Oct 30, 2009

வித்தியாசமான அனுபவங்கள் - 4

அந்த நண்பர் எனக்கு அறிமுகமானது 2002ல் என நினைக்கிறேன். மிக நன்றாக பேசுவார். நன்றாக பழகுவார். பைனான்ஸ் கம்பனி நடத்திக்கொண்டிருந்தார். எல்.ஐ.சி ஏஜண்ட் ஆகவும் இருந்தார். அவர் எனக்கு பழக்கம் ஏற்பட்ட நாட்களில் அவரைப் பற்றி என்னிடம் என் நலவிரும்பிகள் பல மாதிரி சொன்னதுண்டு. அவர் பழைய பைனான்ஸ் நடத்தியபோது பார்ட்னர்களை ஏமாற்றியதாகவும், அந்த பணத்தில் அவர் ஒரு கம்பனி ஆரம்பித்ததாகவும் சொன்னார்கள். நான் அதை அவரிடமே ஒரு முறை கேட்டதுண்டு. ஆனால், அவர் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். தான் நல்ல முறையில் அனைத்தையும் சரிபண்ணி விட்டதாக கூறினார். நான் அத்தோடு அந்த விசயத்தை விட்டுவிட்டேன். ஏனென்றால், அது அவருடைய தனிப் பட்ட விசயம். நண்பர்கள் என்னிடம் எப்படி பழகுகின்றார்கள் என்பதைத் தான் பார்ப்பேன். எல்லோருமே ஏதாவது ஒரு விசயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி என்றுதான் இருப்பார்கள். இவர் ரொம்ப ரொம்ப நல்லவர் என்று யாரையுமே நாம் குறிப்பிடமுடியாது. ஏதாவது ஒரு குறை எல்லாரிடமுமே இருக்கும்.

அதனால் நான் அவருடன் நன்றாகவே பழகினேன். அவர் இனிமையான பேச்சுக்கு சொந்தக்காரர். அவர் ஒரு முறை என்னை எல்.ஐ.சி பாலிஸி அவரிடம் எடுக்கச் சொன்னார். நண்பர் ஒருவர், "போயும் போயும் ஏன் அவனிடம் எடுக்கிறாய்" என என்னை தடுத்து விட்டார். 2006 ஆம் வருசம் ஒரு நாள். நான் இந்தியா சென்றிருந்த சமயத்தில் என்னை சந்தித்த நண்பர் அவர் SBI Unit Linked Insurance Plan ன் ஏஜெண்டாக இருப்பதாகவும், என்னை அதில் சேரும்படியும் வற்புறுத்தினார். ஒரு லட்சம் செலுத்தினால், 3 வருடம் லாக் இன் பீரியட் முடிந்து இரண்டு லட்சமாக கிடைக்கும் என்றும், பணத்தை இரண்டு லட்சமாக வாங்கும்போது அதற்கு வருமான வரி கிடையாது என்றும் கூறினார். அதே போல் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் வீதம் கட்டினால், மூன்றாவது வருடத்தில் ஆறு லட்சம் கிடைக்கும் என்றார். ஒரு வருடத்திற்கு இன்ஸ்யூரன்ஸ் கவர் ஆகும் என்றும் கூறினார். நான் பல முறை யோசித்து, ஹெட் ஆபீஸ் சென்று சம்பந்தப்பட்ட மேனேஜரை சந்தித்து, அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு, ஐந்து லட்சம் அதில் முதலீடு செய்தேன். நான் செலுத்திய பணத்தின் மூலம் அவர் டார்கட் முடிவடைந்து, அதனால் பேங்க் மூலம் ஒரு வெளிநாட்டு பயணமும் சென்று விட்டு வந்து விட்டார்.

பிறகு மறந்து விட்டேன். அவ்வப்போது ஊருக்கு செல்லும்போது நண்பர்களுடன் பாருக்கு செல்வதுண்டு. ஆனால் நான் தண்ணி அடிப்பதில்லை. சைட் டிஷ்க்காகவே செல்வேன். நண்பர்கள் குடித்து முடிக்கும் வரையில் நானும் பார்ட்டியில் இருப்பதுண்டு. சம்பந்தப்பட்ட அந்த நண்பர் நன்றாக குடிப்பார். நன்றாக சாப்பிடுவார். குடிக்கும் விசயத்தில் நான் யாருக்கும் அறிவுரைகள் சொல்வது கிடையாது. அது அவரவர்களின் பழக்கம். நல்லதா, கெட்டதா என்று அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அதிகமாக குடிக்கும் நபர்களை பற்றி நான் வருத்தப் படுவதுண்டு.

அடுத்த வருடம் நான் பணம் செலுத்தவில்லை. காரணம் எதிர்பார்த்த அளவு அதன் NPV Value அதிகரிக்க வில்லை. போன வருடம் நான் செலுத்திய பணத்தின் மதிப்பு ரூபாய் 5 லட்சத்திலிருந்து 2.50 லட்சமாக குறைந்து விட்டது. மனம் மிக வேதனை அடைந்தது. இந்த முறை ஊர் சென்ற போது அந்த நண்பரை போனிலோ அல்லது நேரிலோ ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று நினைத்து சென்றேன். முதலில் போனில் பேசலாம் என்று போன் நம்பரை தேடினால் காணவில்லை. உடனே இன்னொரு நண்பரிடம் அவருடைய போன் நம்பரை கேட்டேன்:

" எதுக்குடா போன் நம்பர்?"

" இல்லை மாப்பிள்ளை. அந்த SBI Unit Linked Insurance Plan பத்தி பேசணும்"

" இப்ப வேணாண்டா"

" ஏன்? நான் அவர்கிட்ட கோபமா ஒரு வார்த்தையாவது பேசணும்"

" வேணாண்டா பாவம்"

" ஏன், என்னாச்சு?"

" அவருக்கு திடீருனு இறப்பைல கேன்ஸர் வந்து, இறப்பையே வெட்டி எடுத்துட்டாங்க. அவரே கஷ்டப்படுறார்"

" எனக்கு ஒரே அதிர்ச்சி. ஏண்டா திடீருனு இப்படி?"

" தெரியலை"

" போய் பார்க்கலாமா?"

" வேண்டாம். இப்போ பார்த்தா வருத்தப்படுவ"

" ஏன்?"

" கீமோ தெராபி எடுத்து முடியெல்லாம் கொட்டி, பார்க்க கஷ்டமா இருக்கு"

நல்ல வேளை போன் நம்பர் என்னிடம் இல்லை. ஒரு வேளை நான் போன் செய்து அவர் நிலமை தெரியாமல் அவரை திட்டியிருந்தால்... நினைக்கவே சங்கடமாக உள்ளது. அவரைப் பார்த்தால் என்னால் தாங்கிக் கொள்ளமுடியாது என்பதால் அவரைப் பார்க்காமலே வந்துவிட்டேன்.

மீண்டும் சில நண்பர்கள், " அவன் செஞ்சதுக்கு, இப்போ அவன் அனு........றான்"

ஆனால், என்னால் இந்த கூற்றை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஒருவர் முடியாமல் இருக்கும்போது அவருடைய பழைய விசயங்களைச் சொல்லி என்னால் சந்தோசப் படமுடியவில்லை. என்னை பொறுத்தவரை யாருக்குமே இந்த மாதிரி கொடுமையான வியாதி வரக்கூடாது என்றே விரும்புகிறேன்.

அவரால் நம்மை போல் சாப்பிட முடியாது. ஏனென்றால் இறப்பை இல்லை. நாம் சாப்பிடுவதில் 10ல் ஒரு மடங்குதான் அவரால் சாப்பிட முடியும். தண்ணீர் கூட அதிகம் குடிக்க முடியாது. இப்படிப்பட்ட ஒருவரை நினைத்து எப்படி வருத்தப் படாமல் இருக்க முடியும்?

நம் நண்பர்களில் யாருக்காவது இவ்வாறு ஏற்படும்போது மனம் மிகுந்த வேதனை அடைகிறது.

ஆண்டவா, ஏன் இப்படி கொடிய வியாதிகளை கொடுத்து என் நண்பர்களை சோதிக்கிறாய்?

அனுபவங்கள் தொடரும்.....

8 comments:

துளசி கோபால் said...

(-:

Beski said...

:-|

iniyavan said...

அதிபிரதாபன்,

(-:
:-|


இந்த மாதிரி சிம்பல்களுக்கு எல்லாம் என்ன அர்த்தம்??

விளக்க முடியுமா?

iniyavan said...

உங்கள் வருகைக்கு நன்றி துளசி மேடம்.

iniyavan said...

//Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'வித்தியாசமான அனுபவங்கள் - 4' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 30th October 2009 08:00:16 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/131936

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

Beski said...

// (-:
:-|
இந்த மாதிரி சிம்பல்களுக்கு எல்லாம் என்ன அர்த்தம்??
விளக்க முடியுமா?//
தெரிந்து கேட்கிறீர்களா அல்லது தெரியாமல் கேட்கிறீர்களா எனத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.

:), :(, :))) இது போன்ற சில பொதுவானவை. முறையே சிரிப்பு, சோகம், வாய்விட்டு சிரிப்பு.

:)))))))) இப்படிப்போட்டால் உருண்டு புரண்டு சிரிப்பதாகக் கொள்ளலாம்.

;) கண்ணடிப்பதாகக் கொள்ளலாம்.

பொதுவானவை தவிர மற்றவைகளும் உள்ளன.
மேலே சொன்ன
(-: என்பது :-) என்பதன் தலைகீழாக உள்ளது. இடதுகைப் பழக்கம் உள்ளவர் எனக்கொள்லலாம்.

:-| - இது நான் பேசாமல் கேட்கிறேன் (வாயை மூடி) என்ற அர்த்தத்தில் போட்டது. சொல்ல ஒன்றுமில்லை என்றும் அர்த்தம் கொள்ளலாம். தேடியதில் "have an ordinary day" smiley, Indifferent, bored or disgusted, என்றும் அர்த்தம் பார்த்தேன். ஆக மொத்தத்தில் பொதுவானவை தவிற மற்றவற்றிற்கு சரியான அர்த்தம் இல்லை.

இவற்றைப் பார்க்கவும்:
http://en.wikipedia.org/wiki/Emoticon

http://forums.wireplay.co.uk/archive/index.php/t-157003.html

இராகவன் நைஜிரியா said...

அவதிப் படுபவரைப் பார்த்து பரிதாப படத்தான் முடிகின்றது. உங்களின் பெருந்தனமைக்கு தலை வணங்குகின்றேன்.

சந்தனமுல்லை said...

:(

நன்றாக எழுதியுள்ளீர்கள்! பகிர்வுக்கு நன்றி!