Jun 18, 2009

மிக்ஸர் - 18.06.09

எதிலுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கக்கூடாதுங்கற உண்மையை என்னோட கடந்த வார ஒரு அனுபவத்தின் மூலம் தெரிஞ்சுகிட்டேன். ஒரு விசயத்தில ரொம்ப எதிர்பார்த்து, அது சரியா நடக்கவில்லை என்றதும் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன். என்னால் எந்த விசயத்திலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. என்னால் எந்த பதிவும் எழுத முடியவில்லை. அந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். சரியாக ஐந்து நாட்கள். நரக வேதனை. என்ன காரணம் என்று யோசித்துப்பார்த்தேன். ஒரு உண்மை தெரிந்தது. சோகம், சந்தோசம் இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய மன நிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அது பழகிவிட்டால், எந்த ஒரு விசயமும் நம்மை பாதிக்காது. நான் அவ்வாறு நினைக்காமல், சந்தோசத்தை கொடுக்க போகும் அந்த நிகழ்வை மட்டுமே நினைத்ததால், என்னால் 'அந்த' சிறு சறுக்கலை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்த மனித வாழ்க்கை மிக அற்புதமானது. ஒவ்வொரு நிமிடமும் நாம் அதை அனுபவிக்க வேண்டும். இன்னொரு முறை இந்த வாழ்வு கிடைக்குமா என்று தெரியாது. அதனால், முடிவு செய்துவிட்டேன், ஒவ்வொரு நொடியையும் அதன் போக்கிலேயே விட்டு, சோகத்தை, சந்தோசத்தை ரசித்து அனுபவிக்க போவதென்று. இதுதான் சந்தோசம் என, ஏன் நாம் நமக்குள் ஒரு வரையரையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையுமே ஒரு சந்தோசத்துடனேயே பார்க்க பழகிக்கொள்ள போகிறேன். சோகம் ஏற்பட்டால் அந்த உணர்ச்சியையும் அனுபவிக்க போகிறேன்.
===============================================
நண்பர்களிடமிருந்து வரும் ஒரு சில மெயில்கள் எனக்கு பிடிப்பதில்லை. ஒரு நண்பர் எனக்கு ஒரு மெயில் இப்படி அனுப்பியிருந்தார். அது ஒரு கடவுளை பற்றிய பிரார்த்தனை மெயில்.

" படித்து முடித்தவுடன் உடனே குறைந்தது ஒரு பத்து பேருக்காவது பார்வேட் செய்து விடுங்கள். உங்களுக்கு மூன்று நாட்களில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். அப்படி அனுப்பாமல் வைத்திருந்தாலோ அல்லது அழித்து விட்டாலோ, உங்களுக்கு மூன்று நாட்களில் ஏதேனும் கெட்ட நிகழ்வுகள் நடக்கும்"

இது மாதிரி வந்தால் உடனே அழித்துவிட்டு தான் மறுவேலை. சாமிக்கெல்லாம் வேறு வேலையில்லையா என்ன? எல்லோரும் சரியாக மெயில் அனுப்புகிறார்களா? என பார்ப்பதுதான் கடவுளின் வேலையா?

பல வருடங்களாக நான் இந்த மாதிரி வந்த எந்த மெயிலையும் பார்வேட் செய்ததில்லை. எனக்கு இது வரை ஒன்றும் ஆகவுமில்லை.

================================================

நாய்களுக்கும் எனக்கும் எப்போதுமே ஆவதில்லை. ஒரு முறை கோலாலம்பூரில் அதிகாலையில் வாக்கிங் செல்வதற்காக சாலையில் இறங்கி நடந்தேன். ஒரு இரண்டு நிமிட வாக்கிங் கூட ஆகி இருக்காது. நம்ப மாட்டீர்கள், ஒரு நான்கு நாய், கன்று குட்டிபோல என்னை சுற்று நின்று குறைக்கிறது. கடிக்கவும் இல்லை, என்னை விட்டு நகரவும் இல்லை. அந்த நிமிடத்தில் கூட எனக்கு கவுண்டமணி ஒரு படத்தில் இரவு முழுவதும் ஒரு நாய்க்கு பயந்து வீட்டிற்கு முன் மண்டியிட்டு சென்ற காட்சிதான் நினைவுக்கு வந்தது. உடனே சிரிக்க கூட முடியவில்லை. பயம், சிரித்தால் கடித்து விடுமோ என்று. சரியாக ஒரு பத்து நிமிடம் கழித்து ஒரு நண்பர் வந்து என்னை அப்படியே நிற்க சொல்லி மெதுவாக நாய்களின் உள்ளே ஊடுருவி என்னை காப்பாற்றினார். அப்பறம் அவரிடம் கேட்டேன், ஏன் இத்தனை நாய்கள் இங்கு?

அவர் கூறினார், " சார், இது பழைய கார் விற்கும் இடம் அதான். அவர்கள் பாதுகாப்பு கருதி அங்கே நாய்களை நிறுத்தி உள்ளார்கள். கடிக்காது கவலைப்படாதீங்க" என்றார். "கடிக்குதோ இல்லையோ, கன்னுக்குட்டி போல உள்ள நான்கு நாய்களுக்கு முன்னாடி இருந்து பாருங்க உங்களுக்கு தெரியும்" என்றேன். அவர் இவனை ஏண்டா காப்பாத்துனோம் என்பது போல பார்த்து விட்டு சென்றார்.

இது நடந்த மூன்றே மாதத்தில், எங்கள் தெருவில் இதே போல வாக்கிங் போனபோது, அதே மாதிரி நாய்கள், அதே நாய்கள் அல்ல, வேறு நாய்கள். நடுவில் மாட்டி, தப்பித்து........ அது ஒரு பெரிய கதை.

இப்போது நான் காரில்தான் வாக்கிங் போகிறேன், வீட்டிலிருந்து பார்க் வரை, பிறகு காலில் வாக்கிங் போகிறேன் பார்க்கில்.

==================================================

வாக்கிங் செல்பவர்களுக்கு ஒரு அறிவுரை. எப்போதும் பர்சில் பணம் வைத்துக்கொள்ளுங்கள். அப்பொதுதான் திருடர்களிடம் தப்பிக்கலாம். தனியாக செல்கிறீர்கள். வழிப்பறித் திருடனிடம் மாட்டிக்கொள்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், பர்சில் பணம் இருந்தால் தப்பித்தீர்கள், இல்லையென்றால், அவ்வளவுதான்.

இது என் போலீஸ் நண்பர் எனக்கு கூறிய அட்வைஸ்.

===========================================================
மலேசிய ரோடுகளை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். மலேசிய ரோடுகளில் கார் ஓட்டுவதென்பது ஒரு தனி சுகம். அவ்வளவு அருமையாக இருக்கும். சுற்றிலும் பச்சை பசேலென்று இயற்கை காட்சி. மலைகள். ஆகா, அற்புதமான அனுபவம். நான் அடிக்கடி எங்கள் ஊரிலிருந்து கோலாலம்பூர் காரில்தான் செல்வேன். ஒரு முறை குடும்பத்துடன் எங்கள் ஊரிலிருந்து பினாங்கிற்கு காரிலே பயணம் செய்தோம். மொத்தம் ஒன்பது மணி நேர பயணம். நடுவில் இரண்டு இடத்தில் நிறுத்தினோம். அலுப்பே தெரியவில்லை. அதிக வேகமில்லை 120 கிமீ வேகம் தான். ஆனால், வழியில் ஏதேனும் விபத்தை பார்த்தால், வேகம் 90 கிமீ ஆக ஆட்ட மெட்டிக்காகாக ஆகி விடும்.

ஆனால், திருச்சியிலிருந்து திருவாரூர் செல்வதற்குள் நான்கு மணி நேரத்தில் நான் சோர்வடைந்துவிடுவேன். ஆனால் ஏதேனும் ஆக்ஸிடெண்ட் நடந்தால், உயிருக்கு ஒன்றும் ஆகாது, காயங்களுடன் தப்பித்து விடலாம்.

ஆனால், மலேசியாவில்.......?

அதனால கார் ஓட்டும்போது எல்லாரும் ஜாக்கிரதையா ஓட்டுங்க.

====================================================

3 comments:

Beski said...

//முடிவு செய்துவிட்டேன், ஒவ்வொரு நொடியையும் அதன் போக்கிலேயே விட்டு, சோகத்தை, சந்தோசத்தை ரசித்து அனுபவிக்க போவதென்று//
இப்படி இருக்குறது தப்பில்ல, ஆனா வெளிய சொல்லாதீங்க.

//எந்த மெயிலையும் பார்வேட் செய்ததில்லை. எனக்கு இது வரை ஒன்றும் ஆகவுமில்லை.//
ஹி ஹி ஹி

//நாய்களுக்கும் எனக்கும் எப்போதுமே ஆவதில்லை//
சேம் பீலிங்...
---
நல்லாருக்கு.

நர்சிம் said...

//எதிலுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கக்கூடாதுங்கற உண்மையை என்னோட கடந்த வார ஒரு அனுபவத்தின் மூலம் தெரிஞ்சுகிட்டேன். ஒரு விசயத்தில ரொம்ப எதிர்பார்த்து, அது சரியா நடக்கவில்லை என்றதும் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன். //

அமைதி அமைதி அமைதி..

iniyavan said...

நண்பர்கள் "எவனோ ஒருவன்'' நர்சிம் ஆகியோருக்கு நன்றி.