Jun 8, 2009

"இது நியாயமா, கிருஷ்ணா????"- சிறுகதை

"இது நியாயமா, கிருஷ்ணா????"- சிறுகதை
- 'இனியவன்' என். உலகநாதன்.

இது "'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் போட்டிக்காக எழுதப்பட்டது. "

கிருஷ்ணாவுக்கு இன்று காலையிலிருந்தே அர்ச்சனைகள் ஆரம்பித்து விட்டது. காலையில் ஆரம்பித்த அர்ச்சனை மாலை வரை தொடர்கிறது. வழக்கம் போல் அப்பாதான் , வேறு யார்? காலையில் இப்படித்தான்,

" ஏண்டா கிருஷ்ணா, வேலைக்காக என் நண்பனை பார்க்கச்சொல்லியிருந்தேனே, போய் பார்த்தியா?"

" பார்த்தேன்பா"

"என்ன சொன்னார்?"

" அவர் அவரோட ரைஸ் மில்லுல வேலைக்கு சேர சொல்லுறார்"

"ஏன் அதனால என்ன?"

"என்னப்பா, பிகாம், படிச்ச என்னை ரைஸ் மில்ல கணக்கு எழுத சொல்லறீங்க"

"அதனால என்ன, மில்லுல கணக்கு எழுதற வேலை, அவ்வளவு மட்டமா, என்ன?"

" இல்லைப்பா, கொஞ்சம் வெயிட் பண்ணா, நல்ல வேலை கிடைக்கும்"

"எப்போ, நான் செத்த பிறகா?"

அதற்கு பிறகு அவர் பேசிய பேச்சுக்கள், திட்டிய திட்டுகள் அச்சில் ஏற்ற முடியாதவை. மிகுந்த கோபமாய் உணர்ந்தான். 'நாம் என்ன தவறு செய்து விட்டோம். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?' என நினைத்தான். ஆனால், மறுபக்கம் அவன் அப்பாவை நினைத்தாலும் அவனுக்கு பாவமாய்த்தான் இருந்தது. பாவம் ரிடையர் ஆனவுடனும், இன்னும் வேலை செய்து கொண்டுதானிருக்கிறார். மொத்தம் மூன்று பெண் குழந்தைகள். இன்னும் இவன் அக்காவிற்கே திருமணம் ஆகவில்லை. அந்த இயலாமைதான், அவரை இவனிடம் கோபம் கொள்ள வைக்கிறது என்பதை தெரிந்தே இருந்தான். ஆனால், வேலை கிடைக்காமல் இருப்பதற்கு தான் மட்டுமே காரணம் இல்லையே? படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லாமலிருப்பது இந்த சமுதாய குற்றம், என நினைத்தான். சாதாரண மில்லில் வேலையில் சேர்ந்து, அதிலேயே குப்பைக்கொட்ட அவன் விரும்பவில்லை. அப்படியே நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு, அப்போதுதான், மாலா அவனை மாலை சந்திக்க சத்திரம் பஸ்டாண்ட் வரச் சொன்னது நினைவுக்கு வந்தது.அவசரமாய் கிளம்பினான். மாலா, வேறு யாரும் இல்லை, அவன் காதலிதான். பக்கத்து தெருதான், ஆனால், அவள் ஒரு மெடிக்கல் கடையில் கேசியராக வேலை பார்க்கிறாள். அவளும் இவனை ஏதாவது வேலைக்கு போகச்சொல்லி தினமும் நச்சரித்துக்கொண்டுதான் இருக்கிறாள். அவள் வீடு இவனை விட வறுமை. காதலுக்குத்தான் கண் கிடையாதே?

மாலை சரியாக ஆறு மணிக்கு சத்திரம் பஸ்டாண்டில் நின்றான். சரியாய் அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்தவள், கிருஷ்ணாவைப் பார்த்து கேட்டாள்,

"என்ன முடிவு பண்ணுனீங்க?"

"எதைப்பத்தி?"

" நேற்று நான் சொன்னேனே, நம் கல்யாணத்தை பத்தி?"

"நான் தான் நேற்றே சொன்னேன்ல, எனக்கு வேலை கிடைச்சோன, என் அக்கா திருமணத்துக்கு அப்பறம்தான் நம்ம கல்யாணம்னு"

" இங்க பாருங்க, நான் ஏற்கனவே பல முறை உங்கள் கிட்ட சொல்லிட்டேன். எங்க வீட்டுல நான் தான் மூத்தவள். எனக்கு ஆனாதான் அவங்களுக்கும் ஆகும். உங்களுக்காக நான் வெயிட் பண்ணலாம். அவங்க ஏன் வெயிட் பண்ணனும். எனக்கு வேற அடுத்த மாசம் வந்தா 25 வயசு ஆகப்போகுது."

"அதுக்கு இப்போ என்ன பண்ணச்சொல்லுற?"

" வாங்க, இப்போதே, எங்காவது போய் கல்யாணம் பண்ணிக்கலாம்"

"அது மட்டும் முடியாது"

" இங்க பாருங்க, நேற்று, என்னை கடையில ஒருத்தர் பார்த்துட்டு, அப்பாட்ட போய், 'என்னை புடிச்சிருக்குனு சொல்லி, என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் ஒத்த காசு நீங்க கொடுக்க வேணாம்னு' சொல்லிட்டு போயிருக்கார். வீட்ல ஒரே புடுங்கல். அவர் என் கிட்ட தனியா பேச இங்க இன்னும் 15 நிமிசத்துல வரேனு இருக்கார். இன்னும் , நம்ம விசயம் வீட்டுல தெரியாததால, என்னால மறுக்க முடியல. நீங்க நல்ல முடிவோட நாளைக்கு இதே நேரத்துக்கு இங்க வாங்க, உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்" என சொன்னவள், இவன் பதிலுக்கு காத்திருக்காமல், ஹோட்டல் உள்ளே சென்றாள்.

மிகவும் நொந்துபோன மன நிலையிலிருந்தான் கிருஷ்ணா. அவன் நிலையை நினைத்து அவனுக்கே கேவலமாக இருந்தது. தன் நிலையை நினைத்து மிகவும் வருந்தினான். தான் ஏன் யாருக்கும் பயன்படாத ஒரு ஜென்மாயிருக்கிறோம்? என தன்மீதே வெறுப்புற்றான். இதுவரை தன்னால் யாருக்கேனும் ஒரு சிறு நல்லது நடந்திருக்கிறதா? என யோசித்து பார்த்தான். ஒரு நிகழ்வும் மனதிற்கு தோன்றவில்லை. வீட்டிலும் நிம்மதி இல்லை. வெளியிலும் நிம்மதி இல்லை என நினைத்துக்கொண்டே ஒரு சிகரட்டை பற்றவைத்தவன், அங்கே நிற்க பிடிக்காமல், வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அடுத்த நாள் மாலை. நேற்று நின்ற அதே இடத்தில் இவனுக்கு முன் மாலா. அவள்தான் பேச்சை ஆரம்பித்தாள்.

" என்னங்க, என்ன முடிவு பண்ணீங்க?"

" அது இருக்கட்டும், அந்த மாப்பிள்ளை கூட சாப்பிட போனியே , டிபன் இனிச்சுதா?"

" என்னங்க அசிங்கமா பேசறீங்க, நான் என்ன கேட்குறேன், நீங்க என்ன சொல்லறீங்க?"

" அவன் கூட பேச ஓடுன, வெறும் டிபன் மட்டுமதானா, இல்லை எல்லாமே முடிஞ்சுதா?"

" என்ன நினைச்சு பேசறீங்க, என்னை சந்தேகப்படறீங்களா?"

" ஆமாண்டி அப்படித்தான் பேசுவேன், எனக்கு வேலை இல்லாத காரணத்தால வேலை பாக்குற மாப்பிள்ளை கிடைச்சோன, அவனோட உரசிட்டு சாப்பிட போற, நாளைக்கு அவன விட சம்பளம் அதிகமா வாங்குறவன் கிடைச்சா, இந்த மாப்பிள்ளையும் விட்டு போய்டுவ அப்படித்தானே, எல்லா பொம்பளைங்களும் அப்படித்தானேடி, காசு இருக்கவன தேடி தானேடி போவீங்க?"

"சீ, உங்களை போய் நான் காதலிச்சேனே, இப்போதான் உங்க சுயரூபம் தெரியுது. நல்ல வேள நான் தப்பிச்சேன். அட்லீஸ்ட் இப்போவே தெரிஞ்சுதே. நேற்று வந்த மாப்பிள்ள எவ்வளவோ தேவல. உங்கள கட்டிக்கிடா, வாழ்க்கை முழுதும் என்னை சந்தேகப்பட்டே கொன்னுடுவீங்க. ரொம்ப நன்றி, உங்களை எனக்கு புரிய வச்சதுக்கு. குட் பை" எனச்சொல்லி போனவளை, பரிதாபமாக பார்த்து நின்றான், கிருஷ்ணா.

ஆனால், அவளுக்கு தெரியாது கிருஷ்ணா 'ஏன் அப்படி பேசினான்' என்று. நேற்று இதே நேரம். மாலாவை சந்தித்து வீட்டிற்கு புறப்பட்டு போனவன், சற்று நேரம் யாரோ அவனை தேடி வந்திருப்பதாக அவன் அப்பா கூப்பிட, வாசலுக்கு போனான். அங்கே ஒரு வயதான பெரியவர் நின்றிருந்தார்.

" யாரு நீங்க?" என்றான் கிருஷ்ணன்.

" தம்பி, மாலாவை பத்தி பேசணும்" என்றவரை மாடிக்கு அழைத்து சென்றான்.

" என்ன சார்?"

" தம்பி, நீங்களும் மாலாவும் காதலிக்கறது எனக்கு எப்படியோ தெரியும். நாங்க ரொம்ப ஏழைங்க.நான் நேரிடையாகவே விசயத்துக்கு வரேன். நான் ரிடையர்ட் ஆகி மூன்று வருசம் ஆகுது. மூன்று பொண்ணுங்க கல்யாணத்துக்கு நிக்கறது உங்களுக்கே தெரியும். மூத்தவளுக்கு கல்யாணம் ஆனாத்தான், அடுத்தவங்களுக்கு பார்க்க முடியும். நேற்று வந்தவர்கள், தங்கள் இரெண்டு மகன்களுக்கும் என் இரண்டு பெண்களையும் கேட்கிறார்கள். வரதட்சணை வேண்டாம் என்றும் அவர்களே கல்யாண செலவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் சொல்கிறார்கள். மாலாதான் முரண்டு பிடிக்கிறாள். மாலா முடியாது என்று சொன்னால், அடுத்தவளுக்கு மட்டும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். தயவு செய்து நீங்கள் என் பெண்ணை பிடிக்கவில்லை என சொல்லி ஒதுங்கிகொண்டால், என்னோட பிரச்சனையெல்லாம் தீர்ந்துவிடும். கடைசி பெண்ணுக்கு எப்படியாவது அடுதத வருடம் திருமணம் செய்திவிட்டு கண்ணை மூடிவிடுவேன். எனக்கு வேறு அடிக்கடி நெஞ்சு வலி வருகிறது. நான் போய்ட்டா, இதுங்கெல்லாம் அனாதையா நிக்கும். அதான் உங்கள பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தேன். இதை செஞ்சீங்கன்னா, நீங்க எங்க வீட்டு குலத்தெய்வம் மாதிரி" என்று தன் காலில் விழுந்தவரை அதிர்ச்சியுடன் தூக்கினான் கிருஷ்ணா.

" நீங்க கவலப்படாம போய்ட்டு வாங்க எல்லாம் நல்லபடி நடக்கும்" என்று சொல்லி அனுப்பி வைத்தான், கிருஷ்ணா. தன்னால் இதுவரை யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை, அட்லீஸ்ட் ஒரு குடும்பம் நல்லா இருக்கவாவது தான் பயன்படுகிறோமே என்று நினைத்துதான் தன் மனதை கல்லாக்கிகொண்டு அந்த முடிவை எடுத்தான் கிருஷ்ணா.

மாலாவிடம் பேசிய அடுத்த நாள் காலை. குளித்து விட்டு கிளம்பியவனை, அவன் அப்பா கேட்டார்,

" எங்கேடா, காலைல கிளம்பிட்ட?"

" உங்க நண்பர் மில்லுல வேலைக்கு சேரப்பொறேன்"

" வேண்டாம்பா, வெயிட் பண்ணு. நல்ல வேலை கிடைக்கும். மில்லுல எல்லாம் வேலை பார்க்க வேண்டாம்" என்றவரை ஆச்சர்யத்துடன் பார்த்தான் கிருஷ்ணா.

முந்தா நாள் இரவு அவனும், மாலாவின் அப்பாவும் பேசியதை, இவன் அப்பா கேட்டு, தன் மகனின் நிலையை நினைத்து கண்ணீர் சிந்தியதையோ, தன்னை போலவே கஷ்டப்படும் ஒரு ஏழை குடும்பத்தை காப்பாற்ற தன் மகன் தன் காதலை தியாகம் பண்ண துணிந்ததை தெரிந்ததும், தன் மகனை நினைத்து பெருமை அடைந்ததையோ, கிருஷ்ணா அறிந்திருக்கவில்லை.

11 comments:

கடைக்குட்டி said...

ட்விஸ்டுகள் சூப்பர்:-)

ஆனா இன்னும் வார்த்தைகளை கரெக்டா உபயோகிச்சு இருந்தா நல்லா இருந்திருக்கும்....

1500 க்கு வாழ்த்துக்கள்

கலையரசன் said...

பாஸ்.. நிறைய தமிழ்படம் பாப்பீங்க போல?
லாலா... லாலா... லாலாலா! அப்டின்னு
மியூசிக் கேட்ட மாதிரி, இருந்துச்சி!
நல்லாதான் எழுதுறீங்க..
வேற நல்ல கதையா ரெடி பண்னுங் பாஸூ!!

இப்படிக்கு,
விக்ரமனை விரட்டிவிட்டோர் சங்கம்!!

iniyavan said...

நண்பர் கடைக்குட்டி,

உங்களின் வாழ்த்திற்கு நன்றி.

iniyavan said...

//பாஸ்.. நிறைய தமிழ்படம் பாப்பீங்க போல?
லாலா... லாலா... லாலாலா! அப்டின்னு
மியூசிக் கேட்ட மாதிரி, இருந்துச்சி!
நல்லாதான் எழுதுறீங்க..
வேற நல்ல கதையா ரெடி பண்னுங் பாஸூ!!

இப்படிக்கு,
விக்ரமனை விரட்டிவிட்டோர் சங்கம்!!//

நண்பரே,
ஒரு வேலையில்லாத நபரின் வாழ்வில் நடக்கும் விசயங்களை என்னால் முடிந்தவரை ஆயிரம் வார்த்தைகளுக்குள் பதிவிட முயன்றிருக்கிறேன். அது உங்களுக்கு விகரமன் படம் போல் இருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.

யாருக்காகவும் வேறு கதை ரெடி பண்ணும் எண்ணம் எனக்கில்லை.

சாரி, நண்பரே!!!

வினோத்குமார் said...

கதை அருமை தோழா...

வெற்றி-[க்]-கதிரவன் said...

மாலா திருமண பேச்சை ஆரம்பிக்கும் பொழுதே அடுத்து கதை எப்படி நகரும் என்பதை உணரமுடிகிறது ஆனால் இறுதியில் கிருஷ்ணனின் தந்தை சொல்வது எதிர்பார்க்காத ஒன்று.

வாழ்த்துக்கள் !!!

அப்துல்மாலிக் said...

கதையோட்டம் பழயது மாதிரி இருந்தாலும், கடைசியில் ட்விஸ்ட் சூப்பர்

வாழ்த்துக்கள்

iniyavan said...

கருத்துக்கள்ள் சொன்ன நண்பர்கள் வினோத்குமார், பித்தன் அவர்களுக்கு நன்றி.

iniyavan said...

//கதையோட்டம் பழயது மாதிரி இருந்தாலும், கடைசியில் ட்விஸ்ட் சூப்பர்

வாழ்த்துக்கள்//

நன்றி அபு அப்ஸர்.

Unknown said...

வழக்கமான வெகு ஜனப் பத்திரிக்கையில் வரும் திடீர் திடீர் எதிர்பாராத சம்பவங்கள் நிறைந்த தினமலர் கதை.அதே பாணியில் நன்றாகச் சொல்லப்பட்டு இருக்கிற்து.

கதாநாயகனுக்கு தியாகி பட்டம் வேறு மாதிரி யதார்த்தமாகொடுத்திருக்கலாம்.

திடீர் சம்பவஙகள்(பெரியவர் இவர் வீட்டுக்கு வருவது) இல்லாமல் அவனே தன் இயலாமையை தெரிவித்து காதலிக்கு குட்பை சொல்லியிருக்கலாம்.அது யதார்த்தம்.

மாலா ஏன் “நேற்று வந்தவர்கள், தங்கள் இரண்டு மகன்களுக்கும் என் இரண்டு பெண்களையும் கேட்கிறார்கள்.” விஷயத்தை அவனிடம் சொல்லவில்லை?

iniyavan said...

நன்றி ரவிசங்கர்.

அருமையான விமர்சனம். முன்பே உங்களை படிக்க சொல்லியிருந்தால் ஒரு வேளை பரிசு கிடைத்திருக்கலாம்.

மீண்டும் நன்றி.