Nov 5, 2009

மாறுபட்ட பார்வைகள் - சிறுகதை

அவசரமாக வேலை நிமித்தமாக மலேசியா சென்று வரச்சொன்னார் எங்கள் MD. இதோ இன்னும் சிறிது நேரத்தில் விமானம் சென்னை மீனம்பாக்கத்திலிருந்து புறப்பட போகிறது. மலேசியாவிற்கு முதல் பயணம் என்பதால், MD எஸ்கார்ட் சர்வீஸ் ஏற்பாடு செய்திருப்பதாகவும், கோலாலம்பூரில் இறங்கியவுடன், அவர்கள் வந்து அழைத்து செல்வார்கள் எனவும் கூறினார். விமானம் ஓடு தளத்தை நோக்கி சென்றது, கூடவே என் மனம் நேற்று மதியம் நடந்தவைகளை அசை போட்டது.

நான் மிகப்பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் திருமணமாகாத ஒரு இளைஞன். அப்பாவின் நண்பரின் மகள் தேன்மொழி நன்கு படித்திருப்பதாகவும், எனக்கு பொறுத்தமானவளாக இருப்பாள் என்றும் அவர் சொன்னதால், அப்பாவும் அம்மாவும் முதலில் போய் பார்த்துவிட்டு வந்து, பிறகு ஜாதகம் பார்த்து நன்றாக பொருந்திருப்பதாக கூறி, என்னையும் நேற்று மதியம் பெண்பார்க்க அழைத்துச் சென்றார்கள். நான் எனக்கு வரபோகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என ஏற்கனவே சொல்லியிருந்ததால், கனவுகளுடன் சென்றேன்.

எல்லா சம்பரதாயங்களும் முடிந்து பெண்ணை அழைத்து வந்தார்கள். எனக்கு என்னவோ பெண்ணை பார்த்தவுடன் அந்த அளவிற்கு பிடிக்கவில்லை. நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை. எண்ணை வழிந்த தலை முடி. கொஞ்சம் கூட மேக்கப் இல்லாத முகம். ஒரு டிபிக்கல் கிராமத்து பட்டு சேலையில். என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களை பார்த்து பார்த்து, நான் மனதிற்குள் ஒரு உருவம் செதுக்கி வைத்திருந்தேன். சிறிது நேரத்தில் பெண்ணின் அப்பா என்னை பார்த்து கேட்டார்:

" என்ன மாப்பிள்ள, சாப்பாடு பிடிச்சிருக்கா?"

எனக்கு ஒன்றும் புரியவில்லை. பஜ்ஜியை ஏன் சாப்பாடு என்கிறார்? என் மாமாதான் விளக்கம் கூறினார்,

"ரவி.. சாப்பாடுனு அவர் சொல்லறது, பெண்ணை"

நான் என் முடிவை சொல்வதற்குள் அப்பா, " பெண்ணை எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு. எப்போ நிச்சயம் வைச்சுக்கலாம்?"

அதன்பிறகு நடந்தவைகள் எதுவுமே எனக்கு காதில் விழவில்லை. எப்படி அங்கிருந்து கிளம்பினேன்? தெரியவில்லை. நானும் நண்பர்களும் தனிக்காரில். நண்பர்கள் அனைவரும், " மாப்பிள்ள, முதல் பொண்ணே உனக்கு முடிஞ்சிருச்சு, அதனால பார்ட்டி குடு" என்றவர்கள் நேராக அந்த ஹோட்டல் பாருக்கு அருகில் காரை நிறுத்தினார்கள். ஆனால் என் மனதில் மட்டும் ஏகப்பட்ட கவலைகள்.

வீட்டுக்கு நடு இரவு வந்தவன், அந்த நேரத்தில் அம்மாவை எழுப்பி எனக்கு பெண் பிடிக்கவில்லை என சொல்லிவிட்டேன். காலையில் எழுந்தால், அப்பாவில் ஆரம்பித்து எல்லோரும் ஒரே அட்வைஸ் மயம். கடைசியில் அப்பா கேட்டார், " ஏன் உனக்கு அந்த பெண்ணை பிடிக்க வில்லை?"

" நான் நினைத்தமாதிரி மாடர்ன் ஆக இல்லை. பார்த்தவுடன் என்னை கவர வில்லை"

அதன்பிறகு ஏகப்பட்ட வாக்கு வாதங்கள். முடிவில் 'எக்கேடு கெட்டு போ' என்ற பார்வையில் அப்பா என்னை அனுப்பிவைக்க, இதோ மலேசியா வந்துவிட்டேன். இமிகேரசன் முடிந்து கஸ்டம்ஸ் முடிந்து லக்கேஜ் எடுத்து, ட்ராலியை தள்ளிகொண்டே போகையில்தான் கவனித்தேன், என் பெயரை தாங்கியபடி ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.

" ஹேய், ஐ அம் ரவி"

" ஹலோ, ஐ ம பிரேமா. நான் தான் இந்த மூன்று நாட்களும் உங்கள் கூட உங்களுக்கு உதவப் போகும் செக்கரட்டரி"

அப்படியே மெய் மறந்து அவளை பார்த்தேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. ஷேம்பு போட்டு, நன்றாக பறக்கும் தலை முடி. முடியை வாராமல் அவள் அப்படியே விட்டிருந்தது அப்படி ஒரு அழகு. அழகான மேக்கப். அவள் கலருக்கு ஏற்ற லிப்ஸ்டிக். "நச்" என்ற உடை. ஆண்களின் சர்ட் போன்ற ஒரு மேல் சட்டை, சைனீஸ் பாணி மிடி. கால் முழுவதும் பள பள ஸ்டாக்கின்ஸ். பார்த்தவுடனே எனக்கு அவளை ரொம்ப பிடித்து விட்டது. மொத்ததில் நான் கனவில் செதுக்கிய உருவம் போலிருந்தாள்.

" என்ன சார், அப்படி யோசனை. நம்ம ஹோட்டல் வந்துடுச்சு. நீங்க குளிச்சிட்டு ரெடியா இருங்க. நான் இன்னும் ஒரு இரண்டு மணி நேரத்தில் உங்களை அழைத்துச்செல்ல வருகிறேன்" என்றவள் என் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டாள். எனக்கு என்னமோ தேன்மொழியின் உருவம் மனதில் வந்து என்னை இம்சித்தது. இது போல் அழகு தேவதைகளும் உலகத்தில் இருக்கத்தானே செய்கிறார்கள்?, அப்பாக்கு ஏன் இவர்கள் எல்லாம் கண்ணில் பட மாட்டேன் என்கிறார்கள்?

அன்று முழுவதும் அனைத்து கஸ்டமர்களையும் பார்த்து பேசி, அவளுடனே சாப்பிட்டு, இரவு ரூமுக்கு வரும்போது மணி 10. நான் டயர்டாக இருக்கிறது என்பதால் உடனே உறங்க சென்று விட்டேன். அடுத்த நாள் காலை எனக்கு முன் ப்ரேக்பாஸ்ட் டேபிளில், புத்தம் புது ரோஜா போல் அமர்ந்திருந்த பிரேமா," ஹலோ சார், குட் மார்னிங்" என்றாள். சாப்பிட்டு விட்டு கஸ்டமரை பார்க்க போகும் நேரத்தில் அவளை பற்றி விசாரித்தேன். அவளுக்கு இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகள். அண்ணன்கள் கல்யாணம் ஆனவுடன் இவர்களை கண்டு கொள்வதில்லை. ஒரு வயதான நோயாளி அம்மா. தங்கைகளின் படிப்பு செலவு, அம்மாவின் மருந்து செலவு எல்லாம் இவளின் சம்பாத்தியத்தில்தான் எனத்தெரிந்ததும் இன்னும் ஒரு படி என் மனதில் உயர்ந்து விட்டாள். அப்போதுதான் அந்த கேள்வியை கேட்டேன்,

" நீ ஏன் ஒரு கல்யாணம் பண்ணக்கூடாது"

" பண்ணலாம்தான் சார். நல்ல ஆளா அமையனும். எங்க பார்க்கலாம்"

என் மனதில் திடீரென ஒரு மின்னல். சரி இன்றைக்கு இரவு பார்க்கலாம் என என்னை அடக்கிக்கொண்டேன். மூன்று நாட்கள் வேலை இரண்டு நாட்களிலே முடிந்து விட்டது. அன்று இரவு ஹோட்டலுக்கு வந்தவுடன், பிரேமாவை கூப்பிட்டு,

" பிரேமா, வேலை முடிந்து விட்டது. நாளை இரவு செல்வதற்கு பதில் நாளை பகல் விமானத்தில் செல்லலாம் என நினைக்கிறேன். உன் சேவைக்கு என் கம்பனி பணம் கொடுத்து விடும். ஆனால், நீ எனக்கு மிகவும் உதவியாய் இருந்ததால், இந்த பணத்தை வைத்துக்கொள். ஊருக்கு சென்றவுடன் உன்னை முக்கியமான ஒரு விசயத்திற்காக போன் செய்வேன்" என்று சில ரிங்கட் நோட்டுகளை கொடுத்தேன்.

முடிவு 1:

என்னை ஆச்சர்யமாக பார்த்தவள், " இருங்க சார், வருகிறேன்" என்று தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றவள், திரும்பி வந்த காட்சி என்னை திக்கு முக்காட செய்து விட்டது. ஒரு மெல்லிய 'சீ த்ரூ' நைட்டியை அணிந்து வந்தவள் என் அருகே உட்கார்ந்தாள்.

" என்ன இது?" என்று சற்றே கோபத்துடன் கேட்டேன்.

" சார், நான் சும்மா ஒன்றும் பணம் வாங்குவதில்லை. நேற்றே செய்ய வேண்டிய காரியம். ஒரு நாள் தாமதமாகி விட்டது. எந்த கஸ்டமரையும் திருப்தி படுத்தாமல் அனுப்பக் கூடாது எனபது எங்கள் கம்பனி ரூல்"

தேவதையாக என் மனதில் இருந்த அவள் தடாலடியாக பாதாளத்தில் கீழே விழுந்து கொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது. ஒரு வழியாக கற்பை காப்பாற்றிக்கொண்டு, அவசரமாக அப்பாவிற்கு போன் பண்ணினேன்,

" அப்பா, நான் நீங்கள் பார்த்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்கிறேன்"

முடிவு 2 (முடிவு 1 பிடிக்க வில்லையென்றால்):

என்னை ஆச்சர்யமாக பார்த்து, " நீங்கள் ஒருவர்தான் என்னை தவறான கண்ணோட்டத்துடன் அணுகவில்லை. மற்றவர்கள் எல்லாம் எங்களை பார்க்கும் விதமே வேறு. என்ன செய்வது சார். பிழைக்க வேண்டியிருக்கிறதே? எனக்கும் நன்றாக தழைய தழைய புடவை கட்டி, எண்ணை நிறைய தடவி தலை சீவி, பூ வைத்து, போட்டு வைத்து, நம் ஊரில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு மனைவியாக பிள்ளைகள் பெற்றுக்கொண்டு, கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்து வாழ ஆசைதான். நாம் நினைப்பது எல்லாமுமா நடக்கிறது" என்று கூறி, என்னிடம் விடை பெற்று சென்றாள். கொஞ்ச நேரம் திக் பிரமை பிடித்து அமர்ந்திருந்த நான், அவசரமாக அப்பாவிற்கு போன் பண்ணினேன்,

" அப்பா, நான் நீங்கள் பார்த்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்கிறேன்"

உங்களுக்கு எந்த முடிவு பிடித்திருக்கிறது???

18 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

ஒரு சினிமா பார்த்தது போல் இருந்தது சார் ....
super....

ஸ்ரீ.கிருஷ்ணா said...

2 முடிவுகளுமே நன்றாக இருக்கும்

Cable சங்கர் said...

எப்போது எஸ்கார்ட் என்று சொல்லிவிட்டீர்களோ.. அப்போதே முடிவு தெரிந்து விடும்.. :(

iniyavan said...

//ஒரு சினிமா பார்த்தது போல் இருந்தது சார் ....
super....//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கிருஷ்ணா.

iniyavan said...

//எப்போது எஸ்கார்ட் என்று சொல்லிவிட்டீர்களோ.. அப்போதே முடிவு தெரிந்து விடும்.. :(//

அப்படியா???

Anonymous said...

ஹி ஹி ஹி , முடிவு ஒன்னு தான் இது எது பிடிச்சுருக்குன்னு கேள்வி வேறே !!!!

உலக்ஸ்... இது பேரு தான் ஜனநாயகம் :-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்தப் பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று சொல்வது இதுதானோ..,நச்...,

Beski said...

முடிவு 1 - இதுதான் பிடிச்சிருக்கு.

விக்னேஷ்வரி said...

கதை நடை நன்றாக இருந்தது நண்பரே.

எனக்கு இரண்டு முடிவுகளிலுமே உடன்பாடு இல்லை உலகநாதன். ஏனெனில் ஒருவருக்கு மற்றவுடன் ஒப்பிட்டுப் பார்த்து இன்னொருவரைப் பிடிப்பது என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம். ஒருவரைப் பிடிக்கிறது என்றால் அது அவரால் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல சிறுகதை ... பெண்கள் வீட்டின் கண்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

முடிவு 1 நல்லாயிருந்தாலும் முடிவு 2 யதார்த்தம் ...

முடிவு 2 நல்ல சுப முகூர்த்தம்

iniyavan said...

//ஹி ஹி ஹி , முடிவு ஒன்னு தான் இது எது பிடிச்சுருக்குன்னு கேள்வி வேறே !!!! //

உங்கள் கருத்துக்கு நன்றி

iniyavan said...

//இந்தப் பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று சொல்வது இதுதானோ..,
நச்...,//

நன்றி டாக்டர்

iniyavan said...

//முடிவு 1 - இதுதான் பிடிச்சிருக்கு//

நன்றி அதிபிரதாபன்.

iniyavan said...

//கதை நடை நன்றாக இருந்தது நண்பரே.//

நன்றி விக்கி!

//எனக்கு இரண்டு முடிவுகளிலுமே உடன்பாடு இல்லை உலகநாதன். ஏனெனில் ஒருவருக்கு மற்றவுடன் ஒப்பிட்டுப் பார்த்து இன்னொருவரைப் பிடிப்பது என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம். ஒருவரைப் பிடிக்கிறது என்றால் அது அவரால் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.//

உங்கள் கருத்தோடு 100% ஒத்துப்போகிறேன் விக்கி!

ஆனால் அன்று என்ன தோன்றியதோ அப்படியே எழுதிவிட்டேன்.

iniyavan said...

//முடிவு 1 நல்லாயிருந்தாலும் முடிவு 2 யதார்த்தம் ...

முடிவு 2 நல்ல சுப முகூர்த்தம்//

வருகைக்கு நன்றி ஸ்டார்ராஜன்

Anonymous said...

இக்கதைக்கு இரண்டு முடிவுகள் இருந்தாலும் அவை கூறுவது ஒன்றே தான். அதாவது தந்தைப் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துக் கொள்ள உணர்த்துவது. நவீன உடையுடன் அழகுற ஒரு பெண்ணைப் பார்த்தாலே நிச்சயம் தனி மனித ஒழுக்கத்திற்கு வாய்ப்பில்லை எனும் மனப்பான்மை சமூகத்தில் நிறையவே இருக்கின்றது. இச் சிந்தனைக் கொண்டுள்ளோர்களில் கற்றவர், கற்காதவர், நகரத்தார், கிராமத்தார் எனும் பாகுபாடு இருப்பதில்லை. எதார்த்தமான அதே நேரத்தில் சமூகத்திற்கு ஆரோக்கியமான முடிவைக்கூறுவது "இரண்டாவது" தான். -- நெல்லி. மூர்த்தி, சவூதி அரேபியா. nellitamil@gmail.com

Unknown said...

உங்கள் பதிவுகள் நன்றாக இருந்தது.

இப்படிக்கு
த.மூர்த்தி