Oct 25, 2009

வித்தியாசமான அனுபவங்கள் - 1

திடீரென முடிவு செய்து ஒரு 10 நாட்கள் தீபாவளிக்காக இந்தியா சென்றோம். கடந்த 15 நாட்களாக பதிவுலகம் பக்கமே வரவில்லை. தினமும் தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் படிப்பவன் நான். 10 நாட்கள் லீவில் பல வேலைகள் இருந்ததால் படிக்க முடியவில்லை. தீபாவளிக்கு அடுத்த நாள் முயற்சி செய்தேன். ஆனால், தமிழ்மணம் லோகோ தெரியவே 30 நிமிடத்துக்கும் மேல் ஆனதால் வெறுத்துப் போய் லேப்டாப்பை மூடிவிட்டேன். எழுதாமல், படிக்காமல் இருப்பது ஏதோ இழந்ததை போல இருக்கிறது. இனி தினமும்.....???

இந்த முறை நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களைப் பற்றியும், எனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்களை பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

திடீரேன பயணம் முடிவானாலும், ஏர் ஏசியாவில் ஆன் லைனில் டிக்கட் புக் செய்து விட்டேன். நாங்கள் எப்போதும் மலேசியன் ஏர்லைனில் செல்லும்போது பிஸினஸ் கிளாஸ் அடுத்துள்ள சீட்களில் அமர்ந்து பயணிப்பது வழக்கம். முன்பே ரிசர்வ் செய்துவிடுவதால் நாம் கேட்கும் சீட் கிடைத்துவிடும். ஏர் ஏசியாவிலும் நமக்கு பிடித்த சீட்களை புக் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு சீட்டுக்கும் பணம் கட்ட வேண்டும். நான் பணம் கட்டி சீட்களை ஏற்கனவே ரிசர்வ் செய்துவிட்டேன். இதில் என்ன மேட்டர் இருக்கிறது என்கின்றீர்களா? இருக்கிறது.

ஏர் ஏசியா விமானம் ஒரு குறைந்த கட்டண விமானம். அதனால் பல விசயங்களை பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. நாங்கள் இருந்த இடத்திலிருந்து விமானத்திற்கு செல்ல ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாக நடந்து விமானத்தில் ஏறினோம். பயங்கர கும்பல். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 5 அல்லது 6 விமானங்கள் சென்னைக்கும், திருச்சிக்கும் சேர்த்து செல்கின்றன. திருச்சிக்கு மட்டும் ஒரு நாளைக்கு இரண்டு விமானங்கள். அப்படி இருந்தும் அவ்வளவு கும்பல். டவுன் பஸ் போல தான் காட்சியளித்தது. இந்தியாவின் பொருளாதாரம் ஒன்றும் அந்த அளவிற்கு மோசமில்லை என்பதை நீங்கள் விமான பயணத்தில் அறியலாம்.

ஹேண்ட் லக்கேஜை வைத்து விட்டு நாங்கள் அமர்ந்தவுடன் ஒருவர் அவசரமாக வந்தார். இனி அவருக்கும், எனக்கும் நடந்த உரையாடல்கள்:

" சார் உங்க லேப்டாப்பையும், அந்த பையையும் எடுத்து வேற எடத்துல வையுங்க"

" ஏன்?"

" என் பையை வைக்க இடமில்லை"

" எங்க இடம் இருக்கோ, அங்க வைங்க"

" என் சீட் இங்கதான் இருக்கு, அதனால இங்கதான் வைப்பேன்"

" என் சீட்டும் இங்கதான் இருக்கு. நீங்க வேணா பக்கத்துல வையுங்களேன்"

" நீங்க வேணா வேற இடத்துல உட்கார்ந்துக்கங்க. உங்க லக்கேஜையும் அங்க வைச்சுக்கங்க"

" நான் ஏன் வேற இடத்துக்கு போகணும். இது என் இடம். இந்த சீட்டும் ரிசர்வ் செய்துள்ளேன்"

" அதானே, உங்க சவுரியத்த தானே நீங்க பார்ப்பீங்க. என் சவுரியத்த பார்க்க மாட்டீங்களே"

என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை. அவரும் விடாப்பிடியாக சீட் மாறி உட்கார சொல்கிறார். நான் ஒருவன் என்றால் பரவாயில்லை. என் குடும்பம் முழுவதும் மாறி உட்காருவது கஷ்டம். நான் தனியே உட்கார எனக்கு விருப்பம் இல்லை. கோபம் தலைக்கு மேல் ஏறிவிட்டது. எல்லோரும் எங்களை பார்க்கும்படி ஆகி விட்டது. நான் 13 வருடங்களாக ரெகுலராக விமானத்தில் பயணிப்பதாலும், பல விதமான மனிதர்களை சந்தித்திருப்பதாலும், என் கோபத்தை குறைத்துக்கொண்டு, ஒரு வழியாக அவரை சமாதனப்படுத்தி, அவர் லக்கேஜை வைத்து, என் லேப் டாப்பை வேறு இடத்தில் மாற்றி வைத்தேன்.

பிறகு நான் அதை மறந்துவிட்டு, எங்கள் நான்கு பேருக்கும் இமிகிரேசன் கார்டுகளையும், ஹெல்த் டிக்ளரேசன் பார்மையும் பூர்த்தி செய்து கொண்டிருந்தேன். அந்த மனிதரின் இருக்கை என் அருகிலேயே. என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு மெல்ல,

" சார், இதைக் கொஞ்சம் எழுதி தர முடியுமா?"

பத்து நிமிடத்திற்கு முன் சண்டையிட்ட ஒருவரால் எப்படி இப்படி நிதானமாக உதவி கேட்க முடிகிறது? என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் அவருக்கு உதவி செய்தேன்.

அவராகவே என்னிடம்,

" சார், கண்ணால சரியா படிக்க முடியலை, அதான்"

" ஆனா வாய் மட்டும் சரியா பேசும் போல"

அவர் அதற்கு பிறகு என்னிடம் பேசவில்லை. திருச்சி வந்ததும் இமிகிரேசனிலும் நான் தான் உதவி செய்தேன். ஆனால், அவர் ஒரு நன்றிகூட சொல்லவில்லை. ஆனால், அவர் பார்த்த பார்வை எனக்கு அதை உணர்த்தியது.

நான் பிரச்சனையை பெருசாக்கி அவரை என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் பொறுமையாக போனதால், அவர் தவறை அவர் உணரும்படி செய்து விட்ட மன திருப்தி எனக்கு.

அனுபவங்கள் தொடரும்.....

8 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வழக்கம்போல் நூறுக்கும் நூற்றி ஒன்றுக்கும் இடைவெளியில் கூடிய பதிவு..,

ஆனால் நீங்கள் காரணத்தை கூறிவிட்டீர்கள்..,

Pradeep said...

நல்ல அனுபவம்தான் .....

இராகவன் நைஜிரியா said...

ஹி... ஹி...

விமான பயணத்தில் சமயத்தில் இது மாதிரி நடப்பதை தவிர்க்க இயலவில்லை.

iniyavan said...

உங்கள் வருகைக்கு நன்றி doctor

iniyavan said...

//நல்ல அனுபவம்தான் .....//

உங்கள் வருகைக்கு நன்றி pradeep

iniyavan said...

//விமான பயணத்தில் சமயத்தில் இது மாதிரி நடப்பதை தவிர்க்க இயலவில்லை.//

உங்கள் வருகைக்கு நன்றி Ragavan Sir.

Beski said...

செம காரெக்டர மீட் பண்ணிருக்கீங்க தலைவா.
பக்கத்துல இருந்து பாத்திருந்தா நல்லா காமெடியா இருந்துருக்கும். ஆனா, உங்க நிலைமை கொஞ்சம் பாவம்தான்.

iniyavan said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி எவனோ ஒருவன்.