Jul 6, 2009

உடல் ஆரோக்கியமாக இருக்க.......


"வாழ்க வளமுடன், வாழ்க வையகம்"

என்னை இந்த வார நட்சத்திர பதிவராக்கிய திரட்டி.காமிற்கு என் நன்றி.

இது என்னுடைய 50வது பதிவு. 50 வது பதிவு திரட்டி.காமின் நட்சத்திர பதிவாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் எப்போதும் மகிழ்ச்சியுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கு காரணமான எனது அனைத்து தெய்வங்களையும், என் குரு வேதாத்திரி மகரிஷி அவர்களையும் இந்த நேரத்தில் வணங்கி என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் என் குருவை எப்போதிலிருந்து வணங்க ஆரம்பித்தேன்?. ராணிப்பேட்டையில் வேலை பார்த்தபோது ஒரு நாள் எனக்கும் என் பாஸுக்கும் ஒரு விசயத்தில் ஒரு சின்ன விவாதம் நடந்தது. நான் சிறிது கோபமானேன். வேலை முடிந்து ரூமிற்கு சென்ற நான் அந்த விசயத்தையே நினைத்துக்கொண்டிருந்தேன். நண்பர்கள் இரவு ஒரு 8 மணிக்கு சாப்பிட கூப்பிட்டார்கள். சாப்பிட போன நான் ஒன்றுமே பேசாமல் வருவதை கவனித்த என் நண்பன், " ஏண்டா என்னாச்சு?" எனக்கேட்க, நான் நடந்த விவரங்களை சொல்ல ஆரம்பித்தேன். அப்படியே முழு டென்சனுடன், சொல்லிகொண்டே நடந்து போய்க்கொண்டிருந்த நான், திடீரென மயக்கமாக உணர்ந்தேன். நல்ல வேலை கீழே விழவில்லை. அவன் தோளை பிடித்துக்கொண்டு ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டேன். சிறிது நேரம் கழித்துத்தான் எனக்கு தெரிந்தது, என் தலை சுற்றியதால் அப்படி ஆனது என்று. பிறகு சமாளித்து சாப்பிட்டுவிட்டு மெதுவாக நடந்து ரூமிற்கு வந்து விட்டேன். அடுத்த நாளும் அதே போல் இருக்க, உடனே அருகில் உள்ள ஒரு டாக்டரை பார்க்க சென்றேன்.

என்னை பரிசோத்தித்த அந்த டாக்டர், " உனக்கு BP அதிகம் உள்ளது, அதனால் BP மாத்திரை சாப்பிட வேண்டும்" என்று சில மாத்திரைகள் கொடுத்தார். சாப்பிட்டுவிட்டு படுத்து அடுத்த நாள் எழுந்தால் என்னால் நடக்க முடியவில்லை. கொண்டு தள்ளுகிறது. ஏதோ செய்வது போல் தெரிகிறது, ஆனால், என்னவென்று என்னால் உணரமுடியவில்லை. நண்பர்களிடம் கூறியதற்கு, எதற்கும் "நீ இன்னொரு டாக்டரை பார்த்துவிடு" எனக்கூறினார்கள். பிறகு வேறு ஒரு டாக்டரிடமும் சென்றேன். அவர் என்னை பரிசோதிக்கும் போதும் அதே போல் BP ஏறியது. பிறகு டாகடர் என்ன நடந்தது? என என்னிடம் எல்லாவற்றையும் விசாரித்தார். நடந்தது எல்லாம் கூறினேன். பிறகு ஒரு முப்பது நிமிடம் கழித்து BP செக் செய்தால் நார்மலாக உள்ளது. பின்புதான் அவர் கூறினார்,

" உங்களுக்கு வந்திருப்பது BP இல்லை. ஏதோ ஒரு விசயத்தினால் ஏற்பட்ட டென்சனே BP உடனே ஏறியதற்கு காரணம். அதே சமயம் இதே போல் BP ஏறுவதும் இறங்குவதும் நல்லதல்ல. பின் நாளில் ஒரு வேலை நீங்கள் அதிகம் கோபமுற்றால், BP அதிகமாக ஆகும் பட்சத்தில் கைகால் விளங்காமல் போக வாய்ப்பு உள்ளது. உடனே அந்த BP மாத்திரையை நிறுத்தி விடுங்கள். நான் சொல்லும் மருந்தை தினமும் பயன் படுத்துங்கள்" என்றார்.

" என்ன மருந்து சார்?" எனக் கேட்டேன்.

" வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை (SKY) என்ற ஒரு அமைப்பு உள்ளது. அங்கு சென்று தியானம் கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு மருந்து. வேறு எந்த டாக்டரிடம் சென்று பணத்தை செலவு செய்ய வேண்டாம்" என்றார். அந்த நல்ல டாக்டரின் பெயர் டாக்டர் ரமணி என நினைக்கிறேன். ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் உள்ளார். இந்த நேரத்தில் அவருக்கு என் மனமார்ந்த நன்றியை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த நாள் நானும் என் யோகா குரு நண்பர் பாலசுப்ரமணியனும் (தற்போது சவுதி அரேபியாவில் பணி புரிகின்றார்), மனவளக்கலை மையம் சென்றோம். அங்கே மூன்று விதமான பயிற்சி கொடுத்தார்கள்:

01. மனதிற்கு - தியானம் (ஆக்கினைத்தவம், சாந்தி யோகம், துரியம், துரியாதீதம்)
02. உயிருக்கு - காயகல்பம்
03. உடம்பிற்கு - எளிய முறை உடற்பயிற்சி

முழுமையாக கற்றுக்கொண்டேன். உடனே மலேசியா வரவேண்டி இருந்ததால் ஆசிரியர் பயிற்சி என்னால் முடிக்க முடியவில்லை. 15 வருடமாக தொடர்ந்து அனைத்தையும் செய்து வருகிறேன். எந்த குறையும் இல்லை. சந்தோசமாக உணர்கிறேன். உடல் எப்போதுமே ஆரோக்கியமாகவே உள்ளது. சுறு சுறுப்பாக உள்ளது. மற்ற அமைப்புகள் போல் அவர்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. வெறும் 2 ரூபாய்தான் அப்போது நன்கொடையாக பெற்றார்கள். இப்போது எவ்வளவு எனத்தெரியவில்லை.

இதில் முக்கியமான செய்தி என்ன வென்றால் அதன் பிறகு எனக்கு தலை சுற்றவும் இல்லை, BP வரவும் இல்லை, நான் டாகடரிடம் செல்வதும் இல்லை. இதை நான் சொல்லும்போது சிலர் நம்பாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளது. சில விசயங்களை பிறர் சொல்லி தெரிவதை விட, தாங்களே அனுபவித்து பார்த்தால்தான் அதன் சுகம் தெரியும். நான் அனுபவித்ததால், அனுபவித்துக்கொண்டிருப்பதால் கூறுகிறேன்.

தயவு செய்து, இதை படிக்கும் நண்பர்கள், நம்பிக்கையுடன் அருகில் உள்ள வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை மன்றத்துக்கு சென்று முடிந்தால் பயிற்சி எடுத்து நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். தனி மனிதனின் அமைதியும் சந்தோசமுமே, உலக அமைதிக்கும் முக்கியம் என்பதால், இதை இங்கே கூறுகிறேன்.

"வாழ்க வளமுடன், வாழ்க வையகம்"

9 comments:

நர்சிம் said...

வாழ்த்துக்கள்.. கலக்குங்கள் தலைவா.வாழ்க வளமுடன்

iniyavan said...

உங்கள் வாழ்த்துக்கு நன்ற்றி நர்சிம்.

Beski said...

பதிவப் பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.
---
நட்சத்திர வாழ்த்துக்கள்.
50 க்கும் வாழ்த்துக்கள்.

iniyavan said...

நன்றி 'எவனோ ஒருவன்'

நிகழ்காலத்தில்... said...

வேதாத்திரி மகானைப் பற்றியும், அவர் மனித குலத்திற்கு வழங்கிய எளியமுறை உடற்பயிற்சி, தியானத்தை தாங்கள் நட்சத்திர பதிவாக எழுதியது பொருத்தமாக உள்ளது.,

வாழ்த்துகள் , வாழ்க வளமுடன்

Enfielder said...

அருமையான பதிவு.
வாழ்க வளமுடன்.

Mohan said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! நல்ல தகவல் தந்ததற்கு மிகவும் நன்றி!

பட்டாம்பூச்சி said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!

பட்டாம்பூச்சி said...

Naanum andha payirchiyai mudithirukkiren enbadhu perumai tharum visayam endraalum adhai thodarchiyaai seiya mudivadhillai.neram kidaikkavillai enbadhe unmai.15 varudam thodarndhu seidhu varum neengal nijamaagave paaraattappada vendiyavar nanbare.