Sep 18, 2009

இசையும் என் வாழ்க்கையும் -1

சிறு வயதில் இருந்தே என் ரத்தத்தில் இசை கலந்து விட்டது. நான் வயிற்றில் இருந்த போது அம்மா அடிக்கடி " எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்" என்ற பாடலை அடிக்கடி பாடிக்கொண்டே இருப்பாராம். அதனால்தானோ என்னவோ எனக்கு இசையின் மீது அதிக காதல் வந்தது. நான் பள்ளிப்படிக்கும் காலக்கட்டத்தில் எங்கள் வீட்டில் ஒரு நல்ல ரேடியோ கூட கிடையாது. ஒரு சாதாரண ரேடியோதான் இருக்கும். அதில் பாடல் கேட்க வீட்டில் எல்லோரும் ஒரு இடத்தில் அமர்ந்துவிடுவோம். காலையில் படிக்க 4.30 மணிக்கு எழுந்து விடுவேன். அப்போது சிலோன் ரேடியோவில் அதிகாலையில் அதிகம் ஒலிபரப்பும் பாடல் SPBயின் "ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ". அந்த பாடலைக்கேட்டு விட்டுத்தான் நான் படிக்கவே ஆரம்பிப்பேன்.

விவித பாரதி ஒலிபரப்பில் ஞாயிறு காலை 8.30 மணிக்கு புதுப் பாடல்கள் ஒலி பரப்புவார்கள். அந்த நேரத்தில்தான் வீட்டில் கடைக்குப் போகச்சொல்லி விரட்டுவார்கள். கடைக்குப் போனாலும் அங்கு ஏதாவது ஒரு டீக் கடையில் நின்று பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பேன். இளையராஜா பிரபலமான சமயத்தில் அவர் பாடல்களின் மீது பித்து பிடித்து அலைந்தவர்களில் நானும் ஒருவன். அப்போது ரேடியோவில் அவ்வப்போது ஒலியாகும் பாடல்களைவிட நமக்குப் பிடித்த பாடல்களை நாம் விரும்பும் சமயத்தில் கேட்டால் என்ன என நினைத்து அப்பாவிடம் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கித் தரச் சொன்னேன்.

அப்பா கூறியது இன்னும் நினைவில் இருக்கிறது, " இந்த மாத வீட்டு வாடகை எப்படி கொடுப்பது என்று நானே தவித்துக் கொண்டிருக்கிறேன். உனக்கு டேப் ரெக்கார்டர் வேண்டுமா?" என அன்பாக கோபித்துக் கொண்டார். என்னதான் அப்பா சொன்னதில் நியாயம் இருந்தாலும் எனக்கு என்னவோ மனதில் ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் நண்பன் ஒருவன், "டேய் நல்ல டேப் ரெக்கார்டர் வாங்கனும்னுனா நிறைய காசு செலவு பண்ணனும். சிங்காரத்தோப்புல ஒரு கடை இருக்கு அங்க டெல்லி செட்டுனு சொல்லி விக்கறாங்க. விலை 250 ரூபாய்தான். அங்க வேணா வாங்கேன்" என்றான்.

ஆனால் 250 ரூபாய்க்கு எங்கே போவது. பிறகு அப்பா கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்தேன். முழு பணமும் சேர்க்கும் வரையில் தினமும் அந்த கடைக்குப் போவேன். அந்த டேப் ரெக்கார்டரை தொட்டுப் பார்த்து விட்டு வருவேன். இதே போல் சில காட்சிகள் தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படத்தில் இருகும். அவர் தினமும் ஒரு பைக் கடைக்கு சென்று வருவார். அந்த காட்சிகளைப் பார்க்கும்போது என் பழைய நினைவுகள் வந்து போயின. ஒரு வழியாக அந்த டேப் ரெக்கார்டரை வாங்கினேன். எனக்குப் பிடித்த அனைத்து பாடல்களையும் பதிவு பண்ண எண்ணி சோனி கேசட் வாங்க கடைக்குச் சென்றேன். அவர்கள் சொன்ன விலைக்கு வாங்க இன்னும் ஒரு மாதம் சேமிக்க வேண்டிய நிலை.

மிகவும் நொந்து போன நிலையில் பர்மா பாஜாரை கடந்து சென்று கொண்டிருந்த போது அங்கே வெளி நாட்டுப் பொருட்களை விற்கும் ஒருவன், தன்னிடம் வெளி நாட்டு கேசட்கள் இருப்பதாகவும் விலை கம்மி என்றும் சொன்னான். நானும் உடனே பாடல்கள் கேட்கும் ஆசையில் ஐந்து கேசட்கள் உள்ள பார்சலை மிகக் குறைந்த விலையில் வாங்கினேன். பிறகு எனக்குப் பிடித்த பாடல்களை எல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு அதை ரெக்கார்ட் செய்வதற்காக கேசட் ரெக்கார்டிங் கடைக்குச் சென்றேன். அங்கே சென்று பிரித்துப் பார்த்தால் கேசட்டிற்கு பதில் கண்டதையும் கட்டிக் கொடுத்து அழகாக பார்சல் பண்ணி என்னை நன்றாக ஏமாற்றி விட்டிருக்கிறான் எனத் தெரிந்தது. உடனே நான் ஏமாற்றப் பட்டதை அறிந்து மீண்டும் பர்மா பாஜாருக்கு சென்றேன். அவனை தேடிக் கண்டு பிடித்துக் கேட்டால், எதுவுமே நடக்காதது போலவும், என்னை யார் என்றே தெரியாது என்று கூறிவிட்டான். அவனிடம் கோபமாக சண்டை போட ஆரம்பித்தேன். ஒரு ஐந்து நிமிடத்திற்குள் என்னைச் சுற்றி அவனின் ஆட்கள். தப்பி பிழைத்து வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

சரி, எப்படித்தான் கேசட் வாங்குவது என்று நினைத்து, கடைசியில் அந்த முடிவுக்கு வந்தேன்.

-தொடரும்

3 comments:

Cable சங்கர் said...

இப்பத்தான் சுருதி சேக்குறீங்க போலருக்கு..

iniyavan said...

வருகைக்கு நன்றி கேபிளார்.

Beski said...

அருமை.
நம்முடைய பழைய நினைவுகளையும் கிளருகிறீர்கள். நான் 9ம் வகுப்பு படிக்கும்போது வீட்டில் டேப் வந்தது. காசு சேர்த்து கேசட் வாங்கி, பதிந்து வாங்கி விடுவேன். கடையிலிருந்து வீட்டிற்கு வரும் வரை மனது பொறுக்காது.

இன்னும் அத்தனை கேசட்டுகளும் வீட்டின் ஒரு மூலையில் நினைவுகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.