சிறு வயதிலிருந்து புத்தகங்கள் படிப்பது என்றால் அப்படி ஒரு ஆனந்தம். அப்பா அம்மாவுக்கு தெரியாமல் ஆனந்த விகடன், குமுதம் என ஆரம்பித்து, பிறகு நாவல்கள் படிப்பது என விரிந்தது என் வாசிப்பு அனுபவம். பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் மகாபாரதம், ராமாயணம் என படித்தேன். அதிலும் மகாபாரதம் படித்தால் வீட்டில் திட்டுவார்கள். ஏனென்றால் சண்டை வருமாம். ராமாயணமும், மகாபாரதமும் படிக்க வேண்டும் எனத் தோன்றியதே எங்கள் ஊர் புலவர் திரு கீரன் அவர்கள் சொற்பொழிவை கேட்டுத்தான். அவர் பேச்சை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அப்படி இருக்கும் அவருடைய பேச்சு.
பிறகு சுஜாதா அறிமுகம் ஆனார். பிறகு சுஜாதா பித்து பிடித்து அலைந்தேன். கையில் எப்போதும் அவருடைய ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும். அவர் கதைகளை படித்துவிட்டு நாமும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து நிறைய எழுதினேன். சில நன்றாக வந்தது. சில சரியாக வரவில்லை. "உங்களுக்கு நிறைய அனுபவம் வேண்டும். நிறைய படிக்க வேண்டும் என எல்லோரும் சொன்னதால் நிறைய படித்தேன். சுஜாதா ஒரு முறை பஸ்ஸில் செல்லும்போது அவர் எழுதிய பாக்கட் நாவலை யாரோ படித்து முடித்தபின் பஸ்ஸிலிருந்து தூக்கி போட்டுவிட, அதிலிருந்து அவர் பாக்கட் நாவலில் எழுதுவதை நிறுத்தி விட்டார். அன்றிலிருந்து பாக்கட் நாவல் படிப்பதை நான் நிறுத்தினேன். அந்த அளவிற்கு சுஜாதா பைத்தியம்.
பாலகுமாரன் அறிமுகத்தின் பிறகு நிறைய சிந்திக்க ஆரம்பித்தேன். சுஜாதா அவர்கள் கதையை விறு விறு என நகர்த்திச் செல்வார். பாலகுமாரனின் அணுகுமுறை வேறு. ஒருவன் ஆபிஸிலிருந்து வீட்டுக்கு வருவதைப் பற்றி எழுதினால் அவன் வரும் வழியில் பார்க்கும் அனைத்து விசயங்களையும் ஒரு பத்து பக்கத்துக்காகவாவது எழுதுவார்.
சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் இப்படி எல்லா எழுத்தாளர்களையும் படிக்கும் நேரத்தில் இலக்கியம் பக்கமும் ஆர்வம் ஏற்பட்டு படிக்க முற்படுகையில் கல்வி குறுக்கிட்டது. நான் படித்த ப்ரொபசனல் கோர்ஸ் எல்லாம் படிக்கவே தினமும் பல மணி நேரங்கள் செலவிட வேண்டி வந்தது. அப்படியே புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் மெல்ல மெல்ல என்னை விட்டு போவதுபோல் இருந்தது. கொஞ்சம் கொஞ்சம் வார பத்திரிக்கைகள் மட்டும் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். படித்து முடித்து வேலைக்கு சேர்ந்தவுடன் என் படிப்பு ஆர்வத்தையும், எழுத்து ஆர்வத்தையும் தொடர நினைத்தேன். ஆனால், அங்கும் முடியவில்லை. ஏனென்றால், ஒரு கம்பனியில் சேர்ந்தவுடன் நம்மை நிலை நிறுத்திக்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டி வந்தது.
நன்றாக உழைத்து ஒரு நிலையை அடைந்து கல்யாணமும் ஆனவுடன் குடும்பத்திற்கு என நிறைய நேரம் செலவிடும்படி ஆகிவிட்டது. மலேசியா வந்தவுடன் வார பத்திரிக்கை படிப்பதும் அறவே நின்று போனது. என்னுடைய எழுத்து ஆர்வமும், படிப்பு ஆர்வமும் இப்படியே 12 வருடம் வீணாகிப்போனது. அதற்காக ஒரேடியாக ரொம்பவும் வருத்தப்பட முடியாது. ஏனென்றால் பொருளாதர சூழ்நிலை நல்ல நிலையில் உயர்ந்தது என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
கடவுள் புண்ணியத்தில் இந்த ப்ளாக் அறிமுகமானதும் ஏதோ ஓரளவு எழுதி என்னால் என் மனதை சந்தோசப்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், இங்கே என்ன வருத்தம் என்றால், என் படிக்கும் பழக்கம் சுத்தமாக போய்விட்டது. ஒவ்வொரு முறை கோலாலம்பூர் போகும்போதும் நிறைய வார புத்தகங்கள் வாங்கி வருகிறேன். அவைகள் மட்டுமே தற்போது நான் படிக்கும் புத்தகங்கள். சென்ற முறை இந்தியா சென்றபோது 2000 ரூபாய்க்கு புத்த்கங்கள் வாங்கி வந்தேன். சில புத்தகங்கள் நன்றாக இருந்தன. சில என்னால் படிக்க முடியவில்லை. ஓசோ எழுதிய "பகவத் கீதை ஒரு தரிசனம்" மூன்று பாகம் வாங்கி வந்தேன். என்னால் ஒரு 15 பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. படிக்க ஆரம்பித்தால் ஏகப்பட்ட சிந்தனைகள் வருகிறது. சிந்து பைரவி படத்தில் சுலக்சணா பாட்டு கற்றுக்கொள்ளும்போது, கான்ஸ்சண்ட்ட்ரேசன் இல்லாமல் தவிப்பாரே அந்த நிலையில்தான் நான் இப்போது.
பரிட்சைக்கு படித்து படித்து என்னால் பாட புத்தகங்களையும், மற்ற புத்தகங்களையும் வேறு படுத்தி பார்க்க முடியவில்லை. பாடபுத்தகங்கள் போலவே மற்ற புத்தகங்களையும் படிக்கும்படி ஆகிறது. ஏறக்குறைய எந்த புத்தகம் படித்தாலும் பாடப்புத்தகங்கள் போலவே மனப்பாடம் ஆகிவிடுகிறது. அதிகம் பரிட்சைக்கு படித்ததால் இன்னும் அதேவித மன நிலையே இருக்கிறது.
நிறைய படித்தால் மட்டுமே நல்ல எழுத்தாளனாக முடியும் என்ற உண்மை எனக்குத் தெரியாமல் இல்லை. முழு நேர எழுத்தாளனாக வேண்டும் என்று எந்த எண்ணமும் இல்லை. அதே சமயத்தில், இனி எழுத்துலகை விட்டு என்னால் விலக முடியாது என்பது மட்டும் நன்றாக புரிகிறது. நேரம் இல்லை அதனால் என்னால் படிக்க முடியவில்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் எங்கள் MD எப்போதும் ஏதேனும் ஒரு புத்த்கத்துடனே இருப்பார். கொஞ்ச நேரம் கிடைத்தால் கூட படிக்க ஆரம்பித்துவிடுவார். காரில் செல்லும்போது, விமானத்தில் செல்லும்போது.. அவர் ஒரு நிமிடம் கூட வீணாக்கி நான் பார்த்ததில்லை.
எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் போகவில்லை. ஆனால் எங்கிருந்து நான் ஆரம்பிப்பது? எந்த புத்தகத்திலிருந்து தொடங்குவது? நண்பர்கள் யாரேனும் சொல்வார்களேயானால் நான் மிகுந்த நன்றியுடையவனாயிருப்பேன்.
நண்பர்களின் கருத்துக்களை பின்னூட்டம் வாயிலாக எதிர்பார்க்கிறேன்.
8 comments:
அப்படியே என் உணர்வுளைப் பிரதிபலிப்பது போலிருந்தது...இருந்தாலும் நன் இப்போதும் கிடைத்தவற்றையெல்லாம் படிததுக் கொண்டிருக்கிறேன்
நமக்கும் இதே பொலப்பம்தான் தல
வேலை சம்பந்தப்பட்டதை படிக்க கூட ஒரே குழப்பமா இருக்கு
நம்மளையும் ஒருத்தர் இப்படித்தான் சொல்லி உசுப்பேற்றி விட்டுட்டார். புத்தகங்கள் படித்தால்தான் நம்ம எழுத்து நல்லா வருமாம்.
எப்படி ஆரம்பிக்கனும்னு எல்லாம் நான் யோசிக்கல. ஆரம்பிக்கனும், அவ்வளவுதான்னு, பக்கத்துல இருக்குற கிழக்குப் பதிப்பகம் போனேன். கிமு-கிபி(மதன்), விஜயகாந்த்(யுவகிருஷ்னா), அம்பானி, சேகுவேரா, இரண்டாம் உலகப் போர்... இப்படி கண்ணில் பட்டதைத் தூக்கிவந்துவிட்டேன். இதெல்லாம் பிடிக்குமா பிடிக்காதான்னு கூட யோசிக்கல.
ஆனா படிக்கிற நேரம்தான் பிரச்சனையாயிற்று. இதுக்குன்னு கொஞ்ச நேரம் ஒதுக்கவேண்டியதாகிறது. ஏதோ சில பயணங்களினால் 3 புத்தகங்கள் படித்தாயிற்று. இப்போ அதுல வர்ற சந்தேகங்களைப் போக்க இன்னும் சில புத்தகங்களைப் படிக்கத் தோனுகிறது...
---
அண்ணே, எப்படி ஆரம்பிக்கிறதுன்னு யோசிக்கிறத விட, மொதல்ல ஏதாவது ஒன்ன படிக்க ஆரம்பிங்க. அப்புறம் போய்கிட்டே இருக்கும்.
ரொம்ப நாள் ஆனதால நம்ம டேஸ்ட் மாறியிருக்கலாம், முன்பு நமக்கு பிடிக்காத புத்தகங்கள் கூட இப்போது மிகவும் பிடிக்கலாம்...
---
உங்கள் கருத்துக்கு நன்றி அன்புடன் அருணா.
//வேலை சம்பந்தப்பட்டதை படிக்க கூட ஒரே குழப்பமா இருக்கு//
ஓ, நீங்களும் நம்பள மாதிரி தானா?
உங்கள் வருகைக்கு நன்றி அபு அப்ஸர்.
//அண்ணே, எப்படி ஆரம்பிக்கிறதுன்னு யோசிக்கிறத விட, மொதல்ல ஏதாவது ஒன்ன படிக்க ஆரம்பிங்க. அப்புறம் போய்கிட்டே இருக்கும்//
நீங்க சொன்னதுதான் சரி.
எல்லாத்தையும் படிச்சு முடிங்க. நான் தீபாவளிக்கு வரும்போது உங்க கிட்ட இருந்து எல்லா புத்தகத்தையும் வாங்கிக்கிறேன்.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'புத்தகங்கள் வாசிக்கும் அனுபவம்...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th August 2009 11:44:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/96800
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
நீங்கள் புத்தகங்கள் படிப்பதற்கு முன்ன்னர் உங்களுக்கு எதில் நாட்டம், விருப்பம் என்பதை ஒரு தாளில் எழுதிக்கொள்ளுங்கள்.
சிறுகதை
நாவல்
அரசியல்
கவிதை
மரபு இலக்கியம்
நவீன இலக்கியம்
ஆன்மீகம்
உலக இலக்கியம்
இப்படித் தலைப்பிட்டு அதன் கீழ் ஆசிரியர்/எழுத்தாளர்களின் பெயர்களை எழுதுங்கள்.
பிறகு அந்த எழுத்தாளர்கள் எழுதியுள்ள நூல்களின் பட்டியலைச் சேகரித்து எழுதுங்கள்.
பிறகு அந்த நூல்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள விமரிசனங்களைச் சேகரியுங்கள்.
ஓரளவு புரிபுடும்.
கிருஷ்ணமூர்த்தி
Post a Comment