Jul 8, 2009

பெண்களின் மனம் என்பது????

உலகத்திலேயே மிகவும் புரிந்து கொள்ள முடியாத விசயம் ஒன்று உண்டு என்றால் அது பெண்களின் மனது என்றுதான் நான் சொல்லுவேன். அது மனைவியாக இருக்கட்டும், மகளாக இருக்கட்டும் அல்லது தோழியாக இருக்கட்டும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆண்கள் போல எதையுமே பெண்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு உடனே செய்வதில்லை என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆனால், கோபம்?? அதுவும் எப்போது வரும் எனக் கணிப்பது மிகவும் கஷ்டம்.

மனைவிக்கு நாம் என்ன வாங்கிக் கொடுத்தாலும் ஏற்படாத ஒரு சந்தோசம், அவர்கள் அம்மா வீட்டிற்கு போக வேண்டும் எனக்கூறும்போது, உடனே அனுப்பி வைத்தால் வருகிறது. அதே போல் மனைவி என்ன சமைத்தாலும், ரொம்ப ருசியாக இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள், அவர்கள் சந்தோசத்தின் உச்சிக்கே போய் விடுவார்கள். ஆனால், அவர்களுக்கு, மனைவிக்கு என்றல்ல, பொதுவாக பெண்களுக்கு எப்போதெல்லாம் கோபம வரும் என்பது மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது. சில சமயம், ஏதேனும் கருத்து முரண்பாடுகள் ஏற்படும்போது, கோபப்பட வேண்டிய சமயத்தில் கோபப்படாமல் விலகிப்போவார்கள். அதே சமயம் சாதாரண விசயம் என்று நீங்கள் நினைக்கும் விசயத்திற்கு அவர்களுக்கு கோபம் அதிகமாகி விடும். ஆனால், ஒரு உண்மை எனக்கு நன்றாக புரிந்தது. எந்த பெண்ணும் தன் அம்மா வீட்டைப் பற்றி கணவன் மட்டமாக பேசுவதை அனுமதிப்பதில்லை. ஆனால், அவர்கள் அவ்வாறு பேசினால், நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். பொறுத்துப்போவது அடங்கிப்போவதாக அர்த்தம் ஆகி விடாது, ஆனால், சண்டையை வளர்க்காது. ஆனால், இந்த மாதிரி சிறு சிறு சண்டைகள் இருந்தால்தான், குடும்ப வாழ்க்கையே ஒரு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

எனக்கு பெண்கள் என்றாலே ரொம்ப புடிக்கும் (யாருக்குத்தான் பிடிக்காது என்கின்றீர்களா?). நீங்கள் வேறு ஏதாவது தப்பான அர்த்தம் கொள்ள வேண்டாம். நான் வளர்ந்த சூழ்நிலை அப்படி. ஏகப்பட்ட அக்கா தங்கைகளுடன் வளர்ந்தவன் நான். காமத்தை தவிர்த்து பெண்களுடன் பழகிப்பாருங்கள், அதன் சுகமே தனி. உலகத்திலுள்ள பெண்கள் எல்லாருமே ஆண்டவனால் அனுப்பி வைக்கப்பட்ட தேவதைகள் என்பேன். இப்படிச்சொல்லும் நான்தான் எனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்த போது வருத்தப்பட்டேன். பெண் குழந்தை பிடிக்க வில்லை என்ற காரணத்தினால் அல்ல, ஆண் குழந்தை பிறக்க வில்லையே என்ற ஏக்கத்தில். அந்த செயலுக்காக 'இப்பொது வருந்துகிறேன்' என்று ஏற்கனவே ஒரு பதிவில் குறிபிட்டுள்ளேன்" .

என்னை நல்ல முறையில் செதுக்கியதே நிறைய பெண்கள்தான். அம்மாவில் ஆரம்பித்து, அத்தை, அக்கா, தங்கை, தோழிகள் எனக் கூறிக்கொண்டே போகலாம். இப்படி பெண்கள் மேல் பாசம் வைத்திருக்கும் எனக்குள்ளும் ஒரு முரண்பாடு இருக்கிறது. என் தங்கையின் மறைவிற்கு பின் யாராவது, என்னை "அண்ணா" என்று கூப்பிட்டால் எனக்கு பிடிப்பதில்லை. அதை நான் வெறுக்கிறேன். அப்படி கூப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது? என்பது என் வீட்டினரின் வாதம். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், ஒரு பாதுகாப்புக்காக அப்படி கூப்பிடுகிறார்களோ? என்று.

சமீபத்தில் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. எனது அனைத்து கட்டுரைகளும் படித்து உடனுக்குடன் கருத்துக்களை அனுப்பிக் கொண்டிருந்தார் ஒரு தோழி. முதலில் மெயிலில், பிறகு போனில். பிறகு அவர் ஏதோ போட்டோ அனுப்ப போக, நான் அதற்கு பதில் அனுப்ப போக, அவர் உடனே நீங்கள் நல்லவரா, இல்லை கெட்டவரா? அண்ணா? என்றார். பிறகு அண்ணாவிற்கான விளக்கத்தினை கொடுத்தேன். பிறகு வழக்கம் போல் மெயில் அனுப்பிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு பிரச்சனை என்று கூறியதால், அதற்கு வேண்டிய உதவிகளை நண்பர்கள் மூலமாக செய்து கொண்டிருந்தேன்.

அப்படிப்பட்ட நேரத்தில், நான் அலுவலக வேலையில் பிஸியாக இருந்த சமயத்தில், அவரிடமிருந்து ஒரு மெயில் வந்தது. நான் என்ன எழுதுகிறோம் எனத்தெரியாமல், யாருக்கோ எழுத வேண்டியதை அவருக்கு எழுதி, அவர் என்னை தவறாக புரிந்து கொண்டு, எனக்கு மெயில் அனுப்புதை, பேசுவதை நிறுத்தி விட்டார். ஏன், என்ன? ஆயிற்று என ஒரு விளக்கம் கூட கேட்கவில்லை. ஆண்கள் எல்லாருமே ஒரே மாதிரிதான் என நினைத்து விட்டார் போலும். சடாரேன, தொடர்பை துண்டித்துக்கொண்டவர், இவ்வளவு நாள் எனக்கு எழுதிய விமர்சனங்கள் எல்லாம் தவறு என்று நினைக்கிறாரா? தெரியவில்லை.

இளையராஜா ஒரு பாடலில் இப்படி பாடுவார்,

" பெண் மனசு ஆழமென்று
ஆண்களுக்கும் தெரியும்
அது பெண்களுக்கும் புரியும்
அந்த ஆழத்திலே என்னவென்று
யாருக்குத்தான் தெரியும்"

இந்த பாடல் சரிதான் போல.

அதனால்தான் கூறுகிறேன், "உலகத்திலேயே மிகவும் புரிந்து கொள்ள முடியாத விசயம் ஒன்று உண்டு என்றால் அது பெண்களின் மனது" என்று.

10 comments:

கபிலன் said...

சொன்ன எல்லா மேட்டரும் ஓகே. நல்லா இருக்குங்க.

ஆனா இதைத் தான் கொஞ்சம் நம்ப கஷ்டமா இருக்கு..
"நான் என்ன எழுதுகிறோம் எனத்தெரியாமல், யாருக்கோ எழுத வேண்டியதை அவருக்கு எழுதி, அவர் என்னை தவறாக புரிந்து கொண்டு, எனக்கு மெயில் அனுப்புதை, பேசுவதை நிறுத்தி விட்டார். "

iniyavan said...

நீங்க சொல்வது சரிதான் கபிலன்.

நானும் அவசரப்பட்டு, சர்ப்பார்க்காமல் அனுப்பியிருக்கக்கூடாது.

உங்கள் உணர்வுதான் எனக்கும்.

அப்துல்மாலிக் said...

ரொம்ப அனுபவப்பட்டு அடிபட்டு எழுதிருக்கீங்க‌

//நான் என்ன எழுதுகிறோம் எனத்தெரியாமல், யாருக்கோ எழுத வேண்டியதை அவருக்கு எழுதி, அவர் என்னை தவறாக புரிந்து கொண்டு//

நீங்கள் அவரிட்ம எடுத்து சொல்ல முயற்சி செய்திருக்கலாம்.......

மௌனமான நேரம் said...

பெண்ணோ ஆணோ.. யாராக இருந்தாலும் 'நாம் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமல் எழுதுவது கண்டிப்பாக தவறு...' எல்லா வார்த்தைகளுக்குமே படிக்கிறவர்களில் மனம் பொறுத்து பொருள் மாறுபடும். அப்படி இருக்க 'நானே தெரியாமல் எழுதினேன் ' என்பது சரியா. எனக்கே தெரியாமல் எழுதினேன் என்றால் அது எப்படி அடுத்தவர்களுக்கு புரியும் என்று நான் எண்ணலாம்.. இதே ஒரு பெண் ஆணுக்கு எழுதியிருந்தால் கூட அந்த ஆண் இதே போல் react செய்திருக்கலாம்.. இதற்கும் ஆழத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றே எனக்கு தோன்டுகிறது. இது என் மனதில் பட்டது..பி.கு. நான் உங்கள் பதிவுகளை தவறாமல் படிக்கிறேன். உங்கள் எழுது ரொம்ப அருமை. நான் மேலே சொல்லியிருப்பது அனைத்தும் உங்கள் எண்ணங்களுக்கு என் பதில்கள் தானே தவிர உங்கள் எழுத்துக்கள் மீது உள்ள கருத்து அல்ல. உங்கள் எழுது மேல் என்னக்கு எப்போவும் மதிப்பு உண்டு...பி.கு க்கு...பி.கு... தெளிவா சொல்லிட்டா ஆழம் ஒரு factor எ இல்லைன்னு நினச்சி சொல்லிட்டேன்.. தவறெனின் மன்னிக்கவும்..

iniyavan said...

//பி.கு க்கு...பி.கு... தெளிவா சொல்லிட்டா ஆழம் ஒரு factor எ இல்லைன்னு நினச்சி சொல்லிட்டேன்.. தவறெனின் மன்னிக்கவும்..//

உங்கள் கருத்துக்களை மிக தெளிவாக சொல்லியிருக்கின்றீர்கள். இதற்கு எதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை நண்பா?

என் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பதற்கு நன்றி.

iniyavan said...

//நீங்கள் அவரிட்ம எடுத்து சொல்ல முயற்சி செய்திருக்கலாம்.......//

நீங்கள் சொல்வதும் சரிதான் அபு.

Beski said...

பெண்களைப் பத்தி நமக்கு அவ்வளவா தெரியாது, அதுக்கு முயற்சியும் பண்ணல, வாய்ப்பும் அமையல. கல்யாணம் ஆனா எப்படித்தான் சமாளிக்கப் போறமோன்னு பயமாத்தான் இருக்கு.
சோ, இந்த போஸ்ட்ட மார்க் பண்ணி வச்சிட்டேன், பிற்காலத்துல ரெபரன்ஸ்க்கு பாத்துக்கலாம்ல.
---
//நான் என்ன எழுதுகிறோம் எனத்தெரியாமல், யாருக்கோ எழுத வேண்டியதை அவருக்கு எழுதி//
இதே மாதிரி...
பிசியா இருக்கும்போது யாருக்காவது ஏதாவது ஒரு விசயத்துக்கு போன் பண்ணிருப்பேன், அவர் எடுக்க லேட் ஆகும், இந்தப் பக்கம் வேறு வேலை கூட போய்ட்டு இருக்கும், அதுக்குள்ள யாருக்கு எதுக்கு போன் பண்ணோம்னே மறந்துரும். அடுத்த பக்கம் போன எடுத்து ஹலோனு கேட்டதுக்கப்புறம் யாருக்கு போன் பண்ணோம் என்ன பேசனும்னு தெரியாம முழிப்பேன். அப்புறம் பேரப் பாத்துட்டு, சாரி மறந்துருச்சு, அப்புறம் போன் பண்றேன்னு சொல்லி வச்சிருவேன்.
சில நேரம் எதுக்கு போன் பண்ணோம்னு ஞாபகம் வரவே வராது, ஹி ஹி ஹி...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

எம்.ஞானசேகரன் said...

உங்கள் பதிவுகள் எல்லாமே அருமையாக இருக்கிறது. இன்றுமுதல் நானும் உங்கள் வாசகன்.

எம்.ஞானசேகரன் said...

உங்கள் பதிவுகள் எல்லமே அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். இன்றுமுதல் நானும் உங்கள் வாசகன்.