Sep 28, 2009

கடைசியில் நானும்???

"எப்பங்க போலாம்?" வீட்டில் அடிக்கடி கேட்டுக் கொண்டு இருந்தார்கள். நான் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். கடைசியில் போன திங்கள் (21.09.09) அன்று போலாம் என முடிவானது. 19 ஆம் தேதியிலிருந்து நவராத்திரி பூஜை கோயிலில் ஆரம்பித்ததால் தினமும் இரவு தூங்க லேட் ஆனது. ரம்ஜான் லீவ் வேறு மூன்று நாட்கள். அதனால், முதல் நாள் இரவு அதிக நேரம் விழித்திருந்ததால் திட்டமிட்ட படி அன்று போக முடியவில்லை.

அனைவரின் விமர்சனமும் படித்த பிறகு நான் கந்தசாமி படம் போக வில்லை. ஆனால், விமர்சனங்கள் படித்த பின்னும் இந்தப் படம் பார்க்க அதிகமாக விரும்பினேன். பிறகு சனிக்கிழமை போகலாம் என முடிவெடுத்தோம். ஆன்லைனில் டிக்கட் முன் பதிவு செய்யலாம் என்றால், இந்த படத்திற்கு ஆன் லைன் முன் பதிவு இல்லையாம். எனக்கு எப்போதும் தியேட்டர் சென்று, வரிசையில் நின்று டிக்கட் வாங்கி படம் பார்க்க பிடிக்காது. தியேட்டருக்கு போன் செய்து சீக்கிரம் வந்தால் டிக்கட் முன் பதிவு செய்ய முடியுமா? எனக்கேட்டேன். அவர்கள் காலை 11.00 மணிக்கு மேல் வரச் சொன்னார்கள். அதனால், காலையில் சீக்கிரம் கிளம்ப முடிவானது. ஏனென்றால், நாங்கள் படம் பார்க்க ஒரு மணி நேரம் காரில் பயணம் செய்ய வேண்டும். அந்த ஊரில் தமிழ் படம் வருவதே மிகக் குறைவு. அதனால், எப்படியாவது இந்த வாரத்திலயே படத்தை பார்த்து விடவேண்டும், அடுத்த வாரம் படம் ஓடுமா? ஓடாதா? தெரியாது. அதற்குகாகத் தான் இந்த அவசரம், திட்டமிடல் எல்லாம். காலையில் எப்படியாவது சீக்கிரம் எழுந்து விட தீர்மானித்து இரவு 11 மணிக்கு படுத்தோம்.

தினமும் காலை 5.30க்கே எழுந்து விடுவதால், லீவு நாட்களில் கொஞ்சம் லேட்டாக எழுந்து பழக்கம். ஆனால், அன்று காலை எழுந்திருக்க 8 மணி ஆகிவிட்டது. உடனே கிளம்பலாம் என்றால், பிள்ளைகள் சூபர் 10 பார்த்து விட்டுதான் குளிக்க செல்வதாக கூறி விட்டார்கள். பிறகு அப்படி இப்படி என்று கிளம்ப காலை 10.10 ஆகி விட்டது. தியேட்டர் காம்பளக்ஸை நெருங்கினால், காரை பார்க் பண்ண இடம் கிடைக்கவில்லை. டிக்கட் வாங்கி விட்டு வருவதற்கு மொத்தம் 10 நிமிடம் தான் ஆகும். அதற்கு 2 ரிங்கிட் பார்க்கிங் சார்ஜ் கொடுக்க விருப்பம் இல்லை. அதனால், எல்லோரையும் காரில் இருக்க சொல்லி விட்டு நான் மட்டும் சென்று டிக்கட் வாங்க சென்றேன். டிக்கட் கவுண்ட்டரில் நான் மட்டும் தான். நான்கு டிக்கட் வாங்கி, எனக்கு பிடித்த சீட் நம்பர் வாங்கிக் கொண்டு காருக்கு வருவதற்குள் டென்சன். யாராவது போலிஸ் வந்து காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்தாதற்கு அபராதம் வசூலித்தால் என்ன செய்வது? அபராதம் என்றால் பரவாயில்லை. ஒரு வேளை சம்மென் அனுப்பி விட்டால், யார் கோர்ட்டுக்கு அலைவது? நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை. டிக்கடை பார்த்த பிறகுதான் பிள்ளைகளுக்கு திருப்தி. ஆனால், எனக்கு? VCDயில் பார்த்தால் 6 ரிங்கிட், தியேட்டர் டிக்கட் விலை மொத்தம் 30 ரிங்கிட்.

பிறகு அங்கே இருந்து சாப்பிங் காம்ப்ளெக்ஸ் சென்று, வாங்க வேண்டியதை எல்லாம் வாங்கி விட்டு, கொஞ்சம் செலவு செய்து விட்டு பிறகு அங்கிருந்து ஹோட்டலுக்கு வந்து, வெஜிட்டேரியன் சாப்பாடு சாப்பிட்டு விட்டு, 2 ரிங்கட் செலுத்தி காரை தியேட்டர் காம்ப்ளெக்ஸில் நிறுத்தி, லிப்ட் பிடித்து தியேட்டருக்கு செல்ல சரியாக மணி 2.20. மூன்று மணிக்குத்தான் படம்.

" டேய், யூரின் போறதுன்னா இப்பயே போய்ட்டு வந்துடு. அப்பறம் படம் போடும்போது புடுங்கி எடுக்காதே" என்று என் மனைவி என் பையனிடம் சொன்னது காதில் விழுந்தது.

" இல்லம்மா. நான் ஏற்கனவே போய்ட்டேன்"

" அப்பா, ஸ்வீட் கார்ன் வாங்கலாமா?" - பெண் கேட்டாள்.

" அப்பா, எனக்கு பெப்ஸியும், ஸ்வீட் கார்னும்" - பையன்.

எல்லோருக்கும் எல்லாம் வாங்கினேன். மொத்தம் 24 ரிங்கிட். எல்லாம் முடிந்து வந்து அருகில் இருந்த சேரில் உட்காரும் போது மணி 2.40.

" அப்பா, யூரின் போகணும்?" - பையன்.

" ஏண்டா, நான் தான் முதலயே கேட்டேன்ல" - மனைவி.

" சரி விடு. இங்கதான் இண்டர்வெல் வேற கிடையாதுல்ல"

அவனை பாத்ரூம் கூட்டிகிட்டு போய் வந்து சேர மணி 2.50. தியேட்டர் உள்ளே சென்றொம். மொத்தம் ஒரு 20 பேர் இருக்கலாம்.

முதலில் ஆதவன் ட்ரைய்லர் போட்டார்கள். சூர்யா அழகு. ஆனால், நயன்??? " அம்மா நயன்தாரா, உனக்கு அந்த மூக்குத்தி தேவையா?"

" ஏங்க, சீக்கிரம் படம் முடிஞ்சோன, கடைக்கு போயிட்டு (மறுபடியுமா?) கோயிலுக்கு போகணும். ஒரு 6.30 க்குள்ள வீட்டுக்கு போயிடனும்ங்க. அப்பத்தான் கோயிலுக்கு போக சரியா இருக்கும்"

" சரி சரி"

சரியாக 3 மணிக்கு படம் ஆரம்பித்தது. சரியாக 4.50 மணிக்கு படம் முடிந்தது.

கடைசியில் நானும் 'உன்னைப் போல ஒருவன்" படம் பார்த்து விட்டேன்.

10 comments:

கோவி.கண்ணன் said...

//கடைசியில் நானும் 'உன்னைப் போல ஒருவன்" படம் பார்த்து விட்டேன்.//

நீங்களும் விமர்சனம் எழுதாதவரை மகிழ்ச்சி

Cable சங்கர் said...

அது சரி படம் எப்படி இருந்தது.?

பரிசல்காரன் said...

கலக்கல்!

iniyavan said...

வருகைக்கு நன்றி கோவி சார்.

iniyavan said...

வருகைக்கு நன்றி கேபிள் சார்.

iniyavan said...

உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி பரிசல்.

Anonymous said...

i thought u gone to Kandhasamy but ena sir kadaciyil epadi ematinga.....

Beski said...

கடைசில ஏதோ சொல்ல வறீங்கன்னு நெனச்சேன்... ஹ்ம்ம்.

iniyavan said...

//i thought u gone to Kandhasamy but ena sir kadaciyil epadi ematinga.....//

வருகைக்கு நன்றி நண்பரே!!

iniyavan said...

வருகைக்கு நன்றி எ.வ.ஒ