Aug 18, 2009

மறக்க முடியாத நண்பர்கள் - 1

மறக்க முடியாத நண்பர்கள் சிலரை பற்றி பதிவுகளில் அவ்வப்போது பதிந்து வைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். வாழ்க்கையில் நிறைய பேரை சந்திக்கிறோம். ஆனால், சிலர் மட்டுமே நம் மனதில் நீங்காது இடம் பிடித்துவிடுவார்கள். அநத வகையில் என் மனதில் வரும் ஒரு நபர் எங்கள் ஊரில் டீ கடை நடத்திக்கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் நண்பர். அவரை 'பாய்' என்றுதான் நாங்கள் அழைப்போம்.

நாங்கள் படித்து முடித்து வேலையில்லாமல் அலைந்து கொண்டிருந்தபோது எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது பாய் டீ கடைதான். காலையில் எழுந்து பல விலக்கி முடித்தவுடன் நான் போவது பாய்க் கடைக்குத்தான். அங்கே போனவுடன் அன்றைய தினசரி பேப்பரை படிக்க உட்கார்ந்து விடுவேன். சுடசுட டீ போட்டுத்தருவார். டீயை குடித்துக்கொண்டு பேப்பர் படிக்கும் சுகமே தனி. பிறகு ஒவ்வொருவராக வருவார்கள். காலையிலையே அரட்டை கச்சேரி ஆரம்பித்து விடும். மற்ற நண்பர்கள் சிகரட் பிடிக்கையில் நான் திரிவேணி பாக்கு வாங்கி சாப்பிடுவேன். டீ குடித்தவுடன் திரிவேணி பாக்கு சாப்பிடுவது அவ்வளவு அற்புதமாக இருக்கும். பிறகு பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் பெண்களை எல்லாம் தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு கிளம்ப 9 மணி ஆகிவிடும்.

வீட்டிற்கு போய் குளித்து சாப்பிட்டு விட்டு மீண்டும் பாய் கடை வாசம். ஒரு டீ 90 பைசா இருக்கும்போதே நான் காசு கொடுத்து சாப்பிட்டதாக நினைவு இல்லை. எல்லாமே கணக்குத்தான். ஒரு நாள் கூட பணம் (காசு இல்லை?) எப்போ தருவீங்கன்னு கேட்டதே இல்லை. அவ்வளவு நல்ல, பிழைக்கத்தெரியாத மனிதர் அவர். நான் ஏன் பணம் எனக் குறிப்பிட்டேன்? ஒரு டீ 90 பைசாதானே? ஏனென்றால், ஒவ்வொருவரும் ரூபாய் 500, 1000 என கணக்கு வைத்திருந்தோம்.

அதிக நாட்கள் நண்பர்கள், " உலக்ஸ், இன்னைக்கு டீ செலவு உன் கணக்கு" என்பார்கள். யார் கணக்காய் இருந்தால் என்ன? பாயை பொறுத்தவரை ஒரே கணக்குத்தான், பணம் வராத கணக்கு. பாய் கடையில் உட்கார்ந்து தான் வேலைக்கு விண்ணப்பம் அனுப்புவோம். எந்த நேர்காணல் போகும் முன்னும் அங்குதான் எல்லோரும் அமர்ந்து விவாதிப்போம். பாய்க்கு அவ்வளவு கல்வி அறிவு இல்லாததால் அதிகம் எதிலும் கலந்து கொள்ள மாட்டார். வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் நண்பர்கள் பீர் அடிப்பார்கள். அதற்கு கூட பாய் ஒன்றும் சொல்ல மாட்டார்.

" ஏம்பா, அதிகம் சத்தம் வராம பாத்துக்கங்க. வியாபாரம் நடக்கற இடம்" இதுதான் அவரின் அதிக பட்ச பேச்சே? அந்த அளவிற்கு நண்பர்கள் மேல் அதிகம் பாசம் வைத்தவர்.

சில நாட்கள், அவர் சாப்பிட செல்லும் சமயங்களில் என்னை கடையை பார்த்துக்கொள்ள சொல்லுவார். அந்த கல்லா பெட்டி அருகே உட்காரும்போது, "ஏதோ, கடையே நம்முடையது" என்பது போல மனம் சந்தோசம் அடையும். பாய் கொஞ்சம் லேட்டாக வர மாட்டாரா? எனத்தோன்றும்.

சைட் அடிக்கும் பிரச்சனையில் ஆரம்பித்து எல்லாவித பிரச்சனைக்கும் கட்டப்பஞ்சாயத்து பாய் கடையில்தான் நடக்கும். எந்த பிரச்சனையிலும் அவர் தலையிட மாட்டார். அந்த அளவிற்கு நட்பிற்கு மதிப்பு கொடுப்பவர்.

எங்களுடைய எல்லா கவலைகளையும், பிரச்சனைகளையும் அவரிடம் சொல்லுவோம். பதிலோ, அந்த பிரச்சனைகளை எப்படி அணுகுவது என்றோ சொல்லா விட்டாலும், பொறுமையாக கேட்டுக்கொள்வார். ஏனென்றால், அந்த வயதில் நம் பிரச்சனைகளை கேட்க நண்பர்களை விட்டால் வேறு யார் இருப்பார்கள்? பொறுமையாக ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் அவரின் கருத்தினை சொல்வார். நாங்களும் கேட்டுக்கொள்வோம்.

ரம்ஜான் சமயத்தில் எல்லோரும் ரெடியாகி விடுவோம், அவர் வீட்டில் பிரியாணி சாப்பிட. அந்த அளவிற்கு நட்பாக இருப்போம். நான் என் கடனை எல்லாம் திருப்பி கொடுத்து விட்டேனா, இல்லையா? என இன்னும் சரியாக நினைவில்லை. எப்போது கேட்டாலும் அவர் சரியான பதில் தருவதில்லை?

அந்த கடையில் உட்கார்ந்த நண்பர்களில் பலர் பல பதவிகளில் உள்ளார்கள். ஏறக்குறைய 10 வக்கில்கள், ஒரு நிதி அதிகாரி (நான்), ஒரு பேராசிரியர், இன்ஜினியர், இப்படி.

ஆனால், பாய்????

இன்னும் அதே கடையில் அதே மாதிரி டீ போட்டுக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும், அவரை பார்க்கும்போதும் என் மனசு வலிக்கிறது. எங்களையெல்லாம் ஏற்றிவிட்ட ஏணிபோல் அவர்.

ஏதாவது ஒரு விதத்தில் நான் அவர் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும்!!!

9 comments:

vasu balaji said...

நல்ல மனிதர். நினைச்சிப் பார்க்கிறதே பெரிய விஷயம்.

அப்துல்மாலிக் said...

அவருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற அந்த நினைப்பே போதும் தல நீங்க எதையும் மறக்கலே என்பது தெளிவா இருக்கு

ஆமாம் ஏதாவது செய்யுங்க....

சப்ராஸ் அபூ பக்கர் said...

:-)

iniyavan said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்.

iniyavan said...

//ஆமாம் ஏதாவது செய்யுங்க....//

நிச்சயம் நண்பா.

உங்கள் கருத்துக்கு நன்றி அபு.

iniyavan said...

நன்றி சப்ராஸ்.

sulochana srinivasan said...

EVEN NOW YOU ALL CAN DO YR BEST TO HIS FAMILY.LIKE EDUCATING HIS FAMILY HELP BHAI S BUSINESS..
GOD WILL BLESS YOU..

Anonymous said...

dont delay.

T.Vezhavan said...

sir, I read today (24-10-2010) only. It is very interesting, but you do something to that "tea" kadai baai.