Jun 26, 2009

பெண் குழந்தைகள் என்றால் மட்டமா?.....
2000 ஆம் ஆண்டின் ஜுன் மாதத்தில் ஒரு நாள். நான் விடுமுறையில் இந்தியாவில் இருந்தேன். மாமியார் வீட்டிலிருந்து போன். என் மனைவிக்கு வைத்து வலி ஏற்பட்டு விட்டதாகவும், ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும் சொன்னார்கள். உடனே நானும் என் அம்மாவும் காரில் வேக வேகமாக திருவாரூர் சென்றோம். நாங்கள் சென்றபோது ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். என்ன? என்று கேட்டபோது, சாதாரண வலிதான், குழந்தை பிறக்க இன்னும் இரண்டு வாரம் ஆகும் என்றார்கள். எனக்கு ஒரே எரிச்சல். என்னுடைய விடுமுறையோ முடியப் போகிறது. அதனால், எரிச்சலில் "அடுத்த முறை வலி வந்தவுடன், குழந்தை பிறப்பதற்கான வலியா என டாக்டரிடம் கேட்டு விட்டு போன் செய்யுங்கள்" என கோபமாக சொல்லி விட்டு வந்து விட்டேன். ஒரே டென்சன். குழந்தை பிறந்த பாடில்லை. அந்த ஆஸ்பத்திரியில் இருக்கும் எல்லாருமோ, இந்த டாக்டர் அதிகம் 'சிசேரியன்' தான் செய்வார் என்றார்கள். அதனால் வேறு அதிகம் டென்சன்.

ஜீன் 26ம் தேதி காலை மீண்டும் போன். ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டதாகவும், எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்றும் கூறினார்கள். எனக்கு டென்சன் ஆகிவிட்டது. உடனே பூஜை அறைக்குள் நுழைந்தவன் வெளியே வரவே இல்லை. ஆண்டவனிடம் இரண்டு வேண்டுதல்களை வைத்தேன். ஒன்று, சுகப்பிரசவம் ஆக வேண்டும், இரண்டு, ஆண் குழந்தை பிறக்க வேண்டும். சரியாக இரண்டு மணி நேரம் கழித்து மாமியார் போன் பண்ணினார்கள். சுகப் பிரசவம் ஆகி விட்டதாகவும், பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் கூறினார்கள். நான் ஒன்றும் பேசாமல் போனை கட் செய்து விட்டேன். என் அப்பா ஓடி வந்து, " கண்ணு வாழ்த்துக்கள்டா" என்று சொல்லி சாக்லெட் கொடுத்தார்கள். நான் சாக்லேட்டை வாங்கி தூக்கி எரிந்து விட்டேன். கோபம். ஆண் குழந்தை பிறக்க வில்லையே என்று. எல்லோரும் சமாதான படுத்தினார்கள். அந்த மன நிலை சிறிது மாறியதும் குழந்தையை பார்க்க திருவாரூர் சென்றேன். என் மனைவிக்கு முகம் எல்லாம் சந்தோசம், ஆனால், எனக்கு??

பிறகு நான்கு நாட்களில் மலேசியா வந்துவிட்டேன். பிறகு 4 மாத குழந்தையாக ஆனவுடன் மனைவியையும், குழந்தையையும் கூட்டி வந்தேன். பிறகு குழந்தையின் அழுகை, சிரிப்பு, விளையாட்டு எல்லாம் பார்த்து பிடித்து போய், அவள் கூடவே விளையாண்டு, அவள் கூடவே சாப்பிட்டு... அதெல்லாம் சுகமான தருணங்கள். பிறகு நான் இவள் பெண் குழந்தை என்பதை மறந்து, என் குழந்தை என்று சந்தோசப்பட்டு குதித்தேன். பிறகு நான்கு வயதில் LKG சேர்ந்து, இன்று நான்காவது முடித்து ஐந்தாவது போகப்போகிறாள்.

படிப்பில், பாட்டில், நாட்டியத்தில் என அனைத்திலும் முதலாவதாக வந்து என்னை எப்போதும் சந்தோசத்தில் வைத்திருக்கிறாள். அவள் படிக்கும் இண்டர்நேஷனல் பள்ளியில் அவள் வகுப்பில் அவள் தான் என்றும் சிறந்த மாணவி ( Outstanding Student).

சென்ற வாரத்தில் ஒரு நாள் என் பெண் என்னை பார்த்து கேட்டாள்:

"ஏன் டாடி, நான் பிறந்தோன என்னை உங்களுக்கு பிடிக்கலையாமே? நான் பெண்ணா பொறந்துட்டேனு வருத்தமாமே? சாக்லேட்டை தூக்கி எரிஞ்சீங்களாமே?"

எனக்கு என்னை யாரோ ஓங்கி பளார் என்று அறைந்தார் போல் இருந்தது. என்ன பதில் சொல்வேன்? நான் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணியிருக்கிறேன். பெண் குழந்தை என்றால் மட்டமா? நான் அன்று நடந்து கொண்ட முறைக்காக வெட்கி தலை குனிகிறேன். நான் பெண்கள் மேல் நிறைய மதிப்பு வைத்திருப்பவன். எனக்கு பெண்கள் என்றால், ரொம்ப பிடிக்கும். ஆனால், குழந்தை என்று வரும்போது ஏன் அப்படி நடந்து கொண்டேன்? எத்தனை பேர் குழந்தை இல்லாமல் தவிக்கிறார்கள். இதில் ஆண் குழந்தை என்றால் எனன? பெண் குழந்தை என்றால் என்ன?

"மன்னிச்சுக்கடா செல்லம், தெரியாம அப்படி நடந்துகிட்ட்டேன்".

இன்று பிறந்த நாள் காணும் என் பெண் "தேவதர்ஷிணியும்", 01.07.2009 அன்று பிறந்த நாள் காணும் என் பையன் "வெங்கடேஷும்" பல சுகங்கள் பெற்று, நோய் நொடி இல்லாமல், எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ, எங்கள் குல தெய்வம் கொப்பாட்டி அம்மனையும், எல்லாம் வல்ல என் திருப்பதி ஏழுமலையானையும், சமயபுர மாரியம்மனையும், மலேசிய கெமாமன் மாரியம்மனையும் வணங்கி, 'வாழ்க', 'வாழ்க' என வாழ்த்துகிறேன்.

4 comments:

Anonymous said...

வாழ்த்துகள்.

iniyavan said...

வாழ்த்துக்கு நன்றி புகழினி.

சங்கணேசன் said...

குழந்தைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

சீமாச்சு.. said...

தேவதர்ஷிணிக்கும் வெங்கடேஷுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

இந்த மாதிரி எண்ணங்களைத் தடை போடவே தான் வீட்டில் பெரியவர்களெல்லாம் பெண் குழந்தைகளை “லஷ்மி தேவி” என்று குறிப்பிடுவர்..

உங்கள் குழந்தைகள் வாழ்வில் எல்லா நலனும் பெற்று சிறக்க இறைவனை வேண்டுகிறேன்..