Sep 30, 2009

அவர்களும் பாவம் இல்லையா?

நேற்று எதேச்சையாக "சிவா மனசுல சக்தி" படம் பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு சீன். கதையின் நாயகன் ஜீவா, கதாநாயகி சக்தியை பார்த்துவிட்டு வந்தவுடன் வீட்டில் தங்கையிடமும், டியூசன் படிக்கும் குழந்தைகளிடமும் இப்படி விவரிக்கிறார்:

" நான் டிரையினில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவள் பெயர் சக்தி"

" எப்படி இருப்பாங்க"

" ஐஸ்வர்யா ராய் தான் இது வரை அழகுனு நினைத்திருந்தேன். இனிமேல் அப்படி நினைக்க மாட்டேன். சக்தி ஐஸைவிட 100 சதவீதம் அழகு"

"ஓஓஓஓ" - குழந்தைகள்

" சரி, ஒரு 50 சதவீதம் கூடுதல் அழகு"

"ஓஓஓஓஓஒ"

" சரி அவங்களை மாதிரி அழகு"

உடனே தங்கை சக்தியை பார்க்க விருப்பப் படுகிறாள். அம்மா ஊர்வசியும் பார்க்க ஆசைப் படுகிறார். அனைவரும் சக்தி வேலை பார்ப்பதாகச் சொல்லப் படும் தாய் ஏர்வேஸ் செல்கிறார்கள். முதலில் சக்தி விமான பணிப்பெண் உடையில் வருவது போல் கற்பனை பண்ணி சந்தோசப் படுகிறார். ஆனால் சிறிது நேரம் கழித்து வேறு ஒருவர் வருகிறார். வருவது நடிகை ஷகிலா.

உடனே அம்மா, தங்கை, நடிகர் சந்தானம் உள்பட அனைவரும் சிரிக்கிறார்கள். ஷகிலா சொல்லுவார், " நான் மேட்ரிமோனியல் காலத்தில் அப்ளை செய்திருந்தேன். என் பெயர் சக்தி. நீங்கள் சிவாவா?"

" நான் பார்க்க வந்த ஷக்தி நீங்கள் இல்லை. நீங்கள் எதிர்பார்க்கும் சிவாவும் நானில்லை"

உடனே அனைவரும் "இவங்கதான் ஐஸ்வர்யாராயைவிட அழகா?" என்று சிரி சிரி என்று சிரிக்கிறார்கள். இந்த காட்சியை நகைச்சுவைக்காக வைத்திருக்கிறார்கள். ஆனால், எனக்கு துளி கூட சிரிப்பு வரவில்லை. குண்டாக உள்ள அனைவரையும் கேவலப் படுத்துவது போல் உள்ளது.

எனக்கு தெரிந்து என் நண்பர் ஒருவர் வீட்டில் அவர் பெண் குண்டாக இருந்த ஒரே காரணத்தால் எந்த வரனும் அமையாமல் அவர்கள் அடைந்த வேதனையும், அந்த பெண் பட்ட வேதனையும் எனக்குத்தான் தெரியும்.

"அவர்கள் குண்டு என்பதற்காக சிரிக்கவில்லை. ஷகிலா என்பதற்காக சிர்த்தார்கள்" என்று சொன்னால் கூட அதுவும் தவறுதான். அழகு என்பது உடலிலோ, நாம் உடுத்தும் உடையிலோ இல்லை. மனதில்தான் உள்ளது. புற அழகு அழியக்கூடிய ஒன்று. அக அழகு மட்டுமே நிலைத்து இருக்கும்.

ஏன் தான் இப்படிப்பட்ட சீன்களை படத்தில் வைக்கிறார்களோ தெரியவில்லை.

ஏதோ எழுத வேண்டும் என்று தோன்றியது. எழுதிவிட்டேன்.

Sep 29, 2009

விதி வலியது.....

இந்த சம்பவம் நடந்து ஒரு இருபது வருடங்கள் ஆகிவிட்டது. எங்கள் குடுமபத்தில் ஒரு திருமணம். எல்லோரும் கலயாண மண்டபத்தில் பிஸியாக இருந்தோம். எனக்கு நிறைய நண்பர்கள். கல்யாண மண்டபம் முழுவதும் என் நண்பர்கள் பல உதவிகளை செய்து கொண்டு இருந்தார்கள். அப்போது ஒரு நண்பர் ஓடி வந்தார். அவர் என்னைவிட பத்து வயது மூத்தவர். ஆனால் என்னுடன் மிகவும் அன்பாக பழகக்கூடியவர். அவர் சொன்ன ஒரு விசயத்தைக் கேட்டவுடன் நான் பதட்டத்தில் அவருடன் ஓடினேன். நல்ல வேளை அந்த சமயத்தில் திருமணம் முடிந்து இருந்தது. அதனால் என்னை யாரும் அங்கு தேடவில்லை. அவர் அப்படி என்ன விசயம் கூறினார்?

அந்த நண்பரின் இன்னொரு நெருங்கிய நண்பர். அவர் எனக்கும் நண்பர்தான். அந்த நண்பர் அப்போது வரை கல்யாண மண்டபத்தில்தான் இருந்தார். விசயம் இதுதான். அந்த இன்னொரு நண்பர் எங்கள் வீட்டு கல்யாணத்திற்கு வந்த ஒருவரின் சிறிய பெண்ணை, ஏதோ பேசி மயக்கி வீட்டிற்கு கூட்டிச் சென்று, ஏதோ செய்ய முற்படுகையில், என்னிடம் விசயத்தைச் சொன்ன நண்பர் அதைப் பார்த்து, அவரை திட்டி அந்த பெண்ணை திரும்பவும் கல்யாண மண்டபத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். விசயத்தை கேள்வி பட்டு நான் அங்கே செல்வதற்குள் அந்த நண்பர் எஸ்கேப் ஆகிவிட்டார்.

அந்த நிமிடத்தில் அவர் என் கண்ணில் பட்டு இருந்தால் நடந்திருப்பதே வேறு. ஆனால் தப்பித்து விட்டார். அவர் என் கண்ணில் படும்போது இரண்டு நாட்கள் ஆகி விட்டது. என் கோபமும் ஓரளவு குறைந்திருந்தது. அந்த பெண் வீட்டினர் அனைவரும் கல்யாணம் முடிந்து ஊருக்கு சென்று விட்டனர். அந்த பெண் வீட்டாரிடம் விசயத்தைக் கூறாமல், அந்த பெண்ணிடம் மட்டும் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தேன். அந்த நண்பரை எவ்வளவு கேவலமாக திட்ட முடியுமோ அந்த அளவிற்கு திட்டி அவரின் நட்பினைத் துண்டித்தேன். பிறகு கை காலில் விழுந்து என்னுடன் நட்பை தொடரவே விரும்பினார். பின் காலப் போக்கில் நான் அவருடன் பேசினாலும், ஒரு குறிப்பிட்ட தொலைவிலேயே அவரின் நட்பை வைத்திருந்தேன்.

அந்த நண்பர் பெண்கள் விசயத்தில் ரொம்ப வீக். அவருக்கு பலத் தரப்பட்ட பெண்களுடன் தொடர்பு இருந்தது. என்னதான் வருடங்கள் ஓடினாலும் அவரை அடிக்காமல் விட்டு விட்டோமே என பல நாட்கள் நான் வருந்தியதுண்டு. பின்பு நான் வேலை விசயமாக ஊரை விட்டு வெளியில் வந்து விட்டேன். ஒவ்வொரு முறை விடுமுறைக்கு செல்லும்போதெல்லாம் அவரின் லீலைகளைப் பற்றி மற்றவர்கள் கதை கதையாக சொல்லுவார்கள். அந்த வயதில் நமக்கும் ஆசை இருக்கும். நம்மில் பலர் பயத்திலேயே கெட்டு போகாமல் இருந்திருப்போம். ஆனால், அடுத்தவர்களின் கதைகளை கேட்பதில் மட்டும் அலாதி பிரியம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட கதைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அப்படித்தான் அவரின் காம லீலைகள் அவர் மூலமாகவோ அல்லது மற்றவர்கள் மூலமாகவோ தெரிய வந்தது. நமக்கு மட்டும் ஏன் அந்த அனுபவங்கள் ஏற்படுவதில்லை என நான் அடிக்கடி நினைப்பதுண்டு.

பிறகு பல வருடங்கள் கழித்து அந்த நண்பருக்கு திருமணம் நடந்தது. அவருடைய மனைவியை ஒரு முறை நேரில் பார்த்தபோது ரொம்ப மனம் நொந்து போனேன். அவரைப் பார்க்க அழகாகவும், லட்சணமாகவும் தெரிந்தார். அந்த பெண்ணுக்கு இப்படி பட்ட கணவனா? என ஆச்சர்யப்பட்டேன். அவனுக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. வருடங்கள் பல வந்து போயின. என் மனமும் பழி வாங்கும் நிலையிலிருந்து பக்குவப் பட்டு இருந்தது.

சில வருடங்களுக்கு முன் ஊர் போயிருந்த போது என்னை பார்க்க வந்து இருந்தார் அந்த நண்பர். வெளிநாட்டு சிகரட் வேண்டும் என்று கேட்டார். நானும் கொடுத்தேன். பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு போய் விட்டார். நானும் கிளம்பி மலேசியா வந்து விட்டேன். ஒரு நாள், வேறு ஒரு நண்பரிடமிருந்து போன். அந்த நண்பர் திடீரென ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டதாக சொன்னார். என்னதான் அவரின் கேரக்டர் சரியில்லை என்றாலும், அவர் என் நண்பர் என்ற முறையில் மனம் மிக வேதனை அடைந்தது. ஆனால், மனதின் ஓரத்தில் அவர் செய்த தவறுகளை அவர் உணர்ந்தாரா? இல்லையா? என்ற கேள்விகள் தோன்றிக் கொண்டிருந்தன. அவரே போய்விட்டார், இனி என்ன? என்று நான் அந்த விசயத்தை மறந்து விட்டேன். ஆனால் அவருக்காகவும், அவரின் பெண்ணுக்காகவும் நான் ஆண்டவனை பிரார்தித்தேன்.

சமீபத்தில் ஒரு நாள் நான் ஊரில் இருந்த போது, ஒரு பெண்ணை பஸ் ஸ்டாண்டில் எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அந்த பெண்ணை எங்கோ பார்த்தது போல இருந்தது. மனது குழப்பமாக இருந்தது. திடீரென நினைவு வந்தது போல் இருந்தாலும், பல கேள்விகள் என் மனதை ஆக்கரமித்தன.

"அது யார்? இறந்து போன அந்த நண்பரின் மனைவி போல் அல்லவா இருக்கிறது? சரி அது யார் அவர் கூட இன்னொரு ஆண்?" குழப்பத்தில் அருகில் இருந்த என் நண்பரை கேட்டேன். அவர் கூறிய பதில்தான் என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது.

" தெரியாதா உனக்கு. அவர்தான் அந்த பெண்ணை வைச்............"

விதி வலியது......

Sep 28, 2009

கடைசியில் நானும்???

"எப்பங்க போலாம்?" வீட்டில் அடிக்கடி கேட்டுக் கொண்டு இருந்தார்கள். நான் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். கடைசியில் போன திங்கள் (21.09.09) அன்று போலாம் என முடிவானது. 19 ஆம் தேதியிலிருந்து நவராத்திரி பூஜை கோயிலில் ஆரம்பித்ததால் தினமும் இரவு தூங்க லேட் ஆனது. ரம்ஜான் லீவ் வேறு மூன்று நாட்கள். அதனால், முதல் நாள் இரவு அதிக நேரம் விழித்திருந்ததால் திட்டமிட்ட படி அன்று போக முடியவில்லை.

அனைவரின் விமர்சனமும் படித்த பிறகு நான் கந்தசாமி படம் போக வில்லை. ஆனால், விமர்சனங்கள் படித்த பின்னும் இந்தப் படம் பார்க்க அதிகமாக விரும்பினேன். பிறகு சனிக்கிழமை போகலாம் என முடிவெடுத்தோம். ஆன்லைனில் டிக்கட் முன் பதிவு செய்யலாம் என்றால், இந்த படத்திற்கு ஆன் லைன் முன் பதிவு இல்லையாம். எனக்கு எப்போதும் தியேட்டர் சென்று, வரிசையில் நின்று டிக்கட் வாங்கி படம் பார்க்க பிடிக்காது. தியேட்டருக்கு போன் செய்து சீக்கிரம் வந்தால் டிக்கட் முன் பதிவு செய்ய முடியுமா? எனக்கேட்டேன். அவர்கள் காலை 11.00 மணிக்கு மேல் வரச் சொன்னார்கள். அதனால், காலையில் சீக்கிரம் கிளம்ப முடிவானது. ஏனென்றால், நாங்கள் படம் பார்க்க ஒரு மணி நேரம் காரில் பயணம் செய்ய வேண்டும். அந்த ஊரில் தமிழ் படம் வருவதே மிகக் குறைவு. அதனால், எப்படியாவது இந்த வாரத்திலயே படத்தை பார்த்து விடவேண்டும், அடுத்த வாரம் படம் ஓடுமா? ஓடாதா? தெரியாது. அதற்குகாகத் தான் இந்த அவசரம், திட்டமிடல் எல்லாம். காலையில் எப்படியாவது சீக்கிரம் எழுந்து விட தீர்மானித்து இரவு 11 மணிக்கு படுத்தோம்.

தினமும் காலை 5.30க்கே எழுந்து விடுவதால், லீவு நாட்களில் கொஞ்சம் லேட்டாக எழுந்து பழக்கம். ஆனால், அன்று காலை எழுந்திருக்க 8 மணி ஆகிவிட்டது. உடனே கிளம்பலாம் என்றால், பிள்ளைகள் சூபர் 10 பார்த்து விட்டுதான் குளிக்க செல்வதாக கூறி விட்டார்கள். பிறகு அப்படி இப்படி என்று கிளம்ப காலை 10.10 ஆகி விட்டது. தியேட்டர் காம்பளக்ஸை நெருங்கினால், காரை பார்க் பண்ண இடம் கிடைக்கவில்லை. டிக்கட் வாங்கி விட்டு வருவதற்கு மொத்தம் 10 நிமிடம் தான் ஆகும். அதற்கு 2 ரிங்கிட் பார்க்கிங் சார்ஜ் கொடுக்க விருப்பம் இல்லை. அதனால், எல்லோரையும் காரில் இருக்க சொல்லி விட்டு நான் மட்டும் சென்று டிக்கட் வாங்க சென்றேன். டிக்கட் கவுண்ட்டரில் நான் மட்டும் தான். நான்கு டிக்கட் வாங்கி, எனக்கு பிடித்த சீட் நம்பர் வாங்கிக் கொண்டு காருக்கு வருவதற்குள் டென்சன். யாராவது போலிஸ் வந்து காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்தாதற்கு அபராதம் வசூலித்தால் என்ன செய்வது? அபராதம் என்றால் பரவாயில்லை. ஒரு வேளை சம்மென் அனுப்பி விட்டால், யார் கோர்ட்டுக்கு அலைவது? நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை. டிக்கடை பார்த்த பிறகுதான் பிள்ளைகளுக்கு திருப்தி. ஆனால், எனக்கு? VCDயில் பார்த்தால் 6 ரிங்கிட், தியேட்டர் டிக்கட் விலை மொத்தம் 30 ரிங்கிட்.

பிறகு அங்கே இருந்து சாப்பிங் காம்ப்ளெக்ஸ் சென்று, வாங்க வேண்டியதை எல்லாம் வாங்கி விட்டு, கொஞ்சம் செலவு செய்து விட்டு பிறகு அங்கிருந்து ஹோட்டலுக்கு வந்து, வெஜிட்டேரியன் சாப்பாடு சாப்பிட்டு விட்டு, 2 ரிங்கட் செலுத்தி காரை தியேட்டர் காம்ப்ளெக்ஸில் நிறுத்தி, லிப்ட் பிடித்து தியேட்டருக்கு செல்ல சரியாக மணி 2.20. மூன்று மணிக்குத்தான் படம்.

" டேய், யூரின் போறதுன்னா இப்பயே போய்ட்டு வந்துடு. அப்பறம் படம் போடும்போது புடுங்கி எடுக்காதே" என்று என் மனைவி என் பையனிடம் சொன்னது காதில் விழுந்தது.

" இல்லம்மா. நான் ஏற்கனவே போய்ட்டேன்"

" அப்பா, ஸ்வீட் கார்ன் வாங்கலாமா?" - பெண் கேட்டாள்.

" அப்பா, எனக்கு பெப்ஸியும், ஸ்வீட் கார்னும்" - பையன்.

எல்லோருக்கும் எல்லாம் வாங்கினேன். மொத்தம் 24 ரிங்கிட். எல்லாம் முடிந்து வந்து அருகில் இருந்த சேரில் உட்காரும் போது மணி 2.40.

" அப்பா, யூரின் போகணும்?" - பையன்.

" ஏண்டா, நான் தான் முதலயே கேட்டேன்ல" - மனைவி.

" சரி விடு. இங்கதான் இண்டர்வெல் வேற கிடையாதுல்ல"

அவனை பாத்ரூம் கூட்டிகிட்டு போய் வந்து சேர மணி 2.50. தியேட்டர் உள்ளே சென்றொம். மொத்தம் ஒரு 20 பேர் இருக்கலாம்.

முதலில் ஆதவன் ட்ரைய்லர் போட்டார்கள். சூர்யா அழகு. ஆனால், நயன்??? " அம்மா நயன்தாரா, உனக்கு அந்த மூக்குத்தி தேவையா?"

" ஏங்க, சீக்கிரம் படம் முடிஞ்சோன, கடைக்கு போயிட்டு (மறுபடியுமா?) கோயிலுக்கு போகணும். ஒரு 6.30 க்குள்ள வீட்டுக்கு போயிடனும்ங்க. அப்பத்தான் கோயிலுக்கு போக சரியா இருக்கும்"

" சரி சரி"

சரியாக 3 மணிக்கு படம் ஆரம்பித்தது. சரியாக 4.50 மணிக்கு படம் முடிந்தது.

கடைசியில் நானும் 'உன்னைப் போல ஒருவன்" படம் பார்த்து விட்டேன்.

Sep 24, 2009

மிக்ஸர் - 24.09.09

அவர் ரொம்ப அமைதியானவர். அதிகம் பேச மாட்டார். என் நண்பர் நம்பி வீட்டுக்கு அடிக்கடி வருவார். ஆரம்பத்தில் அவருடன் அதிக நெருக்கம் கிடையாது. நண்பர்கள் அனைவரும் கிரிக்கட் விளையாட சென்றால் அவர் வர மாட்டார். அதனால் அதிகமாக அவரிடம் யாரும் பேசுவது கிடையாது. சாதாரண நபர் அளவிலே பழகினார்.

எங்கள் கிரிக்கட் குழுவில் வேறு ஒரு நண்பர் இருந்தார். அவர் எல்லோரையும் நக்கலடித்துக்கொண்டும், அனைவரை பற்றியும் மட்டமாக பேசிக்கொண்டும், தான் ஒரு பெரிய ஹீரோ என்ற ரேஞ்சுக்கு திரிவார். நன்றாக பெளலிங் போடுவார். நான் நினைத்தேன் அவர் கிரிக்கட்டில் நிச்சயம் பெரிய ஆளாக வருவார் என்று. மனதளவில் எனக்கு அவர் மேல் பொறாமையும், கோபமும் எப்பொழுதும் உண்டு. அவர் நன்றாக விளையாடியதால் பொறாமையும், அனைவரையும் எப்போதும் கிண்டல் செய்வதால் கோபமும் வரும். கடைசியில் என்ன நடந்தது?

முதல் பாராவில் உள்ளவர், சடாரென பெரிய நடிகராகி, நடிகர் சங்க உபத் தலைவராக பணியாற்றி, எம்.எல்.ஏ ஆகி, இப்போது எம்.பி யாகி மத்திய இணை அமைச்சராகி விட்டார். அவர் வேறு யாரும் இல்லை, என் நண்பர் குமரேசன் என்கிற நெப்போலியன் தான்.

இரண்டாவது பாராவில் உள்ளவர் ஏதோ பிரைவேட் கம்பனியில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பதாக கேள்வி.

***************************************************

ஏறக்குறைய அதே தருணத்தில் எங்கள் தெருவில் சில நண்பர்கள் (எங்கள் குழுவினர் அல்ல) நடிகர் வஸந்த் அவர்களுக்கு தலைமை ரசிகர் மன்றம் லால்குடியில் நிறுவினார்கள். "மெல்லப் பேசுங்கள்" என்ற படத்தில் நடித்தவர் அவர். அதன் துவக்க விழாவுக்கு அவரும் அவருடன் நடிகர் மனோஜ் என்பவரும் லால்குடிக்கு வந்தார்கள். நாங்கள் அப்போது "சலங்கை" என்ற பத்திரிக்கை நடத்திக்கொண்டிருந்தோம். நான் அந்த பத்திரிக்கை சார்பாக நடிகர் வஸந்தை பேட்டிக் கண்டேன். மிகவும் அருமையாக, ரொம்ப தெளிவாக பதில்கள் கூறினார். அவருடன் நாங்கள் போட்டோ எல்லாம் எடுத்துக்கொண்டோம். அவரை சந்தித்தப்பின் நண்பர்கள் அனைவரும் நினைத்தோம், " அவர் மிகப் பெரிய நடிகராக வருவார்" என்று. என்னக் காரணமோ தெரியவில்லை. அவர் அந்த அளவிற்கு வரவில்லை.

***************************************************

பல வருடங்களுக்கு முன் எஸ் வி சேகர் ஒரு பேட்டியில் கூறிய விசயம் நினைவுக்கு வருகிறது. ஒரு நிருபர் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் பதிலும் இதோ:

"சார், இப்போ வர படங்களில் எல்லாம் ஒரு மெசேஜும் இருப்பதில்லையே"

" என்னைப் பொருத்தவரை உலகத்திலேயே மெசேஜ் கொடுக்கும் ஒரே ஆள் போஸ்ட் மேன் தான். உங்களுக்கு ஏதாவது மெசேஜ் வேண்டுமென்றால் அவர் தருவார். நீங்கள் ஏன் சினிமாவில் தேடுகிறீர்கள்"

***************************************************

சமீபத்தில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம். நான் யாருக்காகவாவது பணம் இந்திய ரூபாயில் தர வேண்டி இருந்தால், மலேசியாவில் இருந்து லெட்டரை பேக்ஸில் என் அக்கவுண்ட் உள்ள வங்கிக்கு அனுப்புவேன். சம்பந்தப்பட்ட நபருக்கு உடனே பணம் போய் விடும். இப்போது வந்த ஒரு புது மேனேஜர், பேக்ஸ் அனுப்பினால் மட்டும் போதாது, நீங்கள் ஒரிஜினல் லெட்டரை போஸ்ட்டில் அனுப்ப வேண்டும் என்று கூறினார். நானும் சரி என்று ஒப்புக்கொண்டு சென்ற வாரம், ரூபாய் 30,000 ஒருவருக்கு பணம் அனுப்பச் சொல்லி பேக்ஸ் அனுப்பிவிட்டு, உடனே ஒரிஜினல் லெட்டரை போஸ்ட்டில் அனுப்பி விட்டேன். நார்மல் போஸ்ட் மலேசியாவிலிருந்து போய் சேர ஐந்து நாட்கள் ஆகும். நேற்று எதேச்சையாக அக்கவுண்ட் பேலன்ஸை நண்பர் மூலம் செக் செய்தால், அவர்கள் இர்ணடு முறை பணம் அனுப்பி உள்ளது தெரிய வந்தது. பேக்ஸ் காப்பி மூலம் ஒரு முறையும், ஒரிஜினல் லெட்டர் மூலம் ஒரு முறையும். என்ன மாதிரி வேலை செய்கிறார்கள் என்று பாருங்கள்? விரைவில் அந்த பணத்தை என் கணக்கில் போடுவதாக சொல்லியிருக்கிறார்கள். பார்ப்போம்!. ரூபாய் 30,000 சரி, அதுவே 3,00,000 என்றால், என்ன செய்வது? அந்த பணம் நம் கணக்கில் திரும்ப வரும் வரை தூக்கம் வருமா?

***************************************************

நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் எதுவும் படிக்கவில்லை என்றாலும், கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவு உண்டு. அனுபவம் மூலமாக கற்றுக்கொண்ட விசயங்கள் பல. எங்கள் கம்பனியின் சாப்வேரில் எங்கே தவறு ஏற்பட்டாலும், எனக்கு எந்த சாப்ட்வேர் அறிவும் இல்லை என்றாலும், என்னால் எங்கே தவறு என்று கண்டு பிடிக்க முடியும். அப்படிப்பட்ட என்னால், இந்த "தமிழ்மணத்தில்" ஓட்டு போடுவது எப்படி என்று இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் கூறிய அனைத்தும் செய்து பார்த்து விட்டேன். ஓப்பன் ஐடி மூலம் சென்றால், "invalid user name" என்று என்னென்னவோ வருகிறது. அட்லீஸ்ட் நாமாவது நமக்கே ஒரு ஒட்டு போட்டுக் கொள்ளலாம் என்றால், அதற்கும் வழியில்லை.

நண்பர்கள் யாராவது எனக்கு உதவ முடியுமா?

***************************************************

முன்பெல்லாம், நமது பதிவு "தமிழிஷில்" பிரபலமானால் உடனே அவர்களிடத்திலிருந்து ஒரு மெயில் வரும். நானும் உடனே தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி சொல்லி ஒரு பின்னூட்டம் இடுவேன். இப்போது அப்படி வருவது இல்லை. ஏன் என்றும் தெரியவில்லை?

***************************************************

மற்றவர்களை ஒப்பிடும்போது நான் எழுதிய பதிவுகளும் குறைவு, நண்பர்கள் லிஸ்ட்டும் குறைவு. ஆனாலும், முகம் தெரியாத வெளிநாட்டு தோழிகளிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் வரும் கடிதங்கள் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கின்றன. நான் நன்றாக எழுதுகிறேன் என்று சொல்ல வரவில்லை. நான் எழுதும் ஒரு சில அனுபவங்கள் சிலர் வாழ்க்கையில் நிகழ்ந்திருப்பதும், அதை அவர்கள் மெயில்கள் மூலம் தெரிவிப்பதும் உண்மையிலேயே வியப்பை அளிக்கின்றன். அந்த ஒரு சில நண்பர்களுக்காகவாவது நான் எழுதிகொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறேன், என்ன சரியா நண்பர்களே?

***************************************************

Sep 18, 2009

இசையும் என் வாழ்க்கையும் -1

சிறு வயதில் இருந்தே என் ரத்தத்தில் இசை கலந்து விட்டது. நான் வயிற்றில் இருந்த போது அம்மா அடிக்கடி " எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்" என்ற பாடலை அடிக்கடி பாடிக்கொண்டே இருப்பாராம். அதனால்தானோ என்னவோ எனக்கு இசையின் மீது அதிக காதல் வந்தது. நான் பள்ளிப்படிக்கும் காலக்கட்டத்தில் எங்கள் வீட்டில் ஒரு நல்ல ரேடியோ கூட கிடையாது. ஒரு சாதாரண ரேடியோதான் இருக்கும். அதில் பாடல் கேட்க வீட்டில் எல்லோரும் ஒரு இடத்தில் அமர்ந்துவிடுவோம். காலையில் படிக்க 4.30 மணிக்கு எழுந்து விடுவேன். அப்போது சிலோன் ரேடியோவில் அதிகாலையில் அதிகம் ஒலிபரப்பும் பாடல் SPBயின் "ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ". அந்த பாடலைக்கேட்டு விட்டுத்தான் நான் படிக்கவே ஆரம்பிப்பேன்.

விவித பாரதி ஒலிபரப்பில் ஞாயிறு காலை 8.30 மணிக்கு புதுப் பாடல்கள் ஒலி பரப்புவார்கள். அந்த நேரத்தில்தான் வீட்டில் கடைக்குப் போகச்சொல்லி விரட்டுவார்கள். கடைக்குப் போனாலும் அங்கு ஏதாவது ஒரு டீக் கடையில் நின்று பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பேன். இளையராஜா பிரபலமான சமயத்தில் அவர் பாடல்களின் மீது பித்து பிடித்து அலைந்தவர்களில் நானும் ஒருவன். அப்போது ரேடியோவில் அவ்வப்போது ஒலியாகும் பாடல்களைவிட நமக்குப் பிடித்த பாடல்களை நாம் விரும்பும் சமயத்தில் கேட்டால் என்ன என நினைத்து அப்பாவிடம் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கித் தரச் சொன்னேன்.

அப்பா கூறியது இன்னும் நினைவில் இருக்கிறது, " இந்த மாத வீட்டு வாடகை எப்படி கொடுப்பது என்று நானே தவித்துக் கொண்டிருக்கிறேன். உனக்கு டேப் ரெக்கார்டர் வேண்டுமா?" என அன்பாக கோபித்துக் கொண்டார். என்னதான் அப்பா சொன்னதில் நியாயம் இருந்தாலும் எனக்கு என்னவோ மனதில் ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் நண்பன் ஒருவன், "டேய் நல்ல டேப் ரெக்கார்டர் வாங்கனும்னுனா நிறைய காசு செலவு பண்ணனும். சிங்காரத்தோப்புல ஒரு கடை இருக்கு அங்க டெல்லி செட்டுனு சொல்லி விக்கறாங்க. விலை 250 ரூபாய்தான். அங்க வேணா வாங்கேன்" என்றான்.

ஆனால் 250 ரூபாய்க்கு எங்கே போவது. பிறகு அப்பா கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்தேன். முழு பணமும் சேர்க்கும் வரையில் தினமும் அந்த கடைக்குப் போவேன். அந்த டேப் ரெக்கார்டரை தொட்டுப் பார்த்து விட்டு வருவேன். இதே போல் சில காட்சிகள் தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படத்தில் இருகும். அவர் தினமும் ஒரு பைக் கடைக்கு சென்று வருவார். அந்த காட்சிகளைப் பார்க்கும்போது என் பழைய நினைவுகள் வந்து போயின. ஒரு வழியாக அந்த டேப் ரெக்கார்டரை வாங்கினேன். எனக்குப் பிடித்த அனைத்து பாடல்களையும் பதிவு பண்ண எண்ணி சோனி கேசட் வாங்க கடைக்குச் சென்றேன். அவர்கள் சொன்ன விலைக்கு வாங்க இன்னும் ஒரு மாதம் சேமிக்க வேண்டிய நிலை.

மிகவும் நொந்து போன நிலையில் பர்மா பாஜாரை கடந்து சென்று கொண்டிருந்த போது அங்கே வெளி நாட்டுப் பொருட்களை விற்கும் ஒருவன், தன்னிடம் வெளி நாட்டு கேசட்கள் இருப்பதாகவும் விலை கம்மி என்றும் சொன்னான். நானும் உடனே பாடல்கள் கேட்கும் ஆசையில் ஐந்து கேசட்கள் உள்ள பார்சலை மிகக் குறைந்த விலையில் வாங்கினேன். பிறகு எனக்குப் பிடித்த பாடல்களை எல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு அதை ரெக்கார்ட் செய்வதற்காக கேசட் ரெக்கார்டிங் கடைக்குச் சென்றேன். அங்கே சென்று பிரித்துப் பார்த்தால் கேசட்டிற்கு பதில் கண்டதையும் கட்டிக் கொடுத்து அழகாக பார்சல் பண்ணி என்னை நன்றாக ஏமாற்றி விட்டிருக்கிறான் எனத் தெரிந்தது. உடனே நான் ஏமாற்றப் பட்டதை அறிந்து மீண்டும் பர்மா பாஜாருக்கு சென்றேன். அவனை தேடிக் கண்டு பிடித்துக் கேட்டால், எதுவுமே நடக்காதது போலவும், என்னை யார் என்றே தெரியாது என்று கூறிவிட்டான். அவனிடம் கோபமாக சண்டை போட ஆரம்பித்தேன். ஒரு ஐந்து நிமிடத்திற்குள் என்னைச் சுற்றி அவனின் ஆட்கள். தப்பி பிழைத்து வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

சரி, எப்படித்தான் கேசட் வாங்குவது என்று நினைத்து, கடைசியில் அந்த முடிவுக்கு வந்தேன்.

-தொடரும்

Sep 17, 2009

இது போல் வேறு யாருக்கும் நேரக்கூடாது?

மூன்று வருடங்களுக்கு முன் ஒரு நாள். என் தோழி ஒருவரின் கணவருக்கு கடுமையான வயிற்று வலி. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். உலகத்தில் உள்ள அனைத்து டெஸ்டுகளையும் எடுத்து பார்த்த டாக்டர்கள் அவருடைய லிவரில் ஏதோ பிரச்சனையென்றும் உடனே ஆப்பரேசன் செய்ய வேண்டும் என்றார்கள். தோழி ஒன்றும் அவ்வளவு பணக்காரர் இல்லை. அவருக்கு மூன்று அக்கா. அனைவரும் வயதானவர்கள். அம்மா அப்பா இல்லை. கணவரின் உறவினர் என்று யாரும் இல்லை. தோழிக்கோ நான்கு பிள்ளைகள். பண உதவி செய்யவோ இல்லை அவர்கூட இருந்து உதவவோ ஒருவரும் இல்லை.அதனால் அவர் பிரச்சனையை அவர்தான் சமாளிக்க வேண்டும்.

அங்கே இங்கே கடன் வாங்கி கணவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தாள். மீண்டும் பல வித பரிசோதனைகளுக்கு பின் டாக்டர்கள், "அவருக்கு ஆப்பரேசன் செய்ய முடியாது. அவருடைய லிவர் மிகவும் பழுதடைந்து விட்டது. அப்படியே ஆப்பரேசன் செய்தாலும் அவர் பிழைப்பது கஷ்டம். அதனால், மருந்து மாத்திரைகள் தொடர்ந்து கொடுத்து வாருங்கள்" எனச் சொல்லி கை விரித்து விட்டார்கள்.

இதில் என்ன செய்தி? இது போல் நிறைய கேஸ்கள் பார்த்திருக்கிறோமே? என படிப்பவர்கள் நினைக்கலாம். இல்லை என்று சொல்ல வில்லை. ஆனால் இப்போது அவரின் நிலை என்னத் தெரியுமா? மூன்று வருடமாக ஆஸ்பத்திரி வீடு என்று அலைந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆஸ்பத்திரியில் சேர்ப்பார்கள். உடலை விட்டு போகாத அனைத்து கெட்ட நீரையும் டியூப் வழியாக எடுப்பார்கள். ஒரு வார ஆஸ்பத்திரி வாசத்திற்கு பிறகு வீடு திரும்புவார். தோழி என்னதான் மலேசியாவைச் சேர்ந்தவராய் இருந்தாலும், அவர் ஒன்றும் அவ்வளவு பணக்காரர் இல்லை. அதனால் தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கக் கூடிய வசதி அவருக்கு இல்லை. அதனால் ஒவ்வொரு முறையும் அவர் அலுவலகத்துக்கு லீவ் போட்டுவிட்டு ஆஸ்பத்திரியே கதி என்று கிடக்கிறார்.

முதலில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று இருந்த ஆஸ்பத்திரி வாசம் பிறகு இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாகி, பிறகு மாதத்துக்கு ஒரு முறையாகி, இப்போது வாரத்துக்கு ஒரு முறையாகிவிட்டது. அவர்படும் வேதனையை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அந்த தோழியை நான் தினமும் பார்க்க வேண்டிய சூழ்நிலை. அவர் ஒரு நாள் என்னிடம் கூறினார்,

" சார், நான் மனதளவில் எதற்கும் தயாராகத் தான் இருக்கிறேன். ஆனால் என்னுடைய மகளை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. தினமும் அவள் பள்ளியிலிருந்து வந்தவுடன், அவள் அவரின் மூக்கில் கை வைத்து உயிர் இருக்கிறதா? என்று பார்த்து பிறகு அவர் மேல் படுத்து அவரை கொஞ்சுவதைப் பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது"

அவரிடம் அதிகமாகவும் இவர்கள் ஒட்டி உறவாடக்கூடாது. அவரிடம் உள்ள நோய் இவர்களுக்கும் தாக்கக் கூடிய அபாயம் இருக்கிறது.

இங்குதான் எனக்கு ஆண்டவன் மேல் கோபம் கோபமாக வருகிறது. அவர் இனி பிழைப்பது கஷ்டம். ஆனால், ஏன் ஆண்டவன் இந்த அளவிற்கு அவரை துன்பப்படவைக்க வேண்டும். அவரால் இனி பிழைக்க முடியாத பட்சத்தில் அவருக்கு விடுதலை அளிக்கலாமே? மூன்று வருடமாக அவரும் கஷ்டப்பட்டு, அவரின் குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்தி ..... ஏன்?

ஒரு வேளை இது பூர்வ ஜன்ம பாவம் அல்லது கர்மா என்றால் அவரின் குடும்பத்தினரும் ஏன் கஷ்டப்பட வேண்டும்? அவரின் குடும்பத்தினரும் பூர்வ ஜென்ம பாவம் செய்தவர்களா? பூர்வ ஜென்ம பாவம் செய்தவர்கள் எல்லாம் ஒரே குடும்பத்தில் இருக்குமாறு செய்தது யார்? ஆண்டவனா? ஏன்??? இப்படி எனக்குள் ஏகப்பட்ட 'ஏன்'கள்?

இது போன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது மெர்சி கில்லிங் செய்வது தப்பு இல்லையோ எனத் தோன்றுகிறது? மகாத்மா காந்தியடிகளே நோயில் துடித்துக்கொண்டிருந்த ஒரு ஆட்டைப் பார்த்து, அதற்கு விடுதலை கொடுக்கச் சொன்னாரே?

தோழிக்காகவும், அவருடைய கணவருக்காகவும் என்னால் ஆண்டவனை வேண்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், என்ன வேண்டிக் கொள்கிறேன் என்பதையும் அவரிடம் சொல்ல முடியாத நிலை???

இத்தனை நாட்கள் ஆண்டவனிடம், " என்னை என் குடும்பத்தை நன்றாக வைத்துக்கொள்" என்று வேண்டி வந்தேன். இனி " யாருக்கும் எந்த கஷ்டமும் குடுக்காத சாவைக் கொடு இறைவா" என வேண்டிக்கொள்ள வேண்டும் போல.

Sep 15, 2009

இப்படி ஒரு அனுபவம்!

கந்தசாமி படத்தைப் பற்றி அனைவரும் விமர்சனம் எழுதி விட்டார்கள். படம் ஹிட் ஆக வில்லை என்று சிலரும், இல்லை இல்லை சிவாஜி படத்தை விட வசூலில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது என்று சம்பந்தப்பட்டவர்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நான் அந்த விசயங்களுக்குள் நுழைய விரும்பவில்லை. எனது நண்பர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது நண்பர்கள் மூன்று பேர் கடந்த சனிக்கிழமை அன்று எங்கள் ஊருக்கு பக்கத்து டவுனில் உள்ள ஒரு தியேட்டருக்கு கந்தசாமி படம் பார்க்க சென்றார்கள். படம் மதியம் ஒரு மணிக்கு ஆரம்பம். இவர்கள் காலை 12.30 மணி அளவில் தியேட்டருக்கு சென்றிருக்கிறார்கள். எப்போதும் படம் மதியம் 3 மணிக்கு ஆரம்பிக்கும். 12.30க்கு சென்றால் டிக்கட் ரிசர்வ் செய்து விட்டு, மதிய சாப்பாடு முடித்து வருவதற்கு சரியாக இருக்கும். நாங்கள் அனைவருமே அவ்வாறு செய்வதுதான் வழக்கம். அதனால்தான் 12.30 மணிக்கு சென்றார்கள். பின்புதான் தெரிந்தது கந்தசாமி ரிலிஸான தேதியிலிருந்து மதியக் காட்சி 1 மணிக்கு மாற்றி விட்டார்கள் என்று. பிறகு மதியம் கிடைத்ததை சாப்பிட்டு விட்டு டிக்கட் கவுண்டருக்கு சென்றிருக்கிறார்கள். அங்கேதான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

என்ன? டிக்கட் கேட்டால் தியேட்டர் நிர்வாகம் அவர்களை 12.55 வரை காத்திருக்க சொல்லியிருக்கிறார்கள். இவர்களுக்கு காரணம் புரியவில்லை. 12.55 க்கு போனாலும் டிக்கட் தரவில்லை. பொறுமையிழந்த நண்பர்கள், " ஏன் சார், இப்படி டிக்கட்டும் தராம, காரணமும் சொல்லாம கடுப்படிக்கிறீங்க?" என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு தியேட்டர் நிர்வாகியின் பதில், " சார், கோபப் படாதீங்க. இது வரை இந்த காட்சிக்கு தியேட்டருக்கு வந்துள்ளதே நீங்க 3 பேர்தான். உங்க 3 பேருக்காக எப்படி படத்தை ஓட்டறது? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இன்னும் யாராவது வராங்களானு பார்க்கலாம்"

அடுத்த அரை மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு இன்னும் இருவர் வந்துள்ளனர். மக்களே, தயவு செய்து நம்புங்கள். அந்த காட்சி மொத்தம் 5 நபர்களுக்காக நடத்தப்பட்டது.

5 பேருக்காக ஒரு காட்சி நடக்க வேண்டுமென்றால், எவ்வளவு நஷ்டம் அந்த தியேட்டர் உரிமையாளருக்கு? எப்படி அதை சமாளிக்கப் போகிறார்?

படம் முடிந்து வந்தவுடன் என் நண்பர் இந்த அனுபவத்தை என்னிடம் கூறினார்.

நான் அவரிடம் படத்தைப் பற்றி இப்படிக் கேட்டேன்,

" படம் எப்படி இருந்தது?"

" கோழி மாதிரி வர ஸீன் தான் அதிகம் தடவை வருது?"

" படம் எப்படி இருந்தது?"

" ஒரு தடவை பார்க்கலாம்"

" அப்படீன்னா, எல்லா படத்தையும் பல தடவை பார்ப்பீங்களா?"

" சில படங்கள் ரெண்டு மூன்று தடவை பார்ப்பேன்"

" ஏன் ஒரு தடவை பார்த்தா புரியாதா உங்களுக்கு"

" அப்படீனு இல்லை"

" அப்புறம் ஏன் ஒரு தடவைக்கு மேல பார்க்கறீங்க?"

" சும்மாதான்"

" நல்லா இருந்துதா?"

" ம்ம்ம். கொஞ்சம் அந்நியன், கொஞ்சம் ஜெண்டிமேன், கொஞ்சம் சிவாஜி"

" ஏன் நீங்க மேல சொன்ன படம் எல்லாம் பார்க்கலியா?"

" பார்த்துருக்கேனே"

" அப்புறம் ஏன் எல்லா படங்களும் கலந்துருக்க படத்தை பார்த்துட்டு வந்தீங்க"

நண்பர் கடுப்பாகி, " யோவ், என் காசு நான் பார்க்குறேன். உனக்கு என்னையா? நானே நொந்து போய் வந்துருக்கேன். நோண்டி நோண்டி கேள்வி கேட்டுக்கிட்டு"

" இல்லை, படம் எப்படி இருந்தது?"

" யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்"

நான் எஸ்கேப்.

Sep 14, 2009

நானும் என் தேவதையும்...


இந்த பதிவை எழுத அழைத்த "டாக்டர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி."

எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும் அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்.

அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உங்கள் கண் முன்னாடி ஏஞ்சல் எனும் தேவதை உங்களிடம் பத்து வரங்கள் தருகிறது . நீங்கள் அதனிடம் என்ன வரம் கேட்பீர்கள்?

இதோ நான் தேவதையிடம் கேட்கப் போகும் வரங்கள்:

1. உலகம் முழுவதும் ஒரே நாடாகவும், அனைவரும் ஒரே மதத்தினராகவும் இருக்க வேண்டும்.

2. தீவிரவாதி என்று ஒருவரும் இருக்கக் கூடாது.

3. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வர வேண்டும்.

4. கற்பழிப்பு, பாலியல் வன்முறை மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை எதுவும் இருக்கக் கூடாது.

5. விபச்சாரம் என்ற தொழிலே இருக்கக் கூடாது.

6. படித்தவர்கள் மட்டும்தான் அரசியலுக்கு வர வேண்டும்.

7. பெண்களை போகப் பொருளாக பார்க்கும் நிலமை மாற வேண்டும்.

8. விரைவில் 'கோலங்கள்' தொடர் முடிய வேண்டும். இனி இது போன்ற தொடரை யாரையும் எடுக்க அனுமதிக்க கூடாது.

9. தேவதை முதலில் இந்த மாதிரி வரம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அனைவரும் உழைத்து தான் முன்னறே வேண்டும்..

10. இளையராஜாவும், ஏ ஆர் ரஹ்மானும் இசையமைக்க, அந்த பாடலை நான் பாட, அந்த பாடலுக்கு சூப்பர் ஸ்டார் ஆட வேண்டும்.

பொதுவாக இது போன்ற தொடர் பதிவுகளில் சங்கடமான விசயம் என்னவென்றால் அடுத்தவர்களை எழுத அழைப்பது. நாம் அழைத்து அவர்கள் மறுத்து விட்டாலோ இல்லை நாம் அழைத்ததை ஒரு சுமையாக அவர்கள் நினைத்தாலோ நமக்கு மிக வேதனையாக இருக்கும். அதனால் நான் யாரையும் அழைக்கப் போவதில்லை.
விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.

Sep 13, 2009

அட்வைஸ் பண்ணறவங்களை கண்டா....

சிறுவயதுல சின்ன சின்ன தவறுகள் செய்ய நேரும்போது நமக்கு நல்ல புத்திமதிகள் சொல்லி நம்ம அம்மாவோ, அப்பாவோ இல்லை ஆசிரியரோ திருத்துவாங்க. அப்போ அது நமக்கு தேவையா இருந்தது. எல்லாவற்றையும் கேட்டு அதன்படி நடக்க ஆரம்பித்த காலம் அது. பிறகு கொஞ்சம் பெரியவனாகி +2 படிக்கும் நேரத்தில் பெண்களின்பால் அதிக ஈர்ப்பு ஏற்பட்ட சமயங்களில் அம்மா ஒரு முறை என்னை கூப்பிட்டு அறிவுரை சொன்னது நினைவுக்கு வருகிறது. அந்த இரண்டுங்கெட்டான் வயதில் அது அப்போது எனக்கு தேவையாய் இருந்தது.

படிப்பு முடித்து வேலைக்கு அலைந்து கொண்டிருந்த சமயங்களில் நண்பர்களின் கடைகளில் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்த சமயங்களில் அப்பா அடிக்கடி கூறிய அறிவுரைகள் அந்த வயதில் தேவையாக இருந்தது.

ஒரு முறை என் நண்பனின் கடையில் உட்கார்ந்து பேசிகொண்டிருந்தேன். அவனுக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அது ஒன்றும் காதல் இல்லை. அது காதல் இல்லை என்றால் வேறு என்ன? வேறு என்ன? என்பதைப் பற்றி இங்கு விவரிக்கவும் எனக்கு விருப்பம் இல்லை. நாங்கள் பேசிக்கொண்டிருந்த வேலையில் அங்கு அந்த பெண் வந்து விட்டாள். பிறகு அவர்கள் அடித்த லூட்டியை காண சகிக்காமலோ இல்லை பொறாமையாலோ அந்த இடத்திலிருந்து உடனே சென்று விட்டேன். உண்மைதான் பொறாமைதான். அந்த வயது அனைத்துக்கும் ஆசைப்பட்ட வயது. ஆனால் என்ன பண்ண? பல்லு இருந்தவன் எல்லாம் பட்டாணி சாப்பிட்டான். ஆனால், அப்பா அம்மாவிற்கும், குடும்ப கவுரவத்திற்கும் பயந்தே நல்லவனாக வாழ்ந்த காலம் அது.

அந்த பெண் வந்ததையும் அதற்கு பின் நடந்தவைகளும் எதிரில் உள்ள கடையிலிருந்து பார்த்த என் அப்பாவின் நண்பர் என் அப்பாவிடம் பற்ற வைக்க, அப்பா என்னைக் கூப்பிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு என்னை தொலைத்து எடுத்து விட்டார். அப்போது எல்லாம் எனக்கு கோபம் கோபமாக வரும். பேசாமல் அந்த தவறை நாமும் செய்துருக்கலாமோ எனத்தோன்றும். ஆனால், இப்போது அந்த சம்பவங்களை நினைத்தால், "நல்ல வேலை எந்த தவறும் செய்ய வில்லை என்ற சந்தோசமே வருகிறது".

நன்றாக யோசித்து பாருங்கள். பல சந்தர்ப்பங்களில் நாம் செய்யாத தவறுகளுக்கு, நண்பர்கள் செய்த தவறுகளுக்கு நம்மை நம் பெற்றோர்கள் கண்டித்திருப்பார்கள். அப்போது எல்லாம் நமக்கு கோபம் வந்தாலும் அந்த புத்திமதிகளை நாம் ஏற்றுக் கொண்டுதான் வாழ்ந்திருப்போம். ஆனால், இப்போது அட்வைஸ் என்ற பெயரில் யாராவது என்னிடம் பேச ஆரம்பித்தால் எனக்கு கொலை வெறி வருகிறது.

எனக்கும் ஓரளவுக்கு வயது ஆகிவிட்டது. கல்யாணம் ஆகி இரண்டு குழந்தை ஆகிவிட்டது. வாழ்வில் நல்லது எது? கெட்டது எது? என்று அடுத்தவர்கள் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நான் இல்லை. இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், எனக்கு சமீபத்தில் ஏற்பட்ட மிக கசப்பான அனுபவம்தான் காரணம்.

அவர் என்னைவிட வயதில் மூத்தவர். என்னைவிட படிப்பில் குறைந்தவர். தண்ணி அடிப்பவர். 24 மணி நேரத்தில் அதிக நேரம் பெண்களைப் பற்றியே நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் அலைபவர். என் போல உடல் நிலையில் அக்கரை செலுத்துபவர் இல்லை. ஒரு உடற்பயிற்சி செய்வது கிடையாது. எந்த நல்ல பழக்க வழக்கங்களும் இல்லாதவர். தெய்வ நம்பிக்கை இல்லாதவர். அவரிடம் இருக்கும் எந்த கெட்ட பழக்கமும் என்னிடம் இல்லை. முன்பெல்லாம் நான் அதிகம் கோபப் படுவேன். இப்போது அதையும் ஓரளவு கட்டுப் படுத்தி விட்டேன். அவரிடம் எனக்கு பிடிக்காத விசயம் தன்னை ஒரு பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு அனைவருக்கும் அறிவுரை சொல்வது. இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு அறிவுரை சொல்ல வந்தவரை பார்த்து எனக்கு பயங்கர கோபம். ஒரு மனிதன் ஒருவருக்கு புத்திமதி சொல்லுமுன் தான் அதற்கு தகுதியானவனா என யோசிக்க வேண்டும்.

என்னிடம் இருக்கும் எந்த நல்ல பழக்கமும் அவரிடம் இல்லை. அவரிடம் இருக்கும் எந்த கெட்ட பழக்கமும் என்னிடம் இல்லை. என்னை விட வயதில் மூத்தவர் என்ற ஒரே காரணத்திற்காக அவர் சொல்வதை எல்லாம் நான் ஒத்துக் கொள்ள வேண்டுமா என்ன? அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லும் முன் அனைவரும் தன் முதுகை ஒரு முறை பார்த்துக்கொள்வது நல்லது. நான் அவரை சொல்லாலே அடித்து துரத்தி விட்டேன். நான் அவர் கூறியதை அப்படியே ஒத்துக் கொண்டிருந்தால் என்ன நடந்து இருக்கும் தெரியுமா? கடைசி வரை தான் ரொம்ப புத்திசாலி என்று நினைத்து சாகும் வரை அவர் அப்படியே வாழ்ந்து விடுவார். இந்த மாதிரி ஆட்களின் புத்திமதிகளை பின் பற்றினால் என்ன ஆகும்? நாம் சாகும் வரை சுயமாக சிந்திக்காமலே இருந்து விடுவோம். நாம் செத்தால் கூட செத்த பிணத்துக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

சாகும் வரை அடுத்தவரின் அட்வைஸ்களை கேட்டுக்கொண்டிருந்தால் நாம் சுயமாக சிந்திப்பது எப்போது???

அதனால் நண்பர்களே, நாம் யாரும் யாருக்கும் அநாவசியமாக அட்வைஸ் செய்ய வேண்டாம். அதற்கு முன் நமக்கு அந்த தகுதி உள்ளதா என பார்த்து பிறகு அட்வைஸ் பண்ணுவதை பற்றி யோசிக்கலாம்.

என்ன நான் சொல்லுவது சரிதானே?

Sep 8, 2009

மிக்ஸர் - 08.09.09

சனிக்கிழமை இரவு 7.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை மலேசியாவின் ஆஸ்ட்ரோ வானவில் சேனலில் "சூப்பர் ஸ்டார்" இறுதி சுற்று நடந்தது. நேரடி ஒளிபரப்பாக நடத்தினார்கள். மொத்தம் ஏழு பேர் இறுதிச்சுற்றில் கலந்து கொண்டார்கள். தலைமை நீதிபதியாக இந்தியாவிலிருந்து வந்த இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி பொறுபேற்றிருந்தார். ஒவ்வொருத்தரும் பாடி முடித்தபின் விஜய் ஆண்டனி கீழே உள்ளவாறு தனது கமெண்டினை கூறினார்:

" கிழிச்சிட்டீங்க. நீங்க மிகப்பெரிய நடிகையாகவும், பாடகியாகவும் ஆக வாய்ப்பு இருக்கிறது"

" பதினெட்டு வயசுல உங்கள் வோக்கல் டெலிவரி ரொம்ப அருமை. நீங்க மட்டும் சென்னையில இருந்திருந்தா வாரம் ஒரு முறை உங்களை வைத்து ஒரு பாடல் ரெக்கார்ட் பண்ணுவேன்"

" நீங்க பாட்டோட நல்லா நடிக்கவும் செய்யறீங்க. நீங்க ஏன் நடிகையாக முயற்சி பண்ணக்கூடாது"

" அருமையா ராப் பாடறீங்க. நீங்க மிகச்சிறந்த ராப் பாடகராக வருவீங்க"

" என்னை கேட்டா நீங்க கிளம்பி உடனே சென்னைக்கு போங்க. நீங்க நல்ல நடிகையாகவும், பாடகியாகவும் வாய்ப்பு இருக்கு"

" என்ன சொல்லறதுனு தெரியல. ஒரே பிரமிப்பா இருக்கு"

கடைசியில செலக்ட் பண்ணது ஒருத்தரைத்தான். பாராட்ட வேண்டியதுதான். அதற்காக இப்படியா?. அவர்களிடம் இருக்கும் குறையை சொன்னால்தானே அவர்களுக்கு தெரியும். அவர்களால் குறைகளை சரி பண்ண முடியும். எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக இப்படியா?

**************************************************

என் அப்பா இறந்து ஒரு மாதம் கழித்துத்தான் என்னால் ஒரு சரியான மனநிலையை அடைய முடிந்தது. இன்றும் அவர் நினைவுகள் வரும்போது வேறு எந்த வேலையும் ஓடாது. ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி மறைந்து சில தினங்கள் கூட ஆக வில்லை. அதற்குள் ஜெய் மோகன் ரெட்டி முதல்வராக துடிக்கிறார். அவராக துடிக்கிறாரா இல்லை மற்றவர்கள் ஏற்றி விடுகிறார்களா தெரியவில்லை. 35 வயதில் ஒரு மாநிலத்தை ஆளக்கூடிய திறமை அவருக்கு இருக்கிறதா? இல்லை வேறு யாருமே ஆந்திராவில் காங்கிரஸில் திறமையானவர்கள் இல்லையா? YSRன் மகன் என்பதற்காக அவருக்கு அந்த பதவி கொடுக்க வேண்டுமா என்ன? பார்ப்போம். சோனியா என்ன முடிவு எடுக்கிறார் என்று?

**************************************************

குமுதத்தில் படித்த ஒரு செய்தி. அமெரிக்காவில் மர்லின் மன்றோவின் கல்லறைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு இடம் சென்ற வாரம் ஏலம் விடப்பட்டது. இறந்தபின் மன்றோவுக்கு அருகில் தன்னைப் புதைக்க விரும்பிய ஒருவர் இரண்டே முக்கால் கோடி ரூபாய்க்கு அதை வாங்கியிருக்கிறார். என் கேள்வி இதுதான்? இறந்த பிறகு அந்த இடத்தில் அவரை புதைக்காமல் வேறு இடத்தில் புதைத்தால் அவர் என்ன செய்வார்?? என்னங்கையா இது? பணம் இருக்கு அப்படிங்கறதுக்காக இப்படியா???

**************************************************

எனக்குப் பிடித்த நடிகர்களுல் ஒருவரான பிரகாஷ் ராஜுக்கு தேசிய விருது கிடைத்து இருப்பது சந்தோசமாக இருக்கிறது. மிகச்சிறந்த நடிகர் அவர். எந்த பாத்திரம் என்றாலும் அந்த பாத்திரமாகவே மாறிவிடக்கூடியவர். சமீபத்தில் 'அபியும் நானும்' பார்த்தேன். உண்மையாக ஒரு அப்பா எப்படி இருப்பாறோ அப்படியே வாழ்ந்து காட்டியிருக்கிறார். இன்னும் நான் அந்த பட பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை. காரணம், பல காட்சிகள் என் வாழ்வில் நடந்தவைகளாகவும், நடந்து கொண்டிருப்பதாகவும் இருப்பதால். ஆனால், அவர் விருது வாங்கிய அந்த படம்தான் (காஞ்சிபுரம்) எப்போது வந்தது, எப்போது போனது என்று தெரியவில்லை?

வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ் சார்.


**************************************************

ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டியின் மறைவினை அடுத்து தினமும் 100 பேர் மாரடைப்பினாலோ அல்லது தற்கொலை செய்தோ இறக்கிறார்களாம். இதுவரை 500 பேர் இறந்துள்ளார்களாம். மாரடைப்பினால் இறந்தவர்களை விட்டு விடுவோம். தற்கொலை செய்பவர்களை நினைத்தால்தான் வேதனையாக உள்ளது. ஒரு தலைவர் மேல் பாசமாக இருக்க வேண்டியதுதான். அதற்காக இப்படியா? ஒரு மனிதன் உயிருக்கு மதிப்பு அவ்வளவுதானா? உன் தலைவருக்காக நீ இறக்கிறாய்? உன் குடும்பம் எத்தனை கஷ்டப்படும் என நீ நினைத்து பார்த்தாயா?

வேறு மாதிரி சிந்தித்தால் யாருக்காகவோ தன் குடும்பத்தை பற்றி நினைக்காமல் தன் உயிரை துறக்க முடிந்தவர்கள் இந்த உலகத்தில் இருந்தால் என்ன? செத்தால் என்ன????

**************************************************

எனக்கு விஜய் படங்கள் ரொம்ப பிடிக்கும். வில்லு தவிர அனைத்தையும் பார்த்து விட்டேன். என் பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால், அவரை தமிழக முதல்வராக நினைத்துப் பார்க்க.....?

சாரி பாஸ், இது ரொம்ப டூஊஊஊஊ மச்!!!!!!!

**************************************************

Sep 4, 2009

மற்ற உயிர்களுக்கு மதிப்பு அவ்வளவுதானா?ஆந்திர முதல்வராக இருந்த YS ராஜசேகர ரெட்டியின் மறைவு என்னை மிகவும் பாதித்து விட்டது. ஒரு நாள் கழித்துதான் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியே நமக்குத் தெரிய வருகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வரின் உடல் கருகிய நிலையில் யாரும் கவனிக்கபடாத நிலையில் 24 மணி நேரம் ஒரு காட்டில் இருந்திருக்கிறது. என்ன கொடுமை இது? என்னதான் கடும் மழை என்றாலும், அதற்காக இப்படியா? இந்த நிலையில் நாம் இந்தியா ஒரு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம். வல்லரசு ஆவதற்கு நாம் எல்லா விதத்திலும் தகுதியுடன் இருக்க வேண்டாமா? ஒரு மாநில முதல்வருக்கே இப்படி என்றால், சாதாரண பொதுமக்களுக்கு இப்படி விபத்து ஏற்பட்டால்..? நினைத்துப்பார்க்கவே கஷ்டமாக உள்ளது.

இந்த நிலையில் சில கேள்விகள்:

01. தொடர்பு விடுபட்ட நான்கு மணி நேரத்திற்கு பிறகுதான் தேடவே ஆரம்பித்திருப்பது ஏன் என்று தெரியவில்லை?.

02. அவர்கூட மற்ற எம்.எல்.ஏக்களோ இல்லை அமைச்சர்களோ ஏன் செல்லவில்லை? ஒரு அரசு நிகழ்ச்சிக்கு ஒரு முதல்வர் மட்டுமா போவார்?

03. ஒரு வருடமாக பயன்பாட்டில் இல்லாத ஹெலிஹாப்டரில் அவரை பயணிக்க அனுமதித்தது ஏன்?

அவரின் மறைவு குறித்த மேலும் பல சந்தேகங்களை ஏற்கனவே சிலர் எழுதிவிட்டார்கள்.

நேற்று சன் டிவி, மக்கள் டிவி என அனைத்து டிவிகளிலும் இந்த செய்திதான். பார்க்க, கேட்க மிக கஷ்டமாக இருந்தது. ஆனால், என்னை அதிகம் துன்பப் பட வைத்த இன்னொரு விசயம், அவர்கூட பயணம் செய்த மற்ற நான்கு நபர்களை பற்றி. அவர்களும் ராஜசேகர ரெட்டியுடனே இறந்து விட்டார்கள். ஆனால், அனைத்து பத்திரிக்கைகளும், டிவிக்களும் இந்த நான்கு நபர்களை ஒரு பொருட்டாக மதித்ததாகவே தெரியவில்லை.

ஒரு மாநில முதல்வர் இறந்தது மிகுந்த சோகமான விசயம்தான். இதில் மாற்று கருத்துக்கே இடமில்லை. அதனால் அவரைப் பற்றியும், அவரின் வாழ்க்கையை பற்றியும், அவரின் விபத்து பற்றியும் மக்கள் அறிந்து கொள்ள நினைப்பதும், அதை பத்திரிக்கைகள் மற்றும் டிவிக்கள் செய்திகளாக வெளியிடுவதும் தேவையான ஒன்றுதான். ஆனால், அவர்கூடவே உயிர்விட்ட மற்ற நபர்களைப் பற்றி யாருமே கண்டு கொண்டதாக தெரியவில்லையே. அவர்கள் உயிரும் விலை மதிக்க முடியாதது தானே? அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்குமே? அந்த குடுமபங்கள் எவ்வளவு வேதனைப்படும்?


பிரிவினால் வாழும் YG ராஜசேகர ரெட்டியின் குடும்பத்திற்கும், மற்ற நான்கு நபர்களின் குடும்பத்திற்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

Sep 1, 2009

மிக்ஸர் - 01.09.2009

எங்க பார்த்தாலும் பதிவர்கள் சினிமா விமர்சனம் அப்படி இப்படினு எழுதீட்டாங்க. இது சரியா? அவங்க எவ்வளவு செலவு பண்ணி படம் எடுக்குறாங்க. நீங்க இப்படி ஒட்டு மொத்தமா படம் சரியில்லைனு சொன்னா, படம் எப்படி ஓடும்? அப்படினு நிறைய பேர் கேள்வி எழுப்பிகிட்டு இருக்காங்க. படம் நல்லா இருக்குனு பதிவர்கள் சில படத்தை பற்றி எழுதியபோது யாரும் அப்படி எழுதிய பதிவர்களை பாராட்டல. நல்லா இருக்க படத்தையை நல்லா இருக்குன்னு சொல்லறதும், நல்லா இல்லாத படங்களை நல்லா இல்லைனு சொல்றதும் என்ன தப்பு இருக்குனு எனக்கு புரியல. உங்களை யாரு நிறைய செலவு செய்து படம் எடுக்க சொல்றா? குறைந்த செலவுல நல்ல படமா எடுங்க. 100 கோடி செலவு பண்ணறீங்க. அதுல 20 கோடி ஒரே ஒரு நடிகர் எடுத்துக்கிட்டு தொடர்ந்து பணக்காரறாவே இருப்பார். ஏழைங்க நிறைய காசு செலவு பண்ணி படம் பார்த்து உங்களை பணக்காரர் ஆக்கணுமா? என்னையா நியாயம் இது?

*************************************

பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் இவர்களின் விவாகரத்துச் செய்திகளை பார்க்கும்போது மனம் மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாகிறது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை இது. இருந்தாலும், தினமும் ஏதோ ஒரு வகையில் அவர்களை பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அவர்களும் நம்மை சந்தோசப் படுத்திகொண்டிருக்கிறார்கள். யாருடைய விவாகரத்து செய்திகள் காதுக்கு வந்தாலும் வேதனையாக இருக்கிறது, அதுவும் நமக்கு பிடித்தவர்களுக்கு அந்த நிலை வரும்போது......? என்ன செய்ய??? ஆனால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. ஆனால், எல்லா பத்திரிக்கைகளிலும் அக்கு வேறு ஆணி வேறாக அவர்களின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து எழுதுகிறார்கள். இது தேவையா? ஒரு முறை கமல் கூறியது நினைவுக்கு வருகிறது:

" நான் உங்களை சந்தோசப்படுத்தும் ஒரு நடிகன். என் வாழ்க்கை என்னுடையது. என் பெட் ரூமில் நுழைந்து எட்டி பார்க்கும் உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது?"

சரிதான் இல்ல.

*************************************

பாஜாகாவில் பயங்கர உட்கட்சி பூசல். என்ன நடக்கிறதென்று ஒன்றுமே புரியவில்லை. அதவானியை எதிர்கட்சி தலைவர் பதிவியிலிருந்து நீக்க முயற்சிகள் நட்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மன்மோகன் சிங் பாஜாகாவைப் பற்றி சொன்னது என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது,

" பாஜாகாவில் நடக்கும் உட்கட்சி குழப்பம் நாட்டுக்கு நல்லதல்ல. ஒரு பிரதான எதிர்கட்சி நல்ல ஸ்திரத்தன்மையுடன் இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது. விரைவில் குழப்பங்கள் தீரும் என எதிர்பார்க்கிறேன்"

*************************************

மெயிலில் ஆங்கிலத்தில் வந்த ஒரு நல்ல விசயம்:

பயங்கர தலைவலி போதையுடன் தூக்கத்திலிருந்து விழித்தான் அவன். கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த அவனுக்கு அருகில் மேஜையில் இருந்த ஆஸ்பிரின் மாத்திரையும், ஒரு டம்ளரில் இருந்த தண்ணிரும் தெரிந்தது. எழுந்து உட்கார்ந்தான். அவன் முன்னே அவன் அன்று அணிய தேவையான உடைகள் நன்றாக அயர்ன் செய்து மடித்து வைக்கப்பட்டிருந்தது. அவன் அறை முழுவதும் பார்த்தான், எல்லாமே சுத்தமாக, அவை அவை இருக்க வேண்டிய இடத்தில் சரியாக இருந்தது. வீடு முழுவதுமே சுத்தமாக இருந்தது. ஒரு ஆஸ்பிரினை எடுத்து வாயில் போட்டவன், டேபிளில் இருந்த ஒரு பேப்பரில் ஏதோ எழுதியிருந்ததை கவனித்தான்.

" ஹனி, உங்களின் காலை உணவு மேஜையில் உள்ளது. நான் ஷாப்பிங் செய்ய வேண்டியிருப்பதால் சீக்கிரமே கிளம்பி விட்டேன், லவ் யூ"

என எழுதியிருந்தது. எழுதியிருந்தது அவனின் மனைவி. படித்தவன் பயங்கர அதிர்ச்சியுடன் கிச்சன் சென்றான். அங்கே சாப்பாட்டு மேஜையில் அவனுக்காக சூடான காலை உணவும், அன்றைய செய்திதாளும் இருந்தது. அவனின் பையன் அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

பையனிடம் கேட்டான்,

" நேற்று இரவு என்ன நடந்தது?"

பையன் கூறினான், " அப்பா நீங்கள் அதிகாலை மூன்று மணிக்கு பயங்கர குடி போதையுடன் தள்ளாடிகிட்டே வந்தீங்க. கையில கிடைச்ச பொருளையெல்லாம் எடுத்து உடைச்சீங்க. நடக்க முடியாம கதவுல போய் மோதி விழுந்தீங்க"

குழப்பமடைந்த அவன் மீண்டும் கேட்டான்,

" அப்படின்னா, ஏன் எல்லாம் சுத்தமா ஒழுங்கா இருக்கு. காலை சாப்பாடு கூட எனக்காக மேஜைல காத்திட்டு இருக்கு. எனக்கும் உன் அம்மாவுக்கும் சண்டைதானே வரணும்"
பையன் இப்படி பதில் அளித்தான்,

"அம்மா உங்களை இழுத்துட்டு பெட் ரூம் போனாங்க, உங்க உடைகளையும் ஷீவையும் அவிழ்க்க போனாங்க, அப்போ நீங்க இப்படி சொன்னீங்க,

“LADY LEAVE ME ALONE! I’M MARRIED . . . !”

*************************************

இது எப்படி இருக்கு?

If a barber makes a mistake - It’s a new style
If a driver makes a mistake - It is a new path
If parents make a mistake - It is a new generation
If a politician makes a mistake - It is a new law
If a scientist makes a mistake - It is an invention
If a tailor makes a mistake - It is a new fashion
If a teacher makes a mistake - It is a new theory
If our boss makes a mistake - It is a new idea!

*************************************