Oct 30, 2009

வித்தியாசமான அனுபவங்கள் - 4

அந்த நண்பர் எனக்கு அறிமுகமானது 2002ல் என நினைக்கிறேன். மிக நன்றாக பேசுவார். நன்றாக பழகுவார். பைனான்ஸ் கம்பனி நடத்திக்கொண்டிருந்தார். எல்.ஐ.சி ஏஜண்ட் ஆகவும் இருந்தார். அவர் எனக்கு பழக்கம் ஏற்பட்ட நாட்களில் அவரைப் பற்றி என்னிடம் என் நலவிரும்பிகள் பல மாதிரி சொன்னதுண்டு. அவர் பழைய பைனான்ஸ் நடத்தியபோது பார்ட்னர்களை ஏமாற்றியதாகவும், அந்த பணத்தில் அவர் ஒரு கம்பனி ஆரம்பித்ததாகவும் சொன்னார்கள். நான் அதை அவரிடமே ஒரு முறை கேட்டதுண்டு. ஆனால், அவர் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். தான் நல்ல முறையில் அனைத்தையும் சரிபண்ணி விட்டதாக கூறினார். நான் அத்தோடு அந்த விசயத்தை விட்டுவிட்டேன். ஏனென்றால், அது அவருடைய தனிப் பட்ட விசயம். நண்பர்கள் என்னிடம் எப்படி பழகுகின்றார்கள் என்பதைத் தான் பார்ப்பேன். எல்லோருமே ஏதாவது ஒரு விசயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி என்றுதான் இருப்பார்கள். இவர் ரொம்ப ரொம்ப நல்லவர் என்று யாரையுமே நாம் குறிப்பிடமுடியாது. ஏதாவது ஒரு குறை எல்லாரிடமுமே இருக்கும்.

அதனால் நான் அவருடன் நன்றாகவே பழகினேன். அவர் இனிமையான பேச்சுக்கு சொந்தக்காரர். அவர் ஒரு முறை என்னை எல்.ஐ.சி பாலிஸி அவரிடம் எடுக்கச் சொன்னார். நண்பர் ஒருவர், "போயும் போயும் ஏன் அவனிடம் எடுக்கிறாய்" என என்னை தடுத்து விட்டார். 2006 ஆம் வருசம் ஒரு நாள். நான் இந்தியா சென்றிருந்த சமயத்தில் என்னை சந்தித்த நண்பர் அவர் SBI Unit Linked Insurance Plan ன் ஏஜெண்டாக இருப்பதாகவும், என்னை அதில் சேரும்படியும் வற்புறுத்தினார். ஒரு லட்சம் செலுத்தினால், 3 வருடம் லாக் இன் பீரியட் முடிந்து இரண்டு லட்சமாக கிடைக்கும் என்றும், பணத்தை இரண்டு லட்சமாக வாங்கும்போது அதற்கு வருமான வரி கிடையாது என்றும் கூறினார். அதே போல் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் வீதம் கட்டினால், மூன்றாவது வருடத்தில் ஆறு லட்சம் கிடைக்கும் என்றார். ஒரு வருடத்திற்கு இன்ஸ்யூரன்ஸ் கவர் ஆகும் என்றும் கூறினார். நான் பல முறை யோசித்து, ஹெட் ஆபீஸ் சென்று சம்பந்தப்பட்ட மேனேஜரை சந்தித்து, அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு, ஐந்து லட்சம் அதில் முதலீடு செய்தேன். நான் செலுத்திய பணத்தின் மூலம் அவர் டார்கட் முடிவடைந்து, அதனால் பேங்க் மூலம் ஒரு வெளிநாட்டு பயணமும் சென்று விட்டு வந்து விட்டார்.

பிறகு மறந்து விட்டேன். அவ்வப்போது ஊருக்கு செல்லும்போது நண்பர்களுடன் பாருக்கு செல்வதுண்டு. ஆனால் நான் தண்ணி அடிப்பதில்லை. சைட் டிஷ்க்காகவே செல்வேன். நண்பர்கள் குடித்து முடிக்கும் வரையில் நானும் பார்ட்டியில் இருப்பதுண்டு. சம்பந்தப்பட்ட அந்த நண்பர் நன்றாக குடிப்பார். நன்றாக சாப்பிடுவார். குடிக்கும் விசயத்தில் நான் யாருக்கும் அறிவுரைகள் சொல்வது கிடையாது. அது அவரவர்களின் பழக்கம். நல்லதா, கெட்டதா என்று அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அதிகமாக குடிக்கும் நபர்களை பற்றி நான் வருத்தப் படுவதுண்டு.

அடுத்த வருடம் நான் பணம் செலுத்தவில்லை. காரணம் எதிர்பார்த்த அளவு அதன் NPV Value அதிகரிக்க வில்லை. போன வருடம் நான் செலுத்திய பணத்தின் மதிப்பு ரூபாய் 5 லட்சத்திலிருந்து 2.50 லட்சமாக குறைந்து விட்டது. மனம் மிக வேதனை அடைந்தது. இந்த முறை ஊர் சென்ற போது அந்த நண்பரை போனிலோ அல்லது நேரிலோ ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று நினைத்து சென்றேன். முதலில் போனில் பேசலாம் என்று போன் நம்பரை தேடினால் காணவில்லை. உடனே இன்னொரு நண்பரிடம் அவருடைய போன் நம்பரை கேட்டேன்:

" எதுக்குடா போன் நம்பர்?"

" இல்லை மாப்பிள்ளை. அந்த SBI Unit Linked Insurance Plan பத்தி பேசணும்"

" இப்ப வேணாண்டா"

" ஏன்? நான் அவர்கிட்ட கோபமா ஒரு வார்த்தையாவது பேசணும்"

" வேணாண்டா பாவம்"

" ஏன், என்னாச்சு?"

" அவருக்கு திடீருனு இறப்பைல கேன்ஸர் வந்து, இறப்பையே வெட்டி எடுத்துட்டாங்க. அவரே கஷ்டப்படுறார்"

" எனக்கு ஒரே அதிர்ச்சி. ஏண்டா திடீருனு இப்படி?"

" தெரியலை"

" போய் பார்க்கலாமா?"

" வேண்டாம். இப்போ பார்த்தா வருத்தப்படுவ"

" ஏன்?"

" கீமோ தெராபி எடுத்து முடியெல்லாம் கொட்டி, பார்க்க கஷ்டமா இருக்கு"

நல்ல வேளை போன் நம்பர் என்னிடம் இல்லை. ஒரு வேளை நான் போன் செய்து அவர் நிலமை தெரியாமல் அவரை திட்டியிருந்தால்... நினைக்கவே சங்கடமாக உள்ளது. அவரைப் பார்த்தால் என்னால் தாங்கிக் கொள்ளமுடியாது என்பதால் அவரைப் பார்க்காமலே வந்துவிட்டேன்.

மீண்டும் சில நண்பர்கள், " அவன் செஞ்சதுக்கு, இப்போ அவன் அனு........றான்"

ஆனால், என்னால் இந்த கூற்றை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஒருவர் முடியாமல் இருக்கும்போது அவருடைய பழைய விசயங்களைச் சொல்லி என்னால் சந்தோசப் படமுடியவில்லை. என்னை பொறுத்தவரை யாருக்குமே இந்த மாதிரி கொடுமையான வியாதி வரக்கூடாது என்றே விரும்புகிறேன்.

அவரால் நம்மை போல் சாப்பிட முடியாது. ஏனென்றால் இறப்பை இல்லை. நாம் சாப்பிடுவதில் 10ல் ஒரு மடங்குதான் அவரால் சாப்பிட முடியும். தண்ணீர் கூட அதிகம் குடிக்க முடியாது. இப்படிப்பட்ட ஒருவரை நினைத்து எப்படி வருத்தப் படாமல் இருக்க முடியும்?

நம் நண்பர்களில் யாருக்காவது இவ்வாறு ஏற்படும்போது மனம் மிகுந்த வேதனை அடைகிறது.

ஆண்டவா, ஏன் இப்படி கொடிய வியாதிகளை கொடுத்து என் நண்பர்களை சோதிக்கிறாய்?

அனுபவங்கள் தொடரும்.....

Oct 29, 2009

கிறுக்கியதில் ஒன்று!!!

தினமும் இரண்டு தடவை
குளிக்கணும்
தினமும் நிறைய தண்ணீர்
குடிக்கணும்
தினமும் நன்றாக
தூங்க வேண்டும்
அடிக்கடி கையை
கழுவணும்
தினமும் நல்ல சத்துணவா
சாப்பிடணும்
தினமும் சுத்தமா
இருக்கணும்
அப்பத்தான் பன்றிக்காய்ச்சல்
வராது
என்றவனைப் பார்த்து,
"இதையெல்லாம்
ஏண்டா என் கிட்ட
சொல்லறீங்க"
என்றபடி செப்டிக் டேங்கை
கழுவ இறங்கினான்
பஞ்சாயத்து போர்டில்
வேலை பார்க்கும்
அந்த இளைஞன்.

வித்தியாசமான அனுபவங்கள் - 3

என் நெருங்கிய நண்பர் ஒருவர் தனியே ஒரு நிறுவனம் தொடங்கி நல்ல முறையில் நடத்தி வருகிறார். தற்போது ஏறக்குறைய 200 பேர் வேலை செய்கிறார்கள். சிறிய முதலீட்டில் ஆரம்பித்து இப்போது நன்றாக வளர்ந்து வருகிறது அவருடைய நிறுவனம். நான் எப்போது ஊருக்கு போனாலும் அவருக்காக ஒரு சில மணி நேரங்கள் ஒதுக்கி அவரைப் பார்த்துவிட்டு, அவருடன் மதிய உணவு அருந்திவிட்டு வருவதுண்டு. இந்த முறை நேரமின்மையால் என்னால் செல்ல முடியவில்லை. அவரிடம் போனில் பேசியபோது, அவர் கூறினார், "நானே உன்னை வந்து வீட்டில் சந்திக்கிறேன்". தீபாவளி முடிந்து இரண்டு நாட்கள் கழித்து வருவதாக சொன்னார்.

சரியாக இரண்டு நாட்கள் கழித்து போன் செய்தேன். ஊருக்கு வந்துவிட்டதாகவும், இன்னொரு நண்பர் வீட்டில் இருப்பதாகவும் கூறினார்.

நான் கூறினேன், " என்னிடம் தற்போது அங்கே வர வண்டியில்லை. உன்னால் என்னை வந்து அழைத்துச் செல்லமுடியுமா?"

" இல்லை. நானே வீட்டிற்கு வந்து பார்க்கிறேன். நீயே ஒரு வார விடுமுறையில் வந்து இருக்கிறாய், வேறேனும் வேலை இருந்தால் பார்" என்றார்.

அவர் சொல்வதும் நியாயமாக படவே நானும் மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன். அவர் சொல்லி இரண்டு மணி நேரமாகியும் வரவில்லை. நான் சாப்பிடாமல் அவருக்காக காத்திருந்தேன். பிறகு மதியம் இரண்டு மணி அளவில் இன்னொரு நண்பர் வீட்டுக்கு போன் செய்து, " ஏன் நண்பர் இன்னும் வரவில்லை?" என விசாரித்தேன்.

அவர் கூறினார், " அவர் போய் ஒரு 30 நிமிடம் ஆகிவிட்டதே. ஏதோ அவசர வேலையாம். உடனே திருச்சி சென்று விட்டார்"

எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. நாம் ஒவ்வொரு முறையும் அவரைச் சென்று பார்க்கிறோம். ஊருக்கு வந்தவர் என்னைப் பார்க்காமல் மற்றவர்களை மட்டும் எப்படி பார்த்துவிட்டு செல்லலாம்? வந்த கோபத்தில் போனை எடுத்தேன். ஆனால் அவர் போனை அட்டண்ட் செய்யவில்லை. எனக்கு இன்னும் கோபம் ஏறிவிட்டது. என்னை அவமான படுத்தியதாக நினைத்து, கன்னா பின்னா என்று திட்டி ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினேன். அதற்கும் பதிலில்லை. பிறகு விட்டு விட்டேன். அன்று முழுவதும் அந்த கோபம் எனக்குள் இருந்தது. ஆயிரம் சிந்தனைகள் தோன்றின. "அவன் முன்புபோல் இல்லை. கம்பனியின் முதலாளி. நாம் அவனை ஒப்பிடும்போது அவன் அளவு பணக்காரன் இல்லை போலும். அதான். இனி அப்படி ஒன்றும் அவனுடைய நட்பு தேவையில்லை" என நினைத்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள் இரவு அவனிடமிருந்து போன். அவன் பேரை பார்த்ததும் அவன் மேல் இருந்த கோபம் மறந்துவிட்டது. என்னை அறியாமல் கலகல என்று பேச ஆரம்பித்தேன்.

" ஏண்டா, அந்த மாதிரி எஸ் எம் எஸ் அனுப்பின?"

" நீ ஏன் வரவில்லை? ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாம் அல்லவா?"

" ஒருத்தன் உன்னைப் பார்க்க வீட்டிற்கு வரேன் என சொல்லியிருக்கிறான். ஆனால் வரவில்லை. போன் பண்ணியும் வராததற்கான காரணத்தைச் சொல்லவில்லை. இன்னொரு நண்பரிடமும் ஒன்றும் சொல்லவில்லை. போனையும் அட்டண்ட் பண்ணவில்லை. ஆனால் அவசரமாக கிளம்பியுள்ளான். அப்படியென்றால், அவனுக்கு உன்னைப் பார்ப்பதையும் விட ஏதோ ஒரு முக்கியமான வேலை இருந்திருக்கும் என்று ஏன் நீ நினைத்துப் பார்க்கவில்லை?"

" அதுபோல் எனக்கு நினைத்து பார்க்க முடியவில்லை. நீ என்னை அவமான படுத்தியதாக நினைத்தேன். அதனால் ஏற்பட்ட கோபத்தால் அவ்வாறு எழுதினேன். சரி, என்ன அப்படி உனக்கு முக்கியமான வேலை, என்னைப் பார்ப்பதை விட?"

" நான் உன்னைப் பார்க்க கிளம்பியவுடன் ஒரு போன் வீட்டிலிருந்து வந்தது. அப்பா வழுக்கி விழுந்து விட்டதாகவும், வலியில் துடிப்பதாகவும் அம்மா கூறினார். உனக்கே தெரியும் அப்பாவிற்கு 86 வயது. சுகர் பேஷண்ட். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என் மனது முழுவதும் அப்பாவே ஆக்கரமித்து இருந்த்தால் உடனே யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் கிளம்பி விட்டேன். உன்னிடம் பிறகு சொல்லிக் கொள்ளலாம், நீ புரிந்து கொள்வாய் என நினைத்தேன். ஆனால், நீ கோபப் பட்டு திட்டி விட்டாய். எனக்கு அப்பாவின் உடல் நிலை கவலையோடு நீ கோபமாய் இருக்கும் கவலையும் சேர்ந்து கொண்டது. உனக்கு கோபம் குறைந்ததும் பேசலாம் என நினைத்துதான் இன்றைக்கு பேசுகிறேன்"

" சாரிடா சாரிடா" என நான் வழிந்தது ஒரு பெரிய கதை. ஏனென்றால், ஒவ்வொரு தீபாவளியன்றும் நண்பர்கள் அனைவரும் அவனின் வீட்டில்தான் சாப்பிடுவோம். கிட்டத்தட்ட ஒரு இருபது பேர் இருப்போம். அப்புறம்தான் வீட்டிற்கு செல்வோம். அவனுடைய அப்பாவும், அம்மாவும் எங்களை கவனித்தவிதம் என்னால் மறக்கவே முடியாது. அவனுடைய வீடும் எங்கள் வீடு போல்தான் நினைப்போம். அவனுடைய அப்பாவிற்கு உடம்பு முடியவில்லை என்றதும், மனசௌ வலிக்க ஆரம்பித்தது.

இப்படித்தான் நாம் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர்களை பற்றியும் அவர்களின் சூழ்நிலைகளைப் பற்றியும் நினைப்பதும் இல்லை கவலைப் படுவதும் இல்லை. நாம் நம்மைப் பற்றி மட்டும்தான் நினைக்கிறோம். எனக்கு ஏன் கோபம் வந்தது?

" நாம் ஒவ்வொரு முறையும் அவனைப் போய் பார்க்கிறோமே? அவன் ஏன் நம்மை வந்து பார்க்கவில்லை?"

இது எவ்வளவு பெரிய தவறு?

எதையாவது எதிர்பார்த்து பழகுவதா உண்மையான நட்பு????

உண்மையான நட்பு என்பது என்ன? எதையும் எதிர்பார்க்காமல் பழக வேண்டும். கஷ்டம் என்று வரும்போது ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ள வேண்டும். எந்த ஈகோவும் பார்க்கக் கூடாது. கவிஞர் வைரமுத்து சொல்வதைப்போல் " நட்பைக் கூட கற்பை போல எண்ண வேண்டும்"

நான் அவ்வாறு இல்லையோ என வருத்தப்படுகிறேன்.

அனுபவங்கள் தொடரும்.....

Oct 26, 2009

வித்தியாசமான அனுபவங்கள் - 2

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் முடி வெட்டுவதற்காக சலூன் சென்றிருந்தேன். மலேசியாவில் ஒவ்வொரு மாதமும் முடிவெட்டுவதற்கு ரூபாய் 300 செலவழிக்கிறேன். சீனக் கடைக்கு போவதுதான் வழக்கம். வெறும் முடி மட்டும் வெட்டிவிட்டு வரலாம்தான். ஆனால் அப்படி வர இயலாது. அழகிய சீனப்பெண் தலையில் ஷாம்பு போட்டு 30 நிமிடம் தலையில் விளையாடி, மஜாஜ் செய்து பிறகு முடி வெட்டிவிட்டு வருவதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். பின்பு வந்து குளித்து படுத்தால் அருமையாக தூக்கம் வரும். கல்யாணத்திற்கு முன் ஏற்பட்ட பழக்கம். பழக்கத்தை மாற்ற முடியவில்லை. ஏனென்றால் அந்த சுகத்தை இழக்க மனம் வரவில்லை. ஆண்கள் முடி வெட்டும் சலூனுக்கு சென்று ஷாம்பு பாத் இல்லாமல் முடி மட்டும் வெட்டி விட்டு வரலாம்தான். ஆனால் ஏனோ பழக்கத்தை மாற்ற விரும்பவில்லை. என் மனைவி அடிக்கடி சொல்வதுண்டு,

" நீங்கள் எதற்காக முடி வெட்ட சலூன் எல்லாம் போறீங்க. டேபிள் பேனை 5 ல வைச்சா, தேவையில்லாத முடி போயிடும் இல்லை" என்று எனக்கு முடி கம்மி என்பதை கிண்டல் அடிப்பதுண்டு. அதற்காக நாம் கவலைப்படுவதா என்ன? ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சைக்கரை இல்லையா?. சரி, இந்த முறை ஊரில் முடி வெட்டலாம் என முடிவெடுத்து எங்கள் ஊரிலிருக்கும் சலூனுக்கு சென்றிருந்தேன். எதையோ சொல்ல நினைத்து வேறு எங்கோ சென்று விட்டேன்.

முடி வெட்டிக்கொண்டிருக்கும்போது என் கைத்தொலை பேசிக்கு ஒரு போன் வந்தது. பார்த்தால் என் நெருங்கிய உறவினர். எடுக்க வேண்டாம் என நினைத்தவன், முடிவை மாற்றிக் கொண்டு போனை எடுத்தேன்.

" ரவி (என்னுடைய இன்னொரு பெயர்), அந்த ஒன்று விட்ட மாமா (ஒன்று விட்டவோ இல்லை இரண்டு விட்டவோ) இல்லை, அவரோட உறவினர் ஒருத்தர் ஜொகூர் பார்ல இருக்கார் தெரியுமில்லை"

" ஆமாம். தெரியும்"

" அவருக்கு அவசரமா ஒரு 50, 000 ரூபாய் தேவைப்படுதான். உன்னால உங்க ஆபிஸ் நண்பர்கள் கிட்ட சொல்லி உடனே மலேசியால ஜோகூர் பார்ல உள்ள அவருக்கு அனுப்ப முடியுமா?"

" நான் சலூனுல இருக்கேன். வீட்டுல வந்து பேசலாமே?"

" இல்லை, ரொம்ப அவசரமாம். உடனே உன் கிட்ட பேசி பதில் சொல்ல சொன்னார். ஏன்னா, முப்பது நிமிசத்துல வேண்டுமாம். ஏதோ ரொம்ப அவசர்ம் போல"

எனக்கு ஜிவ்வ்வ்னு கோபம் ஏறிப்போயிடுச்சு. கேக்கறது கடன். அதுவும் யாருக்கோ, அதுலயும் இந்தியால இருந்துட்டு மலேசியால இருக்குறவருக்கு எப்படி 30 நிமிசத்தில் உதவ முடியும்?

" எதுவாய் இருந்தாலும் இப்போ என்னால் பதில் சொல்ல முடியாது. ஏன்னா, நான் சலூனில் இருக்கிறேன்"

தொடர்ந்து வற்புறுத்தவே, நான் லைனை துண்டித்து விட்டேன். பிறகு தொடர்ந்து வந்த கால்களை நான் எடுக்கவில்லை. உடனே உதவ விரும்பாதற்கு காரணம்,

01. என்னுடைய பணத்தை எல்லாம் ஊருக்கு அனுப்பிவிட்டேன்.

02. அப்படியே கடன் வாங்கி கொடுத்தாலும், என்ன காரணத்திற்கு வாங்குகிறார் என்று எப்படித் தெரியும்? ஒரு வேளை விசா இல்லாமல் போலிஸிடம் மாட்டி அபராதம் கட்ட பணம் கேட்டிருந்தால், நான் உதவினால், அந்த நபர் மறுபடியும் தவறு செய்யும் போது, போலிஸ் என்னையல்லவா விசாரிக்கும். இது தேவையா?

03. நான் இங்கே பணம் கொடுத்தால், அவர்கள் இந்தியாவில் பணம் கொடுப்பார்களாம். எப்போது? தெரியாது? அப்படியே கொடுத்தால் அது ஹவாலா மோசடியில்லையா? நான் சம்பாரிக்கும் பணத்தை ஒழுங்கான முறையில் என் பேங்குக்கு அனுப்புவதுதான் என் பழக்கம்.

இரண்டு மணி நேரம் கழித்து, நாங்கள் தீபாவளி ஷாப்பிங்கில் இருந்தபோது மீண்டும் போன் வந்தது. விசயத்தை எடுத்து கூறினேன். போன் செய்தவர் புரிந்து கொண்டார் என நினைக்கிறேன். ஆனால், சம்பந்தப்பட்டர் என் மீது கோபமாக இருப்பதாக தெரிந்தது. அவரை நேரில் சந்தித்தபோது என்னிடம் சரியாக பேசவில்லை. எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

ஆனால், எனக்கு ஒரு விசயம் புரிய மாட்டேன் என்கிறது. எப்படி இவர்களால் இப்படி அதிகாரமாக ஒரு உதவியோ, கடனோ கேட்க முடிகிறது? எப்படி ஒருவருக்கு திடீரென ரூபாய் 50,000 தேவைப்படும்? அப்படி தேவை இருக்கும் பட்சத்தில் ஏன் முன்பே திட்டமிட்டு செயல்பட வில்லை? பணம் இல்லாத பட்சத்தில் ஏன் அதற்குறிய செலவை செய்ய வேண்டும்? இந்த காலத்தில் யார் 30 நிமிசத்தில் பணம் தருவார்? அதுவும் வேறு நாட்டில்? நம்மிடம் அவர்கள் குடுத்து வைத்திருக்காத பட்சத்தில், நாம் உடனே உதவ இல்லையென்றால் எப்படி அவர்களுக்கு கோபம் வருகிறது?

வெளிநாட்டில் வேலை பார்த்தால், மற்றவர்கள் கேட்கும்போது எல்லாம் பணம் கொடுக்க வேண்டுமா என்ன? சம்பந்தப் பட்டவர்கள் இதை படிக்க நேர்ந்தால் கொஞ்சம் சிந்தித்து பார்ப்பது நல்லது.

அனுபவங்கள் தொடரும்.....

Oct 25, 2009

வித்தியாசமான அனுபவங்கள் - 1

திடீரென முடிவு செய்து ஒரு 10 நாட்கள் தீபாவளிக்காக இந்தியா சென்றோம். கடந்த 15 நாட்களாக பதிவுலகம் பக்கமே வரவில்லை. தினமும் தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் படிப்பவன் நான். 10 நாட்கள் லீவில் பல வேலைகள் இருந்ததால் படிக்க முடியவில்லை. தீபாவளிக்கு அடுத்த நாள் முயற்சி செய்தேன். ஆனால், தமிழ்மணம் லோகோ தெரியவே 30 நிமிடத்துக்கும் மேல் ஆனதால் வெறுத்துப் போய் லேப்டாப்பை மூடிவிட்டேன். எழுதாமல், படிக்காமல் இருப்பது ஏதோ இழந்ததை போல இருக்கிறது. இனி தினமும்.....???

இந்த முறை நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களைப் பற்றியும், எனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்களை பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

திடீரேன பயணம் முடிவானாலும், ஏர் ஏசியாவில் ஆன் லைனில் டிக்கட் புக் செய்து விட்டேன். நாங்கள் எப்போதும் மலேசியன் ஏர்லைனில் செல்லும்போது பிஸினஸ் கிளாஸ் அடுத்துள்ள சீட்களில் அமர்ந்து பயணிப்பது வழக்கம். முன்பே ரிசர்வ் செய்துவிடுவதால் நாம் கேட்கும் சீட் கிடைத்துவிடும். ஏர் ஏசியாவிலும் நமக்கு பிடித்த சீட்களை புக் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு சீட்டுக்கும் பணம் கட்ட வேண்டும். நான் பணம் கட்டி சீட்களை ஏற்கனவே ரிசர்வ் செய்துவிட்டேன். இதில் என்ன மேட்டர் இருக்கிறது என்கின்றீர்களா? இருக்கிறது.

ஏர் ஏசியா விமானம் ஒரு குறைந்த கட்டண விமானம். அதனால் பல விசயங்களை பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. நாங்கள் இருந்த இடத்திலிருந்து விமானத்திற்கு செல்ல ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாக நடந்து விமானத்தில் ஏறினோம். பயங்கர கும்பல். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 5 அல்லது 6 விமானங்கள் சென்னைக்கும், திருச்சிக்கும் சேர்த்து செல்கின்றன. திருச்சிக்கு மட்டும் ஒரு நாளைக்கு இரண்டு விமானங்கள். அப்படி இருந்தும் அவ்வளவு கும்பல். டவுன் பஸ் போல தான் காட்சியளித்தது. இந்தியாவின் பொருளாதாரம் ஒன்றும் அந்த அளவிற்கு மோசமில்லை என்பதை நீங்கள் விமான பயணத்தில் அறியலாம்.

ஹேண்ட் லக்கேஜை வைத்து விட்டு நாங்கள் அமர்ந்தவுடன் ஒருவர் அவசரமாக வந்தார். இனி அவருக்கும், எனக்கும் நடந்த உரையாடல்கள்:

" சார் உங்க லேப்டாப்பையும், அந்த பையையும் எடுத்து வேற எடத்துல வையுங்க"

" ஏன்?"

" என் பையை வைக்க இடமில்லை"

" எங்க இடம் இருக்கோ, அங்க வைங்க"

" என் சீட் இங்கதான் இருக்கு, அதனால இங்கதான் வைப்பேன்"

" என் சீட்டும் இங்கதான் இருக்கு. நீங்க வேணா பக்கத்துல வையுங்களேன்"

" நீங்க வேணா வேற இடத்துல உட்கார்ந்துக்கங்க. உங்க லக்கேஜையும் அங்க வைச்சுக்கங்க"

" நான் ஏன் வேற இடத்துக்கு போகணும். இது என் இடம். இந்த சீட்டும் ரிசர்வ் செய்துள்ளேன்"

" அதானே, உங்க சவுரியத்த தானே நீங்க பார்ப்பீங்க. என் சவுரியத்த பார்க்க மாட்டீங்களே"

என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை. அவரும் விடாப்பிடியாக சீட் மாறி உட்கார சொல்கிறார். நான் ஒருவன் என்றால் பரவாயில்லை. என் குடும்பம் முழுவதும் மாறி உட்காருவது கஷ்டம். நான் தனியே உட்கார எனக்கு விருப்பம் இல்லை. கோபம் தலைக்கு மேல் ஏறிவிட்டது. எல்லோரும் எங்களை பார்க்கும்படி ஆகி விட்டது. நான் 13 வருடங்களாக ரெகுலராக விமானத்தில் பயணிப்பதாலும், பல விதமான மனிதர்களை சந்தித்திருப்பதாலும், என் கோபத்தை குறைத்துக்கொண்டு, ஒரு வழியாக அவரை சமாதனப்படுத்தி, அவர் லக்கேஜை வைத்து, என் லேப் டாப்பை வேறு இடத்தில் மாற்றி வைத்தேன்.

பிறகு நான் அதை மறந்துவிட்டு, எங்கள் நான்கு பேருக்கும் இமிகிரேசன் கார்டுகளையும், ஹெல்த் டிக்ளரேசன் பார்மையும் பூர்த்தி செய்து கொண்டிருந்தேன். அந்த மனிதரின் இருக்கை என் அருகிலேயே. என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு மெல்ல,

" சார், இதைக் கொஞ்சம் எழுதி தர முடியுமா?"

பத்து நிமிடத்திற்கு முன் சண்டையிட்ட ஒருவரால் எப்படி இப்படி நிதானமாக உதவி கேட்க முடிகிறது? என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் அவருக்கு உதவி செய்தேன்.

அவராகவே என்னிடம்,

" சார், கண்ணால சரியா படிக்க முடியலை, அதான்"

" ஆனா வாய் மட்டும் சரியா பேசும் போல"

அவர் அதற்கு பிறகு என்னிடம் பேசவில்லை. திருச்சி வந்ததும் இமிகிரேசனிலும் நான் தான் உதவி செய்தேன். ஆனால், அவர் ஒரு நன்றிகூட சொல்லவில்லை. ஆனால், அவர் பார்த்த பார்வை எனக்கு அதை உணர்த்தியது.

நான் பிரச்சனையை பெருசாக்கி அவரை என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் பொறுமையாக போனதால், அவர் தவறை அவர் உணரும்படி செய்து விட்ட மன திருப்தி எனக்கு.

அனுபவங்கள் தொடரும்.....

Oct 9, 2009

100வது பதிவு - நானும், பதிவுலகமும்

முதலில் இந்த 100வது பதிவில் கீழே குறிப்பிட்டுள்ள நண்பர்களுக்கு, பத்திரிக்கைகளுக்கு, திரட்டிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

01. என்னை பதிவுகள் எழுத தூண்டிய பரிசல்காரனின் எழுத்துக்களுக்கு.

02. எப்போது போனில் பேசினாலும் இனிமையாக பேசும் அழகிய தமிழுக்கு சொந்தக்காரன் நர்சிமுக்கு.

03. இதுவரை நான் மெயிலில் தொடர்புகொண்டு கேட்ட சில விசயங்களுக்கு பதில் அளித்த நண்பர்கள் கேபிள் சங்கர், ரவிசங்கர், பரிசல், நர்சிம், யுவகிருஷ்ணா, ஆதி, எவனோ ஒருவன், கார்க்கி, கோவிக்கண்ணன், ஐயோவ்ராம் சுந்தர்ஜி, டாக்டர் தேவன் மாயம் ஆகியோருக்கு.

04. இதுவரை என் எழுத்துக்களை பார்வையிட்டுச் சென்ற 34,045 பேர்களுக்கு.

05. என்னை பின் தொடரும் 47 நண்பர்களுக்கு.

06. இதுவரை என்னை பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு.

07. என்னை முதன் முதலில் தொடர் பதிவு எழுத அழைத்த நண்பர் கலையரசன் அவர்களுக்கு.

08. தேவதை பற்றிய தொடர் எழுத அழைத்த டாக்டர் சுரேஷ் அவர்களுக்கு.

09. என்னுடைய அனைத்து பதிவுகளுக்கும் பின்னூட்டமிடும் நண்பர் எவனோ ஒருவன் அவர்களுக்கு.

10. என்னுடைய ஒரு கதையை பிரசுரித்த ஆனந்த விகடனுக்கு.

11. என்னுடைய ஒரு பதிவை பிரசுரித்த குங்குமம் பத்திரிக்கைக்கு.

12. என்னுடைய பெரும்பாலான பதிவுகளை குட் ப்ளாக் பகுதியில் பிரசுரித்த யூத்புல் விகடனுக்கு.

13. பதிவுலகத்துக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே என்னை 'நட்சத்திர பதிவர்' அந்தஸ்து கொடுத்த திரட்டி.காம் வெங்கடேஷ் அவர்களுக்கு.

14. பதிவுலகத்துக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே என்னை 'இந்த வார கீரிடம் பதிவர்' அந்தஸ்து கொடுத்த தமிழ்10 நிர்வாகிகளுக்கு.

15. என்னுடைய பதிவுகளை பிரபலமாக்கும் தமிழிஷ் வாசகர்களுக்கு.

16. என்னுடைய பதிவுகளை அதிகம் பேர் படிக்க உதவிடும் தமிழ்மணம், தமிழிஷ் நிர்வாகிகளுக்கு.

********************************************

"நல்லாத்தாங்க இருந்தேன் ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி. நான் உண்டு, என் வேலை உண்டு, யோகா உண்டு, ஜிம் உண்டு என்று. தெரியாத்தனமா ஒரு நாள் என் மகள்,

"அப்பா, நான் கடவுள் படத்துல உள்ள 'அம்மா உன் பிள்ளைதான்' பாட்டு வரிகள் வேணும்பா?"

"ஏண்டா?"

" பாட்டு போட்டியில கலந்துக்கணும் அதுக்குத்தான்"

சரினு இணையத்துல தேடுனா, பரிசல் பக்கம் கிடைச்சது, என்னடா இது புதுசா இருக்கேனு படிச்சா, மனுசன் நல்லா இன்ட்ரெஸ்டா எழுதியிருந்தார். அப்பறம் நர்சிம் பக்கம்னு போய், பல மணி நேரத்துக்கு பிறகு பாட்டை கண்டு பிடிச்சு எடுத்து, என் பொண்ணு ஒரே நாள்ல பாட்டைக்கற்றுக்கொண்டு, தமிழையும் சேர்த்து கற்றுக்கொண்டு, பள்ளில பாடி பரிசு வாங்குனது எல்லாம் ஒரு சந்தோசமான விசயம். அத விடுங்க.

அப்பறம் வேற சொல்ல வரேணு கேட்கறீங்களா? நான் அதோட விட்டுருக்கணும். என்னாச்சு, எல்லா வலைத்தளத்தயும் படிக்க ஆரம்பிச்சு, எனக்கும் அந்த ஆசை வந்து நானும் இரெண்டு மாசத்துக்கு முன்னாடி வலைப்பூ ஆரம்பிச்சு, இப்போ பதிவு நோய் வந்து தவிக்கறேங்க"


மேலே இருப்பது நான் பதிவுலகத்துக்கு வந்த சில நாட்களில் எழுதியது. இப்படித்தான் என் பதிவுலக எழுத்துக்கள் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாயின. கூடுமானவரை என் வாழ்வில் நடந்த விசயங்களையே பதிவாக எழுதியிருக்கிறேன். ஒரு நாளில் 80 பேர் ஆரம்பத்தில் படித்துக்கொண்டிருந்தார்கள். இப்போது 120 பேர் படிக்கிறார்கள். 'இப்படி எழுத வேண்டும் அப்படி எழுத வேண்டும்' என யோசிப்பதில்லை. மனதில் தோன்றுவதை உடனே எழுதிவிடுகிறேன். நான் நேரம் கிடைக்கும்போது எழுதி வைத்து பிறகு போஸ்ட் செய்வதில்லை. என்னிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் எழுதினால் எழுதியதுதான். அதை திரும்ப சரி பார்க்கும் பழக்கம் இல்லை. பரிட்சை எழுதும்போதும் அப்படித்தான். இதனால் கணக்கு பாடத்தில் பல முறை 100 க்கு 100 வாங்காமல் கோட்டை விட்டிருக்கிறேன்.

தினமும் கிடைக்கும் ஒரு மணி நேர ஓய்வு நேரத்தில் பதிவுகள் எழுதுகிறேன். மற்ற சமயங்களில் மற்றவர்கள் எழுதிய பதிவுகளை படிக்கவே நேரம் செலவு ஆகிறது. அதனால் முடிந்தவரை பின்னூட்டமிடுகிறேன். இந்த பதிவுலக போதை ஒருவித சந்தோசத்தையே கொடுத்தாலும், நிறைய நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது.

சாதாரண நாட்களில் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை ஒரு பதிவாக எழுதுவது வழக்கம். ஆனால், புதன் கிழமை எழுத உட்கார்ந்த போதுதான் இது 100வது பதிவு என்பதை உணர்ந்தேன். அதனால், அன்று எழுதியதை அழித்துவிட்டேன். பிறகு என்ன எழுதலாம் என நினைத்து இரண்டு நாட்கள் செலவழித்து விட்டேன். பிறகு யோசித்து நாம் இதுவரை எழுதிய பதிவுகளுக்கு காரணமானவர்களுக்கு நன்றி சொல்லலாமே என்று நினைத்து இந்த பதிவினை எழுதுகிறேன்.

**********************************************

எனக்கு 'இரண்டு ஜோடிக்கண்கள்' உணர்த்திய விசயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு முறை நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நண்பர்களுடன் முக்கொம்பு சுற்றுலாத்தலம் சென்றோம். நாங்கள் நான்கு பேர் ஒரு காரில் சென்றோம். அங்கே சுற்றிக்கொண்டிருந்த போது ஒரு நான்கு பெண்கள் அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நண்பர்கள் அவர்களை பார்த்து கிண்டல் பண்ணினார்கள். சிறிது நேரத்தில் அந்த பெண்கள் எங்களுடன் சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். அந்த நாள் முழுவதும் அவர்கள் எங்களுடனே சுத்திக்கொண்டிருந்தார்கள். எங்கள் கல்லூரி நண்பனில் ஒருவன் 'அந்த' விசயத்தில் கொஞ்சம் வீக். அதில் ஒரு பெண் சினிமா நடிகை போல் அப்படி ஒரு அழகு. அந்த நண்பன் குட்டையாக நல்ல சிகப்பாக ஆனால் சுமாரன அழகில் இருப்பான். அந்த அளவிற்கு பெண்களை கவரும் எந்த விசயமும் அவனிடம் இல்லை என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், இவன் அடுத்த நாள் எப்படியோ காருக்கு சொந்த கார நண்பனை அழைத்துக்கொண்டு, மீண்டும் முக்கம்புக்கு சென்று, முதல் நாள் பார்த்த பெண்களில் இரண்டு பெண்களை வரவழைத்து, அந்த அழகான பெண்ணை..... அவள் சம்மதத்துடனே எல்லாம் நடந்திருக்கிறது. நண்பர்களுக்கு எல்லாம் பயங்கர கோபம், "எல்லோரையும் ஏன் அழைத்துச் செல்லவில்லை?" என்று. எனக்கு வேறு மாதிரியான ஒரு கோபம். "எப்படி இந்த பெண் அப்படி?" என்று. நான் அந்த பெண்ணை அப்படி கனவில் கூட நினைக்கவில்லை. அப்படி ஒரு லட்சுமிகரமான ஒரு பெண் சாதாரண காம இச்சைக்காக, அதுவும் மறைவான, புல் வெளியில். அசிங்கம். அந்த பெண்ணுக்கு என்ன தண்டனை கொடுப்பான்? ஆண்டவன்? என கொஞ்ச நாட்கள் நினைத்துக்கொண்டு இருந்து விட்டு மறந்து விட்டேன்.

சில வருடங்கள் கழித்து திருச்சி கலையரங்கம் தியேட்டரில் ஒரு படம் பார்க்க மற்ற நண்பர்களுடன் சென்றிருந்தேன். இடைவேளையில் பார்த்தால் எனக்கு பயங்கர அதிர்ச்சி. நான் மேலே குறிப்பிட்ட அந்த பெண் கணவனுடன். என்னை பார்த்த பின் அந்த பெண் முகத்தில் அதிர்ச்சி, பயம். அவள் உடல் நடுங்குவதை என் கண்ணால் பார்க்க முடிந்தது. அவள் கணவனுக்கு தெரியாமல் தன் 'கண்களால்' என்னைப் பார்த்து 'தயவு செய்து சொல்லி விடாதே?' என்று கெஞ்சியது இன்னும் என் நினைவில் இருக்கிறது.

இதைவிட அந்த பெண்ணுக்கு ஒரு தண்டனை வேண்டுமா, என்ன?

**********************************************

நான் ஒரு முறை அலுவலக விசயமாக சென்னையிலிருந்து மும்பைக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். 39 மணி நேர பயணம் என்று நினைக்கிறேன். பூனா அருகே சென்றபோது ஒரு ஸ்டேசனில் வண்டி நின்றபோது ஏகப்பட்ட திருநங்கைகள் ஏறினார்கள். இத்தனைக்கும் என்னுடையது மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி. ஏறிய திருநங்கைகள் அங்கே இருந்த ஆண்களுடன் பணம் கேட்டு ஏடாகூடமாக சில அசிங்கமான செயல்களில் இறங்கினார்கள். சிலர் பணம் கொடுத்ததும் அதை வாங்கிக் கொண்டு அங்கே இருந்து சென்று விட்டார்கள். என்ன இது அராஜகம்? என்று எனக்கு கோபமாக வந்தது. என் அருகில் வேண்டுமென்ற ஒருவர் உட்கார்ந்து கொண்டு கண்ட இடங்களில் தொட்டு என்னை இம்சித்துக் கொண்டிருந்தார். பணம் ஏதாவது கொடுக்கலாமா? என யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் நான் ஆர்டர் செய்திருந்த சாப்பாடு வந்தது. நான் அதை அப்படியே வாங்கி 'அந்த' நபரிடம் சாப்பிட சொன்னேன். அதை வாங்கி வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தவர் என்னை பார்த்து ஹிந்தியில் ஏதோ கூறினார். எனக்கு ஒன்னும் புரியவில்லை.

ஆனால் அவர் கலங்கிய கண்கள் என்னைப் பார்த்த பார்வையின் அர்த்தம் எனக்குப் புரிந்தது. அந்த பார்வையின் வெளிச்சம் என்னைவிட்டு ரொம்ப நாட்கள் விலகாமல் இருந்தது.

அன்புக்கு அடிமையாகாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா என்ன?

**********************************************

Oct 6, 2009

மிக்ஸர் - 06.10.09

அழகான பெண்களைக் கண்டால் நான் நன்றாக ரசிப்பதுண்டு. அவர்களின் அழகை நண்பர்களிடம் விமர்சிப்பதும் உண்டு. இதெல்லாம் கல்யாணத்திற்கு முன்னால். இப்போதும் அப்படித்தான். ஆனால், என்ன ஒரு வித்தியாசம் அனைத்தும் மனதிற்குள்ளேயே. அப்படி நான் அடிக்கடி சலனப்படுவது சமீபகாலமாக இந்தப் பாடல்களைப் பார்க்கும் போதுதான். முதல் பாடல் "வெண்மேகம் பெண்ணாக உருவானதோ " ( இந்தப் பாடலை நான் தனுஷுக்காகத் தான் பார்க்கிறேன் என்றால் வீட்டில் நம்ப மாட்டேன் என்கிறார்கள்).

இரெண்டாவது பாடல் 'ஜி' படத்தில் வரும் 'டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் பார்த்தேன்' . வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். அப்படி ஒரு அழகு அஜித்தும், திரிஷாவும். மனசெல்லாம் சந்தோசமாக்கும் பாடல். கவிதை கலந்த காதலுடன் அவர்கள் இருவரும் நடிப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். கொஞ்சம் கூட விரசம் கிடையாது.அஜித்- திரிஷாவின் 'அக்கம் பக்கம்' பாடலுக்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்த பாடல். இந்த இரண்டு பாடல்களையும் நேற்று இரவு சன் டிவியில் பார்த்தேன். கவலைகளை மறந்து ரசித்த நிமிடங்கள் அவை.

கல்யாணத்திற்கு முன்பு நான் அதிகம் பார்த்த பாடல்கள் 'ஜீன்ஸ்' படப் பாடல்களும். 'இந்தியன்' படப் பாடல்களும். யாரிடமாவது இந்தியன் பட 'டெலிபோன் மணி போல்' பாடல் இருந்தால், அந்த பாடல்களின் ஆரம்ப வரிகளை மிக ஸ்லோவாக ஓட விட்டுப் பாருங்கள். ஒரு விசயத்தை காண்பீர்கள். அதை நான் இங்கே எழுதுவது நாகரிகம் இல்லை. தனி மெயிலில் தொடர்பு கொண்டால் சொல்கிறேன்.

****************************************************

வேட்டைக்காரன் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பாடல்கள் நன்றாகத்தான் உள்ளது. நிச்சயம் 'ஒரு சின்னத்தாமரை', 'என் உச்சி மண்டையிலே', 'கரிகாலன்' பாடல்கள் ஹிட் ஆவது உறுதி. சங்கர் மகாதேவன் பாடியிருக்கும் 'நான் அடிச்சா தாங்க மாட்ட' கேட்க கேட்க ஹிட் ஆகும் என நினைக்கிறேன். இந்த பாடல் ஒரு டிபிக்கல் விஜய் பாடல். அவர் எப்படி ஆடியிருப்பார் என்று இப்போதே ஓரளவு யூகிக்க முடிகிறது.

****************************************************

நேற்று ஒருத்தர் மேல் பயங்கர வெறுப்பு. போன் செய்து திட்ட வேண்டும் என நினைத்தேன். ஆனால், கந்தசாமி பயங்கர ஹிட் படம் என சிலர் சொன்ன ஜோக்கை கேட்டதால் கோபமே வரவில்லை. ஆனால் அவரை திட்டியே ஆக வேண்டிய சூழ்நிலை. தள்ளிப்போட மனசில்லை. என்ன செய்வது? யோசித்துக் கொண்டிருக்கும்போது தான் அந்த ஐடியா தோன்றியது. சன் மியூஸிக்கை ஆன் செய்தேன். காதலர்களுக்கான நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சி நடத்தும் இருவரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். உடனே சல்ல்ல்ல்ல் என்று கோபம் தலைக்கு ஏறியது. ஒரு வழியாக போன் செய்து அவரை திட்டி விட்டேன். சன் மியூஸிக்கிற்கு என் நன்றி.

****************************************************

சில தினங்களுக்கு முன்னால் லயன்ஸ் கிளப் நண்பர்கள் ஒரு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். எங்கள் ஊரிலிருந்து இரண்டரை மணி நேரம் கார் பயணம் செய்து பிறகு ஒரு லேக்கை அடைந்து, அங்கே இருந்து பெரியில் ஒரு மணி நேரம் பயணம் செய்து பிறகு அங்கே இருந்து ஸ்பீட் போட்டில் ஒரு தீவுக்கு பயணம் செய்து, அங்கே இரவு தங்கி பிறகு அடுத்த நாள் வருவதாக ஏற்பாடு. நாங்கள் செல்ல வில்லை. மொத்தம் 60 பேர் பயணம் செய்தார்கள். எல்லோரும் திட்டமிட்டபடி பெரியில் சென்று ஸ்பீட் போட் போகும் இடத்தை அடைந்தார்கள். மொத்தம் நான்கு ஸ்பீட் போட். முதலில் இரண்டு போட் சென்று விட்டது. முதலில் சென்ற போட்களில் என் நண்பர் குடும்பம் இருந்தது. இவர்கள் போய் சேர்ந்து பல மணி நேரம் ஆகியும் அடுத்த இரண்டு போட்களும் வரவில்லையாம். இவர்களும் அங்கே இருந்து கிளம்பி வந்து விட்டார்கள். இவர்கள் வந்தவுடன் தான் தெரிந்திருக்கிறது. அடுத்த படகுகள் கடலுக்குள் மூழ்கி அனைவரும் தண்ணிரில் உயிருக்கு போராடி, மீட்பு குழுவினர் போராடி அனைவரையும் காப்பாற்றி இருக்கிறார்கள். அதில் நிறைய குழந்தைகள் வேறு. நல்ல வேலை நான் போகவில்லை என நினைத்துக் கொண்டேன். ஏறக்குறைய அதே நேரத்தில் மூணாறு படகு விபத்து ஏற்பட்டு, நிறைய பேர் பலி. வேதனையான விசயம்.

****************************************************

இந்த வார தமிழ்மணம் நட்சத்திரம் அண்ணாகண்ணன் அவர்கள் எழுதிய சில கவிதைகள் 30 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறதாம். வாழ்த்துக்கள் சார். ஆனால், கொங்கணி மொழியிலும் மொழிபெயர்க்கபட்டு இருப்பதாக எழுதியிருக்கிறது. எனக்குத் தெரிந்து கொங்கணி கோவாவில் வசிப்பவர்களால் பேசப்படும் ஒரு மொழி. அதற்கு ஆல்பாபேட்ஸ் இல்லையென்று நாங்கள் கோவா சென்று இருக்கும்போது சொன்னார்கள். ஆல்பாபேட்ஸ் இல்லாத மொழியில் எப்படி மொழி பெயர்த்து இருக்க முடியும்? நான் சொல்வது தவறாக கூட இருக்கலாம். யாராவது விசயம் தெரிந்தவர்கள் விளக்கினால் தேவலை.

****************************************************

நான் ஒரு பாட்டு சொல்றேன். அந்த பாட்டோட இரண்டாவது வரியை யாராவது சொல்ல முடியுமா? ஏனென்றால், அந்த பாடகி அந்த வரியை அப்படி கொலை செய்து இருப்பார். இதோ,

" பூவுக்கு பிறந்த நாளு
......................................
கலர்கலரா மெழுகுவத்தி ஏத்துவேன்"

என்னன்னு கண்டு பிடிங்க பார்க்கலாம்!!!

****************************************************

சமீபத்தில் ரசித்த ஜோக்:

வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் தன் நண்பரிடம்,

" ஏம்பா என்னை ஒரு நல்ல முதியோர் இல்லத்துக்கு கூட்டிட்டு போ"

உடனே நண்பர் அவரை நம் பார்லிமெண்டுக்கு கூட்டிச் சென்றாராம்.

****************************************************

Oct 5, 2009

கடவுளே கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா???ஒரு வீட்டுக்கு குடி போறோம். அந்த வீட்டுனால ஏதாவது பிரச்சனை வருது. நம்மால தாங்கிக் கொள்ள முடியாத அளவு பிரச்சனை. என்ன செய்வோம்? கொஞ்ச நாள் பொறுத்து பார்த்து விட்டு வேறு வீட்டிற்கு போய் விடுவோம்.

நம் வீடு இருக்கும் தெருவில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனை. நம்மால் சமாளிக்க முடியவில்லை அல்லது தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்ன செய்வோம்? கொஞ்ச நாள் பொறுத்து பார்த்து விட்டு வேறு தெருவில் உள்ள வீட்டிற்கு குடி போய் விடுவோம்.

அதே போல் ஊரே பிரச்சனை அல்லது அந்த ஊரினால் நம் நிம்மதி கெடுகிறது என்றால் கூட, தூரத்தில் இருந்தால் பரவாயில்லை என்று வேறு ஊருக்கு போய் அங்கே ஏதாவது வாடகை வீட்டில் குடி போவோம்.

இங்கே ஒரு நாட்டில் எப்போதுமே பிரச்சனை. நிம்மதி இல்லை. அடிக்கடி நில நடுக்கம். என்ன செய்வார்கள் மக்கள்? உலகிலேயே அதிகமாக நில நடுக்கம் ஏற்படும் நாடாக ஜப்பான் இருந்தது. இன்று அந்த லிஸ்டில் இந்தோனேசியாவும் சேர்ந்து விட்டது. அதுவும் 2004ல் பூகம்பமும், சுனாமியும் வந்த பிறகு அந்த நாட்டின் பொருளாதாரமே வீழ்ச்சியடைந்து விட்டது எனலாம். அங்கு இருக்கும் மக்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை. மேலே சொன்னது போல் வேறு நாட்டுக்கு சென்று குடி போக முடியுமா என்ன?

அங்கே வாழும் மக்களின் மன நிலை எப்படி இருக்கும்? எப்போதும் ஒருவித மன இறுக்கத்துடனேயே இருக்க வேண்டி வருமே? அங்கு வெறும் பூகம்பமும், சுனாமி மட்டும் மக்களை கொல்வதில்லை. அடிக்கடி படகு விபத்து, ஹெலிகாப்டர் விபத்து, நிலச்சரிவு என்று ஏதாவது ஒரு வகையில் மக்கள் தினமும் அங்கே உயிர் விட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இந்தோனேசியாவில் பூகம்பம் வரும்போதும் அதன் அதிர்வுகளை லேசாக மலேசியாவில் உணர முடியும். உடனே சில சமயம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்பு வாபஸ் பெறப்படும். உடனே நாங்கள் டிவியைப் பார்ப்போம். ' அப்பாடா, மலேசியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை' என்ற செய்தி கேட்டவுடன் வேறு வேலையை பார்க்க சென்றுவிடுவோம். அடுத்த நாள் டிவியில் அங்கே அவர்கள் படும் வேதனையை பார்க்கும்போது ரொம்ப மனது கஷ்டமாக இருக்கும். இடிபாடுகளில் சிக்கி இருக்கும் மக்களை காப்பாற்ற அவர்கள் படும் பாடு இருக்கிறதே? அதை நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது.

இந்தோனேசியாவின் கடலுக்கு அடியில் உள்ள தகடுகள் ரொம்ப வீக்காக இருப்பதாகவும், அதனால் அவைகள் மோதிக்கொள்ளும்போது அங்கே அடிக்கடி பூகம்பம் ஏற்படுவதாகவும் காரணங்கள் சொல்லப்பட்டாலும், அங்கே இருக்கும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? எப்போதாவது பூகம்பம் வந்தால் சரி, எப்போதுமே வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்?

கடவுளே கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா???

Oct 4, 2009

சே! நான் ஏன் இப்படி???

போன சனிக்கிழமை சனிப்பெயற்சி நடந்தது. அப்போது எங்கள் ஊர் கோவிலில் நவராத்திரி திருவிழா நடைப்பெற்றுக் கொண்டிருந்ததால் சனீஸ்வர பகவானுக்கு எந்த வித விசேச பூஜையும் செய்யவில்லை. அதனால், நேற்று சனீஸ்வரருக்கு ஸ்தபன கலச பூசை, நவக்கிரக ஹோமம், சனீஸ்வர பகனானுக்கு மகா அபிசேகம் நடைப் பெற்றது. இதைத் தவிர நேற்று பிள்ளைகளின் பள்ளியின் பிரின்ஸ்பால் வீட்டில் ரம்ஜான் திறந்த இல்ல உபசரிப்பு. அதே நேரத்தில் நேற்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை. ஏழுமலையானுக்கு விரதம் இருந்து வடமாலை சாத்தி சாமி கும்பிட வேண்டும். ஒரே நேரத்தில் மூன்று இடத்தில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை. இதைத் தவிர நேற்று இரவு 7 மணியிலிருந்து மலேசிய இந்துக்கள் கலந்து கொள்ளும் தீபாவளி கலை இரவு நிகழ்ச்சி வேறு. இதை நான் ஏன் இங்கு கூறுகிறேன். காரணம் இருக்கிறது.

நானும் பிள்ளைகளும் கோவிலுக்கு போவதாகவும், மனைவி வீட்டில் பூஜைக்குறிய அனைத்து வேலைகளும் செய்வதாகவும், பிரின்ஸிபால் வீட்டுக்கு போக வேண்டாம் என்றும், இரவு கலை நிகழ்ச்சிக்கு போவதாகவும் ஒரு மனதாக முடிவெடுத்தோம். அதன்படியே கோவிலுக்கு சென்றோம். காலை 9 மணிக்கு சென்றொம். ஹோமம் முடிந்து, அபிசேகம் முடிந்து, பூஜை மற்றும் அன்னதானம் முடிந்து வீட்டிற்கு வர மதியம் 1 மணி ஆகிவிட்டது. வீட்டில் 'கோவிந்தனுக்கு' சாமிக் கும்பிட ரெடியாகும் சமயத்தில் ஆபிஸிலிருந்து போன். நான் இந்தப் பதிவில் "இதுபோல் வேறு யாருக்கும் நேரக்கூடாது." குறிப்பிட்டிருந்த 'தோழியின் கணவர் ஆஸ்பத்திரியில் சீரியஸாக இருப்பதாகவும், ஆக்ஸிஜன் மட்டுமே போய்க் கொண்டிருப்பதாகவும், எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்றும்' கூறினார்கள்.

எனக்கு என்ன செய்வது எனத்தெரியவில்லை. சரி, இப்போது வீட்டில் எதுவும் சொல்ல வேண்டாம், முதலில் சாமி கும்பிடுவோம் என நினைத்து சாமி கும்பிட முயன்றேன். முழுமையாக என்னால் மனதை ஒரு நிலைப் படுத்தி சாமிக் கும்பிட முடியவில்லை. வீட்டில் யாரும் காலையில் சாப்பிடவில்லை என்பதால், அவர்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும் என நினைத்து ஒரு வழியாய் சாமி கும்பிட்டு முடித்து அனைவரையும் சாப்பிட சொன்னேன்.

பிறகு அலுவலகத்தை விசயத்தை உறுதிபடுத்திக்கொள்ள தொடர்பு கொண்டு பேசினேன்:

" சார் விசயம் தெரியும் இல்லையா?"

" தெரியும்"

" போலாமா?"

" இப்போ போய் என்ன பண்ணப் போறோம். எல்லாம் முடியட்டும் போலாம்"

" ஏன் சார்?"

" உயிர் போவதைப் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை"

எனக்கும் அவர் கூறியது மனதுக்கு சரியெனப் பட்டது. பிறகு எதற்காக இந்தப் பதிவு?

ஒரு உயிர் ஆஸ்பத்திரியில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. உடனே போய் பார்க்க விருப்பம் இல்லை. ஆனால், அடுத்த போன் வருவதற்காக காத்திருத்தல். "அவர் எப்போது இறப்பார்" என்று அடுத்த போனிற்காக காத்திருப்பது எத்தனை பெரிய தவறு? அந்த தவறைத்தான் நான் நேற்று செய்தேன். வீட்டில் அனைவரும் மதியம் தூங்குகின்றார்கள். எனக்கு தூக்கம் வரவில்லை. போன் எப்போது வரும்? என்பதிலேயே மனம் இருந்ததால் தூக்கம் வரவில்லை. பிறகு ஒரு வழியாக 4.45 மணிக்கு போன வந்தது. எல்லாம் முடிந்து விட்டதாக. உடனே கிளம்பினேன். "அவரை காப்பற்ற முடியாது, அவர் சாவு உறுதி" என முன்பே தெரிந்தாலும், அந்த நேரம் வரும்போது அடையும் மன வேதனையை எப்படி சொல்வது?

ஆஸ்பத்திரி போய் பார்த்தால், "என்ன வாழ்க்கை இது? காலையில் இந்த உடலில் ஓடிக் கொண்டிருந்த உயிர் இப்போது இல்லை. எங்கே சென்றது? யார் எடுத்து சென்றது? ஏன்? ஏன் நம் உடலில் மட்டும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது? நமக்கு எப்போ? என்ன காரணம்? யார் காரணம்? அந்த நிகழ்வை நடத்துபவர் பெயர்தான் கடவுளா?" இப்படி ஆயிரம் கேள்விகள்.

நாம் எவ்வளவோ பேசுகிறோம், என்னென்னவோ செய்கிறோம். சம்பாதிப்பதற்கு ஆளாய் பறக்கிறோம். அடுத்தவர்கள் வயிற்றில் அடித்து பிழைப்பவர்கள், துரோகம் செய்பவர்கள், அடுத்தவர்களை ஏமாற்றுபவர்கள் எல்லோரையும் ஒரு நாள் ஒரு ஆஸ்பத்திரியில் தங்க வைத்து மற்ற நோயாளிகள் படும் வேதனையை பார்க்கச் சொல்ல வேண்டும். எவ்வளவு வலிமையான ஆட்களும் கொஞ்சம் மனதளவில் கலங்குவது ஆஸ்பத்திரியில்தான்.

அதே நினைப்புடனும், வேதனையுடனும் வீட்டிற்கு வந்தால், அனைவரும் தீபாவளி பார்ட்டிக்கு செல்ல ரெடியாக உள்ளனர். போக மனம் இல்லை. ஆனால் என்ன செயவது? நம் மன கஷ்டத்தினை ஏன் அவர்களும் அனுபவிக்க வேண்டும்? வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் நிகழ்ச்சி. நம்மால் ஏன் அவர்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பை தவற விட வேண்டும்?

கடைசியில் தீபாவளி நிகழ்ச்சி போய்விட்டு வீட்டுக்கு வந்த போது இரவு 11.30. ஆனால், உடல்தான் பார்ட்டியில் இருந்ததே தவிர மனம் இல்லை. இரவு முழுவதும் சரியாக தூங்க முடியவில்லை. நம்முடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் கணவர் இறந்து வீட்டில் இருக்கிறார். நான் தீபாவளி பார்ட்டியில்...?

சே! நான் ஏன் இப்படி???

Oct 2, 2009

என்னை செதுக்கிய ஒரு நாள்!

என் நண்பன் ஒருவன். பெயர் அருண் என்று வைத்துக்கொள்வோம். அருண் பார்க்க அழகாக இருப்பதாக மற்றவர்கள் சொல்வார்கள். அவன் அழகா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் பெண்களுக்கு அவனை ரொம்ப பிடிக்கும். பெண்கள் என்றால் நல்ல பெண்களுக்கு அல்ல. அப்படிப்பட்ட பெண்களுக்கு. அதிகமாக அந்த மாதிரி இடங்களுக்கு செல்வான். எப்போதும் போல அவன் சொல்வதை கதை கதையாக கேட்டு எங்கள் மனதை கெடுத்துக் கொள்வோம். அவனை நான் விலகி விலகி போனாலும், என்னுடன் பழக்கம் வைத்துக் கொள்வதை அருண் ரொம்ப விரும்புவான்.

அப்படிப்பட்ட அருணுக்கும் ஒரு நாள் காதல் வந்தது. ஒரு நாள் என்னிடம் தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவளை உயிருக்கு உயிராய் காதலிப்பதாகவும் சொன்னான். நாம் நம்புவதாக இல்லை எனக் கூறினேன். மற்ற பெண்களைப்போல இந்த பெண்ணையும் அவன் தேத்தி கெடுத்துவிட்டால் என்ன செய்வது என்று எனக்கு பயம். ஆனால் அந்த பெண்ணும் அவனை உயிருக்கு உயிராய் காதலிப்பதாக கூறினான். " நீ வேண்டுமானால் ஒரு நாள் வா. உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்" என்று ஒரு நாள் மாலை வேலையில் அந்த பள்ளிக்கு அருகில் உள்ள டீக் கடைக்கு கூட்டிச் சென்றான்.

அந்த பெண்ணை பார்த்த நான் உண்மையிலேயே ஆச்சர்யப்பட்டேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. இந்த பெண் எப்படி இவளுக்கு மாட்டியது? என்று எனக்கு ஒரே குழப்பம். 'அதனால் தான் காதலுக்கு கண் இல்லை என்கிறார்களோ?' என நினைத்து என்னை சமாதானப் படுத்திகொண்டேன். என்னதான் என் மனதை நான் கட்டுபடுத்த முயன்றாலும், முடியாமல் அந்த பெண்ணை ரசித்தேன். இப்போது தவறு என்று தெரியும் இந்த விசயம் அப்போது தெரியவில்லை. அந்த பெண்ணை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவுடன், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு நான் கிளம்பி விட்டேன்.

இப்படியாக அவன் காதல், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்தது. அந்த பெண் பக்கத்து டவுனில் இருந்து வந்து டீச்சர் ட்ரெயினிங் படித்து கொண்டு இருந்தாள். ஒரு நாள் சாயந்திரம் திடீரேன என்னைத் தேடி வந்தான் அருண்.

" உலக்ஸ், நான் ஒரு சிக்கல மாட்டிகிட்டேன். நீதான் என்னை காப்பாத்தனும்"

" என்ன சிக்கல்?"

" நான் உடனே அவளை திருமணம் செய்யணும்"

" ஏண்டா, என்னாச்சு?"

" மாப்பிள்ளை, சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத"

" பரவாயில்ல. சொல்லு"

" எல்லாம் முடிச்சிட்டேன் மாப்பிள்ளை. நான் இப்போ அவளை கழட்டி விட முடியாது. அதனால நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்"

" அடப்பாவி, நினைச்சா மாதிரியே பண்ணிட்டியேடா? இதை ஏண்டா என் கிட்ட சொல்லுற?"

" மாப்பிள்ளை, நீதாண்டா உதவி பண்ணனும்" சொல்லி "ஓஓஓ" என அழ ஆரம்பித்தான்.

பிறகு மற்ற நண்பர்களை கூப்பிட்டு, எப்படி அவன் கல்யாணத்தை நடத்துவது என ஆலோசித்தோம். நண்பர்கள் ஒரு ஐந்து பேர் (என்னைத் தவிர) ஒரு காரில் அந்த பெண் வீட்டுக்கு அதிகாலையில் சென்று, அவள் கோலம் போட வருகையில், அந்த பெண்ணை காரில் கடத்தி வந்து என் வக்கில் நண்பர் உதவியோடு போய், ரெஜிஸ்டர் ஆபிஸ் சென்று கல்யாணம் செய்து வைப்பது என்று முடிவு செய்தோம்.

திட்டம் என்னுடையது. பணமும் என்னுடையது. ஆனால், நான் எதிலும் தலையிட்டதாக வெளி உலகத்துக்குத் தெரியாது (நான் அப்படித்தான் நினைத்து இருந்தேன்). திட்டப்படி எல்லாம் நன்றாக நடந்தது. அவர்களும் சில நாட்களுக்குப் பிறகு ஊருக்கு வந்து வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். நான் அவனுக்கு நிறைய புத்திமதி சொல்லி. இனிமேல் 'அந்த' மாதிரி இடங்களுக்கு எல்லாம் செல்லக்கூடாது எனக் கூறினேன். அவனும் சம்மதித்தான்.

ஒரு நாள் மாலை. என்னுடைய நண்பன் ஒருவன் எங்கள் வீட்டுக்கு ஓடி வந்தான். அந்த பெண்ணின் ஊரிலிருந்து இருவர் என்னைத்தேடி வந்திருப்பதாகவும், மிகவும் கோபமாக அவர்கள் இருப்பதாகவும், அதனால் அவன் மற்ற நண்பர்களையும் அங்கே வரச் சொல்லி விட்டதாகவும், என்னை உடனே வரும்படியும் கூறினான். நான் உடனே அங்கு சென்றேன்.

என்னை அவர்களுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது. வந்தவர்களின் ஒருவன் என்னிடம் ரொம்ப கோபமாக பேச, நண்பர்கள் அவனை சமாதானபடுத்தி வைத்தனர். பிறகு நான் பொறுமையாக என்ன நடந்தது என்றும், ஏன் உடனே கல்யாணம் நடத்தி வைக்கும்படி ஆனது என்றும் விலக்கினேன்.

ஒருவர் பொறுமையாகவும், ஒருவர் கோபமாகவும் நான் சொல்வதை கேட்டனர். திடீரேன பொறுமையாக இருந்தவர் 'ஓ' என அழ ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

பதட்டத்துடன் அவரை பார்த்துக் கேட்டேன்,

"நீங்க ஏன் அழறீங்க?"

அழுது கொண்டே கூறினார்,

" நான் தாங்க அவளைத் தொட்டு தாலி கட்டின புருசன்"