சிறுவயதுல சின்ன சின்ன தவறுகள் செய்ய நேரும்போது நமக்கு நல்ல புத்திமதிகள் சொல்லி நம்ம அம்மாவோ, அப்பாவோ இல்லை ஆசிரியரோ திருத்துவாங்க. அப்போ அது நமக்கு தேவையா இருந்தது. எல்லாவற்றையும் கேட்டு அதன்படி நடக்க ஆரம்பித்த காலம் அது. பிறகு கொஞ்சம் பெரியவனாகி +2 படிக்கும் நேரத்தில் பெண்களின்பால் அதிக ஈர்ப்பு ஏற்பட்ட சமயங்களில் அம்மா ஒரு முறை என்னை கூப்பிட்டு அறிவுரை சொன்னது நினைவுக்கு வருகிறது. அந்த இரண்டுங்கெட்டான் வயதில் அது அப்போது எனக்கு தேவையாய் இருந்தது.
படிப்பு முடித்து வேலைக்கு அலைந்து கொண்டிருந்த சமயங்களில் நண்பர்களின் கடைகளில் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்த சமயங்களில் அப்பா அடிக்கடி கூறிய அறிவுரைகள் அந்த வயதில் தேவையாக இருந்தது.
ஒரு முறை என் நண்பனின் கடையில் உட்கார்ந்து பேசிகொண்டிருந்தேன். அவனுக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அது ஒன்றும் காதல் இல்லை. அது காதல் இல்லை என்றால் வேறு என்ன? வேறு என்ன? என்பதைப் பற்றி இங்கு விவரிக்கவும் எனக்கு விருப்பம் இல்லை. நாங்கள் பேசிக்கொண்டிருந்த வேலையில் அங்கு அந்த பெண் வந்து விட்டாள். பிறகு அவர்கள் அடித்த லூட்டியை காண சகிக்காமலோ இல்லை பொறாமையாலோ அந்த இடத்திலிருந்து உடனே சென்று விட்டேன். உண்மைதான் பொறாமைதான். அந்த வயது அனைத்துக்கும் ஆசைப்பட்ட வயது. ஆனால் என்ன பண்ண? பல்லு இருந்தவன் எல்லாம் பட்டாணி சாப்பிட்டான். ஆனால், அப்பா அம்மாவிற்கும், குடும்ப கவுரவத்திற்கும் பயந்தே நல்லவனாக வாழ்ந்த காலம் அது.
அந்த பெண் வந்ததையும் அதற்கு பின் நடந்தவைகளும் எதிரில் உள்ள கடையிலிருந்து பார்த்த என் அப்பாவின் நண்பர் என் அப்பாவிடம் பற்ற வைக்க, அப்பா என்னைக் கூப்பிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு என்னை தொலைத்து எடுத்து விட்டார். அப்போது எல்லாம் எனக்கு கோபம் கோபமாக வரும். பேசாமல் அந்த தவறை நாமும் செய்துருக்கலாமோ எனத்தோன்றும். ஆனால், இப்போது அந்த சம்பவங்களை நினைத்தால், "நல்ல வேலை எந்த தவறும் செய்ய வில்லை என்ற சந்தோசமே வருகிறது".
நன்றாக யோசித்து பாருங்கள். பல சந்தர்ப்பங்களில் நாம் செய்யாத தவறுகளுக்கு, நண்பர்கள் செய்த தவறுகளுக்கு நம்மை நம் பெற்றோர்கள் கண்டித்திருப்பார்கள். அப்போது எல்லாம் நமக்கு கோபம் வந்தாலும் அந்த புத்திமதிகளை நாம் ஏற்றுக் கொண்டுதான் வாழ்ந்திருப்போம். ஆனால், இப்போது அட்வைஸ் என்ற பெயரில் யாராவது என்னிடம் பேச ஆரம்பித்தால் எனக்கு கொலை வெறி வருகிறது.
எனக்கும் ஓரளவுக்கு வயது ஆகிவிட்டது. கல்யாணம் ஆகி இரண்டு குழந்தை ஆகிவிட்டது. வாழ்வில் நல்லது எது? கெட்டது எது? என்று அடுத்தவர்கள் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நான் இல்லை. இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், எனக்கு சமீபத்தில் ஏற்பட்ட மிக கசப்பான அனுபவம்தான் காரணம்.
அவர் என்னைவிட வயதில் மூத்தவர். என்னைவிட படிப்பில் குறைந்தவர். தண்ணி அடிப்பவர். 24 மணி நேரத்தில் அதிக நேரம் பெண்களைப் பற்றியே நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் அலைபவர். என் போல உடல் நிலையில் அக்கரை செலுத்துபவர் இல்லை. ஒரு உடற்பயிற்சி செய்வது கிடையாது. எந்த நல்ல பழக்க வழக்கங்களும் இல்லாதவர். தெய்வ நம்பிக்கை இல்லாதவர். அவரிடம் இருக்கும் எந்த கெட்ட பழக்கமும் என்னிடம் இல்லை. முன்பெல்லாம் நான் அதிகம் கோபப் படுவேன். இப்போது அதையும் ஓரளவு கட்டுப் படுத்தி விட்டேன். அவரிடம் எனக்கு பிடிக்காத விசயம் தன்னை ஒரு பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு அனைவருக்கும் அறிவுரை சொல்வது. இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு அறிவுரை சொல்ல வந்தவரை பார்த்து எனக்கு பயங்கர கோபம். ஒரு மனிதன் ஒருவருக்கு புத்திமதி சொல்லுமுன் தான் அதற்கு தகுதியானவனா என யோசிக்க வேண்டும்.
என்னிடம் இருக்கும் எந்த நல்ல பழக்கமும் அவரிடம் இல்லை. அவரிடம் இருக்கும் எந்த கெட்ட பழக்கமும் என்னிடம் இல்லை. என்னை விட வயதில் மூத்தவர் என்ற ஒரே காரணத்திற்காக அவர் சொல்வதை எல்லாம் நான் ஒத்துக் கொள்ள வேண்டுமா என்ன? அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லும் முன் அனைவரும் தன் முதுகை ஒரு முறை பார்த்துக்கொள்வது நல்லது. நான் அவரை சொல்லாலே அடித்து துரத்தி விட்டேன். நான் அவர் கூறியதை அப்படியே ஒத்துக் கொண்டிருந்தால் என்ன நடந்து இருக்கும் தெரியுமா? கடைசி வரை தான் ரொம்ப புத்திசாலி என்று நினைத்து சாகும் வரை அவர் அப்படியே வாழ்ந்து விடுவார். இந்த மாதிரி ஆட்களின் புத்திமதிகளை பின் பற்றினால் என்ன ஆகும்? நாம் சாகும் வரை சுயமாக சிந்திக்காமலே இருந்து விடுவோம். நாம் செத்தால் கூட செத்த பிணத்துக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
சாகும் வரை அடுத்தவரின் அட்வைஸ்களை கேட்டுக்கொண்டிருந்தால் நாம் சுயமாக சிந்திப்பது எப்போது???
அதனால் நண்பர்களே, நாம் யாரும் யாருக்கும் அநாவசியமாக அட்வைஸ் செய்ய வேண்டாம். அதற்கு முன் நமக்கு அந்த தகுதி உள்ளதா என பார்த்து பிறகு அட்வைஸ் பண்ணுவதை பற்றி யோசிக்கலாம்.
என்ன நான் சொல்லுவது சரிதானே?
13 comments:
adviceku nandri [:D]
//அப்பா அம்மாவிற்கும், குடும்ப கவுரவத்திற்கும் பயந்தே நல்லவனாக வாழ்ந்த காலம் அது. //
why blood same blood
//இப்போது அந்த சம்பவங்களை நினைத்தால், "நல்ல வேலை எந்த தவறும் செய்ய வில்லை என்ற சந்தோசமே வருகிறது". //
உண்மை ... இருந்தாலும் ஒரு ஏமாற்றம் ;-) வடை போச்சே :-)))
//நான் சொல்லுவது சரிதானே?//
உங்களை ரொம்ப டென்ஷன் பண்ணிட்டாரு போல இருக்கே ;-)
தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன். அருள்கூர்ந்து தொடரவும்
//adviceku nandri [:D]//
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி SPIDEY.
உங்களின் நகைச்சுவையை ரசித்தேன்.
//உண்மை ... இருந்தாலும் ஒரு ஏமாற்றம் ;-) வடை போச்சே :-)))//
ஆமா இல்லை.
வருகைக்கு நன்றி கிரி.
தொடர் பதிவிற்கு அழைத்ததிற்கு நன்றி டாக்டர்.
மிக்க நன்றி. அழகாகச் சொன்னீர்கள்.
எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது...
அட்வைஸ் ஒன்றுதான் எல்லோராலும் எல்லோருக்கும் வழங்கப்படுவது, ஏன் என்றால் அதற்கு காசு செலவில்லை.
இந்த இடுகைக்கு தமிழிஷ், தமிழ் மணம் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சுங்க
அருமையாக அறிவுரைகளை பிரித்து பொருள் உரைத்து உள்ளீர்கள்! இந்த பதிவு அறிவுரை இல்லை தானே!!!
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராகவன் சார்.
//இந்த பதிவு அறிவுரை இல்லை தானே!!!//
அய்யோ அதெல்லாம் இல்லீங்க.
வருகைக்கு நன்றி MJV.
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.
--
ஒரு காலத்துல அப்பா, அம்மா சொல்லும்போது எரிச்சலாயிருந்த விசயங்களை, இப்போது எனது தம்பியிடம் சொல்லும்போது, ஒரு வித்தியாசத்தை உணர்கிறேன். எதுக்கு சொன்னாங்கன்னு இப்பத்தான் புரியுது.
//சாகும் வரை அடுத்தவரின் அட்வைஸ்களை கேட்டுக்கொண்டிருந்தால் நாம் சுயமாக சிந்திப்பது எப்போது???////
இருந்தாலும் நீங்க அட்வைஸ் பண்ணுவது பிடித்திருக்கு...வாழ்த்துக்கள்
Post a Comment