Jul 21, 2009

"நிலாவே வா!" - சிறுகதை - பாகம் 1

மிகச்சோர்வாய் உணர்ந்தாள் ராதா. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகுதான் அந்த யோசனையை எடுத்திருந்தாள். தான் எடுத்த முடிவில எந்த குழப்பமும் இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை. சிறு வயதிலே இருந்தே எதிலும் தனித்தே முடிவு எடுக்கும் பழக்கம் அவளுக்கு இருந்தது. எல்லோரிடமும் ஆலோசனை கேட்பாள். ஆனால், எப்போழுதுமே முடிவு அவள் கையில்தான். இந்த சூழ்நிலையில் கூட எல்லோருடைய யோசனையும் கேட்டாள். ஆனால், வழக்கம் போலத்தான்.. யோசித்துக்கொண்டிருக்கும்போதே தொலைப்பேசி அழைத்தது. எடுத்து பேசினாள். வேறு யாரும் இல்லை. எல்லாம் அவளுடைய வக்கில்தான். நாளை காலையில் குடும்பநல கோர்ட்டில் இவளுடைய விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருகிறது. அநேகமாக, நாளை முடிவு தெரிந்து விடும். நாளையிலிருந்து அவளை யாரும் எந்தவிதமான கண்ட்ரோலும் செய்ய முடியாது. சந்தோசமாக இருப்பதுபோல் உணர்ந்தாள்.

ஆனால் மனதின் ஒரு மூலையில் அந்த பழைய நினைவுகள் வந்து வந்து போயின. எவ்வளவோ அடக்க முயன்றும் தோற்றுப்போனாள். அவள் ராகவனை எப்போது சந்தித்தாள்? ...

சரியாக மூன்று வருடங்களுக்கு முன்பு. அவள் கல்லூரி ஆண்டு விழா. வழக்கம் போல இவள் கல்லூரி மேடையில் பாடினாள். ராதாவுக்கு சிறு வயதிலிருந்தே பாடுவதில் அலாதி பிரியம். எல்லாம் அவள் அம்மாவிடமிருந்து வந்தது. அன்றும் வழக்கம் போல ராதான் முதல் பரிசு வாங்கினாள். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிதான் அவளுடைய வாழ்க்கையை புறட்டிப்போடப்போகிறது என்பதை அப்போது அவள் உணரவில்லை. ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த இசை நிகழ்ச்சி மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கியது. அந்த ஆர்கஸ்ட்ராவின் ஹீரோவே அதில் பாடிய அந்த இளைஞன்தான். அப்படியே தன் இசையால் அனைவரையும் கட்டிபோட்டான். அருமையான வார்த்தை உச்சரிப்பு, நல்ல குரல், சுதி பிச்காமல் அவன் பாடிய பாங்கு அனைத்து மாணவர்களையும் கட்டிப்போட்டதோ இல்லையோ, ராதாவை அப்படியே மயங்க வைத்துவிட்டது. அந்த சமயத்தில்தான் அவளுக்கு மிகவும் பிடித்த, சப்த நாடிகளையும் அடக்கி ஒடுக்கி, மகிழ்ச்சி பிரவாகத்தை உண்டு பண்ணக்கூடிய, அந்த பாடலை பாட ஆரம்பித்தான்.

"நிலாவே வா, நில்லாமல் வா....."

ராதா உலகத்தைவிட்டு வெகு தொலைவுக்கு போய்விட்டாள். மனம் உருகினாள். மனம் மிக மிக லேசானதாய் உணர்ந்தாள். பேரின்ப பெரு சுகத்தை அனுபவித்த நிலையில் இருந்தாள். சபையில் கைத்தட்டல் அடங்க வெகு நேரம் ஆனது. அனைவரும் கைத்தட்டி முடித்தபின்பும் இவள் மட்டும் தட்டிக்கொண்டே இருந்தாள்.

" என்னடி ராதா, இப்படி இருக்க?, நீயே ஒரு பாட்டு பைத்தியம், உனக்கு புடிச்ச பாட்டு வேற, உடனே கனவுலகத்துக்கு போய்ட்டியோ?" என அவள் தோழி கலா அவளை தொட்டு எழுப்பியதும்தான் தன் நிலை உணர்ந்தாள்.

"கலா, அவர் கிட்ட ஒரு ஆட்டோகிராப் வாங்கணும் போலாமா?"

" யேய் ராதா, என்ன இது. அவர் சாதரண ட்ரூப்புல பாடுர பாடகர். அவர் ஒன்னும் எஸ்.பி.பி இல்ல"

" எஸ்.பி.பி பட்டும்தான் நல்லா பாட்டு படணும்னு இல்ல. நல்ல இசை எங்கே இருந்தாலும் ரசிக்க கத்துக்கணும். உனக்கு புடிச்சுருக்கா இல்லையா அப்படீங்கறது என் கவலை இல்ல. எனக்கு பிடிச்சிருக்கு. என்னோட வரீயா, இல்லையா?'

" உடனே கோபம் பொத்துக்கிட்டு வருமே, என்னைக்குதான் இப்படி சடாருனு கோபப்படறத நிறுத்த போறியோ தெரியல. சரி, சரி வா, என்னோட உயிர் தோழியாயிட்ட, உன் பேச்ச தட்ட முடியுமா?" என்றவள், ராதாவை கூட்டிக்கொண்டு மேடையருகே சென்றாள்.

அந்த பாடகரைத்தேடி சென்று பார்த்தவளை எல்லோரும் ரொம்ப ஆச்சர்யமாகப்பார்த்தார்கள்.

" சார், ஒரு ஆட்டோகிராப்!" என்றவளை கேள்விக்குறியுடன் பார்த்தான்.

" என் கிட்டயா?"

" ஆமா சார். உங்க பாட்டு கொடுத்த பிரம்மாண்டத்துலே இருந்து இன்னும் அவ வெளிய வரல சார். அதுவும் நீங்க பாடுன 'நிலாவே வா' பாட்டக்கேட்கும்போது அவ கண்ணுலே இருந்து தாரை தாரையா கண்ணீர் சார்" என்று சொன்ன கலாவை சந்தோசம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

உடனே ராதாவின் நோட்டை வாங்கி, " பெஸ்ட் ஆப் லக், என்றும் அன்புடன், ராகவன்" என கையெழுத்திட்டான்.

"நன்றி" என்ற ஒற்றை சொல்லை சொல்லிவிட்டு போனவளை வித்தியாசமான உணர்வுகளுடன் பார்த்தான் ராகவன்.

அந்த இரவு முழுவதும் ஏதோ ஒரு ஆனந்தத்தை அனுபவித்தாள். ராகவனுடனான அடுத்த சந்திப்பு ஹிக்கின் பாத்தம்ஸில் நடந்தது. இருவரும் ஒரே நேரத்தில் ஒரே புக்கை தேடும்போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அப்போதும் ராதா தான் பேச்சை ஆரம்பித்தாள்,

"சார், எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன் நீங்க?"

"ரொம்ப நல்லா இருக்கென்" என ஆரம்பித்த பேச்சு ஒருவருக்கொருவர் விசாரிக்கும் அளவுக்கு முன்னேறியது. ராதான் ராகவனை காபி சாப்பிட அழைத்தாள். ஒரு வெட்க புன்னகையுடன் காபி சாப்பிட வந்தான் ராகவன். அந்த சந்திப்பில்தான் அவனைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டாள் ராதா. அவன் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன். மூன்று தங்கைகளுக்கு கஷ்டப்பட்டு திருமணத்தை முடித்துவிட்டு கல்யாண மார்க்கெட்டில், வயது 33 ஆனதால் தன்னை தொலைத்துவிட்டு வாழ்க்கையையும் தொலைத்துவிட்ட ஒரு சராசரி இந்திய பிரஜை என்பதை புரிந்து கொண்டாள்.

இப்படியாக ஆரம்பித்த அவர்கள் நட்பு மெல்ல மெல்ல தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமளவிற்கு முன்னேறியது. இரண்டு மாததிதில் மெல்ல அவள் மனதில் இடம் பிடித்தான் ராகவன். அவனுடன் பேசாமல் இருந்த நாட்களை நரகத்திலிருக்கும் நாட்களாக நினைத்தாள்.

தொடரும்...

4 comments:

Beski said...

நல்லாருக்குண்ணே.
---
எத்தன பாகம் இருக்கு? சிறுகதைனு சொல்லிட்டு இப்படி பல பாகத்துல எழுதுனா எப்படி?
பேசாம ‘நிலாவே வா - தொடர்கதை’னு தலைப்பை மாத்திடலாமா?

iniyavan said...

நன்றி எவனோ ஒருவன்

இன்னும் மூன்று பாகம் இருக்கு.

தொடரவா, வேணாமா?

Beski said...

//தொடரவா, வேணாமா?//
என்ன பொசுக்குன்னு இப்படி கேட்டுப்புட்டீய? நல்லாருக்குனுதான சொன்னேன்.

அடுத்த பாகத்துக்கு வெய்ட்டிங்...

iniyavan said...

நண்பா,

இதோ அடுத்த பாகம் உங்களுக்காக போஸ்ட் செய்துவிட்டேன்.