Oct 9, 2009

100வது பதிவு - நானும், பதிவுலகமும்

முதலில் இந்த 100வது பதிவில் கீழே குறிப்பிட்டுள்ள நண்பர்களுக்கு, பத்திரிக்கைகளுக்கு, திரட்டிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

01. என்னை பதிவுகள் எழுத தூண்டிய பரிசல்காரனின் எழுத்துக்களுக்கு.

02. எப்போது போனில் பேசினாலும் இனிமையாக பேசும் அழகிய தமிழுக்கு சொந்தக்காரன் நர்சிமுக்கு.

03. இதுவரை நான் மெயிலில் தொடர்புகொண்டு கேட்ட சில விசயங்களுக்கு பதில் அளித்த நண்பர்கள் கேபிள் சங்கர், ரவிசங்கர், பரிசல், நர்சிம், யுவகிருஷ்ணா, ஆதி, எவனோ ஒருவன், கார்க்கி, கோவிக்கண்ணன், ஐயோவ்ராம் சுந்தர்ஜி, டாக்டர் தேவன் மாயம் ஆகியோருக்கு.

04. இதுவரை என் எழுத்துக்களை பார்வையிட்டுச் சென்ற 34,045 பேர்களுக்கு.

05. என்னை பின் தொடரும் 47 நண்பர்களுக்கு.

06. இதுவரை என்னை பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு.

07. என்னை முதன் முதலில் தொடர் பதிவு எழுத அழைத்த நண்பர் கலையரசன் அவர்களுக்கு.

08. தேவதை பற்றிய தொடர் எழுத அழைத்த டாக்டர் சுரேஷ் அவர்களுக்கு.

09. என்னுடைய அனைத்து பதிவுகளுக்கும் பின்னூட்டமிடும் நண்பர் எவனோ ஒருவன் அவர்களுக்கு.

10. என்னுடைய ஒரு கதையை பிரசுரித்த ஆனந்த விகடனுக்கு.

11. என்னுடைய ஒரு பதிவை பிரசுரித்த குங்குமம் பத்திரிக்கைக்கு.

12. என்னுடைய பெரும்பாலான பதிவுகளை குட் ப்ளாக் பகுதியில் பிரசுரித்த யூத்புல் விகடனுக்கு.

13. பதிவுலகத்துக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே என்னை 'நட்சத்திர பதிவர்' அந்தஸ்து கொடுத்த திரட்டி.காம் வெங்கடேஷ் அவர்களுக்கு.

14. பதிவுலகத்துக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே என்னை 'இந்த வார கீரிடம் பதிவர்' அந்தஸ்து கொடுத்த தமிழ்10 நிர்வாகிகளுக்கு.

15. என்னுடைய பதிவுகளை பிரபலமாக்கும் தமிழிஷ் வாசகர்களுக்கு.

16. என்னுடைய பதிவுகளை அதிகம் பேர் படிக்க உதவிடும் தமிழ்மணம், தமிழிஷ் நிர்வாகிகளுக்கு.

********************************************

"நல்லாத்தாங்க இருந்தேன் ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி. நான் உண்டு, என் வேலை உண்டு, யோகா உண்டு, ஜிம் உண்டு என்று. தெரியாத்தனமா ஒரு நாள் என் மகள்,

"அப்பா, நான் கடவுள் படத்துல உள்ள 'அம்மா உன் பிள்ளைதான்' பாட்டு வரிகள் வேணும்பா?"

"ஏண்டா?"

" பாட்டு போட்டியில கலந்துக்கணும் அதுக்குத்தான்"

சரினு இணையத்துல தேடுனா, பரிசல் பக்கம் கிடைச்சது, என்னடா இது புதுசா இருக்கேனு படிச்சா, மனுசன் நல்லா இன்ட்ரெஸ்டா எழுதியிருந்தார். அப்பறம் நர்சிம் பக்கம்னு போய், பல மணி நேரத்துக்கு பிறகு பாட்டை கண்டு பிடிச்சு எடுத்து, என் பொண்ணு ஒரே நாள்ல பாட்டைக்கற்றுக்கொண்டு, தமிழையும் சேர்த்து கற்றுக்கொண்டு, பள்ளில பாடி பரிசு வாங்குனது எல்லாம் ஒரு சந்தோசமான விசயம். அத விடுங்க.

அப்பறம் வேற சொல்ல வரேணு கேட்கறீங்களா? நான் அதோட விட்டுருக்கணும். என்னாச்சு, எல்லா வலைத்தளத்தயும் படிக்க ஆரம்பிச்சு, எனக்கும் அந்த ஆசை வந்து நானும் இரெண்டு மாசத்துக்கு முன்னாடி வலைப்பூ ஆரம்பிச்சு, இப்போ பதிவு நோய் வந்து தவிக்கறேங்க"


மேலே இருப்பது நான் பதிவுலகத்துக்கு வந்த சில நாட்களில் எழுதியது. இப்படித்தான் என் பதிவுலக எழுத்துக்கள் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாயின. கூடுமானவரை என் வாழ்வில் நடந்த விசயங்களையே பதிவாக எழுதியிருக்கிறேன். ஒரு நாளில் 80 பேர் ஆரம்பத்தில் படித்துக்கொண்டிருந்தார்கள். இப்போது 120 பேர் படிக்கிறார்கள். 'இப்படி எழுத வேண்டும் அப்படி எழுத வேண்டும்' என யோசிப்பதில்லை. மனதில் தோன்றுவதை உடனே எழுதிவிடுகிறேன். நான் நேரம் கிடைக்கும்போது எழுதி வைத்து பிறகு போஸ்ட் செய்வதில்லை. என்னிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் எழுதினால் எழுதியதுதான். அதை திரும்ப சரி பார்க்கும் பழக்கம் இல்லை. பரிட்சை எழுதும்போதும் அப்படித்தான். இதனால் கணக்கு பாடத்தில் பல முறை 100 க்கு 100 வாங்காமல் கோட்டை விட்டிருக்கிறேன்.

தினமும் கிடைக்கும் ஒரு மணி நேர ஓய்வு நேரத்தில் பதிவுகள் எழுதுகிறேன். மற்ற சமயங்களில் மற்றவர்கள் எழுதிய பதிவுகளை படிக்கவே நேரம் செலவு ஆகிறது. அதனால் முடிந்தவரை பின்னூட்டமிடுகிறேன். இந்த பதிவுலக போதை ஒருவித சந்தோசத்தையே கொடுத்தாலும், நிறைய நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது.

சாதாரண நாட்களில் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை ஒரு பதிவாக எழுதுவது வழக்கம். ஆனால், புதன் கிழமை எழுத உட்கார்ந்த போதுதான் இது 100வது பதிவு என்பதை உணர்ந்தேன். அதனால், அன்று எழுதியதை அழித்துவிட்டேன். பிறகு என்ன எழுதலாம் என நினைத்து இரண்டு நாட்கள் செலவழித்து விட்டேன். பிறகு யோசித்து நாம் இதுவரை எழுதிய பதிவுகளுக்கு காரணமானவர்களுக்கு நன்றி சொல்லலாமே என்று நினைத்து இந்த பதிவினை எழுதுகிறேன்.

**********************************************

எனக்கு 'இரண்டு ஜோடிக்கண்கள்' உணர்த்திய விசயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு முறை நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நண்பர்களுடன் முக்கொம்பு சுற்றுலாத்தலம் சென்றோம். நாங்கள் நான்கு பேர் ஒரு காரில் சென்றோம். அங்கே சுற்றிக்கொண்டிருந்த போது ஒரு நான்கு பெண்கள் அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நண்பர்கள் அவர்களை பார்த்து கிண்டல் பண்ணினார்கள். சிறிது நேரத்தில் அந்த பெண்கள் எங்களுடன் சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். அந்த நாள் முழுவதும் அவர்கள் எங்களுடனே சுத்திக்கொண்டிருந்தார்கள். எங்கள் கல்லூரி நண்பனில் ஒருவன் 'அந்த' விசயத்தில் கொஞ்சம் வீக். அதில் ஒரு பெண் சினிமா நடிகை போல் அப்படி ஒரு அழகு. அந்த நண்பன் குட்டையாக நல்ல சிகப்பாக ஆனால் சுமாரன அழகில் இருப்பான். அந்த அளவிற்கு பெண்களை கவரும் எந்த விசயமும் அவனிடம் இல்லை என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், இவன் அடுத்த நாள் எப்படியோ காருக்கு சொந்த கார நண்பனை அழைத்துக்கொண்டு, மீண்டும் முக்கம்புக்கு சென்று, முதல் நாள் பார்த்த பெண்களில் இரண்டு பெண்களை வரவழைத்து, அந்த அழகான பெண்ணை..... அவள் சம்மதத்துடனே எல்லாம் நடந்திருக்கிறது. நண்பர்களுக்கு எல்லாம் பயங்கர கோபம், "எல்லோரையும் ஏன் அழைத்துச் செல்லவில்லை?" என்று. எனக்கு வேறு மாதிரியான ஒரு கோபம். "எப்படி இந்த பெண் அப்படி?" என்று. நான் அந்த பெண்ணை அப்படி கனவில் கூட நினைக்கவில்லை. அப்படி ஒரு லட்சுமிகரமான ஒரு பெண் சாதாரண காம இச்சைக்காக, அதுவும் மறைவான, புல் வெளியில். அசிங்கம். அந்த பெண்ணுக்கு என்ன தண்டனை கொடுப்பான்? ஆண்டவன்? என கொஞ்ச நாட்கள் நினைத்துக்கொண்டு இருந்து விட்டு மறந்து விட்டேன்.

சில வருடங்கள் கழித்து திருச்சி கலையரங்கம் தியேட்டரில் ஒரு படம் பார்க்க மற்ற நண்பர்களுடன் சென்றிருந்தேன். இடைவேளையில் பார்த்தால் எனக்கு பயங்கர அதிர்ச்சி. நான் மேலே குறிப்பிட்ட அந்த பெண் கணவனுடன். என்னை பார்த்த பின் அந்த பெண் முகத்தில் அதிர்ச்சி, பயம். அவள் உடல் நடுங்குவதை என் கண்ணால் பார்க்க முடிந்தது. அவள் கணவனுக்கு தெரியாமல் தன் 'கண்களால்' என்னைப் பார்த்து 'தயவு செய்து சொல்லி விடாதே?' என்று கெஞ்சியது இன்னும் என் நினைவில் இருக்கிறது.

இதைவிட அந்த பெண்ணுக்கு ஒரு தண்டனை வேண்டுமா, என்ன?

**********************************************

நான் ஒரு முறை அலுவலக விசயமாக சென்னையிலிருந்து மும்பைக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். 39 மணி நேர பயணம் என்று நினைக்கிறேன். பூனா அருகே சென்றபோது ஒரு ஸ்டேசனில் வண்டி நின்றபோது ஏகப்பட்ட திருநங்கைகள் ஏறினார்கள். இத்தனைக்கும் என்னுடையது மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி. ஏறிய திருநங்கைகள் அங்கே இருந்த ஆண்களுடன் பணம் கேட்டு ஏடாகூடமாக சில அசிங்கமான செயல்களில் இறங்கினார்கள். சிலர் பணம் கொடுத்ததும் அதை வாங்கிக் கொண்டு அங்கே இருந்து சென்று விட்டார்கள். என்ன இது அராஜகம்? என்று எனக்கு கோபமாக வந்தது. என் அருகில் வேண்டுமென்ற ஒருவர் உட்கார்ந்து கொண்டு கண்ட இடங்களில் தொட்டு என்னை இம்சித்துக் கொண்டிருந்தார். பணம் ஏதாவது கொடுக்கலாமா? என யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் நான் ஆர்டர் செய்திருந்த சாப்பாடு வந்தது. நான் அதை அப்படியே வாங்கி 'அந்த' நபரிடம் சாப்பிட சொன்னேன். அதை வாங்கி வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தவர் என்னை பார்த்து ஹிந்தியில் ஏதோ கூறினார். எனக்கு ஒன்னும் புரியவில்லை.

ஆனால் அவர் கலங்கிய கண்கள் என்னைப் பார்த்த பார்வையின் அர்த்தம் எனக்குப் புரிந்தது. அந்த பார்வையின் வெளிச்சம் என்னைவிட்டு ரொம்ப நாட்கள் விலகாமல் இருந்தது.

அன்புக்கு அடிமையாகாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா என்ன?

**********************************************

38 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பதிவு நூறு அப்படின்னாலும் பின்னூட்டம் ஃபர்ஸ்ட்...,

anujanya said...

இவ்வளவு வேகமாக நூறு இடுகைகளா? நேற்று தான் இரும்புத்திரை அரவிந்துக்கு வாழ்த்து சொன்னேன். பரவாயில்லை, பரிசல்/நர்சிம் உங்கள் 'பிடித்த பதிவர்கள்' என்பதால் அதே சுறுசுறுப்புடன் இருக்கிறீர்கள்.

இந்தப் பதிவு சுவாரஸ்யம். திருநங்கைகளை மனிதர்களாக பாவித்தாலே அவர்கள் நெகிழ்ந்து போய் விடுவார்கள்.

வாழ்த்துகள். இன்னும் நிறைய வாசித்து, நிறைய எழுதுங்கள்.

அனுஜன்யா

அகநாழிகை said...

வாழ்த்துக்கள் நண்பரே.

அகநாழிகை said...

100வது இடுகைக்கும் தொடர்ந்து பல நல்ல தகவல்களை எழுத்தின் வாயிலாக பகிர்ந்து கொள்ளவும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் உலக்ஸ்... சிறுதுளி பெரு வெள்ளமாக மாற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Jackiesekar said...

வாழ்த்துக்கள் தாங்கள் மேன் மேலும் வளர
அன்புடன்
ஜாக்கி

கோவி.கண்ணன் said...

100க்கு 100 வாழ்த்துகள்.

இப்போதைக்கு வெளி நாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு தமிழகத்துடன் தொப்புள் கொடியாக இருப்பது வலைப்பக்கங்கள் தான்

யுவகிருஷ்ணா said...

மேலும் ஆயிரம் பதிவுகளை விரைவில் கடக்க வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

தங்களின் 100வது இடுகைக்கு வாழ்த்துகள்.

மிக அழகாக எழுதுகின்றீர்கள். நன்றி சொன்ன விதம் மிக அழகு.

மேன் மேலும் வளர வாழ்த்துகள்.

ஒரு சின்ன திருத்தம்.

blog = வலைப்பூ / பதிவு
post = இடுகை.

அதனால் இது உங்களின் வலைப்பூவில் / பதிவில் 100 வது இடுகை.

iniyavan said...

//பதிவு நூறு அப்படின்னாலும் பின்னூட்டம் ஃபர்ஸ்ட்...,//

நன்றி டாக்டர்.

iniyavan said...

//வாழ்த்துகள். இன்னும் நிறைய வாசித்து, நிறைய எழுதுங்கள்.

அனுஜன்யா//

ரொம்ப நன்றி சார். நிச்சயம் நிறைய படிப்பேன் சார். உங்கள் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்.

iniyavan said...

//100வது இடுகைக்கும் தொடர்ந்து பல நல்ல தகவல்களை எழுத்தின் வாயிலாக பகிர்ந்து கொள்ளவும் வாழ்த்துக்கள்//

உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பொன் வாசுதேவன் சார்.

iniyavan said...

// வாழ்த்துக்கள் உலக்ஸ்... சிறுதுளி பெரு வெள்ளமாக மாற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா. உங்களைப் பற்றி பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன்.

iniyavan said...

//வாழ்த்துக்கள் தாங்கள் மேன் மேலும் வளர
அன்புடன்
ஜாக்கி//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி ஜாக்கி.

iniyavan said...

//100க்கு 100 வாழ்த்துகள்.//

நன்றி கோவி சார்.

iniyavan said...

//மேலும் ஆயிரம் பதிவுகளை விரைவில் கடக்க வாழ்த்துகள்//

ரொம்ப நன்றி யுவா. உங்களின் முதல் பின்னூட்டமே எனக்கு வாழ்த்தாக அமைந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.

"வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி....."

iniyavan said...

//தங்களின் 100வது இடுகைக்கு வாழ்த்துகள்.

மிக அழகாக எழுதுகின்றீர்கள். நன்றி சொன்ன விதம் மிக அழகு.

மேன் மேலும் வளர வாழ்த்துகள்.//

உங்கள் வருகைக்கிற்கும், கருத்திற்கும் ரொம்ப நன்றி இராகவன் சார்.

Anonymous said...

//நன்றி நண்பா. உங்களைப் பற்றி பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன்.//
அதனால் என்ன? எனக்கு தான் பேரே கிடையாதே, நான் தான் அனானி ஆச்சே :-)

துபாய் ராஜா said...

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்.

//கோவி.கண்ணன் said...
இப்போதைக்கு வெளி நாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு தமிழகத்துடன் தொப்புள் கொடியாக இருப்பது வலைப்பக்கங்கள் தான்//

கோவியாரை வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்..

Unknown said...

கலக்குங்க உலக்ஸ்
வாழ்த்துக்கள் :)

அழகேசன்

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் நண்பரே...:-))))))

Pradeep said...

Congrats.....

Beski said...

வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றாக எழுதுகிறீர்கள், தொடர்ந்து எழுதுங்கள்.
---
நானெல்லாம் ஒரு பதிவு போட்டால், போட்டவுடன் 4-5 தடவை வாசிக்கிறேன் (அந்த அளவுக்கு வெட்டியா இருக்குறேன்னு நினைக்காதீங்க, அந்த அளவுக்கு தவறுகள் இருக்கும்). உங்களிடம் குறைவாகத்தான் இருக்கிறது.
---
பெண்களைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை, அவர்களும் ஆண்களைப்போல் ஆசை உள்ளவர்களே.
---
திருநங்கைகள் பற்றி நல்ல எண்ணமே இல்லை, ஏனென்றால் எனது அனுபவங்கள் அப்படி. பணம் கொடுக்கவில்லையென்றால் அவர்கள் பண்ணும் அராஜகம் தாங்க முடியாது. அப்படிப் பண்ணிக்கொண்டிருப்பவர்களிடம் எப்படி அன்பு காட்டுவது என்றே தெரியவில்லை. பணத்தைக் கொடுத்துவிடுவேன், நம்மால் முடிந்தது அவ்வளவே.
---
தங்களுடைய எழுத்து எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், பல கருத்துக்களில் உங்களுடன் ஒத்துப்போக முடிவதில்லை என்பதும் உண்மை. அனுபவம் வேறு வேறு அல்லவா? தங்களுடைய நிலை வரும்போது என்னுடைய மனநிலை எப்படி இருக்குமோ... குணங்கள் மாறுவது பற்றி ஒரு பதிவே எழுத இருக்கிறேன்.
---
அப்புறம், அனைத்துப் பதிவிற்கும் தவறாமல் பதிலிடுகிறேன் என்கிறீர்களா? போன பதிவிற்கு எழுதவில்லையே!
பூவுக்குப் பொறந்த நாளாம் பாட்டை ராகாவில் அப்போதே கேட்டேன். பதில் சொல்லத்தான் மறந்துவிட்டேன்.
‘பொன்னா கன்னி மறந்த நாளாம்’ என்றுதான் கேட்டது.
உங்களுக்காவது தெரிந்ததா?

Beski said...

:)

Starjan (ஸ்டார்ஜன்) said...

100 வது பதிவுக்கு என் இனிய வாழ்த்துக்கள்

100 1000 ஆக வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

கோவி.கண்ணன் said...
100க்கு 100 வாழ்த்துகள்.

இப்போதைக்கு வெளி நாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு தமிழகத்துடன் தொப்புள் கொடியாக இருப்பது வலைப்பக்கங்கள் தான்

repeateee....

iniyavan said...

//செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி துபாய் ராஜா.

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

iniyavan said...

//கலக்குங்க உலக்ஸ்
வாழ்த்துக்கள் :)//

உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அழகேசன்.

iniyavan said...

//வாழ்த்துகள் நண்பரே...:-))))))//

வாழ்த்திற்கு நன்றி கார்த்திகை பாண்டியன்.

iniyavan said...

//Congrats.....//

நன்றி பிரதீப்.

iniyavan said...

//வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றாக எழுதுகிறீர்கள், தொடர்ந்து எழுதுங்கள்.//

நன்றி நண்பா.

iniyavan said...

//பூவுக்குப் பொறந்த நாளாம் பாட்டை ராகாவில் அப்போதே கேட்டேன். பதில் சொல்லத்தான் மறந்துவிட்டேன்.
‘பொன்னா கன்னி மறந்த நாளாம்’ என்றுதான் கேட்டது.
உங்களுக்காவது தெரிந்ததா?//

நண்பா எவனோ ஒருவன்,

அந்தப் பாடகி பாடுவது அப்படித்தான் கேட்கும். ஆனால், உண்மையான வரிகள்:

''பூவுக்கு பொறந்த நாளு
பெண்ணாக நீ மலர்ந்த நாளு''

iniyavan said...

//100 வது பதிவுக்கு என் இனிய வாழ்த்துக்கள்

100 1000 ஆக வாழ்த்துக்கள்//

உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஸ்டார் ராஜன்.

iniyavan said...

//Hi Iniyavan2009,

Congrats!

Your story titled '100வது பதிவு - நானும், பதிவுலகமும்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th October 2009 06:00:17 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/122983

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் உலகநாதன்

நூறாவது இடுகைக்கு நல்வாழ்த்துகள்

நன்றி சொல்வது நற்பண்பு
வாழ்க வளமுடன்

iniyavan said...

//அன்பின் உலகநாதன்

நூறாவது இடுகைக்கு நல்வாழ்த்துகள்

நன்றி சொல்வது நற்பண்பு
வாழ்க வளமுடன்//

உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சீனா சார்!

கபிலன் said...

வாழ்த்துக்கள்! தங்கள் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

Ramesh said...

(எங்கள் கல்லூரி நண்பனில் ஒருவன் 'அந்த' விசயத்தில் கொஞ்சம் வீக்) ஆண் என்றால் 'அந்த' விசயத்தில் கொஞ்சம் வீக். பெண் என்றால் (அந்த பெண்ணுக்கு என்ன தண்டனை கொடுப்பான்? ஆண்டவன்? ) நல்ல கதையா இருக்கே.