எங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவுகள். பதிவுலகில் ஒரே சூடு பரக்கும் விவாதங்கள், வெளி உலகிலும் எங்கும் பிரச்சனைகள். இதன் நடுவில் மலேசியாவில் எங்கள் ஊரில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா ஜூலை 16ம் தேதி தொடங்கி, ஜூலை 26 ஆம் தேதி வரை நடந்தது. தினமும் காலையில் அபிசேகம், பூஜைகள். மதியம் யாகம், அபிசேகம், பூஜைகள். இரவு பூஜைகள், பிறகு சாமி வீதி உலா (இங்கே ஆலய ஊர்வலம்). பிறகு அனைவருக்கும் சாப்பாடு என்று பதினொரு நாட்கள் நடை பெற்றது.
இதை இங்கே நான் சொல்லக் காரணம், எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள். நான் இருக்கும் பகுதியில் மிக சில இந்திய குடும்பங்களே இருப்பதால், அனைவரும் அவர்கள் வீட்டு திருவிழா போல தினமும் கோயிலுக்கு வந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு செல்வது மிகவும் ஆச்சர்யமடைய வைத்தது. நம் ஊரில் சாமி தூக்குவது என்பது எல்லோராலும் முடியாத காரியம். ஆனால், இங்கே யார் வேண்டுமானாலும் சாமியை தூக்கி செல்லலாம், பிறகு சாமியை வைத்து நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். தினமும் நிகழ்ச்சிகள் முடிய இரவு 11 மணி ஆகிறது. அனைவரும் அங்கேயே சாப்பிட்டு செல்ல உபயதாரர்கள் தினமும் உணவு வழங்குகிறார்கள். சில சமயம் ஆலய நிர்வாகமே உணவு வழங்குகிறது.
அனைவரும் கட்டுகோப்பாக இருந்து பதினோரு நாள் நிகழ்ச்சியை நடத்தியது என்னை ஆச்சர்ய படுத்திய விசயம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான பூஜை. ஒரு நாள் சகஸ்ர நாம அர்ச்சனை, ஒரு நாள் பஞ்ச முக அர்ச்சனை, ஒரு நாள் பெண்களுக்கான குத்து விளக்கு பூஜை. இப்படி நிறைய. கடைசி நாளைக்கு முதல் நாள் ஆடிப்பூர திருவிழா. அனைவரும் பொங்கல் வைத்து, பால் குடம் எடுத்து, மஞ்சள் நீராடி, அம்மனை சிறப்பித்தார்கள். நான் இங்கே பன்னிரெண்டு வருடங்கள் இருந்தாலும், நான்கு வருடங்களாக அனைத்து நாட்களும் சென்றிருந்தாலும், இந்த வருடம் அனைத்து நாட்களும் சென்று, தினமும் பூஜையில் கலந்து கொண்டு, தினமும் சாமியை தூக்கி, நடனம் ஆட வைத்து, நிகழ்ச்சி முடியும் வரை குடும்பத்துடன் இருந்து, அம்பாளை தரிசித்தது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்த்து.
நான் ஒரு இந்து, அதனால் மதப்பிரச்சாரம் செய்கிறேன் என்று யாரும் எண்ண வேணடாம். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடம் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம். இந்த பதினோரு நாளும் நான் ஏதோ ஒரு உலகத்தில் இருந்ததாகவே உணர்ந்தேன். உலகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. யார் மேலும் கோபம் வரவில்லை. மனம் மிக லேசாக இருந்தது. நன்றாக துக்கம் வந்தது. பேச்சில் ஒரு தெளிவு இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் சந்தோசமாக இருந்தது. காதில் விழுந்த செய்திகள் எல்லாம் நல்லவையாகவே விழுந்தன. மனதில் எந்த ஒரு போட்டி பொறாமை எண்ணங்கள் தோன்றவில்லை. யார் மீதும் எதற்காகவும் காழ்ப்புணர்ச்சி காட்டவில்லை. இதற்கெல்லாம் காரணம் மனம் மிக அமைதியாக இருந்ததுதான். மனம் ஏன் அமைதியானது? கடவுள் பக்தியாலா? இருக்கலாம். கடவுள் இல்லை என்பவர்களுக்கு நான் சொல்லும் பதில், மனம் ஒரே விசயத்தில் லயித்து இருந்ததால், மனம் அமைதியாய் இருந்திருக்கலாம்.
நான் நண்பர்களுக்கு சொல்வது என்னவென்றால், வாய்ப்பு கிடைத்தால், நீங்களும் கோயிலுக்கோ, சர்சுக்கோ, மசூதிக்கோ சென்று முழு மனதுடன், உங்கள் பிரியமான தெய்வங்களை, மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள். நீங்களும் அந்த அற்புதமான சுக அனுபவத்தை பெறுவீர்கள்.
நான் அடிக்கடி சொல்வது போல், தனி மனித அமைதியே உலக அமைதி.
வாழ்க வளமுடன்!.
5 comments:
இன்னும் இரண்டு மூன்று வருஷங்களில் கோவில் இன்சார்ஜுகளுக்குள் சண்டை வராமல் இருக்க அம்மன் அருள்வாராக..
Love all.. Serve all..
//கோயிலுக்கோ, சர்சுக்கோ, மசூதிக்கோ சென்று முழு மனதுடன், உங்கள் பிரியமான தெய்வங்களை, மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள்.//
கஷ்டம்தான்... ட்ரை பண்றேன்.
---
//Cable Sankar said...
இன்னும் இரண்டு மூன்று வருஷங்களில் கோவில் இன்சார்ஜுகளுக்குள் சண்டை வராமல் இருக்க அம்மன் அருள்வாராக..//
ம்ம்ம்ம்.... ஆ! புரிஞ்சு போச்சு.
//ஆனால், இங்கே யார் வேண்டுமானாலும் சாமியை தூக்கி செல்லலாம், பிறகு சாமியை வைத்து நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். தினமும் நிகழ்ச்சிகள் முடிய இரவு 11 மணி ஆகிறது. அனைவரும் அங்கேயே சாப்பிட்டு செல்ல உபயதாரர்கள் தினமும் உணவு வழங்குகிறார்கள். சில சமயம் ஆலய நிர்வாகமே உணவு வழங்குகிறது.
//
எங்க ஊரில் சாமி தூக்குவது பிரச்சனை இல்லை அதோடு ஆசாமிகளையும் சேர்த்துத் தூக்கனும்.
நன்றி கேபிள் சங்கர்
நன்றி கார்த்திக்
நன்றி எவனோ ஒருவன்
நன்றி கோவி.கண்ணன்
Post a Comment