Jun 21, 2009

"அப்பா" என்ற அந்த மூன்றெழுத்து மந்திரம்!

"அப்பா" என சொல்லும்போதே உடம்பு சிலிர்க்கிறது.

என் அப்பா 12 வயது வரை எனக்கு குரு, காலேஜ் முடிந்து வேலையில் சேரும் வரை வில்லன், ஆனால் இன்றோ ஹீரோவும் தெய்வமுமாய்.
எனக்கு ஒரு பத்து வயது இருக்கும். அடுத்த நாள் தீபாவளி. அப்பா ட்ரெஸ் வாங்கி வருவார் என வாசலிலேயே உட்கார்ந்திருக்கிறேன். இரவு வருகிறார். ட்ரெஸை காண்பிக்கிறார். என் மூஞ்சி போன போக்கை வைத்து என்னை புரிந்து கொள்கிறார். உடனே அந்த இரவிலும் கிளம்புகிறார், அடுத்த ட்ரெஸ் வாங்க.

பத்தாவதில் அதிக மார்க வாங்கியும், நான் காமர்ஸ் குரூப் எடுக்க ஆசைப்படுகிறேன். எல்லோரும் டிப்ளமோ சேர்கிறார்கள். என்னையும் வற்புறுத்துகிறார்கள். நான் மறுக்கிறேன். அப்பா கூப்பிடுகிறார்,

"ஏம்பா, உனக்கு டிப்ளமா பிடிக்கலையா"

"இல்லைப்பா"

"ஏன்?"

"எனக்கு ஒயிட் காலர் ஜாப் பார்க்கணும்னு ஆசை. பிகாம், எம்காம், ICWA, ACS, CA அப்படி ஏதாவது படிக்கலாமுனு"

"சரிப்பா, உனக்கு எது புடிக்குதோ, அதைப்படி. ஆனா, எது படிச்சாலும் அதுல பெரியா ஆளா வரப்பாரு"

வயது 20. கிரிக்கட், பத்திரிக்கை, படிப்புனு இருந்த காலம். கிரிக்கட் விளையாட அதிக நேரம் செலவானபோது, ஒரு நாள் அப்பா கூப்பிட்டார்,

" தம்பி, கிரிக்கட் விளையாடு. வேணாம்னு சொல்ல. ஆனா, படிப்பா, பத்திரிக்கையா, கிரிக்கட்டானு என்னை கேட்டினா, படிப்புதான் சொல்லுவேன். எனக்கு எங்க அப்பா சொத்து சேர்த்து வைக்கல. நானும் உங்களுக்கு ஒன்னும் சேர்க்கல. உனக்கு இருக்கும், இருக்க போகும் ஒரே சொத்து உன் படிப்புதான். பார்த்து நடந்துக்கோ"

என்ன ஒரு அற்புதமான அறிவுரை பாருங்க. அவர் மட்டும் அப்படி அன்னைக்கு சொல்லைனா, இன்னைக்கு நான் இப்படி இருக்க முடியுமா?

ஒரு முறை கல்லூரி படிக்கும்போது ட்ரெஸ் வாங்க பணம் கேட்டேன். அவர் குடுத்த பணம் எனக்கு பத்தவில்லை. சண்டை போட்டேன். என் கிட்ட அவ்வளவு பணம் இல்லைப்பா? என்றவர், வெளியில் போய்ட்டு வந்து விட்டு கேட்ட பணத்தை கொடுத்தார்.

அம்மாவிடம் கேட்டேன், " ஏதும்மா, அப்பாவுக்கு பணம்?"

"எங்காவது கடன் வாங்கி வந்திருப்பார்" என்றார்கள்.

அடுத்து வந்த ஒரு நாளில், நான் புது ட்ரெஸ்ஸை போடலாம் என நினைத்து, ரூமிற்கு சென்று எடுக்க போகையில், அப்பாவை பார்க்கிறேன். அவர் பனியன் முழுவதும் ஓட்டை. அதை போட்டு வெள்ளை சைட்டை போட்டு ஆபிஸ் செல்கிறார். அம்மாவிடம் கேட்கிறேன்,

"ஏம்மா, அப்பா ஒரு நல்ல பனியன் வாங்க கூடாதா?''

"இதை, நீ பணம் பத்துலனு அப்பாட்ட சண்ட போட்ட பாரு, அப்ப கேட்டுருக்கணும்"

அதற்கப்புறம் அந்த சட்டை போடும்போதெல்லாம் அதே நினைவு. இன்று எத்தனை உடைகள், எத்தனை பனியன்????

எனக்கு நன்றாக நினைவுள்ளது. 2001 நவம்பர் 10 ம்தேதி சனிக்கிழமை மதியம் ஊரிலிருந்து போன். மாமாதான் போன் பண்ணினார்.

"என்ன மாமா?"

"உடனே கிளம்ப முடியுமா?"

"ஏன்?"

"கிளம்பு, ரவி?"

"அதான், ஏன் மாமா?"

"அப்பா, நம்ம விட்டு போய்ட்டாரு"

எனக்கு முன்பே இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தாலும் அந்த நேரத்தில் நான் அடைந்த வேதனை வார்த்தைகளால் விளக்க முடியாதது. உடனே கிளம்ப வேண்டும். சனிக்கிழமை வேறு. இந்தியாவிற்கு டிக்கட் கிடைக்குமா? தெரியாது. எதைப்பற்றியும் கவலைப்படாமல், எங்கள் ஊரிலிருந்து பஸ்ஸில் கோலாலம்பூர் சென்றேன். இரவு 12 மணிக்கு டிக்கட் ஏஜண்ட் வீடு சென்றேன். டிக்கட்டை கொடுத்தவர் சொன்னார்,

"சார், எந்த பிளைட்லயும் டிக்கட் இல்லை. இந்தியன் ஏர்லைன்ஸ்ல டிக்கட் போட்டுருக்கேன். அந்த மேனஜர் கிட்ட சொல்லிருக்கேன். காலைல அலுவலகம் திறந்தோன அவர போய் பாருங்க"

"நன்றி" சொல்லிட்டு ஒரு வாடகை கார்ல ஏற்போர்ட் போறேன். இரவு 1 மணிக்கு ஏற்போட் அடைந்தேன். காலைல 8.30க்கு பிளைட். எங்க தங்கறது, எங்க தூங்கறது? தூக்கமா வரும். மனம் எல்லாம் சோகம். அழுகை. எப்போ விடியும் என்று காத்திருக்கிறேன். வீட்டிற்கு போன் செய்ய முடியவில்லை. அன்று என் கை தொலைபேசியில் இந்தியாவிற்கு நேரடியாக பேசும் வசதி இல்லை. அன்றுதான், முதல் முறை வெளி நாட்டில் வேலை செய்வதற்காக கதறி அழுதேன். சுதந்திரமாக என்னால் அழக்கூட முடியவில்லை. பாத்ரூம் சென்று அழுது அழுது வந்தேன். காலை 5 மணிக்கு ஏர்லைன்ஸ் ஆபிஸ் வாசலுக்கு சென்றேன்.
அவர் கூறினார், "சார், வெயிட் பண்ணுங்க 8 மணிக்குத்தான் சொல்ல முடியும், சீட் இருக்கா இல்லையா என்று"

அந்த நல்ல மனிதர் 8 மணிக்கு என்னை கூப்பிட்டார், " தம்பி, ஒரு வழியா உங்களுக்கு டிக்கட் போட்டுட்டேன். இன்னைக்கு பிளைட் இரண்டு மணி நேரம் லேட். எப்பவும் போற ரூட்டுல பிளைட் இன்னைக்கு போகாது, வேற ரூட்ல போறதால கூட ஒரு மணி நேரம் ஆகும். அதுவரை பாடிய வைச்சிருப்பாங்களா?"

விதிய நினைச்சு அப்படியே சரிந்து உட்கார்ந்தேன். இரண்டு மணி நேர தாமதத்துக்கு பிறகு பிளைட் கிளம்பி ஒரு வழியாய் மெட்ராஸ் போனது. கம்பனி மூலம் டாக்ஸி ரெடியாக இருந்தது.
டாக்ஸி டிரைவரிடம் சொன்னேன், " சார், அப்பா இறந்து ஒரு நாளைக்கு மேலே ஆகுது. நோய் தின்ற உடம்பு. நான் போறதுக்குள்ள எடுத்துட கூடாது. எங்க அப்பாவ நான் பார்க்கணும். நீங்க எனக்கு தெய்வம் மாதிரி, சீக்கரம் கூட்டிடு போங்க"

தெய்வம் என்னை சரியான நேரத்துக்கு கூட்டிச்சென்றார்.

போய் சேர்ந்தபோது இரவு மணி 8. எல்லா சம்பிரதாயமும் முடிந்து சுடு காட்டுக்கு சென்றோம். அன்றுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. என்ன சம்பாத்திது என்ன பயன். கடைசியில் ஆறு அடி இல்லை, இல்லை , அதுவும் எங்களுக்கு வெறும் 3 அடி சமாதிதான். அதற்கு தான் இவ்வளவு போட்டி, பொறாமை, அடிதடி. அத்தனையும்.

எல்லோருக்கும் நல்ல குருவாய், தெய்வமாய், தோழனாய், கண்டிக்கும்போது வில்லனாய், அப்பா அமைவது மிகவும் அறிது.

எனக்கு அந்த பாக்யத்தை ஆண்டவன் அருளினான்.

இன்று காலை என் பிள்ளைகள் எனக்கு "தந்தையர் தின வாழ்த்துக்கள்" சொல்லி, வாழ்த்து அட்டை கொடுத்தார்கள். அப்போது ஏற்பட்ட உணர்வுகளினால் எழுதப்பட்ட பதிவு இது.

15 comments:

அப்பாவி முரு said...

உருக்கமான இடுகை உலகநாதன்.,

படிக்கவே கடினமாக இருந்தது. எதிரிக்கும் வரக்கூடாத நிலை.

அடுத்து.,

//2011 நவம்பர் 10 ம்தேதி சனிக்கிழமை//

வருசம் தப்புன்னு நினைக்கிறேன். சரிபண்ணுங்க.

iniyavan said...

நண்பா,

தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

சரி செய்துவிட்டேன்.

iniyavan said...

என்னால் இரண்டு நாட்களாக தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லை. என்ன காரணம் எனத்தெரியவில்லை.

விசயம் தெரிந்த யாராவது விளக்குவார்களா?

dondu(#11168674346665545885) said...

நல்ல பதிவு. என் தந்தை பற்றி நான் இட்ட பதிவை பார்க்கவும், http://dondu.blogspot.com/2006/02/blog-post_16.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

♥♪•வெற்றி•♪♥ said...

நல்ல பதிவு...!என் த‌ந்தையையும் நினைத்துப் பார்க்கிறேன்..!

http://vetripages.blogspot.com/2009/06/blog-post_6845.html

எனது கன்னி எழுத்து முயற்சிக்கு உங்க‌ள் பின்னூட்ட‌ம் வ‌ழியாக‌வும்,ஓட்டு போட்டும் ஆத‌ர‌வு த‌ருக‌..!
குறைக‌ள் இருப்பின் பின்னூட்ட‌ம் வாயிலாக‌ச் சுட்டிக்காட்ட‌‌வும்.

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled '"அப்பா" என்ற அந்த மூன்றெழுத்து மந்திரம்!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st June 2009 09:00:01 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/75975

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி.

goma said...

இனியவன் இதயத்தில் இப்படி ஒரு வேதனையா?
தந்தையர் தினம் அதற்கு வடிகாலாக அமைந்து உங்கள் சோகம் எங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வைத்தது .

பனையூரான் said...

வாசிக்க கண்கள் கலங்கிவிட்டன

Suresh said...

நெகிழ்ச்சியான இடுக்கை தலைவா..

நான் திருச்சியில் தான் இருக்கிறேன் விவரங்களை மெயிலில் பகிர்ந்து கொள்ளலாம் .. suresh.sci@gmail.com மெயில் செய்யுங்க தலைவா...

iniyavan said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள்,
அப்பாவி முரு,
டோண்டு சார்,
வெற்றி,
goma,
பனையூரான்,
சுரேஷ்
ஆகியோருக்கு நன்றி.

Anonymous said...

மனதை கலங்க வைத்து விட்டீர்கள்.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

மிக அர்த்தமுள்ள பதிவு. உலகில் யாரையும் புரிந்து கொள்ள சுலபமாக இருந்தாலும் அப்பா என்ற மனிதரை புரிந்து கொள்ள பெரும்பாலும் யாரும் முயற்சி கூட எடுப்பதில்லை. ஒரு பெரிய சமூக இடைவெளி பொது புத்தியாகவே இருக்கிறது... மரணத்தின் போது கூட உடனே செல்ல முடியாத அளவுக்கு நம்மை தூரத்தில் நிறுத்தும் பொருளாதார காரணங்கள் - பிரசவ வைராக்கியங்கள் போல - தவிர்க்க முடியாதது என நம்மை நாமே ஏமாற்றும் சமூக அவலம்.

sarathy said...

// அன்றுதான், முதல் முறை வெளி நாட்டில் வேலை செய்வதற்காக கதறி அழுதேன். சுதந்திரமாக என்னால் அழக்கூட முடியவில்லை. //

// மரணத்தின் போது கூட உடனே செல்ல முடியாத அளவுக்கு நம்மை தூரத்தில் நிறுத்தும் பொருளாதார காரணங்கள் //

உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடைட்டும்...

அது ஒரு கனாக் காலம் said...

moving experience...very well expressed ..

Suresh said...

Hi,

Recently I started reading your blogs.This incident is same as mine.

I am a software engineer working in japan.last year after diwali ,my father passed away.Its a total unexpected because one day before only i spoke to my father for more than 1 hour about his wishes and things he planned for me.Be frank that is the first time we are speaking like that.
During my childhood to college days he is very strict and i spoke to him not more than max. 10000 words in my 28 years.
because of my everyone's help,i reached my native with in a day,did all the things.

For the first time in life i said "Appa",but he didnt hear,he cant hear anymore.

Now i am slowly doing all his wishes.

Basically i am from lower middle class.Even i am the first graduate in my whole family line.Not even celebrate proper diwali upto my 10th standard.
After schooling, i want to be an engineer.But beacuse of my faily situation everyone wants i need to go some job.My father arranged the loan and sent me to college.
At the that is very very huge amount for us.I studied all 4 years in my loan itself.
Now i realised because of this strict, now i am some good position.But he was not ther to enjoy this.

While writing this i am not able to control my tears.