Oct 26, 2009

வித்தியாசமான அனுபவங்கள் - 2

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் முடி வெட்டுவதற்காக சலூன் சென்றிருந்தேன். மலேசியாவில் ஒவ்வொரு மாதமும் முடிவெட்டுவதற்கு ரூபாய் 300 செலவழிக்கிறேன். சீனக் கடைக்கு போவதுதான் வழக்கம். வெறும் முடி மட்டும் வெட்டிவிட்டு வரலாம்தான். ஆனால் அப்படி வர இயலாது. அழகிய சீனப்பெண் தலையில் ஷாம்பு போட்டு 30 நிமிடம் தலையில் விளையாடி, மஜாஜ் செய்து பிறகு முடி வெட்டிவிட்டு வருவதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். பின்பு வந்து குளித்து படுத்தால் அருமையாக தூக்கம் வரும். கல்யாணத்திற்கு முன் ஏற்பட்ட பழக்கம். பழக்கத்தை மாற்ற முடியவில்லை. ஏனென்றால் அந்த சுகத்தை இழக்க மனம் வரவில்லை. ஆண்கள் முடி வெட்டும் சலூனுக்கு சென்று ஷாம்பு பாத் இல்லாமல் முடி மட்டும் வெட்டி விட்டு வரலாம்தான். ஆனால் ஏனோ பழக்கத்தை மாற்ற விரும்பவில்லை. என் மனைவி அடிக்கடி சொல்வதுண்டு,

" நீங்கள் எதற்காக முடி வெட்ட சலூன் எல்லாம் போறீங்க. டேபிள் பேனை 5 ல வைச்சா, தேவையில்லாத முடி போயிடும் இல்லை" என்று எனக்கு முடி கம்மி என்பதை கிண்டல் அடிப்பதுண்டு. அதற்காக நாம் கவலைப்படுவதா என்ன? ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சைக்கரை இல்லையா?. சரி, இந்த முறை ஊரில் முடி வெட்டலாம் என முடிவெடுத்து எங்கள் ஊரிலிருக்கும் சலூனுக்கு சென்றிருந்தேன். எதையோ சொல்ல நினைத்து வேறு எங்கோ சென்று விட்டேன்.

முடி வெட்டிக்கொண்டிருக்கும்போது என் கைத்தொலை பேசிக்கு ஒரு போன் வந்தது. பார்த்தால் என் நெருங்கிய உறவினர். எடுக்க வேண்டாம் என நினைத்தவன், முடிவை மாற்றிக் கொண்டு போனை எடுத்தேன்.

" ரவி (என்னுடைய இன்னொரு பெயர்), அந்த ஒன்று விட்ட மாமா (ஒன்று விட்டவோ இல்லை இரண்டு விட்டவோ) இல்லை, அவரோட உறவினர் ஒருத்தர் ஜொகூர் பார்ல இருக்கார் தெரியுமில்லை"

" ஆமாம். தெரியும்"

" அவருக்கு அவசரமா ஒரு 50, 000 ரூபாய் தேவைப்படுதான். உன்னால உங்க ஆபிஸ் நண்பர்கள் கிட்ட சொல்லி உடனே மலேசியால ஜோகூர் பார்ல உள்ள அவருக்கு அனுப்ப முடியுமா?"

" நான் சலூனுல இருக்கேன். வீட்டுல வந்து பேசலாமே?"

" இல்லை, ரொம்ப அவசரமாம். உடனே உன் கிட்ட பேசி பதில் சொல்ல சொன்னார். ஏன்னா, முப்பது நிமிசத்துல வேண்டுமாம். ஏதோ ரொம்ப அவசர்ம் போல"

எனக்கு ஜிவ்வ்வ்னு கோபம் ஏறிப்போயிடுச்சு. கேக்கறது கடன். அதுவும் யாருக்கோ, அதுலயும் இந்தியால இருந்துட்டு மலேசியால இருக்குறவருக்கு எப்படி 30 நிமிசத்தில் உதவ முடியும்?

" எதுவாய் இருந்தாலும் இப்போ என்னால் பதில் சொல்ல முடியாது. ஏன்னா, நான் சலூனில் இருக்கிறேன்"

தொடர்ந்து வற்புறுத்தவே, நான் லைனை துண்டித்து விட்டேன். பிறகு தொடர்ந்து வந்த கால்களை நான் எடுக்கவில்லை. உடனே உதவ விரும்பாதற்கு காரணம்,

01. என்னுடைய பணத்தை எல்லாம் ஊருக்கு அனுப்பிவிட்டேன்.

02. அப்படியே கடன் வாங்கி கொடுத்தாலும், என்ன காரணத்திற்கு வாங்குகிறார் என்று எப்படித் தெரியும்? ஒரு வேளை விசா இல்லாமல் போலிஸிடம் மாட்டி அபராதம் கட்ட பணம் கேட்டிருந்தால், நான் உதவினால், அந்த நபர் மறுபடியும் தவறு செய்யும் போது, போலிஸ் என்னையல்லவா விசாரிக்கும். இது தேவையா?

03. நான் இங்கே பணம் கொடுத்தால், அவர்கள் இந்தியாவில் பணம் கொடுப்பார்களாம். எப்போது? தெரியாது? அப்படியே கொடுத்தால் அது ஹவாலா மோசடியில்லையா? நான் சம்பாரிக்கும் பணத்தை ஒழுங்கான முறையில் என் பேங்குக்கு அனுப்புவதுதான் என் பழக்கம்.

இரண்டு மணி நேரம் கழித்து, நாங்கள் தீபாவளி ஷாப்பிங்கில் இருந்தபோது மீண்டும் போன் வந்தது. விசயத்தை எடுத்து கூறினேன். போன் செய்தவர் புரிந்து கொண்டார் என நினைக்கிறேன். ஆனால், சம்பந்தப்பட்டர் என் மீது கோபமாக இருப்பதாக தெரிந்தது. அவரை நேரில் சந்தித்தபோது என்னிடம் சரியாக பேசவில்லை. எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

ஆனால், எனக்கு ஒரு விசயம் புரிய மாட்டேன் என்கிறது. எப்படி இவர்களால் இப்படி அதிகாரமாக ஒரு உதவியோ, கடனோ கேட்க முடிகிறது? எப்படி ஒருவருக்கு திடீரென ரூபாய் 50,000 தேவைப்படும்? அப்படி தேவை இருக்கும் பட்சத்தில் ஏன் முன்பே திட்டமிட்டு செயல்பட வில்லை? பணம் இல்லாத பட்சத்தில் ஏன் அதற்குறிய செலவை செய்ய வேண்டும்? இந்த காலத்தில் யார் 30 நிமிசத்தில் பணம் தருவார்? அதுவும் வேறு நாட்டில்? நம்மிடம் அவர்கள் குடுத்து வைத்திருக்காத பட்சத்தில், நாம் உடனே உதவ இல்லையென்றால் எப்படி அவர்களுக்கு கோபம் வருகிறது?

வெளிநாட்டில் வேலை பார்த்தால், மற்றவர்கள் கேட்கும்போது எல்லாம் பணம் கொடுக்க வேண்டுமா என்ன? சம்பந்தப் பட்டவர்கள் இதை படிக்க நேர்ந்தால் கொஞ்சம் சிந்தித்து பார்ப்பது நல்லது.

அனுபவங்கள் தொடரும்.....

8 comments:

துளசி கோபால் said...

ரொம்பச் சரி.

அதிலும் வெளிநாட்டில் நாம் நோட்டு அடிக்கும் வேலையில் இருக்கோம், இல்லைன்னா நம் வீட்டில் பணங்காய்ச்சி மரம் இருக்குன்னுதான் பலருக்கு (முக்கியமா சொந்தங்களுக்கு) ஒரு நினைப்பு.

iniyavan said...

//ரொம்பச் சரி.

அதிலும் வெளிநாட்டில் நாம் நோட்டு அடிக்கும் வேலையில் இருக்கோம், இல்லைன்னா நம் வீட்டில் பணங்காய்ச்சி மரம் இருக்குன்னுதான் பலருக்கு (முக்கியமா சொந்தங்களுக்கு) ஒரு நினைப்பு.//


உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேடம்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

மு.சீனிவாசன் said...

நீங்கள் சொன்னதும், துளசி மேடம் சொன்னதும் 100% சரி.

போன மாதம் மட்டும் எனக்கு இந்த மாதிரி இரண்டு முறை நடந்திருக்கிறது. என் உறவினர் எனக்கு மிஸ்டு கால் விட்டார். நான் அவரைத் திருப்பி அழைக்கும்போது 3 லட்சங்கள் கடன் கேட்டார். அவரது மனைவியின் உடல்நிலை மோசம் என்பதால் நானும் 1 லட்சம் கொடுத்து உதவி செய்தேன். அதற்குப் பிறகு ஒரு மிஸ்டு கால் கூட இல்லை இதுவரை. இன்னொரு நண்பர் பைக் வாங்கணும் 25000 கொடு என்றார். நான் சிரமம் என்று சொல்ல ஆரம்பித்தவுடன், "அப்படியே உனக்கு எதாவது பிரச்சனைன்னா கடனாக் கொடு, திருப்பி கொடுத்திடறேன்" என்றார். அதற்குப்பின் தான் எனக்கு புரிந்தது அவர் முதலில் கெட்டது இனாமாக 25000 என்று!

Beski said...

தொடரட்டும்...

iniyavan said...

உங்கள் வருகைக்கு நன்றி ஞானப்பித்தன்.

iniyavan said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மு.சீனிவாசன்.

iniyavan said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி எவனோ ஒருவன்.