Jul 23, 2009

"நிலாவே வா!" - சிறுகதை - பாகம் 3

ரே வாரத்தில், அனைவரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் இனிதே நடந்தது. அவனுக்கும் நல்ல பதவி உயர்வு கிடைத்தது. ராதாவுக்கு ஒரு மல்டி நேஷனல் கம்பனியில் நல்ல வேலை கிடைத்தது. சந்தோசமாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் ராகவன் அவள் மதிப்பில் உயர்ந்து கொண்டே இருந்தான்.

ஒரு நாள் அதிகாலை. பயங்கரமான வயிற்று வலி. துடிதுடித்து போனாள். அதை விட ராகவன் துடித்துப்போனான். கண்கள் கலங்க பதட்டத்துடன் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். டாக்டர்கள் அனைத்து பரிசோதனையும் முடித்து, கடைசியில் சொன்னார்கள், அப்பண்டிஸைஸ், உடனடியாக ஆப்பரேசன் செய்ய வேண்டுமென்று. அவளுக்கு ஆப்பரேசன் முடியும் வரை பச்ச தண்ணீர் குடிக்கவில்லை. அவள் படுக்கையே கதியென்று கிடந்தான். நர்ஸுகள் வர லேட்டானால், அவனே பெட்பேனை எடுத்து, அவளுக்கு சுத்தம் பண்ணி, ஒரு நாள் டாக்டர் திட்டியே விட்டாள்.

" என்ன மிஸ்டர், நாங்க எதுக்கு இங்க இருக்கோம். இதெல்லாம் நாங்க செய்ய மாட்டோமா?"

ஒரு சின்ன சிர்ப்புடன் பதில் கூறினான், "என் மனைவிக்கு பணிவிடை செய்வதை ஒரு சேவையாக கருதுகிறேன் டாகடர்" என்றவனை மிகவும் ஆச்சர்யத்துடன் பார்த்தாள் டாகடர்.

ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது, டாகடர் ராதாவை தனியே அழைத்து கூறினாள், " இந்த மாதிரி கணவன் கிடைக்க நீ என்ன புண்ணியம் பண்ணின?" மீண்டும் அவள் மனதில் மிக உயர்ந்த நிலைக்கு சென்றான் ராகவன்.

இப்படி பல சந்தர்ப்பங்கள். வீட்டில் எப்பவும் இவள்தான் கோபப்படுவாள், அவன் கோபப்பட்டதேயில்லை "அந்த" ஒரு சந்தர்ப்பத்தை தவிர. அவள் கோபங்கள் அனைத்தையும் ஒரு புன்சிரிப்புடனே சமாளிப்பான். அவனை கோபப்படுத்த நினைத்து தோற்றுத்தான் போனாள் ராதா.

இப்படியான வாழ்க்கை எப்போது தடம் புரண்டது?. அன்று ஒரு நாள் கம்பெனியில் ஆடிட். வேலை கொஞ்சம் அதிகம் ராதாவுக்கு. தான் லேட்டாய் வருவேன் என்பதை போன் பண்ணிச்சொல்ல மறந்துவிட்டாள். ராகவனிடமிருந்து வந்த போன் கால்களையும் கட் செய்துவிட்டாள். வேலை முடிந்து மணி பார்த்தபோது, மணி 10. பகீரென்றது அவளுக்கு. கடைசி பஸ் வேறு போயிருக்கும், என்ன செய்யலாம் என நினைத்துக்கொண்டிருந்தவள், அவள் மேனஜர் கூப்பிட்ட போதுதான் சுய நினைவுக்கு வந்தாள். அவள் மேனஜர் மிக இளைஞர். MDயின் மகன். ஆனால், மிக நல்லவன் என பெயரெடுத்த்வன்.

" என்ன மேடம், இவ்வளவு நேரம் என்ன பண்ணறீங்க?, இப்போ எப்படி வீட்டுக்கு போவீங்க, வாங்க நான் உங்க வீட்டுல ட்ராப் செய்யிறேன்" என்றவுடன் வேறு வழி தெரியாத நிலையில் அவளை அறியாமல் காரில் ஏறி அமர்ந்தாள். வீடு வந்து சேர 11 மணியாகிவிட்டது. வீட்டில் மேனாஜர் ட்ராப் செய்துவிட்டு ராகவனிடம் , " சார், மேடம் லேட்டாத்தான் வேலையை முடிச்சாங்க, பஸ் ஒண்ணு கிடைக்காதுங்கறதுனால நான் தான் வற்புறுத்தி கார்ல கூட்டி வந்தேன்" எனக்கூறிவிட்டு சென்றார்.

ராகவன் வாசலிலேயே அமர்ந்திருந்தான். மிகக்கோபமாய் இருந்தான். இது வரை ராதா அவனை அப்படி ஒரு கோபத்தில் பார்த்ததே கிடையாது. ஒன்றும் பேசாமல் வீட்டின் உள்ளே சென்றாள். கதவை சாத்தியவன் ராதாவை பார்த்து கேட்டான்,

" ஏன் லேட்?"

" சாரிங்க, ஆடிட்டிங்கறதால நிறைய வேலை"

"ஏன் முன்னாடியே சொல்லலை"

"எனக்கே சாயந்தரம்தான் தெரியும்"

" நான் போன் பண்ணேனே நீ ஏன் எடுக்கல"

"வேலை டிஸ்டர்ப் ஆகுமேனுதான்"

" எது, நான் பேசறது உனக்கு டிஸ்டர்பா இருக்கா"

" அதான் சொல்லறென்ல வேலை அதிகம்னு, திருப்பி திருப்பி கேட்டுகிட்டு" என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் புடவையை கழட்டிவிட்டு நைட்டிக்கு மாறினாள்.

" அது சரி, அது ஏன் அவன் கூட கார்ல வந்த?"

" அவர்தான் பதில் சொன்னாருல்ல"

" அவர் சொன்னா, ஊருல இருக்கவங்க என்ன நினைப்பாங்க"

" நம்ம ஊருக்காகவா வாழறோம்?"

" கல்யாணம் ஆன ஒரு பெண் கணவன் இல்லாத ஒருத்தனோட, நைட் 11 மணிக்கு கார்ல வந்து இறங்குனா, வெளியிலேர்ந்து பார்ப்பவர்களுக்கு என்னத்தோணும்"

" அவர்களுக்கு என்ன தோணுதோ எனக்குத்தெரியாது. உங்களுக்கு என்ன தோணுது"

" எந்த ஆம்பளைக்கும் கோபம் வருவது இயற்கைதானே?"

"சோ, அப்ப சந்தேகப்படறீங்க"

" அப்படீனு இல்ல, ஆனா நீ பண்ணது தப்புத்தானே"

"என்ன தப்பு. ஒரு அலவலக நண்பரோட கார்ல வந்தா தப்பா"

" கார்ல வரது தப்பில்ல. ஆனா, ஒரு ஆண் நண்பரோட நைட்ல கார்ல வரது தப்புத்தானே. இந்த விசயத்துல எனக்கு கோபம் வரலைனா தான் தப்பு"

" ஓ ஓ ஆணாதிக்கம். உங்ககிட்ட இருக்கறது இப்பத்தான் உணரேன். ஒரு பொண்ணு நைட்ல இன்னொருத்தன் கூட கார்ல வந்து இறங்குனா உண்மையா அன்பு வைச்சிருக்க யாரும் சந்தேகப்படமாட்டாங்க. ஒரு பொண்ணு தப்பு பண்ணனும்னா, நைட்லதான் பண்ணனும்னு இல்ல, பகல்ல கூட பண்ணலாம். உங்க உண்மையான சுயரூபம் இன்னைக்குத்தானே தெரியுது" எனக்கோபப்பட்டவள், ரூமிற்கு சென்று கதவைச்சாத்திக்கொண்டாள். முதல் முறையாக ராகவன் அவள் மனதிலிருந்து கீழே விழுவதாக நினைத்தாள். அழுது கொண்டே இருந்தவள் எப்போது தூங்கினாள் என தெரியவில்லை. முழித்துப் பார்த்தவள் மணி காலை 6 ஆனதை உணர்ந்தாள். பெட் ரூமை விட்டு வெளியே வந்தவள்,ராகவன் ஹாலிலேயே படுத்திருப்பதை பார்த்தாள். அவனிடம் இரவு சாப்பிடானா என்றோ, காபி வேண்டுமா என்றோ எதையும் கேட்கவில்லை. விறு விறு வென குளித்துவிட்டு, ராகவனிடம் கூட சொல்லாமல் ஆபிஸுக்கு கூட செல்லாமல் அவள் அம்மா வீட்டிற்கு சென்றாள்.

தொடரும்...

2 comments:

Beski said...

நல்லா போகுது... 3 பாகத்துல முடிஞ்சுரும்னு நெனச்சேன்.

நட்சத்திரப் பதிவராய் இருந்த உங்களுக்குப் பின்னூட்டம் வராமல் இருப்பது ஆச்சர்யமாய் இருக்கிறது. தொடர்ந்து பின்னூட்டம் இடுமாறு ஒருவரக்கூட தக்கவைக்கவில்லையா? ரொம்ப குழப்பமா இருக்கு!?

iniyavan said...

நன்றி எவனோ ஒருவன்.

//நட்சத்திரப் பதிவராய் இருந்த உங்களுக்குப் பின்னூட்டம் வராமல் இருப்பது ஆச்சர்யமாய் இருக்கிறது. தொடர்ந்து பின்னூட்டம் இடுமாறு ஒருவரக்கூட தக்கவைக்கவில்லையா? ரொம்ப குழப்பமா இருக்கு!?//

காலம் ஒரு நாள் மாறும்.