Aug 17, 2009

புரிதல்.... - சிறுகதை - பாகம் 2 (நிறைவு)

இந்த வார கிரீடம் பெறும் பதிவராக என்னைத் தேர்ந்தெடுத்த தமிழ்10 நிர்வாகிகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

ஒரு மாதிரி வீட்டிற்கு வந்தவளை அத்தை விசாரிக்க, நடந்த அனைத்தையும் கூறினாள் கீதா. கோபமடைந்த அத்தை அவளை கூட்டிகொண்டு பக்கத்து வீட்டுக்கு போக, அந்த நேரம் வீட்டில் யாரும் இல்லாமல் இருக்க, அத்தை அவனை நாக்கை பிடுங்கி கொள்வது போல் கேள்விகள் கேட்க, அவன் அத்தை காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, " யாரிடமும் சொல்லி விடாதீர்கள்" எனக் கெஞ்சினான். பிறகு வீட்டிற்கு வந்து, மாமா வந்தவுடன் போலீஸுக்கு போகலாமா? என யோசித்துக்கொண்டிருந்த போது பக்கத்து வீட்டில் ஒரே சத்தமாக இருக்க, என்ன? என்று எட்டிப்பார்த்தால், அந்த காமுகன் பயந்து போய், தூக்கில் தொங்கி தன் உயிரை விட்டிருந்தான்.

அன்று அத்தை சொன்னது இன்றும் இவள் நினைவில், " இங்க பாரு கீதா, நடந்தது நடந்து போச்சு. அதை அப்படியே ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு. அவனும் செத்து போய்ட்டான். சாகர வரைக்கும் யார் கிட்டயும் சொல்லாத. நானும் சொல்ல மாட்டேன்". இன்று வரை யாரிடமும் சொல்ல வில்லை. விசயம் தெரிந்த அத்தையும் சென்ற வருடம் தெய்வமாகிவிட்டாள். இருந்தாலும், ரவியை பார்க்கும்போதெல்லாம், இவளுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே இருந்தது. " தான் தகுதியானவள் தானா?" என்று அடிக்கடி தன்னையே கேட்டுக்கொண்டாள். அப்படியே பழைய நினைவை அசைப்போட்டவள், இன்று இரவு எப்படியும் ரவியிடம் சொல்வதென்று முடிவெடுத்து விட்டாள். இவ்வளவு அன்பாக இருக்கும் கணவனிடம், உண்மையை மறைக்கக் கூடாது என முடிவெடுத்தாள். இரவுக்காக காத்திருக்க தொடங்கினாள்.

இரவு ருமிற்குள் ஒரு பதட்டத்துடனே நுழைந்தாள். உடம்பு மெல்ல நடுங்கியது. ரவிக்கு மிகவும் பிடித்த நைட்டி அணிந்திருந்தாள். மெல்ல இயல்பு நிலைக்கு வர முயற்சித்தாள். ரூமிற்கு நுழைந்தவள் ரவியைப் பார்த்தாள். ஏதோ ரவியும் ஒரு மூட் அவுட்டில் இருப்பது போலவே தெரிந்தது. சொல்லலாமா, வேண்டாமா? என யோசித்தவள் இன்று சொல்லிவிடலாம என ஒரு முடிவுடன் ரவியை நெருங்கினாள். கட்டில் அருகே வந்தவளை இழுத்து அணைத்தான் ரவி.

"ஏங்க, உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்ங்க"

" நான் கூட உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்னு ரொமப நாள நினைச்சிட்டுருக்கேண்டா. அதை சொன்னா எப்படி நீ எடுத்துப்பன்னு தெரியல, அதான் யோசிச்சேன். அதான் இது வரை சொல்லலை. ஆமா, நீ என்ன என் கிட்ட சொல்லணும்?"

" நீங்க முதல்ல சொல்லுங்க, அப்புறம் நான் சொல்லறேன்"

" தங்கம் நான் சொல்லரத நினைச்சு என்ன தப்பா நினைக்கக்கூடாது. உன் கிட்ட எந்த உண்மையையும் மறைக்க விரும்புல"

" பரவாயில்ல, சொல்லுங்க. நான் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டேன்"

" கண்ணம்மா, நான் காலேஜ் படிச்சப்போ கவிதானு ஒரு பொண்ண உயிருக்கு உயிரா காதலிச்சேண்டா. நாங்க சுத்தாத இடம் இல்லை. நாங்க கல்யாணம் பண்ணரதுனு ஒரு முடிவுல இருந்தோம். ஆனா, அம்மாவுக்கு ஏன்னோ அவளை அந்த அளவுக்கு புடிக்கலை. இருந்தாலும் சமாளிச்சுக்கலாம்னு நாங்க பழகிகிட்டு இருந்தோம். அப்போதான் அந்த தப்பு நடந்துடுச்சு"

" என்ன தப்பு?" - என்று ஒரு நடுக்கத்துடன் கேட்டாள் கீதா.

" கண்ணம்மா, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து குற்றாலம் டூர் போனோம். அருவில குளிச்சோம். பின்னாடி ரொம்ப நேரம் ஆயிட்டதுனால ஒரு ரூம்ல தங்குனோம். அன்னைக்கு இருந்த சூழ்நிலை, நாமதானே கல்யாணம் பண்ணிக்க போறோம் அப்படிங்கற எண்ணத்துல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அன்னைக்கு இரவு தப்பு பண்ணிட்டோம். ஆனா, அன்னைக்கு ஒரு நாள் தான். அதுக்கு அப்புறம் எதுவும் நடக்குல. ஆனா, அதுக்கு பிறகு சில பல காரணத்துனால அவ என்னை விட்டு பிரிஞ்சு போய் வேறு ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. நான் வாழ்க்கையை வெறுத்து கல்யாணமே செய்ய வேண்டாம் என நினைத்து அலைந்து கொண்டிருந்த நிலையில்தான் உன்னை பார்த்தேன். பிறகு மனம் மாறி கல்யாணம் செய்து கொண்டேன். ஆனால், அந்த ஒரு முறைதான் தவறு செய்தேன். இனி அப்படி நடக்காது. சாகும் வரை எனக்கு நீதான். இது உன் மேல் சத்தியம். உன்னை போல் ஒரு தேவதை என் வாழ்வில் கிடைக்கப்போவது தெரிந்து இருந்தால் அன்று அப்படி நடந்திருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுடா செல்லம்" என்று கண் கலங்கிய ரவியை பார்த்த கீதா,

" போனது போகட்டும்ங்க. அதையே நினைச்சு வேதனைப்படாதீங்க. குழப்பம் இல்லாம சந்தோசமா இருங்க. நான் உங்களுக்கு துணையா எப்பவும் இருப்பேன். இனி நம் வாழிவில் சந்தோசம் மட்டுமே இருக்கட்டும்" என்று மிகத்தெளிவுடன் கூறியவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான் ரவி.

" ஆமா, நீ ஏதோ என் கிட்ட சொல்லணும்னு சொன்னியே?"

" அது ஒண்ணும் இல்லைங்க. நாளைக்கு குல தெயவம் கோயிலுக்கு போலாமா இல்லை அடுத்த வாரம் போலாமா?" ன்னு கேட்க வந்தேன்.

" அதுக்கென்ன நாளைக்கே போலாண்டா"

கீதாவுக்கு தான் ரவியிடம் சொல்ல வந்த விசயத்தை ஏனோ சொல்லத் தோன்றவில்லை.

No comments: