Aug 26, 2009

இப்படியும் சில மனிதர்கள்!

இந்த சம்பவம் நடந்து பன்னிரண்டு வருடம் இருக்கும். நான் ராணிப்பேட்டையில் இருந்த நேரம். என்னுடன் சில நண்பர்கள் தங்கியிருந்தார்கள். நான் சில பேருக்கு சில நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுத்து இருந்தேன். சில பேர் இன்னும் அதே நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள். சிலர் வேறு வேலைக்கு சென்று விட்டனர். அப்போது எனக்கு மலேசியாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்க அனைவருக்கும் ட்ரீட் கொடுத்துவிட்டு, எல்லோரிடமும் சொல்லி விட்டு செல்வதற்காக என் ஊரான லால்குடிக்கு சென்றேன். அப்போது ஒரு நண்பர் வீட்டிற்கு நான் மலேசியா போவதை சொல்ல போயிருந்தேன். அந்த நண்பருக்கும் நான் ராணிப்பேட்டையில் வேலை வாங்கி கொடுத்து இருந்தேன். அப்போது அந்த நண்பர் ராணிப்பேட்டையில் இருந்ததால், அவர் அப்பா மற்றும் அம்மா வீட்டில் இருந்தார்கள். அவர் அப்பா ஒரு வயதானவர். அவர்கள் குடும்பத்தினருடன் பேசி முடித்து விட்டு கிளம்பும் போது அவர் அப்பா என்னிடம் கூறினார்,

" ஏண்டா, நீதான் மலேசியா போற இல்லை. உன் வேலை காலியாத்தானே இருக்கும். அதை என் பையனுக்கு வாங்கி தரக் கூடாதா?"

அவர் பையன் முடித்திருந்தது ஏகப்பட்ட அரியருக்கு பின் ஒரு டிகிரி. என் படிப்பு? வேண்டாம் விடுங்க. நான் அப்போது இருந்த வேலை அசிஸ்டண்ட் மேனஜர். அவர் பையன் வேலை பார்த்தது வேறு கம்பனியில் ஒரு சாதாரண சூப்ரவைஸர். அவர் கேட்ட கேள்வியை பாருங்க!!!

எனக்கு வந்ததே கோ......

**************************************

எங்கள் ஊரில் கோபால் அய்யர் என்று ஒருத்தர் உண்டு. அவர் நல்ல மனிதர். ஆனால் சில சமயம் அவர் கேட்கும் கேள்விகள் எரிச்சலை உண்டு பண்ணும். நான் அவ்வளவாக அவருடன் பேசுவதில்லை. நான் லீவில் ஒரு முறை இந்தியா சென்றபோது, அவர் என்னிடம் இப்படி கேட்டார்,

" என்னடா மலேசியா எப்படி இருக்கு? நல்ல வேலை பார்க்குறியா? என்ன சம்பளம் ஒரு 10000 ரூபாய் இருக்குமா?"

"ஆமா, என் ஒரு நாள் சம்பளம்" என சொல்ல நினைத்து அடக்கிக்கொண்டேன். அவர் அப்படிக் கேட்டவுடன் எனக்கு வந்ததே கோ......

**************************************

என்னோட சித்தப்பாவோட நண்பர் ஒருவர். அதே போல் ஒரு நாள் வீட்டிற்கு வந்தார். அவர் கொஞ்சம் சுமாரான வசதி படைத்தவர். அவர் பிள்ளைகள் எல்லாம் அப்படி ஒன்றும் பெரிய வேலையில் இல்லை. என்னிடம் பேசிகொண்டிருந்தவர் திடீரென கேட்டார்,

" மலேசியால வேலை எல்லாம் கஷ்டமா இருக்குமே? என்ன ஷிப்ட் வேலையா? ஓவர் டைம் எல்லாம் பார்த்துதான் நீங்க நிறைய சம்பாரிக்கணும். அப்படித்தானே?"

இந்த இடத்துல ஒரு சுயதம்பட்டம். என் முதல் வேலையே ஆபிஸர் கேடர்தான். நான் அசிஸ்டண்ட் ஆகவோ, கிளர்க் ஆகவோ வேலை பார்த்ததே இல்லை. என் வாழ்நாளில் ஓவர் டைம் செய்து பணம் ஈட்டும் சூழல் ஏற்படவே இல்லை. ஏனென்றால் நான் ஆரம்பத்திலிருந்தே ஓவர் டைம் பார்க்கும் கேடரில் வேலை பார்த்ததே இல்லை.

அதனால் அவர் அப்படி கேட்டவுடன், எனக்கு வந்ததே கோ......

**************************************

சொந்த வீடு கிராமத்தில் இருந்தாலும், 1997 வரை வாடகை வீட்டில் குடியிருந்தோம். 1997ல் இருந்து 2003 செப்டம்பர் வரை அத்தை வீட்டில் குடியிருந்தோம். பல லட்சம் செலவு செய்து நான் வீடு கட்டி, நிறைய செலவு செய்து கிரஹப்பிரவேசம் வைத்து, சொந்த வீட்டிற்கு 2003 அக்டோபரில் குடி போனோம். நாங்கள் அங்கு தங்குவது வருடத்தில் சில நாட்கள்தான். அம்மாவுடன் மற்ற உறவினர்கள் அங்கே தங்கி உள்ளார்கள். அப்போது ஒரு பெண்மணி வீட்டிற்கு வந்தார். அவர்கள் நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டிற்கு அருகில் இருந்தவர். ரொம்ப ஏழை. இப்போதுதான் அவர்கள் பையன் சம்பாரிக்க ஆரம்பித்துள்ளான். அவர்கள் வீட்டை சுற்றி பார்த்துவிட்டு கேட்ட கேள்வி,

" ஏங்க இந்த வீட்டிற்கு எவ்வளவு வாடகை?"

அவர் அப்படி கேட்டவுடன், எனக்கு வந்ததே கோ......

**************************************

சமீபத்தில் மலேசியாவில், எங்கள் ஊரில் ஆடிப்பூரம் திருவிழாவில், தினமும் சாமி தூக்கும்போது ஒரு நபரை சந்தித்தேன். 11 நாட்களில் நல்ல பழக்கம் ஆனார். நான் இன்னொருவரிடம் தீபாவளிக்கு ஊருக்கு போவதைப் பற்றி பேசியதை கவனித்த அவர், " வருடத்திற்கு எத்தனை முறை ஊருக்கு போவீங்க" என்றார்.

"இரண்டு முறை"

" தனியாவா இல்லை குடும்பத்தோடையா?"

" குடும்பத்தோடத்தான்"

" நீங்க வாங்கற சம்பளத்துக்கு கட்டுபடியாகுமா?"

இங்க நீங்க கவனிக்க வேண்டியது என்னவென்றால், நான் என்ன வேலை பார்க்கிறேன் என்றோ, என்ன சம்பளம் என்றோ எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவரிடம் கூறவே இல்லை. ஆனால், அவர் தன் சம்பளத்தைப் பற்றி கூறியபோது அதிர்ந்தேன். அவர் சம்பளம் வெறும் 700 ரிங்கட். அவர் இந்தியா போய் குடும்பத்தை பார்த்து 5 வருடங்கள் ஆகிறது. அதன் பிறகு நான் "ஏன் இந்த சம்பளத்தில் இந்தியாவில் வேலை பார்க்க முடியாதா?" என்று கேட்டதோ, நான் அவருக்கு அட்வைஸ் செய்ததனால் என்னிடம் பேசுவதை நிறுத்திகொண்டதோ இந்த பதிவிற்கு தேவை இல்லாத விசயம்.

ஆனால், " நீங்க வாங்கற சம்பளத்துக்கு கட்டுபடியாகுமா?" என அவர் கேட்ட பிறகு, எனக்கு வந்ததே கோ......

**************************************

மேலே கூறிய அனைத்து சம்பவங்களிலும் எனக்கு முதலில் கோபம் ஏற்பட்டாலும் பிறகு சிரிப்புத்தான் வந்தது. ஆழ்ந்து இந்த பிரச்சனைகளை அலசினோமானால், ஒரு உண்மை தெரியும். ஒருவர் அடுத்தவரிடம் இதே போல் கேள்வி கேட்கும்போது அவர்கள் அவரவரின் நிலைகளிலிருந்தே கேள்விகள் கேட்கிறார்கள். அடுத்தவன் ஏற்கனவே முன்னேறி விட்டான் என்றோ, அவன் உயர்ந்த நிலையில் இருக்கிறான் அல்லது இருப்பான் என்றோ யாரும் நினைப்பதில்லை. சிலர் தெரிந்தே தங்களின் இயலாமையாலும், ஒரு தாழ்வு மனப்பான்மையாலும் வேண்டுமென்றே அடுத்தவர்களின் வெற்றியை ஒத்துக்கொள்வதே இல்லை. இவ்வாறு தன் நிலையை ஒத்துக்கொள்ளாதவர்கள் பிள்ளைகளோ, உறவினர்களோ எப்படி நல்ல நிலைக்கு வர முடியும்?

பல முறை பெயில் ஆன, தட்டுத்தடுமாறி டிகிரி முடித்த பையனை அவனின் தந்தை ஒரு நிறுவனத்தில் அசிஸ்டண்ட் மேனேஜர் வேலை காலியானதும், ''என் பையனை அந்த வேலைக்கு சேர்த்து விடு?'' என்று சொல்ல வைத்தது எது?

அவரின் அறியாமையா? இல்லை தன் பையனின் தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை இல்லாமையா?

**************************************

12 comments:

Cable சங்கர் said...

நல்லா இருந்திச்சி உங்க பதிவு.. உலகநாதன்.

iniyavan said...

//நல்லா இருந்திச்சி உங்க பதிவு.. உலகநாதன்//

ரொம்ப நன்றி பாஸ்.

கலையரசன் said...

அவர்களுடைய அறியாமைதான் + படிப்பறிவின்மை உலகநாதன். நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் நடுத்தர வர்கத்துக்கு கீழே உள்ளவர்களை பற்றி. அவர்களுக்கு உங்களது படிப்பும், நீங்கள் சம்பாதிப்பதும் தெரியாமல் இருந்திருக்கலாம்.. அல்லது, நீங்கள் முன்பு உள்ள நிலையையே அவர்கள் மனதில் கொண்டிருக்கலாம்.

என்ன இருந்தாலும் அறியாமல் அதுபோல் கேள்வி கேட்பது தவறுதான். நாம்.. படித்த நல்ல பதவியில் உள்ளவர்கள், நாம்தான் அவர்களை புரிந்துகொள்ள வேண்டும்.

ஓட்டு போட்டாச்சு!!

iniyavan said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கலையரசன்.

இராகவன் நைஜிரியா said...

கேள்விகள் கேட்பது பல சமயம் அறியாமையால் தான் என நான் நினைக்கின்றேன். பல சமயங்களில் நான் என்ன வேலை செய்கின்றேன் என்று யாரிடமும் சொல்வது கிடையாது. இது மாதிரி கேட்கும் போது சிரித்துவிட்டுப் போய்விடுவேன்.

கல்லடிப் பட்டாலும் கண்ணடிப் படக்கூடாது என்பார்கள். நாம் யார் என்பதை அவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்பது என் எண்ணம்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

//இராகவன் நைஜிரியா
August 26, 2009 4:48 PM கேள்விகள் கேட்பது பல சமயம் அறியாமையால் தான் என நான் நினைக்கின்றேன். பல சமயங்களில் நான் என்ன வேலை செய்கின்றேன் என்று யாரிடமும் சொல்வது கிடையாது. இது மாதிரி கேட்கும் போது சிரித்துவிட்டுப் போய்விடுவேன்.

//

ithuvaraikkum repettuuuuuuuuu

Suresh Rajasekaran said...

அவர்கள் அறியாமையை என்று எடுத்து கொண்டாலும், எல்லோருக்கும் நமக்கு ஏற்பட்டது போல் சந்தர்பம் (ப்டிப்பு, வேலை) கிடைக்காமல் போயிருக்கலாம். சிலர் வேண்டுமென்றே தவற விடுகிறார்கள். சிலருக்கு சந்தர்பம் அமைவதில்லை.
என் நண்பன் வீட்டில் சென்று ஆங்கில நாழிதழ் படிப்பேன். ஒரு சிறிய கிராமத்தில் இதைபோல் சந்தர்பம் கிடைக்காமல் போனவர்கள் நிறைய பேர் இருக்கலாம். அவர்களை தவிர ஏனையோருக்கு இது பொருந்தும்.

iniyavan said...

//கல்லடிப் பட்டாலும் கண்ணடிப் படக்கூடாது என்பார்கள். நாம் யார் என்பதை அவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்பது என் எண்ணம்//

நீங்கள் சொல்வது சரிதான் இராகவன் சார்.

iniyavan said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பித்தன்.

iniyavan said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி grs.

தமிழ். சரவணன் said...

இன்னும் சில பேரிடம் குருர மனப்பான்மை இருக்கும்...

நீ எப்படி பாசானே...
உனக்கு எவன்டா வேலைகுடுத்தான் (இதில் மிகப்பெரிய கொடுமை இந்த கேள்வியை என் மனைவி கேட்டதுதான்)..

இதுபோல் நிறைய கேள்விகள் அவரவர் வாழ்கையில்...

பல கேள்விகள் உளிகள் போல் குத்திகிழித்து மனிதனை மேன்மையாக்கும்...

துளசி கோபால் said...

எல்லாம் ஒரு வகை அறியாமைதான்.

ஆனால்.... சரவணன் சொன்னதுபோல் குரூரமும் சிலரிடம் இருக்கு.

எது கேட்டாலும் முகத்தில் புன்னகையோடு ஒரு தலை ஆட்டல் பதிலாகத் தர நாம் பழக்கிக்கணும்.