Jun 4, 2009

சமீபத்தில் என்னை பாதித்த மூன்று சம்பவங்கள்


சம்பவம் 1:

ஞாயிறு இரவு Rio de Janeiro’s லிருந்து ஏர் பிரான்ஸ் AF 447 விமானம் 216 பயணிகளுடனும், 12 சிப்பந்திகளுடனும் சரியாக இரவு ஏழு மணிக்கு பாரிஸை நோக்கிப் புறப்பட்டு சென்றது. ரியோவிலிருந்து பாரிஸ் செல்ல 9145 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். பயண நேரம் மொத்தம் 10 மணி நேரம் 20 நிமிடங்கள். ஆறு மணி நேர பயணம் முடிந்த நிலையில், திடீரென அந்த விமானத்துடனான தொடர்பு நின்றுவிட்டதாக கண்ட்ரோல் ரூம் அதிகாரிகள் கூறினார்கள். முதலில், யாராவது ஹைஜாக் செய்திருக்கலாம் என்றார்கள். பிறகு காணவேயில்லை தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார்கள். பிறகு அருகில் பயணம் செய்து கொண்டிருந்த விமானத்தில் உள்ள பயணி அட்லாண்டிக் கடலில் மேல் பயணம் செய்திக் கொண்டிருந்த விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கடலில் விழுந்த்தாகவும், அதை பார்த்ததாகவும், அது ஏர் பிரான்ஸ் விமானமாக இருக்கலாம் எனக் கூறியதாக கூறினார்கள். இப்போது சொல்கிறார்கள், விமானத்தை மின்னல் தாக்கி இருக்கலாம் அதனால், எலெக்ட்ரிகல் பெயிலியர் ஆகி, எரிந்து கீழே விழுந்து இருக்கலாம் என்கிறார்கள். கேப்டன் கடைசியாக அனுப்பிய செய்தியில், டர்புளன்ஸ் அதிகமாக இருந்ததாக கூறியிருக்கிறார், என்கிறார்கள். விமானம் மேகங்களுக்கு மேல், மின்னல் தாக்காத இடத்தில்தான் பறக்கும் என இவ்வளவு நாள் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

எது எப்படியோ கடந்த ஞாயிறு வரை இந்த உலகத்தில் இருந்த 228 நபர்கள் இப்போது நம்மிடம் இல்லை. இதுதான் விதியா?. இது விதி என்றால், வாழ்வு முடிய போகும் அனைவரையும் ஒரே விமானத்தில் இறைவன் பறக்க வைத்தாரா? அந்த கடைசி தருணங்களில் அதில் பிரயாணித்த அனைவரும் எத்தனை வேதனை பட்டிருப்பார்கள். என்னவெல்லாம் கனவுகளோடு பறந்திருப்பார்கள். நினைக்கவே மனம் மிக வேதனையாக உள்ளது. அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வதாலும், டர்புளன்ஸ் அனுபவம் நிறைய இருப்பதாலும், என்னால் அந்த வேத்னையை முழுமையாக உணர முடிகிறது. என் விமான டர்புளன்ஸ் அனுபவத்தை "விமான அனுபவம்" இங்கே படிங்கள்.

என்னால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக பிரார்த்திப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.

சம்பவம் 2:

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவன் கடந்த 25 வருடமாக தன் சொந்த மகள்களையே ஒரு பாதாள அறையில் பூட்டி வைத்து, அடைத்து பாலியல் கொடுமைகள் செய்து வந்திருக்கிறான். அந்த மகள்களுக்கும் குழந்தைகள் பிறந்து, அவனே பிரசவமும் பார்த்து, அவர்களையும் வெளி உலகம் தெரியாமல் வளர்த்து வந்திருக்கிறான். அதில் ஒரு மகள், அவளுக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில் எப்படியோ அவன் அசந்த நேரம் பார்த்து, வெளியில் தப்பித்து ஓடி வந்து, மற்றவர்களிடமும், போலிஸிடமும் சொன்னதால்தான், அவனைப்பற்றிய உண்மைகள் வெளி உலகத்துக்கே தெரிய வந்துள்ளது.

அவனை கோர்ட்டில் நிறுத்தி கேள்விகள் கேட்டபோது, அவன் செய்த தவறுகளுக்காக கொஞ்சம் கூட வருந்தாதது என்னை ரொம்பவே கோபம் கொள்ள செய்தது. அவன் இப்போது இருப்பது ஜெயிலில்.

என்னுடைய கேள்வி இதுதான். தனக்கு பிறந்த மகளை வேறு கோணத்தில் பார்க்க எப்படி ஒரு தகப்பனால் முடியும் என என்னால் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை. மனித ஜாதியில் பிறந்த எவருமே அவ்வாறு இருக்க வாய்ப்பே இல்லை. மிருகம் மட்டுமே தகாத உறவுகளிலும், முறையற்ற முறைகளிலும் உறவுகள் கொள்வதாக படித்திருக்கிறேன்.

"அவன் அவ்வாறு மிருகமாக மாற என்ன காரணம் இருக்க முடியும்?" என யோசித்து பார்த்து மனம் சோர்வடைந்ததுதான் மிச்சம்.

இந்த சம்பவம் என்னை ரொம்பவே பாதித்துவிட்டது.

சம்பவம் 3:

திருச்சியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். பள்ளியில் படிக்க வேண்டிய வயதில் ஒரு பையன் டேபிள் துடைத்துக்கொண்டிருந்தான். அவனை பார்த்தால் நல்ல புத்திசாலிபோல் தோன்றியது. அவனிடம் பேச்சுக்கொடுத்தபோது அவன் நன்றாக படிக்க கூடியவன் என்றும், வீட்டில் வசதியில்லாததால் இந்த வேலைக்கு வந்ததாகவும் கூறினான். நல்ல சிரித்த முகத்துடன் வேலையை கவனமாக செய்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில் பக்கத்து டேபிளில் ஒருவர் அவனை துடைக்க கூப்பிட்டார். அவன் சென்றான்.
அவன் துடைத்துக்கொண்டிருந்த போது அவனையறியாமல் ஒரு துளி தண்ணீர் அந்த நபரின் மேல் பட்டு விட்டது. உடனே அவன் 'சாரி' கேட்டான். அந்த நபர் அவன் சொன்ன 'சாரியை' பொருட்படுத்தாமல், அவன் கன்னத்தில் ஒங்கி அடித்து விட்டார். அவன் சின்ன பையன். அவன் கண்களிலிருந்து ஒரே கண்ணீர். அழுது கொண்டே அவன் துடைத்த காட்சி இன்னும் என் கண்முன்னே அப்படியே இருக்கிறது.

எனக்கு அந்த நபர் மீது வந்த கோபம் கொஞ்சநஞ்ச மல்ல. ஆனால், என்னாலும் ஏதும் செய்ய முடியாத நிலை.

நான் கேட்கும் கேள்வி இதுதான், " அவன் ஏழையாக பிறந்ததை தவிர வேறு என்ன பாவம் செய்தான்?". அவனும் மனிதன் தானே? என்ன காரணத்திலாலோ, அவன் டேபிள் துடைக்க நாம் சாப்பிடும் நிலை. அதுவே நிரந்தரம் அல்ல. நிலை மாறலாம் அல்லவா?

இது ஏன் மக்களுக்கு புரிவதில்லை. 30 வருடம் வாழ்ந்தவர்களும் இல்லை. 30 வருடம் தாழ்ந்தே இருந்தவர்களும் இல்லை. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது ஏன் இவர்களுக்கு புரிவதில்லை.

நண்பர்களே, நாம் ஹோட்டல்களுக்கு போகும்போது, டேபிள் துடைப்பவர்களை பார்த்தால், நாம் ஒன்றும் பணம் கொடுக்க வேண்டாம், அட்லீஸ்ட் அவர்களை நம் சக மனிதர்களாய் நினைத்து, மரியாதையாய் நடத்தலாமே?

8 comments:

cheena (சீனா) said...

உண்மை உண்மை இனியவன் - பாதித்த சம்பவங்களிலே உணவகத்தில் மேசை துடைக்கும் சிறுவனின் நிலை அனைவரையும் பாதிக்கும். படிக்க வசதி இல்லாத சிறுவன் சிரித்த முகத்துடன் மேசை துடைக்கிறான். அவனிடம் பரிதாபப்பட வேண்டாம் - நட்புடன் பார்க்கலாமே !

நல்ல கருத்து

நல்வாழ்த்துகள்

iniyavan said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர் சீனாவுக்கு என் நன்றி.

sikkandar said...

yenakku ungal mel thaan kopam varukirathu, antha siruvanai adithavaridam niyayam keetu sandai podamal verum parvaiyalaragara suranai attru irunthirukkeergal, antha siruvanakku padippatharku yeathavathu uthavi siyeaamal varutham veru kolkirigal.... puli (tiger) maanai (deer) saapidum katchiyai arugil irunthu padam pidithuvittuu antha maanukkaaga varuthaam kolvathu pool eerukirathu ungal mana nilai.

James Rajendran said...

Dear Friend,

அந்த சிறுவனை நாம் படிக்க வைக்க ஏதும் வழி இருக்கிறதா?

My mail : jamesincbe@gmail.com

james / Coimbatore

Anonymous said...

please read yourself the last line of first incident.

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'சமீபத்தில் என்னை பாதித்த மூன்று சம்பவங்கள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 4th June 2009 10:00:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/69948

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

தேவன் மாயம் said...

இது ஏன் மக்களுக்கு புரிவதில்லை. 30 வருடம் வாழ்ந்தவர்களும் இல்லை. 30 வருடம் தாழ்ந்தே இருந்தவர்களும் இல்லை. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது ஏன் இவர்களுக்கு புரிவதில்லை.
///

வாழ்க்கையை எளிமையாக சொல்லிவிட்டீர்கள் நண்பரே!!

iniyavan said...

"yenakku ungal mel thaan kopam varukirathu, antha siruvanai adithavaridam niyayam keetu sandai podamal verum parvaiyalaragara suranai attru irunthirukkeergal, antha siruvanakku padippatharku yeathavathu uthavi siyeaamal varutham veru kolkirigal"

அந்த நண்பருடன் நான் சண்டை போடவில்லையென்றோ, அந்த சிறுவனுக்கு நான் ஏதும் உதவி செய்யவில்லையென்றோ எங்கேயாவது சொல்லியிருக்கிறேனா?