Aug 25, 2009

மனித நேயம்.." உங்களுக்கு இந்த வேலை பிடிச்சிருக்கா?"

" புடிச்சிருக்கு சார்"

" கஷ்டமா இல்லை?"

" ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இப்போ பழகிடுச்சு"

" ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம்னு என்னைக்காவது நினைச்சுருக்கீங்களா?"

" இல்லை சார். நம்பளால பல உயிர்களை காப்பாற்ற முடியுதுனு நினைக்கும்போது சந்தோசமா இருக்கு சார்"

" இந்த வேலைல எப்போதுமே ஒரு பதட்டம். ஒரே சோகம், அழுகை இதெல்லாம் இருக்குமே? எப்படி சமாளிக்கறீங்க"

" அது எதுவுமே என்னை இப்போ பாதிக்கறது இல்ல சார். நான் பாட்டுக்கும் என் வேலைல கவனமா இருப்பேன்"

" அதையும் மீறி சில சமயம் காப்பாற்ற முடியாமல் போகும்போது, எல்லோரும் அழும்போது எப்படி உணர்வீர்கள்"

" அவர்கள் முன்னால் எந்த உணர்ச்சியும் காட்ட மாட்டேன். ஆனால் வீட்டுக்கு வந்து தனியாக மனம் ஆறுதல் அடையும் வரை அழுவேன் சார்"

இந்த உரையாடல் எனக்கும் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் இடையே நடந்தது. உலகத்தில் எத்தனையோ வேலைகள் உள்ளன. அதில் மிகவும் கஷ்டமான வேலைகளுள் ஒன்று ஆம்புலன்ஸ் டிரைவர் வேலை. எந்த நேரத்தில் கூப்பிடுவார்கள் என்று தெரியாது. ஆனால் அவர்கள் மனம் எப்போதும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். எப்போதாவது ஏதோ காரணங்களால் வீட்டில் யாராவது அழுதால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. சத்தம் போடுவேன். யார் அழுதாலும் பிடிக்காது. ஆனால், ஆம்புலன்ஸ் டிரைவரை நினைத்துப் பாருங்கள். எப்போதுமே அவருக்கு அழுகை ஓசை காதில் கேட்டுக்கொண்டுதான் இருக்கும்.

ஒரு இடத்தில் ஆக்ஸிடெண்ட் என்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தவுடன் அனைத்து வேலைகளும் டிரைவரும் செய்ய வேண்டும். அந்த இடத்தில் அடிபட்டவரின் உறவினரோ அல்லது நண்பரோ இருந்து விட்டால் அவ்வள்வுதான். அழுது கூப்பாடு போட்டு, அனைவருக்கும் தகவல் சொல்லி.... அனைத்து செய்கைகளும் ஆம்புலன்ஸ் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி விடக்கூடாது. மலேசியாவில் தினமும் நிறைய ரோட் ஆக்ஸிடெண்ட் நட்க்கிறது. ஆம்புலன்ஸ் சைரன் கேட்காத நாட்கள் மிகக்குறைவு. அதுவும் இந்த ரம்ஜான் விடுமுறை நாள்களில் தினமும் ஒரு 20 பேராவது ரோட் ஆக்ஸிடெண்டில் சாவார்கள்.

நான் அடிக்கடி நினைப்பதுண்டு. இந்த மாதிரி அவசரத்தில் வேன் ஓட்டும் டிரைவரின் மன நிலை எப்படி இருக்கும். பதட்டமாக இருக்குமா? அவரால் ஓட்டும்போது பாட்டு கேட்கமுடியுமா? அவர் குடும்பத்தை பற்றி நினைக்க முடியுமா? அவர் மனம் லேசாக இருக்குமா? இல்லை சாதாரணமாக இருக்குமா? இந்த சிந்தனைகளின் விளைவாகத்தான் நான் மேலே கேட்ட கேள்விகள்.

அப்பா கிட்டத்தட்ட 15 நாள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்தார்கள். டாகடர்கள் 'அவ்வள்வுதான் இனிமேல் ஒன்றும் முடியாது' என கைவிரிக்க நான் மலேசியாவில் இருந்து சென்னை வரும் வரை காத்திருந்தார்கள். நான் போனவுடன் கைவிரித்தார்கள். பிறகு உடனே சென்னையிலிருந்து லால்குடி போக நான் தான் ஆம்புலன்ஸ் தேடி ஏற்பாடு பண்ணினேன். பிறகு அனைவரும் ஒரு ஆம்புலன்ஸிலும், நானும் எனது குடும்பமும் ஒரு காரிலும் சென்றோம். போகும்போது அங்கங்கே நிறுத்தி காபி, டீ குடித்து டிரைவருக்கும் வாங்கி கொடுத்தோம். அருமையாக பொறுமையாக ஓட்டிச்சென்றார். இரவு வீட்டிற்கு சென்றோம்.

பணம் கொடுக்கும்போது அப்பா டிரைவரை கூப்பிட்டு, " என்னய்யா வண்டி ஓட்டுன நீ. தூக்கி தூக்கி போட்டுச்சு. ஒன் வண்டில மனுசன் வருவானா? ஒழுங்கா ஓட்டிட்டு வரதில்லையா" அப்படின்னு திட்டினார்.

டிரைவர் பொறுமையாக, " சாரி சார். மன்னிச்சுக்கங்க" என்று கூறினார்.

நான் டிரைவரைக்கூப்பிட்டு, " கோபப்படாதீங்க. அப்பாக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். நீங்க எப்படி ஓட்டி வந்தீங்கன்னு எனக்குத்தெரியும்" என்றேன்.

அதற்கு உடனே அவர், " என்ன தம்பி இதுக்கு போய் மன்னிப்பு எல்லாம் கேட்கறீங்க. அவுரே முடியாம வந்தார். அவர் கஷ்டம் அவருக்கு. உடம்புக்கு முடியாம வர ஒருத்தர் இந்த மாதிரி ரோட்டுல வந்தா கோபம் தான் வரும். உங்கப்பா பரவாயில்லை தம்பி. சாதாரணமாத்தான் திட்டுனார். எனக்கு நோயாளிங்க திட்டுரது அவ்வளவு கஷ்டமா இருக்காது. ஏன்னா, அவங்களே கஷ்டத்துல இருப்பாங்க. சில சமயம் கூட வரவங்க அவங்க ஆத்திரத்த என் மேல காமிப்பாங்க. அப்பத்தான் கஷ்டமா இருக்கும். நான் என்னதான் பணத்துக்காக வேலை செஞ்சாலும், இதை ஒரு சேவை மனப்பான்மையுடன் தான் செய்யுறேன். அப்பாவை நல்லா பார்த்துக்கங்க" என்றார்.

அன்னையிலிருந்து எந்த ஆம்புலன்ஸை பார்த்தாலும் அந்த டிரைவர் ஞாபகம்தான் வரும்.

6 comments:

அப்துல்மாலிக் said...

யாருமே நினைத்திடாத ஒரு விடயத்தை எடுத்து எழுதிருக்கீங்க‌

நீங்கள் கேட்ட அனைத்துக்கேள்விகளும் உண்மையே

அவர்கள் சில சமயம் கடவுளாக கூட (ஒரு உயிரை காப்பாற்றும்போது)உறவினர்களால் பார்க்கப்படுவார்கள்

venkat said...

மனித நேயமிக்க டிரைவர்
வாழ்க பல்லாண்டு

தமிழ். சரவணன் said...

இதுபோல் மனிதநேயம் மிக்கவர்கள் மத்தியில் நாம் மருத்துவமனை மார்சுவரியில் இருந்து பிணத்தை வாங்கும்பொழுது -- ஐயோ அந்த கொடுமையை சொல்லி மாளாது இவர்களும் மனிதப்பிறவியா என்று நினைக்கத்தோன்றும்...

iniyavan said...

//யாருமே நினைத்திடாத ஒரு விடயத்தை எடுத்து எழுதிருக்கீங்க‌//

ரொம்ப நன்றி அபுஅப்ஸர்.

iniyavan said...

//மனித நேயமிக்க டிரைவர்
வாழ்க பல்லாண்டு//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெங்கட்.

iniyavan said...

//இதுபோல் மனிதநேயம் மிக்கவர்கள் மத்தியில் நாம் மருத்துவமனை மார்சுவரியில் இருந்து பிணத்தை வாங்கும்பொழுது -- ஐயோ அந்த கொடுமையை சொல்லி மாளாது இவர்களும் மனிதப்பிறவியா என்று நினைக்கத்தோன்றும்...//

உண்மைதான் தமிழ்சரவணன்.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி