு, எதையும் எதிர்பார்க்காத நட்பு. ஒருவித புரிதலுடன் கூடிய ஒரே சூழலில் உள்ள நட்பு, இணைய நட்பு.

எனிவே, அது செல்வாவின் கருத்து.

-----------------------------------------------------------------------------------------------

சென்ற வாரம் 5 ஸ்டார் ஹோட்டலில் காலை உணவுக்காக நான் உட்கார்ந்திருந்த போது நான் பார்த்தது இன்னும் என்னை எரிச்சலுடன் வைத்திருக்கிறது. எல்லோரும் கோட் சூட்டில், அல்லது நார்மல் ட்ரெஸ்ஸில். அந்த நேரத்தில் ஒரு இந்திய தம்பதியினர் சாப்பிட்ட வந்தார்கள். கணவன் பெர்முடா, டி சர்ட், மனைவி ஒரு மெல்லிய நைட்டியுடன். அங்கு இருந்த அனைத்து வெளி நாட்டவர்களும் முகச்சுழிப்புடன் அவர்களை பார்த்தார்கள். எனக்கு ஒரே அவமானமாக இருந்தது.

நைட்டி என்பதே நைட்டில் அணிவதற்குத்தான். அது ஒரு காரணப்பெயர். என்னதான் வெளி நாட்டில் சுற்றுலா வந்தாலும், ஒரு அடிப்படை நாகரிகம் கூடவா தெரியாது?

சே!
---------------------------------------------------------------------------------------------

காலேஜ் படிக்கும்போது நடந்த ஒரு சம்பவம். என் நண்பன் ஒருவன் மிலிட்டரிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். போகும்போது அவன் அம்மாவை போட்டோ எடுத்தான். பிறகு மீண்டும் ஒரு முறை அதே மாதிரி போட்டோ எடுத்தான்.

நான் கேட்டேன்,

" ஏண்டா, ஒரே மாதிரி, இரண்டு தடவை எடுக்குற?"

" எனக்கு ஒரு காப்பி, எங்க அம்மாவுக்கு ஒரு காப்பி"

" ஏன் ஒண்னு எடுத்தா போதாதா? அதுலேயே இன்னொரு பிரிண்ட் போட்டுக்கறது"

" லூசு மாதிரி பேசாதடா, எனக்கு ஒண்ணு, எங்க அம்மாவுக்கு ஒண்ணு"

கடைசி வரை அவன் என் பதிலை ஒத்துக்கொள்ளவே இல்லை.

------------------------------------------------------------------------------------------

காலைல என் மகள் கேட்டாள்,

" ஏம்பா, பன்றிக்காய்ச்சல் அதனால, எல்லாரையும் ஜாக்கிறதையா இருக்க சொல்றாங்க?"

" ஆமாண்டா, ஜாக்கிறதையா இருக்கணும்"

" ஏம்பா, நமக்கு காய்ச்சல் வந்தா, நாம்தானே ஜாக்கிரதையா இருக்கோம், அதுபோல பன்றிக்கு வந்தா, பன்றிங்கதானே ஜாக்க்கிரதையா இருக்கணும்?"

===============================================================

11 comments:

அப்துல்மாலிக் said...

கலவை ரசித்தேன் அனைத்தையும்

சோம்பேறி சுறுசுறுப்பு நல்ல விளக்கம்

உங்க சுட்டியின் பதிலை ரசித்தேன்

தொடருங்கள்

SIT PLACEMENT CELL said...

Interesting mixer

Anonymous said...

இன்று இசைஞானியின் பிறந்தநாள்

வெற்றி-[க்]-கதிரவன் said...

நல்லா இருக்குங்க

சென்ஷி said...

:)

மிக்சர் நல்ல சுவையுடன்!

கலையரசன் said...

இனிமே நான் மெயில் பன்னாலும் ரிப்ளை பன்னுவீங்க..
பாப்போம் என்ன செய்கிறீர்கள் என்று..

iniyavan said...

வருகை புரிந்த நண்பர்கள்,

அபுஅப்ஸர்,
முரளி,
அனானி,
பித்தன்,
சென்ஷி,
கலையரசன்
ஆகியோருக்கு நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் இனியவன்

நல்ல கருத்துகள்

பொதுவாக எனக்கு வரும் மின்னஜ்சல்கள் உடனுக்குடன் பதிலளிக்கப்படும். சில மடல்கள் சிந்தனையைத் தூண்டுவதாகவோ - பொறுமையைச் சோதிப்பதாகவோ - நீண்டதாகவோ - இருப்பின் - சற்றே தள்ளி வைக்கப்படும் - சிறு ஒப்புதல் பதிலுடன் - பிறகு விரிவான் பதில் எவ்வளவு விரைவாக அனுப்பப்படுமோ அவ்வளவு விரைவில் அனுப்பப்படும்.

iniyavan said...

நன்றி சீனா.

Anonymous said...

military story super

பரிசல்காரன் said...

;-))))