Oct 29, 2009

வித்தியாசமான அனுபவங்கள் - 3

என் நெருங்கிய நண்பர் ஒருவர் தனியே ஒரு நிறுவனம் தொடங்கி நல்ல முறையில் நடத்தி வருகிறார். தற்போது ஏறக்குறைய 200 பேர் வேலை செய்கிறார்கள். சிறிய முதலீட்டில் ஆரம்பித்து இப்போது நன்றாக வளர்ந்து வருகிறது அவருடைய நிறுவனம். நான் எப்போது ஊருக்கு போனாலும் அவருக்காக ஒரு சில மணி நேரங்கள் ஒதுக்கி அவரைப் பார்த்துவிட்டு, அவருடன் மதிய உணவு அருந்திவிட்டு வருவதுண்டு. இந்த முறை நேரமின்மையால் என்னால் செல்ல முடியவில்லை. அவரிடம் போனில் பேசியபோது, அவர் கூறினார், "நானே உன்னை வந்து வீட்டில் சந்திக்கிறேன்". தீபாவளி முடிந்து இரண்டு நாட்கள் கழித்து வருவதாக சொன்னார்.

சரியாக இரண்டு நாட்கள் கழித்து போன் செய்தேன். ஊருக்கு வந்துவிட்டதாகவும், இன்னொரு நண்பர் வீட்டில் இருப்பதாகவும் கூறினார்.

நான் கூறினேன், " என்னிடம் தற்போது அங்கே வர வண்டியில்லை. உன்னால் என்னை வந்து அழைத்துச் செல்லமுடியுமா?"

" இல்லை. நானே வீட்டிற்கு வந்து பார்க்கிறேன். நீயே ஒரு வார விடுமுறையில் வந்து இருக்கிறாய், வேறேனும் வேலை இருந்தால் பார்" என்றார்.

அவர் சொல்வதும் நியாயமாக படவே நானும் மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன். அவர் சொல்லி இரண்டு மணி நேரமாகியும் வரவில்லை. நான் சாப்பிடாமல் அவருக்காக காத்திருந்தேன். பிறகு மதியம் இரண்டு மணி அளவில் இன்னொரு நண்பர் வீட்டுக்கு போன் செய்து, " ஏன் நண்பர் இன்னும் வரவில்லை?" என விசாரித்தேன்.

அவர் கூறினார், " அவர் போய் ஒரு 30 நிமிடம் ஆகிவிட்டதே. ஏதோ அவசர வேலையாம். உடனே திருச்சி சென்று விட்டார்"

எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. நாம் ஒவ்வொரு முறையும் அவரைச் சென்று பார்க்கிறோம். ஊருக்கு வந்தவர் என்னைப் பார்க்காமல் மற்றவர்களை மட்டும் எப்படி பார்த்துவிட்டு செல்லலாம்? வந்த கோபத்தில் போனை எடுத்தேன். ஆனால் அவர் போனை அட்டண்ட் செய்யவில்லை. எனக்கு இன்னும் கோபம் ஏறிவிட்டது. என்னை அவமான படுத்தியதாக நினைத்து, கன்னா பின்னா என்று திட்டி ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினேன். அதற்கும் பதிலில்லை. பிறகு விட்டு விட்டேன். அன்று முழுவதும் அந்த கோபம் எனக்குள் இருந்தது. ஆயிரம் சிந்தனைகள் தோன்றின. "அவன் முன்புபோல் இல்லை. கம்பனியின் முதலாளி. நாம் அவனை ஒப்பிடும்போது அவன் அளவு பணக்காரன் இல்லை போலும். அதான். இனி அப்படி ஒன்றும் அவனுடைய நட்பு தேவையில்லை" என நினைத்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள் இரவு அவனிடமிருந்து போன். அவன் பேரை பார்த்ததும் அவன் மேல் இருந்த கோபம் மறந்துவிட்டது. என்னை அறியாமல் கலகல என்று பேச ஆரம்பித்தேன்.

" ஏண்டா, அந்த மாதிரி எஸ் எம் எஸ் அனுப்பின?"

" நீ ஏன் வரவில்லை? ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாம் அல்லவா?"

" ஒருத்தன் உன்னைப் பார்க்க வீட்டிற்கு வரேன் என சொல்லியிருக்கிறான். ஆனால் வரவில்லை. போன் பண்ணியும் வராததற்கான காரணத்தைச் சொல்லவில்லை. இன்னொரு நண்பரிடமும் ஒன்றும் சொல்லவில்லை. போனையும் அட்டண்ட் பண்ணவில்லை. ஆனால் அவசரமாக கிளம்பியுள்ளான். அப்படியென்றால், அவனுக்கு உன்னைப் பார்ப்பதையும் விட ஏதோ ஒரு முக்கியமான வேலை இருந்திருக்கும் என்று ஏன் நீ நினைத்துப் பார்க்கவில்லை?"

" அதுபோல் எனக்கு நினைத்து பார்க்க முடியவில்லை. நீ என்னை அவமான படுத்தியதாக நினைத்தேன். அதனால் ஏற்பட்ட கோபத்தால் அவ்வாறு எழுதினேன். சரி, என்ன அப்படி உனக்கு முக்கியமான வேலை, என்னைப் பார்ப்பதை விட?"

" நான் உன்னைப் பார்க்க கிளம்பியவுடன் ஒரு போன் வீட்டிலிருந்து வந்தது. அப்பா வழுக்கி விழுந்து விட்டதாகவும், வலியில் துடிப்பதாகவும் அம்மா கூறினார். உனக்கே தெரியும் அப்பாவிற்கு 86 வயது. சுகர் பேஷண்ட். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என் மனது முழுவதும் அப்பாவே ஆக்கரமித்து இருந்த்தால் உடனே யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் கிளம்பி விட்டேன். உன்னிடம் பிறகு சொல்லிக் கொள்ளலாம், நீ புரிந்து கொள்வாய் என நினைத்தேன். ஆனால், நீ கோபப் பட்டு திட்டி விட்டாய். எனக்கு அப்பாவின் உடல் நிலை கவலையோடு நீ கோபமாய் இருக்கும் கவலையும் சேர்ந்து கொண்டது. உனக்கு கோபம் குறைந்ததும் பேசலாம் என நினைத்துதான் இன்றைக்கு பேசுகிறேன்"

" சாரிடா சாரிடா" என நான் வழிந்தது ஒரு பெரிய கதை. ஏனென்றால், ஒவ்வொரு தீபாவளியன்றும் நண்பர்கள் அனைவரும் அவனின் வீட்டில்தான் சாப்பிடுவோம். கிட்டத்தட்ட ஒரு இருபது பேர் இருப்போம். அப்புறம்தான் வீட்டிற்கு செல்வோம். அவனுடைய அப்பாவும், அம்மாவும் எங்களை கவனித்தவிதம் என்னால் மறக்கவே முடியாது. அவனுடைய வீடும் எங்கள் வீடு போல்தான் நினைப்போம். அவனுடைய அப்பாவிற்கு உடம்பு முடியவில்லை என்றதும், மனசௌ வலிக்க ஆரம்பித்தது.

இப்படித்தான் நாம் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர்களை பற்றியும் அவர்களின் சூழ்நிலைகளைப் பற்றியும் நினைப்பதும் இல்லை கவலைப் படுவதும் இல்லை. நாம் நம்மைப் பற்றி மட்டும்தான் நினைக்கிறோம். எனக்கு ஏன் கோபம் வந்தது?

" நாம் ஒவ்வொரு முறையும் அவனைப் போய் பார்க்கிறோமே? அவன் ஏன் நம்மை வந்து பார்க்கவில்லை?"

இது எவ்வளவு பெரிய தவறு?

எதையாவது எதிர்பார்த்து பழகுவதா உண்மையான நட்பு????

உண்மையான நட்பு என்பது என்ன? எதையும் எதிர்பார்க்காமல் பழக வேண்டும். கஷ்டம் என்று வரும்போது ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ள வேண்டும். எந்த ஈகோவும் பார்க்கக் கூடாது. கவிஞர் வைரமுத்து சொல்வதைப்போல் " நட்பைக் கூட கற்பை போல எண்ண வேண்டும்"

நான் அவ்வாறு இல்லையோ என வருத்தப்படுகிறேன்.

அனுபவங்கள் தொடரும்.....

3 comments:

Beski said...

:)

iniyavan said...

உங்கள் வருகைக்கு நன்றி எவனோ ஒருவன்.

Beski said...

எவனோ ஒருவன் இனி அதி பிரதாபன் எனப்படுவான்... ஹி ஹி ஹி...