Jun 30, 2009

விவாகரத்து ஏன்?

எந்த சம்பவமுமே நம் வாழ்விலோ இல்லை, நமது உறவினர்கள் வாழ்விலோ நடைபெறாதவரை நமக்கு அதன் வலி தெரிவதில்லை. எனக்கும் அப்படித்தான், விவாகரத்தைப் பற்றி அதிகம் தெரியாது. தெரிந்துகொள்ளவும் விருப்பம் இல்லாமல் இருந்தேன் ஒரு வருடத்துக்கு முன்பு வரை. ஆனால், நெருங்கிய உறவினருக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு பிறகு அந்த வார்த்தையை கேட்டாலே குடும்பத்தினர் அனைவருக்குமே ஒரு கிலி ஏற்படுகிறது.

உண்மையாகவே தம்பதியர் இருவரும் சேர்ந்து வாழ முடியாத நிலையில் விவகாரத்து சட்டம் என்பது மிகவும் தேவையானதே. ஆனால் நடப்பது என்ன? கல்யாணம் ஆன ஆறு மாதத்திற்குள் எனக்கு அவரை பிடிக்கவில்லை அல்லது அவளை பிடிக்கவில்லை என்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும். குடும்பமே முன்னின்று, ஊர் உலகத்தை எல்லாம் கூட்டி, நிறைய செலவு செய்து, எல்லார் முன்னாடியும் திருமணம் செய்து, ஒரு ஆறு மாதம் வாழ்ந்துவிட்டு பிடிக்கவில்லையென்றால், என்ன நியாயம் இது? கல்யாணம் என்பது என்ன, காய்கறி வியாபாரமா என்ன? வேண்டாம் என்றால் திருப்பி கொடுக்க?

அதுவும் இல்லாமல், இப்போ தமிழ் நாட்டில், ஒரு பெண் குடும்ப நல கோர்ட்டில் கேஸ் கொடுத்தால், அவ்வளவுதான். அதிலும் "வரதட்சணை" என்ற ஒரு வார்த்தையை சேர்த்து விட்டால் அவ்வளவுதான். மொத்த குடும்பத்தையும் அள்ளிக்கொண்டு போலிஸ் ஸ்டேசனில் வைத்துவிடுகிறார்கள். அதுவும் வெள்ளி இரவு கைது செய்தால் அவ்வளவுதான். சனி, ஞாயிறு போலிஸ் ஸ்டேசன் வாசம்தான். உண்மையாகவே வரதட்சணை கேட்டிருந்தால், அவர்களை கைது பண்ணுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், வரதட்சணை என்பதை ஒரு ஆயுதமாக அல்லவா பயன்படுத்துகிறார்கள்!

பையனோ, பெண்ணோ செய்யும் தவறுக்கு, எதற்காக மொத்த குடும்பமும் போலிஸ் ஸ்டேசன் செல்ல வேண்டும். வயசான பெற்றோர்கள் எல்லாம் செய்யாத தவறுக்கு ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? நல்ல சட்டத்தை ஏன் தவறாக பயன் படுத்துகிறார்கள்.ஒரு முறை போலிஸ் ஸ்டேசன் சென்று வந்தால் அவர்கள் கட்டிக்காத்து வந்த குடும்ப கவுரவம் என்ன ஆவது? அத்ற்கு அப்புறம் அவர்கள் எப்படி ரோட்டில் தலை காட்டுவது? எப்படி தன்மானத்துடன் வாழ முடியும்.

பிடித்துதானே கல்யாணம் செய்துகொள்கிறார்கள், பின் ஏன் பிரிகிறார்கள்? ஆண்கள் முறைப்படி பிரிந்தால் மறுமணம் செய்து கொள்ள முடிகிறது. ஆனால், விவாகரத்து ஆன பெண்ணை எந்த ஆண் மறுமணம் செய்து கொள்ள முன் வருகிறார்கள்? அப்படியே கல்யாணம் செய்து கொண்டாலும் ஏன் அவர்களால் நிம்மதியாக வாழ முடியாமல் போகிறது?

எனக்கு தெரிந்த அந்த உறவினர் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத விசயத்திற்காக விவாகரத்துக்கு போய், அந்த மொத்த குடும்பமும் பட்ட வேதனை எனக்குத்தான் தெரியும். ஒரு ஆறு மாத காலம் அந்த குடும்பம் அடைந்த வேதனையை வார்த்தைகளால் என்னால் விளக்க முடியவில்லை. ஒரு தனி மனிதன் பண்ணும் தவறுக்கு மொத்த குடும்பமும் ஏன் பாதிக்க பட வேண்டும்? விவாகரத்துக்கு இங்கே முக்கியமான காரணமாவது மூன்று விசயங்கள்தான் என நான் நினைக்கிறேன். ஒன்று வரதட்சணை, இரண்டு ஈகோ, மூன்றாவதுதான் செக்ஸ் சம்ந்தபட்ட பிரச்சனை.

முதல் பிரச்சனைக்கு கோர்ட்டுக்கு செல்லலாம், மூன்றாவது பிரச்சனைக்கு டாக்டரிடம் செல்லாம். ஆனால், இரண்டாவது பிரச்சனைக்கு எங்கு செல்வது?. ஒரே படிப்பு தகுதியோ அல்லது வேலை தகுதியோ உள்ள இருவர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனைதான்.

என்னை பொறுத்தவரை, திருமணத்திற்கு முன் ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கலாம். பெண்ணையோ இல்லை ஆணையோ தேர்வு செய்யும்போது தகுதியானவரை செல்க்ட் செய்யும் உரிமை நமக்கு இருக்கிறது. அப்போது அப்பா சொன்னார், இல்லா அம்மா சொன்னர்கள் என்பதற்காக நாம் பிடிக்காத பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், முடிவு செய்து விட்டால், மாறக்கூடாது. கடைசிவரையில் வாழ்ந்து காட்ட வேண்டும்.

கல்யாணம் ஆனவுடன் இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துதான் போக வேண்டும். விட்டு கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை. சின்ன சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும். அவ்வாறு சண்டைகள் இருந்தால்தான் வாழ்க்கையே. அதை அனுபவித்து வாழ பழகிகொள்ள வேண்டும். நிறைய பேர் இந்த பாழாய்போன சினிமாவை பார்த்து கெட்டு போகிறார்கள். சினிமா வாழ்க்கை வேறு, இயல்பு வாழ்க்கை வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் இனி எங்களால் வாழ முடியாது என நினைத்தால் கோர்ட்டுக்கு போகலாம் தப்பே இல்லை. ஆனால், தயவு செய்து குடும்ப உறுப்பினர்களை கோர்ட்டுக்கு இழுக்காதீர்கள் அவர்கள் தப்பு செய்யாத பட்சத்தில்.

தயவு செய்து கோர்ட்டுக்கு போகும் முன் பல முறை யோசியுங்கள். ஒரு முறை விட்டு விட்டால் அதே வாழ்வு கிடைக்காதா என ஏங்கும் நிலை நிச்சயம் வரும். அப்போது நீங்கள் என்ன செய்தாலும், உங்களுக்கு அது கிடைக்காமல் போகலாம்.

உறவினரின் நிலையை நினைத்து மிகவும் நொந்து போன நிலமையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

18 comments:

iniyavan said...

Kummachi commented on your story 'விவாகரத்து ஏன்?'

'அருமையானக் கட்டுரை, எல்லோரும் சிந்திக்க வேண்டிய விஷயம்தான். '

தமிழ். சரவணன் said...

அட நீங்க வேற... வரதட்சணை கேசு போடுகிறேன் என்ற பெயரில்... பல வயசான தாய்மார்கள்... சகோதரிகள் அடுத்த வீட்டுக்காரன், நண்பர்கள், உறவினர்கள் இப்போ லேட்டஸ்டா இரண்டு மாத பச்சிளம் குழந்தை (நல்ல வேலை இவருக்கு முன்ஜாமின் கிடைத்துவிட்டது) எல்லாரையும் புடிச்சி உள்ள போட்டுட்டு அப்புறம் சேர்நதது வாழ்கிறேன் என்று அழுவாச்சி நாடகம் ஆடுவது இதெல்லாம் இப்போ நாட்டில் சகஜம்... இன்னும் கொஞ்ச நாள்ள கல்யாணம் என்ற பேச்சேடுத்தாலே "பின்னங்கால் பிடிறியில் அடிக்க ஓடி ஒளியப்போகின்றது இளைஞர்கூட்டம்" அப்புறம் நம்ப இந்திய காவல் துறை இதுவரைக்கும் சுமார் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் பெண்களை மட்டும் விசாரணை கைதிகளாக்கி சிறையில் அடைத்திருக்கின்றது... (எனது வயதான தாயர் மற்றும் என் தம்பி நண்பருடைய தாயர் உட்பட)

M Arunachalam said...

//முடிவு செய்து விட்டால், மாறக்கூடாது. கடைசிவரையில் வாழ்ந்து காட்ட வேண்டும். கல்யாணம் ஆனவுடன் இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துதான் போக வேண்டும். விட்டு கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை. சின்ன சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும். அவ்வாறு சண்டைகள் இருந்தால்தான் வாழ்க்கையே. அதை அனுபவித்து வாழ பழகிகொள்ள வேண்டும். //

Well Said. You have nicely written the "gist" of married life.

Having said this, I have come across that there is one more reason for the divorce these days. It is "suppression of material facts about the boy or girl" before marriage. This later on becomes THE reason for the break-up.

I find another reason for current generation to quickly start fighting & more often than not end up in divorces is due to the growth of "micro-families". In earlier days, there used to be many brothers & sisters & also joint families. Growing up in such an atmosphere has automatically would have taught about "team-work" or "how to live in a homogeneous group". Due to sprouting of micro-families, there is hardly an opportunity for today's generations to regularly "move" closely with people, which ultimately results in serious differences with the spouse after marriage.

Anyway, thanks for such an insightful write-up on such a sensitive subject. Please continue to write such meaningful stuff.

உண்மைத்தமிழன் said...

///தயவு செய்து கோர்ட்டுக்கு போகும் முன் பல முறை யோசியுங்கள். ஒரு முறை விட்டு விட்டால் அதே வாழ்வு கிடைக்காதா என ஏங்கும் நிலை நிச்சயம் வரும். அப்போது நீங்கள் என்ன செய்தாலும், உங்களுக்கு அது கிடைக்காமல் போகலாம்.///

நிச்சயமான உண்மை.

வெறும் ஈகோவினால் இரு தரப்பு ஆட்களாலும் உந்தப்பட்டு விவாகரத்து செய்துவிட்டு பின்னாளில் வருத்தப்படும் கணவன், மனைவிகளை நான் பார்த்திருக்கிறேன்.

அவசரப்பட்டால் அனைத்துமே வீண்தான்..

காலத்திற்கு ஏற்ற பதிவு இனியவன்..

வாழ்க வளமுடன்..

iniyavan said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள்,

கும்மாச்சி,
தமிழ் சரவணன்,
M. அருணாச்சலம்,
உண்மைத்தமிழன்
ஆகியோருக்கு நன்றி.

வடுவூர் குமார் said...

எனக்கு தெரிந்து நீங்கள் சொல்லியுள்ள ஈகோ பிரச்சனையில் ஒரு(பல) குடும்பம் இப்போது அல்லது எப்போது என்று இழுத்துக்கொண்டு இருக்கிறது.அவர்களுக்கு உள்ள குழந்தைகளால் அந்த முடிச்சு இன்னும் அவிழாமல் இருக்கு.

களப்பிரர் - jp said...

கலாசார காவலரே, சமுதாயத்திற்காக - உப்பு பிஸ்கட் கூட வாங்க உபயோகபடாதா மானம் மரியாதைக்காக சேர்ந்தே இருந்து போலியான வாழ்க்கை வாழவேண்டும் என்று வலியுறுத்த உங்களால் எப்படி முடிகிறது !!!

iniyavan said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் வடுவூர் குமார் மற்றும் களப்பிரர் ஆகியோருக்கு நன்றி.

iniyavan said...

//கலாசார காவலரே, சமுதாயத்திற்காக - உப்பு பிஸ்கட் கூட வாங்க உபயோகபடாதா மானம் மரியாதைக்காக சேர்ந்தே இருந்து போலியான வாழ்க்கை வாழவேண்டும் என்று வலியுறுத்த உங்களால் எப்படி முடிகிறது !!!//

நான் எந்த இடத்திலும் போலியான வாழ்க்கை வாழச் சொல்லவில்லை. சேர்ந்து வாழ முடியாத பட்சத்தில், பிரிவதில் தவறில்லை என்றுதான் கூறியிருக்கிறேன்.

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'விவாகரத்து ஏன்?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 30th June 2009 09:45:09 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/78783

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி.

களப்பிரர் - jp said...

// முடிவு செய்து விட்டால், மாறக்கூடாது. கடைசிவரையில் வாழ்ந்து காட்ட வேண்டும்.//

//கல்யாணம் ஆனவுடன் இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துதான் போக வேண்டும்.//

//கல்யாணம் ஆன ஆறு மாதத்திற்குள் எனக்கு அவரை பிடிக்கவில்லை அல்லது அவளை பிடிக்கவில்லை என்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும்.//

இதை எல்லாம் சொல்லியது யாருங்க பாஸ்?

iniyavan said...

//எக்காரணத்தை கொண்டும் இனி எங்களால் வாழ முடியாது என நினைத்தால் கோர்ட்டுக்கு போகலாம் தப்பே இல்லை. ஆனால், தயவு செய்து குடும்ப உறுப்பினர்களை கோர்ட்டுக்கு இழுக்காதீர்கள் அவர்கள் தப்பு செய்யாத பட்சத்தில்//

பாஸ், அப்படிச்சொன்ன நான் மேலே சொன்ன கருத்தையும் சொல்லியிருக்கிறேனே?

களப்பிரர் - jp said...

என்ன கொடும பாஸ்!!

எவ்ளோ கஷ்டம்னாலும் வாழ்ந்து காட்டனும், ரெம்ப கஷ்டம்னா விவகாரத்து வாங்கிகங்க !! இப்படி முரண்பாடுகளா !! தலை, எல்லா பேரு கிட்டயும் நல்லவனாக முடியாது. தேவையும் இல்ல. எங்கிட்டாவது ஒரு பக்கம் வாங்க. ??

Radhakrishnan said...

மிகவும் நல்ல கட்டுரை. தனிமனித உணர்வுகளுக்கு எப்பொது மரியாதையும் மதிப்பும் கிடைக்கிறதோ அப்போதுதான் ஒருவரையொருவர் மதித்தும், புரிந்தும் நடந்து கொள்வார்கள்.

நீங்கள் சொன்ன மூன்று பிரச்சினைகளை விட 'எதிர்பார்ப்பு' எனும் பிரச்சினைதான் மிகவும் அதிகமாக மனிதர்களைப் பாதிக்க வைக்கிறது.

நான் எப்படியெல்லாம் இருக்க ஆசைப்பட்டேன், உன்னால இப்படி இருக்கிறேனே என எண்ணும்போதே அங்கே பிரச்சினைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிடுகிறது.

தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, எந்தவொரு தேவையுமே அத்தனை எளிதாக பூர்த்தியடைவதில்லை என்பதை எண்ணாமல் வாழ்வதே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணம்.

பிடிக்கவில்லையெனில் விலகி வாழ்வதே உத்தமம், ஆனால் எதைத்தான் எல்லோருக்கும் பிடித்தே இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்வது மிகவும் சிறந்தது.

'அவசரத்தில் கல்யாணம், சாவகாசத்தில் சங்கடம்' (சரியாக எழுதி இருக்கிறேனா எனத் தெரியவில்லை) என வழக்கு மொழி உண்டு.

எப்பொழுதுப் பார்த்தாலும் நச்சரிப்புடன் வாழ்வது என்பது இலவசமாக இயலாது என்றே பலர் இந்த முடிவுக்கு வருகிறார்கள். இதே வேலையெனில் உதறித்தள்ள ஒரு சிலரே முன் வருவர்.

இந்த விவகாரத்துப் பிரச்சினையினாலும், பெற்றோர்களின் சண்டை சச்சரவுகளினாலும் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும், அவர்களது எதிர்காலமும் தான். நாம் விதைக்கும் விதையைத்தானே அவர்களும் அறுவடை செய்து விதைக்கவும் செய்கிறார்கள். எனவே கவனம் கொள்வோம், கருத்தில் கொள்வோம்.

மிக்க நன்றி உலகநாதன்.

iniyavan said...

உங்கள் தெளிவான கருத்துக்கு மிக்க நன்றி வெ.இராதாகிருஷ்ணன் சார்.

Anonymous said...

மாநகரத்தை (அதுவும் நகரத்திற்கு வெளியே தள்ளி-தான்) சேர்ந்த பெண் ; மிகுந்த அகங்காரமும் ஆணவமும் கொண்ட பெண் ; லௌகீக வாழ்வில் பெற்ற சில வெற்றிகளாலேயே தான் ஐன்ஸ்டீனின் வாரிசு என்ற தோரணையில் நடந்துகொள்ளும் பெண் ; கிராமத்துப்பின்னணி கொண்ட கணவனையும் அவனது குடும்பத்தாரையும் கேவலமாக பேசி அவமானப்படுத்தும் பெண் ; தான் விரும்பின(வனுடனான) வாழ்க்கை கிடைக்காத ஏமாற்றத்தால் கணவனின் வாழ்க்கையை நரகமாக்கும் பெண் ;

இப்படிப்பட்ட "பெண்" மனைவியாக அமையப்பெற்றால் எந்த ஆணால் மனமொப்பி இணைந்து வாழ இயலும் ?

Deepak Kumar Vasudevan said...

விவாகரத்து குறித்து அண்மையில் விஜய் டிவி யில் இடம்பெற்ற 'நீயா நானா' தொடரின் பதிவினை இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன்:

http://thamizhththendral.blogspot.com/2010/05/blog-post_19.html

விமலன் said...

நல்ல கட்டுரை சார்.ஈகோக்களின் உருவெடுப்பே பெரும்பாலும் விவாகரத்திற்கு அடிகோலுகின்றன.