Jul 3, 2009

தெய்வ வழிபாடும், நல்ல நேரம்/ சகுனம் பார்ப்பதும்..

சிறு வயதிலிருந்து என்னிடம் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கும் பழக்கங்களில் தெய்வ வழிபாடும், நல்ல நேரம் பார்த்து காரியங்களை துவங்குவதும், சகுனம் பார்ப்பதும் மிக முக்கியமான பழக்கங்களாகும். ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த பழக்கங்கள் இன்று என்னை ஆளும் நிலைக்கு வந்து விட்டது. நாம் கோவிலுக்கு செல்வது ஒரு மன நிம்மதிக்காக. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? எப்போதும் ஒரு பெரிய வேண்டுதல் லிஸ்டுடனே நாம் கோயிலுக்கு செல்கிறோம். ஏதோ கடவுளுக்கு வேறு வேலையே இல்லாததுபோல.

எனக்கு அதிக தெய்வ நம்பிக்கைக்கு காரணம் எங்கள் ஊரில் உள்ள கோயில்கள்தான். சிறு வயதிலிருந்தே தினமும் கோயிலுக்கு செல்வதை நண்பர்கள் அனைவரும் ஒரு வழக்கமான பழக்கமாகவே வைத்திருந்தோம். ஆனால், என்னுடைய தெய்வ நம்பிக்கை என்பது ஒரு கட்டத்தில் எல்லை மீறி சென்றுவிட்டது. நான் காலேஜ் படிக்கும் சமயங்களிலெல்லாம் ஒரு பாடத்தில் புது சேப்டர் படிக்க ஆரம்பித்தாலே உடனே கோயிலுக்கு போய் வேண்டி வருவது வழக்கம். அந்த அளவு தெய்வ நம்பிக்கை மிக அதிகமாக ஆகிவிட்டிருந்த காலம் அது.

ஆனால், அதே நான் வீட்டில் ஒரு அகால மரண சம்பவம் ஏற்பட்ட பிறகு சில காலம் கடவுளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு அவரை பார்க்காமல் இருந்து வந்தேன். ஆனால், பிறகு சமாதானம் ஏற்பட்டு, நான் வேலையில் சேர்ந்தவுடன் மீண்டும் வழிபட ஆரம்பித்தேன். கல்யாணம் ஆன பிறகு, கொஞ்சம் அதிகமானது இறைவழிபாடு. இரண்டு குழந்தைக்கு பிறகு, மிகுந்த ஈடுபாடு வந்துவிட்டது. என்னால், 24 மணி நேரமும் கடவுளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. காரணம் வாழ்க்கை குறித்த பயமாக இருக்கலாம், இல்லை முளை ஆன்மிகத்தை பற்றியே அதிகமாக சிந்திப்பதாக இருக்கலாம். அதனால் எனக்கு பாதிப்பு அதிகமில்லை. சந்தோசம்தான். ஆனால், சில சமயங்களில் இந்த பழக்கம் அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்.

இந்த கட்டுரையின் நோக்கம் என் தெய்வ வழிபாட்டினை பற்றி கூறுவது அல்ல. என்ன சொல்லுகிறேன் என்றால், எந்த பழக்கமுமே ஒரு அளவோடு இருந்தால் நல்லது. அதுவே அளவை மீறும்போது அதே பழக்கம் நமக்கு தொல்லையாக மாறி விடுகிறது. எந்த கடவுளும் என்னை தினமும் வந்து கும்பிடு என்று கூறவில்லை. நாமாக ஏற்படுத்திகொண்ட பழக்கங்களே அவை. தினமும் கோயில் செல்பவனுக்கு தான் கடவுள் கருணை காட்டுவார் என்பதோ, கோயிலுக்கு செல்லாதவர்கள் எல்லாம் பாவிகள், கடவுள் கருணை காட்டமாட்டார் என்றோ இல்லை.

அன்னை தெரசாவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. நான் சொல்லப்போகும் இந்த நிகழ்ச்சியும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். அன்னை ஒரு முறை காளி கோயிலுக்கு சென்றபோது, ஒரு குஷ்ட நோய் உள்ள ஒருவரை தூக்கி அவருக்கு பணிவிடை செய்தபோது, அந்த நபர் கூறினாராம், " இத்தனை வருசமா இங்கே இருக்கேன், நான் இதுவரை அந்த தேவியை நேரில் பார்க்கவில்லை. இன்றுதான் உங்கள் மூலமாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது" என்றாராம். எந்த அளவு உண்மை பாருங்கள்!

தெய்வ வழிபாடு அவசியமான ஒன்றுதான். ஆனால், அதுவே நாம் கடவுளை சென்று அடைய உதவும் முழுமையான வழி கிடையாது. கடவுளை சென்று அடைய, அவரின் அனுக்கிரகத்தைப் பெற வழிபாடு மட்டும் போதாது, ஒரு அன்னை தெரசா போல், ஏழைகளுக்கு உதவுவதிலும், நோயாளிகளுக்கு உதவுவதிலும், ஏழைக்குழந்தைகளை காப்பதிலும்தான் இருக்கிறது. முடியாத ஒருவருக்கு உதவி செய்யும்போது அவர் உங்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டு சொல்லும் வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள், உங்கள் மனதெல்லாம் நிறைவாக இருக்கும். இன்னும் இன்னும் உதவி செய்ய வேண்டும் போல இருக்கும்.

நானும் நிறைய ஏழைகளுக்கு என்னால் ஆன உதவியை செய்து தெய்வத்தை அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நீங்களும் முயற்சிக்கலாமே!

அடுத்து சகுனம் பார்ப்பது, நல்ல நேரம் பார்ப்பது. எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது என்னை பிடித்திருக்கும் நோய் என்பது மட்டும் தெரிகிறது. அதை பார்க்காமல் பழகி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பழகிவிட்டால், அந்த பழக்கத்தை விடுவது மிகுந்த கஷ்டம் என்பது மட்டும் எனக்கு தெளிவாக புரிகிறது.

வீட்டில் செய்யும் பல நிகழ்ச்சிகளை நல்ல நேரம் பார்த்துதான் செய்கிறோம். ஆனால், அலுவலகத்தில் அவ்வாறு முடியுமா? நாம் வேண்டுமானால் எந்த மீட்டிங்கையும் ராகு காலம், எம கண்டம் இல்லாத நேரத்தில் வைக்கலாம். ஆனால், நம்மை சந்திக்க அழைப்பவர்கள் அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் வைக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா? முடியாது. அதுவுமில்லாமல், எங்களுக்கு எப்பவுமே ஒரு குழப்பம், இந்திய நேரம் காலை 7.30 என்றால், மலேசியாவில் காலை 10. நாங்கள் ராகு காலம் இந்தியா டைமை பார்க்க வேண்டுமா இல்லை மலேசிய டைமா?

ஒரு முறை சென்னை செல்லும்போது ஏற்பட்ட அனுபவம். புறப்படும் நாள் காலைதான் அன்று அஷ்டமி என்று தெரிந்தது. பார்க்காமல் டிக்கட் புக் செய்துவிட்டோம். கிளம்பும் அன்று வீட்டில் ஒருவர் நினைவு படுத்த, விமானம் தரை இறங்கும் வரை ஒரே டென்சன்தான். காரணம் அதிகமாக நேரம் காலத்தின் மீது நம்பிக்கை வைத்ததுதான். அஷ்டமி, நவமி நாட்களில் விமானம் பறக்காமல் இருக்கிறதா, என்ன?

நான் மேலே கூறிய தெய்வ வழிபாடு, நல்ல நேரம் பார்த்தல், சகுனம் பார்ப்பது எதையும் வேண்டாம் என சொல்லவில்லை. எதிலும் ஒரு அளவோடு இருக்க வேண்டும் என்கிறேன். நாம் தான் அந்த பழக்கவழக்கங்களை ஆள வேண்டும், அவைகள் நம்மை அடிமை படுத்தி விடக்கூடாது.

நாம் வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்தால், போன காரியம் சரியாக நடை பெறாது, என்பார்கள். அது மட்டும் உண்மை என்றால், மலேசியாவில் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டியதுதான். ஏனென்றால், எங்கு பார்த்தாலும் பூனைகள்தான்.

மலேசியாவில், வெளியே செல்லும்போது பூனை குறுக்கே வரவில்லை என்றால்தான், போன காரியம் சரியாக நடை பெறாது.

9 comments:

சீமாச்சு.. said...

//கடவுளை சென்று அடைய, அவரின் அனுக்கிரகத்தைப் பெற வழிபாடு மட்டும் போதாது, ஒரு அன்னை தெரசா போல், ஏழைகளுக்கு உதவுவதிலும், நோயாளிகளுக்கு உதவுவதிலும், ஏழைக்குழந்தைகளை காப்பதிலும்தான் இருக்கிறது.//
நியாயமான வார்த்தைகள்.. இதை எல்லாரும் கடைபிடித்தால் இந்தியா முன்னேறிவிடும்..

சகுனம் பார்ப்பதை விட்டுவிடுங்கள்.. அது ரொம்ப கெட்ட பழக்கம்.

அன்புடன்
சீமாச்சு

சீமாச்சு.. said...

//புறப்படும் நாள் காலைதான் அன்று அஷ்டமி என்று தெரிந்தது. பார்க்காமல் டிக்கட் புக் செய்துவிட்டோம். கிளம்பும் அன்று வீட்டில் ஒருவர் நினைவு படுத்த, விமானம் தரை இறங்கும் வரை ஒரே டென்சன்தான்.//

இந்தக்காலத்தில் சனி ஞாயிறு வார இறுதி விடுமுறை போன்று அந்தக்காலத்தில் இல்லை. அப்பொழுதெல்லாம் குருகுலங்களும், இராஜ ப்ரிபாலனங்களும் அஷ்டமி நவமி அன்று தான் விடுமுறை. அதனால் தான் “அஷ்டமி நவமி அன்று போனால் வேலை ஆகாது” என்று சொல்லப்பட்டது...

இப்பொழுது வாரயிறுதிகள் சனி ஞாயிறு வந்துவிடுவதால் அஷ்டமி நவமி பார்க்க வேண்டியதில்லை..

iniyavan said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு சீமாச்சு.

dondu(#11168674346665545885) said...

ஜோசியம் பற்றி நான் இட்ட பதிவு http://dondu.blogspot.com/2008/07/blog-post_13.html

அதில் ராகு காலம் பற்றி சுப்பையா அவர்கள் பின்னூட்டத்தில் விளக்கியுள்ளார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெற்றி-[க்]-கதிரவன் said...

//தெய்வ வழிபாடு அவசியமான ஒன்றுதான். ஆனால், அதுவே நாம் கடவுளை சென்று அடைய உதவும் முழுமையான வழி கிடையாது.//

கடவுளை சென்று அடையவா ? அல்லது கடவுளாக(கடவுளை) உணரவா ?

****
சகுனத்தடை பயணத்தை கெடுக்காதுன்னு என் அனுபவம் சொல்லிகொடுத்துது :)

அத இங்க படிக்கலாம்
http://maargalithingal.blogspot.com/

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Beski said...

இதுல நமக்கு அந்த அளவுக்கு ஈடுபாடோ, ஈர்ப்போ கிடையாது.

சோ... நோ கமண்ட்ஸ்.

iniyavan said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள்
டோண்டு,
பித்தன்,
எவனோ ஒருவன்
ஆகியோருக்கு நன்றி.

Raja P said...

Good