Jul 22, 2009

"நிலாவே வா!" - சிறுகதை - பாகம் 2

ராதாதான், அவனை ஒரு நாள் அதே காபி ஷாப்பிற்கு அழைத்தாள். வந்தவனுடன் நேரடியாக கேட்டே விட்டாள்,

" நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான் ராகவன்.

"என்ன பேசறீங்க ராதா? நான் எங்க, நீங்க எங்க"

" ஏன் உங்களை நீங்களே தாழ்த்திக்கறீங்க, உங்களோட திறமை உங்களுக்கே தெரியாது"

" என்னோட திறமைக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் அப்படீங்கறீங்களா?"

" அப்படி இல்ல. அது மட்டும் காரணம் இல்ல. நீங்க ஒரு நல்ல மனிதர். பண்பாளர். பெண்களை மதிக்க தெரிந்தவர். மனித நேயமிக்கவர்"

" கல்யாணம் பண்ண இந்த தகுதி மட்டுமே போதும்னு நினைக்கறீங்களா?"

" வேற என்ன வேணும்னு நீங்க நினைக்கறீங்க?"

" நிறைய இருக்கு. முதல்ல ஜாதி, மதம், அந்தஸ்து. இந்த மூன்றிலுமே என்னைவிட நீங்கதான் உயர்ந்து நிக்கறீங்க. அதைவிட நான் ஒரு ஏழை ஜாதியச்சேர்ந்தவன். நீங்க எங்கேயோ இருக்கீங்க"

" இவ்வளவு தெளிவா பேசற நீங்களா ஜாதியையும், அந்தஸ்தையும் பார்க்கறீங்க. எனக்கு புடிச்சது உங்க மனசு. உங்க மனசும் என் மனசும் எந்த ஜாதியையும் சார்ந்து இருக்கலைனு நான் நினைக்கிறேன்"

" இங்க பாருங்க ராதா, நாம என்னெல்லாமோ பேசி கல்யாணம் பண்ணி வாழ நினைச்சாலும், நம்ம சமுதாயம் நம்ம வாழ விடாது. விடுங்க. உங்களுக்கு ஏற்ற நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிக்கங்க"

" அப்போ வாழ்க்க பூரா நீங்க அப்படியே இருக்க போறீங்களா?"

" நான் கல்யாண வயதை தாண்டி ரொம்ப நாளாச்சு. நானெல்லாம் கோபுரத்துக்கு ஆசைப்பட கூடாது. எனக்குனு ஒரு ஏழைப்பொன்ணு, ஏதாவது ஒரு கிராமத்துல இல்லாமலையா இருக்கப்போறா. இல்லைனா இருக்கவே இருக்கு என் பாட்டு. ஆர்கஸ்ட்ரால பாடற நிம்மதியே எனக்கு போதும். வேற ஏதாவது பேசுங்க"

" வேற என்ன பேசறது. நீங்கதான் என் கணவர்னு நான் முடிவு பண்ணீட்டேன். அதை என்னால மாற்ற முடியாது"

" நீங்க மட்டும் முடிவு பண்ணா போதுமா ராதா?"

" அதான் உங்களையும் முடிவு பண்ணச்சொல்லுறேன்"

" ராதா, நான் மேலே சொன்ன காரணமெல்லாம் இல்லமா, இன்னொரு காரணமும் இருக்கு, நான் உங்களுக்கு தகுதியானவன் இல்லைனு சொல்ல?"

" என்ன அது?"

" வயது. நான் 33. நீங்க 22"

" இது ஒரு பெரிய பிரச்சனையா நான் நினைக்கவேயில்ல. இந்த மாதிரி கல்யாணம் பண்ணி வாழ்ந்தவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அதனால இத ஒரு பெரிய விசயமா நான் நினைக்கல. நீங்க என்ன வேணாம்னு சொல்லறதால, என்னோட வாழ்க்கை மட்டும் வீணாப்போகப் போறது இல்ல, உங்களோடதும் சேர்ந்துதான். உங்களை கட்டாயப்படுத்த போறதில்ல. நாளைக்கு யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க" என சொன்னவள், அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் விறு விறு என நடந்தாள் அந்த இடத்தை விட்டு.

அடுத்த நாள் அதே இடத்தில் சந்தித்தபோது, மிகவும் யோசித்து யோசித்து ராகவன், "நாம் கல்யாணம் பண்ணிக்கலாம்" என அந்த வார்த்தைகளைச் சொன்னபோது சந்தோசத்தின் உச்சிக்கு சென்றாள் ராதா. அதன்பிறகு நடந்ததெல்லாம் மிக சந்தோசத்தை தந்த தருணங்கள். நாள் தவறாமல் சந்தித்தார்கள். உலகத்திலேயே இவர்கள் இரண்டு பேர் மட்டுமே வாழ்வதாய் நினைத்து எல்லா இடங்களுக்கும் சென்றார்கள். ஆனால், ஒரு முறை கூட அவன் விரல் நகம் கூட ராதாவின் மேல் பட்டத்தில்லை. மற்ற காதலர்கள் போல் இல்லை இவர்கள். பேசுவார்கள் நிறைய. அவனைப்பாடச்சொல்லி கேட்பாள். கேட்டுக்கொண்டே இருப்பாள். ஆன்ந்தத்தில் அழுவாள். ஒரே ஒரு நாள் மட்டுமே பீச்சுக்கு சென்றார்கள். அவன் பாடி முடித்த அந்த நொடியில் என்ன செய்கிறோம் எனத்தெரியாமல், அவளை அறியாமல், அவன் கையத்தொட்டு முத்தமிட்டதுதான் அவர்களின் உச்சக்கட்ட தொடுதலாக அமைந்தது. எல்லா காதலர்களுக்கும் ஏற்படும் பிரச்சனை அவர்கள் காதலிலும் வந்தது. ஒரு நாள் அப்பா கூப்பிட்டு அவளுக்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்வதாக கூறினார். உடனே ஓடி வந்தாள் ராகவனிடம்.

விசயத்தை கூறினாள். சிறிது நேரம் யோசித்தவன், "கவலைப் படாதே, நான் உன் வீட்டிற்கு பெண் கேட்டு நாளை வருகிறேன்" என்றான். சொன்னது போலவே, தன் வயதான தாயாருடன் வந்தான்.

" யாரு, நீங்க உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றார் ராகவனின் அப்பா.

ராகவன் தான் பதில் கூறினான்.

" சார், உங்க பெண் ராதாவை பொண்ணு கேட்டு வந்துருக்கோம்". மெல்ல உள்ளிருந்து ராதாவின் அண்ணனும், அக்காவும் எட்டப்பார்த்தார்கள்.

"யாரு சார், நீங்க. உங்களுக்கு எப்படி என் பெண்ணைத்தெரியும்?"

" நானும், உங்க பொண்ணும் ஆறு மாசமா நேசிக்கிறோம். அதான் முறைப்படி பொண்ணு கேட்கலாமே என்று வந்தோம்" என ராகவன் சொல்லிமுடிக்குமுன், ராதாவின் அண்ணன் கோபமாக அவனைப் பார்த்து கேட்டான்,

"நீங்க என்ன ஜாதி, என்ன குலம், என்ன கோத்தரம்"

" கலயாணத்துக்கு ஜாதியா சார் முக்கியம். இரண்டு மனசோட சம்மதம் தான் முக்கியம். நான் உங்க பொண்ண ரொம்ப நல்லா வச்சு காப்பாத்துவேன் சார்"

" மிஸ்டர், மேடைல பேசறா மாதிரியெல்லாம், இங்க பேசாதீங்க. நாங்க ரொம்ப ஆச்சாரமான குடும்பம். எங்களுக்கு குடும்ப கொளரவம் தான் முக்கியம். உங்களுக்கு என் பெண்ண கல்யாணம் பண்ணிக்கொடுக்க எனக்கு சம்மதம் இல்ல, அதனால நீங்க உடனே இடத்தை காலி பண்ணலாம்" மிகுந்த கோபத்துடன் கூறினார், ராதாவின் அப்பா.

" உங்க பொண்ணு பிடிக்கலைனு சொல்லட்டும் சார், அப்பறம் போறேன்" என்றவனை ராதாவின் அண்ணன், அவன் சட்டையை பிடித்து அடித்து, ஓங்கி அறை விட்டபோது பதட்ட படாமல் அவன் சொன்னது, அவன் ஆண்மையை வெளிப்படுத்தியதாக உணர்ந்தாள் ராதா.

" மிஸ்டர், உங்கள திருப்பி அடிக்கறது ஒண்ணும் பெரிய விசயமில்ல. என்னொட உயிரான ராதாவோட அண்ணன் நீங்க. என்னதான் இருந்தாலும் என்னோட மச்சானா ஆகப்போறீங்க. நான் ஏன் உங்களை அடிக்கனும்?. நீங்க உங்க தங்கை மேல உள்ள பாசத்துல கோபப்படுறீங்க. உங்க கோபம் நியாமானது. நான் உங்கள் நிலையில் இருந்தாலும் அப்படித்தான் நடந்துப்பேன். எந்த அண்ணனுக்கு தன் தங்கையை முன் பின் தெரியாத ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க மனசு வரும். எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்பீங்க. ஆசை ஆசையா வளர்த்த பொண்ண எவனோ ஒருத்தன் ஒரு நாள் கூட்டிட்டு ஓடுரத, எந்த அப்பாவால, அண்ணனால தாங்கிக்க முடியும். உங்க குடும்பத்துல உள்ள எல்லோருடைய உணர்வுகளையும் நான் மதிக்கிறேன். உங்க எல்லாத்துக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன். நான் உங்க பொண்ண இழுத்திட்டு ஓடிப்போய் எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். தன வீட்ட விட்டு தன் பொண்ணு நல்ல இடத்துலதான் வாழ்க்கைப்படறா அப்படீங்கற சந்தோசம் உங்களுக்கு கிடைக்கறத, என்னோட எந்த நடவடிக்கைகள்னாலேயும் அழிக்கமாட்டேன். ஏன்னா, அந்த சந்தோசத்தை என் தங்கைகளின் கல்யாணத்து மூலமா இன்னும் நான் அனுபவிச்சிட்டு இருக்கென். உங்கள் மனசு மாறும் வரை நான் காத்திருப்பேன்" என்று சொல்லிவிட்டு போன அவனை குடும்பமே ஆச்சர்யத்துடன் பார்த்தது.

தொடரும்......

3 comments:

Beski said...

நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு...
---
பாத்தா அடுத்த பாகத்துல முடியிற மாதிரி தெரியல. ரொம்ப பெருசா இருக்கும்போல தோனுது. ஏதாவது ட்விஸ்ட் வச்சு முடிச்சுருப்பீங்க போல!

அடுத்த பாகத்துல முடியுதுன்னா, கண்டிப்பா இது சிறுகதைதான்.
---
நல்லாருக்குண்ணே!

iniyavan said...

நன்றி எவனோ ஒருவன்.

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled '"நிலாவே வா!" - சிறுகதை - பாகம் 2' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd July 2009 09:28:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/86770

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி.