Jul 31, 2009

கல்வியே ஒரு சுமையாகலாமா???

ரிப்போர்ட் டே என்பதாலும், பிரின்சிபால் நாங்கள் அவசியம் வரவேண்டும் என்று சொன்னதாலும் அவசர அவசரமாக அங்கே சென்றோம்.
போனவுடன் எல்லா பரிட்சை பேப்பர்களும் எங்களிடையே காண்பித்தார்கள். அனைத்திலும் 98 அல்லது 99 மார்க் எடுத்திருந்தான் என் பையன். எனக்கு ஒரே பெருமை. ஆனால் அடுத்து நடந்த உரையாடல்கள்தான் என்னை இந்த பதிவினை எழுத தூண்டியது.

"ரொம்ப தேங்க்ஸ் மேடம். பையன் ரொம்ப நல்ல மார்க் வாங்கியிருக்கான்"

" ரொம்ப மார்க் வாங்கியிருந்தாலும், சில விசயங்கள் நாங்க உங்க கிட்ட சொல்லணும்"

" என்ன விசயம்"

" பையன் ரொம்ப "சையா" இருக்கான். அவன் நல்லா கான்பிடெண்டா பேச மாட்டேங்கறான்"

" இல்லையே வீட்ல நல்லா பேசறானே"

" வீட்ல இருக்கலாம். அதனால நீங்க கேட்ட மாதிரி 'அந்த' வகுப்புக்கு எங்களால ப்ரோமோட் செய்ய முடியாது"

" என் பெண்ணும் அப்படித்தானே படிச்சா. இப்போ எல்லாத்துலயும் முதல் ரேங்க் வாங்கலியா?"

" அது அப்போ சார். இப்போ நாங்க அனுமதிக்க முடியாது"

" நீங்க ப்ரோமோட் பண்ணைலைனா, தயவு செய்து டிசி குடுங்க"

" அப்படீன்னா பிரின்ஸ்பால பாருங்க"

நான் போயிருந்த இடம், என் பையன் படிக்கும் LKG ஸ்கூல். அவன் படித்து முடித்தது K2 ( K3 - pre school, k2 - second stage then K1 - third stage). நான் அவர்களை கேட்டது அவனை பர்ஸ்ட் ஸ்டேண்டர்டில் அனுமதிக்க. அவனின் வயது 5 முடிந்து, ஆறு தொடக்கம். மலேசியாவில் 7 வயதில்தான் முதல் வகுப்பில் அனுமதிப்பார்கள். பிறகு இந்தியா போனால் ஒரு வருடம் இழக்க வேண்டி வரும். கஷ்டப்பட்டு என் பெண்ணிற்கு போராடி சரி செய்தேன் எந்த இழப்பும் இல்லாமல். இப்போ பையன் முறை.

பிறகு பிரின்ஸ்பாலை பார்த்து பேசியவுடன் அவரும் அதே காரணத்தை கூறி, "அவனுக்கு நன்கு தன்னம்பிக்கையை கொடுங்கள், நன்றாக தினமும் படிக்க சொல்லுங்கள், விளையாட்டு பையனாக இருக்கிறான்" என அட்வைஸ் செய்தார்.

நான் பிரின்ஸிபாலுக்கும், அந்த வகுப்பு ஆசிரியர்களிடம் பின் வருமாறு கூறினேன்,

" நான் எக்காரணத்தைகொண்டும், தன்னம்பிக்கையை வலுக்கட்டாயமாக திணிக்க மாட்டேன். படிக்க சொல்லி வற்புறுத்த மாட்டேன். அவனை விளையாட வேண்டாம் என சொல்ல மாட்டேன்"

எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்.

" ஏன் அப்படி சொல்லறீங்க"

" ஏன்னா, அவன் ஐந்து வயது குழந்தை. அவன் குழந்தையாக இருப்பதையே நான் விரும்புகிறேன். எதையும் திணிக்க விரும்பவில்லை. அவன் அவனாகவே வளரவே விரும்புகிறேன். அவன் நாளைக்கே இந்திய பிரதமராக உட்காரப்போவதில்லை. அதனால், முடிந்தால் அவனை முதல் வகுப்பில் போடுங்கள். இல்லையென்றால் பரவாயில்லை"

நான் சொன்னது சரியா, இல்லையா?

பிறகு ஒரு சின்ன டெஸ்ட் வைத்து முதல் வகுப்பில் சேர்த்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் நான் கிராமத்தில் படித்த பள்ளியும், நான் LKG எல்லாம் படிக்காமல் நேரடியாக முதல் வகுப்பில் சேர்ந்ததும் ஏனோ என் நினைவுக்கு வந்து போனது.

Jul 29, 2009

பாஸிட்டிவ் அப்ரோச்

என் கல்லூரி நண்பர் ஒருவர் இன்று அனுப்பிய மின்னஞ்சல் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நல்லெண்ணத்தில் அதனுடைய தமிழாக்கத்தை இங்கே பதிவிடுகிறேன்.

தந்தை: நான் தேர்வு செய்திருக்கும் பெண்ணை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்

மகன்: எனக்கு வரும் மனைவியை நானாகத்தான் தேர்வு செய்வேன்.

தந்தை: ஆனா, அந்த பெண் பில் கேட்ஸின் மகள்

மகன்: அப்படியென்றால் எனக்கு சம்மதம்.

அடுத்த நாள்:

தந்தை பில் கேட்ஸை அணுகி,

தந்தை: உங்கள் பெண்ணுக்கு தகுந்த கணவர் என்னிடம் உள்ளார்

பில் கேட்ஸ்: ஆனா, என் பெண் ரொம்ப சின்னவள். கல்யாணம் பண்ணுமளவிற்கு பெரியவள் இல்லை.

தந்தை: ஆனா அந்த இளைஞன் உலக வங்கியின் Vice President

பில் கேட்ஸ்: அப்படியென்றால் எனக்கு சம்மதம்.

அடுத்த நாள் அந்த தந்தை உலக வங்கியின் President ஐ அணுகி:,

தந்தை: என்னிடம் ஒரு இளைஞன் உள்ளான். அவனை உங்கள் வங்கிக்கு Vice President பதவிக்காக பரிந்துரை செய்கிறேன்.

President: ஏற்கனவே தேவைக்கு அதிகமாக எங்களிடம் பல Vice President உள்ளார்கள்.

தந்தை: ஆனா, அந்த இளைஞன் பில் கேட்ஸின் மருமகன்

President: அப்படியென்றால் சரி. அவனை சேர்த்துக்கொள்கிறேன்.

Moral: Even if you have nothing, you can get anything. But your attitude & approach should be positive.

Jul 28, 2009

இன்டர்வியூ - சிறுகதை

MD ராகவன் மேனஜரைப் பார்த்து கேட்டார், " அக்கவுண்டண்ட் வேலைக்கு முதல் சுற்று இன்டர்வியூ முடிஞ்சு, இறுதி கட்டத்துக்கு எத்தனை பேர் காத்துருக்காங்க?"

"சார், மொத்தம் 20 பேர் கலந்துகிட்ட இன்டர்வியூல CMD இரண்டு பேரை இறுதி கட்ட இன்டர்வியூக்கு தேர்ந்தெடுத்து உங்கள முடிவு பண்ணச்சொல்லியிருக்கார், ஏன்னா இரணடு பேர் குவாலிபிகேஷனும், மற்றும் அனைத்து தகுதிகளும் ஒரே அளவுல இருக்கு சார்"

"சரி, ஒவ்வொருத்தரா வரச் சொல்லுங்க"

முதலில் வந்தவன் அருண். பார்க்க ரொம்ப டீசண்டாக இருந்தான். நல்ல உடை. மிகுந்த நாகரிகம் உடையவனாக தெரிந்தான். பார்த்ததுமே ராகவனுக்கு அவனை ரொம்ப பிடித்து விட்டது. கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் மிகச்சரியான பதில்களைச் சொன்னான் அருண். ஒரு கேள்விக்கும் கொஞ்சம் கூட யோசிக்க வில்லை. அவனுடைய ஆங்கில உச்சரிப்பு, அவனுடைய presence of mind அனைத்தும் ராகவனை கவர்ந்து விட்டது. கேட்ட சம்பளமும் அப்படி ஒன்றும் அதிகமில்லை. எல்லாம் முடிந்தவுடன் ராகவன், அருணைப் பார்த்து கேட்டார்,

" ஏம்பா, நீ ஏதாவது கேட்க விரும்புறீயா?"

" எஸ் சார். வருசம் எவ்வளவு போனஸ் தருவீங்க சார், ஆண்டுக்கு எத்தனை சதவீதம் சம்பள உயர்வு குடுப்பீங்க சார்?"

"அதெல்லாம் கமபனி ரூல்ஸ் பிரகாரம் கொடுப்போம்" என பதில் சொன்னவர், "சரிப்பா, வேலை கொடுத்தா, எப்போ ஜாயின் பண்ணுவ?" என்று கேட்டார்.

" நாளைக்கே சேருவேன் சார்" என்றான் அருண்.

" ஓகே, நாங்க உங்களுக்கு கடிதம் மூலம் தொடர்பு கொள்கிறோம்" என்று அவனை அனுப்பி விட்டு, அடுத்த நபரை கூப்பிட்டு அனுப்பினார் ராகவன்.

" உள்ளே வரலாமா?" கேட்டப்படி நுழைந்தான் ரவி.

அவனை பார்த்த ராகவன் அதிர்ச்சியுற்றார். சாதாரண உடையில் இருந்த ரவி, ராகவன் கேட்ட கேள்விகளுக்கு ஓரளவுதான் சரியாக பதில் சொன்னான்.

"இவ்வளவு படித்திருக்கும் நீ ஏன் இன்னும் சரியான வேலையில் சேரவில்லை?" என்று கேட்டார் ராகவன்.

" சார், நான் படித்தது ஒரு கிராமத்து பள்ளியில் தமிழ் மீடியம். எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது. இப்போது மெதுவாக கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னால், சரியாக ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியாததால், எனக்கு நல்ல வேலை கிடைக்க வில்லை சார்"

ராகவன், ரவியைப் பார்த்து அருணை கேட்ட அதே கேள்வியைக் கேட்டார்,

" ஏம்பா, நீ ஏதாவது கேட்க விரும்புறீயா?"

"எஸ் சார், உங்க கம்பனியோட அடுத்த ப்ராஜக்ட் என்ன? டேர்ன் ஓவர் என்ன?"

பதில் சொல்லிவிட்டு அந்த கடைசி கேள்வியைக் கேட்டார்,

"சரிப்பா, வேலை கொடுத்தா, எப்போ ஜாயின் பண்ணுவ?"

"சார், நான் இப்போ ஒரு ப்ராஜக்ட்ல இருக்கேன், அதனால ஒரு மூணு மாசம் டைம் வேணும் சார்"

இன்டர்வியூ முடிந்தவுடன் ஒப்பிட்டு பார்த்ததில், ரவியைவிட அருண், பர்சனாலிட்டியில், அனுபவத்தில், ஆங்கில அறிவில் எல்லாவற்றிலுமே சிறந்தவனாக காணப்பட்டான்.

ராகவனிடம், மேனேஜர் கேட்டார், " என்ன சார், அருணுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ரெடி பண்ணவா?"

" இல்லை, ரவிக்கு ரெடி பண்ணுங்க" என்றவரை ஆச்சரியமாக பார்த்த மேனேஜர்,

"அது எப்படி சார், அருண்தானே எல்லாவற்றிலும் சிறந்தவரா இருக்கார்"

" சார்.. அருணை நம்பி ஜாப் கொடுத்தீங்கன்னா, ஒரு 100 ரூபாய் அதிகமா ஒரு கம்பனி கொடுத்தா கூட உடனே ஓடிடுவார். ஏன்னா, எப்போ உன்னால ஜாயின் பண்ணமுடியும்னு கேட்டதுக்கு, நாளைக்கே ஜாயின் பண்ணறேனு சொல்லுறார், இப்போ இருக்க கம்பனி வேலைய பாதியில விட்டு வந்தா அந்த கம்பனி என்ன கஷ்டப்படும்னு நினைக்கல, அதுவுமில்லாம, போனஸ், சம்பளம் அதுலதான் அவரு பேச்சு முழுதும் இருந்துச்சு. ஆனா, ரவி ஆங்கில அறிவு இல்லங்கற உண்மையை ஒத்துகிட்டது, உடனே கம்பனில ஜாயின் பண்ணமுடியாது டைம் வேணும்னு கேட்டது, அடுத்து நம்ப கம்பனி ப்ராஜக்ட் பத்தி கேட்டது... இது மாதிரி சொல்லிட்டே போகலாம். ரவிக்கு வேலை கொடுத்து நல்ல சம்பளம் கொடுத்தா கம்பனிய நல்லா கவனிச்சுப்பார். அதனால கேட்ட சம்பளத்தவிட அதிகமா போட்டு ரவிக்கே அந்த ஆர்டர கொடுத்துடுங்க" என்றவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார் மேனஜர்.

Jul 27, 2009

ஒரு அற்புதமான அனுபவம்!

எங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவுகள். பதிவுலகில் ஒரே சூடு பரக்கும் விவாதங்கள், வெளி உலகிலும் எங்கும் பிரச்சனைகள். இதன் நடுவில் மலேசியாவில் எங்கள் ஊரில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா ஜூலை 16ம் தேதி தொடங்கி, ஜூலை 26 ஆம் தேதி வரை நடந்தது. தினமும் காலையில் அபிசேகம், பூஜைகள். மதியம் யாகம், அபிசேகம், பூஜைகள். இரவு பூஜைகள், பிறகு சாமி வீதி உலா (இங்கே ஆலய ஊர்வலம்). பிறகு அனைவருக்கும் சாப்பாடு என்று பதினொரு நாட்கள் நடை பெற்றது.

இதை இங்கே நான் சொல்லக் காரணம், எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள். நான் இருக்கும் பகுதியில் மிக சில இந்திய குடும்பங்களே இருப்பதால், அனைவரும் அவர்கள் வீட்டு திருவிழா போல தினமும் கோயிலுக்கு வந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு செல்வது மிகவும் ஆச்சர்யமடைய வைத்தது. நம் ஊரில் சாமி தூக்குவது என்பது எல்லோராலும் முடியாத காரியம். ஆனால், இங்கே யார் வேண்டுமானாலும் சாமியை தூக்கி செல்லலாம், பிறகு சாமியை வைத்து நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். தினமும் நிகழ்ச்சிகள் முடிய இரவு 11 மணி ஆகிறது. அனைவரும் அங்கேயே சாப்பிட்டு செல்ல உபயதாரர்கள் தினமும் உணவு வழங்குகிறார்கள். சில சமயம் ஆலய நிர்வாகமே உணவு வழங்குகிறது.

அனைவரும் கட்டுகோப்பாக இருந்து பதினோரு நாள் நிகழ்ச்சியை நடத்தியது என்னை ஆச்சர்ய படுத்திய விசயம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான பூஜை. ஒரு நாள் சகஸ்ர நாம அர்ச்சனை, ஒரு நாள் பஞ்ச முக அர்ச்சனை, ஒரு நாள் பெண்களுக்கான குத்து விளக்கு பூஜை. இப்படி நிறைய. கடைசி நாளைக்கு முதல் நாள் ஆடிப்பூர திருவிழா. அனைவரும் பொங்கல் வைத்து, பால் குடம் எடுத்து, மஞ்சள் நீராடி, அம்மனை சிறப்பித்தார்கள். நான் இங்கே பன்னிரெண்டு வருடங்கள் இருந்தாலும், நான்கு வருடங்களாக அனைத்து நாட்களும் சென்றிருந்தாலும், இந்த வருடம் அனைத்து நாட்களும் சென்று, தினமும் பூஜையில் கலந்து கொண்டு, தினமும் சாமியை தூக்கி, நடனம் ஆட வைத்து, நிகழ்ச்சி முடியும் வரை குடும்பத்துடன் இருந்து, அம்பாளை தரிசித்தது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்த்து.

நான் ஒரு இந்து, அதனால் மதப்பிரச்சாரம் செய்கிறேன் என்று யாரும் எண்ண வேணடாம். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடம் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம். இந்த பதினோரு நாளும் நான் ஏதோ ஒரு உலகத்தில் இருந்ததாகவே உணர்ந்தேன். உலகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. யார் மேலும் கோபம் வரவில்லை. மனம் மிக லேசாக இருந்தது. நன்றாக துக்கம் வந்தது. பேச்சில் ஒரு தெளிவு இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் சந்தோசமாக இருந்தது. காதில் விழுந்த செய்திகள் எல்லாம் நல்லவையாகவே விழுந்தன. மனதில் எந்த ஒரு போட்டி பொறாமை எண்ணங்கள் தோன்றவில்லை. யார் மீதும் எதற்காகவும் காழ்ப்புணர்ச்சி காட்டவில்லை. இதற்கெல்லாம் காரணம் மனம் மிக அமைதியாக இருந்ததுதான். மனம் ஏன் அமைதியானது? கடவுள் பக்தியாலா? இருக்கலாம். கடவுள் இல்லை என்பவர்களுக்கு நான் சொல்லும் பதில், மனம் ஒரே விசயத்தில் லயித்து இருந்ததால், மனம் அமைதியாய் இருந்திருக்கலாம்.

நான் நண்பர்களுக்கு சொல்வது என்னவென்றால், வாய்ப்பு கிடைத்தால், நீங்களும் கோயிலுக்கோ, சர்சுக்கோ, மசூதிக்கோ சென்று முழு மனதுடன், உங்கள் பிரியமான தெய்வங்களை, மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள். நீங்களும் அந்த அற்புதமான சுக அனுபவத்தை பெறுவீர்கள்.

நான் அடிக்கடி சொல்வது போல், தனி மனித அமைதியே உலக அமைதி.

வாழ்க வளமுடன்!.

Jul 24, 2009

கவிதைகள் (?)

கீழே உள்ள என் கவிதைகள் வெளியானது எங்கே?

விடை கடைசியில்.

*****************

பெரிய வீடு வாங்க
வேண்டும்
கார் வாங்க வேண்டும்
நிலம் வாங்க
வேண்டும்
என நினைக்கையில்
மனைவி கேட்டாள்:
காலையில் பால்
பாக்கட் வாங்க வேண்டும்
காசு இருக்கா?
கனவில் கூடவா?

*************************'

எல்லோருக்கும்
நாளையிலிருந்து
வேலையில்லை
என்றுச் சொன்னார்
அந்த ஐடி கம்பனி
மேலாளர் தன்
வேலையும் சேர்ந்து
போனது
தெரியாமல்.

***************************

கெட்டி மேளச்சத்தம்
பட்டு சேலைகளின்
சரசரப்பு
மணவரையில் மகள்
மாங்கல்யம் தந்துனா...
அப்பாடா ஒரு பிரச்சனை
முடிந்து போனது என
நினைத்தார் அப்பா
கூடவே அவள் சுதந்திரமும்
முடிந்து போனது
தெரியாமல்.

*****************************

அதிக பின்னூட்டம்
வரவில்லையென்று
கணணியை திறந்து
பார்த்துக்கொண்டே
இருந்தான் அவன்.
கணணி மொளன
மொழியில் அவனைப்
பார்த்து சொன்னது
'என்னை திறந்து
திறந்து பார்க்கும்
நேரத்தில் உன்னை,
உன் பதிவுகளை
திரும்பிப் பார்
நீயே இட மாட்டாய்
பின்னூட்டம்'

*******************************

விடை: மேலே உள்ள கவிதைகள் வெளியானது 'இனியவன்' ப்ளாக்கில் - 24.07.09 அன்று. ஹிஹிஹி.

"நிலாவே வா!" - சிறுகதை - பாகம் 4 (நிறைவு)

காலையில் வந்து நிற்பவளை வீடே ஆச்சர்யத்துடனும், கொஞ்சம் அதிர்ச்சியுடனும் பார்த்தது. நடந்தவைகளைச்சொன்னாள். சொன்னவள் அதோடு நிற்கவில்லை. அடுத்து அவள் கேட்டதுதான், அனைவரையும் கலக்கமடைய வைத்துவிட்டது.

" அப்பா, அவரோட வாழப்பிடிக்கலை. எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்க"

எல்லோரும் அவள்மேல் இருக்கும் தப்பை எடுத்துக்கூறினர்கள். யார் பேச்சையும் கேட்பதாய் இல்லை. தன் முடிவிலேயே விடாப்பிடியாக இருந்தாள். நடுவில் பல முறை ராகவன் வந்தான். வீட்டில் உள்ள அனைவரிடமும் எடுத்துச்சொன்னான். ராதாவிடம் பேச முயன்றான். ஆனால், பேச மறுத்துவிட்டாள் அவள்.

பேசி பேசிப்பார்த்து வெறுத்துப்போன அவள் அப்பா, "விவாகரத்து என்ற முடிவில் நீ உறுதியாக இருந்தால், தயவு செய்து வீட்டை விட்டு வெளியே போ" என்று சொன்னவுடன், 'சரி' என்று வீட்டை விட்டு வந்தவள், கலாவின் வீட்டு மாடியில் குடி வந்து இதோ ஒரு வருடம் ஆகப்போகிறது. இந்த ஒரு வருடத்தில் ராகவன் எத்தனையோ முறை முயன்றும் அவள் பேசவேயில்லை.

ராகவன் சந்தேகப்பட்டதை மட்டும் அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அது எப்படி என்னை சந்தேகப்படலாம் எனபதை மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தாளே தவிர, வேறு எந்த விசயத்தையும் யோசிக்கவில்லை. கலாவும் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவள் கேட்காமல் போகவே, அந்த மேட்டரை பற்றி பேசுவதையே விட்டு விட்டாள்.

பழைய விசயங்களை அசைப்போட்டபடியே இருந்தவள் அப்படியே தூங்கிவிட்டாள். காலை எழுந்தவுடன் உடனே கிளம்பத்தொடங்கினாள், இன்றுதான் குடும்ப நல கோர்ட்டுக்குச் செல்ல வேண்டும். கலா வருகிறேன் எனச் சொல்லியிருந்தாள். கலா ஒரு கால் செண்டரில் வேலை பார்ப்பதால் வாரத்தில் மூன்று நாள் நைட் ஷிப்ட். நைட் ஷிப்ட் முடிந்து வந்து விட்டாளா? என்று பார்ப்பதற்காக மாடிப்படியில் எட்டிப்பார்த்தாள். அப்போதுதான் ஒரு கார் வந்து இறங்கியது. காரின் உள்ளேயிருந்து இறங்கினாள் கலா. அவள் இறங்கும்போது அவள் கூட வந்தவன் கலாவைப் பார்த்து ஒரு பிளையிங் கிஸ் கொடுத்துச்சென்றது ராதாவைத் தவிர யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. என்ன கண்றாவி இது?

ராதாவை பார்த்த கலா, " யேய் ஒரு அரை மணி நேரம் டைம் கொடு, குளிச்சிட்டு உடனே வரேன்" என்றவள், இவள் பதிலுக்கு காத்திராமல் உள்ளே ஓடினாள்.

அரை மணி நேரம் கழித்து இருவரும் ஆட்டோவில் கோர்ட்டுக்கு புறப்பட்டார்கள். ஆட்டோவில் போகும்போது ராதா கேட்டாள்,

"யாருடி அவன்?''

" யாரைச்சொல்லற, என்ன ட்ராப் பண்ணவறா?"

"ஆமாம்"

"எங்க பாஸ், ஏன் கேக்கற?"

"அவரைப்பார்த்தா நல்லவரா தெரியலையே?"

"இப்போ உனக்கு என்னத் தெரியணும், டைரக்டா கேளு"

" இல்ல அவர் உன் கூட வந்ததப்பார்த்தா கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சதே?"

" ஆமா, நீ நினைக்கறது சரிதான்"

"அப்படீன்னா?"

" அவர் அப்படி, இப்படித்தான், கொஞ்சம் ஜொல்லு பார்ட்டி"

" நீ எப்படி இந்த மாதிரி ஆளோட?"

"ராதா, கொஞ்சம் ஓப்பனாவே சொல்லறேன். என் ஹஸ்பண்ட பத்தி உனக்குத்தெரியும். அவர் சம்பளம் அவர் குடிக்கே பத்தாது. நானும் ஒண்ணும் ரொம்ப அதிகமா சம்பாதிக்கறது இல்ல. நைட் ஷிப்ட்னா அப்படித்தான். எல்லாத்துக்கும் அட்ஸட் பண்ணிட்டுத்தான் போகணும். என்ன ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இப்போ இல்ல. பாஸோட ஜொல்லுக்கு கொஞ்சம் அட்ஸட் பண்ணிட்டு போனோம்னா நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல"

" உங்க ஹஸ்பண்ட் இதைப்பத்தியெல்லாம் கேட்கமாட்டாரா?"

" அவர் என்ன, உன் கணவர் போலனு நினைச்சியா, பொண்டாட்டியே கதினு நினைச்சிட்டு இருக்க. பாரு, நீயும் ஒரு வருசமா அவரை அப்படி நோகடிக்கிற, மனுசன் உன்னையே சுத்தி சுத்தி வரான். அந்த மாதிரி கணவன் அமைய கொடுத்து வைக்கணும் ராதா. எனக்கு மட்டும் அப்படி அமைஞ்சிருந்தா, வாழ்க்கை முழுசுமா, அவர் காலடியிலேயே கிடப்பேன் தெரியுமா!. எனக்கு அமைஞ்சது இப்படி. அவருக்கு குடிக்க தினமும் காசு இருந்தா போதும். நான் எப்ப வரதப்பத்தியும் ஒரு கேள்வி கேட்க மாட்டார். ம்ம்ம், ஏன் என்னப்பத்தி பேசிட்டு, என் விதி அவ்வளவுதான், சரி வா, கோர்ட் வந்துடுச்சு"

ஏனோ, ராகவன் அவள் மனதில் வந்து வந்து போனான்.

சரியாக காலை 10 மணிக்கு ராதாவை கூப்பிட்டார்கள். ராகவனை நிமிர்ந்து பார்க்க கூடாது என்ற முடிவுடன் கோர்ட்டுக்கு சென்றாள். இருவரும் எதிர் எதிரே நின்றிருந்தார்கள்.

ஜட்ஜ் ஒரு பெண்மணி. ராதாவை பார்த்து கேட்டாள்:

" என்னம்மா, உன் முடிவுல இன்னும் உறுதியா இருக்கியா?"

பதில் சொல்ல நிமிர்ந்தவள் எதேச்சையாக ராகவனைப்பார்த்தாள்.

அருகிலிருந்த டீக்கடையிலிருந்து காற்றின் மூலம் மிக மெதுவாக அந்த பாட்டு அவர்கள் காதை வந்தடைந்தது.

"நிலாவே வா........"

கேள்விக்கு பதில் சொல்லவில்லையே இந்த பெண் என நினைத்து நிமிர்ந்து பார்த்த ஜட்ஜ் ஆச்சர்யமாக "அவர்களை' பார்த்தாள்.

ராதா, ராகவனின் மார்பில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

அவர்களை சேர்த்து வைத்த அதே பாட்டு, அவர்கள் பிரியக்கூடாது என்று நினைத்தோ என்னமோ, மீண்டும் அவர்களை சேர்ப்பதற்காக வந்து அவர்கள் காதில் தேனாகப்பாய்ந்து அவர்களை இணைத்ததை அறியாமல் சந்தோசம் கலந்த சிரிப்புடன் அவர்களைப் பார்த்தாள் ஜட்ஜ்.

Jul 23, 2009

"நிலாவே வா!" - சிறுகதை - பாகம் 3

ரே வாரத்தில், அனைவரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் இனிதே நடந்தது. அவனுக்கும் நல்ல பதவி உயர்வு கிடைத்தது. ராதாவுக்கு ஒரு மல்டி நேஷனல் கம்பனியில் நல்ல வேலை கிடைத்தது. சந்தோசமாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் ராகவன் அவள் மதிப்பில் உயர்ந்து கொண்டே இருந்தான்.

ஒரு நாள் அதிகாலை. பயங்கரமான வயிற்று வலி. துடிதுடித்து போனாள். அதை விட ராகவன் துடித்துப்போனான். கண்கள் கலங்க பதட்டத்துடன் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். டாக்டர்கள் அனைத்து பரிசோதனையும் முடித்து, கடைசியில் சொன்னார்கள், அப்பண்டிஸைஸ், உடனடியாக ஆப்பரேசன் செய்ய வேண்டுமென்று. அவளுக்கு ஆப்பரேசன் முடியும் வரை பச்ச தண்ணீர் குடிக்கவில்லை. அவள் படுக்கையே கதியென்று கிடந்தான். நர்ஸுகள் வர லேட்டானால், அவனே பெட்பேனை எடுத்து, அவளுக்கு சுத்தம் பண்ணி, ஒரு நாள் டாக்டர் திட்டியே விட்டாள்.

" என்ன மிஸ்டர், நாங்க எதுக்கு இங்க இருக்கோம். இதெல்லாம் நாங்க செய்ய மாட்டோமா?"

ஒரு சின்ன சிர்ப்புடன் பதில் கூறினான், "என் மனைவிக்கு பணிவிடை செய்வதை ஒரு சேவையாக கருதுகிறேன் டாகடர்" என்றவனை மிகவும் ஆச்சர்யத்துடன் பார்த்தாள் டாகடர்.

ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது, டாகடர் ராதாவை தனியே அழைத்து கூறினாள், " இந்த மாதிரி கணவன் கிடைக்க நீ என்ன புண்ணியம் பண்ணின?" மீண்டும் அவள் மனதில் மிக உயர்ந்த நிலைக்கு சென்றான் ராகவன்.

இப்படி பல சந்தர்ப்பங்கள். வீட்டில் எப்பவும் இவள்தான் கோபப்படுவாள், அவன் கோபப்பட்டதேயில்லை "அந்த" ஒரு சந்தர்ப்பத்தை தவிர. அவள் கோபங்கள் அனைத்தையும் ஒரு புன்சிரிப்புடனே சமாளிப்பான். அவனை கோபப்படுத்த நினைத்து தோற்றுத்தான் போனாள் ராதா.

இப்படியான வாழ்க்கை எப்போது தடம் புரண்டது?. அன்று ஒரு நாள் கம்பெனியில் ஆடிட். வேலை கொஞ்சம் அதிகம் ராதாவுக்கு. தான் லேட்டாய் வருவேன் என்பதை போன் பண்ணிச்சொல்ல மறந்துவிட்டாள். ராகவனிடமிருந்து வந்த போன் கால்களையும் கட் செய்துவிட்டாள். வேலை முடிந்து மணி பார்த்தபோது, மணி 10. பகீரென்றது அவளுக்கு. கடைசி பஸ் வேறு போயிருக்கும், என்ன செய்யலாம் என நினைத்துக்கொண்டிருந்தவள், அவள் மேனஜர் கூப்பிட்ட போதுதான் சுய நினைவுக்கு வந்தாள். அவள் மேனஜர் மிக இளைஞர். MDயின் மகன். ஆனால், மிக நல்லவன் என பெயரெடுத்த்வன்.

" என்ன மேடம், இவ்வளவு நேரம் என்ன பண்ணறீங்க?, இப்போ எப்படி வீட்டுக்கு போவீங்க, வாங்க நான் உங்க வீட்டுல ட்ராப் செய்யிறேன்" என்றவுடன் வேறு வழி தெரியாத நிலையில் அவளை அறியாமல் காரில் ஏறி அமர்ந்தாள். வீடு வந்து சேர 11 மணியாகிவிட்டது. வீட்டில் மேனாஜர் ட்ராப் செய்துவிட்டு ராகவனிடம் , " சார், மேடம் லேட்டாத்தான் வேலையை முடிச்சாங்க, பஸ் ஒண்ணு கிடைக்காதுங்கறதுனால நான் தான் வற்புறுத்தி கார்ல கூட்டி வந்தேன்" எனக்கூறிவிட்டு சென்றார்.

ராகவன் வாசலிலேயே அமர்ந்திருந்தான். மிகக்கோபமாய் இருந்தான். இது வரை ராதா அவனை அப்படி ஒரு கோபத்தில் பார்த்ததே கிடையாது. ஒன்றும் பேசாமல் வீட்டின் உள்ளே சென்றாள். கதவை சாத்தியவன் ராதாவை பார்த்து கேட்டான்,

" ஏன் லேட்?"

" சாரிங்க, ஆடிட்டிங்கறதால நிறைய வேலை"

"ஏன் முன்னாடியே சொல்லலை"

"எனக்கே சாயந்தரம்தான் தெரியும்"

" நான் போன் பண்ணேனே நீ ஏன் எடுக்கல"

"வேலை டிஸ்டர்ப் ஆகுமேனுதான்"

" எது, நான் பேசறது உனக்கு டிஸ்டர்பா இருக்கா"

" அதான் சொல்லறென்ல வேலை அதிகம்னு, திருப்பி திருப்பி கேட்டுகிட்டு" என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் புடவையை கழட்டிவிட்டு நைட்டிக்கு மாறினாள்.

" அது சரி, அது ஏன் அவன் கூட கார்ல வந்த?"

" அவர்தான் பதில் சொன்னாருல்ல"

" அவர் சொன்னா, ஊருல இருக்கவங்க என்ன நினைப்பாங்க"

" நம்ம ஊருக்காகவா வாழறோம்?"

" கல்யாணம் ஆன ஒரு பெண் கணவன் இல்லாத ஒருத்தனோட, நைட் 11 மணிக்கு கார்ல வந்து இறங்குனா, வெளியிலேர்ந்து பார்ப்பவர்களுக்கு என்னத்தோணும்"

" அவர்களுக்கு என்ன தோணுதோ எனக்குத்தெரியாது. உங்களுக்கு என்ன தோணுது"

" எந்த ஆம்பளைக்கும் கோபம் வருவது இயற்கைதானே?"

"சோ, அப்ப சந்தேகப்படறீங்க"

" அப்படீனு இல்ல, ஆனா நீ பண்ணது தப்புத்தானே"

"என்ன தப்பு. ஒரு அலவலக நண்பரோட கார்ல வந்தா தப்பா"

" கார்ல வரது தப்பில்ல. ஆனா, ஒரு ஆண் நண்பரோட நைட்ல கார்ல வரது தப்புத்தானே. இந்த விசயத்துல எனக்கு கோபம் வரலைனா தான் தப்பு"

" ஓ ஓ ஆணாதிக்கம். உங்ககிட்ட இருக்கறது இப்பத்தான் உணரேன். ஒரு பொண்ணு நைட்ல இன்னொருத்தன் கூட கார்ல வந்து இறங்குனா உண்மையா அன்பு வைச்சிருக்க யாரும் சந்தேகப்படமாட்டாங்க. ஒரு பொண்ணு தப்பு பண்ணனும்னா, நைட்லதான் பண்ணனும்னு இல்ல, பகல்ல கூட பண்ணலாம். உங்க உண்மையான சுயரூபம் இன்னைக்குத்தானே தெரியுது" எனக்கோபப்பட்டவள், ரூமிற்கு சென்று கதவைச்சாத்திக்கொண்டாள். முதல் முறையாக ராகவன் அவள் மனதிலிருந்து கீழே விழுவதாக நினைத்தாள். அழுது கொண்டே இருந்தவள் எப்போது தூங்கினாள் என தெரியவில்லை. முழித்துப் பார்த்தவள் மணி காலை 6 ஆனதை உணர்ந்தாள். பெட் ரூமை விட்டு வெளியே வந்தவள்,ராகவன் ஹாலிலேயே படுத்திருப்பதை பார்த்தாள். அவனிடம் இரவு சாப்பிடானா என்றோ, காபி வேண்டுமா என்றோ எதையும் கேட்கவில்லை. விறு விறு வென குளித்துவிட்டு, ராகவனிடம் கூட சொல்லாமல் ஆபிஸுக்கு கூட செல்லாமல் அவள் அம்மா வீட்டிற்கு சென்றாள்.

தொடரும்...

Jul 22, 2009

"நிலாவே வா!" - சிறுகதை - பாகம் 2

ராதாதான், அவனை ஒரு நாள் அதே காபி ஷாப்பிற்கு அழைத்தாள். வந்தவனுடன் நேரடியாக கேட்டே விட்டாள்,

" நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான் ராகவன்.

"என்ன பேசறீங்க ராதா? நான் எங்க, நீங்க எங்க"

" ஏன் உங்களை நீங்களே தாழ்த்திக்கறீங்க, உங்களோட திறமை உங்களுக்கே தெரியாது"

" என்னோட திறமைக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் அப்படீங்கறீங்களா?"

" அப்படி இல்ல. அது மட்டும் காரணம் இல்ல. நீங்க ஒரு நல்ல மனிதர். பண்பாளர். பெண்களை மதிக்க தெரிந்தவர். மனித நேயமிக்கவர்"

" கல்யாணம் பண்ண இந்த தகுதி மட்டுமே போதும்னு நினைக்கறீங்களா?"

" வேற என்ன வேணும்னு நீங்க நினைக்கறீங்க?"

" நிறைய இருக்கு. முதல்ல ஜாதி, மதம், அந்தஸ்து. இந்த மூன்றிலுமே என்னைவிட நீங்கதான் உயர்ந்து நிக்கறீங்க. அதைவிட நான் ஒரு ஏழை ஜாதியச்சேர்ந்தவன். நீங்க எங்கேயோ இருக்கீங்க"

" இவ்வளவு தெளிவா பேசற நீங்களா ஜாதியையும், அந்தஸ்தையும் பார்க்கறீங்க. எனக்கு புடிச்சது உங்க மனசு. உங்க மனசும் என் மனசும் எந்த ஜாதியையும் சார்ந்து இருக்கலைனு நான் நினைக்கிறேன்"

" இங்க பாருங்க ராதா, நாம என்னெல்லாமோ பேசி கல்யாணம் பண்ணி வாழ நினைச்சாலும், நம்ம சமுதாயம் நம்ம வாழ விடாது. விடுங்க. உங்களுக்கு ஏற்ற நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிக்கங்க"

" அப்போ வாழ்க்க பூரா நீங்க அப்படியே இருக்க போறீங்களா?"

" நான் கல்யாண வயதை தாண்டி ரொம்ப நாளாச்சு. நானெல்லாம் கோபுரத்துக்கு ஆசைப்பட கூடாது. எனக்குனு ஒரு ஏழைப்பொன்ணு, ஏதாவது ஒரு கிராமத்துல இல்லாமலையா இருக்கப்போறா. இல்லைனா இருக்கவே இருக்கு என் பாட்டு. ஆர்கஸ்ட்ரால பாடற நிம்மதியே எனக்கு போதும். வேற ஏதாவது பேசுங்க"

" வேற என்ன பேசறது. நீங்கதான் என் கணவர்னு நான் முடிவு பண்ணீட்டேன். அதை என்னால மாற்ற முடியாது"

" நீங்க மட்டும் முடிவு பண்ணா போதுமா ராதா?"

" அதான் உங்களையும் முடிவு பண்ணச்சொல்லுறேன்"

" ராதா, நான் மேலே சொன்ன காரணமெல்லாம் இல்லமா, இன்னொரு காரணமும் இருக்கு, நான் உங்களுக்கு தகுதியானவன் இல்லைனு சொல்ல?"

" என்ன அது?"

" வயது. நான் 33. நீங்க 22"

" இது ஒரு பெரிய பிரச்சனையா நான் நினைக்கவேயில்ல. இந்த மாதிரி கல்யாணம் பண்ணி வாழ்ந்தவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அதனால இத ஒரு பெரிய விசயமா நான் நினைக்கல. நீங்க என்ன வேணாம்னு சொல்லறதால, என்னோட வாழ்க்கை மட்டும் வீணாப்போகப் போறது இல்ல, உங்களோடதும் சேர்ந்துதான். உங்களை கட்டாயப்படுத்த போறதில்ல. நாளைக்கு யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க" என சொன்னவள், அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் விறு விறு என நடந்தாள் அந்த இடத்தை விட்டு.

அடுத்த நாள் அதே இடத்தில் சந்தித்தபோது, மிகவும் யோசித்து யோசித்து ராகவன், "நாம் கல்யாணம் பண்ணிக்கலாம்" என அந்த வார்த்தைகளைச் சொன்னபோது சந்தோசத்தின் உச்சிக்கு சென்றாள் ராதா. அதன்பிறகு நடந்ததெல்லாம் மிக சந்தோசத்தை தந்த தருணங்கள். நாள் தவறாமல் சந்தித்தார்கள். உலகத்திலேயே இவர்கள் இரண்டு பேர் மட்டுமே வாழ்வதாய் நினைத்து எல்லா இடங்களுக்கும் சென்றார்கள். ஆனால், ஒரு முறை கூட அவன் விரல் நகம் கூட ராதாவின் மேல் பட்டத்தில்லை. மற்ற காதலர்கள் போல் இல்லை இவர்கள். பேசுவார்கள் நிறைய. அவனைப்பாடச்சொல்லி கேட்பாள். கேட்டுக்கொண்டே இருப்பாள். ஆன்ந்தத்தில் அழுவாள். ஒரே ஒரு நாள் மட்டுமே பீச்சுக்கு சென்றார்கள். அவன் பாடி முடித்த அந்த நொடியில் என்ன செய்கிறோம் எனத்தெரியாமல், அவளை அறியாமல், அவன் கையத்தொட்டு முத்தமிட்டதுதான் அவர்களின் உச்சக்கட்ட தொடுதலாக அமைந்தது. எல்லா காதலர்களுக்கும் ஏற்படும் பிரச்சனை அவர்கள் காதலிலும் வந்தது. ஒரு நாள் அப்பா கூப்பிட்டு அவளுக்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்வதாக கூறினார். உடனே ஓடி வந்தாள் ராகவனிடம்.

விசயத்தை கூறினாள். சிறிது நேரம் யோசித்தவன், "கவலைப் படாதே, நான் உன் வீட்டிற்கு பெண் கேட்டு நாளை வருகிறேன்" என்றான். சொன்னது போலவே, தன் வயதான தாயாருடன் வந்தான்.

" யாரு, நீங்க உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றார் ராகவனின் அப்பா.

ராகவன் தான் பதில் கூறினான்.

" சார், உங்க பெண் ராதாவை பொண்ணு கேட்டு வந்துருக்கோம்". மெல்ல உள்ளிருந்து ராதாவின் அண்ணனும், அக்காவும் எட்டப்பார்த்தார்கள்.

"யாரு சார், நீங்க. உங்களுக்கு எப்படி என் பெண்ணைத்தெரியும்?"

" நானும், உங்க பொண்ணும் ஆறு மாசமா நேசிக்கிறோம். அதான் முறைப்படி பொண்ணு கேட்கலாமே என்று வந்தோம்" என ராகவன் சொல்லிமுடிக்குமுன், ராதாவின் அண்ணன் கோபமாக அவனைப் பார்த்து கேட்டான்,

"நீங்க என்ன ஜாதி, என்ன குலம், என்ன கோத்தரம்"

" கலயாணத்துக்கு ஜாதியா சார் முக்கியம். இரண்டு மனசோட சம்மதம் தான் முக்கியம். நான் உங்க பொண்ண ரொம்ப நல்லா வச்சு காப்பாத்துவேன் சார்"

" மிஸ்டர், மேடைல பேசறா மாதிரியெல்லாம், இங்க பேசாதீங்க. நாங்க ரொம்ப ஆச்சாரமான குடும்பம். எங்களுக்கு குடும்ப கொளரவம் தான் முக்கியம். உங்களுக்கு என் பெண்ண கல்யாணம் பண்ணிக்கொடுக்க எனக்கு சம்மதம் இல்ல, அதனால நீங்க உடனே இடத்தை காலி பண்ணலாம்" மிகுந்த கோபத்துடன் கூறினார், ராதாவின் அப்பா.

" உங்க பொண்ணு பிடிக்கலைனு சொல்லட்டும் சார், அப்பறம் போறேன்" என்றவனை ராதாவின் அண்ணன், அவன் சட்டையை பிடித்து அடித்து, ஓங்கி அறை விட்டபோது பதட்ட படாமல் அவன் சொன்னது, அவன் ஆண்மையை வெளிப்படுத்தியதாக உணர்ந்தாள் ராதா.

" மிஸ்டர், உங்கள திருப்பி அடிக்கறது ஒண்ணும் பெரிய விசயமில்ல. என்னொட உயிரான ராதாவோட அண்ணன் நீங்க. என்னதான் இருந்தாலும் என்னோட மச்சானா ஆகப்போறீங்க. நான் ஏன் உங்களை அடிக்கனும்?. நீங்க உங்க தங்கை மேல உள்ள பாசத்துல கோபப்படுறீங்க. உங்க கோபம் நியாமானது. நான் உங்கள் நிலையில் இருந்தாலும் அப்படித்தான் நடந்துப்பேன். எந்த அண்ணனுக்கு தன் தங்கையை முன் பின் தெரியாத ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க மனசு வரும். எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்பீங்க. ஆசை ஆசையா வளர்த்த பொண்ண எவனோ ஒருத்தன் ஒரு நாள் கூட்டிட்டு ஓடுரத, எந்த அப்பாவால, அண்ணனால தாங்கிக்க முடியும். உங்க குடும்பத்துல உள்ள எல்லோருடைய உணர்வுகளையும் நான் மதிக்கிறேன். உங்க எல்லாத்துக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன். நான் உங்க பொண்ண இழுத்திட்டு ஓடிப்போய் எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். தன வீட்ட விட்டு தன் பொண்ணு நல்ல இடத்துலதான் வாழ்க்கைப்படறா அப்படீங்கற சந்தோசம் உங்களுக்கு கிடைக்கறத, என்னோட எந்த நடவடிக்கைகள்னாலேயும் அழிக்கமாட்டேன். ஏன்னா, அந்த சந்தோசத்தை என் தங்கைகளின் கல்யாணத்து மூலமா இன்னும் நான் அனுபவிச்சிட்டு இருக்கென். உங்கள் மனசு மாறும் வரை நான் காத்திருப்பேன்" என்று சொல்லிவிட்டு போன அவனை குடும்பமே ஆச்சர்யத்துடன் பார்த்தது.

தொடரும்......

Jul 21, 2009

பெண் ரசிகர்கள் ரசிக்கும் அஜித்தின் 10டிஸ்கி: இதுக்கு கார்க்கி காரணமில்லைப்பா. தயவு செய்து இதையும் ஜாலியா படிங்க. நோ சீரியஸ் பின்னூட்டம்..

1) பில்லால "I am Back" னு சொல்லி தியேட்டரையே திரும்பி பார்க்க வைச்சீங்களே, அது புடிச்சுது.

2) நடன காட்சிகளில் டான்ஸ் ஆடத்தெரியலைனா கூட அருமையா ஆடுவீங்களே, அதை ரசிப்போம்.

3) "அது" அப்படீன்னு சொல்லிட்டு தலைய அப்படியே ஆட்டுவீங்களே தல அது புடிக்கும்..

4) எந்த ஹீரோயினோட நடிச்சாலும், அந்த ஹீரோயினோட உண்மையான கணவன் போலவே நடிப்பீங்கள்ள. அத விரும்புவோம். அத வீட்டுல சொல்ல போயி திட்டு வாங்குனாலும் அதை ரசிப்போம்.

5) என்னதான் உங்க குரலை எல்லோரும் மிமிக்ரி பண்ணாலும், இன்னமும் அதே ஸ்டைல பேசுறத ரசிப்போம்.

6) சிட்டிசன் படத்துல அந்த வயசான கேரக்டர்ல, "யெய்ய்ய்ய் கலக்டரே" னு கத்துவீங்கள்ள அத யாராவது மறக்க முடியுமா?.

7) "கண்டு கொண்டேன் , கண்டு கொண்டேன்" படத்துல, அந்த பாட்டுல, என்னத்தான் ஐஸ்வர்யா ராய் ஆடுனாலும், தபுவ சைட் அடிப்பீங்களே அத மறக்க முடியுமா? ..

8) பில்லால அந்த கோட் ஷ்ட்ல கூலிங் கிளாஸ கழட்டாம அடம்புடிப்பிங்கள்ள தல அதை மறக்க முடியுமா?.

9) முகவரி படத்துல, உண்மையா பாடுனவர விட நீங்க அருமையா வாயசைப்பீங்கள்ள, அதை ரசிப்போம்ல.

10) பத்தாவது பாயிண்ட்டா எல்லாத்தையும் சொல்லலாம். உங்க காஸ்ட்யூம்ஸ், காமெடி, சண்டை. இப்படி சொல்லிட்டே போகலாம். ஆக மொத்தம் அஜீத்னா நாங்க ரசிப்போம்ப்பா..

"நிலாவே வா!" - சிறுகதை - பாகம் 1

மிகச்சோர்வாய் உணர்ந்தாள் ராதா. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகுதான் அந்த யோசனையை எடுத்திருந்தாள். தான் எடுத்த முடிவில எந்த குழப்பமும் இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை. சிறு வயதிலே இருந்தே எதிலும் தனித்தே முடிவு எடுக்கும் பழக்கம் அவளுக்கு இருந்தது. எல்லோரிடமும் ஆலோசனை கேட்பாள். ஆனால், எப்போழுதுமே முடிவு அவள் கையில்தான். இந்த சூழ்நிலையில் கூட எல்லோருடைய யோசனையும் கேட்டாள். ஆனால், வழக்கம் போலத்தான்.. யோசித்துக்கொண்டிருக்கும்போதே தொலைப்பேசி அழைத்தது. எடுத்து பேசினாள். வேறு யாரும் இல்லை. எல்லாம் அவளுடைய வக்கில்தான். நாளை காலையில் குடும்பநல கோர்ட்டில் இவளுடைய விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருகிறது. அநேகமாக, நாளை முடிவு தெரிந்து விடும். நாளையிலிருந்து அவளை யாரும் எந்தவிதமான கண்ட்ரோலும் செய்ய முடியாது. சந்தோசமாக இருப்பதுபோல் உணர்ந்தாள்.

ஆனால் மனதின் ஒரு மூலையில் அந்த பழைய நினைவுகள் வந்து வந்து போயின. எவ்வளவோ அடக்க முயன்றும் தோற்றுப்போனாள். அவள் ராகவனை எப்போது சந்தித்தாள்? ...

சரியாக மூன்று வருடங்களுக்கு முன்பு. அவள் கல்லூரி ஆண்டு விழா. வழக்கம் போல இவள் கல்லூரி மேடையில் பாடினாள். ராதாவுக்கு சிறு வயதிலிருந்தே பாடுவதில் அலாதி பிரியம். எல்லாம் அவள் அம்மாவிடமிருந்து வந்தது. அன்றும் வழக்கம் போல ராதான் முதல் பரிசு வாங்கினாள். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிதான் அவளுடைய வாழ்க்கையை புறட்டிப்போடப்போகிறது என்பதை அப்போது அவள் உணரவில்லை. ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த இசை நிகழ்ச்சி மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கியது. அந்த ஆர்கஸ்ட்ராவின் ஹீரோவே அதில் பாடிய அந்த இளைஞன்தான். அப்படியே தன் இசையால் அனைவரையும் கட்டிபோட்டான். அருமையான வார்த்தை உச்சரிப்பு, நல்ல குரல், சுதி பிச்காமல் அவன் பாடிய பாங்கு அனைத்து மாணவர்களையும் கட்டிப்போட்டதோ இல்லையோ, ராதாவை அப்படியே மயங்க வைத்துவிட்டது. அந்த சமயத்தில்தான் அவளுக்கு மிகவும் பிடித்த, சப்த நாடிகளையும் அடக்கி ஒடுக்கி, மகிழ்ச்சி பிரவாகத்தை உண்டு பண்ணக்கூடிய, அந்த பாடலை பாட ஆரம்பித்தான்.

"நிலாவே வா, நில்லாமல் வா....."

ராதா உலகத்தைவிட்டு வெகு தொலைவுக்கு போய்விட்டாள். மனம் உருகினாள். மனம் மிக மிக லேசானதாய் உணர்ந்தாள். பேரின்ப பெரு சுகத்தை அனுபவித்த நிலையில் இருந்தாள். சபையில் கைத்தட்டல் அடங்க வெகு நேரம் ஆனது. அனைவரும் கைத்தட்டி முடித்தபின்பும் இவள் மட்டும் தட்டிக்கொண்டே இருந்தாள்.

" என்னடி ராதா, இப்படி இருக்க?, நீயே ஒரு பாட்டு பைத்தியம், உனக்கு புடிச்ச பாட்டு வேற, உடனே கனவுலகத்துக்கு போய்ட்டியோ?" என அவள் தோழி கலா அவளை தொட்டு எழுப்பியதும்தான் தன் நிலை உணர்ந்தாள்.

"கலா, அவர் கிட்ட ஒரு ஆட்டோகிராப் வாங்கணும் போலாமா?"

" யேய் ராதா, என்ன இது. அவர் சாதரண ட்ரூப்புல பாடுர பாடகர். அவர் ஒன்னும் எஸ்.பி.பி இல்ல"

" எஸ்.பி.பி பட்டும்தான் நல்லா பாட்டு படணும்னு இல்ல. நல்ல இசை எங்கே இருந்தாலும் ரசிக்க கத்துக்கணும். உனக்கு புடிச்சுருக்கா இல்லையா அப்படீங்கறது என் கவலை இல்ல. எனக்கு பிடிச்சிருக்கு. என்னோட வரீயா, இல்லையா?'

" உடனே கோபம் பொத்துக்கிட்டு வருமே, என்னைக்குதான் இப்படி சடாருனு கோபப்படறத நிறுத்த போறியோ தெரியல. சரி, சரி வா, என்னோட உயிர் தோழியாயிட்ட, உன் பேச்ச தட்ட முடியுமா?" என்றவள், ராதாவை கூட்டிக்கொண்டு மேடையருகே சென்றாள்.

அந்த பாடகரைத்தேடி சென்று பார்த்தவளை எல்லோரும் ரொம்ப ஆச்சர்யமாகப்பார்த்தார்கள்.

" சார், ஒரு ஆட்டோகிராப்!" என்றவளை கேள்விக்குறியுடன் பார்த்தான்.

" என் கிட்டயா?"

" ஆமா சார். உங்க பாட்டு கொடுத்த பிரம்மாண்டத்துலே இருந்து இன்னும் அவ வெளிய வரல சார். அதுவும் நீங்க பாடுன 'நிலாவே வா' பாட்டக்கேட்கும்போது அவ கண்ணுலே இருந்து தாரை தாரையா கண்ணீர் சார்" என்று சொன்ன கலாவை சந்தோசம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

உடனே ராதாவின் நோட்டை வாங்கி, " பெஸ்ட் ஆப் லக், என்றும் அன்புடன், ராகவன்" என கையெழுத்திட்டான்.

"நன்றி" என்ற ஒற்றை சொல்லை சொல்லிவிட்டு போனவளை வித்தியாசமான உணர்வுகளுடன் பார்த்தான் ராகவன்.

அந்த இரவு முழுவதும் ஏதோ ஒரு ஆனந்தத்தை அனுபவித்தாள். ராகவனுடனான அடுத்த சந்திப்பு ஹிக்கின் பாத்தம்ஸில் நடந்தது. இருவரும் ஒரே நேரத்தில் ஒரே புக்கை தேடும்போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அப்போதும் ராதா தான் பேச்சை ஆரம்பித்தாள்,

"சார், எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன் நீங்க?"

"ரொம்ப நல்லா இருக்கென்" என ஆரம்பித்த பேச்சு ஒருவருக்கொருவர் விசாரிக்கும் அளவுக்கு முன்னேறியது. ராதான் ராகவனை காபி சாப்பிட அழைத்தாள். ஒரு வெட்க புன்னகையுடன் காபி சாப்பிட வந்தான் ராகவன். அந்த சந்திப்பில்தான் அவனைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டாள் ராதா. அவன் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன். மூன்று தங்கைகளுக்கு கஷ்டப்பட்டு திருமணத்தை முடித்துவிட்டு கல்யாண மார்க்கெட்டில், வயது 33 ஆனதால் தன்னை தொலைத்துவிட்டு வாழ்க்கையையும் தொலைத்துவிட்ட ஒரு சராசரி இந்திய பிரஜை என்பதை புரிந்து கொண்டாள்.

இப்படியாக ஆரம்பித்த அவர்கள் நட்பு மெல்ல மெல்ல தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமளவிற்கு முன்னேறியது. இரண்டு மாததிதில் மெல்ல அவள் மனதில் இடம் பிடித்தான் ராகவன். அவனுடன் பேசாமல் இருந்த நாட்களை நரகத்திலிருக்கும் நாட்களாக நினைத்தாள்.

தொடரும்...

Jul 16, 2009

ப்ளாக்கை பாதுகாப்பது எப்படி?

நேற்று நண்பர் கார்க்கியின் ப்ளாக்கை யாரோ ஹேக் செய்து விட்டதாகவும், பிறகு திரும்ப கிடைத்து விட்டதாகவும் அவர் பதிவின் மூலம் அறிந்தேன். இதனால், எனக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் தோன்றுகிறது. இதை பற்றி விசயம் தெரிந்தவர்கள் ஒரு பதிவினை எழுதுவார்களேயானால் என்னைப் போன்றவர்களுக்கு இதைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும்.

என்னுடைய சந்தேகங்கள்:

01. ஹேக்கின் செய்வது என்றால் என்ன? எப்படி அவர்கள் நம் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியும்? இது சாத்தியமானால், ஆனந்த விகடன் போன்ற தளங்களை கூட ஹேக் செய்ய முடியுமா?

02. அப்படி அவர்கள் நம் ப்ளாக்கை திருடும் பட்சத்தில் நாம் எழுதிய அனைத்து பதிவுகளும் அவர்கள் அழித்து விட்டால் என்ன செயவது?

03. அப்படி அவர்கள் நம் பதிவுகளை அழிக்கும் பட்சத்தில் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற தளங்களிலிருந்து நம் பதிவுகளை பெற முடியுமா?

04. எப்படி ஹேக் செய்யப்பட்ட ப்ளாக்கை திரும்ப பெறுவது?

05. அவ்வாறு நம் ப்ளாக் கடத்தப் படாமல் இருக்க நாம் என்ன மாதிரி பாதுகாப்பு செய்து கொள்ள வேண்டும்?

06. நம் ப்ளாக்கை ஹேக் செய்வதால் அவர்களுக்கு என்ன நன்மை?

07. அவர்கள் நம் ப்ளாக்கை கடத்தி ஏதேனும் தவறான செய்தி வெளியிட்டால், அதை எப்படி நாம் எழுதவில்லை என அடுத்தவர்கள் நம்புவார்கள்?

08. மொத்தத்தில் இதை தடுக்க என்னதான் வழி?

தயவு செய்து விசயம் தெரிந்தவர்கள், ஒரு பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ தெரிவியுங்கள். நான் வேண்டுமென்றால் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக எழுதுகிறேன்.

இதனை நண்பர் கார்க்கி படித்தால் அவர் எப்படி அவர் ப்ளாக்கை திருமப பெற்றார் என தெரிவிக்கவும்.

Jul 14, 2009

மிக்ஸர் - 14.07.09 - சிறுகதை போட்டி முடிவு!!!

உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்திய சிறுகதை போட்டி முடிவு நாளை வெளிவரும் என நினைக்கிறேன். வெற்றிப் பெற போகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை இப்போதே சொல்லிக் கொள்கிறேன்.

******************************************************************

நிறைய நண்பர்கள் மெயில் மூலம் அவர்களின் சிறுகதைகளையும், கவிதைகளையும் என்னை படிக்கச்சொல்லி கருத்துக்கள் கேட்கிறார்கள். வேலை பளுவினால் உடனே கருத்துக்கள் சொல்ல முடியாத நிலை. படித்து கொண்டிருக்கிறேன். விரைவில் அனைவருக்கும் நிச்சயம் பதில் அனுப்புகிறேன். முதலில் என்னை ஒரு ஆளாக நினைத்து கருத்துக்களை கேட்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி.

******************************************************************

சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் நடந்த சம்பவம். அந்த தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் இருப்பது வெளி நாட்டில். கணவன் மனைவி மட்டுமே அந்த வீட்டில். ஒரு நாள் ஏதோ ஒரு விசயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை முற்றிவிட்டது. கோபத்தில் கணவர், மனைவியை பிடித்து தள்ள, அவர் கீழே விழ, தலையில் பலத்த அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து விட்டார். அதை பார்த்த அந்த கணவர், குற்ற உணர்ச்சியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நினைக்கவே வேதனையாக உள்ளது. இதை விதி என்பதா? என்ன சொல்வது? சாதாரண விசயத்தில் ஆரம்பித்த சண்டையில் அநாவசியமாக இரண்டு உயிர்கள் போய் விட்டது.

******************************************************************

நான் எழுதி ஆனந்த விகடனில் வெளியான முதல் சிறு கதை அதாவது ஒரு பக்க கதையில் குழந்தை தத்து எடுப்பதை பற்றி எழுதியிருந்தேன். அதற்கு ஏகப்பட்ட பாரட்டு கடிதங்கள் வந்தன. அந்த சந்தோசத்தில் நாமே ஏன் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க கூடாது? என நினைத்து, வீட்டில் ஆலோசித்தேன். என் மனைவி ஒத்துக்கொண்டாலும், என் பிள்ளைகள் ஒத்துக்கொள்ள வில்லை. பெண்ணுக்கு நல்ல விபரம் தெரியும். பையன் சின்ன பையன். இருந்தாலும் அவர்களை எதிர்த்து நான் அந்த செயலில் இறங்க முற்படவில்லை. ஆனால், இப்போது என்ன தோன்றுகிறது என்றால், நாம் எடுத்து வளர்ப்பதற்கு பதில், ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு அந்த பணத்தை செலுத்தி ஒரு குழந்தைக்கான செலவை ஏற்கலாமா? என யோசித்து வருகிறேன். எனக்கு உதவும் கரங்கள் அமைப்பை பற்றி தெரியும். வேறு ஏதாவது நிறுவனங்கள் தெரிந்தால், மெயிலிலோ, பின்னூட்டத்திலோ நண்பர்கள் தெரிவிக்கவும்.

*********************************************************************

நான் ஒரு வருடத்துக்கு ஒரு முறை பழைய துணிகளை தூக்கி போடுவது வழக்கம். இந்தியாவில் என்றால், யாருக்காவது கொடுக்கலாம். இங்கே தூக்கித்தான் போட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், போன வருடம்தான் தெரிந்தது. இங்கே ஒவ்வொரு சாப்பிங் காம்ளக்ஸிலும் ஒரு பெரிய பெட்டி மாதிரி வைத்துள்ளார்கள். நமக்கு தேவையில்லாத துணிகளை அங்கே போட்டு விட்டால் அவர்கள் அதை உடை வாரியாக பிரித்து மற்ற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். இந்த முறை இந்தியாவில் உள்ளதா எனத் தெரியவில்லை. ரொமப நல்ல விசயமாக இருப்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

********************************************************************

சமீபத்தில் என் நண்பரிடம் இருந்து வந்த மெயில். மிகவும் பயனுள்ள விசயமாக இருப்பதால் இங்கே வெளியிடுகிறேன்:

Dear Friends,

If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year (April 2009) and scored more than 80%, please ask them to contact the NGO-Prerana (supported by Infosys foundation).

The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies.Please ask the students to contact the people mentioned below to get the form #580,shubhakar, 44th cross,1st main road,jayanagar

7th block Bangalore-

Mob no- 9900906338(saraswat i)
Mr.Shivkumar( 9986630301) - Hanumanthnagar office
Ms.Bindu(9964534667 )-Yeshwantpur office

Even if you dont know anyone, please pass on this info, some one might be in need of this help desperately.

*******************************************************************

Jul 13, 2009

கொஞ்சம் நகைச்சுவை அல்லது மொக்கை???

கடந்த ஒரு வாரமா, திரட்டி.காம் நட்சத்திரமா இருந்து கொஞ்சம் சீரியஸ்ஸான பதிவுகளா போட்டதுனால, கொஞ்சம் ரிலாக்ஸாக இந்த பதிவு. ஏற்கனவே இந்த விசயங்களை தெரிந்தவர்கள் கொஞ்சம் பொறுத்தருள்க!!!

************************************************

எங்க ஊர்ல பொன்னன், பொன்னனு ஒரு பொன்னன் இருந்தான். அவன் எப்பவும் திமிராத்தான் பேசுவான். திமிராத்தான் நட்ந்துக்குவான். அவனை யாரும் கண்ட்ரோல் பண்ண முடியலை. யாராவது கேட்டா எதுத்து பேசுவான், சணடைக்கு வருவான். அதனால யாருமே அவன் வம்புக்கு போக மாட்டார்கள். ஆனால், அவன் அடுத்தவங்கள வம்புக்கு இழுப்பான். அடுத்தவங்கள நோகடிச்சு பாக்குறதுன்னா அவனுக்கு அவ்வளவு ஆர்வம். அவனோட லொள்ளு நாளுக்கு நாள் அதிகாமாயிட்டே இருந்துச்சு. யாருமே அவனை கேட்கமுடியாம போனதுனால அவன் தொல்லை அந்த ஊர்ல ரொம்ப அதிகமா ஆயிடுச்சு.

ஊர்ல உள்ள எல்லோரும் அவங்க அப்பாட்ட புகார் பண்ணாங்க. அவங்க அப்பாக்கு ஏகப்பட்ட வருத்தமும், கோபமும். 'என்னடா, நம்ம பையன் இப்படி ஆயிட்டானே' அப்படின்னு. அவனை எப்படி திருத்துரதுனு ஒரே யோசனையில இருந்தாரு. ஒரு நாள் அவரு ஆபிஸிலேர்ந்து வீட்டுக்கு வந்தப்ப, பொன்னன் மாடியில நின்னு வாழைப்பழம் சாப்பிட்டுகிட்டு இருந்தான். அவங்க அப்பா, அவனை கீழே இருந்து கவனிச்சிகிட்டு இருந்தாரு. அவன் பழத்தை சாப்பிட்டு, தோலை கீழ போட்டு கிட்டு இருந்தான். இவருக்கு உடனே கோபம் வந்துடுச்சு. அவனை கண்டிக்கரதுக்காக மேலே போகப் போனவரு, பொன்னன் போட்ட வாழப்பழத்தோலுல வழுக்கி விழுந்துட்டாரு.

உடனே எழுந்து மாடிக்கு போய், " ஏண்டா, இப்படி பண்ணற?. நான் விழுந்துட்டேன் பார்த்தீயா? இதே போல மத்தவங்க விழுந்தா என்ன ஆகும்? அவங்க பாவம் இல்லையா? இது மாதிரி எல்லாம் செய்யலாமா?" அப்படினு கேட்டாரு.

அதை கேட்ட பொன்னன் அவர ஒரு மாதிரி பார்த்தான். அப்பறம் பொன்னன் என்ன ஆனான்?

விடை கடைசியில்.

*************************************************

நிறைய படிச்ச ஒருத்தரு ஜெர்மன்ல ஒரு கருத்தரங்குக்கு போனாரு. பேசினாரு. பேசி முடிச்சோன அவருக்கு ஒரு இருமல் சிரப்பு(syrup) கொடுத்தாங்க. அவருக்கு ஒன்னும் புரியல. சரி ரொம்ப நேரம் பேசியதால, தொண்டை காட்டி இருக்கும்னு நினைச்சு கொடுத்துருப்பாங்கனு நினைச்சுக்கிட்டாரு.

அமெரிக்கா போனாரு. அங்கேயும் பேசி முடிச்சோன அதே சிரப்பு.

கடைசியா ரஷ்யா போனாரு, அங்கேயும் பேசி முடிச்சோன அதே சிரப்பு.

கடுப்பாய் அவர் உதவியாளருக்கிட்ட கேட்டாரு, " ஏன் எல்லாரும் எனக்கு பேசி முடிச்சோன்ன இருமல் சிரப்பே குடுக்குறாங்க?"

அதுக்கு அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்?

விடை கடைசியில்.

***************************************************

அமெரிக்கால ஒரே ட்ராபிக் ஜாம். யாராலையும் சரி செய்ய முடியல. உடனே அமெரிக்கா அரசாங்கம் இந்தியாவ தொடர்பு கொண்டு அவங்களுக்கு உதவ சொன்னுச்சு.

உடனே நம்ம விஞ்ஞானிகள் போய் அந்த ரோட்டுல ஒரு வில்ல வைச்சாங்க, உடனே ட்ராபிக் க்ளீயரா ஆயிடுச்சு? எப்படி இது சாத்தியமாச்சு?

விடை கடைசியில்.

****************************************************

முதல் கேள்விக்கான விடை: பொன்னன் அன்னையிலிருந்து திருந்திட்டான்.

இரண்டாவது கேள்விக்கான விடை: கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

மூன்றாவது கேள்விக்கான விடை: When there is வில் there is a way.

*****************************************************

Jul 12, 2009

உண்மையை ஒப்புக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்!

நான் நேற்று சன் டிவியின் "அசத்தப் போவது யாரு" நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வில் இந்த பதிவினை எழுதுகிறேன். நேற்றைய (இந்தியாவில் போன வார நிகழ்ச்சி) நிகழ்ச்சியில் நடிகர் சத்யன் அவர்கள் சிறப்பு விருந்தினர். நிகழ்ச்சியின் நடுவில், மதன் பாபு அவரை பார்த்து ஒரு கேள்வி கேட்டார்,

"சத்யன் சார், நீங்க இரண்டு படம் ஹீரோவா நடிச்சிருக்கீங்க. இப்போ காமடி நடிகரா நடிக்கறீங்க. எது பெட்டரனு நினைக்கறீங்க?. எது உங்களுக்கு புடிச்சிருக்கு?"

"சார், நான் இரண்டு படம் ஹீரோவா பண்ணுனேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, மக்களுக்கு பிடிக்கல. அதனால காமடி ரோல் பண்ண ஆரம்பிச்சேன். இது மக்களுக்கு பிடிக்குது. அதனால இப்போ அதையே கண்டினியூ பண்ணறேன். ஏன்னா, மக்களுக்கு பிடிக்கலைனா ஹீரோவா நடித்து என்ன பயன்?"

என்ன அற்புதமான பதில் பாருங்க. நான் ஹீரோவா தான் நடிப்பேன்னு மல்லு கட்டிட்டு நிக்காம, தனக்கு எது வருமோ, அதை தான் நான் பண்ணுவேனனு சொன்னது, எனக்கு அவர் மேல் ஒரு மதிப்பை ஏற்படுத்தி விட்டது. நாம எத்தனை பேர் இவ்வாறு உண்மையை ஒப்புக்கொள்கிறோம்?

எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது. எனக்கு கிரிக்கட் என்றால் உயிர். நான் ஆறாவது படிக்கும்போது இருந்தே கிரிக்கட் விளையாடினேன். பெரிய பிளேயர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால், ஆசை மட்டும் இருந்து என்ன பயன்? அதற்கான சரியான முயற்சி எடுக்க வேண்டாமா? சரியான முயற்சி என்றால் முறைப் படி பயிற்சி எடுக்க வேண்டும். ஆட்டத்தின் நெளிவு சுழிவுகளை கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி பல. இது கிரிக்கட்டுக்கு மட்டுமல்ல. எந்த ஒரு கேமோ இல்லை கலையோ, எது கற்றுக் கொள்வதென்றாலும் அதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்பவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்.

ஆனால், நான் அப்படி செய்ய முடியவில்லை. ஏனென்றால், எனக்கு படிப்பு ஒன்றே முக்கியம் என்று பட்டதால், சரியாக நெட் ப்ராக்டிஸ் போக மாட்டேன். இதனால், எங்கள் டீமின் கேப்டன் என் மீது கோபம் கொள்வான். இது அடிக்கடி நடைப்பெற்ற ஒரு விசயம்தான். நான் அதற்காக ஒரு மோசமான பிளேயர் இல்லை. அதே நேரத்தில் ஒரு ஸ்டார் ப்ளேயரும் இல்லை. ஆனால், எனக்கு சரியாக மற்றவர்கள் போல விளையாடத் தெரியாது என்ற உண்மையை நான் கடைசி வரை ஒப்புக்கொள்ள வில்லை.

ஒரு முறை நாங்கள் எங்கள் அணி YCC சார்பாக ஒரு கிரிக்கட் டோர்னமெண்ட் நடத்தினோம். அப்போதுதான் செமெஸ்டர் முடிந்த சமயம். அதனால், என்னால் சரியாக ப்ராக்டிஸ் செய்ய முடியவில்லை. அதனால், என்னை டீமில் சேர்க்க வில்லை. நான் தான் ஒப்புக்கொள்ள மாட்டேனே? எனக்கு ப்ராக்டிஸ் போதாது என்று? உடனே என்ன செய்தேன் தெரியுமா? எங்கள் அணியை எதிர்த்து ஒரு டீமை களத்தில் இறக்கினேன். பல டீம் ப்ளேயர்களை ஒருங்கிணைத்து ஒரு டீம் ரெடி பண்ணினேன். ஒரு சில மேட்சுகள் ஜெயித்தோம். ஆனால், எங்கள் டீமை வெல்ல முடியவில்லை. பிறகு அதே டீமில் சேர்ந்து விளையாடி, திருச்சி நான்காவது டிவிசன் லீகில் விளையாடி, தோற்று பிறகு டீமையே கலைத்து விட்டோம். அதன் பிறகு கம்பெனியில் சில முறை ஆடியதுண்டு.

ஆனால், அன்று என்னை விட நன்றாக ஆடியவர்கள், நான் அவர்களை போல ஆட வில்லை என கேலி செய்தவர்கள் எல்லாம், ஏதோ இந்திய கிரிக்கட் அணியில் ஆடுகின்றார்கள் என நினைக்காதீர்கள். யாரும் அதற்கு பிறகு விளையாடவே இல்லை. கிரிக்கட் விளையாடி பெரிய ஆளாகி சம்பாதிப்பேன் என சொன்னவர்கள் எல்லாம்.....? வேணாம், எதற்கு விடுங்கள்.

இதன் மூலம் இரண்டு உண்மைகள் எனக்கு விளங்கின:

01. நல்ல வேளை கிரிக்கட் முக்கியம் என்று படிப்பை கோட்டை விட வில்லை.

02. நமக்கு என்ன வருகிறதோ, என்ன தெரிகிறதோ அதில் மட்டுமே கவனம் செலுத்தி முன்னேற வேண்டும். வராத விசயத்தில் மல்லு கட்டி நிற்க கூடாது.

ஏனென்றால் சிறு வயதில் அனைத்து விசயங்களிலும் நமது நாட்டம் இருக்கும். பெற்றோர்கள் தான், " நம் குழந்தைக்கு என்ன வரும், என்ன வராது" என்று பார்த்து அதில் திறமையை வளர்க்க செய்ய வேண்டும். சில பேருக்கு ஸ்போர்ட்ஸ் வரும், சில பேருக்கு பாட்டு, நடனம், மியூஸிக்கல் கருவிகள் கற்றுக் கொள்வது இப்படி பல. சரியான பாதைக்கு வழி நடத்துவதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம்.

இருந்தாலும், இன்னும் கண்ணை மூடினால், ஏதோ ஸ்கொயர் கட் பண்ணுவது போலவும், fலிக் ஆடுவது போலுமே நினைவுகள் வந்து கொண்டிருக்கின்றது. என்ன செய்ய? கிரிக்கட் ரத்தத்தில் ஊறி விட்டது.

எனவேதான், உண்மையை ஒத்துக் கொண்ட நடிகர் சத்தியனை எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது.


******************************************************

சில நாட்களுக்கு முன்னால், "அசத்த போவது யாரு" புகழ் கோவை ரமேஷ் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டதாக ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். அது உண்மையா? ஏனென்றால், நேற்றைய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற ஒரு காட்சி வந்தது. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் எனக்கு மிகுந்த சந்தோசம்.

*****************************************************

Jul 11, 2009

சிறு பிள்ளைத்தனம்..?

சிறு வயதில் நடந்த சில விசயங்களை இப்போது நினைத்தால் சிரிப்பும், சில சமயம் என் மீதே கோபமும் வருகிறது. நான் +2 படித்த சமயத்தில் நடந்த சம்பவம். ஒரு நாள் இரவு நண்பர்கள் அனைவரும் பார்க்கில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் அட்டானமஸ் காலேஜில் படித்தேன். சில நண்பர்கள் யுனிவர்சிட்டி காலேஜில் படித்தார்கள். பேசிகொண்டே இருந்த போது, எந்த காலேஜ் சிறந்தது என்று எங்களுக்குள் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. சாதாரணமாக ஆரம்பித்த வாக்குவாதம், பெரிதாக ஆரம்பித்து சண்டை போடும் அளவுக்கு வந்தது. சத்தம் அதிகமாகிக்கொண்டே வந்தது. சிறிது நேரம் கழித்து பார்த்தால் இரண்டு போலிஸ் எங்களை நோக்கி வந்தார்கள். எங்கள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு, ஏதோ பெரிய ரவுடிகளை அழைத்துச்செல்வது போல " தம்பிங்களா, வாங்க ஐய்யா கூட்டிட்டு வரச் சொன்னார்" னு சொல்லி போலிஸ் ஸ்டேசன் கூட்டி சென்றார்கள்.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், நாங்கள் போய் கொண்டிருக்கும்போது, எனது நண்பன் ஒருவன் தப்பிக்க பார்க்க, நான் ஒரு போலிஸ்காரரை கூப்பிட்டு, "சார், இங்க பாருங்க, அவன் தப்பிச்சு ஓடுரான்" எனச் சொல்ல, அவர் அவனை துரத்திப் பிடித்து, பிறகு ஸ்டேசன் போய், இன்ஸ்பெக்டர், நாங்கள் எல்லாம் யாரென்று விசாரித்து, எங்களை கண்டித்து, "இனிமேல் பொது இடத்துல இது மாதிரி நடக்காதீங்க. படிக்கர பையன்கள் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடுகிறேன்" என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்.

அன்னைக்கு இரவு நாங்க யாருமே தூங்கல. ஒரே பயம். வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ? அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோனு?
காலைல ஒரு நண்பர் மூலமா அப்பாவுக்கு தெரிஞ்சு ஒரே திட்டு வாங்கி அப்பா அவோரட ஜீப்புல போலிஸ் ஸ்டேசன் கூட்டி போய், " என்ன பிரச்சனை, ஏன் கூட்டி வந்தீங்கன்னு" கேட்டார். நான் உடனே, ஒருவரை காமிச்சு 'இவர் தான்பா எங்களை கூட்டி வந்தார்னு' மரியாதை குறைவாய் சொல்லி, கொஞ்சம் அங்கே பதட்டம் ஏற்பட்டு, பிறகு, அந்த இன்ஸ்பெக்டர், " சாரி சார், உங்க பையனு தெரியாதுனு" சொல்லி, அப்புறம் அப்பா சமாதானம் ஆயி ஒரு வழியா வீட்டுக்கு வந்துட்டோம்.

இதை இப்போ இங்கே சொல்லும் காரணம்,ஒருவன் தப்பி போகும்போது அவனை பிடித்துக்கொடுத்த அந்த செயலும், போலிஸ் ஸ்டேசனில் நான் நடந்து கொண்ட முறையும், இன்னமும் என் மனதிற்குள் உறுத்திக்கொண்டிருக்கிறது என்பதால்தான். இன்னமும் அந்த நண்பன் அந்த சம்பவத்தை நினைவில் வைத்துள்ளான். பார்க்கும்போதெல்லாம் என்னைக் கேட்கிறான்.

******************************************************************

எங்கள் வகுப்பில் உள்ள அனைவரும் கோவா டூர் சென்றிருந்தோம். அப்பொது கல்லூரியின் சார்பாக எங்களோடு ஒரு புரபசரும் வந்திருந்தார். மிகவும் நல்ல மனிதர் அவர். ஆனால், அவர் செய்த ஒரே தவறான செயல் மாணவர்களை பீர் அடிக்க அனுமதித்துதான். மொத்தம் 11 நாள் டூர். ஒரு நாள் இரவு, மாணவர்கள் சிலர் ரொம்ப போதையில் அவரை மட்டமாக பேசி, அவர் ரூமிற்கு சென்று, லைட்டை அணைத்து விட்டு, அவரை அடித்து அவரின் சட்டையை கிழித்து, பாவம் அவர் அன்று கண்கலங்கி என்னை பார்த்த பார்வையும், அவரின் நிலையும், இன்னும் என் மனதை உறுத்திக் கொண்டு உள்ளது. சத்தியமாக நான் அந்த செயலில் ஈடுபடவில்லை. அடித்த அந்த மாணவர்களை எனக்கு தெரிந்திருந்தும் நான் காட்டிக் கொடுக்கவில்லை. ஆனால், பிறகு அவர்கள் யார் என்று தெரிந்தாலும், அவர் அவர்களை திட்டவும் இல்லை, எதுவும் கேட்கவும் இல்லை..

ஆனால், அதே புரபசர், கடைசிநாள் அன்று, ட்ரெயின் கிளம்பும் வரையில் அவரை அடித்த அந்த இரண்டு மாணவர்கள் நேரத்திற்கு வராமல் இருந்தபோது, அந்த டென்சனில் அவர் கண்கலங்கியதும், அவர் பட்ட வேதனையும் இன்னும் என் நினைவில் உள்ளது. அதுதான் நல்ல ஆசிரியரின் குணம் என்பதை நான் உணர்ந்து கொண்ட நாள் அது.

இந்த சம்பவமும் இன்னும் என் மனதில் ஆழமாய் பதிந்துள்ளது.

************************************************************

நான் எட்டாவது வகுப்பு படித்த போது நடந்த ஒரு சம்பவம். எனது பள்ளியில் என் நண்பனின் அப்பாவும் ஒரு ஆசிரியர் . ஒரு முறை என் வகுப்பு நண்பன் என்னிடம் ஏதோ காரணத்திற்காக என்னிடம் தகராறு செய்தான். நான் உடனே அவனை என் நண்பனின் அப்பாவிடம் போட்டு கொடுக்க, அவர் அவனை விசாரிக்காமல், அவனை அடித்து நொறுக்க, அவன் அழுது கொண்டே என்னை பார்த்த சம்பவமும் இன்னும் என் மனதை உறுத்திக்கொண்டுள்ளது.

மேலே உள்ள மூன்று சம்பவங்களிலும் நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தபட்டிருக்கிறேன். என்னதான் அது அறியாத வயது தெரியாத வயது என்றாலும், என் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி இருந்து கொண்டுதான் உள்ளது.

*************************************************************

நான் எனக்கு வந்த சில கடிதங்களை வைத்து இன்று ஒரு பதிவு ரெடி பன்ணி வைத்திருந்தேன். ஆனால், சில பல காரணங்களால், அந்த பதிவை வெளியிட வேண்டாம் என நினைத்து, வேறு பதிவை இங்கே பதிவிடுகிறேன்.

***********************************************************

Jul 10, 2009

சில சுவையான செய்திகள்

என் பிள்ளைகளுக்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் என்றால் உயிர். முன்பெல்லாம் எ.ஆர்.ரகுமான் பாடல்கள் பிடிக்கும். ஆனால், இப்போது என் பிள்ளைகள் 'வாரணம் ஆயிரம்', 'அயர்ன்' பாடல்களை கேட்காமல் இரவு தூங்குவதில்லை. நாங்களும்தான். நான் என் மனைவியிடம் கூறினேன், "யாரெல்லாம் குழந்தையை கவர்கிறார்களோ அவர்களெல்லாம் பெரிய ஸ்டார் ஆகி விடுகிறார்கள். உதாரணத்திற்கு ரஜினி, விஜய். இவர்கள் இருவரையும் பிடிக்காத குழந்தைகள் உண்டோ?"

" நீங்கள் சொல்வது சரிதான். இன்னொரு மியூசிக் டைரக்டர் பாட்டுக்கூட பிள்ளைகளுக்கு பிடிக்குமே? யாரது?" எனக் கேட்டார்கள். சடாரென எனக்கும் என் மனைவிக்கும் அவரின் பெயர் நினைவுக்கு வரவில்லை. அவர் யாரென்பது இந்த செய்தியின் கடைசியில்.

இவ்வாறுதான் சில விசயங்கள் அடிக்கடி மறக்கின்றன. இது சம்பந்தமாக ஒரு செய்தி.

மிகப் பிரபலமான மோடிவேஷனல் பேச்சாளர் ஒரு செமினாரில் பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் முடிவில் அவர் இப்படி கூறினார்:

" மிகச் சிறந்த வருடங்களை நான் செலவிட்டது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோதுதான், ஆனால், அந்த பெண் என் மனைவி அல்ல"

கூட்டத்தினர் அனைவரும் மிகவும் அதிர்ச்சி கலந்த அமைதியுடன் அவரி பார்த்தார்கள், "என்னடா, இவர் இப்படி சொல்லுகிறாரே" என்று.

சிறிது நேர அமைதிக்கு பின் அவர் கூறினார்:

" அந்த பெண் வேறு யாருமல்ல. என் அன்னை தான்"

கூட்டத்தினர் அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஒரு வாரத்திற்கு பிறகு அந்த செமினாரில் கலந்து கொண்ட ஒரு பெரிய மேனஜர், அந்த அருமையான ஜோக்கை தன் வீட்டில் மனைவியிடம் சொல்ல நினைத்தார். அன்று அவர் குடித்திருந்ததால் சிறிது போதையுடன் இருந்தார். வீட்டிற்கு வந்தவுடன் இரவு சமையலில் ஈடுபட்டிருந்த மனைவியை சத்தமாக கூப்பிட்டு இப்படி கூறினார்:

" மிகச் சிறந்த வருடங்களை நான் செலவிட்டது ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருந்தபோதுதான், ஆனால், அந்த பெண் என் மனைவி அல்ல"

அருகில் சென்ற அவரின் மனைவி கோபத்துடனும், அதிர்ச்சியுடனும், " ஆஆஆஆ'' என அவரைப் பார்த்தார். அங்கே நின்று கொண்டிருந்த மேனஜர் ஒரு 20 வினாடி கழித்து, ஜோக்கின் இரண்டாவது பகுதியை சொல்ல முயன்றார், போதையால் அவருக்கு மறந்து விட்டது. நினைவுபடுத்த முயற்சித்தார், முடியவில்லை. முடிவில் அவர் இப்படி கூறினார்:

" அந்த பெண் யாரென்று எனக்கு நினைவில்லை"

அந்த மேனஜருக்கு நினைவு திரும்பியபோது அவர் இருந்தது ஒரு ஆஸ்பத்திரியில். தன் முகத்தில் சுடு தண்ணியினால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்க பட்டிருந்தார்.

Moral of the story: Don't copy if you can't paste

உடனே நினைவுக்கு வராமல் போன அந்த மியூசிக் டைரக்டரின் பெயர்: விஜய் ஆண்டனி.

*****************************************************

அந்த அலுவலகத்தில் ஆடிட்டிங் நடந்து கொண்டிருந்தது. மதிய உணவு நேரம் வந்த போது அந்த அலுவலகத்தின் GM, அக்கவுண்ட் ஆபிஸரையும், அக்கவுண்ட் கிளார்க்கையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றார். போகும் வழியில் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட தேவதை ஒன்று அவர்களை அணுகி,

" உங்களுக்கு வரம் கொடுப்பதற்காக கடவுள் என்னை இங்கே அனுப்பியுள்ளார். உங்களுக்கு வேண்டியது எதுவானாலும் என்னிடம் கேளுங்கள்" என்றது.

உடனே எல்லோரையும் முந்திக்கொண்ட கிளார்க், " எனக்கு நிறைய பெண்களுடன் ஹவாய் தீவு செல்ல வேண்டும்" எனக் கேட்டார்.

தேவதை உடனே, " அப்படியே ஆகட்டும்" என்றது. உடனே ஐந்து அழகிகளுடன் கிளார்க் ஹவாய் தீவு சென்று விட்டார்.

'அடுத்து?', என தேவதை ஆரம்பிக்குமுன், அக்கவுண்ட் ஆபிஸர், " நான் என் மனைவி குழந்தைகளுடன் உடனே அமெரிக்கா சுற்றுலா செல்ல வேண்டும்" என்றார்.

தேவதை உடனே, " அப்படியே ஆகட்டும்" என்றது. உடனே ஆபிஸர் மனைவி குழந்தைகளுடன் அமெரிக்கா சென்று விட்டார்.

எஞ்சியிருப்பது GM மட்டுமே. தேவதை அவரைப் பார்த்து கேட்டது, " உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?"

மேனஜர் கேட்டார், " ஹவாய் தீவு போன கிளார்க்கும், அமெரிக்கா போன ஆபிஸரும் லன்ச் டைம் முடிவதற்குள் ஆபிஸ் வந்து சேரவேண்டும்"

தேவதை உடனே, " அப்படியே ஆகட்டும்" என்றது.

Moral of the story: தலை இருக்கும் போது வால் முதலில் ஆடக்கூடாது. மேனஜர் வரம் கேட்டவுடன் அவர்கள் கேட்டிருந்தால், அவர்கள் கேட்டது கிடைத்திருக்கும். பாஸ் அருகில் இருக்கும் போது அடக்கி வாசிக்க வேண்டும்.

*******************************************************

நேற்றைய என் பதிவில் நான் சிறிது தலை கனம் பிடித்தவன் என எழுதியிருந்தேன். அதற்கு என் மனைவியின் கமண்ட்:

" நீங்க தலை கனம் பிடிச்சவர், கர்வம் கொண்டவர் னு நான் உங்களை கிண்டல் பண்ணிட்டு இருப்பேன். இப்போ நீங்களே அந்த உண்மையை ஒத்துக்கிட்டா, நான் என்ன சொல்லி உங்களை கிண்டல் பண்ணரது?

******************************************************

Jul 9, 2009

தாழ்வு மனப்பான்மையைப் பற்றி...

தாழ்வு மனப்பான்மையைப் பற்றி ரொம்ப நாளா எழுதனும்னு நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றுதான் அதற்குறிய சந்தர்ப்பம் அமைந்தது. எனக்கு 10 வது படிக்கும் வரையில் இரண்டு விசயத்தில் அந்த பிரச்சனை இருந்தது. ஒன்று ஆங்கில அறிவு, இரண்டாவது என்னுடைய நிறம். ஆங்கில அறிவு பிரச்சனையை ஓரளவு கடந்து வந்து விட்டேன். ஆனால், அந்த கறுப்பு நிறம் பிரச்சனையால் அந்த வயதில் மனதளவில் நிறைய காயம் பட்டிருக்கிறேன். ஒரு முறை என் வகுப்பில் என்னை ஒரு நண்பன் என் நிறத்தை வைத்து கிணடல் செய்ய அவனை நான் அடித்து, சட்டையை கிழித்து பிரச்சனை தலைமை ஆசிரியர் வரை சென்றது.

அன்று இரவு என் அப்பாவிடம் கேட்டேன், "நான் மட்டும் ஏன் அப்பா இந்த நிறம்?''

" நான் கறுப்பு, அதனால் நீயும் இந்த கறுப்பு. எந்த கலரில் பிறக்கிறோம் என்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில்தான், வாழ்க்கையின் அர்த்தமே இருக்கிறது. நீ எந்த விசயத்திலாவது சிறந்து விளங்கினால், உன்னை இந்த உலகம் தூக்கி வைத்து கொண்டாடும். அப்போது அந்த கொண்டாட்டமெல்லாம் நிறத்தை வைத்து வருவதில்லை. உன் அறிவை வைத்து, திறமையை வைத்து, நீ வாழும் வாழ்க்கையை வைத்துத்தான் வரும். இன்றிலிருந்து இந்த தாழ்வு மனப்பான்மையை விட்டு ஒழி. உலகத்தில் யாருமே யாரையும் விட தாழ்ந்தவர் இல்லை. உன்னை உன் கலரை வைத்து கேலி செய்பவர்களை விட்டு விலகு. அவர்கள் உன்னை தேடி வர ஏதாவது ஒரு வகையில் உன் திறமையை வளர்த்துக் கொள்"

அன்றிலிருந்து இன்று வரை நான் என் கலர் பிரச்சனையைப் பற்றி நினைப்பதே இல்லை. என்னுடைய நடவடிக்கைகளால், என் பேச்சுக்களால், என் படிப்பால் எனக்குத்தான் அதிக நண்பர்கள். என்னிடம் நல்ல விதத்தில பழகும் அனைவரையும் உயிருக்கு உயிராக நேசிப்பேன். என்னை யாரேனும் அவமதிக்க நினைத்தால், சாதாரணமாக நான் விடுவதில்லை. உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டுத்தான் மறு வேலை. என்னை யாரும் கேவலமாக பேசுவதையோ, மட்டப்படுத்துவதையோ விடுவதில்லை. அதனால், என்னை ரொம்ப தலை கனம் பிடித்தவன் என்று சில பேர் சொல்வதுண்டு. அதைப் பற்றி நான் கவலைப் படுவதில்லை. சில சமயம் அந்த தலை கனம் அவசியம் என்பதை உணர்கிறேன்.

ஏன் அப்படி இருக்கிறேன் என்றால், நாங்கள் கஷ்டப்பட்ட காலத்திலேயே, சிறு வயதிலிருந்தே, என் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதன் படியே வாழ்ந்தும் காட்டிகொண்டிருக்கிறேன். நினைத்தால் முடியாதது என்று ஒன்றுமே இல்லை. பகவத் கீதையில் கண்ணபிரான் சொல்வது போல், " நீ நல்லது நினைத்தால், நல்லதே நட்க்கும். நீ என்னவாக விரும்புகிறாயோ அதுவாகவே ஆகி விடலாம்". ஆனால், என்ன ஒன்று. அதற்கு உரிய முயற்சியை சரியாக எடுக்க வேண்டும். நான் ஏதோ நிறைய சாதித்து விட்டது போலவோ, பெரிய ஆளாகி விட்டது போலவோ நினைத்து இதை சொல்கிறேன் என நீங்கள் நினைக்கலாம். எந்த மனிதனும் அவ்வாறு கூற இயலாது. நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. ஆனால், மற்றவர்களை வைத்து கம்பேர் செய்து பார்க்கும் போது ஓரளவு எல்லா விதத்திலும் சிறந்து இருக்கிறேன் என்பதை, எனக்கே உரிய கர்வத்துடன் நான் இந்த இடத்தில் சொல்லிக்கொள்கிறேன். அதில் ஒன்றும் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதைப் படிக்கும் யாருக்காவது இது உதவலாம் இல்லையா? இந்த கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், தாழ்வு மனப்பான்மையை விட்டொழிந்தால், எதையும் சாதிக்கலாம் என்பதுதான்.

அதே நிறப் பிரச்சனை +2 படிக்கும் போதும், பெண்களை பார்க்கும் போதும் வந்தது. அதை சொல்வதில் நான் வெட்கப்படவில்லை. அந்த வயதில் ஏறபடும் சாதாரண விசயம்தான் இது. ஆனால், என்ன நடந்தது என்றால், அந்த வயதிலிருந்தே எனக்குத்தான் பெண் நண்பர்கள் அதிகம். உங்களுக்கு இந்த நேரத்தில் ஒரு உண்மையை சொல்கிறேன். நிறைய சிகப்பான பெண்களுக்கு, ஒரளவு கறுப்பான ஆண்களைத்தான் பிடிக்கும். அதுதான் உண்மை. அனுபவத்தில் சொல்கிறேன். இது ஒரு பெரிய விசயம்னு இதை போய் இந்த கட்டுரையில் சொல்கிறீர்களா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த வயதில் இது கண்டிப்பாக ஒரு பெரிய விசயம் தான். கல்லூரியில், வகுப்பில் எல்லா பெண்களும் எல்லோரிடமும் பேசும்போது, உங்களிடம் மட்டும் பேசாவிடால், எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள்?. இங்கும் நான் தெரியப்படுத்துவது என்ன என்றால், தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்தால் எதையும் சாதிக்கலாம் என்பது தான்.

ஒரு முறை நாங்கள் தீபாவளிக்கு துணி எடுக்க கடைக்கு திருச்சிக்கு சென்றோம். அப்போது நான் நல்ல உடை அணிந்து, சட்டையெல்லம் இன் பண்ணி சென்றேன். அதை பார்த்த என் நண்பன் ஒருவன், " ஏண்டா, இப்படி பந்தவா வர? உன்கிட்ட யாருடா வந்து பேசப்போறா?"

ஆனால், திருச்சிக்கு சென்று கடைக்கு சென்றவுடன் என்னிடம் ஓடி வந்து முதலில் ஜொள்ளு விட்டு பேசியது அவன் தங்கை. அப்போது அவன் மூஞ்சி போன போக்கை பார்க்க வேண்டுமே?

அதே போல் உடை விசயத்திலும் நிறைய பேர் என்னிடம் சொல்வார்கள், "ஏன் இந்த கலர்?"

நான் கூறும் பதில், " நீங்களா வாங்கி கொடுத்தீர்கள்?"

அதன் பிறகு அவர்கள் என்னை எந்த கேள்வியும் கேட்பதில்லை. எனக்கு பிடிக்கும் உடைகளை நான் அணிகிறேன். நான் எதற்கு அடுத்தவர்களை பற்றி கவலைப் பட வேண்டும்? எனக்கு பலதரப்பட்ட நண்பர்கள் உண்டு. ஏகப்பட்ட பிரிவுகளில் நண்பர்களை வைத்திருக்கிறேன். மிக நெருக்கமான நண்பர்கள் மட்டுமே என்னிடம் ஜாலியாக பேசவோ, கிண்டல் பண்ணவோ அனுமதிப்பேன். மற்றவர்களை ஒரு தொலைவிலேயே நிறுத்தி வைத்துள்ளேன்.

ஒரு முறை எங்கள் ஊரில் மிகப் பெரிய பணக்காரரின் மகன், என் நண்பர்களுடன், நான் பேசிக்கொண்டிருந்த கடைக்கு அருகில் உள்ள கடையில் பேசிக் கொண்டிருந்தார். நான் இருந்த கடையில் இருந்த நண்பன் ஒருவன் அவனை பார்க்க சென்றான். பார்த்து விட்டு வந்தவன், "உலக்ஸ், உன்னை அவர் (அந்த நபரின் பெயரைச் சொல்லி) வரச்சொன்னாருடா?"

" எதற்கு?" நான்.

" ஏதோ மலேசியாவுக்கு வரணுமாம். உன் கிட்ட அதைப் பத்தி பேசனுமாம்"

" அவர் தானே மலேசியா பத்தி தெரிஞ்சுக்கணும், அவர வந்து என்னை பார்க்க சொல்லு"

" மாப்பிள்ள, அவர் எவ்வளவு பெரிய ஆளு"

" அது உனக்கு, எனக்கல்ல "

இது சில பேருக்கு தலைக் கனமாக தெரியலாம். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. தலை வலி இருப்பவன் தான் மாத்திரை சாப்பிடனும்? அவருக்குத்தானே, காரியம் ஆக வேண்டும்? அதனால், அவர்தான் என்னிடம் வர வேண்டும்? நாம் ஏன் அடுத்தவர்கள் முன்னே தாழ்ந்து போக வேண்டும்? நாம் எந்த விதத்தில் குறைச்சல்? நான் இப்படி கூறுவதால், எனக்கு நண்பர்களே இல்லை என்று நினைத்து விடாதீர்கள்!. எனக்குத்தான் அதிகம். எல்லோரும் என்னைப் பற்றி நன்கு புரிந்தவர்கள்.

இதைப் பற்றி சொல்ல நிறைய விசயங்கள் என்னிடம் உள்ளது. அதை பிறகு ஒரு பதிவில் சொல்கிறேன்.

அதனால்தான் மீண்டும் சொல்கிறேன், தாழ்வுமனப்பான்மையை மட்டும் விட்டொழித்தால், வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்று!

Jul 8, 2009

பெண்களின் மனம் என்பது????

உலகத்திலேயே மிகவும் புரிந்து கொள்ள முடியாத விசயம் ஒன்று உண்டு என்றால் அது பெண்களின் மனது என்றுதான் நான் சொல்லுவேன். அது மனைவியாக இருக்கட்டும், மகளாக இருக்கட்டும் அல்லது தோழியாக இருக்கட்டும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆண்கள் போல எதையுமே பெண்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு உடனே செய்வதில்லை என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆனால், கோபம்?? அதுவும் எப்போது வரும் எனக் கணிப்பது மிகவும் கஷ்டம்.

மனைவிக்கு நாம் என்ன வாங்கிக் கொடுத்தாலும் ஏற்படாத ஒரு சந்தோசம், அவர்கள் அம்மா வீட்டிற்கு போக வேண்டும் எனக்கூறும்போது, உடனே அனுப்பி வைத்தால் வருகிறது. அதே போல் மனைவி என்ன சமைத்தாலும், ரொம்ப ருசியாக இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள், அவர்கள் சந்தோசத்தின் உச்சிக்கே போய் விடுவார்கள். ஆனால், அவர்களுக்கு, மனைவிக்கு என்றல்ல, பொதுவாக பெண்களுக்கு எப்போதெல்லாம் கோபம வரும் என்பது மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது. சில சமயம், ஏதேனும் கருத்து முரண்பாடுகள் ஏற்படும்போது, கோபப்பட வேண்டிய சமயத்தில் கோபப்படாமல் விலகிப்போவார்கள். அதே சமயம் சாதாரண விசயம் என்று நீங்கள் நினைக்கும் விசயத்திற்கு அவர்களுக்கு கோபம் அதிகமாகி விடும். ஆனால், ஒரு உண்மை எனக்கு நன்றாக புரிந்தது. எந்த பெண்ணும் தன் அம்மா வீட்டைப் பற்றி கணவன் மட்டமாக பேசுவதை அனுமதிப்பதில்லை. ஆனால், அவர்கள் அவ்வாறு பேசினால், நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். பொறுத்துப்போவது அடங்கிப்போவதாக அர்த்தம் ஆகி விடாது, ஆனால், சண்டையை வளர்க்காது. ஆனால், இந்த மாதிரி சிறு சிறு சண்டைகள் இருந்தால்தான், குடும்ப வாழ்க்கையே ஒரு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

எனக்கு பெண்கள் என்றாலே ரொம்ப புடிக்கும் (யாருக்குத்தான் பிடிக்காது என்கின்றீர்களா?). நீங்கள் வேறு ஏதாவது தப்பான அர்த்தம் கொள்ள வேண்டாம். நான் வளர்ந்த சூழ்நிலை அப்படி. ஏகப்பட்ட அக்கா தங்கைகளுடன் வளர்ந்தவன் நான். காமத்தை தவிர்த்து பெண்களுடன் பழகிப்பாருங்கள், அதன் சுகமே தனி. உலகத்திலுள்ள பெண்கள் எல்லாருமே ஆண்டவனால் அனுப்பி வைக்கப்பட்ட தேவதைகள் என்பேன். இப்படிச்சொல்லும் நான்தான் எனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்த போது வருத்தப்பட்டேன். பெண் குழந்தை பிடிக்க வில்லை என்ற காரணத்தினால் அல்ல, ஆண் குழந்தை பிறக்க வில்லையே என்ற ஏக்கத்தில். அந்த செயலுக்காக 'இப்பொது வருந்துகிறேன்' என்று ஏற்கனவே ஒரு பதிவில் குறிபிட்டுள்ளேன்" .

என்னை நல்ல முறையில் செதுக்கியதே நிறைய பெண்கள்தான். அம்மாவில் ஆரம்பித்து, அத்தை, அக்கா, தங்கை, தோழிகள் எனக் கூறிக்கொண்டே போகலாம். இப்படி பெண்கள் மேல் பாசம் வைத்திருக்கும் எனக்குள்ளும் ஒரு முரண்பாடு இருக்கிறது. என் தங்கையின் மறைவிற்கு பின் யாராவது, என்னை "அண்ணா" என்று கூப்பிட்டால் எனக்கு பிடிப்பதில்லை. அதை நான் வெறுக்கிறேன். அப்படி கூப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது? என்பது என் வீட்டினரின் வாதம். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், ஒரு பாதுகாப்புக்காக அப்படி கூப்பிடுகிறார்களோ? என்று.

சமீபத்தில் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. எனது அனைத்து கட்டுரைகளும் படித்து உடனுக்குடன் கருத்துக்களை அனுப்பிக் கொண்டிருந்தார் ஒரு தோழி. முதலில் மெயிலில், பிறகு போனில். பிறகு அவர் ஏதோ போட்டோ அனுப்ப போக, நான் அதற்கு பதில் அனுப்ப போக, அவர் உடனே நீங்கள் நல்லவரா, இல்லை கெட்டவரா? அண்ணா? என்றார். பிறகு அண்ணாவிற்கான விளக்கத்தினை கொடுத்தேன். பிறகு வழக்கம் போல் மெயில் அனுப்பிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு பிரச்சனை என்று கூறியதால், அதற்கு வேண்டிய உதவிகளை நண்பர்கள் மூலமாக செய்து கொண்டிருந்தேன்.

அப்படிப்பட்ட நேரத்தில், நான் அலுவலக வேலையில் பிஸியாக இருந்த சமயத்தில், அவரிடமிருந்து ஒரு மெயில் வந்தது. நான் என்ன எழுதுகிறோம் எனத்தெரியாமல், யாருக்கோ எழுத வேண்டியதை அவருக்கு எழுதி, அவர் என்னை தவறாக புரிந்து கொண்டு, எனக்கு மெயில் அனுப்புதை, பேசுவதை நிறுத்தி விட்டார். ஏன், என்ன? ஆயிற்று என ஒரு விளக்கம் கூட கேட்கவில்லை. ஆண்கள் எல்லாருமே ஒரே மாதிரிதான் என நினைத்து விட்டார் போலும். சடாரேன, தொடர்பை துண்டித்துக்கொண்டவர், இவ்வளவு நாள் எனக்கு எழுதிய விமர்சனங்கள் எல்லாம் தவறு என்று நினைக்கிறாரா? தெரியவில்லை.

இளையராஜா ஒரு பாடலில் இப்படி பாடுவார்,

" பெண் மனசு ஆழமென்று
ஆண்களுக்கும் தெரியும்
அது பெண்களுக்கும் புரியும்
அந்த ஆழத்திலே என்னவென்று
யாருக்குத்தான் தெரியும்"

இந்த பாடல் சரிதான் போல.

அதனால்தான் கூறுகிறேன், "உலகத்திலேயே மிகவும் புரிந்து கொள்ள முடியாத விசயம் ஒன்று உண்டு என்றால் அது பெண்களின் மனது" என்று.

Jul 7, 2009

மிக்ஸர் - 07.07.09 - பாஸிட்டிவ் அப்ரோச்?

சமீபத்தில் என் நண்பருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை நான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் கற்றுக்கொடுத்த யோகா மற்றும் தியான முறைகளை செய்து கொண்டிருந்தவர், திடீரென வேறு ஒரு தியான வகுப்பில் சேர்ந்தார். நான் ஒன்னும் அவரை தவறாக நினைக்க வில்லை. காரணம், எல்லோரும் ஏதோ ஒரு தியானம் செய்து அமைதியாக சந்தோசமாக வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை. அந்த தியான வகுப்பில் சேர்ந்தவுடன் அவரிடம் பல வித மாற்றங்கள். நிறைய நல்ல விசயங்கள் வாழ்வில் நடப்பதாக மிகுந்த சந்தோசப்பட்டார். எனக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சியே. அவர் 24 மணி நேரமும் அந்த தியானத்தைப் பற்றிய சிந்த்னையிலே இருந்தார். அந்த தியானம் செய்தால் எந்த கெடுதலும் நடைபெறாது, அப்படியே நடப்பதாக இருந்தாலும் அதனை என் மந்திரத்தின் மூலமும், தியானத்தின் மூலமும் கட்டுப் படுத்தி விடுவேன் எனக்கூறினார். அவர் நான் வெஜ் அயிட்டங்கள் சாப்பிடுவதைக்கூட உடனே நிறுத்தி விட்டார். அந்த அளவிற்கு அந்த தியானத்தில் உறுதியாக இருந்தார்.

அவர் ஒரு நாள் எங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊரில் உள்ள அந்த தியான மையத்திற்கு மதியம் செல்வதற்காக காரில் கிளம்பிய சிறிது நேரத்தில், அவரின் கார் எதிரில் வந்த காரில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஆகிவிட்டது. இடுப்பு எலும்பும். தொடை எலும்பும் முறிந்து விட்டது. படுத்த படுக்கை ஆகி விட்டார். ஏறக்குறைய இரண்டு மாதம் ஆஸ்பத்திரி வாசம். இப்போது வீட்டில் படுக்கையில். இன்னும் ஒரு இரண்டு மாதம் ஆகலாம், அவர் பூரண குணமடைய. நான் அவரை ஆஸ்பத்திரியிலும் சந்தித்தேன், பிறகு வீட்டிலும் பல முறை சந்தித்தேன்.

கேட்கலாமா, வேண்டாமா என நினைத்து நான் அவரை பார்த்து கேட்டேவிட்டேன்,

" நீங்க அந்த தியானத்தின் மேலேயும், அந்த மந்திரத்தின் மூலமும் அவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தீர்கள். ஏன் அந்த மந்திரமும், தியானமும் உங்களை விபத்திலிருந்து காப்பாற்ற வில்லை? நீங்கள் அந்த தியான வகுப்பிற்கு சென்றதால்தான் விபத்து ஏற்பட்டது. நீங்கள் போகாமல் இருந்தால், விபத்து ஏற்பட்டு இருக்காது அல்லவா?"

அதற்கு அவர் கூறினார் இப்படி,

" சார், அந்த காரை பார்த்தீங்கள்ள. எப்படிப்பட்ட மோசமான விபத்து. நான் இந்த தியானம் செய்ததால்தான் என்னால் உயிர் பிழைக்க முசிந்தது. இல்லாவிட்டால், நடந்திருப்பதே வேறு"

என்ன ஒரு பாஸிட்டிவ் அப்ரோச் பாருங்க!. உண்மைதான். " ஐய்யோ, இந்த மாதிரி நடந்து விட்டதே, அந்த தியான வகுப்பிற்கு சென்றதால் தானே விபத்து நடந்தது என நினைக்காமல்" அதையே எப்படி பாஸிட்டிவாக எடுத்துக்கொண்டார் பாருங்கள்.

எதையுமே நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில்தான் எல்லாமே இருக்கிறது.

====================================================

சமீபத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரு லேட்டஸ்ட் லேப்டாப் ஆன்லைனில் ஆர்டர் செய்தேன். சாதரணமாக ஆர்டர் செய்த ஒரு வாரத்தில் லேப்டாப் வந்து விடும். எனக்கு வரவில்லை. ஆன்லைனில் சரிபார்த்தால், வருவத்ற்கு இன்னும் 15 நாட்கள் ஆகும் என வந்தது. நான் சரி ஏதோ பிரச்சனை போல் என விட்டு விட்டேன். பிறகு 15 நாட்களாகியும் லேப்டாப் வரவில்லை. பின்புதான் எனக்கு லேசாக கோபம் வர ஆரம்பித்தது. எனக்கு கோபம் வந்த காரணம், கம்ப்யூட்டர் தாமதமானது கூட இல்லை, அதைப்பற்றி அந்த நிறுவனம் எனக்கு எந்த ஒரு தகவலும் அனுப்பவில்லை என்பதுதான். உடனே அந்த நிறுவனத்துக்கு போன் செய்து விசாரித்தபோது, ஏதோதோ காரணம் சொன்னார்கள். "உங்களுக்கு நாங்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லையென்றால், நீங்கள் உங்கள் ஆர்டரை கேன்சல் செய்துவிடுங்கள்" என்றார்கள்.

எனக்கு இன்னும் கோபம் அதிகரித்தது. நான் கூறினேன், " நான் கொடுத்த ஆர்டரை கேன்சல் செய்ய மாட்டேன். நான் உங்கள் நிறுவன மேல் அதிகாரியிடம் முறையிடுவேன். ஒரு வேலை அவர் சொல்லும் காரணம் எனக்கு சரியாகப்பட வில்லையென்றால், கன்சுயூமர் கோர்ட்டுக்கு செல்வேன்"

உடனே அடுத்த அரை மணி நேரத்தில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் பேசினார். பல காரணங்களைச் சொன்னார். நான் அனைத்தையும் கேட்டுவிட்டு, " எல்லாம் சரி, நீங்கள் சரியாக திட்டமிடாததால் இந்த குழப்பம். எனக்கு ஒரு மாதம் ஆகியும் கம்ப்யூட்டர் வராதது ஒரு குறையாக உள்ளது" என்றேன்.

உடனே, " உங்களுக்கு கம்ப்யூட்டருடன் ஒரு பிரிண்டரும் (three in one - printer, copier & scanner) தருவதாக உள்ளோம். அதனால் தயவு செய்து கோபம கொள்ள வேண்டாம்" என்றார். சொன்ன தேதியில் லேப்டாப் வரவில்லை. நண்பர்களிடம் சொன்னதற்கு, " இதை இப்படியே விடாதீர்கள், மீண்டும் ஏதாவது காம்பன்சேசன் கேளுங்கள்" என்றார்கள்.

நான் மீண்டும் அவர்களிடம் பேசினேன். இந்த முறை நான் தாமதத்திற்காக காம்பென்சேசன் கேட்டேன்.

முடிவில் சென்ற ஞாயிறு லேப்டாப் வந்தது, 5000ரூபாய் மதிப்புள்ள பிரிண்டருடனும், 3000ரூபாய் மதிப்புள்ள கேரி பேக்குடனும். நான் அவர்களிடம் காரணம் கேட்டதால் மட்டுமே அவைகள் கிடைத்தன. Only Crying baby will get milk என்பதை உணர்ந்தேன்.

இன்னும் இரண்டு மாதம் தாமதமாக வந்திருந்தால், ஒரு வேளை இன்னொரு லேப்டாப் ஓசியில் கிடைத்திருக்குமோ?

====================================================

Jul 6, 2009

உடல் ஆரோக்கியமாக இருக்க.......


"வாழ்க வளமுடன், வாழ்க வையகம்"

என்னை இந்த வார நட்சத்திர பதிவராக்கிய திரட்டி.காமிற்கு என் நன்றி.

இது என்னுடைய 50வது பதிவு. 50 வது பதிவு திரட்டி.காமின் நட்சத்திர பதிவாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் எப்போதும் மகிழ்ச்சியுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கு காரணமான எனது அனைத்து தெய்வங்களையும், என் குரு வேதாத்திரி மகரிஷி அவர்களையும் இந்த நேரத்தில் வணங்கி என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் என் குருவை எப்போதிலிருந்து வணங்க ஆரம்பித்தேன்?. ராணிப்பேட்டையில் வேலை பார்த்தபோது ஒரு நாள் எனக்கும் என் பாஸுக்கும் ஒரு விசயத்தில் ஒரு சின்ன விவாதம் நடந்தது. நான் சிறிது கோபமானேன். வேலை முடிந்து ரூமிற்கு சென்ற நான் அந்த விசயத்தையே நினைத்துக்கொண்டிருந்தேன். நண்பர்கள் இரவு ஒரு 8 மணிக்கு சாப்பிட கூப்பிட்டார்கள். சாப்பிட போன நான் ஒன்றுமே பேசாமல் வருவதை கவனித்த என் நண்பன், " ஏண்டா என்னாச்சு?" எனக்கேட்க, நான் நடந்த விவரங்களை சொல்ல ஆரம்பித்தேன். அப்படியே முழு டென்சனுடன், சொல்லிகொண்டே நடந்து போய்க்கொண்டிருந்த நான், திடீரென மயக்கமாக உணர்ந்தேன். நல்ல வேலை கீழே விழவில்லை. அவன் தோளை பிடித்துக்கொண்டு ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டேன். சிறிது நேரம் கழித்துத்தான் எனக்கு தெரிந்தது, என் தலை சுற்றியதால் அப்படி ஆனது என்று. பிறகு சமாளித்து சாப்பிட்டுவிட்டு மெதுவாக நடந்து ரூமிற்கு வந்து விட்டேன். அடுத்த நாளும் அதே போல் இருக்க, உடனே அருகில் உள்ள ஒரு டாக்டரை பார்க்க சென்றேன்.

என்னை பரிசோத்தித்த அந்த டாக்டர், " உனக்கு BP அதிகம் உள்ளது, அதனால் BP மாத்திரை சாப்பிட வேண்டும்" என்று சில மாத்திரைகள் கொடுத்தார். சாப்பிட்டுவிட்டு படுத்து அடுத்த நாள் எழுந்தால் என்னால் நடக்க முடியவில்லை. கொண்டு தள்ளுகிறது. ஏதோ செய்வது போல் தெரிகிறது, ஆனால், என்னவென்று என்னால் உணரமுடியவில்லை. நண்பர்களிடம் கூறியதற்கு, எதற்கும் "நீ இன்னொரு டாக்டரை பார்த்துவிடு" எனக்கூறினார்கள். பிறகு வேறு ஒரு டாக்டரிடமும் சென்றேன். அவர் என்னை பரிசோதிக்கும் போதும் அதே போல் BP ஏறியது. பிறகு டாகடர் என்ன நடந்தது? என என்னிடம் எல்லாவற்றையும் விசாரித்தார். நடந்தது எல்லாம் கூறினேன். பிறகு ஒரு முப்பது நிமிடம் கழித்து BP செக் செய்தால் நார்மலாக உள்ளது. பின்புதான் அவர் கூறினார்,

" உங்களுக்கு வந்திருப்பது BP இல்லை. ஏதோ ஒரு விசயத்தினால் ஏற்பட்ட டென்சனே BP உடனே ஏறியதற்கு காரணம். அதே சமயம் இதே போல் BP ஏறுவதும் இறங்குவதும் நல்லதல்ல. பின் நாளில் ஒரு வேலை நீங்கள் அதிகம் கோபமுற்றால், BP அதிகமாக ஆகும் பட்சத்தில் கைகால் விளங்காமல் போக வாய்ப்பு உள்ளது. உடனே அந்த BP மாத்திரையை நிறுத்தி விடுங்கள். நான் சொல்லும் மருந்தை தினமும் பயன் படுத்துங்கள்" என்றார்.

" என்ன மருந்து சார்?" எனக் கேட்டேன்.

" வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை (SKY) என்ற ஒரு அமைப்பு உள்ளது. அங்கு சென்று தியானம் கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு மருந்து. வேறு எந்த டாக்டரிடம் சென்று பணத்தை செலவு செய்ய வேண்டாம்" என்றார். அந்த நல்ல டாக்டரின் பெயர் டாக்டர் ரமணி என நினைக்கிறேன். ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் உள்ளார். இந்த நேரத்தில் அவருக்கு என் மனமார்ந்த நன்றியை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த நாள் நானும் என் யோகா குரு நண்பர் பாலசுப்ரமணியனும் (தற்போது சவுதி அரேபியாவில் பணி புரிகின்றார்), மனவளக்கலை மையம் சென்றோம். அங்கே மூன்று விதமான பயிற்சி கொடுத்தார்கள்:

01. மனதிற்கு - தியானம் (ஆக்கினைத்தவம், சாந்தி யோகம், துரியம், துரியாதீதம்)
02. உயிருக்கு - காயகல்பம்
03. உடம்பிற்கு - எளிய முறை உடற்பயிற்சி

முழுமையாக கற்றுக்கொண்டேன். உடனே மலேசியா வரவேண்டி இருந்ததால் ஆசிரியர் பயிற்சி என்னால் முடிக்க முடியவில்லை. 15 வருடமாக தொடர்ந்து அனைத்தையும் செய்து வருகிறேன். எந்த குறையும் இல்லை. சந்தோசமாக உணர்கிறேன். உடல் எப்போதுமே ஆரோக்கியமாகவே உள்ளது. சுறு சுறுப்பாக உள்ளது. மற்ற அமைப்புகள் போல் அவர்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. வெறும் 2 ரூபாய்தான் அப்போது நன்கொடையாக பெற்றார்கள். இப்போது எவ்வளவு எனத்தெரியவில்லை.

இதில் முக்கியமான செய்தி என்ன வென்றால் அதன் பிறகு எனக்கு தலை சுற்றவும் இல்லை, BP வரவும் இல்லை, நான் டாகடரிடம் செல்வதும் இல்லை. இதை நான் சொல்லும்போது சிலர் நம்பாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளது. சில விசயங்களை பிறர் சொல்லி தெரிவதை விட, தாங்களே அனுபவித்து பார்த்தால்தான் அதன் சுகம் தெரியும். நான் அனுபவித்ததால், அனுபவித்துக்கொண்டிருப்பதால் கூறுகிறேன்.

தயவு செய்து, இதை படிக்கும் நண்பர்கள், நம்பிக்கையுடன் அருகில் உள்ள வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை மன்றத்துக்கு சென்று முடிந்தால் பயிற்சி எடுத்து நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். தனி மனிதனின் அமைதியும் சந்தோசமுமே, உலக அமைதிக்கும் முக்கியம் என்பதால், இதை இங்கே கூறுகிறேன்.

"வாழ்க வளமுடன், வாழ்க வையகம்"

Jul 5, 2009

பின்னூட்டங்கள் பற்றி.....

நான் பதிவுலகத்துக்கு வந்து மூன்று மாதம் ஆகிறது. ஏறக்குறைய 48 பதிவுகள் முடித்துவிட்டேன். இது 49வது பதிவு. நிறைய நண்பர்கள் படிக்கிறார்கள். ஆனால், பின்னூட்டங்கள்........? அவ்வளவு வருவதில்லை. காரணம் என்ன? ரூம் போட்டு மல்லாக்க படுத்து யோசிக்காமல் சாதரணமாகவே படுத்து யோசித்து பார்த்தேன்.

பிரபலமான பதிவர்களுக்கு எப்படியும் ஒரு 50 நபர்களாவது கமண்ட் எழுதுகிறார்கள். அவர்கள் எவ்வளவு நாள் கழித்து வந்து எழுதினாலும், காத்திருந்து நிறைய விமர்சனங்கள் எழுதுகிறார்கள். சில நாட்கள் எழுதாவிட்டால், சில பேர் நீங்கள் ஏன் நிறைய எழுதுவதில்லை? எனவும் கேட்கிறார்கள். என்னை அல்ல, அந்த பிரபல பதிவர்களை!!. அப்படியென்றால், அவர்களின் எழுத்து எந்த அளவிற்கு வாசகர்களை கவர்ந்து இருக்க வேண்டும்? அதன்பின்னே எத்தனை உழைப்பு இருக்க வேண்டும்? அவர்கள் போல் நிறைய எழுதி, நன்றாக எழுதி நிறைய நபர்களை படிக்க வைக்க வேண்டும் என்றும், நிறைய பின்னூட்டங்கள் வாங்க வேண்டும் என்றும், இந்த கணத்தில் நான் ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்கிறேன்.

அதே போல நமது மக்களும் ஏன் புதிதாக வருபவர்களை ஊக்குவித்து நிறைய கமண்ட் எழுதமாட்டேன் என்கிறார்கள்? எனத்தெரியவில்லை. பிரபல பதிவர்களுக்கு மட்டும் பின்னூட்டம் இடும் அவர்கள் ஏன் எல்லோருக்கும் எழுதவதில்லை? இந்த சமயத்தில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. படித்து முடித்தவுடன் நண்பர்கள் ஒரு நான்கு பேர் ஒரு வேலைக்கான நேர்காணல் சென்று இருந்தோம். அப்போது என் நண்பனின் நேர்காணல் முடிந்தவுடன் அவனிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்,

" உங்களுக்கு எத்தனை வருடம் அனுபவம் உள்ளது?"

" நான் இப்போதுதான் படிப்பு முடித்தேன் சார். இன்னும் அனுபவம் எனக்கு இல்லை"

" நாங்கள் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை தருவோம்"

உடனே என் நண்பனுக்கு கோபம் வந்து விட்டது. அவன் உடனே அந்த அதிகாரியிடம் சண்டைக்கு போய் விட்டான்.

" சார், முன் அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் வேலை என்றால், நாங்கள் என்றைக்கு வேலைக்கு செல்வது? எங்களுக்கும் வேலை குடுத்தால் தானே நாங்களும் முன் அனுபவம் பெற முடியும்" என கேட்டு ஒரே சண்டையாகிவிட்டது.

இதை எதற்கு இங்கே கூறுகிறேன் என்றால், எல்லா பிரபல பதிவர்களுமே ஒரு காலத்தில் சாதாரண பதிவர்களாய் இருந்தவர்கள்தானே? மக்கள் குடுத்த பின்னூட்ட ஊக்கத்தினால்தானே அவர்களால் நல்ல நல்ல பதிவுகளை தர முடிந்தது.

நான் முன்பெல்லாம், என் பதிவுகளை மற்றவர்கள் படித்தால் மட்டும் போதும், பின்னூட்டம் பற்றியெல்லாம் நாம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், நண்பர்களின் பின்னூட்டம் வரும்போது ஏற்படும் சுகமே தனிதான். அது திட்டாக இருந்தாலும், பாராட்டாக இருந்தாலும்.

அதே சமயம் இன்னும் ஒரு உண்மையையும் நேற்றுதான் நான் உணர்ந்தேன். என்ன அது?

நான் எத்தனை பேருக்கு பின்னூட்டம் எழுதியிருக்கிறேன்?

நானும் மேலே சொன்னமாதிரியே நடந்திருக்கிறேன் என்பதை இப்போது உணர்கிறேன். நான் பின்னூட்டம் எழுதியதே மிகவும் குறைவு. அதிலும் நான் பின்னூட்டம் எழுதியது பிரபல பதிவர்களுக்கு மட்டுமே? நானே இவ்வாறு இருந்துவிட்டு நான் எப்படி மற்றவர்களின் விமர்சனங்களை எதிர்பார்க்க முடியும்? எதனால் அந்த தவறு ஏற்பட்டது? என்று தெளிவாக யோசித்தால், இரண்டு விசயம் தெரிந்தது:

01. நான் பின்னூட்டமிடும் நேரங்களிலும் அதிக பதிவுகளை படித்திருக்கிறேன்.

குறைந்த பட்சம் "மி த பர்ஸ்ட் அல்லது ரிப்பீட்டேய்" யாவது போட்டுருக்கலாம் என இப்போது உணர்கிறேன்.

02. பிரபல பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டால், நம்மீது அவர்கள் கவனம் விழும் எனவும் நான் நினைத்திருக்கலாம். அது ஓரளவு உண்மையும் கூட.

ஆனால், நான் இப்போது நினைப்பது போல் தானே, வளர்ந்து வரும் பதிவர்களும் நினைப்பார்கள். பின்னூட்டங்களை விரும்பாத மனிதர்கள் இந்த உலகத்தில் உண்டா என்ன? ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அவனுடைய உழைப்பு மட்டும் காரணமல்ல, சரியான நேரத்தில் மற்றவர்களால் அவனுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் ஒரு முக்கிய காரணம்.

அதனால் இந்த பதிவு உலகத்திற்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், இன்றிலிருந்து நான் படிக்கும் அனைத்து பதிவுகளுக்கும் என்னுடைய விமர்சனங்களை எழுதப்போகிறேன்.

என்னுடைய பதிவுகளுக்கு? அது உங்கள் இஷ்டம்!!!!

Jul 3, 2009

தெய்வ வழிபாடும், நல்ல நேரம்/ சகுனம் பார்ப்பதும்..

சிறு வயதிலிருந்து என்னிடம் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கும் பழக்கங்களில் தெய்வ வழிபாடும், நல்ல நேரம் பார்த்து காரியங்களை துவங்குவதும், சகுனம் பார்ப்பதும் மிக முக்கியமான பழக்கங்களாகும். ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த பழக்கங்கள் இன்று என்னை ஆளும் நிலைக்கு வந்து விட்டது. நாம் கோவிலுக்கு செல்வது ஒரு மன நிம்மதிக்காக. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? எப்போதும் ஒரு பெரிய வேண்டுதல் லிஸ்டுடனே நாம் கோயிலுக்கு செல்கிறோம். ஏதோ கடவுளுக்கு வேறு வேலையே இல்லாததுபோல.

எனக்கு அதிக தெய்வ நம்பிக்கைக்கு காரணம் எங்கள் ஊரில் உள்ள கோயில்கள்தான். சிறு வயதிலிருந்தே தினமும் கோயிலுக்கு செல்வதை நண்பர்கள் அனைவரும் ஒரு வழக்கமான பழக்கமாகவே வைத்திருந்தோம். ஆனால், என்னுடைய தெய்வ நம்பிக்கை என்பது ஒரு கட்டத்தில் எல்லை மீறி சென்றுவிட்டது. நான் காலேஜ் படிக்கும் சமயங்களிலெல்லாம் ஒரு பாடத்தில் புது சேப்டர் படிக்க ஆரம்பித்தாலே உடனே கோயிலுக்கு போய் வேண்டி வருவது வழக்கம். அந்த அளவு தெய்வ நம்பிக்கை மிக அதிகமாக ஆகிவிட்டிருந்த காலம் அது.

ஆனால், அதே நான் வீட்டில் ஒரு அகால மரண சம்பவம் ஏற்பட்ட பிறகு சில காலம் கடவுளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு அவரை பார்க்காமல் இருந்து வந்தேன். ஆனால், பிறகு சமாதானம் ஏற்பட்டு, நான் வேலையில் சேர்ந்தவுடன் மீண்டும் வழிபட ஆரம்பித்தேன். கல்யாணம் ஆன பிறகு, கொஞ்சம் அதிகமானது இறைவழிபாடு. இரண்டு குழந்தைக்கு பிறகு, மிகுந்த ஈடுபாடு வந்துவிட்டது. என்னால், 24 மணி நேரமும் கடவுளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. காரணம் வாழ்க்கை குறித்த பயமாக இருக்கலாம், இல்லை முளை ஆன்மிகத்தை பற்றியே அதிகமாக சிந்திப்பதாக இருக்கலாம். அதனால் எனக்கு பாதிப்பு அதிகமில்லை. சந்தோசம்தான். ஆனால், சில சமயங்களில் இந்த பழக்கம் அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்.

இந்த கட்டுரையின் நோக்கம் என் தெய்வ வழிபாட்டினை பற்றி கூறுவது அல்ல. என்ன சொல்லுகிறேன் என்றால், எந்த பழக்கமுமே ஒரு அளவோடு இருந்தால் நல்லது. அதுவே அளவை மீறும்போது அதே பழக்கம் நமக்கு தொல்லையாக மாறி விடுகிறது. எந்த கடவுளும் என்னை தினமும் வந்து கும்பிடு என்று கூறவில்லை. நாமாக ஏற்படுத்திகொண்ட பழக்கங்களே அவை. தினமும் கோயில் செல்பவனுக்கு தான் கடவுள் கருணை காட்டுவார் என்பதோ, கோயிலுக்கு செல்லாதவர்கள் எல்லாம் பாவிகள், கடவுள் கருணை காட்டமாட்டார் என்றோ இல்லை.

அன்னை தெரசாவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. நான் சொல்லப்போகும் இந்த நிகழ்ச்சியும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். அன்னை ஒரு முறை காளி கோயிலுக்கு சென்றபோது, ஒரு குஷ்ட நோய் உள்ள ஒருவரை தூக்கி அவருக்கு பணிவிடை செய்தபோது, அந்த நபர் கூறினாராம், " இத்தனை வருசமா இங்கே இருக்கேன், நான் இதுவரை அந்த தேவியை நேரில் பார்க்கவில்லை. இன்றுதான் உங்கள் மூலமாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது" என்றாராம். எந்த அளவு உண்மை பாருங்கள்!

தெய்வ வழிபாடு அவசியமான ஒன்றுதான். ஆனால், அதுவே நாம் கடவுளை சென்று அடைய உதவும் முழுமையான வழி கிடையாது. கடவுளை சென்று அடைய, அவரின் அனுக்கிரகத்தைப் பெற வழிபாடு மட்டும் போதாது, ஒரு அன்னை தெரசா போல், ஏழைகளுக்கு உதவுவதிலும், நோயாளிகளுக்கு உதவுவதிலும், ஏழைக்குழந்தைகளை காப்பதிலும்தான் இருக்கிறது. முடியாத ஒருவருக்கு உதவி செய்யும்போது அவர் உங்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டு சொல்லும் வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள், உங்கள் மனதெல்லாம் நிறைவாக இருக்கும். இன்னும் இன்னும் உதவி செய்ய வேண்டும் போல இருக்கும்.

நானும் நிறைய ஏழைகளுக்கு என்னால் ஆன உதவியை செய்து தெய்வத்தை அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நீங்களும் முயற்சிக்கலாமே!

அடுத்து சகுனம் பார்ப்பது, நல்ல நேரம் பார்ப்பது. எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது என்னை பிடித்திருக்கும் நோய் என்பது மட்டும் தெரிகிறது. அதை பார்க்காமல் பழகி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பழகிவிட்டால், அந்த பழக்கத்தை விடுவது மிகுந்த கஷ்டம் என்பது மட்டும் எனக்கு தெளிவாக புரிகிறது.

வீட்டில் செய்யும் பல நிகழ்ச்சிகளை நல்ல நேரம் பார்த்துதான் செய்கிறோம். ஆனால், அலுவலகத்தில் அவ்வாறு முடியுமா? நாம் வேண்டுமானால் எந்த மீட்டிங்கையும் ராகு காலம், எம கண்டம் இல்லாத நேரத்தில் வைக்கலாம். ஆனால், நம்மை சந்திக்க அழைப்பவர்கள் அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் வைக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா? முடியாது. அதுவுமில்லாமல், எங்களுக்கு எப்பவுமே ஒரு குழப்பம், இந்திய நேரம் காலை 7.30 என்றால், மலேசியாவில் காலை 10. நாங்கள் ராகு காலம் இந்தியா டைமை பார்க்க வேண்டுமா இல்லை மலேசிய டைமா?

ஒரு முறை சென்னை செல்லும்போது ஏற்பட்ட அனுபவம். புறப்படும் நாள் காலைதான் அன்று அஷ்டமி என்று தெரிந்தது. பார்க்காமல் டிக்கட் புக் செய்துவிட்டோம். கிளம்பும் அன்று வீட்டில் ஒருவர் நினைவு படுத்த, விமானம் தரை இறங்கும் வரை ஒரே டென்சன்தான். காரணம் அதிகமாக நேரம் காலத்தின் மீது நம்பிக்கை வைத்ததுதான். அஷ்டமி, நவமி நாட்களில் விமானம் பறக்காமல் இருக்கிறதா, என்ன?

நான் மேலே கூறிய தெய்வ வழிபாடு, நல்ல நேரம் பார்த்தல், சகுனம் பார்ப்பது எதையும் வேண்டாம் என சொல்லவில்லை. எதிலும் ஒரு அளவோடு இருக்க வேண்டும் என்கிறேன். நாம் தான் அந்த பழக்கவழக்கங்களை ஆள வேண்டும், அவைகள் நம்மை அடிமை படுத்தி விடக்கூடாது.

நாம் வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்தால், போன காரியம் சரியாக நடை பெறாது, என்பார்கள். அது மட்டும் உண்மை என்றால், மலேசியாவில் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டியதுதான். ஏனென்றால், எங்கு பார்த்தாலும் பூனைகள்தான்.

மலேசியாவில், வெளியே செல்லும்போது பூனை குறுக்கே வரவில்லை என்றால்தான், போன காரியம் சரியாக நடை பெறாது.

Jul 1, 2009

இனிய தோழிக்கு!

பிரியமானவளே!
திடீரென ஒரு நாள்
பிடித்திருக்கிறதென்றாய்,
எதை? என்றேன்
என் எழுத்துக்களை என்றாய்.

பார்க்கவேண்டுமென்றாய்
படத்தை அனுப்பினேன்
பிடித்திருக்கிறதா? என்றேன்,
பதில் சொல்லாமல்
நீ மொளனமானாய்.

கலக்க வேண்டுமென்றாய்
கலகம் வருமென்றேன்
உன் உடம்பில்லையென்றால்
உயிரைவிடுவேன் என்றாய்,
நான் மொளனமானேன்.

பிரியமனமில்லாமல்
பிரிந்து சென்றாய்
தொலைபேசியை
தொல்லை பேசியாக்கினாய்.

வீட்டிற்கு வந்தாய்
நல்ல வேலையிலிருக்கும்
என் தம்பியை பார்த்தவுடன்
நான் வேலையற்றவன்
என்றாய், தமையனை விட
கருப்பு என்றாய்.

சூரியன் சுட்டெரிக்கும்
நாட்டின் தேசிய நிறம்
நான் என்றேன்
தம்பி மட்டும் சிகப்பு
எப்படி என? குடும்ப
ஆராய்ச்சி செய்தாய்.

ஏண்டி கல்யாணத்திற்கு
தேவை சிகப்பு கலரா
இல்லை
வெள்ளை மனமா?

திடீரேன விவாகரத்து
கேட்கின்றாய்?
அடி, கூறுகெட்டவளே?
கல்யாணம் ஆனால் சரி!
உன் மேல உள்ள
காதலுக்கு எப்படிடி
விவாகரத்து தருவது?????

- இந்த கவிதை (புதுக்கவிதை என்று நீங்கள் ஒத்துக்கொண்டால்) யாருக்கு என கேட்பவர்களுக்கு, வடிவேலு ஸ்டைலில் "யாருக்கோ"