கீ போர்ட் வாங்கியபோது
====================
சிறு வயதிலிருந்து எனக்கு ஏதாவது ஒரு இசைக் கருவி கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. அப்போது அவ்வளவு வசதியும் இல்லை, நேரமும் இல்லை. எப்பவும் படி படி எனக்கூறியதால், என் ஆசை அப்படியே மனதிலேயே ஒரு ஓரத்திலே இருந்து கொண்டிருந்தது. நான் கல்லூரி படிக்கும்போது என் நண்பன் அனந்த நாரயணன் திருச்சி டவுண்ட் ஸ்டேசன் அருகே ஒரு ஆசிரியரிடம் மிருதங்கம் கற்றுக்கொண்டான். எனக்கும் ஆசை ஆனால், என்னால் பல காரணங்களால் கற்றுக்கொள்ள முடியவில்லை. 2007 அக்டோபர் மாதம் ஒரு நாள் என் பெண் கோயிலில் பரத நாட்டியம் ஆடியபோது, நாம் கீ போர்ட் வாசித்து அவள் ஆடினால், எப்படி இருக்கும் என நினைத்து, இப்போது கீ போர்ட் கற்றுக்கொண்டால் என்ன எனத்தோன்ற, மலேசியாவில் என் ஊர் முழுவதும் தேடினேன், நல்ல ஆசிரியரை.
பத்து நாள் தேடலுக்கு பிறகு ஒரு இடத்தை கண்டுபிடித்து போய் பேசினேன். வாரத்திற்கு ஒரு நாள் தான் வகுப்பு, மாதம் 100 வெள்ளி பீஸ் என்றார்கள். நானும் ஒத்துகொண்டு அடுத்த நாளிலிருந்து வருவதாக கூறிவிட்டு சந்தோசமாக வீட்டிற்கு வந்தேன். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்றேன். ஆசிரியர் வெளியே சென்றிருந்தார். அந்த ஆசிரியையின் கணவர்தான் அந்த நிறுவனத்தின் முதலாளி. நான் வாயை மூடிக்கொண்டிருந்திருக்கலாம்.
நான் அவரிடம், " எத்தனை நாளில் நான் கீபோர்ட் நன்றாக வாசிக்க முடியும்" என்றேன்.
" ஹலோ, முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கங்க. நீங்க இங்க கத்துக்க போறது கீபோர்ட் இல்ல, பியானோ. பியானோ கத்துக்கிட்டாலே வீட்ல கீபோர்ட் நீங்களா வாசிக்கலாம்"
என்னோட மூளைக்கு அன்னைக்குத்தான் இந்த விசயம் தெரிய வந்தது. அடுத்த கேள்வி, " சார், ஒரு வாரத்துக்கு ஒரு நாள் கிளாஸ் போதுமா?" என்றேன்.
" முதல்ல ஒரு கிளாஸ்ல சொல்லித்தரத நல்ல படியா வாசிங்க. அப்புறம் கேளுங்க ஒரு நாள் போதுமா, போதாதனு"
இப்படியே எங்கள் பேச்சு நீண்டது. ஒரு மணி நேரத்துக்கு அப்புறமும் அவர் மனைவி வராததால், அடுத்த நாள் வரச்சொன்னார்.
அடுத்த நாள் சென்றேன், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, " உங்களுக்கு சொல்லித்தர எங்களுக்கு விருப்பம் இல்லை"
நான் " ஏன்?" என்றேன்.
காரணம் எல்லாம் சொல்ல முடியாது என்றார். எனக்கு மிகுந்த அவமானமும், எரிச்சலும் வந்தது. வந்த கோபத்தில் எப்படியும் நாம் கற்றுக்கொண்டு அந்த ஆள் முன்னாடி வாசித்துக்காட்ட வேண்டுமென முடிவெடுத்து அடுத்த நிறுவனத்தை தேடி ஓடினேன். அங்கும் வாரம் ஒரு நாள் தான் கிளாஸ். மாதம் 120 வெள்ளி. ஒவ்வொரு பியானோ புத்தகமும் 50 வெள்ளி.
ஆனால், ஒரு கண்டிசன் போட்டார் அந்த ஓனர். என்னவென்றால் அவரிடமே கீ போர்ட் வாங்க வேண்டும் என்று. உடனே 1200 வெள்ளி விலையுள்ள யமாகா கீபோர்ட், அதுக்கு ஸ்டாண்ட், முன் பணம், புத்தகத்துக்கு பணமுனு கிட்டத்தட்ட ஒரு 20000 ரூபாய் செலவு செய்தேன். நவம்பர் 2007ல் சேர்ந்தேன். ஒரு நான்கு மாதம் கழித்து பீஸை 150 வெள்ளி மாதத்துக்கு என்றார்கள். பிறகு 200 வெள்ளி என்றார்கள். ஒரு வெள்ளி 13.50 ரூபாய். அப்போ கணக்கு போட்டுக்கங்க. எவ்வளவு செலவாயிருக்கும் என்று.
எல்லா நோட்ஸும் ஆங்கில நோட்ஸ் வேறு. நான்கு மாதம் கழித்து ஒரு நாள் ஆசிரியரிடம் கேட்டேன்,
" எத்தனை நாளில் நான் கீபோர்ட் நன்றாக வாசிக்க முடியும்"
அவர் சொன்ன பதில்தான் என்னை இந்த பதிவை எழுதத்தூண்டியது.
" அனேகமா, இன்னும் 8 வருசம் ஆகலாம்"
" என்ன மேடம் இப்படி சொல்லறீங்க?"
" ஆமா, சார் சின்ன பிள்ளைங்கன்னா, உடனே கற்றுக்கலாம். உங்க வயசுக்கு கொஞ்ச நாள் ஆகும்"
அன்னைக்கு விட்டவன்தான், இன்று வரை கீ போர்டை தொட முடியவில்லை. தினமும் அந்த கீ போர்டை பார்க்கும்போதெல்லாம், வேதனையாக உள்ளது.
இதிலிருந்து நான் தெரிந்து கொண்ட பாடம்:
01. சின்ன வயசில் ஏற்படும் ஆசையை கூடுமான வரை அந்த வயசிலேயே நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
02. எந்த விசயத்தை ஆரம்பித்தாலும், முழு ஈடுபாட்டுடன் செய்யவேண்டும்.
03. தினமும் பயிற்சி செய்ய வேண்டும் முழு கவனத்துடன்.
என்னை அந்த பியானோ வகுப்பில் சேர்த்துவிட்ட நண்பர் கேட்டார்,
" என்ன சார் பியானோ நல்லா வாசிப்பீங்களா இப்ப?"
" ம்ம்ம் வாசிப்பேனே, பியானோனு பேப்பர்ல எழுதி"
என்ன பண்ணறது.
ஆனால் எப்படியும் இந்த பிறவி முடிவதற்குள் கற்றுக்கொள்ள வேண்டும்.
பரிசல், கீபோர்ட் கத்துக்க போறாராம், அவருக்காக இந்த பதிவு.
8 comments:
//பரிசல், கீபோர்ட் கத்துக்க போறாராம், அவருக்காக இந்த பதிவு.//
இது புத்தி சொல்லும் பதிவா?
இல்லை...
தயவு செய்து அந்த கீபோர்டை திருப்பூருக்கு பார்சல் செய்யவும். உங்களுக்கு புண்ணியமாகப் போகும்!
அப்பாவி முருவிற்கும், பரிசலுக்கும் நன்றி.
பரிசல், அட்ரெஸ் குடுங்க அனுப்பி வைக்கிறேன்.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'நானும் எனதருமை கீ போர்டும் (பியானோவும்)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 20th June 2009 10:40:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/75586
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி.
//சின்ன வயசில் ஏற்படும் ஆசையை கூடுமான வரை அந்த வயசிலேயே நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்//
அப்போல்லாம் காசு இருந்ததில்லியே தலைவா...
நன்றி "எவனோ ஒருவன் அவர்களே''
சிங்கப்பூரில் மாதம் 70 வெள்ளி கொடுத்து ஒருவருடம் கற்றுகொண்டேன்
(வாரம் 1 நாள்)
ஓரளவிற்க்கு வாசிப்பேன்
வேலைக்கு செல்வதால் நேரம் இல்லை
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எல்லா ஆசையுமா நிறைவேருது???
Post a Comment