"கோலங்கள்" தொடர் பார்க்காமல் தான் இருந்தேன். நண்பர்கள் தோழரின் சாவைப் பற்றியும் அப்போது அவர் பேசிய வசனங்களைப் பற்றியும் சொன்னதால் அந்த பகுதியைப் பார்த்தேன். அந்த ஒரு நாள் காட்சி என் கண்களை குளமாக்கியது என்னவோ உண்மைதான். பிறகு அடுத்த நாளிலிருந்து பழைய பாணியிலேயே நாடகம் பயணிக்க ஆரம்பித்ததால் திரும்பவும் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நண்பர்களிடமும், என் வீட்டிலும் நான் இப்படி கூறினேன், " ஆதி கண்ல படற எல்லாத்தையும் ஏதோ குருவி சுடுறது போல சுட்டுத்தள்ளுறான். போலிஸும் ஒண்ணும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஆனால், அவனால் அவனுடைய ஒரே பிரதான எதிரியான அபி என்ற பெண்ணை மட்டும் ஏன் சுட முடியவில்லை. அவளைச் சுட்டால் தொடரும் முடிந்துவிடும், தமிழ் நாட்டு மக்களும் மன நோயிலிருந்து தப்பிப்பார்கள் அல்லவா?"
நான் கூறியது எப்படி திருச்செல்வத்துக்கு தெரிந்தது என்று தெரியவில்லை. இரண்டு நாட்கள் முன்னால், எதேச்சையாக சேனலை திருப்பியபோது பார்த்தால்,ஆதி அபியையும், திருச்செல்வத்தையும் சுடுவதை காண முடிந்தது. பின்பு திருச்செல்வம் செத்து விட்டதாக ஒரு டாக்டர் கூறுவதாக அந்த நாள் முடிந்தது. அப்பாடா, மக்கள் தப்பித்தார்கள் என நினைத்து சந்தோசப்பட்டேன்.
ஆனால், இறந்ததாக டாக்டர்கள் சொன்ன திருச்செல்வம், அபியின் நம்பிக்கையால் பிழைத்து விட்டாராமே? இனி, என்ன செய்வது? மக்களை யார் காப்பாற்றுவது?
இன்னும் ஒரு இரண்டு வருசம் தொடரைத் தொடர்ந்தாலும் தொடர்வார்கள் போல!!!!
**************************************************
மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தற்செயலாக காண நேர்ந்தது . அதில் ஒரு செய்தி. மெட்ராஸ் கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஒரு கண்டெயினரை செக் செய்தபோது, அந்த கணடெயினர் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதியாகி இருப்பதாக டாக்குமெண்ட்களில் இருப்பதாகவும், விசாரித்துப் பார்த்தால் அது சைனாவிலிருந்து வந்திருப்பதாகவும் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். அதில் உள்ள பொருட்களை எல்லாம் செக் செய்தபோது எல்லாமே போலி என்று தெரியவந்துள்ளது. அப்படி என்ன கண்டெயினரில் இருந்தது என்றால், எல்லாமே குழந்தைகள் உபயோகப்படுத்தும் பேபி ஆயில், ஷேம்பு இப்படி. இந்த செய்தியை எப்படி மக்கள் டிவியில் சொன்னார்கள் தெரியுமா?
" சைனா வேண்டுமென்றே இந்தியாவிற்கு இந்த மாதிரி பொருட்களை அனுப்புகிறது. எதிர்கால இந்தியர்களை அழிப்பதற்காக குழந்தையின் உயிர்களோடு விளையாடுகிறது. ஏற்கனவே நமது எல்லையோர பகுதிகளில் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ள சைனா இப்போது குழந்தைகள் உயிருடனும் விளையாடுகிறது"
எதை எதோடு ஒப்பிடுவது? எதோ ஒரு கம்பனி போலி சரக்குகளை, சைனாவில் உள்ள ஏதோ ஒரு கம்பனியில் வாங்கியுள்ளது. அதற்கு எப்படி சைனா பொறுப்பாகும்? எனக்குப் புரியவில்லை.
**************************************************
எங்க வீட்டில் ஒருவர். அவரும் இந்தப் பதிவை படிக்கும் வாய்ப்பு இருப்பதால், அவரை யார் என்று நான் குறிப்பிடப் போவதில்லை. அவர் மிகுந்த புத்திசாலி. + 2வில் மெயின் பாடங்களில் அவர் வாங்கிய மதிப்பெண்கள் 200, 199, 198. நுழைவுத் தேர்வில் வாங்கிய மதிபெண் 46 என நினைக்கிறேன். இன்ஜினியரிங்லும் ரெக்கார்ட் பிரேக் மார்க். பிறகு கேம்பஸ் இண்டர்வியுவில் வேலை. பிறகு அதை விட்டு விட்டு மிகப் பெரிய கல்வி நிறுவனத்தில் எம்.பி.எ படிப்பு. மிகப் பெரிய சம்பளத்துடன் வேலை. இப்படி பட்ட அவரின் வாழ்வில் சடாரென சில மாற்றங்கள். யார் காரணம் எனத் தெரியவில்லை. அவராக பார்த்து ஒரு பெண்ணை வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த அடுத்த மாதத்திலிருந்தே மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு. மூன்றே வருடத்தில் ரூபாய் ஆறு லட்சம் செலவில் விவாகரத்து. பின் இருந்த வேலையையும் விட்டாச்சு. இப்போது தனி ஆள். அவரால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிரச்சனை. அவர் ஒருவரின் பிரச்சனையால் கடந்த நான்கு வருடமாக யாருமே வீட்டில் நிம்மதியாக இல்லை. அவரைப் பற்றி ஒரு தொடர் எழுதும் அளவிற்கு சுவாரஸ்யமான விசயங்கள் என்னிடம் உள்ளது. வீட்டில் அம்மாவிலிருந்து அனைவரும் என்னை அவருக்கு புத்திமதி சொல்லச் சொல்கிறார்கள். ஏதாவது வேலையில் சேரச்சொல்லச் சொல்கிறார்கள். அவருக்குத் தேவை இப்போது மன அமைதி மட்டுமே. அதற்கு அவர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஒரு மனநல டாக்டரிடம் சென்று ஒரு சிறு ஆலோசனை பெற வேண்டியதுதான். நாம் சொன்னால், " நான் என்ன மெண்டலா, வேண்டுமானால் நீ சென்று உன்னை பரிசோதித்துக்கொள்" என்கிறார். வீட்டிலோ அவருக்கு மீண்டும் அறிவுரைகளைச் சொல்லச் சொல்லி கடும் நெருக்குதல். கடந்த 10 வருடமாக அதைத் தானே செய்து வருகிறேன். அனைத்து அறிவுரைகளும் வீணாக போய்விட்டது.
மகாபாரதப் போர். போர் ஆரம்பிக்கும் முன் கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதை உபதேசிக்கிறான். எல்லோருக்கும் இது தெரிந்த விசயம் தான். கண்ணன் இப்படி சொல்கிறான்,
" எதிரில் இருப்பவர்களை உறவினர்களாக பார்க்காதே. அதர்மம் செய்பவர்களாக நினை. தர்மத்தை நிலை நாட்ட, அதர்மத்தை அழிப்பது பாவமல்ல. இந்த உடல் என்பது இந்தப் பிறவியில் நாம் அணிந்திருக்கும் சட்டை. அவ்வளவே. இறப்பு என்பது சட்டையைக் கழட்டி போடுவது போலத்தான். உடலுக்குத்தான் அழிவு. ஆன்மாவிற்கு அல்ல"
இப்படி பலவாறாக அறிவுரைகள் கூறுகிறான். அர்ச்சுனனின் மனம் தெளிவடைகிறது. பிறகு சண்டையில் வெற்றியை நோக்கிச் செல்கிறான். எதிரிகளின் சூழ்ச்சியால், அர்ச்சுனன் மகன் அபிமன்யு போரில் கொல்லப்படுகிறான்.
அபிமன்யுவின் உடலை பார்த்து அர்ச்சுனன் கதறி அழுகிறான். அப்போது தேரின் மேலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் துளி விழுகிறது. யாரென்று மேலே பார்க்கிறான். அவைகள் கண்ணன் கண்களிலிருந்து வந்ததைக் கண்டு பிடிக்கிறான். அர்ச்சுனன் கண்ணனைப் பார்த்துக் கேட்கிறான்,
" கண்ணா, நான் என் மகன் இழந்த சோகத்தில் அழுகிறேன். எனக்கு சாவைப்பற்றி அவ்வளவு புத்திமதிகள் சொன்ன நீ ஏன் இப்போதுஅழுகிறாய்"
" அர்ச்சுனா, நான் ஏன் அழுகிறேன் தெரியுமா? நான் சாவைப்பற்றி அவ்வளவு எடுத்துச்சொல்லியும் இப்போது உன் மகன் சாவுக்காக அழுகிறாய் அல்லவா? நான் உனக்குச் சொன்ன புத்திமதிகள் எல்லாம் இப்படி வீணாகிவிட்டதே? என்று தான் அழுகிறேன்" என்று சொன்னாராம் கண்ணபிரான்.
அவ்வளவு பெரிய கடவுள் சொன்ன புத்திமதியே வீணாய் போனபோது, நான் சம்பந்தப்பட்ட அந்த நபரிடம் சொன்ன புத்திமதிகள் வீணாய் போனதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது???
ஆண்டவர்தான் அவரை இப்போது அவர் இருக்கும் சூழலிருந்து மீட்டு எடுக்க வேண்டும்!!!!
**************************************************
அனைத்து உயிர்களிடமும் அன்பு வைப்பவன் நான். அப்படித்தான் வாழ முயற்சிக்கிறேன். ஒரு ஈ, எறும்பின் சாவுக் கூட என்னை கலவரப்படுத்துகிறது. ஆனால், சமீபகாலமாக வீட்டில் ஒரு பிரச்சனை. அடிக்கடி எலிகள் வருகின்றது. மலேசியாவில் பூனைகள் அதிகம். ஆனால் இங்கே உள்ள பூனைகள் எல்லாம் ரொம்ப நல்ல பூனைகளாக இருக்கின்றன. அவைகள் எலியுடன் நல்ல நட்பில் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. அதனால்தான் எலிகள் இவ்வளவு சுதந்திரமாக வீட்டில் நடமாடுகிறது. வீட்டில் தினமும் எலிப் பொறி வைக்கிறார்கள். தினமும் ஒரு எலி மாட்டுகிறது. காலையில் எழுந்தவுடன், முதல் வேலை அந்த எலியை கொண்டு தெரு முனையில் விட்டு விட்டு பிறகுதான் நான் வாக்கிங் செல்கிறேன். "நீங்க கொண்டு போய் விட்ட எலிதான் மீண்டும் வருதுங்க" அப்படினு வீட்ல சொல்லறாங்க. ஒரே மாதிரி நிறைய எலி இருக்கும்னு நான் பதில் சொன்னேன். இப்போ என்ன பிரச்சனைனா, நண்பர்கள் "ஒரு பிஸின் மாதிரி ஒண்ணு கடையில விக்குது. அதை வாங்கி ஒரு பேப்பர்ல வைச்சா, எலி ஓட முடியாம அந்த பிஸின்ல மாட்டிக்கும். அப்புறம் அதைக் கொண்டு போய் தெருவில விட்டா, திரும்பி வராது. பூனையோ, இல்லை எதோ அதை அடிச்சு சாப்பிட்டு விடும்" அப்படிங்கறாங்க.
என்னால, இதனை ஏற்க முடியவில்லை. எலி பொறியில விழற எலியை கொலை பண்ணுவதற்கும், இதற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நானோ அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக இருக்க விரும்புபவன் (!!!).
அதனால் எலியுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்துவிட்டேன்.
**************************************************
15 comments:
எல்லாமே அருமை
ஆனால், இறந்ததாக டாக்டர்கள் சொன்ன திருச்செல்வம், அபியின் நம்பிக்கையால் பிழைத்து விட்டாராமே? இனி, என்ன செய்வது? மக்களை யார் காப்பாற்றுவது?
///
மக்களை யாரும் காப்பாற்ற முடியாது!
Cool :)-
மன நல மருத்துவர்களிடம் செல்பவர்கள் அனைவரும் சைக்கோ (அ) பைத்தியம் என நினைப்பதால் தான் இந்த நிலை.
தலைவலி, கால் வலி என்றாலோ டாக்டரிடம் செல்வதில்லையா அதுப்போலத்தான் இதுவும்.
அவருக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகள் அவசியம் தேவை.
மன நலம் பேண மனோதத்துவ மருத்துவரின் தேவை மிக மிக அவசியம்.
உலக்ஸ் வணக்கம்.கோலங்கள் டிசம்பர் 4 ஆம் தேதி முடியுது.பாஸ்கர்சக்தி சொன்னார்..
nice
he need a psychologist not a
psychiatrist .
reg viv
//எல்லாமே அருமை//
தங்கள் முதல் வருகைக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார்.
//மக்களை யாரும் காப்பாற்ற முடியாது!//
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி டாக்டர்.
// Cool :)-//
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மணிகண்டன்.
//மன நலம் பேண மனோதத்துவ மருத்துவரின் தேவை மிக மிக அவசியம்.//
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராகவன் சார்.
//உலக்ஸ் வணக்கம்.கோலங்கள் டிசம்பர் 4 ஆம் தேதி முடியுது.பாஸ்கர்சக்தி சொன்னார்..//
தகவலுக்கு நன்றி தலைவரே!
//nice//
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கிருஷ்ணா.
//he need a psychologist not a
psychiatrist .//
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விவேக்.
sir
hi
i hope u know about food chain
nama entha uyirukum thoragam seiyakudathunu ninaicha sapadu kuda sapida mudyathu coz sapadum oru jeevanai konuthan nam sapidrom. so antha rat ah nama koldromnu ninaikathinga atha oru punaiku sapida kudukromnu ninainga
this is my point of view
Post a Comment